Friday, May 3, 2013

புரட்சி தலைவராக இயேசு - மறக்க முடியாத ஆங்கில திரைப்படம்


    ஜீசஸ் எனக்கு சின்ன வயதிலே ஒண்ணாங்கிளாஸ் படிக்க்கும்போதே அறிமுகம் ஆகி விட்டார், கிறிஸ்துவப்பள்ளியில் படித்ததால்.  சிவன் , பிள்ளையார் , முருகன் போல அவரும் ஒரு சாமி என்றுதான் அந்த காலத்தில் நினைத்து வந்தேன் என்பது இப்போதும் நினைவுக்கு வருகிறது.

பின்புதான் இந்து மதம், கிறிஸ்துவ மதம் என்றெல்லாம் இருக்கிறது. ஒவ்வொரு மதத்திற்கும் தனி தனி கடவுள்கள் என்பதெல்லாம் புரிந்தது. அடுத்த கட்டமாக , மதம் என்பதை விட  ஒவ்வொரு மதத்திலும் இருக்கும் ஞானக்கருத்துகளை கற்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.    மதங்களை மறுக்கும் கருத்துகளையும் கற்க உந்துதல் ஏற்பட்டது.

இந்த பின்னணியில் இயேசு நாதர் ஒரு விஷயத்தில் ஆச்சர்யப்படுத்தினார்.

பல மதங்கள் , தத்துவ கோட்பாடுகள் , நாத்திகம் என அலைந்து திரிந்து பார்த்ததில் ஒவ்வொரு பிரிவிலும் போதிய அறிவு பெற்றவர்கள் அனைவருமே இயேசுவை ஏதாவது ஒரு விதத்தில் ஏற்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

 நம் ஊர் சித்தர் மரபிலான ஞானத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் இயேசுவை ஒரு ஞானியாக , சித்தராக நினைக்கிறார்கள். இஸ்லாமியர்கள் அவரை ஈசா நபி என்ற இறைத்தூதராக மதிக்கிறார்கள். இஸ்லாமிய மறைஞானத்தை சேர்ந்தவர்கள் அவரை சுஃபீ துறவியாக வணங்குகிறார்கள்.

 நாத்திக சிந்தனை கொண்டவர்கள் அவரை சமூக சீர்திருத்தவாதியாக கருதுகிறார்கள்..

கிறிஸ்துவர்கள் அவரை கடவுளாகவே நினைக்கிறார்கள் .

ஆக, இயேசு அனைவருக்கும் வேண்டியவராகி விட்டார் :)

இந்த அனைவருக்கும் இருக்கும் பொதுக்கருத்து , யூதாஸ் என்ற சீடன் காட்டி கொடுத்த சீடன் என்பதுதான், காட்டி கொடுத்ததை தவிர அவன் சம்பந்தப்பட்ட வேறு நிகழ்ச்சிகள் மனதில் அவ்வளவாக பதியவில்லை.


சர்வ வல்லமை கொண்ட இயேசுவுக்கு அவன் காட்டி கொடுக்கப்போகிறான் என்பது எப்படி தெரியாமல் போயிற்று என்ற கேள்விக்கும் தெளிவான பதில் கிடைக்கவில்லை.

அவர் கடவுள் என்பதால் அவர் பட்ட கஷ்டங்களும் பெரிதாக நம் மக்கள் மனதில் பதியவில்லை.

சமீபத்தில் நான் பார்த்த The Last Temptation  of Christ என்ற படம் என் கேள்விகள் பலவற்றுக்கு விடை அளித்தது.

இந்த படம் வெளிவந்தபோது பலத்த எதிர்ப்புகளுக்கு உள்ளானது. கிறிஸ்துவ மதத்துக்கு எதிராக படம் இருப்பதாக கண்டனம் கிளம்ப்பியது\ இயேசுவை இன்னொரு முறை சிலுவையில் அறையாதீர்கள் என போராட்டம் நடந்தது.


இதனால பல நாடுகளில் படம் தடை செய்யப்பட்டது. சீடீ கூட சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்டது.

இந்த எதிர்ப்பில் ஓரளவு நியாயம் இருக்கிறது. கடவுளாக வழிபடப்படும் ஒருவரை சாதாரண மனிதனின் ஆசாபாசங்களோடு காட்டுவதும் , அவரது சிந்தனைபோக்கை யூகிக்க முயல்வதும் மனதை புண்படுத்தும் என்பதை மறுக்க முடியாது,

ஆனால் இந்த நாவலை எழுதிய கசன்சாக்கிஸ் யார் மீதும் வன்மம் கொண்டவரல்லர். ஞானத்தேடல்தான் அவர் நோக்கமாக இருந்திருக்க முடியும், இழிவு செய்து இருக்க மாட்டார் என்ற நம்பிக்கையுடன் , எதற்கும் படம் பார்த்து முடிவு செய்யலாம் என நினைத்தேன்.

இந்த படம் பார்த்திருந்த ,கிறிஸ்துவ ஞானம் கொண்ட நண்பர்களும் படம் பார்ப்பதில் தவறில்லை என ஊக்கம் கொடுத்தனர். குறிப்பாக குட் ஃப்ரை டே நிகழ்வுகளில் பங்கேற்குமாறும், சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் பங்கேற்பது ஓர் அனுபவமாக இருக்கும் என்றும் அறிவுறுத்தினார்கள்.

    ஒரு படத்துக்கு இவ்வளவு பில்ட் அப் கொடுக்கிறார்களே என வியப்பாக இருந்தாலும் , அதன் படியே செய்து விட்டு படம் பார்த்தேன்.

    கடவுள் அவர் அற்புதங்கள் என்ற டெம்ப்ளேட் இல்லாமல் , வேறு ஒரு திசையில் படம் செல்லப்போகிறது என ஆரம்பத்தில்யே தெரிந்து விடுகிறது.

   படத்தில் இயேசு கடவுள் இல்லை.  சந்தேகங்களும் , தேடலும் உள்ள , இறை ஆசீர்வாதம் பெற்ற , ஆனால் அந்த ஆசி தேவை இல்லை என நினைக்கிற ஒரு மனிதன்.

இந்த கான்செப்ட் முதலில் அசவுகரியமாக இருந்தது. நம் மனதில் இயேசுவை கடவுளாக வைத்து இருக்கிறோம். அவரை மனிதராக , அதுவும் குழப்பம் சந்தேகங்கள் கொண்ட மனிதனாகவும் பார்க்க மனம் ஒத்துழைக்கவில்லை.

    ஆனால் மனிதனுக்குள் என்றென்றும் நிகழ்ந்து வரும் ஆன்மீக போராட்டத்தை , அவரை இப்படி சித்திரித்து இருப்பதால் தெளிவாக உணர முடிவதை நேரம் செல்ல செல்ல உணர முடிந்தது.

இயேசுவுக்கு கடவுள் அல்லது பரம பிதா தன்னை நேசிப்பதை உணர முடிகிறது. ஆனால் அந்த நேசிப்புக்கு தான் தகுதியானவன் இல்லை என நினைக்கிறார்.

எனவே கடவுள் தன் நேசிப்பை நிறுத்த வேண்டும் என்பதற்காக சில செயல்களில் ஈடுபடுகிறார். ஆனால் அவரது இந்த நேர்மை அல்லது குழந்தை தன்மை , அவர் மீது கடவுளின் அன்பை அதிகரிக்கவே செய்கிறது.

ஒரு கட்டத்தில் கடவுளின் அன்பை ஏற்று , தான் தேவ குமாரன் என பிரகடனம் செய்கிறார். அன்பை போதிக்கிறார். எதிர்ப்புகளை , கேலிகளை சந்திக்கிறார்.

கொஞ்சம் கொஞ்சமாக சீடர்கள் சேர்கின்றனர்.

முதலில் இவரை கொல்ல வரும் யூதாஸ் , இவரால் கவரப்பட்டு சீடனாகிறான்.

இவரை பாதை மாறி செய்ய , சபலத்தை தூண்ட உள் மனம் அல்லது சாத்தான் செய்யும் சூழ்ச்சிகளை முறியடிக்கிறார்.

   தான் அமைதியை போதிக்க வரவில்லை. வீரத்தை போதிக்கவே வந்தேன் என்கிறார். கொள்ளையர் கூடமாக செயல்படும் கோயில்களில் வியாபாரிகளை விரட்டி அடிக்கிறார்.

அபலை பெண்ணை தண்டிக்க வரும் கூட்டத்திடம்., யார் பாவம் செய்யவில்லையோ அவர்கள் கல்லை எறியுங்கள் அன்கிறார்.


ஒடுக்கப்பட்டவர்களுக்கு சம உரிமை கொடுக்க சட்டத்தில் இடம் இல்லை என்பவர்களிடம் , என் சட்டத்தில் அதற்கு இடம் உண்டு என்கிறார்.

ஒரு சீர்திருத்தவாதியாக தோற்றம் அளிக்கிறார். புரட்சி செய்யும் தலைவனாக  தெரிகிறார்.

அற்புதங்கள் செய்து தேவ மைந்தனாக காட்சி அளிக்கிறார்.

நோன்பு , விரதம். சுய பரிசோதனை செய்து சித்தராக , ஞானியாக காட்சியளிக்கிறார்.

உலக வாழ்வா ஆன்மீக வாழ்வா என்ற தன் தேடலில் ஒரு பெண்ணின் வாழ்வு  பாழாகி விட்டதே என வருந்தி அவளிடன் பாவ மன்னிப்பு கேட்டு ஓர் உயர்ந்த மனிதனாக காட்சி அளிக்கிறார்.

      நல்ல மேய்ப்பனாக தோற்றம் அளிக்கிறார். புரட்சியாளாராக தோற்றம் கொள்கிறார்.

     ஆயினும் என்ன...உலகம் அப்படியேதான் இருக்கிறது. தீமையை அன்பாலும் வெல்ல முடியவில்லை. ஆயுதத்தாலும் வெல்ல முடியவில்லை.

     தெரிந்தோ தெரியாமலோ எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் காயப்படுத்தி கொண்டுதான் இருக்கிறோம்.

சிலர் தெரிந்தே மற்றவர்களை காயப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

பள்ளியில் மாணவர்கள் தவறு செய்தால் , ஃபைன் போடுவார்கள். அதை கட்டுவது  பெற்றோர்கள். குழந்தைகள் செய்யும் தவறுக்கு பெற்றோருக்கு தண்டனை.

அது போல , மக்கள் செய்யும் தவறுக்கு தேவ தூதன் அல்லது தலைவன் தண்டனையை ஏற்பது இயற்கை விதி.

   போலி தலைவர்கள் , சுய நல தலைவர்கள் அல்ல. உண்மையான தலைவர்கள் , போராளிகள் செய்யும் தியாகங்களால்தான் உலக இயக்கம் நடைபெறுகிறது என்பதை சமீபத்திய வரலாற்றை படித்தாலே அறியலாம்.

இயற்கையின் இந்த விதிக்குகூட இயேசு கட்டுப்ப்படவே செய்கிறார்.   இயேசுவின் சீடர்களில் மன உறுதிக்கு பேர் போனவன் யூதாஸ்.   தான் செய்ய இருக்கும் தியாகத்துக்கு யூதாஸ்தான் வழி செய்ய வேண்டும் என ஆணை இடுகிறார். அவன் கண்ணீரோடு ஏற்கிறான்.

இப்படி எல்லாம் இருந்தும் பூரணத்தன்மை கிடைப்பதில் அவருக்கு ஏதோ நுண்ணிய தடை இருந்து கொண்டே இருக்கிறது. அது என்ன என படம் பார்க்கும் நமக்கும் புரியவில்லை. அவருக்கும் புரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று குறைவதை  உணர்கிறார்.


இந்த படத்தை கிட்டத்தட்ட எல்லோரும் பார்த்து இருப்ப்பீர்கள். இனிமேல்தான் பார்க்க இருக்கிறீர்கள் என்றால் இந்த கோட்டை தாண்டி படிக்க வேண்டாம். ஃப்ரெஷாக பார்த்தால்தான் நன்றாக இருக்கும்.

_____________________________________________________________யூதாசால் காட்டிக்கொடுக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு சிலுவையில் அறையப்படுகிறார்,

நல்லவர்களுக்கு ஏன் இந்த சோதனை...  கெட்ட எண்ணம் கொண்டவர்கள் , சுய நலம் மிக்கவர்கள் நன்றாகத்தானே இருக்கிறார்கள்.

   நல்லவனுக்கு ஏன் இந்த சோதனை..கடவுள் , அறம் , பாவ புண்ணியம் என்பதெல்லாம் வீணா... என் வாழ்வை வீணடித்து விட்டேனா..

அவர் இதயம் கசிகிறது...பிதாவே..என்னை ஏன் கை விட்டீர் .,,கலங்குகிறார்.

காம்ப்ரமைஸ் செய்து வாழ்ந்திருந்தால் சுகப்பட்டு இருந்திருப்பேனோ...

ஒரு வேளை இப்போது வாய்ப்பு கிடைத்தால் , இதை எல்லாம் விட்டு விட்டு காம்பரமைஸ் செய்து வாழ்ந்தால் சுகமாக இருக்குமோ..


உனக்கான சோதனை முடிந்து விட்டது, இனி மற்றவர்கள் போல நீ சுதந்திரமாக வாழலாம் என ஒரு தேவதை , இந்த சிலுவையில் இருந்து விடுவித்து அழைத்து சென்றால் என்ன ஆகும்.. ஒரு பெண்ணை மணந்து , ஏதோ ஒரு வேலைக்கு போய் , புணர்ந்து சாப்பிட்டு , சிரித்து , அழுது சராசரி வாழ்க்கை வாழ்ந்து , நிம்மதியாக சாகலாமே.

அந்த இறுதி நேரத்தில் என் சீடர்கள் வந்தால் /...


 புணர்ந்து , அவதூறு செய்து , பணம் சேர்த்து , ஒரு சராசரி வாழ வேண்டும் என்பது எங்கள் நியதி..அதன்படி நாங்கள் வாழ்ந்தோம். நீங்கள் உங்களுக்கான நியதிப்படி வாழ்ந்தீர்களா என கேட்டால் நான் என்ன சொல்ல முடியும்...என் வாழ்வே வீணாகி விடுமே.

பதறிப்போகிறார் இயேசு.

நல்லது கெட்டது என்பது எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும். தீமையை ஒரு போதும் உலகத்தை விட்டு ஒழிக்க முடியாது.

தீமை ஒழிய வேண்டும் என நினைத்து இருந்தால் , கடவுள் தீமையை உருவாக்கி இருக்கவே மாட்டார்.

தீமை அதன் நியதிப்படி இயங்கி கொண்டிருக்கும்போதும், நன்மை தன் நியதிப்படி இயங்கி கொண்டு இருந்தாக வேண்டும்.

 நன்மை செய்தால் கடவுள் உதவுவார்.. தீமை செய்தால் தண்டிப்பார் என்று இல்லாமல் ,  நம் இயல்பு நன்மை செய்வது ,., எது வரினும் நல்லதே செய்வோம் என இருப்பதே உயர்வு.

   நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தோம் ( காட்டி கொடுத்தோம் )  நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தீர்களா என்ற யூதாசின் கேள்வி பெரிய திறப்பாக அமைகிறது.

உண்மையான இயேசு சிலுவையில் இருந்து உயிர்த்து எழுகிறார் என்று படம் முடிகிறது.

இது பைபிளை அடிப்படையாக கொண்ட கதை அன்று.

ஆன்மீக தேடல், நன்மை- தீமை முரண்கள் போன்றவற்றை அலசும் ஒரு கற்பனை கதை.

காட்சிகள் ஒவ்வொன்றும் தீயாக இருக்கின்றன.

இயேசு சிலுவை செய்யும் வேலை செய்பவராக இருப்பது ஒரு முக்கியமான குறியீடு.

பாம்பு, கனி, சிங்கம் என ஒவ்வொன்றும் ஆயிரம் அர்த்தங்கள் தருகின்றன.


தன்னை காட்டி கொடுக்குமாறு யூதாசிடம் கேட்டு கொள்கிறார் இயேசு.

யூதாஸ் மறுக்கிறான்.

என் இடத்தில் நீங்கள் இருந்தால் , உங்கள் குருவை காட்டி கொடுக்க இசைந்து இருப்பீர்களா என்கிறான்.

இயேசு சொல்கிறார்.

கண்டிப்பாக நான் இதற்கு இசைந்து இருக்க மாட்டேன். என்னால் காட்டி கொடுக்க முடியாது.

அதனால்தான் கொஞ்சம் சுலபமான வேலையை , சிலுவையில் உயிர் துறக்கும் வேலையை எனக்கு கடவுள் கொடுத்து இருக்கிறார். கடினமான காட்டி கொடுக்கும் வேலை உனக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது, இருவரும் அவரவர்கள் வேலையை செய்தாக வேண்டும் என்பார்.

மிகவும் உருக்கமாக இந்த காட்சி இருக்கும்,


வசனங்களுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் படம் பார்க்கலாம்.


நான் மரம் வெட்டியாக இருந்தால் , வெட்டி இருப்பேன்... தீயாக இருந்து இருந்தால் எரித்து இருப்பேன். ஆனால் நான் இதயமாக , அன்பாக இருக்கிறேன்..எனவே அன்பைத் தவிர வேறு ஏதும் என்னால் செய்ய இயலாது.

ஒரு தேவ தூதன் அற்புதங்கள் செய்ய வேண்டியதில்லை. தேவதூதனே ஓர் அற்புதம்தான்.

கடவுளே... நான் செல்ல விரும்பாத இடத்துக்கு என்னை அழைத்து வந்ததற்கு நன்றி

சாவை பார்த்து பயமில்லையா?

ஏன் பயப்பட வேண்டும்? மரணம் என்பது மூடும் கதவன்று..திறக்கும் கதவு.அது திறக்கிறது,,அதன் வழியாக நாம் செல்லலாம்.

மக்களிடன் பேச போகிறேன்.

என்ன பேசுவாய்

நான் வாயை திறப்பேன், கடவுள் என் மூலம் பேசுவார்.

கடவுள் மணமகன்..மனிதனின் ஆன்மா மணமகள்.. இரண்டும் இணையும் திருமணம் சொர்க்கத்தில் நடக்கும், அனைவரும் வரலாம்.கடவுளின் உலகத்தில் எல்லோருக்கும் இடம் உண்டு.


 நீ சொல்வது சட்டத்துக்கு எதிரானது..

அப்படி என்றால் அந்த சட்டம் , என் இதயத்துக்கு எதிரானது


இசை இன்னொரு அற்புதம்,,


காட்சி அமைப்புகள் அபாரம்.

மனம் குழம்பியவராக இருக்கும்போதும் , தலைமைப்பண்பின் போதும் ,  மகானாக இருக்கும்போதும் காட்டும் வெவ்வேறு உடல் மொழி வாவ்.

தண்ணீரை ஒயினாக மாற்றி விட்டு , சியர்ஸ் சொல்லும் காட்சியை மிக மிக ரசித்தேன்..

அனுபவித்து பார்க்க வேண்டிய படம். வாழ் நாள் முழுக்க மறக்க முடியாத படம்..


எனக்கு விதிக்கப்பட்டதை நான் செய்தேன்...உங்களுக்கு விதிக்கப்பட்டதை நீங்கள் செய்தீர்களா என்ற யூதாசின் கேள்விதான் ப்டத்தின் உச்சமாக நினைக்கிறேன்.

என்னதான் சுரணை இல்லாத , நன்றி கெட்ட சமுதாயமாக இருந்தாலும் . அவர்கள் இயல்பு அது.,, நாம் நம் இயல்புபடி இருப்போம் என சில போராளிகள் , தலைவர்கள், எழுத்தாளர்கள் , கவிஞர்கள் , பல்வேறு துறை மேதைகள் இருப்பதால்தான் உலகம் ஏதோ இயங்குகிறது என்பது என் எண்ணம்11 comments:

 1. உணவு புகட்டும் போது (அதுவும் அறியாப் பருவத்தில்) நடந்த விபத்துக்காக, மிகமிக இளம் வயதுப் பெண் ஒருவரைத் தலையை வெட்டிக் கொன்ற மகா பாவிகளை நியாயப் படுத்தி எழுதிய ஆள் நீங்கள். என்ன ஆன்மீகம் வேண்டிக் கிடக்கிறது? அந்த வார்த்தையைச் சொல்லக்கூட உரிமையோ தகுதியோ இல்லை.

  ReplyDelete
 2. "உணவு புகட்டும் போது (அதுவும் அறியாப் பருவத்தில்) நடந்த விபத்துக்காக, மிகமிக இளம் வயதுப் பெண் ஒருவரைத் தலையை வெட்டிக் கொன்ற மகா பாவிகளை நியாயப் படுத்தி எழுதிய ஆள் நீங்கள். என்ன ஆன்மீகம் வேண்டிக் கிடக்கிறது? அந்த வார்த்தையைச் சொல்லக்கூட உரிமையோ தகுதியோ இல்லை"

  Sorry, Please Forgive Me

  ReplyDelete
 3. //சர்வ வல்லமை கொண்ட இயேசுவுக்கு அவன் காட்டி கொடுக்கப்போகிறான் என்பது எப்படி தெரியாமல் போயிற்று என்ற கேள்விக்கும் தெளிவான பதில் கிடைக்கவில்லை.//

  மத்தேயு 26 அதிகாரம்

  20. சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூட அவர் பந்தியிருந்தார்.

  21. அவர்கள் போஜனம்பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

  22. அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள்.

  23. அவர் பிரதியுத்தரமாக: என்னோடே கூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்.

  24. மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.

  25. அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார்.

  ReplyDelete
 4. very bad article

  ReplyDelete
 5. @ முதல் அனானி.... நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை எழுதினேன்.. எனக்கு தகுதி இல்லை என நீங்கள் நினைத்தால் , இந்த படம் குறித்து உங்கள் பார்வையை நீங்கள் எழுதுங்கள்.. உங்கள் பெயரில் வெளியிட வேண்டாம் என நினைத்தால், எனக்கு அனுப்புங்கள்... நம் வலைப்பூவில் அதை வெளியிடலாம்...

  ReplyDelete
 6. @ ராபின்.... நன்றி நண்பரே... அதில் இன்னும் சில கேள்விகள் இருக்கின்றன.. இயேசு நினைத்து இருந்தால் , யூதாசின் மனதை மாற்றி இருக்க முடியும். சிலுவை சம்பவத்தையே நடக்காமல் செய்து இருக்க முடியும். ஏன் அப்படி செய்யவில்லை...வெறும் சில பொற் காசுகளுக்காக யூதாஸ் காட்டி கொடுத்தது லாஜிக்கலாக இல்லை.... இதற்கெல்லாம் இந்த படம் விடை காண முயற்சிக்கிறது

  ReplyDelete
 7. @ நான்காம் அனானி.... தங்கள் கருத்துக்கு நன்றி,,,,ஏன் அப்படி சொல்கிறீர்கள் என தெரிந்து கொள்ளலாமா

  ReplyDelete
 8. உணர்ச்சிபூர்வமாக இருக்குது இந்த கட்டுரை. அப்படியே படத்தை பார்த்தது போல இருந்த உணர்வு. அருமையா இருக்கு நன்பா.

  Hats off to You. :)

  ReplyDelete
 9. வலைச்சரம் வழிகாட்ட இங்கு வந்தேன்.

  அலை அலையாய்ப் பிறந்து, வளர்ந்து, இறந்து போகும்
  மனித வெள்ளத்திடையே,

  இவர் போலும் மானிட சரித்திரத்திலே ஒருவர் இருந்தாரா என
  வியக்க வைக்கும் பற்பலர் நடுவிலே

  யேசு பிரான் முக்கியமானவர். அவர் வாழ்ந்த வாழ்வினைப் பற்றியதொரு
  புதிய இன்னொரு கோணத்திலிருந்து பார்க்கும்
  படத்தினை விருப்பு வெறுப்பு அன்றி விமர்சனம் ஒன்றை
  அழகாக அமைதியாக செய்து இருக்கிறீர்கள்.

  இந்தப்படம் பார்க்கவேண்டும் எனத் தூண்டும் அளவுக்கு
  அமைந்துள்ளது உங்கள் விமர்சனம்.

  வாழ்க.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.in
  www.vazhvuneri.blogspot.in

  ReplyDelete
 10. நல்ல கட்டுரை நண்பரே...

  இந்த படத்தில் இயேசு கடவுள் அல்ல .. அவர் ஒரு சீர்திருத்தவாதி என்பது புலப்படுகிறது ..

  நல்ல விமர்சனம்

  ReplyDelete 11. From: "RAMESH APPADURAI"
  To:
  Subject: [Maraththadi] jesus-12 seedarkaL
  Date: 13 June 2003 16:15

  இயேசுவின் 12 சீடர்கள்:
  இயேசுவுக்கு 12 சீடர்கள் இருந்தனர்.அவர்களில் ஒருவனே அவரை காட்டிக்கொடுத்தான்.இயேசு உலகின் உண்மைகளை அறிந்து கடவுளானவர்.அவருக்கு தெரியும் அவரின் சீடர்களில் ஒருவன் தான் அவரை காட்டி கொடுப்பான் என.அப்படியானால் அவ்வாறான ஒருவனை ஏன் அவர் சீடனாக தெரிந்தெடுத்தார்.மேலும் ஒருவன் அவரை மறுதலித்து அவருடன் சுற்றியதை அவர் சிலுவையில் அறையும் போது மறுதலிப்பான்.மேலும் ஒருவர் அவர் உயிர்தெழுந்து வரும் போது அவரின் கையின் காயத்தில் கையை விட்டு உறுதி செய்த பின்பே ஏற்றுக்கொள்வான்.அவர் தான் நமது தமிழகம் வந்த புனித தோமா என்கிற ST.THOMAS.
  அப்படியான ஏன் அவர் அவ்வாறான சீடர்களை தெரிந்தெடுத்துக்கொண்டார்.
  இதில் ஒரு உருவகம் உள்ளது.
  அதற்கு முன்பு ஜெபி அய்யாவின் சும்மா கட்டுரையில் இருந்து ,அதில் நமது சித்தர்கள் மனிதனின் மனதினை சித்தி,புத்தி,அஹங்காரம் என மூன்றகவும் அதனை மேலும் சிறு சிறு கூறுகளாக பிரித்து 12 வித மனநிலைகளாகவும் பிரித்து அறிந்திருந்தனர் என கூறிப்பிட்டு இருந்தார்.
  அதாவது மனிதனின் 12 மனநிலையில் இருந்து 12 விதமான மனிதர்கள்.அதாவது உலகில் 12 விதமான மனிதர்கள் தான் இருக்க முடியும்.அதனை வலியுத்தவே இயேசு 12 சீடர்களை தன்னுடன் கொண்டு அவர்கள் மூலம் மனிதர்களின் குணாதியங்களை வெளிப்படுத்தி உள்ளார்.இவர்களை மூன்று பொது குழுவாக பிரித்தால்,உலகில் மூன்று விதமான மனிதர்கள்
  (முன்பு ஒரு முறை இதனை இயேசுவோடு சிலுவையில் அறையப்படும் இரு திருடர்களை வைத்து எழுதியிருந்தேன்).
  அதாவது சித்தி,புத்தி,அஹங்காரம் எனும் மனநிலையின் மூலம் அதில் எதன் தாக்கம் அதிகமாக உள்ளதோ அதன் மூலம் உருவாகும் சித்திமான்,புத்திமான்,அஹங்காரர்.

  சரி இப்போது கதைக்கு வருவோம்,
  12 விதமான மனிதர்கள் என்கிறாயே ,மேலும் மூன்று பொது குழுவில் இருந்து உருவானவர்களெ என்கிறாயே அதற்கு இந்த காலத்திய விஞ்ஞானத்தில் இருந்து எங்கேயா ஆதாரம் என்கிறீர்களா! இதோ
  NATIONAL GEOGRAPHYயில் இருந்து JOURNEY OF MAN எனும் FLASH படக்கூத்தை முன்பு ஒரு முறை DOWN LOAD செய்தேன்.அந்த நிகழ்ச்சி 15.12.2002ல் NATIONAL GEOGRAPHY CHANNELல் வெளியாகியிருக்கிறது.
  அதில் ஆதி மனிதன் ஆப்ரிக்காவில் இருந்து(M168) மூன்று பெரிய குழுவாக பிரிந்து(M130,M89,M1 எனும் GENITIC குழுக்களாகவும்) அதனை மேலும் சிறுகூறுகளாக பின்வரும் 12 GENITIC குழுக்களாக உள்ளதாக வகைப்படுத்தியுள்ளனர்.
  அதாவது M130,M89,M20,M175,M9,M172,M17,M45,M173,M242,M122,M3 GENITIC குழுக்களாக வகைப்படுத்தியுள்ளனர்.

  இதனையே இன்றய இயற்பியல் அறிந்த அணுவின் கூறுகளாக கூறுவதானால்
  புரோட்டான்,நியுட்ரான்,எலக்ட்ரான் இதனை உருவாக்க்கும் sub atomic particle எனக்கூறும் 6 leptons மற்றும் 6 quarks எனும் 12 அணுவின் உட்கூறான பொருட்கள்.

  அதாவது இயேசு மாதிரியான சித்தர்கள் அறிந்தது ,ஞானப்பழக்கதையின் மூலம் சொல்வதானால் இந்த உலக உண்மையெனும் ஞானத்தை பார்க்காமலேயே உணர்ந்தவர்கள்.

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா