Thursday, September 19, 2013

முழுமையை நோக்கி ஒரு பயணம்- ஸ்வீடன் இயக்குனரின் சூப்பர் திரைப்படம்


  நம் ஊரில் ஒரு நம்பிக்கை உண்டு. நம்மை கண்ணீர் விட்டு அழ வைக்கும் படங்கள்தான் நல்ல படங்கள். அழ வைப்பவர்தான் நல்ல இயக்குனர். அழ வைப்பவர்தான் நல்ல நடிகர்.

வெளி நாடுகளில் இந்த நம்பிக்கை இருக்கிறதா? உலகளவில் போற்றபடும் ஸ்வீடன் இயக்குனர் இங்மர் பெர்க்மன் படம் ஒன்றை பார்த்தபோது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

குடும்பம் , உறவுகள் , செண்டிமெண்ட் , ஆன்மிக தேடல்  எல்லாம் நம் ஊரில்தான் செல்லுபடியாகும். வெளி நாடுகளில் இதற்கெல்லாம் மதிப்பில்லை என்று நினைத்தவன் நான். நம் ஊரில் ஆனால் இந்த உறவு சிக்கல்களை , இதன் நுட்பங்களை செண்டிமெண்ட் குப்பைக்குள் மூழ்கடித்து படம் எடுப்பார்கள்.. அல்லது காதல்தான் உலகில் இருக்கும் ஒரே பிரச்சினை என்பது போல படம் எடுப்பார்கள்.

நம்மை விட நாகரீக வளர்ச்சியிலும் , பொருளாதாரத்திலும் முன்னேறியுள்ள நாடுகள் உறவுகளை , சுய தேடலை மதிப்பதில்லையா என்ற கேள்வியுடன்  Wild strawberries படம் பார்க்க ஆரம்பித்தேன்.

முதல் காட்சியே வெகு அழகாக இருந்தது. கறுப்பு வெள்ளைப்படங்களுக்கே உரிய துல்லியம். ஒளியும் இருளும் அழகாக படம்பிடிக்கப்பட்ட முதல் காட்சி. 78 வயது முதியவர் ( டாக்டர் போர்க் )  தன் அலுவலக அறையில் அமர்ந்து இருக்கிறார். அவரை கவுரவிக்க இருக்கிறார்கள் . எனவே நீண்ட பயணதுக்கு தயார் ஆகிறார். அவருக்கு மகனும் மருமகளும் 96 வயது தாயாரும் உண்டு .  முதிய பணிப்பெண் அவரை கவனித்துக் கொள்கிறார்.
படம் யாரைப்பற்றியது , முக்கிய கதாபாத்திரங்கள் யார் என்பது குறித்து சில வினாடிகளில் அறிந்து கொள்கிறோம். அவர் செல்ல இருக்கும் பயணம் முக்கியமானது என்பதும் அண்டர்லைன் செய்யப்பட்டு விடுகிறது.

பயணம் செல்வதற்கு முன் அவருக்கு ஒரு கனவு வருகிறது. வித்தியாசமான கனவு. ஒரு புதிர்போல அந்த கனவு விரிகிறது.

தெருக்கள் வெறிச்சோடியுள்ளன. வீடுகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டமே இல்லை. தெருக்கடிகாரத்தில் முள் இல்லை. அவர் தன் கடிகாரம் பார்க்கிறார். அதிலும் முள் இல்லை. சாலையில் ஒருவன் நிற்கிறான். அவனை தொடுகிறார். அவன் இறந்து விழுகிறான்.

ஒரு குதிரை பூட்டிய ரதம் ஓடி வருகிறது. அதன் சக்கரம் உடைகிறது. உள்ளே ஒரு சவப் பெட்டி. உள்ளே யார் என பார்த்தால் , உள்ளே இருப்பவர் இவர்தான்.

ஓடாத கடிகாரம் , சக்கரமில்லா வண்டி , உயிர் இல்லா உடல் , மக்கள் இல்லா சாலை போல முதுமையை இவர் உணர்கிறாரோ என நமக்கு தோன்றுகிறது.

ஆரம்பத்தில் பயணமும் , கனவும் முக்கியமாக காட்சிகளாக வருவதால் ஓர் ஆர்வம் ஏற்படுகிறது. ப்யணங்களின் போது  நாம் அறிந்திராத  பல புதுய பிரதேசங்களை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. கனவின் போது  நிகழ்வதும் இதுதான்.

அது வெளி நோக்கிய பயணம். இது உள்னோக்கிய பயணம். அவ்வளவே.

இந்த இரு பயணங்களில் வழியாக அவர் தன்னை அறிகிறார் என்பதுதான் படம்.

முதுமையை அழிவின் அடையாளமாக கண்ட அவர் , கடைசியில் முதுமை என்பதை முழுமையின் அடையாளமாக காண்கிறார் என்பதைக் காட்ட கடைசியில் ஒரு கனவு காட்சி அட்டகாசமாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும்.


வாழ்க்கை என்பது ஒவ்வொரு கணமும் முழுமையானதுதான். ஆனால் நாம் எதிர்காலதில் ஏதோ ஒரு கணத்தில்தான் எல்லா மகிழ்ச்சியும் இருப்பதாக நினைக்கிறோம். எதிர்காலத்தில் வாழ்கிறோம். ஒரு கட்டத்தில் இறந்த காலம்தான் இனிது என்ற எண்ணத்தை அடைந்து இறந்த காலத்தில் வாழ ஆரம்பிக்கிறோம்.

டாக்டர் போர்க் இறந்த காலத்தில் வாழவில்லை. இறந்த காலத்தை ஒரு சாட்சியாக பார்க்கிறார் என்பதை அழுத்தம் கொடுத்து காட்டி இருப்பார் இயக்குனர். வழக்கமாக கடந்த கால கனவின் போது , இள வயது தோற்றத்தில் காட்டுவார்கள். இதில் அப்படி இல்லை. தன் முதிய தோற்றத்திலேயே கனவுகளை காண்கிறார் டாக்டர். அப்போதைய சம்பவங்களை இப்போதைய மன முதிர்ச்சியுடன் புரிந்து கொள்கிறார்.

அதாவது கனவுகளில் இவர் தொலைந்து போகவில்லை. தன்னை மீட்டெடுத்து கொள்கிறார்.

இவருக்கு வரும் கனவுகள் ஒரே வகை கனவுகள் என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

முதல் கனவு , உண்மையில் நடக்க வாய்ப்பில்லாத புதிர் போன்ற கனவு. அவர் ம்னோபாவம் வெளிப்படுகிறது அதில்.

இரண்டாவது கனவு கிட்டத்தட்ட பழைய நினைவுகளை அசை போடுவது போல வருகிறது.

மூன்றாவது கனவு தன்னை எடைபோடும் சுயபரிசோதனை களம்.

கடைசி கனவில் மீண்டும் அவர் மனோபாவம் பிரதிபலிக்கிறது , முதல் கனவைப்போல.
முதலில் முதுமையை இலையுதிர் காலமாக உணர்ந்தவர் , கடைசியில் முதுமையை கனிந்து ததும்பும் முழுமையாக கருதுகிறார்.

இவர் மன மாற்றம் முன்பே நமக்கு காட்டப்பட்டு விடுகிறது.

அவருடன் அவர் மருமகளும் பயணம் செய்கிறாள். ஆரம்பத்தில் அவர் புகை பிடிக்க முனையும்ப்போது தடுத்து விடுகிறார். பெண்கள் புகை பிடித்தால் , தனக்கு பிடிக்காது என்கிறார். கடைசியில் ஒரு காட்சியில் புகைக்க அனுமதிக்கிறார்.

அவரை கனவுகள் மட்டும் மாற்றவில்லை,. ப்யணத்தில் வாழ்க்கையின் முழுமையை தரிசுக்கும் வாய்ப்பு.

மருமகள் உலகுக்கு ஓர் உயிரை கொண்டு வரும் மன நிலையிலும் , உடல் நிலையிலும் இருக்கிறாள். அங்கு ஆரம்பதை காண்கிறார் என்ரால், அவருடைய அம்மா 96 வயதில் வாழ்வின் கடைசி நிலையில் இருக்கிறாள். அதையும் காண்கிறார்.

வழியில் சேர்ந்து இளைஞர்களிடம் இளைமையையும் , மருமகள் மகனிடம் நடுத்தர பருவத்தையும் காண்கிறார்.

ஆக அவருக்கு முழுமையான பார்வை கிடைக்கிறது.

இளமைப்பருவத்துக்கே உரிய துடிப்பு , கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற வாக்குவாதம் கைகலப்பாக மாறும் காமெடி , யாரைக்காதலிப்பது என அந்த பெண் ஜாலியாக அலுத்து கொள்வது , அவருக்கு மலர்ச்செண்டு அழைத்து வாழ்த்துவது என அவர்கள் மூலம் ததும்பும் வாழ்க்கை அவருக்கும் மலர்ச்சியை கொண்டு வருகிறது.

இதில் நுட்பமாக காட்சிகள் ஏராளம்.

வழியில் ஒரு கணவன் மனைவியை காரில் ஏற்றிக்கொள்கிறார்கள். பாதியில் சண்டைபோட்டு இறக்கி விட்டு விடுகிறார்கள்.

பிறகு அவர் கனவு ஒன்றில் அந்த கணவன் வந்து அவருக்கு பரீட்சை வைத்து தண்டனை விதிக்கிறான் !!

தன்னிச்சையாக பைபிள் வரி ஒன்று நினைவுக்கு வருவதை தடுக்க இயலவில்லை..

மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்

இன்னொரு காட்சியில் தன் அம்மாவை காண போகிறார்,. தன் கனவில் கண்ட முள் இல்லாத கடிகாரத்தை அவள் கைகளில் பார்க்கிறார்.

இப்படி பல சுவையான அர்த்தபூர்வமான காட்சிகள்.

அவரது உள் மற்றும் வெளி பயணங்களில் நம்மையும் அழைத்து சென்று நம்மையும் சுய பரிசோதனை செய்ய வைத்து விடுகிறார் என்றால் , மிகை இல்லை.



No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா