Showing posts with label குறும்படம். Show all posts
Showing posts with label குறும்படம். Show all posts

Tuesday, September 17, 2013

மரண தண்டனை கைதியுடன் அரைமணி நேரம் - மனம் கவர்ந்த உலக சினிமா


ஆரம்ப காலங்களில் சினிமாவில் ஒலி இல்லை.  பிற்காலத்தில்தான் ஒலி தொழில் நுட்பம் முன்னேறி , பேசும்படங்கள் வந்தன.
ஆனால் இந்த கண்டுபிடிப்பால் அந்த கால திரையுலக மேதைகள் பெரிதாக மகிழ்ந்து விடவில்லை. சினிமா என்பதே காட்சி ஊடகம்தானே , இதில் ஒலி எதற்கு ? சார்லி சாப்ளின் போன்றவர்கள் ஒலி இல்லாமலேயே சிறந்த படங்கள் எடுக்கவில்லையா.. வெகு சில படங்களுக்கு மட்டுமே ஒலி தேவைப்படும். அந்த படங்களுக்கு மட்டும் ஒலி இருந்தால் போதும். ஒலி இல்லாத ஊமைப்படங்களும் வர வேண்டும் என கருதினார்கள். எல்லா படங்களுமே ஒலியை பயன்படுத்த ஆரம்பித்தால் காட்சி மொழி அழிந்து விடும் என்பது அவர்கள் கருத்து.

ஆனால் , தொழில் நுட்ப வளர்ச்சியை யாரும் தடுத்து வைக்க முடியாது. ஆனாலும் வளர்ந்த நாடுகளில் காட்சி மொழி அழியாமல் பார்த்து கொண்டார்கள்.

ஆனால் , இந்தியா போன்ற பிச்சைக்கார நாடுகள் ஒலி தொழில் நுட்பத்தை காணாததை கண்டது போல ஓவராக பயன்படுத்தி திரை மொழியையே அழித்து விட்டன. உரிய காலத்துக்கு முன்பே , ஒலி தொழில் நுட்பம் இங்கு வந்ததுதான் , சினிமா ரசனை இங்கு வளராமல் போனதற்கு முக்கிய காரணம் என்கிறார் தியடோர் பாஸ்கரன்.

கேசட்டில் வசனம் கேட்பது , ரேடியோ நாடகம் போல திரைக்கதை உருவாக்குவது எல்லாம் இங்கு மட்டுமே உண்டு.

இதில் சிக்கி இருந்தாலும் , அவ்வப்போது நல்ல படங்கள் பார்த்து மனதை தேற்றிக்கொள்வது என் வழக்கம்.
அந்த வகையில் சமீபத்தில் பார்த்த ஒரு படம்

An occurrence at Owl creek Bridge . இது 1962ல் வெளியான ஒரு குறும்படமாகும்.

Ambrose Bierce ன் சிறுகதையை Robert Enrico இயக்கி இருந்தார்.  பல்வேறு விருதுகளை அள்ளிக்குவித்த படம் இது,. வெறும் 28 நிமிடத்தில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தும் படம் இது.

கண்டிப்பாக பாருங்கள்.. கிளைமேக்சில் இருக்கும் ஒரு சஸ்பென்சை முழுமையாக அனுபவிக்க விரும்புபவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம்.
ம்ற்றவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.

**********************************************************************


ஒரு தூக்குத்தண்டனை கைதி.. ஒரு பாலத்தின் மீது தூக்குக்கயிற்றை எதிர்னோக்கி இருக்கிறான் சுற்றிலும் காவலர்கள். தூக்குபோட ஏற்பாடு நடக்கிறது.
தப்ப வாய்ப்பிருக்கிறதா , மனைவி மக்களை பார்க்க முடியுமா என மனம் அலைபாய்கிறது. ஆனால் சுற்றிலும் காவல். கை கால்களை கட்டி விட்டார்கள். தூக்கு கயிறு கழுத்தில் மாட்டப்படுகிறது.

அதிர்ஷ்டவசமாக கயிறு அறிந்து விடவே கீழே ஓடும் ஆற்றில் விழுந்து நீந்தி தப்பிக்கிறான்.

உயிர் பிழைத்ததை நம்பவே முடியவில்லை அவனுக்கு. உலகமே புதிதாக தோன்றுகிறது. புழு ஊர்வது , சிலந்தி பூச்சி கூடு கட்டுவது , பறவை சப்தம் , மரங்கள் , இலைகள் என எல்லாமே புதிதாக இருக்கிறது. ஒவ்வொன்றிலும் வாழ்க்கை பூத்து குலுங்குவதை கவனிக்கிறான்.

தன் வீட்டுக்கு போய் மனைவியை பார்க்க வேண்டும் என்ற ஒரே ஆசையை மனதில் தேக்கி ஓடுகிறான். வீடு வந்து விட்டது .இனி பயம் இல்லை. மனைவி அவனை நோக்கி ஆசையாக வருகிறாள். அவளை நோக்கி கை நீட்டுகிறான். அவள் அவன் தோளில் கையை வைக்கிறாள்


இனி எல்லாம் இன்பம்தான் என நினைக்கையில் கழுத்தில் ஏதோ உறுத்துகிறது.
சட் என இந்த காட்சிகள் கலைகின்றன. தூக்கு அவன் கழுத்தை இறுக்கி பிணமாக தொங்குகிறான்.

அவன் தப்பிக்கவே இல்லை. தூக்கு கயிறு அவன் கழுத்தில் மாட்டப்படும்போது , அவன் தப்பிப்ப்பதாக நினைப்பதெல்லாம் அவன் மனதில் நிகழும் மாயத்தோற்றமே. தூக்கு மாட்டப்பட்டு அது அவன் கழுத்தை இறுக்குவதற்கு முந்தைய சில நிமிடங்களில் அல்லது சில நொடிகளில் ஒரு பெரிய கனவு காட்சியை கண்டு முடித்து விடுகிறான்.

ஒருவனின் மரணம் நமக்கு ஏற்படுத்தும் பரிதாபம், அதிர்ச்சி, உயிர் வாழ்வதில் அனைத்து உயிர்களுக்கும் இருக்கும் வேட்கை - இதுதான் நமக்கு ஏற்படும் முதல் உணர்வு.

முதலில் இந்த தூக்குத்தண்டனையையெல்லாம் ஒழித்தாக வேண்டும் என நம் மனம் பதறுகிறது.

ஆனால் படத்தில் இதைத்தவிர பல விஷ்யங்கள் இருக்கின்றன.

ஒரு மரண  தண்டனை கைதியைப்பற்றிய படம் என்பதால் , முதல் காட்சியில் அவனைத்தான் காட்டி இருக்க வேண்டும். பொதுவாக அப்படித்தான் செய்வார்கள்.

ஆனால் இதில் அப்படி நிகழ்வதில்லை. காட்சி அவனிடம் இருந்து ஆரம்பிப்பதில்லை. சுற்றுவட்டார காட்சிகள் நம் முன் விரிகின்றன. இயற்கை காட்சிகள் , ஒலிகள் என மெல்ல நகர்ந்து பாலத்தை அடைகிறோம். பிறகுதான் அந்த காவலர்களை ,  கைதியை காண்கிறோம்.

காலம் , நேரம் இவற்றைக் கடந்து திரைக்குள் சென்று அந்த சம்பவங்களின் ஒரு காட்சியாக மாறி விடுகிறோம்.


நமக்கு அந்த தண்டனை அதிர்ச்சி அளிக்கிறது. ஆனால் பிரமாண்டமான இயற்கைக்கு முன் இது போல மனிதன் வருவதும் போவதும் அப்படி ஒன்றும் பெரிய விஷ்யம் அல்ல என்று சொலவது போல இயற்கையின் பிரமாண்டம் , பாலம் , அதன் கீழ் நீரோட்டம் என எல்லாம் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.



And here and there a foamy flake
Upon me, as I travel
With many a silvery waterbreak
Above the golden gravel,

And draw them all along, and flow
To join the brimming river
For men may come and men may go,
But I go on for ever.


என்ற கவிதை தன்னிச்சையாக நம் மனதில் வந்து செல்கிறது.

அவன் ஏன் தூக்கு கயிற்றுக்கு வருகிறான் என்பதெல்லாம் விரிவாக சொல்லப்படுவதில்லை. ஆனால் அது அமெரிக்க உள்னாட்டு யுத்த காலம் என்பதை யூகிக்க முடிகிறது.  இது போன்ற பல தண்டனைகள் , உயிர் பலிகள் , தியாகங்கள் மூலம்தான் ஓர் அரசு உருவாகி இயங்க முடிகிறது என்ற யதார்த்தம் முகத்தில் அறைகிறது. அதாவது ஒரு தனிப்பட்ட மனிதனாக அந்த தண்டனை மிகவும் அதிர்ச்சியை அளித்தாலும் , ஒட்டுமொத்த பார்வையில் பார்த்தால் இது போல பலர் உயிர் பலிகளின் பலனைத்தான் நாம் அனுபவித்து வருகிறோம் என்ற யதார்த்தம் புரிகிறது.

இந்த படத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் காலம் பற்றிய இதன் பார்வை. அந்த கைதியின் கடிகார ஒலி இதய துடிப்பு போல கேட்கும் . நாள் உயிரை அழிக்கும் வாள் என வள்ளுவர் சொன்னது போல , அந்த கணத்தில் காலம் அவனை கொல்ல துடிக்கும் வில்லனாக அவனுக்கும் நமக்கும் தோன்றுகிறது. எனவே அவன் தனக்கான ஒரு காலத்தை , தனக்கு சாதகமான காலத்தை உருவாக்கி கொள்கிறான்.
அவனுக்கு கொடுக்கப்பட்ட சில நிமிடங்கள் , பல நிமிடங்களாக அவன் மனதில் விரிவடைகிறது.

படம் ஓடுவது அரைமணி நேரம். அந்த சம்பவங்கள் நடக்கும் கால அளவு வேறு. அவன் மனதில் இந்த சம்பவங்கள் நடக்கும் கால அளவு வேறு. இப்படி மூன்று தளங்களில் காலம் இயங்குகிறது.

படம் முழுக்க குறியீடுகள் விரவுக்கிடக்கின்றன.

தப்பிக்க வாய்ப்பே இல்லையா என மனம் சலித்து போய் இருக்கையில் ஆற்றில் அடித்து செல்லப்படும் சிறிய மரத்துண்டு காட்டப்படுகிறது.

அவன் திட்டம் நிறைவேறி ஜெயித்து இருந்தால் , அவன் ஹீரோவாக போற்றப்பட்டு இருக்க கூடும். அவனை தண்டிப்பவர்கள் , தண்டனைக்க்கு உள்ளாகி இருக்க கூடும்.

நாம் வெற்றி பெறும் காலங்களில் வெற்றிக்கு காரணம் நம் உழைப்பு, புத்தி, தன்னம்பிக்கை என்றெல்லாம் நினைப்போம். யார் வேணும்னாலும் ஜெயிக்கலாம் ..உழைச்சா போதும் என பாடம் நடத்துவோம்.

ஆனால் தோல்வியில் துவண்டிருக்கும்போதுதான் , வாழ்க்கை எனும் பெரு நதியில் அடித்து செல்லப்படும் சிறுதுண்டுகள்தான் நாமெல்லாம் என தோன்றும். அந்த மரத்துண்டு நமக்கு , கணியன் பூங்குன்றனாரின்  இந்த பாடலை நினைவு படுத்துகிறது

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

இது போல படத்தில் குறியீட்டு காட்சிகள் ஏராளம். எந்த பச்சாதாபமும் இன்றி , வாகனம் ஓட்டுவதைப் போல ஒரு வேலையாக கருதி , மரண தண்டனையை நிறைவேற்றும் அதிகாரிகள் , அதிகார வர்க்கத்தை பிரதிபலித்து இருப்பார்கள்.

இதை எல்லாம் விட முக்கியமான ஒன்று உண்டு.

எனக்கு தெரிந்த பெரியவர் ஒருவர் இருந்தார் . பெரிய ஸ்காலர். ஆனால் அவர் ,மனைவி அவர் அருமை தெரியாதவர். எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பார். நோய்வாய்பட்டு இருந்தாலும் திட்டுவதில் குறைவிருக்காது. ரொம்ப நாளாகவே நோயில் இருந்து , ஒரு நாள் இறந்து விட்டார் மனைவி.

சரி, இனி இந்த பெரியவர்  நிம்மதியாக சந்தோஷமாக இருப்பார் என நினைத்தேன். ஆனால் இவர் அதன் பின் ஏதோ பறிகொடுத்தது போலவே இருந்தார். என்னதான் மனைவி கொடுமைக்காரியாகவும் , நோய்வாய்ப்பட்டும் இருந்தாலும் , அவளிடம் அவருக்கு ஏதோ ஒருவகை உளவியல்  பாதுகாப்பு கிடைத்து இருக்கிறது. மனைவி மறைந்த கொஞ்ச நாட்களில் இவரும் இறந்து விட்டார்.

மனைவி , வீடு , தாய் போன்றவை ( அல்லது இதற்கு மாற்றாக காதலர்கள் , நண்பர்கள் தேசம் போன்றவை )பாதுகாப்பு என்பதாகவே மனதில் பதிவாகி இருக்கும். சாதாரண காலத்தில் வீடு என்பது சிறையாக தோன்றினாலும், சில சந்தர்ப்பங்களில் வீட்டை வந்து அடைந்தால் ஒருவகை அமைதி கிடைப்பதுண்டு,.

அதுபோல , இந்த படத்தில் அந்த மனைவியும் , வீடும் பாதுகாப்பின் குறியீட்டாக உள்ளன. வீரம்  சாகசம் எல்லாம் போதும் என்ற கையறு நிலை ஏற்பட்டு , பாதுகாப்பாக ஓர் இடத்தை ஒரு தாய் மடியை தேடும் சராசரி மனிதனின் இயல்பை துடிப்பை படம் பதிவு செய்து இருக்கிறது.

முழுக்க முழுக்க காட்சிகளால் நகர்வதாலோ என்னவோ, இந்த அரை மணி நேர குறும்படம் நம் இதய அறையில் நிரந்தர இடம்பிடிக்கிறது.








Monday, July 15, 2013

மாதவிடாய் - என்னை வெட்கப் பட வைத்த திரைப்படம்


ஒரு பெண் சானிட்டரி நாப்கின் வாங்கி வருவதை பார்த்த ஒரு வாலிபன் கிண்டலாக கேட்டான்.
“ மேடம் ..பிரட் வாங்கிட்டு போறீங்களா? எனக்கு இல்லையா? “

அந்த பெண் சொன்னாள் ‘

: பிரட் சும்மா சாப்பிட்டா நல்லா இருக்காது..கொஞ்ச நேரம் கழித்து ஜாம் தடவி தறேன்,, சாப்பிடு :

இது போன்ற பல ஜோக்குளை அந்த காலத்தில் சொல்லி நண்பர்களை சிரிக்க வைத்து இருக்கிறேன். அவர்கள் சொல்ல நான் சிரித்து இருக்கிறேன்.

இது சிரிக்க வேண்டிய விஷயமா... தாய்மை சம்பந்தப்பட்ட , பெண்களின் வலி மிகுந்த உடல்கூறைப் பொருத்த ஒரு விஷ்யம்.

எனக்கு இந்த புரிதல் ஏற்பட்டு பெண்மையை தற்போது மதிக்கிறேன் என்பது எந்த அளவுக்கு உண்மையோ , ஒரு காலத்தில் கேலி செய்து இருக்கிறேன் என்பதும் உண்மை.

மறந்து விட்ட அந்த சம்பவங்களை நினைவு படுத்து என்னை வெட்கி தலைகுனிய வைத்த்து சென்ற் சனியன்று பார்த்த ஆவணப்படம்..

தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டம் சார்பில் ஆவணப்பட திரையிடல் மற்றும் குறும்பட ரசனை வகுப்பு சென்ற சனிக்கிழமை சென்னையில் நடந்தது.



மாதவிடாய் (படைப்பு :கீதா இளங்கோவன்) மற்றும் விடியாத பொழுதுகள் (படைப்பு : வசந்த் கே. பாண்டியன்) ஆகிய ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன.

அதற்கு முன் அயல் நாட்டு குறும்படம் திரையிடப்பட்டது.தொடர்ந்து ரசனை வகுப்பு நடந்தது. சினிமா கோட்பாடு என்ற அருமையான மொழியாக்க புத்தகத்தை தந்த , திரைப்பட அறிஞர் சிவகுமார் வகுப்பு எடுத்தார்.

சினிமா என்ற பெயரில் வேறு எதையோ பார்த்து  நேரத்தை வீணடித்து விட்டோமே என்ற ஆதங்கம் அவர் பேச்சை கேட்டபோது ஏற்பட்டது. சினிமா தர வேண்டிய உன்னத உணர்வை பெறாமல் ஒரு பொழுதுபோக்கு பொம்மைபோல அதை பயன்படுத்துகிறோமே என உண்மையிலேயே வருத்தப்பட்டேன்.

பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தது மட்டும் அன்றி அவரும் சில கேள்விகள் கேட்டார். பதில்களில் இருக்கும் போதாமையை சுட்டி காட்டினார். கேள்விகளைப்பற்றியும் தன் கருத்துகளை சொன்னார்.என்னை எதுவும் கேட்டு விடக்கூடாதே என சற்று தலைமறைவாக அமர்ந்து இருந்தேன் :)

அதன் பின் மாதவிடாய் என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களின் படம் என சரியாக சொல்லி இருந்தார்கள்.

மாதவிடாய் என்றால் என்ன, அது சார்ந்த மூட நம்பிக்கைகள், கடைபிடிக்க வேண்டிய சுகாதார பழக்கங்கள் , பெண்களுக்கு செய்து தர வேண்டிய வசதிகள் என களப்பணி செய்து பிரசண்ட் செய்து இருந்தார்.

நாமெல்லாம் காட்டுமிராண்டி சமுதாயத்தில்தான் இன்னும் இருக்கிறோமோ என தோன்றியது.

இதை எல்லாம் மூடி மறைத்து , மத சடங்குபோல ஆக்கியதால்தான் போதிய விழிப்புணர்வு இல்லாமல் போய் , நான் ஆரம்பத்தில் சொன்னது போல முட்டாள்தனமாக சிலர் நடந்து கொள்வதில் முடிகிறது.

அரசு, தனியார் நிறுவனங்கள் , பள்ளிகள் போன்றவற்றில் இதற்காக எந்த சிறப்பு வசதிகளும் செய்யப்படுவதில்லை..அதற்கு நிதியும் ஒதுக்கப்படுவதில்லை.

ஒரு பெண் உறுப்பினர் சட்டசபையிலோ பாராளுமன்றத்திலோ எழுந்து நின்று இதற்காக நிதி ஒதுக்குங்கள் என கேட்க கூச்சப்படுவது யதார்த்தம். அவர்களே அப்படி என்றால் சாதாரண பெண்கள் என்ன செய்வார்கள்?

மாற்றுத்திறானிகளான பெண்கள் அனுபவிக்கும் கொடுமை சொல்லி மாளாது.

பேசத்தயங்கும் இந்த விஷ்யத்தை கையில் எடுத்து, தெளிவாக படம் எடுத்த கீதா பாராட்டுக்குரியவர்.
அரங்கில் அவரைத்தவிர அனைவரும் ஆண்களே.

அவர் உள்ளத்தில் ஒளியுடன் அத்தனை ஆண்கள் மத்தியில் இந்த பிரச்சினை குறித்து பேசியபோது அனைவருமே மிகவும் பிரமிப்போடும் மரியாதையுடனும் அவர் பேச்சை கேட்டார்கள்.
சிலர் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்கள், இது வரை புரியாமல் நடந்து கொண்டதற்கு சிலர் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார்கள்.


இரண்டாவதாக திரையிடப்பட்ட ஆவணப்படம் விடியாத பொழுதுகள். இலங்கை ராணுவத்தால் கஷ்டப்ப்படும் மீனவர்களைப் பற்றிய படம்.

உலகில் வேறு எங்கும் நடக்காத கொடுமை, ஒரு நாட்டு மீனவர்களை இன்னொரு நாட்டு ராணுவம் தாக்குவது.

வேறு எந்த நாடாக இருந்தாலும் , தன் நாட்டு குடிமகன் தாக்கப்படுவதை பார்த்து கொண்டு இருக்காது, ஆனால் இதை ஒரு பொருடடாகவே நினைக்காத இந்திய அரசு. இது தன் இறையாண்மைக்கு இழுக்கு என்பதையே புரிந்து கொள்ளவில்லை என்பதை ஆவணப்படுத்து இருந்தார் வசந்த் பாண்டியன்.

பாதிக்கப்பட்ட மீனவர்கள் பார்வையில் பிரச்சினையை சொல்லி இருந்தது சிறப்பு.

பேசக்கூச்சப்படும் விஷயம். பேச மறந்து போன விஷ்யம் என இரு முக்கிய பிரச்சினைகளைப்பற்றிய படங்களை திரையிட்டு இருந்தது நிறைவாக இருந்தது.

வாய்ப்பு கிடைக்கையில் இந்த படங்களை பார்க்குமாறு கேட்டு கொள்கிறேன்.




Sunday, June 9, 2013

பரபர விவாதம் , வெளி நடப்பு - தமிழ் ஸ்டுடியோ அருண் குறும்பட நிகழ்வின் சுவாரஸ்யங்கள்


சாஃப்ட்வேரில் ஒரு பெரிய நிறுவனத்தில் அதுவும் அமெரிக்காவில் பணி புரிவதுதான் பெரும்பாலான தமிழர்களின் கனவு. ஆனால் தன் இலட்சியத்துக்காக அமெரிக்க வாய்ப்புகளைக்கூட தூக்கி எறிந்த தமிழ் ஸ்டுடியோ அருண் எனக்கு ஆச்சர்யமான மனிதராக தெரிகிறார் , அவர் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு.

அவர் லட்சியம் சினிமா,  சினிமா என்றால் வழக்கமாக எல்லோர் மனதிலும் தோன்றும் கமர்சியல் படங்கள் அல்ல. உண்மையான ஒரு மாற்று சினிமா என்பது ஓர் இயக்கமாக மாற வேண்டும் என்ற ஆசையில் பல பணிகள் ஆற்றி வருகிறார்.

அந்த பணிகளில் ஒன்றாக , நல்ல படங்களை அனைவரும் சேர்ந்து பார்த்தும் ஒரு வாய்ப்பை அளிக்கும் வகையில் குறும்பட வட்டம் சார்பில் நல்ல படங்களை திரையிட்டு வருகிறார்.

அந்த வகையில் இந்த மாதம் ஓர் உலகத்திரைப்படமும் , ஒரு தமிழ் குறும்படமும் திரையிடப்பட்டது. எனக்கும் ஃபேஸ்புக்கில் இன்வைட் அனுப்பினார்.

 நல்ல படங்களில் எனக்கு ஆர்வம் உண்டு என்பதால் , என் வருகையை உறுதி செய்தேன்.

சன்க்கிழமை. மாலை எழும்பூரில் இருக்கும் ஜீவன ஜோதி அரங்கத்தில் நிகழ்ச்சி நடந்தது.

அதே நாளில் சாருவின் நிகழ்ச்சி ஒன்று நடப்பது பிறகுதான் தெரிய வந்தது. சாருவின் நிகழ்ச்சிகள் எதையும் தவற விடக்கூடாது என நினைப்பவன் நான்,

ஆனால் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவதாக சொல்லி விட்டு போகாமல் இருந்தால் , நடத்துபவர்களுக்கு சில நடைமுறை சிக்கலகள் ஏற்படும். இதை அரசோ அல்லது வேறு பன்னாட்டு அமைப்போ நடத்தவில்லை.

ஆர்வமுள்ள சிலர் தம் சொந்த முயற்சியால் நடத்துகிறார்கள்.  எத்தனைபேர் வருகிறார்கள் என கணக்கிட்டு ஏற்பாடுகளை செய்வார்கள்.  வருவதாக சொன்னவர்கள்  வராமல் போனால் ஏற்பாடுகள் வீணாகும், மேலும் சில கஷ்டங்கள் ஏற்படும்,

எனவே சொன்ன நேரத்துக்கு ஜீவன ஜோதி அரங்கம் சென்றேன்.

நண்பர்கள் கிருபா, பிரியமுடம் துரோகி ஆகியோரும் வந்து இருந்தனர். இதுல் கிருபாவுடன் பேசினான். ப்ரியாவுடன் பிறகு பேசலாம் என நினைத்தேன். அதுதான் தவறாக போய் விட்டது. ஏன் என பிறகு சொல்கிறேன்.

முதலில் yesterday என்ற ஆஃப்ரிக்கப்படம் திரையிடப்பட்டது.

அதன் பின் 14/ 6 என்ற தமிழ் குறும்படம் ( இயக்கம் : பாலாஜி சுப்ரமணியம் )

இந்த இரு படங்களையும் பற்றி தனியாக எழுத இருக்கிறேன்.

குறும்படங்களை யூ ட்யூபிலோ , சிடியிலோ பார்ப்பதை விட கூட்டத்துடன் சேர்ந்து பார்ப்பது அலாதியான அனுபவம்.,

குறும்படங்கள் என்றில்லை. பொதுவாகவே எல்லா படங்களுமே கூட்டத்தினருடன் பார்ப்பதற்காகத்தான் எடுக்கப்படுகின்றன என்றே நினைக்கிறேன்.

படம் முடிந்ததும் படத்தைப்பற்றிய விவாதம் .சூட்டோடு சூடாக விவாதம் என்பதால் விவாதங்களில் அனல் பறந்தது.

படம் பார்த்து முடித்து , ரிலாக்சாக வீட்டில் அமர்ந்தோ அல்லது அலுவலக ஏசியில் அமர்ந்தோ விமர்சனம் செய்து , ஆன்லைன் விவாதம் செய்வது வேறு.

படம் பார்த்து முடித்தவுடன் உடனடியாக அங்கேயே விவாதிப்பது வேறு.

சினிமாவை எப்ப்படி பார்ப்பது , எப்படி விமர்சிப்பது என்பதை சக பார்வையாள நண்பர்களிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம். அதே போல , ஒரு படத்தை எப்படி பார்க்க கூடாது, எப்படி விமர்சிக்க கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

திரையுலக பிதாமகர் எடிட்டர் லெனின் வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் வருவார் என நான் எதிர்பார்க்கவில்லை.

அவர் வருகையும் பேச்சும் மட்டும் அல்ல , அவர் மவுனமும்கூட மேன்மக்கள் மேன்மக்களே என்று காட்டியது.

அவர் வருவார், ஃபார்மலாக பேசி செல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவரோ நீங்கள் எல்லாம் பேசுங்கள். நான் அதை கவனிக்க விரும்புகிறேன், அதன் பின் பேசுகிறேன் என்றார்.

பல கூட்டங்களில் பார்த்து இருக்கிறேன். சில பேச்சாளர்கள் தாம் பேசுவதை மட்டுமே யோசித்து கொண்டு இருப்பார்கள்.  தம் பேச்சு முடிந்ததும் கிளம்பி விடுவார்கள்.

ஆனால் லெனினோ மற்றவர்களை பேச வைத்து கேட்டார். மற்றவர்கள் என்றால் வி ஐ பிகளோ தொழில் முறை பேச்சாளர்களோ அல்ல. வெவ்வெறு துறையை சார்ந்த சினிமா ரசிகர்கள்.

அதன் பின் தன் பேச்சில் , முன்னால் பேசியவர்கள் பேச்சை நினைவு படுத்தி பேசினார். அந்த அளவுக்கு மற்றவர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து மாமனிதனாக காட்சி தந்தார் என்றால் , அவர் பேச்சில் தான் எவ்வளவு பெரிய தொழில் வல்லுனர் என காட்டினார்.

இசை , ஒலி, ஒளி , வசனம் என பலவற்றை ஒரு பேராசியர் வகுப்பு எடுப்பது போல விளக்கினார்.
சினிமா துறையில் அவருக்கு இருக்கும் PASSION கண்டிப்பாக அங்கிருந்த அனைவருக்கும் inspiration ஆக இருந்து  இருக்கும்.

அவருக்கு முன் பேசியவர்கள் பேச்சு அனைத்தையும் நான் ரசித்தேன். சிலர் விமர்சனாக பேசினார்கள் , சிலர் ரசிகனாக பேசினார்கள், நான் இரண்டையும் ரசித்தேன்.

ஒரு படத்தை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என நாம் சொல்ல முடியாது. பார்வையாளன் அவன் நுண்ணுணர்வு, வாசிப்பு, ரசனை அடிப்படையில் புரிந்து கொண்டு விமர்சிப்பான். இது இயல்பு. எனவே ஒரு பார்வையாளனாக நான் அனைத்து பார்வைகளையும் ரசித்தேன்.

ஆனால் நண்பர் ப்ரியமுடன் துரோகியோ லேசாக டென்ஷன் ஆகிக்கொண்டு வந்தார்.

இதில் இன்னொரு மேட்டர் இருக்கிறது, வழக்கமாக நிகழ்ச்சி நடத்துபவர்கள் மாடரேட்டர் ரோலை எடுத்து கொள்வார்கள். இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் முற்றினால் , சரி தவறு என்பதற்குள் போகாமல் சமரசம் செய்து வைப்பார்கள். ஓகே பாஸ்... நீங்க சொல்வது ஒரு விதத்தில் சரி.. அவர் சொல்வதும் சரி....   புலவர்களுக்கிடையே சச்சரவு இருக்கலாம்.. அது சண்டையாகி விடக்கூடாது என பேசி நடு நிலையை நிலை நாட்டுவார்கள்.

ஆனால் அருண் இது போன்ற சமரசவாதி இல்லை என்பதால் , கறாராக விவாதத்தை கொண்டு செல்ல விரும்புவார்.

அப்படி இருந்தும் சிலரது பேச்சுகள் நண்பர் துரோகியை டென்ஷன் ஆக்கி கொண்டு இருந்தன.

என்னை பொறுதவரை ஒரே படம், பலருக்க்கு பல விதமாக தெரிவது சுவாரஸ்யமாக இருந்தது.

சிலர் கருத்துகளை பாருங்கள்.


***************************************************

இது எயிட்ஸ் பற்றிய படம். ஆஃப்ரிக்காவில் எயிட்ஸ் அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும்.  அப்படி இருக்கையில் எயிட்ஸ் பற்றி அவர்களுக்கு தெரியாது என்பது போல காட்டி இருப்பது செயற்கையாக இருக்கிறது

************************************************

தமிழ் படமான மிருகம் படத்தை நினைவு படுத்தியது. ஆனால் அதை விட இந்த படம் நேர்த்தியாக இருந்தது.  ஒவ்வொரு ஷாட்டும் அருமை. புதிதாக நகரத்துக்கு செல்லும்போது நிழல்க்ள் மட்டும் காட்டப்படும். அதேபோல புழுதி காட்சி,  வீட்டின் உள்ளே எடுக்கப்பட்ட காட்சி எல்லாம் அருமை. கிராமத்தில் ஆண்களே இல்லை என்பது நன்றாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

***************************

ஆப்ரிக்காவில் விழிப்புணர்வு இல்லை என்பதை குறையாக சொல்ல முடியாது. ஒரு வேளை இந்த படத்தின் காலம் , எயிட்ஸ் வர ஆரம்பித்த கால கட்டமாக இருக்கலாம் அல்லவா

படம் அருமை...படத்தின் பெயர் யெஸ்டர்டே... ஆனால் என்னை பொறுதவரை இந்த படம் யெஸ்டெர்டெ மட்டும் அல்ல...  Forever

***************************

தமிழ் நாட்டில் என்ன விழிப்புணர்வு இருக்கிறது. என் நண்பன் ஒருவன் இதேபோல பாதிக்கப்பட்டான், இந்த படத்தில் வருவது போலத்தான் உண்மையில் நடந்து கொண்டனர், மிகவும் சிரமப்பட்டோம். அவன் இறந்தபோது தூக்கி செல்ல நான்கு பேர் கூட கிடைக்கவில்லை. எனவே படம் செயற்கை என சொல்வதை ஏற்க இயலாது. பெண்களை அடித்தல் , அடிமையாக வைத்து இருத்தல் போன்றவை உலகம் முழுக்க ஒரே மாதிரிதான் இருக்கிறது என்பதை படம் காட்சி படுத்தி இருக்கிறது

*********************************************

என்  tommorokkalil மறக்க முடியாத படம் yesterday

**************************************

இது எயிட்ஸ் பற்றிய படம் என தோன்றவில்லை. பெண்ணின் மன உறுதியைப்பற்றிய படம்.

**********************************

வாழ்க்கை எவ்வளவு வலி மிகுந்தது என்பதை படம் சொல்கிறது. வலியை மட்டும் சொல்லாமல் அன்பு மிகுந்த டீச்சர், பக்கத்து வீட்டு பெண், உதவும் வழிப்போக்கர்கள் என பாசிட்டிவாகவும் சொல்கிறது

*******************************

பெண்ணின் பெருந்தன்மை, வீரம் , மன்னிக்கும் குணம் இவற்றையே படம் சொல்கிறது. அந்த குழந்தை கேட்கும் கேள்விகளில் வாழ்வின் மீதான நம்பிக்கை பளிச்சிடுகிறது. தன் கணவனுக்காக அவள் தன்னந்தனியாக அமைக்கும் வீடு , அவளது பழைய வீட்டை விட அற்புதமாக உள்ளது.அதில் அவள் அன்பு தெரிகிறது

**********************************


இந்த எல்லா கருத்துகளையும் நான் ரசித்தேன்.  ஆனால் இதை எயிட்ஸ் விழுப்புணர்வு படமாக நினைத்துக்கொண்டு , சிலர் பேசியதை துரோகி ரசிக்கவில்லை. ஆனால் அடுத்து லெனின் பேச இருப்பதால் மவுனமாக இருந்தார்.

பின் லெனின் பேசினார்.


**********************************
லெனின்

என்னை திரையுலக ஜாம்பவான் என அறிமுகப்படுத்தினார்கள்.  நான் என்னை பெரிய ஆள் என நினைப்பது இல்லை. இதெல்லாம் சும்மா ஃபார்மலான வார்த்தைகள். நான் வேலை செய்யும் படங்களில் இப்படிப்பட்ட வசனம் வந்தால் வெட்டி எறிந்து விடுவேன் ( அரங்கில் கைதட்டல் , சிரிப்பு )

உண்மையில் ஜாம்பவான்கள் எல்லாம் இப்போது திணறுகிறார்கள். புதிய ஆட்கள்தான் ஜொலிக்கிறார்கள். அவர்கள் பெறும் வெற்றிகளை பாராட்ட மனம் இல்லாமல் இந்த ஜாம்பவான்கள் இருக்கிறார்கள்.  தாம் செய்ய முடியாததை புதியவர்கள் செய்கிறார்களே என்ற பொறாமை ( கைதட்டல்)

அதே சிந்தனை , வழக்கமான ஷாட் என எடுத்தால் ரசிகன் எப்படி பார்ப்பான், எனக்குதான் வேறு வழியில்லை. தொழில் நிமித்தம் பார்க்கிறேன்.தேவை இல்லாததை எடிட் செய்கிறேன். மீண்டும் மீண்டும் அப்படியே எடுத்தால் என்ன செய்வது?

படம் எடுக்க கற்பது போல விமர்சனத்தையும் கற்க வேண்டும்.

படத்தை அப்படி எடுத்து இருக்கலாமே..இப்படி எடுத்து இருக்கலாமே என சொல்வது விமர்சனம் அல்ல. எடுக்கப்பட்டு பார்வைக்கு வந்துள்ள படத்தின் அடிப்படையிலேயே விமர்சனம் அமைய வேண்டும்.

இங்கு பேசிய சிலர் நன்றாக பேசினார்கள். ஒருவர் ஒரே வரியில் பேசி விட்டு போனார். நன்றாக இருந்தது.

என்னை பொருத்தவரை எயிய்ட்ஸ், விழிப்புணர்வு எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

தன் குழந்தை படிக்க வேண்டும். அதுவரை தான் உயிரோடு இருக்க வேண்டும் என நினைக்கிறாளே அந்த பெண்...அதுதான் இந்த படத்தின் ஜீவன்.

படம் எப்படி ஆரம்பிக்கிறது பாருங்கள்..எயிட்ஸ் எல்லாம் இல்லை. ஒரு லாங்க் ஷாட் ..தூரத்தில் புள்ளியாக அந்த பெண்.

எவ்வளவோ உணர்வுகளை இது சொல்லி விடுகிறது.

இங்கு திரையிடப்பட்ட தமிழ் குறும்படத்தின் ஆரம்ப காட்சியை ஒப்பிட்டு பாருங்கள்/

குறையாக சொல்லவில்லை. நன்றாக எடுத்து இருக்கிறார்.

ஆனால் பொதுவான தமிழ் திரைப்பட சூழலை சொல்ல வேண்டி இருக்கிறது.
நம் ஆட்களுக்கு ஒலி உணர்வே இல்லை.

அந்த படத்தில் ஒலி இயற்கையாக அமைய வேண்டும் என்பதற்கு எவ்வளவு பிரயத்தனம் எடுத்து இருக்கிறார்கள் என பார்த்தோம்.

 நம் ஊரில் ஒலிக்கும் இசைக்கும் வித்தியாசம் தெரியாமல் பணியாற்றுகிறார்கள்/ இரவு விழித்து வேலை செய்வதையே பெரிய சாதனையாக நினைக்கிறார்கள்.

இங்கு இயற்கையான ஒலியே இல்லை. எல்லாம் அவரசத்தில் செய்யப்படும் டப்பிங்தான்.  தமிழ் , தமிழுணர்வு என பேசுகிறோம் ஆனால் எந்த நடிகைக்கும் தமிழ் தெரியாது.

டெக்னாலஜி வளர்ந்து விட்டதே தவிர எண்ட் பிராடக்ட் தரம் வளரவில்லை.

கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி. எதுவாக இருந்தாலும் இப்படி தைரியமாக சொல்ல வேண்டும். சொல்ல வேண்டிய இடத்தில் ,மவுனமாக இருந்து விட்டு வெளியே போய் வீரம் காட்ட கூடாது,.

அனைவருக்கும் நன்றி

*********************************************

அவர் பேசி முடித்ததும் , குறும்படம் குறித்த விவாதம் தொடங்கியது.

அதற்கு முன் யெஸ்டர்டே படத்தை குறித்தும் , விமர்சனங்கள் குறித்தும் அருண் பேசினார்.

கதை நிகழும் ஊரின் புவியியல் அமைப்பை காட்சி படித்தியது. ஆரஞ்சு பழத்தை வைத்து ஏழ்மையை காட்டியது போன்றவற்றை சொன்னார்.

மேலும் பேசுகையில்..

“ இந்த படம் நம்மை பாதித்தது.. ஆனால் அழ வைக்க முயற்சி செய்யவில்லை. நம் படங்கள் ரசிகனை அழ வைப்பதையே வெற்றி என நினைக்கின்றன. அதே போல நம் படங்களில் அதிகமாக ஷாட்களை குறைவான நேரத்தில் வைப்பதை திறமை என நினைக்கின்றன. யெஸ்டர்டே படத்தின் ஆரம்ப காட்சி போன்ற லாங்க் ஷாட், நீண்ட காட்சி , தமிழில் வந்ததே இல்லை “ என்றார்.

அதன் பின் விவாதம் நடந்தது.

ரத்த தானம் பற்றிய படம். பார்வையாளனுக்கு படம் சுவாரஸ்யமாக இருந்ததான்.. இயக்குனர் தோற்றுவிக்க நினைத்த உணர்வு பார்வையாளனுக்கு ஏற்பட்டதா என அல்சப்பட்டது

ஆனால் விவாதம் சூடுபிடிக்க ஆரம்பிக்க , கொஞ்சம் திசை மாறியது.

கதானாயகனின் மதம் ,  அதன் நுண்ணரசியல் , ரத்த தானத்தில் இருக்கும் டெக்னிக்கல் விஷ்யங்கள்., அமெரிக்க கலாச்சாரம் , இந்திய கலாச்சாரம் என ஒரு மார்க்கமாக விவாதம் செல்லவே, நண்பர் துரோகி டென்ஷனாகி வெளி நடப்பு செய்து விட்டார்.

அவர் போயிருக்க தேவையில்லை என்பது என் கருத்து.

உணர்வுகளை பேச வேண்டிய விமர்சனத்தில் தகவல் பிழைகள் ,  நுண்ணரசியல் என பேசுவது தவறு என அவர் நினைத்து இருக்கலாம்.

ஆனால் ரசிகர்கள் என்றால் எல்லா வகையினரும்தான் இருப்பார்கள்.. எல்லோரயும்தான் இயக்குனர் திருப்தி செய்தாக வேண்டும். எல்லோரையும் திருப்தி செய்ய முடியாவிட்டாலும் , பெரும்பாலானோரை திருப்தி செய்தால்தான் படம் ஓடும்.

பிரியா போன்ற சில எலைட் ரசிகர்களுக்காக மட்டும் படம் எடுக்க முடியாது.



ஆக, சினிமாவை மட்டும் அல்ல..  பல வகை ரசிப்புத்தன்மையை உணரவும் இந்த  நிகழ்வு உதவியது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே..


இந்த இரு திரைப்படங்களைப்பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்..

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா