Sunday, May 5, 2013

last temptation of Christ VS passion of Christ - ஓர் ஒப்பீடு , ஒரு விவாதம்



     பைன்டிங் செய்யப்பட்ட வரலாற்று நாவல் ஒன்று படித்தேன். 80களில் வெளிவந்த நாவல். ஒரு பத்திரிக்கையில் வந்த  நாவலை பைண்ட் செய்து இருந்தார்கள்.

     அதில் அந்த கால சினிமா விமர்சனங்கள் சில படிக்க சுவையாக இருந்தது. இப்போது நாம் கேட்டிராத பல பட விமர்சனங்களை படித்தேன். எப்போதாவது டிவியில் பார்க்க நேரும் சில பட விமர்சனங்களையும் படித்தேன்.

இப்போது அந்த படங்களை பார்த்தால் , நம் விமர்சகர்கள் கிழி கிழி என கிழித்து விடுவார்கள்..ஆனால் அந்த கால கட்டத்தில் அந்த படங்களை பாராட்டித்தான் எழுதி இருந்தார்கள்.

காரணம் அன்றைய ஸ்டாண்டர்ட் அது.
அன்று பாராட்டப்பட்டது என்று கேலிக்குரியதாகி விட்டது,


ஆனால் இது பொது விதி அன்று...   அன்று பாராட்டப்பட்ட பல படங்கள் , பல பாடல்கள் இன்றும் ரசிக்கப்படுகின்றன.
இப்படி காலத்தை மீறி நிற்பவை சில படங்களே...

உலகளவில் பார்த்தால் ஹாலிவுட் படங்களின் நிரந்தர கதானாயகன் என இயேசுவை சொல்லலாம், அவ்வப்போது அவரைப்பற்றி படங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

ஆனால் இவற்றில் பல , தற்காலிக பரபரப்பை காசாக்கும் எண்ணத்தோடு எடுக்கப்பட்டவை,  சில ஆண்டுகளில் மறக்கப்பட்டு விடும்.

சில படங்கள் மட்டுமே காலத்தை மீறி செவ்வியல் படைப்புகளாக நிற்கின்றன,

உதாரணமாக , டாவின்சி கோட்.. விறுவிறுப்பான படம்தான், ஆனால் அதில் மன எழுச்சி ஏற்படவில்லை.பொழுது போகிறது. அவ்வளவே..கிறிஸ்துவத்தை புரிந்து கொள்ள உதவவில்லை. வரலாற்றையும் சரியாக சித்திரிக்கவில்லை.

இது போன்ற படங்களை விட்டு விட்டு , மனதை பாதித்த இரண்டு படங்களைப்பற்றி பேச விரும்புகிறேன்.

PASSION OF CHRIST , LAST TEMPTATION  OF CHRIST ஆகிய இரண்டு படங்கள் முக்கியமானவை.

இரண்டுமே சவாலான சூழலில் எடுக்கப்பட்டு சர்ச்சைகளுகளுக்கிடையே வெளியானவை.
இதில் லாஸ்ட் டெம்ப்ட், படம் பல நாடுகளில் ரிலீஸ் ஆகவே முடியவில்லை.   பேஷன் படம் மெகா ஹிட் ஆனது, ஆங்கிலமல்லாத படங்களின் வரலாற்றில் அதிக பட்ச வசூல் செய்த சாதனை செய்தது.

படத்தை தயாரிக்க பலர் பின் வாங்கிய நிலையில் , இயக்குனர் மெல் கிப்சன் தானே தயாரிப்பிலும் இறங்க வேண்டியதாயிற்று. இதை அவர் சினிமாவாக நினைக்காமல் தான் சொல்ல விரும்பிய ஒன்றை சொல்லியாக வேண்டும் என்ற லட்சியக் கனவாக நினைத்ததால் , இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்தார்.

அதே போல லாஸ்ட் டெம்ப்ட். படமும் பல பிரச்சினைகளுக்கிடையேதான் தயாரானது.,  பட தயாரிப்பு நிறுவனம் பாதியில் கழண்டு கொள்ள , புதிய தயாரிப்பளரை தேடி பிடித்து படம் எடுத்தார்கள். இது வெளி வருவதில் பிரச்சினை இருந்தது. ஆனால் உலகில் எடுக்கப்பட்ட தலை சிறந்த ஆன்மீக படமாக இது கருதப்படுகிறது. தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

இரண்டு படங்களுமே நல்ல படங்கள் என்றாலும் இரண்டில் சிறந்த படம் எது என்பதில் ஒத்த கருத்து இல்லை.

பேஷன் ஆஃப் , படத்தின் அட்வாண்டேஜ் என்னவென்றால் அது பாரம்பரியமான கிறிஸ்துவ வரலாற்றுக்கு நெருக்கமானது. யூதாஸ் காட்டி கொடுப்பது, பிலாத்து கை கழுவுதல் ,  குற்றவாளியை மன்னித்தாலும் பரவாயில்லை -இயேசுவை கொல்ல வேண்டும் என்ற யூதர்களின் ஆவேசம் என நமக்கு தெரிந்த எல்லாம் அப்படியே வரும் என்பதால் இதை ஒரு வகையில் ஆவணமாக கொள்ளலாம். கிறிஸ்துவத்தை அறிய ஓர் ஆரம்பமாக கொள்ளலாம்.

அதே போல இதில் வரும் இயேசு, பொதுவாக நம் மனதில் பதிந்து இருக்கும் இயேசுவின் தோற்றத்தில் இருப்பார்.

லாஸ்ட் டெம்ப்ட் படத்தில் ஆரம்பத்திலேயே சொல்லி விடுவார்கள்.அது ஒரு கற்பனை கதை . எனவே இதை அதிகார[பூர்வ கிறிஸ்துவ ஆவணமாக கொள்ள முடியாது. அதே போல இதில் வரும் இயேசு, யூதாஸ் போன்றவர்கள் நாம் இது வரை அறிந்தவர்களில் இருந்து முற்றிலும் வேறு பட்டு இருப்பார்கள்.

பேஷன் ஆஃப் க்றிஸ்ட் படம் உண்மைக்கு முடிந்த வரை நெருக்கமாக இருக்க முயன்று இருக்கும்.  வசனங்கள் ஆங்கிலத்தில் இருக்காது. லத்தீன் போன்ற அந்த காலத்து மொழிகளையே பாத்திரங்கள் பேசும் ,ஆங்கில சப் டைட்டிலுடன்
அதே போல சினிமாவுக்கு தேவையான செண்டிமெண்ட் போன்ற அம்சங்கள் இந்த படத்தில் இருக்கும்.
இயேசு சிலுவையில் இருந்து கீழே விழும்போது , அவர் சின்ன வயதில் விளையாடுகையில் கீழே விழும் காட்சியும் , அவர் தாயார் பதறுவதும் பொருத்துமாக இருக்கும்,
இயேசு ரத்தம் சிந்தும்போது லாஸ்ட் சப்பர் காட்சிகள் விரிவது உருக்கமாக இருக்கும்.

இந்த படத்தின் மைனசாக பலர் கருதுவது , இதன் அதீத வன்முறைதான். சிலுவையில் ஆணியை வைத்து அறைதல் , சித்திரவ்தை கருவிகள் , இயேசுவின் சதை துண்டு பிய்ந்து கொண்டு வருதல் , என கொடூரத்தின் உச்சமாக இருக்கும் .


ஆனால் அந்த கொடூரத்தை அனுபவிக்கும்போதும் இயேசு சக தண்டனையாளனுக்கு அருளும் கருணை மனம் கொண்டவராக இருக்கிறார் என்பதை இயக்குனர் சொல்ல விரும்பி இருக்கிறார். எனவே அந்த காட்சிகள் தேவைப் படுகின்றன.

இன்னொன்று,. இயேசுவை கடவுளாக நாம் நினைப்பதால் , அந்த சித்திரவதையெல்லாம் நம் மனதில் அவ்வளவு ஆழமாக பதியவில்லை. கடவுளை எப்படி சித்திரவதை செய்ய முடியும் என நம் ஆழ் மனம் நினைப்பதால் , அந்த சித்திரவதை எல்லாம் ஒரு பாவனைதான் என நினைக்கிறோம்..

ஆனால் அவர் சித்திரவதையை காட்சியாக காணும்போது அதன் தீவிரம் நெஞ்சை தொடுகிறது.
பிதாவே என்னை ஏன் கை விட்டீர் என்ற அவர் கையறு நிலை தெரிகிறது. இந்த சித்திரவதையை எதன் பொருட்டு அவர் ஏற்கிறார் என யோசிக்க முடிகிறது..அப்படி என்றால் அவரால் பலன் பெற்றவர்கள் எவ்வளவு நன்றியுடன் இருக்க வேண்டும்..அப்படி இருக்கிறோமோ என கவலைப்பட வைக்கிறது.

ஆனால் மைனஸ் பாயிண்ட் என பார்த்தால் , இயேசுவின் சித்திரவதையை டிராமடைஸ் செய்வதில் இயக்குனர் காட்டும் ஆர்வத்தை , அவர் வாழ்வை காட்டுவதில் செலுத்தவில்லையோ என தோன்றுகிறது.
அதே போல யூதாஸ் ஏன் அவரை காட்டி கொடுக்கிறான், மற்ற சீடர்கள் ஏன் அன்பாக இருக்கிறார்கள், மரியா மக்தேலானா என்பவள் யார் என ஒன்றும் புரியவில்லை. ஏற்கனவே தெரிந்தவர்களுக்குதான் புரியுமே தவிர படம் விளக்கவில்லை.

ஆனால் சில நுண் அரசியலை பேசுகிறது.  இயேசுவை கொல்ல கிரேக்கர்கள் விரும்பினார்கள்.யூதர்களையும் அழிக்க விரும்பினார்கள் என்பது வரலாறு.

இந்த படத்தில் யூதர்கள் வற்புறுத்தலால்தான் பிலாத்து மன்னன் இயேசுவை கொல்ல ஒப்புக்கொண்டான் என்பது மீண்டும் மிண்டும் வலியுறுத்தப்படுகிறது.   யூதர்களும் அக்கிரமங்கள் செய்வதவர்கள்தான். ஆனால் அவர்கள்மேல் மட்டுமே தவறு என்ற பார்வை , சர்ச்சைகளுக்கு உள்ளானது.

லாஸ்ட் டெம்ப்ட் படம் கற்பனை கதை. ஆனாலும் இயேசு ஏன் இவ்வளவு பெரிய தியாகத்துக்கு தயாரானார், யூதாஸ் ஏன் காட்டி கொடுத்தான், மரியா மக்தெலேனாவின் முக்கியத்துவம் என்ன என ஒவ்வொரு பாத்திரமும் செதுக்கப்பட்டுள்ளது.

இயேசுவின் ஆன்மீக தேடல் மட்டும் அன்றி அவரது சீர்திருத்த பார்வை, தலைமை பண்பு , வாழ்க்கையை கொண்டாடும் மனோபாவம் என எல்லாவற்றையும் செதுக்கி உள்ளனர்.

அந்த பாத்திரத்தில் ஒயின் இருக்கிறது பாருங்கள் என்பார், இல்லை நான் அதில் தண்ணீர்தான் வைத்தேன் என உரிமையாளன் அடம் பிடிப்பான். எதற்கும் இன்னொரு முறை பார் என்பார். அவன் பார்ப்பான், பார்த்தால் அதில் ஒயின்.. சியர்ஸ் சொல்லியபடி இயேசுவும் புன்னகையுடன் ஒயின் அருந்துவார்.
இப்படி சுவையான காட்சிகள் ஏராளம்.
கிறிஸ்துவத்தில் லூசிபர் முக்கியமான பாத்திரம்., நல்லது செய்வது போல தோற்றம் காட்டி , தவறான பாதைக்கு அழைத்து செல்லுதல்.

  நம் ஊரில் மாயை என்கிறோமே ..அது போல... சாத்தான் என்பது தீமை என உடனே தெரிந்து விடும்..எனவே தப்பிக்க வாய்ப்பு அதிகம். ஆனால் மாயை என்பது நன்மை போன்ற தோற்றத்தில் இருக்கும் . இதை வெல்வது கடினம். க்ளைமேக்சில் ஒரு தேவதை வடிவில் வந்து இயேசுவை தடுமாற செய்யும் கடைசி முயற்சி படத்தின் உச்சம்.

இது போன்ற நுணுக்கங்கள் பேஷன் படத்தில் இல்லை.
அதை தவறு என சொல்ல மாட்டேன்.  நம்பிக்கை இன்மை காரிருளில் , அன்பு என்பது ஒளிக்கீற்றாக வெளிப்படும் என்பதை சொல்ல , இருளை மிகைப்படுத்த வேண்டிய கட்டாயம்.  முதலில் இந்த படத்துக்கு the passion என்றுதான் பெயரிடப்பட்டு இருந்தது. அந்த பெயர் இன்னும் பொருத்தமாக இருந்து இருக்கும்.

ஒரு செயல் மீது இருக்கும் passion என்றால் அது பொதுவானது,  கொள்கைக்காக உயிரை விடும் போராளிகள் , சொந்த காசில் புத்தகம் வெளியிட்டு இலக்கியம் வளர்த்த எழுத்தாளர்கள் என பலரை  பார்க்கலாம். ஆனால் அந்த பெயரை இன்னொருவர் வாங்கி விட்டதால் , பேஷன் ஆஃப் கிறிஸ்ட் என பெயரிடப்பட்டத்ய்,
\\அன்பு என்பதே கிறிஸ்துவம் என சொல்வதில் இயக்குனர் வென்று விட்டார் என்றாலும் , படம் என பார்த்தால் எனக்கு பிடித்தது லாஸ்ட் டெம்ப்டேஷன் தான்.

அன்பு மட்டுமே கடவுளின் வழியா,,அப்படி என்றால் சாவுக்கடலில் ஏன் இரு நகரங்களை அழித்தார் , ஆயுதம்தான் வழியா என பல்வேறு கோணங்களில் ஆராய்வது ,, நம் ஆன்மீக தேடல் இன்னொருவருக்கு கஷ்டம் கொடுத்தால் அது ஆன்மீகமா என்ற அல்சல் , மீட்பு என்றால் என்ன, புத்துயிர்ப்பு என்றால் என்ன என்ற சிந்தனை என முழுமையாக இருப்பது லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் கிறிஸ்தான்.


எனவே என் ஓட்டு the last temptation of christ

_______________________________________________________________


இந்த படங்கள் குறித்து நண்பர் நிர்மலுடன் ஓர் உரையாடல்

பிச்சை   : passion of christ பார்த்திட்டீங்களா? பிடித்து இருந்துச்சா?

நிர்மல் : எனக்கு இயேசு பற்றிய எல்லா படமும் பிடிக்கும்


எல்லா படமும் பிடிக்கும் என்பது வேறு விஷ்யம்...  நல்லவை எது என அலச வேண்டும்..உதாரணமாக என்னை பொருத்தவரை டாவ்ன்சி கோடு படம் நல்ல படம் அல்ல.... ஆனால் சுவாரஸ்யமா இருக்கும் 

 ஆமாம் சரி

அந்த படத்தில் உண்மையும் இல்லை... நம்மை சிந்திக்க வைக்கவும் இல்ல

 ஏன்

அது வெறும் ஃபிக்‌ஷன்...  த்ரில்லர்

ஆமாம், இதில் இருப்பது உன்னதம்
இது க்ளாசிக்
ம்ம்ம்ம்...அந்த வகையில் இயேசுவின் கடசி சபல்ம் மற்றும் பாஷன் ஒஃப் க்ர்ஸ்ட் இரண்டும் காலத்தை வென்று நிற்கும் என நினைக்கிறேன்
டாவின்சி கோட் எல்லாம் நிற்காது
 யெஸ்
டாவின்ஸி கோட் - ஜிம்கா நிறந்தது

அதை எடுத்தருக்கு கிறிஸ்தவ ஞானம் குறித்து அக்கறை இல்லை...வெறும் சம்பவங்களை மட்டுமே யூகிக்க முயன்று இருக்கிறார்

   you can not compare last temptation with da vinci code
 yes yes

பேஷன் ஆஃப் கிறிஸ்ட் படம் கிளாசிக் வரிசையில் வ்ருமா

வரும் ஆனால் சிலருக்கு அது பிடிக்கவில்லை

லாஸ்ட் டெம்ப்டேஷனை விட அது கமர்சியல் ஹிட்...

அதீத வன்முறை என ஒதிக்கிவிட்டனர், மேலும் அது யூத எதிர்ப்புக்கு சார்பாக இருக்கீறது எனவும் ஒரு குற்றசாற்று உண்டு

வசூல் சாதனை செய்த படம்.அந்த வன்முறை படத்துக்கு தேவைப்பட்டது



இதுவரை எழுத்தில்தான் அதை வாசித்திருக்கீறார்கள், சினிமாவில் முத்ல் முதலில் பார்த்த அதிர்ச்சிநம் மனதில் இயேசு என்பவர் கடவுள் என்ற பிம்பம் இருப்பதால் , அவரது தியாகம் நம் மனதில் பதியவில்லை... நம் மனதில் பதிய வைக்க , இந்த அதீத வன்முறை தேவை என இயக்குனர் நினைத்து இருப்பார்....அதை நான் ஏற்கிறேன்


ம்ம்ம்ம்ம்....ஆமா.எழுத்தில் அந்த வலி மனதில் பதியவில்லை

  ஆமாம். அடித்தார்கள் என இருக்கும் ஆனால் எதை வைத்து, அந்த கருவி எப்ப்டி இருக்கும் போன்ற வர்ண்னை விவிலியத்தில் கிடையாது, அது வாசகர் அரிவுக்கு விடப்பட்டுள்ளது.


 அப்புறம் முக்கியமான் இன்னோன்று  மீட்ப்பு என்பது இந்து மதத்தில் கிடையாது.
மீட்ப்பு என்ப்படுதல் யாதலில் - பிறப்பிலிருந்த நிலையிலிருந்து மாற்றம். அதாவது தன்னைதானே ஒருவன் கர்ம வீதிகளிலிருந்து மாற்றி கொள்ள இந்த பிறவியிலேயே முடியும் எனும்  நம்பிக்கை.

 க்ரெக்ட்
கல்லாக உருவான வஸ்து கல்லாகவே இருந்தால் பிரச்சினை இல்லை... சிற்பமாக்க உருமாற்றம் அடையும் ப்ரோசஸ் வலி மிகுந்தது
இதனால்தான் வலியை அந்த அளவுக்கு காட்டி இருக்கிறார்களோ
பிறந்த நிலையில் இருந்து மீட்பு சாத்தியம்...ஆனால் அது ரோஜாவால் அமைந்த பாதை அல்ல...தியாகம் தேவைப்படும் பாதை
இதுதான் படத்தின் மெசேஜா

    இருக்கலாம். மேலும் ”வலி” எனப்து எப்போதும் தோல்வியின் சின்னமாகவே இருக்குது. சில நேரங்களில் அது அச் சூழலுக்கு உட்ப்பட்ட உண்மையாகவே இருக்கும். கால சூழச்சியில் பார்க்கும்போது அதுவும் வெற்றியின் சின்னமாக கூடஇருக்கலாம். சாத்தான் ( கரு உருவம்) அடிபடும் இயேவை பார்த்து வெற்றி என சிரிக்கிறது ஆனால் அந்த வலியை அவமானத்தை கூட நான் தியாகம் எனும் செயலால் உன்னதம் அடைய செய்துவிடலாம்

இயேசு மேல் பரிதாபப்படும், ஆனால் ஏதும் செய்ய இயலாத அந்த கவர்னர் கேரக்டர் எதை சுட்டுகிறது..இந்த கேரக்கட்ர் பேஷன் ஆஃப் படத்தில்தான் முழுமையாக இருக்கு

ஆமாம் அதுதான் முக்கியமான அரசியல் திரிப்பு என யூதர்கள் வாதிடுவர்கள்.
இயேசுவை சிலுவையில் அறைந்தது கிறேக்கர்கள் ஆனால் யூதர்களின் விருப்பத்திற்முற்றீலுமுன்மையில்லைக்காக என சொல்கிறது அந்த படம், 

யூதர்களுக்கும் எப்படி யேசுவின் மரனம் தேவைப்பட்டதோ அதைப்ப்போல கிரேக்கர்களுக்கும் தேவைப்பட்டது என்பதுதான் உண்மை. கை கழுவுதல் எல்லாம் பிறகு சேர்த்த இடைச்செறுகல் எனும் வாத்மும் உண்டு

லாஸ்ட் டெம்ப்டேஷனில் அந்த காட்சி இல்லை

ஆமாம் - எனென்றால் கசான்ஸ்கி எந்த மதத்தையும் சாராதவர். மெல் கிப்ஸன் மதவாதி -கத்தோலிக்கர்’
என்வே எனது மதிப்பு last temptation க்கு

last tempation  நேர்மையாக சொல்லி விட்டது..இது வரலாற்று படம் இல்லை என

இன்றைய புதிய இறை சிந்தனை என்ன சொல்கிறது எனரால், யார் கொன்றார்கள் என்பது முக்கிய்மே இல்லை. அவர்க கொல்லப்படுவதே இறை திட்டம். அவரது மரணத்திற்க்கு யாரும் ஒரு குழு பொறுப்புபில்லை, எல்லாரும் பொறுப்பு. மனிதரை மீடக அவர் மறித்தார். என்பதுதான்


அதைத்தான் லாஸ்ர் டெம்ட்.சொல்லுது,,, புதிய இறை சிந்தனை

,,,இந்த ரெண்டு படத்தில் உங்களுக்கு பிடிதத படம்?
\
 last temptation.என் ஓட்டு லாஸ்ட் டெம்ப்ட்

yes

ம்ம்ம்...எனக்கும்
ஆனால் வரலாற்றுக்கு நெருக்கமானது என்ற வகையில் பாஷன் ஸ்கோர் செய்யுது


இயேசுவை தத்துவ ரீதியா ஒரு படமும் , உணர்வு ரீதியா ஒரு படமும் அணுகுதுனு சொல்லலாமா

ம்ம்ம், passion Of christ உணர்வுகளுக்கு அதிகமாக முக்கியத்டுவம் கொடுத்ததில் பின்புலத்திலிருக்கும் அந்த தத்துவம் மறைக்கபடுகிறது என சொல்லுவேன்.



அந்த படத்தை ஒரு முறை பார்ப்பர்களுக்கு அந்த க்றிய உருவம் புரியாது புலப்படாது யேசுவின் இரத்த்மே முன் வந்து நிக்கும்

தத்துவத்தை விட , அன்பு விட்டு கொடுத்தல் தியாகம் போன்றவைதான் முக்கியம் என அந்த படம் சொல்வதும் நியாயம்தானே

  ஒரே ஒரு விசியம் பாஸ் - மீட்ப்பர் - என்றால் என்ன எனும் அர்த்தை நமக்கு சொல்லிவிட்டால். அது ஏற்றம்.
 ஆமாம் அதுதான் மேட்டர்.மற்றவர்கள் பாவத்துக்காக ரத்தம் சிந்துதல் என்பதை ரெண்டு படங்களுமே சொல்கிறனவே


, இயேசு கேரக்டருக்கு பொருத்தமான நடிகர் தேர்வு எந்த படத்தில்?
 நம் மனதில் பதிந்து இருக்கும் இயேசு, பேஷன் பட இயேசுவின் தோற்றத்துக்குத்தானே நெருக்கமா இருக்கார்?>

 எனக்கு ரெண்டும் பிடித்திருக்கிறது. பேஸன் அஃப் க்றைஸ்ட் - போதுவான கிறுஸ்து


வசனங்கள் தீயாக இருந்தன

 நாவல் இல்லியா- கசான்ஸி, ஞான குரு அல்லவா.
சாருவுக்கே ஞான குரு அவர்

அவர் காலில் விழணும்போல இருந்துச்சு

 ஆமாம்
வாழ்க்கையின் பார்வையை மாற்றி போட்டது  ஜோர்பா

messiah need not do miracles.... he is miracle....mmm..wat a dialoge

 யெஸ், இதுல்லாம் நிறுவன கிறுஸ்துவ மதத்தின் மீது அடிக்கும் சாட்டை அடி.
யூதர்களுக்கு இந்த பதில் பொறுந்தும்

என் இடத்தில் நீங்கள் இருந்து இருந்தால் , உங்கள் குருவை காட்டி கொடுக்க சம்மதித்து இருப்பீர்களா என யூதாஸ் கேட்பதும் , இயெசு பதிலும்ம்,ம்..அப்பப்பா...அழுது விட்டேன்

  சரியா நினைவில்லை சொல்லுங்க

 என்னை காட்டி கொடு என ஜீசஸ் சொல்வார்
முடியாது,,,என் இடத்தில் நீங்கள் இருந்தால் இபப்டி செய்வீர்க்ளா என யூதாஸ் மறுப்பான்

 .என்னால் செய்து இருக்க முடியாது.....அதனால்தான் இந்த கடினமான பணி உனக்கும் , சிலுவையில் தொங்கும் பணி எனக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பார் இயெசு

யெஸ், அட்டகசாம்
சிலுவையையில் தொங்கியதை காட்டிலும் குருவை காட்டி கொடுத்தல் கடினம். இங்கே யூதாஸ் ஹிரோ ஸ்தானத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

   சிலர் அடிக்கடி சொலவர் -யூதாஸ்க்குள் பாதி கிறுஸ்துவும், கிறுஸ்துவுக்குள் பாதி யூதாசும் இருக்கு. அதை பிரிக்க முடியாது என.

yessssssssssssssssss


குருவுக்காக சீடன் யோசிப்பதும் , சீடனை உயர்த்த குரு யோசிப்பதும் என அந்த காட்சி நெகிழ வைக்கும்...பேஷன் படத்துல் இப்படி எல்லாம் இல்லாமல் ஒற்றை பரிமாணத்தில் இருப்பதாக நினைக்கிறேன்
 எங்க பாட்டிக்கு தெரிந்த கிறுஸ்து, எனக்கு தெரிந்தது, எங்க சாமியாருக்கு தெரிந்தது என மர்மபாக இருக்கு



   மீட்பு - என்பது சாத்தியம், பாவம் எனப்படுவத்இலிருந்து மீட்பு சாத்தியம்.
அதைதான் மீட்ப்பர் என சொல்கிறோம்
 அதைதான் பாலியல் தொழிலாளி மக்தேலானா யேசு திருமனம் காட்டுது

ஆமா
  பாவத்தை மன்னிப்பு கொண்டு மீட்கலாம்
அதைதான் யேசுவின் வாழ்க்கை சொல்கிறது
யேசு குறியிடு மட்டுமே. அவர்து வாழ்க்கை கதை அதிலிருக்கும் மீட்பு முக்கியம்.



ஆமா

யூதர்களுக்கு மட்டுமென இருந்ததை உலக்த்தின் எல்லா சாதிய்னருக்கும் கொண்டு சென்றது யேசு
யேசிவின் ம்ரண்மும் உயிர்த்ழுதலும்தான்

Friday, May 3, 2013

புரட்சி தலைவராக இயேசு - மறக்க முடியாத ஆங்கில திரைப்படம்


    ஜீசஸ் எனக்கு சின்ன வயதிலே ஒண்ணாங்கிளாஸ் படிக்க்கும்போதே அறிமுகம் ஆகி விட்டார், கிறிஸ்துவப்பள்ளியில் படித்ததால்.  சிவன் , பிள்ளையார் , முருகன் போல அவரும் ஒரு சாமி என்றுதான் அந்த காலத்தில் நினைத்து வந்தேன் என்பது இப்போதும் நினைவுக்கு வருகிறது.

பின்புதான் இந்து மதம், கிறிஸ்துவ மதம் என்றெல்லாம் இருக்கிறது. ஒவ்வொரு மதத்திற்கும் தனி தனி கடவுள்கள் என்பதெல்லாம் புரிந்தது. அடுத்த கட்டமாக , மதம் என்பதை விட  ஒவ்வொரு மதத்திலும் இருக்கும் ஞானக்கருத்துகளை கற்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.    மதங்களை மறுக்கும் கருத்துகளையும் கற்க உந்துதல் ஏற்பட்டது.

இந்த பின்னணியில் இயேசு நாதர் ஒரு விஷயத்தில் ஆச்சர்யப்படுத்தினார்.

பல மதங்கள் , தத்துவ கோட்பாடுகள் , நாத்திகம் என அலைந்து திரிந்து பார்த்ததில் ஒவ்வொரு பிரிவிலும் போதிய அறிவு பெற்றவர்கள் அனைவருமே இயேசுவை ஏதாவது ஒரு விதத்தில் ஏற்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

 நம் ஊர் சித்தர் மரபிலான ஞானத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் இயேசுவை ஒரு ஞானியாக , சித்தராக நினைக்கிறார்கள். இஸ்லாமியர்கள் அவரை ஈசா நபி என்ற இறைத்தூதராக மதிக்கிறார்கள். இஸ்லாமிய மறைஞானத்தை சேர்ந்தவர்கள் அவரை சுஃபீ துறவியாக வணங்குகிறார்கள்.

 நாத்திக சிந்தனை கொண்டவர்கள் அவரை சமூக சீர்திருத்தவாதியாக கருதுகிறார்கள்..

கிறிஸ்துவர்கள் அவரை கடவுளாகவே நினைக்கிறார்கள் .

ஆக, இயேசு அனைவருக்கும் வேண்டியவராகி விட்டார் :)

இந்த அனைவருக்கும் இருக்கும் பொதுக்கருத்து , யூதாஸ் என்ற சீடன் காட்டி கொடுத்த சீடன் என்பதுதான், காட்டி கொடுத்ததை தவிர அவன் சம்பந்தப்பட்ட வேறு நிகழ்ச்சிகள் மனதில் அவ்வளவாக பதியவில்லை.


சர்வ வல்லமை கொண்ட இயேசுவுக்கு அவன் காட்டி கொடுக்கப்போகிறான் என்பது எப்படி தெரியாமல் போயிற்று என்ற கேள்விக்கும் தெளிவான பதில் கிடைக்கவில்லை.

அவர் கடவுள் என்பதால் அவர் பட்ட கஷ்டங்களும் பெரிதாக நம் மக்கள் மனதில் பதியவில்லை.

சமீபத்தில் நான் பார்த்த The Last Temptation  of Christ என்ற படம் என் கேள்விகள் பலவற்றுக்கு விடை அளித்தது.

இந்த படம் வெளிவந்தபோது பலத்த எதிர்ப்புகளுக்கு உள்ளானது. கிறிஸ்துவ மதத்துக்கு எதிராக படம் இருப்பதாக கண்டனம் கிளம்ப்பியது\ இயேசுவை இன்னொரு முறை சிலுவையில் அறையாதீர்கள் என போராட்டம் நடந்தது.


இதனால பல நாடுகளில் படம் தடை செய்யப்பட்டது. சீடீ கூட சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்டது.

இந்த எதிர்ப்பில் ஓரளவு நியாயம் இருக்கிறது. கடவுளாக வழிபடப்படும் ஒருவரை சாதாரண மனிதனின் ஆசாபாசங்களோடு காட்டுவதும் , அவரது சிந்தனைபோக்கை யூகிக்க முயல்வதும் மனதை புண்படுத்தும் என்பதை மறுக்க முடியாது,

ஆனால் இந்த நாவலை எழுதிய கசன்சாக்கிஸ் யார் மீதும் வன்மம் கொண்டவரல்லர். ஞானத்தேடல்தான் அவர் நோக்கமாக இருந்திருக்க முடியும், இழிவு செய்து இருக்க மாட்டார் என்ற நம்பிக்கையுடன் , எதற்கும் படம் பார்த்து முடிவு செய்யலாம் என நினைத்தேன்.

இந்த படம் பார்த்திருந்த ,கிறிஸ்துவ ஞானம் கொண்ட நண்பர்களும் படம் பார்ப்பதில் தவறில்லை என ஊக்கம் கொடுத்தனர். குறிப்பாக குட் ஃப்ரை டே நிகழ்வுகளில் பங்கேற்குமாறும், சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் பங்கேற்பது ஓர் அனுபவமாக இருக்கும் என்றும் அறிவுறுத்தினார்கள்.

    ஒரு படத்துக்கு இவ்வளவு பில்ட் அப் கொடுக்கிறார்களே என வியப்பாக இருந்தாலும் , அதன் படியே செய்து விட்டு படம் பார்த்தேன்.

    கடவுள் அவர் அற்புதங்கள் என்ற டெம்ப்ளேட் இல்லாமல் , வேறு ஒரு திசையில் படம் செல்லப்போகிறது என ஆரம்பத்தில்யே தெரிந்து விடுகிறது.

   படத்தில் இயேசு கடவுள் இல்லை.  சந்தேகங்களும் , தேடலும் உள்ள , இறை ஆசீர்வாதம் பெற்ற , ஆனால் அந்த ஆசி தேவை இல்லை என நினைக்கிற ஒரு மனிதன்.

இந்த கான்செப்ட் முதலில் அசவுகரியமாக இருந்தது. நம் மனதில் இயேசுவை கடவுளாக வைத்து இருக்கிறோம். அவரை மனிதராக , அதுவும் குழப்பம் சந்தேகங்கள் கொண்ட மனிதனாகவும் பார்க்க மனம் ஒத்துழைக்கவில்லை.

    ஆனால் மனிதனுக்குள் என்றென்றும் நிகழ்ந்து வரும் ஆன்மீக போராட்டத்தை , அவரை இப்படி சித்திரித்து இருப்பதால் தெளிவாக உணர முடிவதை நேரம் செல்ல செல்ல உணர முடிந்தது.

இயேசுவுக்கு கடவுள் அல்லது பரம பிதா தன்னை நேசிப்பதை உணர முடிகிறது. ஆனால் அந்த நேசிப்புக்கு தான் தகுதியானவன் இல்லை என நினைக்கிறார்.

எனவே கடவுள் தன் நேசிப்பை நிறுத்த வேண்டும் என்பதற்காக சில செயல்களில் ஈடுபடுகிறார். ஆனால் அவரது இந்த நேர்மை அல்லது குழந்தை தன்மை , அவர் மீது கடவுளின் அன்பை அதிகரிக்கவே செய்கிறது.

ஒரு கட்டத்தில் கடவுளின் அன்பை ஏற்று , தான் தேவ குமாரன் என பிரகடனம் செய்கிறார். அன்பை போதிக்கிறார். எதிர்ப்புகளை , கேலிகளை சந்திக்கிறார்.

கொஞ்சம் கொஞ்சமாக சீடர்கள் சேர்கின்றனர்.

முதலில் இவரை கொல்ல வரும் யூதாஸ் , இவரால் கவரப்பட்டு சீடனாகிறான்.

இவரை பாதை மாறி செய்ய , சபலத்தை தூண்ட உள் மனம் அல்லது சாத்தான் செய்யும் சூழ்ச்சிகளை முறியடிக்கிறார்.

   தான் அமைதியை போதிக்க வரவில்லை. வீரத்தை போதிக்கவே வந்தேன் என்கிறார். கொள்ளையர் கூடமாக செயல்படும் கோயில்களில் வியாபாரிகளை விரட்டி அடிக்கிறார்.

அபலை பெண்ணை தண்டிக்க வரும் கூட்டத்திடம்., யார் பாவம் செய்யவில்லையோ அவர்கள் கல்லை எறியுங்கள் அன்கிறார்.


ஒடுக்கப்பட்டவர்களுக்கு சம உரிமை கொடுக்க சட்டத்தில் இடம் இல்லை என்பவர்களிடம் , என் சட்டத்தில் அதற்கு இடம் உண்டு என்கிறார்.

ஒரு சீர்திருத்தவாதியாக தோற்றம் அளிக்கிறார். புரட்சி செய்யும் தலைவனாக  தெரிகிறார்.

அற்புதங்கள் செய்து தேவ மைந்தனாக காட்சி அளிக்கிறார்.

நோன்பு , விரதம். சுய பரிசோதனை செய்து சித்தராக , ஞானியாக காட்சியளிக்கிறார்.

உலக வாழ்வா ஆன்மீக வாழ்வா என்ற தன் தேடலில் ஒரு பெண்ணின் வாழ்வு  பாழாகி விட்டதே என வருந்தி அவளிடன் பாவ மன்னிப்பு கேட்டு ஓர் உயர்ந்த மனிதனாக காட்சி அளிக்கிறார்.

      நல்ல மேய்ப்பனாக தோற்றம் அளிக்கிறார். புரட்சியாளாராக தோற்றம் கொள்கிறார்.

     ஆயினும் என்ன...உலகம் அப்படியேதான் இருக்கிறது. தீமையை அன்பாலும் வெல்ல முடியவில்லை. ஆயுதத்தாலும் வெல்ல முடியவில்லை.

     தெரிந்தோ தெரியாமலோ எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் காயப்படுத்தி கொண்டுதான் இருக்கிறோம்.

சிலர் தெரிந்தே மற்றவர்களை காயப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

பள்ளியில் மாணவர்கள் தவறு செய்தால் , ஃபைன் போடுவார்கள். அதை கட்டுவது  பெற்றோர்கள். குழந்தைகள் செய்யும் தவறுக்கு பெற்றோருக்கு தண்டனை.

அது போல , மக்கள் செய்யும் தவறுக்கு தேவ தூதன் அல்லது தலைவன் தண்டனையை ஏற்பது இயற்கை விதி.

   போலி தலைவர்கள் , சுய நல தலைவர்கள் அல்ல. உண்மையான தலைவர்கள் , போராளிகள் செய்யும் தியாகங்களால்தான் உலக இயக்கம் நடைபெறுகிறது என்பதை சமீபத்திய வரலாற்றை படித்தாலே அறியலாம்.

இயற்கையின் இந்த விதிக்குகூட இயேசு கட்டுப்ப்படவே செய்கிறார்.   இயேசுவின் சீடர்களில் மன உறுதிக்கு பேர் போனவன் யூதாஸ்.   தான் செய்ய இருக்கும் தியாகத்துக்கு யூதாஸ்தான் வழி செய்ய வேண்டும் என ஆணை இடுகிறார். அவன் கண்ணீரோடு ஏற்கிறான்.

இப்படி எல்லாம் இருந்தும் பூரணத்தன்மை கிடைப்பதில் அவருக்கு ஏதோ நுண்ணிய தடை இருந்து கொண்டே இருக்கிறது. அது என்ன என படம் பார்க்கும் நமக்கும் புரியவில்லை. அவருக்கும் புரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று குறைவதை  உணர்கிறார்.


இந்த படத்தை கிட்டத்தட்ட எல்லோரும் பார்த்து இருப்ப்பீர்கள். இனிமேல்தான் பார்க்க இருக்கிறீர்கள் என்றால் இந்த கோட்டை தாண்டி படிக்க வேண்டாம். ஃப்ரெஷாக பார்த்தால்தான் நன்றாக இருக்கும்.

_____________________________________________________________



யூதாசால் காட்டிக்கொடுக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு சிலுவையில் அறையப்படுகிறார்,

நல்லவர்களுக்கு ஏன் இந்த சோதனை...  கெட்ட எண்ணம் கொண்டவர்கள் , சுய நலம் மிக்கவர்கள் நன்றாகத்தானே இருக்கிறார்கள்.

   நல்லவனுக்கு ஏன் இந்த சோதனை..கடவுள் , அறம் , பாவ புண்ணியம் என்பதெல்லாம் வீணா... என் வாழ்வை வீணடித்து விட்டேனா..

அவர் இதயம் கசிகிறது...பிதாவே..என்னை ஏன் கை விட்டீர் .,,கலங்குகிறார்.

காம்ப்ரமைஸ் செய்து வாழ்ந்திருந்தால் சுகப்பட்டு இருந்திருப்பேனோ...

ஒரு வேளை இப்போது வாய்ப்பு கிடைத்தால் , இதை எல்லாம் விட்டு விட்டு காம்பரமைஸ் செய்து வாழ்ந்தால் சுகமாக இருக்குமோ..


உனக்கான சோதனை முடிந்து விட்டது, இனி மற்றவர்கள் போல நீ சுதந்திரமாக வாழலாம் என ஒரு தேவதை , இந்த சிலுவையில் இருந்து விடுவித்து அழைத்து சென்றால் என்ன ஆகும்..



 ஒரு பெண்ணை மணந்து , ஏதோ ஒரு வேலைக்கு போய் , புணர்ந்து சாப்பிட்டு , சிரித்து , அழுது சராசரி வாழ்க்கை வாழ்ந்து , நிம்மதியாக சாகலாமே.

அந்த இறுதி நேரத்தில் என் சீடர்கள் வந்தால் /...


 புணர்ந்து , அவதூறு செய்து , பணம் சேர்த்து , ஒரு சராசரி வாழ வேண்டும் என்பது எங்கள் நியதி..அதன்படி நாங்கள் வாழ்ந்தோம். நீங்கள் உங்களுக்கான நியதிப்படி வாழ்ந்தீர்களா என கேட்டால் நான் என்ன சொல்ல முடியும்...என் வாழ்வே வீணாகி விடுமே.

பதறிப்போகிறார் இயேசு.

நல்லது கெட்டது என்பது எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும். தீமையை ஒரு போதும் உலகத்தை விட்டு ஒழிக்க முடியாது.

தீமை ஒழிய வேண்டும் என நினைத்து இருந்தால் , கடவுள் தீமையை உருவாக்கி இருக்கவே மாட்டார்.

தீமை அதன் நியதிப்படி இயங்கி கொண்டிருக்கும்போதும், நன்மை தன் நியதிப்படி இயங்கி கொண்டு இருந்தாக வேண்டும்.

 நன்மை செய்தால் கடவுள் உதவுவார்.. தீமை செய்தால் தண்டிப்பார் என்று இல்லாமல் ,  நம் இயல்பு நன்மை செய்வது ,., எது வரினும் நல்லதே செய்வோம் என இருப்பதே உயர்வு.

   நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தோம் ( காட்டி கொடுத்தோம் )  நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தீர்களா என்ற யூதாசின் கேள்வி பெரிய திறப்பாக அமைகிறது.

உண்மையான இயேசு சிலுவையில் இருந்து உயிர்த்து எழுகிறார் என்று படம் முடிகிறது.

இது பைபிளை அடிப்படையாக கொண்ட கதை அன்று.

ஆன்மீக தேடல், நன்மை- தீமை முரண்கள் போன்றவற்றை அலசும் ஒரு கற்பனை கதை.

காட்சிகள் ஒவ்வொன்றும் தீயாக இருக்கின்றன.

இயேசு சிலுவை செய்யும் வேலை செய்பவராக இருப்பது ஒரு முக்கியமான குறியீடு.

பாம்பு, கனி, சிங்கம் என ஒவ்வொன்றும் ஆயிரம் அர்த்தங்கள் தருகின்றன.


தன்னை காட்டி கொடுக்குமாறு யூதாசிடம் கேட்டு கொள்கிறார் இயேசு.

யூதாஸ் மறுக்கிறான்.

என் இடத்தில் நீங்கள் இருந்தால் , உங்கள் குருவை காட்டி கொடுக்க இசைந்து இருப்பீர்களா என்கிறான்.

இயேசு சொல்கிறார்.

கண்டிப்பாக நான் இதற்கு இசைந்து இருக்க மாட்டேன். என்னால் காட்டி கொடுக்க முடியாது.

அதனால்தான் கொஞ்சம் சுலபமான வேலையை , சிலுவையில் உயிர் துறக்கும் வேலையை எனக்கு கடவுள் கொடுத்து இருக்கிறார். கடினமான காட்டி கொடுக்கும் வேலை உனக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது, இருவரும் அவரவர்கள் வேலையை செய்தாக வேண்டும் என்பார்.

மிகவும் உருக்கமாக இந்த காட்சி இருக்கும்,


வசனங்களுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் படம் பார்க்கலாம்.


நான் மரம் வெட்டியாக இருந்தால் , வெட்டி இருப்பேன்... தீயாக இருந்து இருந்தால் எரித்து இருப்பேன். ஆனால் நான் இதயமாக , அன்பாக இருக்கிறேன்..எனவே அன்பைத் தவிர வேறு ஏதும் என்னால் செய்ய இயலாது.

ஒரு தேவ தூதன் அற்புதங்கள் செய்ய வேண்டியதில்லை. தேவதூதனே ஓர் அற்புதம்தான்.

கடவுளே... நான் செல்ல விரும்பாத இடத்துக்கு என்னை அழைத்து வந்ததற்கு நன்றி

சாவை பார்த்து பயமில்லையா?

ஏன் பயப்பட வேண்டும்? மரணம் என்பது மூடும் கதவன்று..திறக்கும் கதவு.அது திறக்கிறது,,அதன் வழியாக நாம் செல்லலாம்.

மக்களிடன் பேச போகிறேன்.

என்ன பேசுவாய்

நான் வாயை திறப்பேன், கடவுள் என் மூலம் பேசுவார்.

கடவுள் மணமகன்..மனிதனின் ஆன்மா மணமகள்.. இரண்டும் இணையும் திருமணம் சொர்க்கத்தில் நடக்கும், அனைவரும் வரலாம்.கடவுளின் உலகத்தில் எல்லோருக்கும் இடம் உண்டு.


 நீ சொல்வது சட்டத்துக்கு எதிரானது..

அப்படி என்றால் அந்த சட்டம் , என் இதயத்துக்கு எதிரானது


இசை இன்னொரு அற்புதம்,,


காட்சி அமைப்புகள் அபாரம்.

மனம் குழம்பியவராக இருக்கும்போதும் , தலைமைப்பண்பின் போதும் ,  மகானாக இருக்கும்போதும் காட்டும் வெவ்வேறு உடல் மொழி வாவ்.

தண்ணீரை ஒயினாக மாற்றி விட்டு , சியர்ஸ் சொல்லும் காட்சியை மிக மிக ரசித்தேன்..

அனுபவித்து பார்க்க வேண்டிய படம். வாழ் நாள் முழுக்க மறக்க முடியாத படம்..


எனக்கு விதிக்கப்பட்டதை நான் செய்தேன்...உங்களுக்கு விதிக்கப்பட்டதை நீங்கள் செய்தீர்களா என்ற யூதாசின் கேள்விதான் ப்டத்தின் உச்சமாக நினைக்கிறேன்.

என்னதான் சுரணை இல்லாத , நன்றி கெட்ட சமுதாயமாக இருந்தாலும் . அவர்கள் இயல்பு அது.,, நாம் நம் இயல்புபடி இருப்போம் என சில போராளிகள் , தலைவர்கள், எழுத்தாளர்கள் , கவிஞர்கள் , பல்வேறு துறை மேதைகள் இருப்பதால்தான் உலகம் ஏதோ இயங்குகிறது என்பது என் எண்ணம்



Tuesday, April 30, 2013

மே தின சிந்தனை- மார்க்ஸ் தத்துவங்கள் காலாவதியாகி விட்டனவா??


மே தினத்துக்கு உங்களுக்கு ஏன் விடுமுறை விடுகிறார்கள்... என என்னை ஒரு மென் பொருள் நிபுணர் கேட்டார்.

லீவு கொடுத்தால் நல்லதுதானே ..இதில் என்ன கேள்வி வேண்டி இருக்கிறது என எரிச்சலானேன்.

அவர் விளக்கினார்.

தொழிலாளர், உபரி மதிப்பு, மூலதனம் போன்றவை எல்லாம் இப்போது அர்த்தம் இழந்து விட்டன என்றார்.

எனக்கு தலை சுற்றியது,,

அவர் விளக்கலானார்.

முதலில் இப்போது தொழிலாளி வர்க்கம் என்பதே குறைந்து வருகிறது. எல்லோரும் சாஃப்ட்வேர் , கால் செண்டர் என மாறி வருகின்றனர்.

ஒரு தொழிலாளி உருவாக்கும் பொருளின் மதிப்பை விட அவன் ஊதியம் வெகு குறைவு.. இந்த வித்தியாசம்தான் உபரி மதிப்பு என்கிறார்கள்...இந்த கருதுகோள் இன்றைய சூழலில் பொருந்தாது.

ஒரு தொழிலாளி பொருளுக்கு மதிப்பை உருவாக்குவதில்லை. டிமாண்டுக்கு தகுந்தாற்போலத்தான் மதிப்பு உருவாகிறது. உதாரணமாக இன்று டிரான்சிஸ்டர் ரேடியோவுக்கு டிமாண்ட் இல்லை...ஒரு தொழிலாளி என்னதான் தொழில் நேர்த்தியுடன் ஒரு ரேடியோ செய்தாலும் ,  அதற்கு மதிப்பு உருவாக்க முடியாது.


இரு தொழிற் சாலைல்கள்... இரண்டிலும் ஒரே எண்ணிகையில் , ஒரே திறமையுடன் தொழிலாளர்க்ள் பணி புரிகின்றனர்,.. ஆனால் இரண்டு தொழிற்சாலையும் ஒரே அளவு லாபத்தோடு இயங்காது.. ஆக , தொழிலாளியை தவிர வேறு அம்சங்களும் உள்ளன.அதாவது முதலாளிதான் மதிப்பை உருவாக்குகிறான்.


பல நிறுவனங்கள் ஆட்களை குறைத்து விட்டு ,  இயந்திரமயமாக ஆரம்பித்துள்ளன. ஆட்கள் குறைந்தால் லாபம் குறைய வேண்டும் என்பதற்கு மாறாக , லாபம் அதிகரிக்கிறது.பிறகு ஏன் உபரி மதிப்பு என்ற பம்மாத்து..


இப்படி எல்லாம் பேசி சென்றார்.

எனக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருந்தது.. அவர் சொல்வது சரி போலவும் தோன்றியது.தவறு போலவும் தோன்றியது.

 நமக்கு கம்யூனிசமும்  தெரியாது. காப்பிடலிசமும் தெரியாது. மேற்கண்ட வாதங்கள் பற்றி நாம் என்ன சொல்வது.

வேறு யாரிடமாவது கேட்போம் என கேட்டு பார்த்தேன்.

அவர் அளித்த பதிலும் லாஜிக்கலாகவே இருந்தது.  அவர் சொன்னதை அப்படியே தர முடியவில்லை. அவர் சொன்னதில் எனக்கு புரிந்ததை தருகிறேன்.


1.  தொழிலாளியின் உழைப்பை சுரண்டுவது இன்று கொஞ்சம் சோஃபிஸ்டிக்கேட்டடாக நடந்து வருகிறது.  ஏசி  ரூம் ,  கணினி என இருந்தாலும் , மெத்த படித்து இருந்தாலும் , நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேர வேலை என இருந்தாலும், அவர்களை தொழிலாளியாகவே முதலாளித்துவம் நடத்துகிறது. அவர்கள் உழைப்பை சுரண்டி வருகிறது.

    இப்படி சுரண்டப்படுவதை வேறு எந்த நாட்டிலும் ஏற்க மாட்டார்கள்.. ஆனால் நம் ஆட்கள் இதை பெருமையாக நினைத்து இந்த சுரண்டலுக்கு ஒத்து போகிறார்கள்.

   காலப்போக்கில் போட்டி அதிகரித்து , இதற்கு மேல் சுரண்ட முடியாது என்ற நிலை வருகையில் ஒட்டு மொத்த அமைப்பும் கவிழ்ந்து விடும்.


2 இயந்திர மயமாதல் மூலம் லாபம் அதிகமாகிறது என்பது மாயத்தோற்றம். அந்த இயந்திரங்களை உருவாக்குவதில் உழைப்பு சுரண்டப்படுகிறது.

3.  டிரான்சிஸ்டர் ரேடியோவுக்கு இன்று தேவை இல்லை. ஒரு முதலாளி நினைத்தால் மேனெஜ்மெண்ட் திறன் மூலமோ, சந்தைப்படுத்தும் ஆற்றல் மூலமோ தேவையை உருவாக்க முடியுமா. முடியாது. எனவே முதலாளித்துவ திறனை தொழில் முனைவோர் திறமை என ஸ்டைலாக சொன்னாலும் , அந்த திறன் மூலம்தான் மதிப்பு உருவாகிறது என்பது அபத்தம்.

4. முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் கட்டுப்பாடு இல்லாத போட்டி என்பது இயல்பு.  இதில் winners get all என்பதே முடிவில் நடக்கும். ஆரம்ப அட்வாண்டேஜ் என்பதும் இயல்பாக இருக்கும். பரம்பரை பணக்காரனுடன் , புதிதாக வருபவன் போட்டியிட இயலாது.

ஒரே மாதிரியான இரு நிறுவனங்கள் ஒரே மாதிரியான லாபம் பெற முடியாமைக்கு காரணம் இதுதான்.

சிறிய சிறிய வெற்றிகள் பெரும்போது முதலாளிகள் சந்தோஷமாக இருப்பார்கள். ஆனால் எப்படியும் ஒரு நாள் ஒரு முதலாளி இவர்களை தோற்கடிப்பான். அப்போது இவர்களும் பாட்டாளிகளாவார்கள்.

இதுதான் இன்று அன்றாடம் நடந்து வருகிறது. நாள்தோறும் பாட்டாளிகள் அதிகமாகித்தான் வருகிறார்கள்.குறையவில்லை.

ஒரு கட்டத்தில் பாட்டாளிகள் எண்ணிக்கை மிக அதிகமாக உயரும்போது , சமூக மாற்றம் நடந்தே தீரும்..

 இந்த திசையில்தான் உலகம் சென்று கொண்டு இருக்கிறது..


 இந்த இரு கருத்துகளையும் கேட்டபடி மே தினம் கொண்டாட ஆயத்தமானேன்.  மே தின விடுமுறையில் இது விஷ்யமாக மேலும் படித்தோ , விவாதித்தோ ஏதேனும் தெரிந்து கொண்டால் பகிர்ந்து கொள்வேன்.



Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா