Sunday, June 8, 2014

கமல்ஹாசன் முகத்துக்கு நேராக பேச மாட்டார் - ரோகிணி பரபரப்பு பேச்சு - பிரத்தியேக கவரேஜ்

பலதரப்பட்ட ஆளுமைகளின் உரைகளை கேட்க , அவர்களுடன் உரையாட நல்வாய்ப்பாக அமைந்து இருப்பது ஞாநி நடத்தும் கேணி கூட்டங்கள்...  இலக்கியம் , சினிமா, மருத்துவம் , அரசியல் என பல துறையினரை இங்கு சந்திக்கலாம்..

அந்த வகையில் இன்று ( ஜுன் எட்டாம் தேதி , 2014) நடந்த கூட்டத்தில் நடிகர் & இயக்குனர் ரோகிணி பேசினார்.. மறுபடியும் , மகளிர் மட்டும் என பல படங்களில் இவரை மறந்து இருக்க முடியாது..தவிர சில திரைப்பட பாடல்கள் எழுதியுள்ளார்.. அப்பாவின் மீசை எனும் படம் எடுத்து வருகிறார்.

மரங்கள் சுழ்ந்த இனிமையான இடம்.. நல்ல கூட்டம்.  திரைத்துறையினர் , முக நூலர்கள் , பத்திரிக்கையாளர்கள் என பலர் வந்து இருந்தனர்.

ஞாநி வரவேற்புரை நிகழ்த்தினார்.. வழக்கமாக சுருக்கமாக பேசும் அவர் , சற்று விரிவாகவே பேசினார்... ரோகிணியுடனான தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசியது...

ரோகிணியை எனக்கு வெகு நாட்களுக்கு முன்பே தெரியும், அவரை நான் முதன்முதலில் சந்தித்தது அவருக்கே நினைவு இருக்குமா என தெரியவில்லை.. தூர்தர்ஷனுக்காக ஒரு நிகழ்ச்சி செய்தேன். அதில் ஒரு பேட்ட்டிக்காக ரோகிணியை சந்தித்தேன்.. அப்போது அவர் சிறிய பெண்.  அப்போதைய இடத்தில் இருந்து , இப்போது நிறைய டிரான்ஸ்ஃபார்ம் ஆகி இருக்கிறார்.  அந்த மாற்றமே அவரை இங்கே அழைக்க செய்தது.. நிறைய வாசிக்கிறார். தற்போது ஒரு படம் இயக்குகிறார்.

 நடிகர்கள் பலருக்கு பொதுவான விஷயங்கள் தெரிவதில்லை.. நான் உட்பட பலருக்கும் பிடித்த நடிகர் சிவாஜி கணேசன். அற்புதமான நடிகர். பழகுவதற்கு மிக இனிமையானவர். அவர் ஜனதா தள் தலைவராக இருந்தபோது , விபி சிங் ஆதரவு நிலையில் சிவாஜியுடன் இணைந்து செயலாற்றி இருக்கிறேன். எளிமையாக இனிமையாக பழகுவார்.  ஆனால் அவருக்கு சினிமா, அதில் தான் ஏற்கும் பாத்திரம் இவை மட்டுமே தெரிந்தவர் அவர்.

மாறாக ரஞ்சன் என்ற நடிகர் அந்த காலத்தில் இசை பத்திரிக்கை வெளியிட்டார். பல விஷ்யங்கள் தெரிந்து வைத்து இருந்தார். தற்போது நாசர் உட்பட சிலருக்கு மட்டுமே பொது விஷ்யங்கள் தெரிகின்றன. பெண் நடிகர்களில் விஷ்யங்கள் தெரிந்தவர்கள் குறைவு. இவர்களில் சற்று மாறுபட்டவர் ரோகிணி. நிறைய வாசிக்கிறார். தெளிவாக முடிவெடுக்கிறார்.

அவரை வைத்து குறும்படம் ஒன்றை இயக்கினேன்.. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட பத்து நிமிட படம் அது. சிறப்பாக நடித்தார். இன்னொரு படத்துக்காக அணுகிய போது  , அந்த கதை பிடிக்காமல் நடிக்க மறுத்து விட்டார். நோ சொல்ல தெரிந்தவர் அவர்.. அவர் இப்போது பேசுவார்”

பிறகு ரோகிணி பேசினார்...

ஒரு கல்லூரிக்கு பேச போனேன். நிறைய தயார் செய்து பேசினேன்.. பேசி முடித்து விட்டு , ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என கேட்டேன்.. " ஆமா...சீக்கிரம் பேச்சை முடிங்க... பஸ்சுக்கு லேட் ஆகுது என்றார்கள்.. இப்படி சில இடங்களில் ஆகிறது..

இன்னொரு கல்லூரிக்கு போய் இருந்தபோது ஆரம்பத்திலேயே கேட்டு விட்டேன். என்ன டாபிக் பேச விரும்புகிறீர்கள்.. அவர்கள் சொன்னார்கள் , மறுபடியும் படத்தில் வரும் ஆசை அதிகம் வச்சு பாடலுக்கு டான்ஸ் ஆடுங்கள். திகைத்து போனேன். நான் அதற்கு பிராக்டிஸ் செய்திருக்கவில்லை.. அவர்கள் எண்ணமோ டான்ஸ் பார்ப்பதில்தான் இருந்து இருக்கிறது.

பார்வையாளர்களுக்கு ஏற்பவே பேச்சு அமையும். வேறு எங்கும் பேச முடியாத சிலவற்றை இங்கே பேச விரும்புகிறேன்.

நாம் எப்படி பிறக்கிறோம்.. எங்கே பிறக்கிறோம் என்பது முற்றிலும் தற்செயலானது.. நான் பெண்ணாக பிறந்தது , நடிகை ஆனது எல்லாம் தற்செயலானவை..

ஆரம்பத்தில் இதற்காக வேதனைப்பட்டு இருக்கிறேன். காரணம் இங்கே பெண்கள் என்றாலே இரண்டாம் இடத்தில்தான் வைத்து பார்க்கிறார்கள்.. அதிலும் பெண் நடிகர் என்றால் மதிப்பதே இல்லை..

ஆரம்பத்தில் நான் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது நடிப்பு இனிமையாக இருந்தது.. காரணம் சாக்லேட் கிடைக்கும், அழுகை சீனாக இருந்தாலும் , நன்றாக அழுதால் சாக்லேட் கிடைப்பதால் அதை ஜாலியாக செய்வேன்.

15 அல்லது 16 வயதில் இளமைப்பருவத்தில் நடித்த போதுதான் , சிக்கல் ஆரம்பித்தது. ஒரு கவர்ச்சியான ஆடையை எனக்கு அணிவித்து , என்னை விட 20 வயது பெரிய நடிகர் ஒருவருடன் காதல் பாட்டுக்கு ஆட சொன்னபோது திகைத்தேன்..  கவர்ச்சிக்கன்னி , ரோகினி எனும் வன மோகினி என்ற கேப்ஷன்களுடன் என் படங்கள் பத்திரிக்கைகளில் வெளி வருவதை எப்படி எதிர்கொள்வது என்பதெல்லாம் எனக்கு குழப்பமாக இருந்தது...

காலப்போக்க்கில் காதல் என்பதை எப்படி வெளிக்காட்டுவது , நடிப்பு போன்ற வற்றை கற்றேன். ஒரு கட்டத்தில் நடிப்பதற்கோ , பெண்ணாக இருப்பதற்கோ வேதனைப்படக்கூடாது என முடிவெடுத்தேன். நடிகர் என்பதில் பெருமைப்படுகிறேன்.

ஆனால் பல எழுத்தாளர்களும்கூட பெண் நடிகர்களைப்பற்றி தவறாக எழுதுகிறார்கள்.. குறிப்பாக அசோக மித்ரன் நாவல் ஒன்றை படித்து மனம் நொந்தேன்.

மெத்தப்படித்தவர்கள்கூட பெண் நடிகர்கள் என்றால் இழிவாகவே நினைக்கிறார்கள்.  ஒரு நிகழ்ச்சிக்கு மனுஷ்ய புத்திரன் என்னை அழைத்தார். அப்போது பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் பாடல் எழுதி இருந்தேன்.. அந்த அடிப்படையில் அழைத்தார்.  அதில் எழுத்தாளர் சுஜாதாவும் கலந்து கொண்டார்.

ஒருவர் புத்தகம் வெளியிட நான் அதை பெற்றுக்கொண்டேன். அதைப்பார்த்த சுஜாதா என்னிடம் கேட்டார் “ என்ன, உனக்கு படிக்கவெல்லாம் தெரியுமா “ அவர் அப்படி கிண்டலாக கேட்டது என்னை புண்படுத்தியது.

இப்படி பெண்களுக்கு எதிரான சூழலே இங்கு உள்ளது.. இதை மறுத்து யாராவது பேசினால் மகிழ்வேன் .. “

இப்படி அவர் பேசி முடித்ததும் ஞாநி பேசினார்.

நீங்கள் இப்படி நம்பிக்கை இழக்க தேவை இல்லை.. அசோக மித்ரன் வேறொரு  நாவலில் பெண் நடிகர்களைப்பற்றி பாசிட்டிவாக எழுதியுள்ளார். வேறு பலரும் எழுதி இருக்கிறார்கள்.. சரி..இப்போது பார்வையாளர்கள் கேள்விகள் கேட்கலாம்..

*****************************************************

பாடல் எழுதிய அனுபவம் குறித்து சொல்லுங்கள்..

அது தற்செயலான ஒன்று.. ட்யூனுக்காக அல்லாமல் கவிதை ஒன்றை எழுதி தருமாறு கவுதம் மேனன் கேட்டார் , பச்சைக்கிளி முத்துச்சரம் படத்துக்காக, எழுதிக்கொடுத்தேன்.. ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ் அந்த கான்செப்ட்டை விரும்பவில்லை.. ட்யூனுடன் கூடிய பாடல்தான் வேண்டும் என்றார்.  என் வரிகள் ட்யூனுக்கு செட் ஆகவில்லை..இப்போது கவுதம் மேனனுக்கு தர்ம சங்கடம். ட்யூனுக்கு ஏற்றபடி 20 வகையான வரிகள் எழுதித்தாருங்கள்..அதில் சிறந்ததை பயன்படுத்திக்கொள்கிறோம் என்றார்..  நான் நான்கு வகையில் எழுதினேன்.. அதில் அவர்கள் தேர்ந்தெடுத்ததுதான் படத்தில் இடம் பெற்றது


*****************************************************

ரகுவரன் , நாசர் போன்றோர் திரைப்படக்கல்லூரியில் பயிற்சி பெற்றவர்கள்..உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காதது குறித்த ஏக்கம் இருக்கிறதா?

இது போன்ற பயிற்சிகளை நான் வரவேற்கிறேன். கூத்துப்பட்டறை போன்றவற்றில் கொடுக்கப்படும் பயிற்சிகள் ஆரோக்கியமானதே.  ஆனால் இந்த பயிற்சிகளுக்கு நான் போனதில்லை என்பதில் வருத்தம் இல்லை.. காரணம் எனக்கு பல குரு நாதர்கள் கிடைத்துள்ளனர்.. அவர்களிடம் கிடைத்த பயிற்சியை பெரிதாக நினைக்கிறேன். பரதன் போன்ற இயக்குனர்கள் காட்சியை விளக்குவதே பெரிய பாடம்தான்..

 நாகேஷ் இயக்கத்தில் ஒரு படம்.. நான் அழுவதாக காட்சி..அவர் எனக்கு கிளிசரின் தரவில்லை.. தன் கண்களையே பார்க்குமாறு சொன்னார்.. பார்த்தேன்,,, அவர் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.. பார்த்ததும் என் கண்களிலும் கண்ணீர்.. அப்படியே நடிக்க சொன்னார்...இதெல்லாம் பாடம்தானே

ஞாநி

நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.. ரகுவரனுடன் நான் பழகி இருக்கிறேன்.. அவர் ஒரு போதும் தான் பயிற்சி வகுப்புகளுக்கு சென்றதாக சொன்னதில்லை.. பயிற்சிகளை ஆதரித்தோ எதிர்த்தோ அவர் பேசியதில்லை..  நாசர் பயிற்சி வகுப்புகளுக்கு போய் இருக்கிறார்..  எப்படி நடிக்கக்கூடாது என அங்கே கற்றதாக அவர் கூறுவார்

*********************************************************

உங்கள் வாசிப்பு அனுபவம் குறித்து சொல்லுங்களேன்..

 நான் ஆரம்பத்தில் வாசிக்க ஆரம்பித்தது கல்கிதான்.. கிட்டத்தட்ட அனைத்தும் வாசித்துள்ளேன்.. பொன்னியின் செல்வன் போன்றவை மிகவும் பிடிக்கும். பிறகு ஜெய காந்தன் , தி ஜா ரா வாசிக்க ஆரம்பித்தேன்..

ஆரம்பத்தில் புரியவில்லை...போக போக , மோக முள் போன்றவற்றை புரிந்து கொண்டு ரசிக்க ஆரம்பித்தேன்.  சுந்தர ராமசாமி , பஷீர் என வாசிப்பு வளர்ந்தது..குழந்தைகளி உலகை புரிந்து கொள்ள பஷீர் சிறுகதைகள் உதவின

******************************************************************

 நீங்கள் ஒரு டப்பிங் கலைஞரும்கூட...டப்பிங் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

டப்பிங் என்பது எனக்கு எக்சைட்டிங்கான ஒன்று.. எழுத்தாளர் ஒன்றை படைக்கிறார்..இயக்குனர் ஒன்றை உருவாக்குகிறார்.. நடிப்பவர் ஒரு பரிமாணத்தை சேர்க்கிறார்.. இந்த மூவர் சேர்ந்து உருவாக்கிய ஒன்றில் கூடுதலாக ஒன்றை சேர்க்கும் டப்பிங் பணி சுவையான ஒன்று..

இதயத்தை திருடாதே , இருவர் போன்ற படங்களில் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்.. அந்த படங்களில் என் இயல்பான குரலையே பயன்படுத்த அனுமதித்தார். ஆனால் பம்பாய் படத்தில் மனிஷா கேரக்டருக்கான குரல் மென்மையாக இருக்க வேண்டும் என விரும்பினார்.. இதற்காக பல குரல்களில் பேசி காண்பித்தேன்.. கடைசியாக ஒரு குரலை ஒப்புக்கொண்டார்..இந்த குரலுக்காக நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது..

ராவணன் படத்தில் நான் பாரதியார் பாடலை பாடிய விதம் அவருக்கு பிடிக்கவில்லை.. இந்த அளவுக்கு இனிமையாக வேண்டாம்.. கடத்தப்பட்ட பெண் கத்தி இருப்பார்..அழுது களைத்து இருப்பார்.. அந்த குரல் இவ்வளவு இனிமையாக இருக்ககூடாது என்றார்... அவர் கேட்ட குரலை கொடுப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டேன்.

இப்படி கஷ்டப்பட்டாலும் , குரல் மூலம் ஒரு காட்சி செழுமை அடையும்போது இயக்குனர்கள் மகிழ்வார்கள்..


*************************************************************************

திரைத்துறையில் இருக்கும் பெண்கள் ஃப்ரீயாக இருப்பார்கள் என்பது உண்மையா

ரோகிணி : ஃப்ரீயா என்றால் என்ன அர்த்தம் //ஃபிரீ செக்சா

ஞாநி :  மற்ற பெண்களுக்கு இல்லாத சுதந்திரம் உங்களுக்கு உண்டா என கேட்கிறார்..

ரோகிணி ; முன்பே சொன்னது போல சினிமாவுக்காக கவர்ச்சி ஆடைகள் அணிய வேண்டி இருக்கும்.. ஆனால் அன்றாட வாழ்வில் அப்படி ஆடை அணிய முடியாது...   ஸ்லிவ்லெஸ் அணியக்கூட வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள்... இரவு  நேரங்களில் வெளியே சுற்ற விட மாட்டார்கள்... மற்ற பெண்களுக்கு இருக்கும் எல்லா கட்டுப்பாடுகளும் எங்களுக்கு உண்டு

ஞாநி : எல்லா துறைகளைப்பற்றியும் இப்படி மித்கள் இருப்பதும் , உடைவதும் இயல்பானதே.. நான் பத்திரிக்கையாளன் என்பதால் , என்னுடன் பேசவே உறவினர் பயப்படுவார்கள்..  சொல்வதை பேப்பரில் எழுதி விடுவேன் என பயம்.. செய்தியாளன் என்றால் எல்லாவற்றையும் எழுதிவிடுவான் என்பது மித்..அதேபோல , ஐ டி பெண்கள் , ஆண்கள் எல்லோரும் பப்பிலேயே விழுந்து கிடப்பார்கள் என்பதும் கற்பனையான ஒன்றுதான்

**************************************************************

உங்களை கவர்ந்த சில இயக்குனர்கள் குறித்து ?

பலரை சொல்லலாம்.. பரதன் ஒரு ஷாட்டை எப்படி வைக்க வேண்டும் என்பதில் நிபுணத்துவம் கொண்டவர்.. அதை அனாயசமாக செய்வார்.. இவரது திறமையில் ஒரு பங்கை மிஷ்கினிடம் காணலாம்.

சிங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் கேஷுவலாக இருப்பார்... அவருக்கு வேண்டியதை நம்மிடம் இருந்து எடுத்து விடுவார்..

மகளிர் மட்டும் பெருவெற்றி அடைய எங்களது டீம் ஸ்பிரிட்டே காரணம் என பாராட்டினார்,, நான் , ஊர்வசி  , ரேவதி ஆகிய மூவரும் ஈகோ இல்லாமல் நடித்தோம்.. ஊர்வசி சிறப்பாக நடிக்கிறார் , அவருக்கு பாராட்டு கிடைக்கும் என நன்கு தெரிந்திருந்தது... ஆனாலும் அவர் நடிப்பை ரசித்தோம்...படம் ரிலிசான பின் , யாருக்கு வரவேற்பு அதிகம் தெரியுமா என கமல் போனில் கேட்டார்..  ஊர்வசிக்குத்தானே சார் என சிரித்துக்கொண்டே கேட்டேன்.. ஊர்வசி என்னை விட சிறந்த நடிகர்

***********************************************
கமல் பற்றி உங்கள் கருத்து?

அவர் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன்.. எனக்கு மட்டும் அல்ல .. பலருக்கும்..புதிதாக பல விஷ்யங்களை கற்றுக்கொண்டே இருப்பார்... எந்த கம்ப்யூட்டரிலும் இல்லாத அளவுக்கு இன்ஃபர்மேஷன்களை தன் மூளையில் சேர்த்து வைத்து இருப்பார்.. இவ்வளவு விஷ்யங்கள் தேவையா என்று நமக்கு தோன்றும்.. இவைதான் அவரை உயிர்ப்புடன் வைத்து இருக்கின்றன என்றும் தோன்றும்.. அவரை பொருத்தவரை , கற்பதே அவரது ரிலாக்சேஷன்...

 நல்ல விஷ்யங்களை யார் செய்தாலும் பாராட்டி விடுவார்.. ஆனால் முகத்துக்கு நேராக பாராட்ட மாட்டார்..  நான் அவருடன் பல படங்களில் வேலை செய்து இருக்கிறேன்.. என்னை பாராட்டியதே இல்லை. ஆனால் மற்றவரகளிடம் என்னை குறிப்பிட்டு பாராட்டியதாக அவர்கள் சொல்வார்கள்..

உன்னை போல ஒருவன் படத்தில் டப்பிங் பணிக்காக என்னை அழைத்தார்.. பணியின்போது அதை கண்டு கொள்ளவே இல்லை.. வழக்கமாக அது சரி இல்லை , இது சரி இல்லை என உயிரை வாங்கும் அவர் இப்படி நடந்து கொள்வது ஆச்சர்யமாக இருந்தது.. பிறகுதான் தெரிந்தது.. அவர் என்னை அழைத்ததே மிஷ்கினை பாராட்டத்தான்... நந்தலாலா படத்தைப்பற்றி பாராட்டிக்கொண்டே இருந்தார்...

ஒருவரை நேரில் பாராட்டாமல் இன்னொருவரிடம் பாராட்டுவது அவர் பாணி..


**************************************************************

ரகுவரனின் சினிமா ஈடுபாடு பிரபலமான ஒன்று...  அவர் குறித்த உங்கள் பார்வை..

அவரைப்பற்றி எவ்வளவோ சொல்லலாம்... ஒரு கதாபாத்திரம் முடிவான உடன் , அந்த பாத்திரத்துக்குள் செல்வதற்கான பணியை தொடங்கி விடுவார்.. பொருத்தமான ஆடை , அதற்கான துணி என இறங்கி விடுவார்.. எந்த துணியாக இருந்தால் என்ன என்றால் கேட்க மாட்டார்...  எப்படிப்பட்ட கண்ணாடி அணிய வேண்டும் என யோசிப்பார்.. அந்த கேரக்ட்டர் கண்ணாடியை உடைத்து விடும் , எனவே உடையாத கண்ணாடிதான் வாங்கிக்கொடுப்பார்கள் என யோசிப்பார்...  கண்ணாடி அதற்கான பட்டை என தேர்ந்தெடுப்பார்.

அவரது ஷாட் முடிய எவ்வளவு நேரம் ஆனாலும் அதை முடித்து விட்டுதான் சாப்பிடுவார்... அல்சர் , டயாப்படீஸ் என பாதிக்கப்பட்ட உடல் நிலையில் இருந்தாலும் பிடிவாதமாக இருப்பார்...  சில இயக்குனர்கள் , அவர் நிலையை உணர்ந்து அவர் காட்சியை சீக்கிரம் முடித்து விடுவார்கள்..

கதாபாத்திரத்தைப்பற்றியே யோசித்து சில ஐடியாக்களை இயக்குனர்களுக்கு பரிந்துரைப்பார்.. பல நேரங்களில் அவை ஏற்கப்பட்டுள்ளன...

பார்த்தேன் ரசித்தேன் படத்தில் அவர் கேரக்டர் ஹீரோயினின் அண்ணன் என்று இருந்ததை ஸ்டெப் பிரதர் என மாற்றியது அவர்தான்.. பூவிழி வாசலிலே படத்தில் செயற்கை கால் என்பது அவர் ஐடியாதான்.. சில நேரங்களில் அவர் ஈடுபாடு பயமாக இருக்கும்...

வாசிப்பில் அவருக்கு தீவிர ஈடுபாடு உண்டு.. ஆனால் படித்த கதாபாத்திரங்களை படத்தில் பயன்படுத்தினாரா என தெரியவில்லை...  வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களின் குணாதிசயங்களை படத்தில் பயன்படுத்துவார்.. கோபப்படும்போது நான் அமைதியாகி விடுவேன்.. இதை ஒரு படத்தில் பயன்படுத்தினார்...

அவர் பேசும் பாணி பாராட்டு பெற்றதால் அப்படியே படங்களில் பேசினார்.. ஆனால் ரியல் லைஃபில் அப்படி பேச மாட்டார்... அந்த பாணியில் பேசாமலும் நடித்துள்ளார்.
ஒசாமா பின் லேடன், ஜிட்டு கிருஷ்ண மூர்த்தி போன்ற வேடங்களில் நடிக்க விரும்பினார்

********************************************************************

உங்கள் ரோல் மாடலாக யாரை நினைக்கிறீர்கள்

அருந்ததி ராயின் துணிச்சல் எனக்கு பிடிக்கும்,, பிரச்சனையை பின் பாயிண்ட் செய்து அவர் பேசுவதை ரசிப்பேன்

******************************************************************

நீங்கள் நடிக்க விரும்பும் கதாபாத்திரம்?

 வண்ணநிலவனின் எஸ்தர்

************************************************************************

நீங்கள் இயக்கும் படத்தைப்பற்றி?

அப்பாவின் மீசை என்ற என் படம் கண்டிப்பாக அனைவரும் ரசிக்கும்படி இருக்கும்... இந்த படம் வந்த பின் , என் திறமை பரவலாக அனைவருக்கும் தெரிய வரும்... அதன் பின் , என் ஆலோசனைகளுக்கு இயக்குனர்கள் மத்தியில் மதிப்பு ஏற்படும் என கருதுகிறேன்

**********************************************

15 comments:

 1. Live Relay மாதிரி, அழகா எழுதி இருக்கீங்க. நன்றி.

  ReplyDelete
 2. Live relay மாதிரி அழகா எழுதி இருக்கீங்க. நன்றி

  ReplyDelete
 3. //கமல்ஹாசன் முகத்துக்கு நேராக பேச மாட்டார் - ரோகிணி பரபரப்பு பேச்சு//

  என்னங்க... இந்த தலைப்பும் பரபரப்புக்குக்காகவே வெச்ச மாதிரி இருக்கு... ;) ;) ;)

  உள்ளே அப்டி இல்லியே???

  ReplyDelete
 4. வண்ணநிலவனின் எஸ்தர் என்று இருக்கவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. மாற்றி விட்டேன்.. நன்றி

   Delete
 5. திறமைசாலியான ஒரு பெண்ணில் பலவேறு பரிமாணங்கள் வெளிப்பட்டன. ரசித்தேன்.

  ReplyDelete
 6. கேணி சந்திப்பில் நேரடியாக கலந்துகொண்டது போன்ற உணர்வு ஏற்படுகின்றது Pichai சார் .

  ReplyDelete
 7. சந்திப்பில் கலந்துகொண்ட உணர்வை ஏற்படுத்தியது.. நன்றி..

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா