Monday, June 2, 2014

பட்டாம்பூச்சி- த்ரில்லர் நடையில் உலக இலக்கியம்

ஆயிரம் நூல்கள் வருகின்றன..மறைகின்றன.. அவற்றில் சில மட்டும் மக்கள் மனதில் நிலைத்து நின்று விடுகின்றன..  அப்படிப்பட்ட நூல்களில் ஒன்றுதான் ஹென்றி ஷாரியரின் பட்டாம்பூச்சி ( மொழிபெயர்ப்பு ரா கி ரங்கராஜன் ) எனும் நூல்.

அந்த காலத்தில் குமுதம் இதழில் தொடராக இரண்டு ஆண்டுகள் வெளிவந்தது. அது வெளிவந்த கால கட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது புத்தகமாக வெளிவந்து பலபதிப்புகளை கண்டுள்ளது.

இது ஒரு சுய வரலாற்று நூலாகும். செய்யாத குற்றத்துக்காக சிறையில் தள்ளப்படும் இளைஞன் , தன்னை அந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை பழி வாங்கும் பொருட்டு சிறையில் இருந்து தப்பிக்க விரும்புகிறான்.. அந்த முயற்சியில் பல முறை தோல்வியுற்று மீண்டும் மீண்டும் சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறான். ஆனாலும் மனந்தளராமல் முயற்சித்து கடைசியில் தப்பித்து விடுகிறான்.

இப்படி கேட்பதற்கு ஒரு த்ரில்லர் நாவல் போல தோன்றக்கூடும்.  ஆனால் இந்த நூல் இந்த த்ரில்லர் அம்சத்தை தாண்டி மேலும் பல ஆழமான இடங்களைத்தொடுகிறது.. எனவேதான் இது மானுட உணர்வுகளின் சாசனமாக கருதப்படுகிறது..

இந்த நூல் இலக்கியவாதிகள் கையில் சிக்கி இருந்தால் தொன்மம் படிமம் காலறு வெளியின் பிரஞ்ஞை என்றெல்லாம் கொத்து பரோட்டா போட்டு படிக்க முடியாத நூல்களில் ஒன்றாக இதை மாற்றி இருப்பார்கள்.. நல்ல வேளையாக ரா கி ரங்கராஜன் இதை தன் கைகளில் எடுத்து மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

இந்த நூல் மூலம் நாம் கற்கும் சில விஷ்யங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. தங்க சங்கிலியும் , இரும்பு சங்கிலியும்

அந்த இளைஞன் சிறையில் இருந்து தப்ப முயல்கிறான்.. அதிகார வர்க்கம் தடுக்க முனைகிறது.. ஆனால் சிறை செல்லும் முனைப்பை தடுப்பது அந்த அடக்கு முறை அல்ல என்பது சிந்தனைக்குரியது.. அவனுடன் தப்பிக்க வேறு சிலரும் முயல்கின்றனர். ஆனால் காலப்போக்கில் அந்த முனைப்பு மழுங்கி விடுகிறது.. ஏன்? அடக்குமுறைக்கு பயந்து விட்டார்களா? இல்லை

சிறை வாழ்க்கைக்கு பழகி விட்டார்கள்..  அவர்களுக்கு கிடைக்கும் சில வசதிகள் , கட்டுப்பாடுடன் கூடிய சுதந்திரம் , சில பதவிகள் என செட்டில் ஆகி விட்டார்கள்.. அந்த சொகுசில் இருந்து விடுபட அவர்கள் விரும்புவதில்லை.

ஆனால் இந்த இளைஞனுக்கு ஒரு தீவில் தங்கும் வாய்ப்பு , ஒன்றுக்கு இரண்டு மனைவியர் என்ற வாய்ப்பு , தீவுக்குள் கட்டற்ற சுதந்திரம் என வசதிகள் கிடைத்தாலும் அவன் அதில் செட்டில் ஆக விரும்பவில்லை..சிறை என்பது இரும்பு சங்கிலி என்றால் இந்த சின்ன சின்ன வசதிகள் என்பது தங்க சங்கிலி என்ற தெளிவு அவனிடம் இருக்கிறது..

2  புலம்பி பலன் இல்லை

இந்த நாவலின் சுவையான அம்சம் எதுவென்றால், சிறை தப்பும் முயற்சி தோல்வி அடைந்த மறு கணமே அடுத்த தப்பித்தலுக்கான முயற்சியை தொடங்கி விடுகிறான். உலகம் ஏன் இப்படி இருக்கிறது , கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது போன்ற வீண் சிந்தனைகளுக்கு இடம் கொடுப்பதில்லை. செயல்கள் மட்டுமே நம் வாழ்க்கையை தீர்மானிக்கும்

3.இருப்பதை வைத்து தொடங்குங்கள்..

ஏழைக்குடும்பத்தை சேர்ந்த ஒருவன் கஷ்டப்பட்டு படித்து மானில அளவில் அல்லது மாவட்ட அளவில் முதல் மார்க் வாங்கி பேட்டி கொடுப்பான்.. டாக்டர் ஆவ்தே தன் லட்சியம் என்று. ஒரு கோஷ்டி உடனே கிண்டல் செய்ய ஆரம்பிக்கும். புத்தக படிப்பெல்லாம் வேஸ்ட்டுங்க...கல்வி முறையே தப்புங்க..

புரட்சி வந்து உலகம் திருந்தும் வரை காத்திருக்க முடியாது.. நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டியது தான்.

அந்த இளைஞன் ஒரு கட்டத்தில் தனிமை சிறையில் அடைக்கப்படுகிறான். இருள் சூழ்ந்த அறை.  யாரிடமும் பேச முடியாது.. அந்த நிலையில் பலருக்கு பைத்தியம் பிடித்து விடும். இவனோ அந்த நிலையிலும் மனந்தளராமல் அங்கு கிடைக்கும் ஒரே வசதியான நடக்கும் வசதியை சாதகமாக பயன்படுத்துகிறான்.. நடப்பதை எண்ணிகொண்டே இருக்கிறான். இதன் மூலம் காலம் பற்றிய கணக்கு கிடைக்கிறது.. எத்தனை நாள் சிறையில் இருக்கிறோம்.. இன்னும் எத்தனை நாளில் விடுதலை என்பது தெரிவதால் ஓரளவு சமாளிக்க முடிகிறது..இல்லை என்றால் முடிவற்ற பெரும் காலம் என்பது மாபெரும் கொடுமையாக இருந்திருக்கும்.

4. குறிக்கோள் உயர்ந்ததாக இருக்கட்டும்

ஆரம்பத்தில் பழி வாங்குவதற்காக தப்பிக்க நினைப்பவன் , காலப்போக்கில் தப்பித்தல் என்பது விடுதலையின் நோக்கத்திற்காக என மாற்றிக்கொள்கிறான்.  குரோதம் , வன்மம் அற்ற மனம் அவனது மற்ற சிறை உறவுகளை நல்ல முறையில் அமைத்து அவன் விடுதலையை சாத்தியம் ஆக்குகிறது

5. யாரையும் அஞ்சாதீர்க்ள்..துச்சமாகவும் எண்ணாதீர்கள்.

இவன் சிறை வாழ்க்கை முழுதும் காணப்படும் பொது அம்சம் யாருக்காவது உதவிக்கொண்டே இருப்பதுதான். சக கைதி ஒருவன் பணத்தை வைத்திருக்க பயந்து கொண்டு இவனிடம் கொடுத்து வைக்கிறான்.  நீயே வைத்துக்கொள் எனக்கு பயமாக இருக்கிறது என அவன் சொன்னாலும் , பொறுப்பாக அவனிடம் பணத்தை ஒப்படைக்கிறான். பெரிய அதிகாரிகளுக்கும் அவ்வப்போது உதவுகிறான், இதெல்லாம் அவனுக்கு முக்கிய சந்தர்ப்பங்களில் உதவியாக அமைகிறது.. நன்றி மறப்பவர்கள் எங்கும் உண்டு என்றாலும் , நம் இயல்பை மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை.

இப்படி நூல் முழுதும் சுவையான செய்திகள்.. பணத்தை ஒளித்து வைக்கும் முறை, மனித கறி, மாமிசம் தின்னும் எறும்புகளை வைத்து கொலை என திரில்லர் போன்ற நடையில் வெளிவந்துள்ள இந்த உலக இலக்கியத்தை படிக்க தவறாதீர்கள்




8 comments:

  1. ‘ஸ்டீவ் மக்யூன்’ நடிப்பில் பட்டாம்பூச்சி, சிறந்த ஹாலிவுட் திரைப்படமாகவும் வந்தது.
    Papillon is a 1973 prison film directed by Franklin J. Schaffner, based on the best-selling autobiography by the French convict Henri Charrière.

    ReplyDelete
    Replies
    1. அருமையான தகவல்.. நன்றி சார்.. நான் இன்னும் படம் பார்க்கல...கண்டிப்பா பார்க்கணும்

      Delete
  2. எங்கே வாங்கலாம்? கிழக்கு பாதிப்பகத்தில் 'Out of Stock'...

    ReplyDelete
  3. தமிழில் படிக்கலாமா அல்லது Papillon படித்து விடலாமா??? (எனக்கு தமிழ்தான் படிக்க இலகு... ஆனால், original english என்பதால் அதில் படித்தால் நல்ல இருக்குமோ???)

    ReplyDelete
    Replies
    1. தமிழிலேயே படியுங்கள்... செம அனுபவம்

      Delete
  4. நண்பரே,
    நீண்ட நாட்கள் கழித்து சந்திக்கிறோம்.
    பட்டாம் பூச்சி என்ன ஒரு அற்புதமான உண்மைக் கதை. தப்பிக்கும் ஒவ்வொரு முறையும் தோல்வியே கண்டாலும் உடனே அடுத்த முயற்சிக்கு தயாராகும் மனித வலிமையை இந்தக் கதையைப் போல வேறொன்றும் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.

    சிறிய கட்டுரையாக இருந்தாலும் சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள். மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது. பாராட்டுக்கள்.

    கடைசியாக ஒரு தகவல். இந்தத்தொடருக்கு படம் வரைந்தவர் ஓவியர் ஜெயராஜ். ஒவ்வொரு தொடரிலும் அபாரமாக படங்கள் வரைந்திருப்பார். வெறும் கருப்பு நிழல் கொண்டு வரையும் ரெம்ப்ராண்ட் டின் யுக்தியை இதில் ஜெயராஜ் அருமையாக செய்திருப்பார். நீங்கள் படித்த கதையில் ஓவியங்கள் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. ஓவியங்கள் இல்லையே...so sad

      Delete
  5. Available at a book shop near grt jewellery tngar. 300 rs. The shop is in underground.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா