Friday, May 10, 2013

கொலை செய்வது எப்படி- உலகை கலக்கிய வேற்று மொழி திரைப்படம்


     மரண தண்டனை சரியா தவறா என்பது ஒரு எவர் க்ரீன் சப்ஜெக்ட், மரண தண்டனை தேவை இல்லாத ஒரு லட்சிய சமூகம் அமையும் வரை அந்த தண்டனை வேண்டும் என்கிறார்கள் சிலர், வேண்டவே வேண்டாம் என்கிறார்கள் சிலர்.

இது சிக்கலான பிரச்சினை. நமக்கு சம்பந்தம் இல்லாத போது என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு , தூக்கு மேடைக்கு செல்பவர் நம் நண்பராக இருந்தால் , கண்டிப்பாக நம் பார்வை மாறி விடும், அதே போல , கொடூரமாக கொல்லப்பட்டவர் நமக்கு வெண்டியவராக இருந்தால் , நம்மால் மனிதாபிமானம் பேச இயலாது.

  இந்த பிரச்சினை மீது ஒரு விவாதம் உருவாகி , மரண தண்டனையை ஒழிக்க ஒரு சினிமா காரணமாக இருந்து இருக்கிறது என்பது பலருக்கு தெரியாது.

a short film about killing  என்ற படத்தை பற்றிதான் சொல்கிறேன். 1988ஆம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படம் இது. பிரபல இயக்குனர் கிரிஸ்டோவ்  கியஸ்லோவ்ஸ்கி எடுத்த முக்கியமான படங்களில் ஒன்று.

வெவ்வேறு பின்னணி கொண்ட மூவரின் வாழ்க்கை சம்பவங்க்ளே படம். வசனங்கள் அதிகம் இல்லை. காட்சிகள் மூலமே படம் நகர்கிறது. படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணம் , ஒளிப்பதிவு கனவு போன்ற ஒரு நிலையை உருவாக்குகிறது.


எந்த இலக்கும் இல்லாத ஓர் இளைஞன், வாழ்க்கையில் ஏதோ ஒரு வெறுப்பு, பிடிப்பின்மை. உணவகத்தில் காஃபியில் எச்சில் துப்புகிறான், பாலத்தில் இருந்து யாருக்கும் தெரியாமல் கல் எறிந்து வாகனத்தை சேதப்படுத்துகிறான்.

இதை எல்லாம்தான் வாழ்க்கை என நினைத்து கொள்கிறான். தான் ஜாலியாக இருப்பதாக நினைத்து கொள்கிறான்.

     இதனால் எல்லாம் அந்த வாகனத்தின் மீதோ , உணவகத்தின் மீதோ கோபம் என்று இல்லை. மற்றவர்களின் வேதனை இவனுக்கு புரியவில்லை. அவ்வளவுதான்.

     இதன் ஒரு பகுதியாக ஒரு டாக்சி டிரைவரை எந்த காரணமும் இன்றி கொடூரமாக கொல்கிறான்.  அவர் பாவம், எந்த வம்பு தும்புக்கும் போகாதவர். நாய்க்கு அன்பு காட்டி தன் உணவை பகிர்ந்து கொள்பவர்.

அவன் ஜாலியாக கொன்று விட்டான். அவர் பாவம் இல்லையா..அவர் குடும்பம் பாவம் இல்லையா என அவருக்காக வருந்துவோம்.

இப்போது படத்தின் முதல் காட்சியை நினைவு படுத்த விரும்புகிறேன்.

பட ஆரம்ப காட்சியில் இறந்து போன ஒரு எலி சாக்கடையில் மிதந்து கொண்டு இருக்கும், ஒரு பூனை எலியை கொல்வதை பார்த்தால் ,பாவமாக இருக்குமே ,அது போல பாவமாக இருக்கும்.

ஆனால் அடுத்த காட்சி இதை விட பயங்கரம்.

ஒரு பூனை தூக்கில் தொங்கி கொண்டு இருக்கும்.

பூனை எலியை கொல்வதையாவது இயற்கை என மன சமாதானம் அடையலாம்.. ஆனால் பூனையை மனிதன் கொன்று தூக்கில் தொங்க விடுவது?

அதுபோல டாக்சி டிரைவரை கொன்றது கொடூரம்தான்... ஆனால் அதை விட கொடூரமாக அரசு நடக்கிறது என சித்திரிக்கின்றன அடுத்து வரும் காட்சிகள்.

அந்த இளைஞன் கைது செய்யப்படுகிறான். மரண தண்டனை தீர்ப்பாகிறது.

தூக்கு மேடையை தயார் செய்தல் , தூக்கு கயிற்றை சோதித்தல், தூக்கில் தொங்கும்போது வெளியேறும் மனித கழிவை சேகரிக்க பாத்திரம் வைத்தல், என ஓர் அரசு ஒரு கொலையை திட்டமிட்டு செய்கிறது.

அவனுக்கு ஏற்படும் மன அழுத்தம், பயம் , தாய் மீது கொண்ட அக்கறை , தங்கை இறந்ததால் ஏற்பட்ட துக்கம்தான் இந்த நிலைக்கு காரணம் என்ற உண்மை என எதையும் பொருட்படுத்தாமல் அரசு இயந்திரம் அவனை கொல்கிறது.

குற்றவாளியை கொலை செய்வதால் , குற்றங்கள் குறைய போவதில்லை என்ற எண்ணம் கொண்ட இளம் வழக்கறிஞர் இவனுக்காக வாதிட்டு தோற்கிறார்.

யார் செய்தாலும் கொலை என்பது கொடூரம்தான்,. யாருக்கும் கொலை செய்ய உரிமை இல்லை. குற்றவாளி கொலை செய்து குற்றம் செய்கிறான், பதிலுக்கு அரசும் குற்றம் செய்வது என்ன லாஜிக்..

இதனால் குற்றங்கள் குறையபோகிறதா...   கொலை செய்தால் தூக்கு என தெரிந்தாலும் குற்றம் செய்பவன் செய்து கொண்டுதான் இருப்பான்.

ஆக, தூக்கு என்ன சாதிக்கிறது என்ற கேள்வியை எழுப்பியதில் வெற்றி கண்டு படம் விருதுகளை குவித்தது.

ஆனால் விருதுக்கு அது மட்டும் காரணம் அல்ல.

அன்றைய போலந்து கம்யூன்ஸ்ட் அரசை கொலையாளியாக சித்திரித்து இருந்தது மேற்கு உலகுக்கு அல்வா சாப்பிட்டது போல இருந்து இருக்கும். எனவே விருதுகளை அள்ளி கொடுத்து விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

ஆனாலும் இது பார்க்க வேண்டிய படம். படம் தீர்ப்பு ஏதும் சொல்லாமல் யோசிக்க வைத்து விடுகிறது.

மரண தண்டனை கண்டிப்பாக தீர்வல்ல. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டதை போன்ற தோற்றத்தை உருவாக்க இது உதவுகிறது.

இது இல்லாவிட்டால் என்ன ஆகும்? ஏழைகளை , சாதாரணர்களை கொன்றால் தூக்கு இல்லாவிட்டாலும் ஒன்றும் ஆகாது. ஆனால் பணக்காரர்களை , தலைவர்களை , அரசியல் தலைவர்கள் குடும்பத்தினரை கொன்றால் , அவர்கள் தாதாக்கள் மூலமோ , என்கவுண்டர் மூலமோ குற்றவாளியை போட்டு தள்ள பார்ப்பார்கள்.

எனவே மரண தண்டனையை ஒழித்து விட்டு, வலிமையுள்ளது எஞ்சட்டும் என விட்டு விடுவதுதான் லாஜிக்கலான தீர்வோ என யோசிக்க வைத்தது படம்.

இதனால் கிளம்பிய விவாதங்களால் , போலந்தில் தூக்கு தண்டனை நீக்கப்பட்டு விட்டது.

இயக்கம் , இசை, ஒளிப்பதிவு என எல்லாம் சிறப்பாக இருந்தாலும் , குற்றவாளி யின் மன வேதனையை காட்டிய அளவுக்கு , டாக்சி டிரைவர் குடும்ப பார்வையில் அவர்க்ள் தரப்பு வேதனையை காட்டாதது கொஞ்சம் உறுத்தலாகவே இருக்கிறது.


Short film about killing - Must watch

3 comments:

  1. Krzysztof Kieślowski இயக்கிய மற்றொரு படம் A Short Film About Love . மிக அருமையாக இருக்கும்.

    ReplyDelete
  2. அப்படியா... நன்றி நண்பரே.... அதையும் பார்க்க முயற்சி பண்றென்

    ReplyDelete
  3. அருமையான விமர்சனம்... நன்றி.........

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா