Showing posts with label ஸ்ரீராம். Show all posts
Showing posts with label ஸ்ரீராம். Show all posts

Saturday, June 15, 2019

தமிழ் எழுத்தாளனை கண்ணீர் கடலில் ஆழ்த்திய ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட்


முடிவு எடுக்க உனக்கு பத்து நிமிடங்கள் தருகிறேன்.. நல்ல முடிவாக சொல் என்றான் அவன்
பத்து நிமிடம் முடிந்தது

 நல்லது? “ என்றபடி அவள் முகத்தை பார்த்தான்
--

இப்படி ஒரு மொழி பெயர்ப்பு  நாவலில் படித்தேன்

என்ன எழவு இது.. இந்த சந்தர்ப்பத்தில் ஏன்  “ நல்லது “ என்கிறான் என ஐயப்பட்டு மூல நூலை பார்த்தேன்

“ well ? "  என இருப்பதைத்தான் , நல்லது ? என மொழி பெயர்த்து இருக்கிறார்கள்

தமிழில் மொழி பெயர்ப்பு இப்படித்தான் என முடிவு கட்ட முடியாது

வெ, ஸ்ரீராம் போன்றோர் மொழி பெயர்ப்புகள் , தமிழ் இலக்கிய உலகில் ஆழமான பாதிப்புகள் உருவாக்கின என்பது உண்மை

எனவே ஃபிரஞ்ச் இலக்கியமும் நானும் என்ற தலைப்பில் அவர் பேசுகிறார் என்பதை அறிந்து உரை நடக்கும் இடத்துக்கு சென்று விட்டேன்

ஆறு மணி நிகழ்ச்சி என்றால் 7 மணிக்கு வருவது  நம் இயல்பு. ஆனால் நான் ஐந்து முப்பதுக்கே சென்று விட்டேன்.. என் போல பலரும் சீக்கிரமே வந்து இருந்தது ஆச்சர்யம்.. மகிழ்ச்சி

குளிரூட்டப்பட்ட நவீனமான அறை.. அரங்கு நிறைந்து இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பது மகிழ்ச்சி அளித்தது

சரி..அவர் பேசியதில் சில பகுதிகளை காண்போம்
---------------------------------

70களில் நான் ஃபிரெஞ்ச் கற்று வந்தேன். அதன் உயர் நிலை கல்வியின் ஒரு பகுதியாக ஃபிரெஞ்ச் இலக்கியங்களை படிக்கும் சூழல் அமைந்தது.. முக்கியமான ஃபிரெஞ்ச் எழுத்தாளர்கள் எனக்கு அறிமுகம் ஆனது இப்படித்தான்

அது சிற்றிதழ்கள் தீவிரமாக இயங்கிய பொற்காலம்.. பிரஞ்ஞை பத்திரிக்கையுடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்தது.. ரவி சங்கர் , வீராசாமி ஆகியோர் மொட்டை மாடியில் அமர்ந்து நேரம் போவது தெரியாமல் விவாதிப்போம்

அப்போது ஃபிரஞ்ச் நூல்கள் ஆங்கில வழியாகவே மொழி பெயர்க்கப்பட்டு தமிழில் வெளி வந்து கொண்டு இருந்தன

 நேரடியாக ஃபிரெஞ்ச் மொழி பெயர்ப்பில் தமிழில் கொண்டு வரலாமே என பேசி முடிவெடுத்தோம்

நான் ஆரம்பத்தில் மொழி பெயர்க்க ஆரம்பித்தது ஆல்பர்ட் காம்யூ’வின் பிளேக் ( கொள்ளை நோய் ) நாவலைத்தான்

ஆனால் இந்த நாவலை விட அன்னியன் நாவலே மேலும் செறிவானது.. பூடகமானது என முடிவெடுத்து அன்னியன் நாவலில் இறங்கினேன்

இப்படித்தான் அன்னியன் நாவல் தமிழுக்கு வந்தது

பார்ப்பதற்கு எளிய சிறிய நாவலாய் தோன்றும். ஆனால் எளிமை என்பது மாயத்தோற்றமே.. உள்ளார்ந்த பல அடுக்குகளை கொண்ட நாவல் இது

முதல் பகுதி ஒரு நடை..இரண்டாம் பகுதி இன்னொரு நடை

அது ஏன் என்பதற்கு நாவலிலேயே விளக்கம் இருக்கும்

இலக்கியத்தில் மறக்க முடியாத முதல் வரிகள் என சில உண்டு

அப்படி ஒரு மறக்க முடியாத முதல் வரி இதில் வரும்

அம்மா இன்று இறந்து விட்டாள்

இதுதான் முதல் வரி

அம்மா இன்று இறந்து விட்டாள் . அல்லது நேற்றாகவும் இருக்கலாம். எனக்கு உறுதியாக தெரியாது. தந்தி இப்படி சொல்கிறது “ அம்மா இறந்து விட்டாள் . நாளை இறுதி சடங்கு. ஆழ்ந்த அனுதாபங்கள் “

பாருங்கள்.. முதல் வரிகளிலேயே நேற்று , இன்று , நாளை என மூன்றும் வந்து விடுகிறது. நிச்சயமின்மையும் வருகிறது. இந்த அம்சம் நாவல் முழுக்க வருகிறது

ஆங்கில மொழி பெயர்ப்பாளர்கள் தெரியாமலோ , வேண்டுமென்றோ சிலவற்றை திரித்து மொழி பெயர்த்தனர். அது தமிழில் மேலும் சிதைந்து விடுகிறது. ஆக , மூல நூலில் சாரம் கிடைக்காமல் போகிறது

என்னைப்பொருத்தவரை , மூல நூலில் நான் உணர்ந்த தாக்கம் , மொழி பெயர்ப்பில் கிடைக்க வேண்டும் என உறுதியாக இருப்பேன்

மீள முடியுமா என்பது சார்த்தர் எழுதிய  நாடகத்தின் மொழி பெயர்ப்பு.. Closed door , No exit ஆகிய தலைப்புகளில் இதன் ஆங்கில மொழி பெயர்ப்புகள் வந்தன

மூடிய கதவுக்கு பின்னால் .. என மர்ம நாவல் போல தலைப்பு வைக்க விரும்பவில்லை. மூல நூலை ஊன்றி படித்த பின்பு , மீள முடியுமா என்பதே பொருத்தமான தலைப்பு என முடிவெடுத்தேன்

இறந்த பின் , மீளா நரகம் செல்லும் சிலர் தான் இந்த நாடக கதாபாத்திரங்கள்.. அவர்கள் அடையும் வாழ்க்கை குறித்த தரிசனம்தான் நாடகம்

நரகம் என்பது எண்ணெயில் போட்டு நம்மை வறுக்கும் இடம் அல்ல.. உண்மையில் நம் நரகத்தை உருவாக்குபவர்கள் நம்முடன் சேர்ந்து வாழும் பிறர்தான்.. அதாவது நம் வாழ்க்க்கை முழுக்க முழுக்க பிறரால் தீர்மானிக்கப்படும் ஒன்றாக இருக்கிறது என்பதே நாவலில் தரிசனம்

எழுத்தாளர் இமையம் இதை படித்து விட்டு , என்னை நேரில் பார்க்க வந்து விட்டார். தன்னை எழுத்தாளனாக உருவாக்கிய நாவல் என்று அவர் இதை குறிப்பிடுவது வழக்கம்’

 ஒரு கதையில் குருவி ஒன்று வருகிறது.. அதற்கு என்ன தமிழ் பெயர் என தெரியவில்லை.. இதற்காக பறவை ஆய்வாளர்களுடன் பேசினேன்.. மேற்கு தொடர்ச்சி மலைபகுதி வாழ் மக்களிடம் பேசினேன்

கதையில் வரும் குருவின் தோற்றத்தை பண்புகளை சொன்னதும் அதன் தமிழ்ப்பெயரை அவர்கள் சொன்னார்கள்

தைலான் குருவி

அது ஒரு போதும் தரையில் அமராது.. மரங்களில் கூரைகளில் சுவர்களில் அமரும்.. தரைக்கு வராது.. தரை இறங்கான் குருவி மருகி தைலான் ஆகி விட்டது

இப்படி ஒரு சொல்லுக்காக உழைக்க வேண்டி இருக்கிறது

இறந்தோருக்காக தூக்கம் துறக்கும் கிறிஸ்தவ சடங்க்குக்கு எஸ் வி ராஜதுரை மற்றும் பாதிரியார்களுடன் விவாதித்து , நீத்தார் கண் விழிப்பு என்ற சொல்லை உருவாக்கினோம்


அந்த்வான் து செந்த் - எக்சுபெரி எழுதிய காற்று மணல் நட்சத்திரங்கள் , குட்டி இளவரசன் போன்றவற்றை மொழியாக்கம் செய்திருக்கிறேன்


ஃப்ரான்சில் நான் படிக்க சென்றிருந்தபோது , என்னை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்தனர்.. ஹோட்டலில் தங்க வைத்தனர்

ஹோட்டல் பணியாளர்களும்கூட என் மொழி பெயர்ப்பு பணியை அறிந்திருந்தனர்

எக்சுபரி இந்த ஹோட்டலில்தான் தங்குவார்... என ரிசப்ஷனிஸ்ட்  சொன்னபோது எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி

அது மட்டும் அல்ல.. உங்களை கௌரவிக்கும்வண்ணம் , அவர் வழக்கமாக தங்கும் அறையையே உங்களுக்கு அளித்துள்ளோம் என அவர் சொன்னபோது எனக்கு கண்ணீர் வந்து விட்டது


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா