Friday, March 3, 2023

கலைஞர் ஜெயகாந்தன் சந்திப்பு பகுதி 3

 ஜெ.கா: அதாவது உங்கள் கட்சி கடந்த காலத்தில் சந்தர்ப்பவாத அரசியலுக்கும் சந்தர்ப்பவாதிகளுக்கும் இடம் தந்ததன் விளைவுதானே இன்று உள்ள பல எதிர்மறை நிலைமைகளுக்குக் காரணம்?


மு.க:சந்தர்ப்பவாதிகள் சிலர் இருந்ததாலேயே அந்தக் கட்சியே சந்தர்ப்பவாதக் கட்சியாகிவிடாது! ஒரு அரசியல் கட்சி சூழ்நிலைக்கேற்ப சில முடிவுகளை ஜனநாயக ரீதியில் எடுப்பது சந்தர்ப்பவாதமாகாது.


(இந்த இடத்தில் சந்தர்ப்பவாதம் என்றால் என்ன வென்று திரு. மு.க. நினைக்கிறார் என்று கேட்டிருக்கலாம்! இன்னொரு சந்தர்ப்பம் வாய்க்குமே!)


ஜெ.கா: இதையெல்லாம் நடந்து முடிந்தவற்றின் சுயவிமர்சனமாகத்தான் கொள்ள வேண்டும். நீங்கள் இப்போது தி.மு. கழகத்தின் தலைவர் மட்டுமல்ல - உங்கள் தொண்டர்கள் சொல்லுவது போல - தமிழ் இனத் தலைவராய் உயர்ந்துள்ளீர்கள். எனவே உங்களுடைய ஜனநாயகப் பொறுப்புகள் இப்போது அதிகம். மக்கள் நம்மை நம்புவதால் நமது பொறுப்புகள் பெரிதாகி இருக்கின்றன. அவற்றை நிறைவேற்ற நம்மிடம் சித்தாந்த பலம் போதிய அளவு இல்லை என்பதை உணர்கிறீர்களா... (கலைஞர் தீவிர சிந்தனை வயப்பட்டவராய் மேலே சொல்லுங்கள்' என்று சைகை செய்கிறார்.)


ஜெ.கா: நீங்கள் மார்க்சிஸம் படித்து அதை நம மக்களின் நன்மைக்குப் பயன்படுத்த வேண்டும். மார்க்ஸியம் கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே உரியது என்று நீங்களும் கருதுகிறீர்களா? மார்க்ஸிசம் என்பது விஞ்ஞான பூர்வமா அரசியலே ஆகும். விஞ்ஞான பூர்வமான தீர்வுகளுக்கு  உதவும். உடனடியாக நம் வாழ்க்கையில் தனியுடைமையை நாம் ஒழித்தாக வேண்டும். சுயமரியாதை இயக்கத்தினருக்கும் தேசிய இயக்கத்தினருக்கும் சோஷலிச லட்சியம் பொதுவானதாய் இருந்தது அல்லவா?


மு.க: ஆம். நாங்கள் கம்யூனிசத்துக்கு என்றுமே பகைவர்களல்ல. தி.மு.க. தான் உண்மையான கம்யூனிஸ்டு கட்சியென்று ஒருமுறை அண்ணா அவர்கள் பெருமையோடு குறிப்பிட்டிருக்கிறார்.


ஜெ.கா: இப்போது எல்லாருக்கும் பொதுவானதாய் இருப்பது ஊழல் ஒன்றுதான். இந்த ஊழல் ஆபத்தை நாம் அனுபவ ரீதியாகவே அறிந்திருக்கிறோம். நமது வருங்கால சந்ததியினரையேனும் இதிலிருந்து காப்பாற்ற நாம் முயலுதல் வேண்டாமா? அதற்கு அடிப்படையாய் தனிச் சொத்துடைமையை மறுக்கும் தமிழ் நாட்டு இளைஞர்களை உருவாக்கி ஒன்று திரட்டி திராவிட சோஷலிச இளைஞர் அணி ஒன்றை ஏற்படுத்த உங்கள் இயக்கம் யோசிக்க லாகாதா?


மு.க: ஆம். அதுதான் சமுதாயத்தின் குறிக்கோளாக இருக்கவேண்டும். அதற்கோர் அணி அமைப்பது பற்றி பொதுப்படையாக யோசிக்க வேண்டும்.


(சோஷலிஸத்திலும், எதிர்கால சமுதாயத்திாாலும் அக் கறையுடைய எல்லாக்கட்சிகளும் யோசிக்க வேண்டுவது அல்லவா இது? என்பதே இதன் பொருள் என்று புரிந்து கொள்கிறேன்.)


ஜெ.கா: மறைமலையடிகள் திரு. வி.க. போன்றோரின் எழுத்துக்களால் இலக்கிய ஆர்வம் பெற்றதாகச் சொன்னீர்கள். அண்மையில் நீங்கள் எழுதிய ஒரு நாவலைநான் படித்தேன். நீங்கள் ஏன் இது மாதிரியெல்லாம் 'கதைக்காகக் கதை' எழுத வேண்டும்? இதை வைத்துக் கொண்டு நீங்கள் சமூக உணர்வோடு எழுதவில்லை என்று நான் சொல்லவில்லை...


மு.க: சமூகக் கருத்துக்களை அதிகம் வலியுறுத்தி நான் எழுதிய நூல்களும் கதைகளும் ஏராளமிருக்கின்றன. நான் எழுதும் படங்களிலே கூட அதனை வலியுறுத்தியிருக் கிறேன். அண்மையில் வெளிவந்த ஆடு பாம்பே' படம் அதற்கு ஒரு சான்று. நீங்கள் அதைப் பாருங்கள்.


ஜெ.கா:


அவசியம் பார்க்கிறேன். உங்களைப் போன்றவர்கள் இடையறாது வலியுறுத்தியதன் காரணமாக நாங்கள் திருக்குறள் படிக்கிறோம். பழந்தமிழ் பண்பாடு களில் தீவிரமாக ஆராய்ச்சியும் ஈடுபாடும் கொண்டோராய் இருக்கிறோம். அதுபோல நீங்களும் புதிய சோஷலிசப் பண்பாடுகளில் ஈடுபாடுகாட்ட வேண்டும். சோவியத் யூனியனுக்குப் போய்வர வேண்டும். இந்திய-சோவியத் நட்புறவு இயக்கத்தில் நீங்களும் உங்கள் இயக்கமும் பேரார்வத்துடன் ஈடுபடவேண்டும். உலக அரசியல் அரங்கில் நம் போக்கு சரியான திசைவழியில் தெளிவாக இருந்தால்தான் இங்கே எல்லாம் சரியாக நடக்கும். இது மிகவும் அவசியம்.


(இந்தப் பேட்டியின் பிரதான நோக்கமே இது போன்ற சில முக்கியமான கருத்துக்களை இவரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான். இவற்றுக்கெல்லாம் நான கலைஞரிடமிருந்து 'வினா-விடை போல் உடனடியாக பதில் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவரும் நான் சொன்ன இந்த மிக முக்கியமான கருத்துக்களில் அக்கறை காட்டிக் கேட்டுக் கொள்கிறார்.)ஜெ.கா: நீங்கள் சோவியத் யூனியனுக்குப் போனதில் லையே? இது எனக்கு மிகவும் ஆச்சரியம் தருகிறது. சரியான தருணம் வாய்த்துப் போவது சிறப்பாகவே இருக்கும். அப்படி ஒரு தருணம் வாய்த்திருக்கிறது. என்றுஎண்ணுகிறீர்களா? 


(திரு. மு.க.அதற்கு மௌனமாகப் புன்னகை புரிகிறார்.)


ஜெ.கா: நாம் ஆரம்பத்தில் பேசிய தமிழ் இன நலன்கள் ஒன்றுபட்ட இந்தியாவில் சிறப்படைவதற்கு சோவியத் யூனியனில் அமைந்துள்ள தேசிய இன சுயநிர்ணய உரிமை நமக்குச் சிறப்பாக வழிகாட்டும். இனப்பற்று எவ்வளவு ஆழமாகவும், ஆரோக்கியமாகவும் சோவியத் சமுதாயத்தில் ஒவ்வொரு தேசீய இனத்திலும் உருவாக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருகிறது என்பதை நாம் அறிந்து பயிலவேண்டும்.


மு.க : ஒன்றுபட்ட இந்தியா மிகமிக அவசியம். ஆனால் இன்று உள்ள சூழ்நிலையில் இது தவறு செய்பவர்களுக்கு, தேசிய நலன்களின் பகைவர்களுக்கு அரணாகிவிடுகிறதே...!


ஜெ.கா: இன்றுள்ள நிலை என்று நீங்கள் எதைக் குறிக்கிறீர்கள்? எனது கருத்தில் உலக மனித சமுதாயத்தில் ஒரு நூற்றாண்டுக் காலமாய் எழுந்துள்ள நிலைமையும் முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்துக்கு சமுதாய. நிலைமைகள் மாறியாக வேண்டிய வளர்ச்சியின் நிர்ப்பந்த மும், அதனை இயன்றவரை தடுப்பதற்கான அதன் எதிரி களின் முயற்சியும்தான். சமத்துவமில்லாத ஜனநாயகத்தில் ஒற்றுமை என்பது துர்பலம்தான். ஆகவே ஒன்றுபட்ட இந்தியாவுக்கு உடனடித் தேவை, ஜனநாயகம் போலவே சோசலிஷத்துக்கான மாற்றம்தான் என்பதை நீங்கள் ஏற்கிறீர்களா?


மு.க: இதைப் படிப்படியாகத்தான் செய்ய வேண்டும். இதுவே நம் குறிக்கோள். சொல் அளவில் உள்ள சோஷலிசம் செயல் வடிவம்பெற வேண்டும்.


ஜெ.கா: இந்த முப்பது ஆண்டுகளில் இந்தியா அந்தத் திசை வழியில் எந்த அளவு முன்னேறி இருக்கிறது?


மு.சு: கொள்கை அளவில்தான் - செயல் அளவில் கணிசமாகக் கணக்கிட்டுக் கூறமுடியாது.


ஜெ.கா: ஒன்றுபட்ட இந்தியாவில் சமத்துவம்...


மு.க: (குறுக்கிட்டு) ஒன்றுபட்ட இந்தியா, சமத்துவம் என்றெல்லாம் நீங்கள் சொல்லும்போது, உதாரணத்துக்கு நமது இந்திய அரசாங்கத்தின் மதுவிலக்குக் கொள்கை எடுத்துக் கொள்வோம். மதுவிலக்கு தேவையா இல்லை என்ற விவாதத்தில் நாம் இறங்க வேண்டாம். ஆனால் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியானதாய் அமை வேண்டும். சமத்துவமான நெறி முறைகள் வேண்டும். விஷயத்தில்கூட இங்கே மாநிலங்களுக்கிடையே பேதங்கள் நிலவுகின்றன. இது சரியல்ல என்று கருதுகிறேன்.


ஜெ.கா: உண்மையில் இவ்வளவு கடுமையான மதுவிலக்குச் சட்டங்களை யாருடைய நிர்ப்பந்தத்தில் நம் மீது திணிக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?


மு.க: சந்தேகமே வேண்டாம். கள்ளச் சாராயக் காரர்களின் நிர்ப்பந்தம்தான். மதுவிலக்கு இல்லாதிருந்தால் அரசாங்கத்துக்குப் பணம் கிடைக்கும். மது விலக்கை அமலபடுத்தினால் ஆளுங்கட்சிக்காரர்களின் புரவலர்கள் சாராய வியாபாரிகளுக்கு லாபமாகவும், போலீஸ் களுக்கு மாமூலாகவும் நிறைய சம்பாதிக்க முடியும் அல்லவா?

ஜெ.கா: தீங்களும்தானே மது விலக்கை அமுல் படுத்தினீர்கள்?


மு.க: காமராஜரைப் போன்ற பெரிய தலைவர்கள் வற்புறுத்தியதனால், அதற்காக தி.மு.க.வின் மீது அபவாதங்களைக் கூறி மக்கள் மத்தியில் தொடர்ந்து எதிர்ப்பை உருவாக்கியதால், நான் மதுவிலக்கை மறுபடியும் கொணர நேர்ந்தது. இந்தியா முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தாமல் ஓரிரு மாநிலங்களில் மட்டும் அமல் படுத்துவது வெற்றி தராது என்பது என் கருத்து.


ஜெ.கா: நான் அது விஷயத்தில் காமராஜரின் விமர்சனங் களை அப்போதே ஏற்கவில்லை. ஆனால் மதுவிலக்கு இல்லாதபோது விற்பனையிலும் வினியோகத்திலும் சில வரைமுறைகளையும் கட்டு திட்டங்களையும் ஏற்படுத்துவது அவசியம். நீங்கள் சட்டம் போட்டு விட்டீர்கள் என்பதற் காக, தண்டித்து விடுவீர்கள் என்பதற்காக பயந்து கொண்டு ஒரு கோழைபோல் நான் குடிக்காமல் இருக்க வேண்டு மென்று விரும்புவீர்களா? என்னைப் போன்றவர்களைக் குற்றவாளியாக்குவதும், கோழையாக்குவதும்தான்.

சட்டத்தின் நோக்கமா?


மு.க: (வாய்விட்டுச் சிரிக்கிறார்) ஜெயகாந்தனின் வாதங்கள் சுவையானவை. சிந்திக்கத் தூண்டுபவை. ஆனாலும் அவற்றோடு என் கருத்துக்களை இணைத்துவிட வேண்டாம்.


ஜெ.கா: இந்த விஷயத்தில் நாட்டுப் பிரஜை வேறு: நாடாள்வோர் வேறு என்று பாகுபாடு செய்வது தவறு என்பது என் கருத்து.
No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா