Wednesday, April 10, 2013

மார்க்கேஸ் எழுதிய மறக்க முடியாத நாவல்- திரில்லர் வடிவில் ஓர் உன்னத படைப்பு


 எனக்கு தெரிந்த ஓர் இளம் பெண்.  வாழ்வியல் வெற்றிக்கு தேவையான அனைத்து அம்சங்களும் கொண்டவள். வெற்றிகளால் தலைக்கனம் ஏறாமல் பார்த்து கொண்டவள். அழகு , அமைதி, புத்திசாலித்தனம் என எல்லாம் அவளிடம் கச்சிதமாக பொருந்தி இருந்தன.

அவளுக்கு பொருத்தமான பெண் பார்க்கும் பொறுப்பை அவள் உறவினர் ஒருவர் ஏற்று கொண்டார். ஏற்றார் என்பதை விட பறித்து கொண்டார் என்றே சொல்ல வேண்டும். வேறு யாரும் தலையிடாமல் பார்த்து கொண்டார். தானே அலைந்து திரிந்து ஒரு பெண்ணை பிடித்து மணம் செய்து வைத்தார்.

சீரும் சிறப்புமாக திருமணம் நடந்தது. ஆனால் கொஞ்ச நாளிலேயே பிரச்சினைகள் தொடங்கின. தன் பொறுப்பு முடிந்தது என அந்த உறவினர் கழண்டு கொண்டார்.

இப்படி ஓர் இணையை அவர் ஏன் சேர்த்து வைத்தார் என யாருக்கும் புரியவில்லை. அந்த திருமணத்தில் அவர் உட்பட யாருக்குமே திருப்தி இல்லை என பிற்பாடு தெரியவந்தது. இதை முடித்து வைப்பதால் அவருக்கு மறைமுக லாபமும் இல்லை. பிறகு ஏன் அவர் இதில் தீவிரமாக இருந்தார்,சரி , அவர்தான் செய்தார், மற்றவர்கள் ஏன் தடுக்கவில்லை?

அந்த பெண் வாழ்வை அழித்த பின் , பலர் பரிதாப்பட்டார்கள். ஆலோசனை சொன்னார்கள்..ஆனால் அவள் கஷ்டங்களுக்கு அவர்களும் ஒரு விதத்தில் காரணம் என அவர்களுக்கு புரியவே இல்லை.. ஒரு வேளை அது புரிந்ததால்தான் , குற்ற உணர்ச்சிகளை வேறு விதத்தில் காட்டுகிறார்களோ என்னவோ..

அந்த பெண்ணின் பெற்றோர்கள் தம் பொறுப்பை சரியாக செய்யவில்லை. அந்த குற்ற உணர்ச்சியை எப்படி சமாளிக்கிறார்கள். இப்போது அந்த பெண் முன்பு போல அழகாக உடுத்துவதில்லை.  சிரிப்பதில்லை. இதை நினைத்து நாள் தோறும் வருந்துகிறார்கள். இதனால் அந்த பெண்ணுக்கு பலன் ஏதும் இல்லை. ஆனாலும் இப்படி செய்வதில் அவர்களுக்கு ஓர் ஆறுதல் ( !! )


தெரிந்தே ஒரு பெண்ணின் வாழ்வை நாசமாக்கி விட்டு, பிறகு இன்னொரு வேடம் காட்டும் மனித மனதின் தந்திரத்தை என்னவென்று சொல்வது.

இது போன்ற ஓர் உணர்ச்சிதான் ,  chronicle of a death foretold  நாவல் படித்த போது ஏற்பட்டது.

காப்ரியேல் கார்சியா மார்கெஸ் எழுதிய முக்கியமான நாவல் இது. மிகவும் சிறிய நாவல். ஆனால் இது ஏற்படுத்தும் அதிர்வலைகள் பலமானது.

முதல் வரியிலேயே கதை , கதை சொல்லும் பாணி , கதை மாந்தர்கள் என அறிமுகப்படுத்தும் பாணி அசர வைக்கிறது.

அந்த முதல் வரி இதுதான்.

அவன் கொல்லப்பட இருக்கும் அந்த நாளில் , பிஷப் வருகை தரும் படகுக்காக காத்திருக்கும் பொருட்டு, காலை 5.30க்கு சந்தியாகு  நாசர் எழுந்தான்.


 நாசர் பற்றிய கதை , அவனை கொல்ல திட்டம் இருக்கிறார்கள், பிஷப் வர இருக்கிறார் என பல தகவல்கள் முதல் வரியிலேயே சொல்லப்படுகிறது.  நம் மன நிலை ஒரு குறிப்பிட்ட கதைப்போக்கிற்காக தயாராகிறது.

  அவன் எழுகிறான் என ஆரம்பிப்பதால் இனி அவன் கொல்லப்படக்கூடும் , அல்லது கொலையில் இருந்து தப்பிக்க கூடும் என நினைப்போம்.

ஆனால் இது அப்படிப்பட்ட லீனியர் கதை அல்ல.. நான் லீனியர் யுக்தி அற்புதமாக பயன்படுத்தப்பட்டுள்ள கதை.. இந்த கதை நிகழ்வது அல்ல. ஒரு காதாபாத்திரம் சொல்வது மூலம் , அந்த கதாபாத்திரத்துடன் மற்றவர்கள் பேசுவது மூலம் நம் மனக்கண் முன் விரியும் கதை.

அதாவது எல்லாமே ஏற்கனவே நிகழ்ந்த ஒன்று. ஆனால் கதைப்போக்கு நான் லீனியராக உள்ளதால் , எது நிகழந்தது என்பதன் முக்கியத்துவம் அடிபட்டு போய் , மற்ற விஷ்யங்கள் மீது கவனம் செலுத்த முடிகிறது.

பயார்டோ சான் ரோமன் என்பவன் பணக்காரன். தனக்காக பெண் தேடுகிறான், கடைச்யில் ஏஞ்சலோ விகாரியோ என்ற பெண்ணை மணம் முடிக்க தீர்மானிக்கிறான்.
அவளுக்கு இவன் மீது ஆர்வம் இல்லை..ஆனால் அவளை திருமணம் செய்து முடித்து அனுப்பினால்தான் தம் கடமை முடியும் என நினைக்கும் குடும்ப அமைப்பால் அவளுக்கு வேறு வழி இல்லாமல் போகிறது . பெண் என்பவள் திருமணம் செய்து கொள்வதற்காகவே பிறந்தவள்.அதன் பொருட்டே காலம் முழுக்க தயாராகிக்கொண்டு இருப்பவ:ள் என்ற சூழல்.

திருமணம் முடிகிறது. திருமணத்துக்கு முன்பே அவள் கன்னித்தன்மையை இழந்தவள் என அவனுக்கு தெரிய வருகிறது. ஓர் ஆண் செய்தால் அது சாகசம். பெண் செய்தால் பாதகம் என்ற அடிப்படையில் அவளை அவளது தாய் வீட்டுக்கு அனுப்புகிறான்.

குடும்ப மானம் போய் விட்டது..அவளை இந்த கதிக்கு ஆளாக்கியவன் யார் என அவள் குடும்பத்தினர் விசாரிக்கின்றனர். சந்தியாகு நாசர் என்பவனை அவள் அடையாளம் காட்ட, அவள் சகோதரர்கள் அவனை கொன்று குடும்ப மானத்தை மீட்க முடிவு செய்கின்றனர்.

இதுதான் கதை.

ஆனால் இதுதான் கதை என சொல்ல முடியாது :)

இது யதார்த்த வாத கதை அன்று. சொல்லப்படுவது கதை அல்ல..சொல்லப்பட்டதை வைத்து சொல்லப்படாமல் விடுப்பட்டதை தேடி கண்டெடுப்பதே கதை./

உதாரணமாக அந்த சகோதரர்கள் தாங்கள் கொலை செய்யப்போவதை அனைவரிடம் , என்னவோ விருந்துக்கு போவது போல , அலட்சியமாக சொல்கிறார்கள். மற்றவர்கள் அதை அவ்வளவாக பொருட்படுத்துவதில்லை. சிலர் பொருட்படுத்தாது போல காட்டிக்கொண்டு, ஒரு பரபரப்பான கொலையை பார்க்க ஆவலாக இருக்கிறார்கள். சிலர் அவன் செத்தால் நல்லதுதான் என முன் விரோத அடிப்படையில் மகிழ்கிறார்கள்.

அவன் எப்படியும் சாகத்தான் போகிறான். நாம் என்ன சொல்லி , என்ன ஆகப்போகிறது என சிலர் நினைக்கிறார்கள்.

உண்மை உலகில் இவ்வளவு வெளிப்படையாக நடக்காது. எனவேதான் இதை யதார்த்தவாத கதையாக கருத முடியாது. ஆனால் இது போன்ற விஷ்யங்கள் வேறு வகைகளில் நடக்கும், நடந்து வருவது கண்கூடாக பார்க்கலாம். நான் ஆரம்பத்தில் சொன்ன விஷயம் ஓர் உதாரணம்.

சந்தியாகு நாசருக்கு ஒரு பெண்ணுடன் நிச்சயம் ஆகிறது. இவனை கொல்லப்போகிறார்கள் என்பதில் அவளுக்கு அவ்வளவு பெரிய பதட்டம் இல்லை. குடும்ப கவுரவத்தை காக்க, ஏஞ்சலோவை இவனுக்கு மணம் செய்து வைத்து விடுவார்களோ என்பதே இவள் ப்தட்டம்.

இப்படி பல்வேறு சுவாரஸ்யமான பார்வைகள்.

அவர்கள் ஒரு வேகத்தில் கொலை செய்வதாக சொல்லிவிட்டார்களே தவிர, அவர்களுக்கு கொலை செய்ய பெரிய ஆர்வம் இல்லை.  ஆனால் ஊர் மக்கள் ஆவலாக காத்து இருப்பதால் அவர்களுக்கு வேறு வழி இல்லாமல் போகிறது.

அந்த சகோதரர்களில் ஒருவனை ஒரு பெண் பிற்பாடு மணம் செய்து கொள்கிறாள். அந்த கொலைதான் அவனை மண முடிக்க ஆசை ஏற்படுத்தியதாக அவள் சொல்கிறாள்.

ஆக, உண்மையான கொலையாளி என யாரை சொல்வது என்பதே நமக்கு புரியாமல் போகிறது.


அந்த பிஷப் வருகை முக்கியமாக குறியீடு. அவர் வருகைக்காக ஊரே பரபரப்படைகிறது.  அவர் வந்து பெரிதாக எதையும் செய்யபோவதில்லை. அவர் இன்னது செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் பெரிதாக இவர்களிடம் இல்லை. ஆனாலும் ஒரு பரபரப்பு. அவர் வந்து , சும்மா கை அசைத்து விட்டு செல்கிறார்.

வெறும் அர்த்தமற்ற ஒரு சடங்கு.அவ்வளவுதான்.

காதலும் கூட அர்த்தமற்ற சடங்காக கூடும்.

கணவனால் அனுப்பப்பட்ட ஏஞ்சலோ பதினேழு வருடங்கள் , கணவனுக்கு பல்வேறு கடிதங்கள் அனுப்புகிறாள். அவன் பதில் ஏதும் போடவில்லை. ஆனாலும் விடாப்பிடியாக அனுப்பிகிறாள்.

கடைசியில் ஒரு நாள் அவன் வருகிறான், அந்த கடிதங்கள் எதையும் அவன் படிக்கவே இல்லை என கடையில் தெரிகிறது.

கடிதம் எழுதுவது . பிஷப்புக்காக காத்து இருந்தது போன்ற வெறும் சடங்குதான், அதில் அன்போ, உணர்ச்சியோ இல்லை/

அதே போல குடும்ப கவுரவம் என்பதும் , அதற்காக கொலை என்பதும் சும்மா ஓர் உணர்ச்சி அற்ற சடங்கு மட்டுமே.  ஊருக்காக கொலை செய்கிறார்களே தவிர , அதில் அவர்களுக்கு ஏதும் ஆத்ம திருப்தி இல்லை.


கொலையின் விளைவுகள், மற்றவர்கள் எதிர் வினைகள் என எல்லாமும் அலசப்பட்டு கடைசியில்தான் கொலை வருகிறது.

அதிலேயே ஆழ்ந்த பொருள் இருப்பதாக கருதுகிறேன்.

எல்லாமே அர்த்தமற்ற சடங்குகள் ஆகி விட்டால், வாழ்க்கை என்பது உயிர் அற்று போய் விடும்.

ஏராளமான கேரக்டர்கள் ,  அர்த்தமுள்ள ஆழ்ந்த உரையாடல்க்ள் என ஒரு த்ரில்லர் வடிவில் ஒரு அற்புதமான படைப்பு இது

படித்து பாருங்கள்.

வெளியீடு : penguin books

விலை : ரூ 150

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா