Monday, August 1, 2022

கலைமகள் − ஶ்ரீராமகிருஷ்ண விஜயம் சிறுகதை பயிலரங்கு அனுபவம்

 கலைமகள்  மாத  இதழும்   ஶ்ரீ ராமகிருஷ்ண விஜயம்  இதழும்  இணைந்து  சிறுகதைப்  பட்டறை  எனும் பயிலரங்கை  நடத்துகின்றன  என்ற செய்தி எனக்கு  சற்றே வியப்பளித்தது.

   ஆன்மிகம்  ,  ஞானத்தேடல் ,  சமூகத்தேடல்  என  பயணிக்கும்  ராமகிருஷ்ண மடம் ,   இலக்கியத்தில்  ஆர்வம் காட்டுவது சந்தோஷம் கலந்த  ஆச்சர்யம் அளித்தது

   இதில்  சுவாரஸ்யம்  என்னவென்றால் வேறு எங்கோ  போய்க்கொண்டிருப்பவர்கள்  தற்செயலாக நிகழ்ச்சி குறிந்து  அறிந்து  ,  சரி  போய்த்தான்  பார்ப்போமே என   கேஷுவலாக  வர முடியாது.

     ஒரு  மாதம் முன்பே  விண்ணப்பிக்க வேண்டும்   அதில்  தேர்வு  செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே  நிகழ்ச்சிக்கான  அழைப்பு அனுப்பப்படும்

       ராமகிருஷ்ண மடத்தில்  ஏசி ஹாலில்  மிகச்சிறப்பான  ஏற்பாடுகளுடன்  நிகழ்ச்சி  நடந்தது

    இனிமையான   ஆன்மிக  சூழலில்  இலக்கிய  நிகழ்வு  .   பெயரை  பரிசோதித்தபின்னே   அனுமதித்தனர்  அழகான  விவேகானந்தர் படம்,  அவரது  நூல் ,  பயிற்சிக் குறிப்பேடு , பேனா அடங்கிய  பொதி  அனைவர்க்கும்  வழஙககப்பட்டது


ஶ்ரீராமகிருஷ்ணருக்கு ஆரத்தி காட்டி  மந்திரங்கள்  சொன்ன  பிறகு  நிகழ்ச்சி தொடங்கியது

    எழுத்தாளர்கள்  வித்யா சுப்ரமணியம்  மாலன்  ,  தேவிபாலா  ஆகியோர்  சிறுகதை எழுதும்  நுட்பம்  குறித்து  வகுப்பெடுத்தனர்.


   கலைமகள்  ஆசிரியர்  கீழாம்பூர் சங்கரமணியன்  அவர்கள்  பேசியதை  தொகுத்துக்கூறி  மனதில்  பதிய வைத்தார்

       ராமகிருஷ்ண விஜயம்  ஆசிரியர் சுவாமி அபவர்கானந்தர்  சென்னை  ராமகிருஷ்ண மடத்தின்  மேலாளர் சுவாமி  தர்மிஷ்டானந்தர் ஆகிய  ஆன்மிகவாதி்களுடம்கூட   சிறுகதைகள் குறித்து  சில  நிமிடங்கள்  பேசியது  சிறப்பாக இருந்தது

     அனைத்துக்கும்  சிகரமாக , உலகளாவிய  ராமகிருஷ்ண  மடங்களின்  துணைத்தலைவரான ஶ்ரீமத் சுவாமி கெளதமானந்தஜி மகராஜ்  அவர்களும்  அழகாக  ஆனால்  சுருக்கமாக  சிறுகதை குறித்த  தனது  நேரடி  அனுபவத்தை  பகிர்ந்து  கொண்டார்
       தனது  சிறுவயதில்  சிறுகதைப்போட்டி  ஒன்றில்  கலந்து  கொண்டு பரிசு பெற்றதை அவர் சொன்னது  சுவாரஸ்யம்.  ஒரு விஷயத்தை  சிறுகதை  போல  சொல்லும் தன் பாணி  பலரை  ஈர்த்து  வருகிறது  எனக்குறிப்பிட்டார்.    

         பேச்சுவாக்கில்  ஒரு  சிறுவனுடனான  ஒரு  அனுபவத்தை  ஆன்மிக  கருத்தை  வலியுறுத்துவதற்காக சொன்னார்.  அது  பிறகு மாலன்  தன்  பேச்சில் குறிப்பிட்ட  சிறுகதை பஞ்சாங்கத்துக்கு  முற்றிலும்  ஒத்துப் போனது..

  வரவேற்புரையாற்றிய சுவாமி அபவர்கானந்தர்  (  ஶ்ரீராமகிருஷ்ண விஜயம்  ஆசிரியர் )   தமிழ்ச் சிறுகதை வரலாற்றை  சுருக்கமாக பேசினார்

    செய்திகளை  மட்டுமே  வெளியிட்டுக் கொண்டு  இருந்த  அன்றைய  சூழலில்  பாரதியார்  தனது  சுதேசமித்ரன் இதழில் சிறுகதைகளுக்கு  இடமளித்து   தமிழில்  சிறுகதை  கலையை  ஆரம்பித்து  வைத்ததை  சொன்னார்  மாதவையா வவேசு  ஐயர் டிஎஸ்  சொக்கலிங்கம்  சிசுசெல்லப்பா  ராமையா  கநாசு  மெளனி என சிறுகதையை  வளர்த்த  முன்னோடிகளைப்பற்றியும்  சுஜாதா  சுரா  போன்றோர்  பார்வை  மணிக்கொடி காலகட்டம் என விரிவாக  பேசினார்;

சுருக்கம் , சுவை  , உணர்ச்சி/ நெகிழ்ச்சி வாசகனின் சிந்தனையை  தூண்டல்  போன்ற  சிறுகதைக்கு  தேவையான  அம்சங்கள்  குறித்துப்  பேசினார்.

  சிறுகதை  ஆசிரியனிடம்  ஆரம்பிக்கும்  சிந்தனை  வாசகனிடம்  தொடரும்படி எழுதப்படுவதே நல்ல  சிறுகதை என்றார்


அதன்பிறகு  பேசிய கீழாம்பூர்  சங்கரமணியன் சிறுகதைப்பட்டறையின்  தேவை  குறித்தும்  அதை  கலைமகள்  தொடர்ந்து  நடத்த நினைத்திருப்பதையும்  சொன்னார்.  தரமணியல்  தமிழாராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து  முதல்,நிகழ்வு நடந்ததையும் இது,இரண்டாவது  நிகழ்வு என்பதையும் குறிப்பிட்டார்.

     உவேசா  ,   கிவாஜ  ஆகியோர்  வழியில்  கலைமகள்  இதழ்  தொடர்ந்து  தமிழ்ப்பணி ஆற்றும்  என்றார்


பிறகு  பேச வந்தவர்  எழுத்தாளர்  பாரதி சந்துரு


சிறுகதைகளின்  அவசியம்  குறித்துப்பேசினார்..  சிறுகதை  சமகாலப்பிரச்சளைப்  பேசுகிறது  அதிலிருந்து ,மீளும்  ஊன்று கோலாகவும்  சிறுகதைகள் உள்ளன என்றார்;

உதாரணமாக  சூடாமணி எழுதிய  அக்கா என்ற  சிறுகதை.


அக்கா எனும் கதையில், குழந்தை பெறாத ஒரு விதவை அக்கா தங்கையுடன் வசிக்கிறாள்

தனக்கு குழந்தை இல்லாத  சோகத்தை காட்டிக்  கொள்ளாமல்  தங்கையின் குழந்தையை  அன்பாக  கவனித்துக்கொள்கிறாள்.   அந்தக்குழந்தையும்  பெரியம்மா மீது  பாசமாக  இருக்கிறது  ,தங்கையும்  அன்பானவள்தான்

ஒரு  நாள்அவள் தங்கை வாய்தவறி ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறாள். அவள் வேண்டுமென்றே அதைச் சொல்லவில்லை. தங்கை குழந்தைக்குப் பால் புகட்டும் போது அது அழுகிறது. ‘உனக்கு இதெல்லாம் தெரியாதுக்கா. இப்படி எங்கிட்ட குடு’ என்று கூறி, குழந்தையை அவளிடமிருந்து வாங்கிக்கொள்ளுகிறாள். வாய்தவறி வந்து விழுந்த சொல் அது. அக்காவை அது புண்படுத்திவிடுகிறது. ஆனால் தங்கை அதை உணரவே இல்லை.

அக்கா  மன உளைச்சலில் வெளியே போய்ச் சுற்றிவிட்டு வருகிறாள். ‘எங்கே அக்கா போயிட்டே? இவ்வளவு நேரமாச்சேன்னு எனக்கு ஒரே கவலையாயிடுத்து..’ என்று தங்கை அங்கலாய்க்கும்போது அவளது அன்பு அக்காவுக்குப் புரிகிறது. தங்கையின் பெரிய குழந்தை, ‘பெரியம்மா! பசிக்கிறது!’ என்கிறாள்

பர்வதம் சிறிது தயங்கி. “குழந்தைகளுக்கு நீ வேணுமானால் சாதம் போட்றியா?” என்கிறாள். ‘

“ஏனாம்? நீயே போடுக்கா. உன் ஆசைக்கையால நீ போட்டு குழந்தைகள் எத்தனை தேறி இருக்கு, பாரு!” என்று தங்கை சொன்னதும் அக்காவின் இதயம் லேசாகி முகத்தில் சிரிப்புத் தோன்றுகிறது. குழந்தைகளூக்கு உணவு போடச் செல்லுகிறாள் என்று கதை முடிகிறது.

     ஒரு  வார்த்தை  உலகத்தையே  நரகமென  எண்ணவைக்கிறது  இன்னொரு  வார்த்தை  வாழ்வை  சொர்க்கமெனக் காட்டுகிறது   சூழல்கள்  மனிதர்கள் என  அனைத்தும்   கணம்தோறும் மாறும்  மாயத்தைச்  சொல்கிறது  கதை


சீசர்  என்ற  ஜெயகாந்தனின்  கதையை  அடுத்தபடியாக  பேசினார்

    ஜெயகாந்தனுக்கே உரிய  டிராமாட்டிக்  உச்சம்  கொண்ட     கதை  இது

    வாடகைக்கு  குடியிருக்கும் குடும்பத்தினர் நிறைந்த  ஒரு குடியிருப்பு  ஹவுஸ்  ஓனர் மகனின்  பார்வையில் நகரும்  கதை

       ஏன்  ஹவுஸ்  ஓனர்  பையனின்  பார்வை  என்றால்  அதுதான்  கதையை  இன்னும்  நெருக்கமாக்குகிறது.  பெரிய  அளவு  தீமையோ   பெரியஹீரோயிசமோ  செய்ய  முடியாத  ஒரு  சாட்சி  மட்டும்தான்  அவன்

          தமது  வீட்டில்  குடியிருக்கும்  ஒரு பெண்ணின் ஒழுக்கம்மீது   அபாண்டமாக  பழி  சுமத்தி ,  அவளது  கணவனை  அழைத்து வரச்சொல்கிறார் − ஆணையிடுகிறார் − ஹவுஸ் ஓனர். மற்ற குடித்தனக்காரர்கள்  எல்லாம்  சுவையான  மெகாசீரியலை  ரசிப்பது போல  அந்தப்பெண்ணின்  கதறலை  ரசித்தபடி  கள்ள  மெளனம் சாதிக்கின்றர்.

     


 மகன்  ஓடிப்போய்  கணவனை   அழைத்து  வருகிறான்.    கணவர் அமைதியாக  வந்து  என்ன  பிரச்சனை  என  விசாரிக்கிறார்.    என்  மனைவி  மீது  எனக்கு  நம்பிக்கை  இருக்கிறது   அனைவரும்  அவரவர்  வாழ்க்கைத்துணையை   நம்புங்கள்.  பிறர்  வாழ்வை  எட்டிப்பார்க்காதீர்கள்  என கம்பீரமாக  கூறுகிறார்.

     வேறு  வீட்டுக்குப்போய்விடலாம்  இது  மோசமான   மனிதர்கள்  வாழும்  இடம்  என்கிறாள்  மனைவி

    உலகம்  இப்படித்தான் இருக்கும்   பயந்தால்  வாழ  முடியாது என  ஆதரவாகப்பேசுகிறார்  கணவர்;

       சீசரின்  மனைவி  சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு  வாழ  வேண்டும்  என  பெண்களுக்கு  அட்வைஸ்  சொல்லாமல்  ஒரு, மன்னனுக்கு  உரிய  வீரம்  அமைதி  கண்ணியத்துடன்  பிரச்சனையை  சந்தித்த  அக்கணவன்  அந்த  இளைஞன் பார்வையில்  பேரரசர்  சீசராக  தோன்றுவதாக  கதை  முடிகிறது

    வாழ்க்கை  குறித்து  இப்படி  மேன்மையான  பார்வைகள்  உருவாக  சிறுகதைகள்  அவசியம்  என்று  பேசினார் பாரதி  சந்துரு


சிறுகதைகளை  எப்படி  வடிவமைப்பது 

சிறுகதைகளின்  வடிவங்கள் குறித்து வித்யா சுப்ரமணியம்  பேசினார்

           ராமகிருஷ்ண  மட நுாலகம்தான் தன்னை  நல்ல தொரு  வாசகியாக்கியது   நல்ல  வாசகன்தான்   நல்ல  எழுத்தாளன்  ஆக  முடியும்  என பேச்சை  ஆரம்பித்தார்

         திஜா எழுதிய  அம்மா  வந்தாள்  நாவல்தான்  எழுதத்துாண்டும்  உத்வேகம்  அளித்தது   என்றார்

     தானே  சொல்வது  போல  எழுதுதல்  ,  பல்வேறு  கதாபாத்திரங்கள்  சொல்வது போல எழுதுதல் ,   குளம்  மரம்  ஆகியவை  சொல்வதுபோல  எழுதுதல்  என   எப்படியும்  எழுதலாம்

    உருவகக்கதைகளும்  எழுதலாம்

ஆற்றங்கரை  பிள்ளையாரை  பாரததேசமாக  உருவகித்து  புதுமைப்பித்தன் ஒரு  கதை   எழுதியிருக்கிறார்    அந்த  பாதிப்பில்  நான்  எழுதிய  கதைதான்  "என்று தணியும்"  என்ற  கதை

       எளிய  விஷயங்களைக்கூட சிறுகதையாக்கலாம்     ஒரு  சிறுவன்  ரிக்ஷா  என்பதை  மழலை  மொழியில்  ரிஸ்கா என்பதை  சுவைபடக்கதை ஆக்கியிருக்கிறார்   அசோகமித்திரன்


அதேபோல  மிகப்பெரிய  துயரங்களை  இழப்புகளை   கதையாக்கலாம்    நான்  அப்படி  எழுதிய  கதை  ஒன்று  மிகப்பெரிய  புகழை  எனக்கு  ஈட்டித்தந்தது 

சிறுகதை  அதன் முதல் வரிக்கு முன்பே  ஆரம்பித்து  விட வேண்டும்   கடைசி வரிக்கு  பின்பும்  தொடர வேண்டும் என்றார்

அந்தக்கதைக்கு   அடிப்படையாக  அமைந்த  தனது  சோகத்தை   அவர்  சொன்னபோது  பலர்  கண்கள்  கலங்கின  அவர்  அதை   சொன்ன விதமும்  ஒரு  சிறுகதை   போல  இருந்தது


சிறுகதை எழுதும்போது  கவனிக்க  வேண்டியவை  குறித்து  தேவிபாலா  பேசினார்


தலைப்பிலேயே  பதில்  இருக்கிறது.  சிறுகதை  எழுதவேண்டுமானால்  கவனிக்கப்பழகுங்கள். சகமனிதர்களை  , சம்பவங்களை  கவனியுங்கள.   சும்மா  பார்ப்பது  அல்ல  கூர்மையான  கவனிப்பு தேவை

    எனது  முதல் சிறுகதை  கலைமகள் இதழில்  வெளியானது    அந்தவகையில்  கலைமகள்தான்  என்  தாய்வீடு

       சுமங்கலி பிரார்த்தனை  என்பது  அக்கதையின்  பெயர்.

    விகடன்  ஆசிரியர்  பாலசுப்ரமணியன்  அடிக்கடி  சொல்வார்      கண்ணையும் காதையும்  திறந்து  வைத்தால்  ஆயிரம்  கதைகள்  கிடைக்கும்;

   பேருந்துப்பயணத்தின்   போது   ஜன்னல்  வழியே  நான்  கண்ட  ஒரு  காட்சி − மடிசார்  அணிந்து ஒரு, பெண்  அதிவேகமாக ஸ்கூட்டரில்  பறந்த  ஒரு  காட்சி  − என் மனதில்  விதையாக  விழுந்து மடிசார்  மாமி  என்ற  புகழ்பெற்ற நாவல்  ஆனது

      எனவேதான் வாகன  வசதிகள்  வந்துவிட்ட பின்பும்கூட  பேருந்துகளில்  பயணிக்கிறேன்

    ஜவுளிக்கடை   உணவகங்கள்  என  எங்கும்  கதைகள்   கிடைக்கும்

   சின்னச்சின்ன  உணர்வுகளை  சின்னசின்ன  வாக்கியங்களில்  எழுதிப்பழகுங்கள்

        ஒரு  இளம்பெண்    நடந்து  கொண்டு  இருந்தாள்   நல்ல  மழை  பெய்து  கொண்டிருந்தது.  நனைந்துவிடாமல்  குடைபிடித்தபடி  போய்க்கொண்டிருந்தாள்

     இப்படி  எழுதாதீர்கள்

    குடைபிடித்தபடி  சென்று கொண்டிருந்த அவளுக்கு...     என  ஆரம்பித்து  அடுத்தடுத்து  செல்லுங்கள்

      குடை  அவள்   ஆகிய   இரு  சொற்கள்மூலம்  மழையையும்  ஒரு  பெண்  என்பதையும்  உணர்த்திவிட முடியும்

       ஊசி  போல   நறுக் என  மனதில்  பதிய  வேண்டும்

       ஆரம்பம்  முக்கியம்

    கோலம்  போட வாசலுக்கு  வந்தபோது , படமெடுத்து  ஆ டிக்கொண்டு  இருந்தது பாம்பு  என அதிரடியாய்  ஆரம்பியுங்கள்

அதேமாதிரி  முடிவிலும் ஒரு  பஞ்ச்  தேவை


வட்டார  பாஷை  வேண்டாம்  பொதுவான  தமிழில்  எழுதுங்கள்

வட்டார பாஷை தேவைதான்  ஆனால்  ஆரம்பகட்டத்தில்  வேண்டாம்

    தற்போது   பெண்கள்தான்   அதிகம்,,வாசிக்கின்றனர்  எனவே அவர்கள்  பிரச்சனைகளை  எழுதுங்கள்

  பெண்களால்  ஆனதுதான்  குடும்பம்  குடும்பங்கள்  சேர்ந்து  வீதி வீதிகள்  சேர்ந்தது  ஊர்     ஊர்கள் சேர்ந்ததுதான்  தேசம்  மற்றும் உலகம்

    என்னைப்பொருத்தவரை  திருவள்ளுவரை  மிகச்சிறந்த  சிறுகதை  ஆசிரியர்  என்பேன்.   எத்தனை  எத்தனை  கருத்துகள்   உவமைகள்

        அவசரமாக  கதை   வேண்டும்  என   பத்திரிக்கைகள்  கேட்டால்  உடனே  திருக்குறளைப்  புரட்டுவேன்

எந்தக்குறள்  கண்களில் படுகிறதோ அதை வைத்து  கதை  எழுதிவிடுவேன்

கனவுகளை   குறித்து  வைப்பது   நல்லது   சில  கனவுகள்  மறந்ததுபோல இருக்கும். யோசித்தால்  நினைவுக்கு  வந்து  விடும்.    குறித்து   வைத்தால்  கதை  எழுத  வித்தியாசமான   கருக்கள் கிடைக்கும்

        சின்னசின்னக்காட்சிகள்கூட சிறுகதைகளுக்கான  பொறிகளாக அமையலாம் 


ஒரு  வீட்டின் முன்  ஒரு,  ஜோடி செருப்புகள் கிடந்ததைக்கண்டேன்.


அவ்வளவுதான்    பத்திரிக்கையுலக பிதாமகன்  சாவி  அவர்கள்  பாராட்டி  தலைப்பிட்டு  (  தலைப்பு  வாசலில்  செருப்புகள்)  பிரசுரிக்கத்தக்க  ஒரு   கதை  தயாராகி விட்டது

      அந்த  கதை  இதுதான்

ஒரு  கணவன்  மனைவி..   கணவன்  மீது அளப்பரிய  அன்பும்  நம்பிக்கையும் கொண்ட  மனைவி.    

ஒரு  நாள்  கணவன்  அலுவலகம்  சென்ற பிறகு  இவள்  ஒரு   வேலையாக  வெளியே செல்கிறாள்.  அங்கே  ஒரு   பாலியல்  தொழில் நடக்கும்  வீட்டைக்கடக்கும்போது    செம   அதிர்ச்சி

கணவனின்  செருப்புகள் அவ்வீட்டு வாசலில்  கிடக்கின்றன

    அவன் மீதான  நம்பிக்கை  சுக்குநூறாக சிதறுகிறது    கண்ணீருடன்   வீடு  திரும்புகிறாள்

    இது  எதுவும்  அறியாத   கணவன் வழக்கம்போல   மாலையில்  வீட்டுக்கு வருகிறான்.    வந்தவன்  அதிர்ச்சியில் உறைகிறான்

   தாழிடப்பட்ட  அவன்வீட்டு  வாசலில் யாரோ ஒரு   ஆடவனின்  ஒரு  ஜோடி  செருப்புகள்

இந்தக்கதை   நல்ல   வரவேற்பைப்பெற்றது

என்ன  ட்விஸ்ட் என்றால்   தங்கள்  வாழ்வில்  நடந்த சம்பவத்தை  கதையாக  எழுதிவிட்டதாக   பக்கத்து வீட்டுக்காரர்கள்  சண்டைக்கு  வந்து விட்டார்கள்  (  அரங்கில்  பலத்த  சிரிப்பு )  கற்பனைக்கதை  என  சொன்னாலும்  நீண்ட  நாட்கள் என்னுடன்  பேசுவதையே  நிறுத்தி  விட்டார்கள்


        வர்ணனைகள்  அதிகம்  வேண்டாம்.  போதனைகளும்  வேண்டாம்

       ஒரு  பாத்திரத்தின்  குணாதிசயங்களை  தெளிவுற   வரையறுத்து விட்டால் ,  பல்வேறு  குணாதிசங்கள்  கொண்ட  பாத்திரங்களே கதையை எழுதி விடும்

நறுக்  என  சுருக்கமாக  சொல்லும்கலை  முக்கியம்  .   ஏழே வரிகளில்  ராமாயணம் ,  மகாபாரதத்தை  சொல்லி  வியப்பிவ்  ஆழ்த்தியவர்  கண்ணதாசன்


வரவு  எட்டணா  ,  செலவு பத்தணா ,  அதிகம் ரெண்டணா    கடைசியில்  துண்டனா  என ,படத்தின்  கதையை  பாடலின் சில  வரிகளில்  சொன்னதுபோல  கதையின்  முதல்  வாக்கியத்திலேயே  கதையை  சொல்லலாம்


ஒரு முறை   ஒரே  வார்த்தையில்  "கதை  எழுதச்சொன்னார்கள்

எழுதினேன்


கதை  :  ஐயோ


அவ்வளவுதான்  கதை..    பிறகு  விளக்கினேன்


(   அவரது  விளக்கம் ,    கதை  எழுத  தேவையான   பஞ்சாங்கம்  குறித்து  மாலன்  பேச்சு ,   கல்கி  குறித்த  சுவாரஸ்யம் ,    கெளதமானந்தர்  சொன்ன   கதை  ,   வித்யா  சுப்ரமண்யம் பகிர்ந்த "அவரது  கணவரின்  மறைவுச்  செய்தி    அடுத்த  பதிவில்)


  
         Tuesday, April 26, 2022

தனிமனித சுதந்திரமும் அரசுகளும்− ஜோகாவிச்

 ஆஸ்திரேலிய ஓப்ப


ன் டென்னிஸ் போட்டியில்  உலக நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்  கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டபோது உலகமே அதிர்ந்தது

    கோவிட் தடுப்பூசி போடாதவர்கள் விளையாட முடியாது என்ற விதியில் இருந்து  யாருக்கும் விலக்கு தர முடியாது என்பது அரசின் முடிவு


 விதிகளை கண்மூடித்தனமான  பின்பற்றாதீர்கள்   ஒரு  வரலாற்று வீரனை இழந்தால் அந்தப் போட்டிக்குதான் இழப்பு என்ற குரலை அரசு கேட்கவில்லை.  பிடிவாதமாக  அவர் விசாவை ரத்து செய்து அவமானப்படுத்தினர்

    கடைசியில் அப்போட்டியில் நடால் வென்று உலக சாதனை புரிந்தார்


மெத்வதேவ் நடால் இறுதிப்போட்டி  அனல் பறந்த ஆட்டம் ,  வரலாற்றில் இடம் பெறும் போட்டி என்பது வேறு விஷயம்  .  ஆனால் அதில் ஜோகோவிச் இல்லாதது நடால் வெற்றியின் ஒளியை சற்றே மங்கச் செய்துவிட்டது

      எனக்கு தடுப்பூசி மீது வெறுப்பு இல்லை.   தடுப்பூசி கூடாது என்ற இயக்கத்தை நான் ஆதரிக்கவும் இல்லை  ஆனால்  மிரட்டலுக்கு அடி பணிந்து தடுப்பூசி நான் விரும்பவில்லை   தனி மனித சுதந்திரமா   பரிசுத்தொகையா எனறால் தனி மனித சுதந்திரமே முக்கியம்.    சாதனைகள் போனால் போகட்டும் என்று சொல்லிவிட்டார் ஜோகோவிச்


இந்த சூழலில் ,  விம்பிள்டன் போட்டியில் விளையாட  தடுப்பூசி கட்டாயம் கிடையாது என  அப்போட்டியின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்

  தலைமை நிர்வாகி சால்லி போல்ட்டன் கூறுகையில்  அனைவரும்  தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது  ஆனால் அது நிபந்நனை அல்ல என்றார்


   இதே போல இத்தாலி ஓப்பன் டென்னிஸ் போட்டியாளர்களும் அறிவித்துள்ளனர்;

  Friday, April 22, 2022

இமையம் எழுதிய எங் கதெ ( நெடுங்கதை ) என் பார்வை

 

 எழுத்தாளர் இமையம் அவர்களின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு பின்னணி கொண்டவை.

விளிம்பு நிலை மக்களுக்காக குரல் கொடுப்பவர் , சமூக அநீதிகளுக்கு எதிராக நிற்பவர் என்பது உண்மை என்றாலும் இந்த அடையாளங்கள் இல்லாமல் பொதுவான மானுடம் , மனித உறவுகள் , அன்றாட வாழ்க்கை போன்றவற்றையும் இவர் எழுத்து பேசும்.

விளிம்பு நிலை  மக்களைக்குறித்த இவர் அக்கறை காரணமாக , இவர் எப்போதும் அவ்ர்களைப்பற்றியே எழுதுபவர் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது.


அப்படி இல்லாமல் தஸ்தயேவ்ஸ்க்கியின் வெண்ணிற இரவுகள் போல அழகான , பித்தேறிய காதல் கதைகளும் படைப்பவர்தான் இமையம்.

 நம் ஊருக்கு சூழலுக்கு தேவையான இவரது பெத்தவன் கதை ஒரு ஐரோப்பியனுக்குப் புரியாமல் போகலாம். ஆனால் இவரது என் கதெ என்ற  நெடுங்கதையை எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் அவர்களால் அதில் விரவியிருக்கும் காதலை , ஆண் பெண் உறவின் மாய கணங்களை புரிந்து கொள்ள இயலும் . 


இது எங் கதெ.பத்து வருசத்துக் கதெ.என் ரத்தம்.என் கண்ணீர்.கதெ ஆரம்பிக்கறப்போ எனக்கு வயசு முப்பத்திமூணு.கதெ முடியறப்போ நாப்பத்திமூணு. இது என்னோடது மட்டுமில்ல. கமலாவோட கதெயும்தான்.


 இதுதான் கதை ,, இதுதான் கதையின் முடிவு என ஆரம்பத்திலேயே சொல்லி விட்டு கதை ஆரம்பிக்கிறது.


கதை முழுக்க முழுக்க வினாயகம் என்பவரின் பார்வையிலேயே சொல்லப்படுகிறது.

ஒருவர் பார்வையில் அதுவும் வட்டார பேச்சு வழக்கில் முழுக்கதையும் சுவாரஸ்யமாக சொல்ல முடியும் என்பதே முதலில் ஒரு பேராச்சர்யம்.


     உலகியல் பார்வையில் போதிய சாமர்த்தியம் இல்லாத , வேலை தேடிக்கொண்டு இருக்கும் இளைஞந்தான் விநாயகம்.  அவ்வ்வூர் பள்ளியில் எழுத்தர் வேலையில் சேரும் கமலா மீது காதல் வயப்படுகிறான். அவள் கணவனை இழந்தவள் , இரு பெண் குழந்தைகள் .  இது தவறு  உனக்கு என ஒரு வாழ்க்கை தேவை     திரும்ணம் செய்து கொள் என பெற்றோர் சொல்வதை இவன் கேட்பதில்லை.


         அவள் பேரழகி என்பதால் ஊரே அவள் கடைக்கண்ணுக்கு காத்திருக்கிறது. ஆனால் அவளோ இவனை ஏற்கிறாள். 

அதற்கு காரணம் காதலா , காமமா , ஒரு பாதுகாப்பா , அல்லது சம்பளமற்ற வேலையாள் தேடுகிறாளோ என்பதெல்லாம் நமக்குத்தெரிவதில்லை .  காரணம் கதையில் அவளது எண்ண ஓட்ட்டங்கள் வருவதற்கு வாய்ப்பில்லை என்பது கதையின் மிகப்பெரிய அழகு. அவளை நியாயப்படுத்தியோ அவளை தரக்குறைவாகவோ சித்ர்கரிக்க வாய்ப்புகளை உருவாக்காமல் , கதை முழுக்க வினாயகம் பார்வையில் அவன் சொல்வதாகவே நகர்கிறது. 

  கமலா கிடைத்தது   தன் பாக்க்கியம்  , அவள் தன்னை ஏமாற்றுகிறாள் , தன்னை பயன்படுத்துகிறாள் , என அவனுக்கு அந்தந்த சூழலில் தோன்றும் எண்ணங்கள்தான் நமக்கு தெரிகின்றன. அவள் எதிர்வினைகள் , செயல்கள் நமக்கு அவன் மூலம் தெரிந்தாலும் , அவள் என்ன நினைத்து செய்கிறாள் என்பது வினாயகம் போலவே நமக்கும் புலப்படுவதில்லை.  


    மேலதிகாரி மிகவும் தொந்தரவு செய்கிறார் , எனவே சும்மா சில கொஞ்சல் குறுஞ்செய்திகள் அனுப்பினாலாவது அமைதியாக விலகி விடுவார் என நினைத்தேன் என மேலதிகாரி விவகாரம் வெடித்ததும் சொல்கிறாள். 


இது உண்மை போலவும் இருக்கிறது , உண்மை என்றால் விநாயகத்திடம் ஏன் மறைத்தாள் என்றும் அவனைப்போலவே நமக்கும்  தோன்றுகிறது ,  அவளுக்கு காசும் காமமும்தான் முக்கியம் என்றால் வினாயகத்தை விட ஆயிரம் பேர் கிடைப்பார்களே , ஏதோ ஒரு காதல் இருக்கிறதோ என்றும் தோன்றுகிற்து ( அவள் ஒரு போதும் காதல் போன்ற எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்துவதில்லை )   தன்னை காதலனின் சகோதரிகள் தேடி வந்து அவமானப்படுத்தியதைக்கூட கேலி கலந்த கிண்டலுடந்தான் சொல்கிறாள் “ இப்படி அப்படி இல்லை   செம திட்டு ஒரே கல்ல்யாண வீட்ல மூணு மைக் செட் கட்டுன மாதிரி இருந்துச்சு “ 

  அவனை சற்றும் பொருட்படுத்தாதவள் , எத்தனை நாள் கோபித்துக்கொண்டு பேசாமல் இருந்தாலும் சட்டை செய்யாதவள் . அப்படிப்பட்டவள் எத்தனை நாள் கழித்து வந்தாலும் அவனை ஏற்கிறாள் .   யாரிடமும் ஏமாறாமல் கச்சிதமாக கணக்குப்போட்டு காரியம் சாதித்துக்கொள்ளும் சாமர்த்தியசாலி  அப்படிப்படவள் , அவனை முழுமையாக நம்புவதும் , தன்னை கொல்ல வந்து இருக்கிறான் என்பது தெரியாமல் , ரத்தம் வருவதற்கு அவன் சொல்லும் லாஜிக் இல்லாத பொய்யை ( அவன் சொன்ன ஒரே பொய் )  நம்புவதும் அவளது வேறு ஒரு முகம் .  ஆனால் ஒரு போதும் அவள் தன் கணவனை மறக்கவில்லை. கணவன் இடத்தை இவனுக்கு தரவும் மாட்டாள் 

   எப்படி பலரால் நாஸ்தென்கா கதாபாத்திரத்தை மறக்க முடியாதோ அது போல இந்த கதையை படித்து முடித்தால் , கமலாவையும் மறக்க முடியாது.


  கவிதைகள் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட நுண்ணுண்ர்வு கொண்ட வினாயகம் கதை சொல்லும்போது நம்மிடம் நீதி கேட்கும் தொனியில் பேசுவதில்லை   ..  தன் மீதும் தவறு இருக்கலாம் என்பதை அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருக்கிறான். 

 


பணம் சம்பாதிக்கிறத்துக்காக எத வேணுமின்னாலும் செய்யுற பைத்தியம் இருக்கு. ஊரு, காடுகாடுன்னு சேக்கிற பைத்தியம் இருக்கு. பொட்டசிவுளுக்கு விதவிதமா நக வேணும். சீல வேணும்.. ...


நான்தான் நாட்ட திருத்தப்பொறன்னு ரயிலுக்கு குண்டு வைக்கிறவன் இருக்கான்... சாமி இருக்குன்னு சொல்ற பைத்தியம் இருக்கு. சாமி இல்லன்னு தீச்சட்டிய ஏந்திகாட்டுற ஆளும் இருக்கு. இப்பிடி ஓலகத்திலெ இருக்கிற ஓவ்வொருத்தனுக்கும் ஓரு பைத்தியம். இந்த மாரி பைத்தியம் புடிக்காதவன் பொணந்தான். ஓலகமே பைத்தியமாத்தான் இருக்கு. எனக்கு கமலா பைத்தியம்.

என்று தன்னிலை விளக்கம் அளிப்பவன் அவன்

கதை முழுக்க வட்டார வழக்குப் பேச்சு ரசிக்க வைக்கிறது 


இந்த விளையாட்டுக்கு நானாத்தான் போனேன் .,  அவ வேண்டாம்னுதான் சொன்னா   இது சாவுற விளையாட்டு ..  இது செகண்ட் சான்ஸ் கிடையாது


மொட்டைப்பாறையில் எம்மாம் மழை பேஞ்சி என்ன அவ காத்து நான் பஞ்சு


வாங்க போங்க  வா போ ஆகி வாடி போடி ஆச்சு..  குருத்து எல பழுத்த எலயா ஆய்டுச்சு


வெறி பிடிச்ச நாயா இருந்தாலும் உனக்குனு ஒரு நாய் இருக்கணும்


தம்பிக்கு தாழ்வாரத்துலதான் படுக்கணும்னு தலையில் எழுதி இருக்குனு அவளுக்குத் தெரியல


நான் கமலாகூட பானையும் மூடியும் போல ஆனதைப்பார்த்து ஊரே சொன்னுச்சு


அவனும் அவளும் கோழியும் கோழிக்கூண்டுமா இருந்தாங்க 


 நான் சொல்ற எதையும் ஏத்துக்காத மாதிரி இதையும் ஏத்துக்கல  விரியன் பாம்புக்கு இருக்கும் விஷத்துக்கு அதுவா பொறுப்பு


இப்ப ரெண்டு பேருக்கும்  இடையே பேச்சு வார்த்தை இல்லை... வார்த்தையாலதான் மனுஷங்க வாழறாங்க . வாழ முடியும்


     ஒரு பெண்ணின் அன்பு கிடைக்காதா ,  ஒரே ஒரு முத்தம் கிடைக்காதா என ஏங்கும் ஆண் , அவள் கிடைத்து விட்டால் அந்த சந்தோஷத்துக்கு நன்றியுடன் இருப்பதில்லை .


  அவள்: வேறு யாருடனும் பேசக்கூடாது  பேசினால் சிரித்தால் ஆசிட் வீச்சு , கத்திக்குத்து என வேறு ஒரு ஆளாக மாறி விடுகிறான்


ஆனால் வினாயகத்தின் மனதில் இருக்கும் காதலும் , அவன் படித்த நூல்களும் அவனை ஒரு காதலன் என்பதை தக்க வைக்கிறன்றன


       எனக்குக் காதல் எனும் அனுபவம் தந்தாய் . ஆண் என உணர வைத்தாய் இதற்கு மேல் என்ன... நீ யார் கூட வேணும்னாலும் இரு... எப்படி வேணும்னாலும் இரு . என நிறைவுடன் வாழ்த்து விட்டு விலகும்போது அமர் காதலர்களில் ஒருவனாக நின்று விடுகிறான்

       இமையம் எழுத்துகளில் மட்டுமல்ல....  தமிழ் நாவல்களில்  ஒரு வித்தியாசமான நாவக்ல் எங் கதெ 
Saturday, April 16, 2022

இடக்கை (எஸ்ரா ) ஒரு பார்வை உலகில்  அறவுணர்வு என  ஒன்று இருக்கிறதா என்பது புதிரான ஒன்று;

ரயிலில் பயணிக்கிறோம்.  ஒரு,நிமிஷம் சூட்கேசை பார்த்துக்கோங்க என யாரோ ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு  டீ,அருந்த செல்கிறோம்.  

99% வாய்ப்புகளில் நமது நம்பிக்கை காப்பாற்றப்படுகிறது. நமது சூட்கேஸ் பத்திரமாக இருக்கிறது;

இதற்கு நேர்மாறானவையும் உண்டு.  நாம் மதிக்கக்கூடிய  உயிரைத்தர சித்தமாக இருக்கக்கூடிய  ஒரு தண்பரிடம் திருமணம் ,  வீடு இடம் பாரத்தல் போன்ற பொறுப்புகளை ஒப்படைக்கிறோம்.  அவர் தனக்கு எது நல்லது என யோசித்து நமக்குப்பொருத்தமில்லா ஒரு முடிவை நம் மேல் சுமத்தி விடுகிறார். 


இந்த  இரண்டையும் நம்மில் பெரும்பான்மையினோர் அனுபவித்து,இருப்போம்


அறவுணர்வு  , நீதி என்பது உலகில்  இருக்கிறதா என்ற கேள்வியை வரலாற்றுப்பின்புலத்தில் அலசுகிறது இடக்கை நாவல்

அது என்ன இடக்கை ?


வலது கை இடது கை என இரண்டுமே நமக்குத் தேவையானவை. இரண்டும் சரியாக செயல்பட்டால்தான் நமது வேலைகளை சரிவரச் செய்ய முடியும்


ஆனால்  இடதுகை விருதுகள் , அவனை எல்லாம் லெஃப்ட் ஹாண்ட்ல டீல் பண்ணனும்  , அல்லக்கை ,  நொட்டாங்கை , இடது கால் முதலில் வச்சுறாதே என ஏன் இடதுகைப்பழக்கத்தினர் இழிவு செய்யப்படுகின்றனர் ?

   பூட்டு சாவி , சவரக்கருவிகள் , கதவு , வாகனங்கள் , டைப்ரைட்டர்கள் என ஏன் எவையுமே இடதுகையினரைப் பொருட்டாக நினைக்காமல் வடிவமைக்கப்பட்டுள்ளன ?


எல்லா தகுதிகளும் கொண்ட இடக்கை எப்படி தேவையின்றி சமூகத்தால் புறக்கணிப்புக்கு உள்ளாகிறதோ அதுபோல பால்ரீதியாக , மதரீதியாக ,  சாதிரீதியாக , வர்க்க ரீதியாக சமூகம் தொடர்ந்து இப்புறக்கணிப்புகளை செய்து கொண்டேதான்  வருகிறது.


நீதியுணர்வு,  இடக்கை புறக்கணிப்பு

என்ற இரண்டையும்  ஒருவித மாயாஜால கவிதை நடையில் பேசும் நாவல்தான் எஸ் ராமகிருஷ்ணனின் இடக்கை


    நீதி கிடைப்பது யாருக்குமே கடினமாகத்தான் இருக்கிறது

 ஒரு தந்தைக்கு இரு மகன்கள். ஒரு,பையன் தந்தை மீது எல்லையற்ற மரியாதையும் அன்பும் கொண்டவன்


இன்னொருவன் தந்தையை,மதிப்பதில்லை  எல்லாவித  அயோக்கித்தனங்களும் செய்கிறான் கடைசியில்  மனம் திருந்தி   தந்தையிடம் வருகிறான்


தந்தை அந்த வருகையை  பிரமாண்டமாக கொண்டாடுகிறார்.   அறுசுவை விருந்துகள்  கலைநிகழ்ச்சிகள் மகனுக்குப் புத்தாடைகள் என அம்ர்க்களம்


நல்ல  மகன் வருத்தமாய்  கேட்கிறான்  "எனக்கு நீங்கள் இப்படி சிறப்புகளை செய்ததே இல்லையே ?


தந்தை  சொன்னார்  


நீ எப்பவும் என்னுடன் இருக்கிறாய் அதில் எனக்கு பெரிய கிக் இல்லை .  வழிதவறிப்போய் திரும்பி  வந்தானே  அதில்தான் கிக் அதிகம்


தந்தை சொல்வது தர்க்கப்பூர்வ யதார்த்தம்தான்  ஆனால் தனக்கு அநீதி நிகழ்ந்ததாக ஒரு மகன் நினைக்கக்கூடும் அல்லவா

ஒரு கற்பனை உதாரணம்.. 

தனது தலைவரின் செல்வாக்கை உணராமல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்காக தொண்டன் தீக்குளிக்கிறான் அவன் குடும்பம் திணறுகிறது


இதற்கிடையில்  தலைமை தவறை உணர்ந்து  தலைவருடன் இணக்கமாகி அவருக்குப் பதவிகள் தருகிறது.  தலைமைக்கு விசுவாசமாக இருப்பதுதான் தன் கடைமை  என்பதை  தலைவர் உணர்கிறார்;;

அத்தலைவருக்கு நீதி கிடைத்தது..  

 தீக்குளித்த தொண்டனுக்கு?

நீதி  , அறம் போன்றவை இன்றி மனித குலம் தழைக்க முடியாது,,  ஆனால் அறம் நீதி போன்றவற்றை  வரையறுத்தல் சிரமம்


  தனது ,கணவன்,தூமகேது சிறைக்கு சென்று விட்டதால் தன் புதல்வர்களுடன்,கஷ்டப்படுகிறாள் அவனது மனைவி நளா.


  நாயைப்பிடித்துக் கொடுத்தால் காசு கிடைக்கும் என்ற வாய்ப்பு கிடைக்கும்போது அந்த காசுக்கு ஆசைப்படாமல்  நாய்க்கு அடைக்கலம் தரும் மனநிலை கொண்டவள் அவள்


அப்படிப்பட்ட அவள் ,  கணவனின் தந்தையை  அநாதரவாக  வீட்டில் விட்டுவிட்டு  குழந்தைகளுடன் ஊரை விட்டு ஓடி விடுகிறாள்.

  காரணம் அங்கு இருந்தால்  ,  அவள் கைதாகி குழந்தைகள் அனாதைகளாகி விடும்.  முதிய மாமனாரை  அழைத்துக்கொண்டு ஓடுவதும் சாத்தியமில்ல

    அந்த சூழலில்  அந்த முதியவரை நிர்க்கதியாக விட்டுச் செல்வதுதான் அவளது,அறமாக இருக்க முடியும்.

      அந்த முதியவருக்கு அநீதி இழைக்கப்படுகிறதே என  யாரிடம் கேட்க முடியும் ?

      வாரிசுரிமைப்,போட்டியில்  மக்கள்,ஆதரவு,மிக்க  தனது சகோதரன் தாராவை  கொன்று  ஆட்சிக்கு வருகிறார்,ஒளரங்கசீப்.   இதுபோல அரசகுடும்ப, அநீதிகளுக்கு அதிக,முக்கியந்துவம் தராமல்  வரலாற்றில் பதிவாக  எளியவர்களுக்கு இழைக்கப்படும் கண்ணீரை  ,  அவர்களுக்கு கிடைக்காத நீதியைப் பற்றி பேசுவதுதான் இடக்கை நாவலின்  சிறப்பு

   இன்னொரு  சுவாரஸ்யம்..    அரச குடும்பம் சாமான்யர்களுக்கு இழைக்கும் அநீதி வழக்கமாக நடப்பது.  ஏதாவது ஒரு அபூர்வ கணத்தில் வரலாற்றைத்திசை திருப்பும் ஒரு சிறிய கருவியாக ஒரு சாமான்யனை  காலம் தேர்ந்தெடுக்கக்கூடும்   அப்படி ஒரு தருணத்தில் ஒரு சாமான்யன் இழைக்கும் அநீதியும் அழகாக பதிவாகியுள்ளது.

    குதிரைகள் ,  யானைகள் ,  படைகள் என பிரமாண்டங்கள் பேசப்படும் அளவுக்கு ஒரு புழு ,  தன்னைக் கடந்து செல்லும் படகைப் பாரக்கும் நீர்ப்பூச்சி போன்றவையும்  மனதில் நிற்கும்படி நாவலில் வருகின்றன


பேரரசர் ஒளரங்கசீப் இறந்ததும்  அவருக்கு மகளாக , தாயாக ,  அடிமையாக ,  உயிலில் இடம்பெறும் அளவு அவர் மனதில் இடம்பெற்றிருந்த அஜ்யா என்ற திருநங்கை  கைது செய்யப்படுகிறாள்.   அரசருக்கு எவ்வித தொடர்பும் இல்லாத தூமகேது எனும் தாழ்த்தப்பட்ட வஞ்சிக்கப்பட பிரிவைச் சேர்ந்த ஒருவன் கைதாகிறான்

        தவறே செய்யாத இவர்களுக்கு இழைக்கப்படும்  அநீதிதான் கதையா என்றால் இல்லை

      சாதீய ரீதியாக  பால் ரீதியாக  இடது கையாக நினைக்கப்படும் இவர்களது கதை மட்டுமல்ல

    பொதுவாக ஆணை வலது கையாகவும் பெண்ணை இடது கையாகவும் நினைககும் சமூகத்தில்  பேரரசரரின் மகள் ஜெப்புன்னிஷா என்ற கவிஞர் மக்பி  , தூமகேதுவின் மனைவி ,  சற்று நேரமே வந்தாலும் ஒளரங்கசீப்பிடம் விளையாட்டாகப்பேசி  அவருக்கு மறக்கமுடியாத ஞானத்தை வழங்கி ,  தனது அழகிய முகம் யானையால் சிதறிக்கப்பட்டு ,  பேரரசரின் கடைசித் தருணங்களில் அவரால் நன்றியுடன் நினைக்கப்படும் தாசிப்பெண் அனார் என பெண்களின் ஆளுமையை  அழுத்தமாகச் சொல்லும் நாவலும்கூட


    தனித்தனி  சிறுகதைகளாக விரிவாக்கம் செய்யக்கூடிய அளவுக்கு செறிவும் அழகும்கூட பல்வேறு பாத்திரங்கள்

      தனது வலது கையை வெறுக்கும் மனிதன் ,  இரட்டைத் தலை அரசன் ,  குள்ளமான தாசிப்பெண் ,  வசீகர ஓவிய ஆற்றல் கொண்டவன் ,  கண் தெரியாத இசைஞன் ,  வெறும் விளையாட்டுக்காக  கொள்ளை அடிக்கும்,அபூர்வ  இன மக்கள் ,  திருட்டை ஒரு அறம்மிக்க தொழிலாக கருதி அதற்குரிய அறத்துடன் அத்தொழிலை நடத்தும் ஆடு திருடன் ,  யார் ஆட்சியிலும் தமது நலனைப்,பேணிக் கொள்ளும் பண்டிதர்கள் ,  ஒளரங்கசீப்பின் கடைசி ஆசையை நிறைவேற்ற முயன்று உயிர்த்தியாகம் செய்யும் திருநங்கை ,  நான் முதலை மாதிரி தண்ணீர்தான் என பலம் என மதுக்கடையில்  ரகளை செய்பவன் ,  தனது பூனைக்கு எலி என பெயரிடம் ஒரு கலைஞன் ,  அந்தப் பூனை,

சமாதிப் பிளந்து வெளிவரும் மனிதக்கை எலும்பு,  விஷமேற்றும் இசை  என பக்கத்துக்குப் பக்கம் வண்ணமயமான  பாத்திரங்கள்


  நீதியை  அழிப்பதே  தமது  வாழ்க்கை எனக் கொண்டவர்கள்  பிஷாடனன் , ரெமியஸ்  ,   பண்டிதர்கள்  , விஸ்வாம்பரன் என்ற சாதி வெறியன் 

  நீதிக்கும்  அநீதிக்கும் இடையே சிக்கி அல்லாடுபவர்கள்  நளா ,  ஒளரங்கசீப் , சம்பு  போன்றோர்

    தமக்கான  அறத்துடன்  உறுதியாக,வாழ்ந்து மறைவோர் அஜ்வா , அனார் ,  பகுத்தறிவு பேசும் ஸச்சல் , சாகும் தருணத்திலும்  இளவரசனுக்கான பெட்டியை  சம்புவிடம் ஒப்படைக்கும் மர்ம நபர் .   அஜ்யாவின்  

விருப்பத்திற்கிணங்க பேரரசரின் தொப்பியை உரியவரிடம் அளிக்கும் முயற்சியில் உயிர் துறக்கும் அனுராதா, ஒடுக்கப்பட்டோருக்கு குரல் தரும் சக்ரதார்  போன்றோர்


இந்த  அறக்குழப்பங்கள் ஏதுமின்றி வாழ்ந்து மறையும்  எளிமையாக உடற்பசி , வயிற்றுப்பசி என வாழ்ந்து மறையும் மஞ்சா ,  காயத்ரி போன்றோர்


நம்மில் பெரும்பாலானோர் இவ்வகையில் ஒன்றாகத்தான் இருப்போம்


இவற்றைக் கடந்த ஒரு  பாத்திரமாக  இருப்பவன்தான் தூமகேது

     இவனும் அறக்குழப்பங்கள் அற்ற  அன்றாட தேவைக்கேற்ப வாழும் மனிதனாக இருந்தவன்தான். 

கதைகள்  அல்லது எழுத்து இவனுக்கு புதிதாக ஒரு வாழ்க்கை கொடுத்து மீட்சி அளிக்கிறது  என்பது இந்நாவலில் என்னை மிகவும் பாதித்த ஒன்று

     பேரரசரின்  தொப்பி  கடைசியில் இவனைத்தான்  வந்தடைகிறது   left hand has the last laugh


    தூமகேது  ,  வசீகர ஓவியன் நியோகி,  அபூர்வ சக்தி கொண்ட சிகிரி இன மக்கள்  ஆகியோர் இடது கையாளர்கள் என்பது  நல்லதொரு குறியீடு.

வற்புறுத்தலுக்காக இடது வகை ,   வலிமைக்காக இடது கை ,   தந்திரமான இடது கை என இடக்கைகளுக்குள் சுவையான சில பிரிவுகள்பல  இடங்கள்  ஹைக்கூ படிப்பதுபோல இருக்கிறது

ஹைக்கூ கவிதைகளின்  கடைசி வரி ட்விஸ்ட்டை  கீழக்கண்ட  பத்தியில்  பாருங்கள்.  

     

     

     1 இன்னும்,சில நாட்கள் உயிர் வாழ அனுமதிக்கப்பட்டிருக்கோம். 


  2 எல்லாம் அல்லாவின் கருணை  என மனதுக்குள் நன்றி கூறிக்கொண்டாள். 

  கடைசி  வரி 

  3  உடலில் இருந்து ரத்தம் கொண்டிருந்தது


அதாவது  ,   ஒரு பணக்கார கிழவர்  உலக இன்பங்களை துய்க்க மேலும் ஆயுள் கிடைத்திருக்கிறது என  நன்றி  செலுத்துவது  வேறு

   சித்திரவதைக்கு உள்ளாகி  ரத்தம் சிந்தும்போதும் ,  கடவுளுக்கு வாழ்க்கைக்கு நன்றி செலுத்துகிறாள் என்பதுதான்  அவள் கேரக்டரை உயர்த்துகிறது

         நன்றி சகோதரர்களே என நிறைவுடன் தூக்குத்தண்டனை பணியாளர்களிடம் சொல்லி விட்டு விடைபெறும் அவளது மனநிறைவு  பெரிய மன்னர்களுக்கும் கிடைப்பதில்லை

     தூக்கில் தொங்கப்போகும் கடைசி தருணத்தில் அவளுக்கு  எதிர்பாரா அதிர்ஷ்டம்

     சாவதற்கு முன் ஒரு  நட்சத்திரம்தானே பார்க்க விரும்பினோம்   மூன்று  பார்க்க கிடைத்திருக்கிறதே  என்பதில் அவளுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி

   இம்ரானாக இருந்த  அவனை  அஜ்வா என மாற்றிய தர்ஷன் பாத்திரத்தின்  கேரக்டர் curve ம் குறிப்பிடத்தக்க ஒன்று

       பெண்ணடிமைத்தனம் என்பதில் முக்கியப்பங்கு வகிப்பது  குழந்தை பிறப்பு.     குழந்தைகளுக்காக  பிடிக்காத  கணவனுடன்  அனுசரித்துச் செல்லும் பெண்கள் ,   திருமணததுக்கு முன் கர்ப்பம் அவமானம் என்ற  சூழலில்  தற்கொலைகள் , கருக்கலைப்பு சார்ந்த மரணங்கள் .   வேறு வழியின்றி பிடிக்காதவனை மணப்பது என  இது சார்ந்த பிரச்சனைகள் ஏராளம் .குழந்தைகளுக்காக  வாழ்வதை புனிதமாக்கி ,தாய்மை  என்ற பிம்பச்சிறையில்  மறைந்துபோன  எத்தனையோ மேரி க்யூரிக்கள் , அயன் ராண்டுகள் ,  இந்திரா காந்திகள் உண்டு


கர்ப்ப பை தான்  உன்னை  அடிமையாக்குகிறது என்றால்,அதை  அகற்றி எறி என பெரியார்முழங்கியது இதனால்தான்

குழந்தைகள்  தனி  உடைமைகள்  அல்லர் . அவர்களை  ஊர்தான்  வளர்க்க  வேண்டும்  தனி குடும்பம் என்ற  கர்ப்பிதமே  அர்த்தமற்றது என்ற  சூழல் வந்தால் உலகமே  இனிய உலகமாகி விடும்.   சொத்துச்சண்டைகள்  ,   சாதி மத,பேதங்கள்  என எதுவும் இராது.  விவாகரத்துகள் , கள்ளக்காதல்கள் , ஆணவக்கொலைகள்  போன்ற  சொல்லாடல்களே அர்த்தமிழக்கும் என்றொரு  பார்வை உண்டு 

இது சார்ந்து  ஒரு அற்புதமான  அத்தியாயம்  நாவலில் வருகிறது


ஆணாதிக்கம் குறித்த ஒரு சிறிய கதை வருகிறது

மண்ணால் ஆன ஒரு பெண்ணை ஒருவன் தவறுதலாக மணந்து விடுகிறான்.  ஆனாலும் பெருந்தன்மையாக அவளை  ஏற்கிறான். அவன் மனம் எப்படி திரிபடைகிறது.  அதனால்,அவள் எப்படி அழிகிறாள்" அவளை  அழித்து ரசிப்பதில் கிடைக்கும் போதை  ,   முழுதும் அழித்தபின் அடையும் சோகம் என ஒருகதை   இப்படி  ஆழமான குறியீட்டு ரீதியான  ஏராளமான சிறுசிறு பகுதிகள் வாசிப்பை சுவாரஸ்யமாக்குகின்றன

மனிதனின் அறவுணர்வு குறித்து எஸ்ராவின் சிறுகதை ஒன்றில் படித்திருப்போம்


பசிக்கொடுமை  வேறு வழியில்லாமல் கிழவி  தபால் செலவுக்கு கொடுத்த காசை வைத்து இருவர் சாப்பிடுகிறார்கள். அவளது பார்சலை கிழித்தெறிகிறார்கள்

அப்போது அவளது கடிதம் கண்ணில் படுகிறது.   தன்னைப்போல  கஷ்டப்படும்,ஒரு,சிநேகிதிக்கு  கிழவி கஷ்டப்பட்டு அனுப்பும் சில பரிசுகளும் ஐநூறு ரூபாய் நோட்டும் இருக்கிறது. அவளது சூழல் புரிந்ததும்தான்  அவளுக்கு தாங்கள் செய்த துரோகம் புரிகிறது    அந்த  500ரூபாயை அவர்களால் எடுத்துச்செல்ல முடியவில்லை

    இந்த இயல்பான அறவுணர்வு  சில  நேரங்களில் மறைந்து விடுவதுதான் விநோதம்    அதீதமான வறுமை  ,  அதீதமான  அதீகாரம் என அதுவும் இந்த அறப்பிழைக்கு காரணமாக  இருக்கலாம்;

      தன்னிடம் அன்பு  காட்டிய  ஒருவருக்கு செலுத்த வேண்டிய நன்றி  மன்னருக்கு தனது  ஆட்சிக்காலங்களில் நினைவில் இல்லை    மரணமடையும்போது  நினைவு வந்து  ஒரு  பரிசை அளிக்கச்சொல்லி உயில் எழுதி தன் உதவியாளரான அஜ்வாவிடம் பொறுப்பை  ஒப்படைக்கிறார்   கடும் சித்திரவதைகளுக்கு மத்தியிலும் இப்பொறுப்பில் இருந்து அவள் விலகவில்லை.   அவளிடம் இருந்து இப்பொறுப்பை, ஏற்ற அனுராதா என்ற திருநங்கையும்  இந்த பணியில்  உயிரத்தியாகம் செய்கிறாள்


இன்னொரு  புறம்

தன் கழுத்தில் கத்தி பாய்ந்து உயிர்பிரியவிருக்கும் கடைசி தருணத்திலும், இளவரசருக்கு சொல்ல வேண்டிய செய்தியை  சொல்லிவிட வேண்டும் என்ற  பொறுப்பில் வழுவாதிருக்கிறரர்  ஒருவர்


இவரிடம் இருந்து  அப்பொறுப்பை ஏற்கும் சம்பு அப்பொறுப்பை நிறைவேற்றவில்லை என்பதுதான் வாழ்வியல் வினோதம்  சம்பு  பொதுவாக அறப்பிழைகள் செய்பவனல்லன்.   தனது"கைகளில் இருப்பது இந்தியாவின் வரலாற்றையே  மாற்றக்கூடியது   அடுத்த மன்னனை  நிர்ணயம்  செய்யக்கூடியது  என  தெரிந்தாலும்  தற்காலிக பலனுக்காக  தன்னை  நம்பியவருக்கு துரோகம் செய்கிறான்.

   தனது பொறுப்புக்கு உண்மையாக இரு்ந்த  அஜ்யா மனநிறைவுடன் உயிர் துறக்கிறாள்.     துரோகம் செய்த சம்புவை  மரணம்வரை  அந்த  துரோகம் துரத்துகிறது.


இது  போல நாவலில்  கவனித்து  ரசிக்க வேண்டிய பகுதிகள் ஏராளம்

கண்டிப்பாக  படிக்க  வேண்டிய  நாவல்


தேசாந்திரி  பதிப்பகம்

    

  ரசித்த  சில வரிகள்


 பகல் மனிதர்களை பிரித்து வைக்கிறது. இரவு ஒன்று சேர்க்கிறது. உறக்கம் என்பது  இரவு புகட்டும் பால்.தாய் பால்புகட்டுவதுபோல இரவு உறக்கத்தை மனிதர்களுக்குப் புகட்டுகிறது

  


நல்லதை எடுத்துக்காட்ட ஒரு மனிதனை ஞானியாக்கும் கடவுள் ,  தீமையை அடையாளம் காட்ட தன்னை பாவையாக்கி கொண்டாரா 
Monday, April 4, 2022

திருவள்ளூர்புத்தக கண்காட்சி. சீறிய ஆட்சியர் நேரடி ரிப்போர்ட்

  கன்னியாகுமரி மாவட்டம் ஒரு சிறிய மாவட்டம்.  ஆனாலும்  சுரா , ஜெமோ என ஏராளமான இலக்கியவாதிகள் , அரசியல்வாதிகள் என அங்கிருந்து வந்து ஊர்ப்பெருமையைப் பேசுவதால் , கிஅனைவருக்குமே அம்மாவட்டம் குறித்த ஓர் அறிமுகம் உண்டு.
இப்படி எல்லா மாவட்டங்களையுமே சொல்லலாம் . பாரதிராஜா , இளையராஜா , வைரமுத்து , கவுண்டமணி , சத்யராஜ் , சாரு நிவேதிதா , எஸ் ரா , கோணங்கி என அனைவருமே அவரவர் மாவட்டங்களுக்கு புகழ் சேர்க்கின்றனர்

ஆனால் திருவள்ளூர் மாவட்டம் போன்ற புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் தமது அடையாளத்தை இப்போதுதான் உருவாக்கி வருகின்றன

அந்த வகையில் முதல் புத்தக கண்காட்சி அங்கு இவ்வாண்டு முதல் நடக்கவிருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று

    நான் சென்றிருந்தபோது நல்ல கூட்டம்
பொதுமக்கள் மட்டுமன்றி ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள் வந்திருந்தனர்

இத்தனை நூல்களை ஒருசேர பார்ப்பது அவர்கள் மனதில் நல்விளைவுகளை உருவாக்கி இருக்கும்

       ஆட்சியர் அலுவலகம் , RTO , தலைமை காவல் அலுவலகம் என முக்கியமான இடங்கள் அமைந்திருக்கும் பிசி ஏரியா என்றாலும் சென்னை நெரிசலைப் பார்த்த நமக்கு இந்த இடம் அமைதியான சூழலில் இருப்பதுபோல தோன்றுகிறது 
வரும் ஆண்டுகளில் சென்னைவாசிகளும் இதை தேடி வருவர், சென்னை புத்தக கண்காட்சியின் இரண்டாவது பாகம்போல அமையக்கூடும்

திருவள்ளூர் சுற்றுப்புறவாசிகளுக்கும் இது அரிய நிகழ்வு.

புத்தகக்கண்காட்சிக்கேற்ற சிறந்த இடம் திருவள்ளூர்

நான் சென்றிருந்தபோது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அல்பி ஜான் வர்கீஸ் அங்கு வந்திருந்தார்

ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக கண்காட்சி நடத்தப்படும் என்ற முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்குப்பின் முதல் மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டம் புத்தக கண்காட்சி நடத்துவதன் பரவசம் அவர் முகத்தில் தெரிந்தது.
பொறுமையாக ஒவ்வொரு ஸ்டாலையும் நின்று நிதானமாக பார்வையிட்டார்

என்ன நூல்கள் உங்களது தனிச்சிறப்பு ?
எதை வாசகர்கள் விரும்பி வாங்குகிறார்கள்  ..   எந்த எழுத்தாளர் விரும்பப்படுகிறார்   உங்களது அதிக பட்ச விலை புத்தகம் எது ?   எங்கே அதை எடுங்க பார்ப்போம் ? என வெகு தீவிரமாக ஒரு ( அந்தக்கால)   பத்திரிக்கையாளரின் முனைப்போடு பேட்டி எடுத்தார்

வண்ண புகைப்படங்கள்  கெட்டி அட்டை  ஆழ்ந்த கட்டுரைகள் என்பதால் இவ்விலையா? என்றார்

சார்  இதன் அசல் விலை 4000 .  நமது கண்காட்சிக்காக சிறப்பு விலையாக 1000 என விளக்கியதும் திருப்தியுடன் தலை அசைத்தார்

இலக்கியம் சார்ந்து இயங்குவதால் காலச்சுவடு ஸ்டாலில் சற்று அதிக நேரம் உரையாடினார்.  

இலக்கிய நூல்களை எல்லாம் மக்கள் வாங்குகிறார்களா என நம்பாமல் கேட்டார்  .  சார் , இப்போதெல்லாம் இலக்கிய நூல்கள்தான் அதிகம் விற்கின்றன என பதில் கிடைத்ததும் அவருக்கு மகிழ்ச்சி.

இது போன்ற தரமான ஸ்டால்களை அடுத்தமுறை அதிகரிக்க வேண்டும் என உதவியாளர்களிடம் பேசினார்
 
ஒரு காமெடி.   ஒரு  முக்கியமான பதிப்பகம் எந்த பரபரப்பையும் காட்டாமல் , அறிவிப்பு பதாகைகள்கூட இல்லாமல் சொற்ப புத்தகங்களுடன் தூங்கி வழிந்து கொண்டிருந்தது
என்ன இது என சற்று கோபமாக கேட்டார்.  புக்ஸ் , போஸ்டர்லாம் ரெடி சார். அரேஞ்ச் செய்ய நேரம் கூடி வரல என்பதுபோல சமாளித்தார் ஸ்டால்காரர்

இடம் கிடைக்காமல் பலர் முறையிடுகிறார்கள்   நீங்கள் கிடைத்த இடத்தை வீணடிக்கிறீர்களே என டோஸ் விட்டார்

ஆனால் மற்ற ஸ்டால்காரர்கள் தமது புத்தகங்களைக்காட்டி ,  அவற்றை விளக்கி அவரை கூல் செய்தனர்

பலருடன் போட்டோ எடுத்துக்கொள்ள முகம் சுளிக்காமல் சம்மதித்தார்

பாதுகாவலர்கள் இருந்தாலும் பொதுமக்கள்  வாசகர்கள் அவரை அணுக எவ்வித
கெடுபிடிகளும் இல்லை

பள்ளி மாணவர்களுடன் கலகலப்பாகளக உரையாடினார்.    பல மாணவர்கள் அவரிடம் ஆசையாக ஆட்டோகிராப் வாங்கினர்

ஆட்சியாளர்களும் நிர்வாகமும் நினைத்தால்  நல்ல மாற்றங்களை கொணர முடியும் என்பதற்கு திருவள்ளூர் புத்தக கண்காட்சி உதாரணம்

அதன்பின்  மாவட்ட தலைமை நூலகம் சென்று விட்டு பிறகு நூல்களுடன் கிளம்பினேன்


    


 

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா