Showing posts with label கமல். Show all posts
Showing posts with label கமல். Show all posts

Saturday, May 23, 2020

வேதனையுடன் காலமான தயாரிப்பாளர். அறிமுகப்படுத்தியவரை சந்திக்க மறுத்த,கமல்

கமல்ஹாசனை பாலச்சந்தர் அறிமுகம் செய்தவர் என்றாலும் கமலை முதன்முதலாக,கதாநாயகனாக்கியவர் தயாரிப்பாளர் ரகுநாதன். பட்டாம்பூச்சி என்ற படத்தில் கமலை அறிமுகம் செய்தார்.   நேற்று அவர் காலமான சூழலில் தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட கமலை சந்திக்க முயன்று அது நடக்காத வேதனையில் அவர் இருந்த செய்தி சினிமா ரசிகரகளை வருத்தப்பட வைத்துள்ளது.
அவர் கடைசியாக மரகதக்காடு என்ற படத்தை தயாரித்தார். அதன்,இசை விழாவில் தராரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி பேசுகையில் இந்த வருத்தத்தை பதிவு செய்தார்
, “தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமலை தனது படத்தில் அறிமுகப்படுத்திய பெரும் பாக்கியம் பெற்றவர் ரகுநாதன். இன்று தமிழ் திரையுலகிற்கு கமல் சார் இவ்வளவு பெருமை சேர்த்துள்ளார் என்றால் அதில் முக்கிய பங்கு தயாரிப்பாளர் ரகுநாதனுக்கும் உண்டு. எனக்கு கமல் சார் மீது ரொம்பநாளாகவே, இப்போதுவரைக்கும் ஒரு வருத்தம் உண்டு. இந்த மரக்கதக்காடு குழுவினர் இந்தப்படத்தை தயார்செய்துவிட்டு இதன் பர்ஸ்ட்லுக்கை வெளியிடுவதற்காக கமல் சாரை தொடர்புகொண்டனர். தயாரிப்பாளர் ரகுநாதன் கமல் சாரை சந்திக்க இரண்டுமுறை நேரம் கேட்டும் கமல் தரப்பில் இருந்து கடைசி வரை பதிலே வரவில்லை. பதில் வரவில்லையா இல்லை இந்த தகவலே அவருக்கு சென்று சேரவில்லையா என தெரியவில்லை.

நான் அவரது ரசிகன் என்கிற முறையில் சொல்கிறேன் உண்மையிலேயே நீங்கள் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்க நினைத்தீர்கள் என்றால் உங்களை அறிமுகப்படுத்திய ஒரு தயாரிப்பாளர் இவ்வளவு நாட்களாக படம் எடுக்காமல் இருந்து இன்று சமூக மாற்றத்திற்காக ஒரு படம் எடுத்திருக்கிறார் என்றால் அவரை பாராட்ட வேண்டிய கடமைஉங்களுக்கு நிறைய இருக்கிறது. நீங்கள் கட்சி ஆரம்பிங்க.. மக்களுக்கு நல்லது செய்யுங்க.. வேண்டாம் என சொல்லவில்லை.. அதற்கு முன்னால் உங்கள் கூட இருப்பவர்களுக்கு, உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு நல்லது பண்ணனும். அப்புறமா மத்தவங்களுக்கு நல்லது பண்ணலாம். உண்மையில் ரகுநாதனை நீங்கள் பாராட்டினால் தமிழ் சினிமாவே பாராட்டிய மாதிரி” என தனது மனக்குமுறலை கொட்டினார்.

Friday, May 15, 2020

ரஜினி கமலின் சமகால போட்டியாளர்


  வான் நிலா , நிலா அல்ல
உன் வாலிபம் நிலா


உறவுகள் தொடர்கதை

என்னுள்ளில் எங்கோ ஏங்கும்
கீதம்


ஆகாயம்தானே , அழகான கூரை

இதோ உன் காதலி கண்மணி

ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை

என்பது போன்ற அபூர்வமான தேனமுத பாடல்களை , இசை ரசிகர்கள் மறக்கமுடியாது.

  இலங்கை வானொலி பிரபலமாக இருந்தபோது , இந்த பாடல்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டன

இந்த லட்டு போன்ற பாடல்கள் அமைந்தது ரஜினிக்கோ கமலுக்கோ அல்ல.  அவர்களது சமகாலத்தவரான சிவச்சந்திரனுக்கே இவை கிடைத்தன

ரஜினி , கமலுடன் பயணத்தை தைடங்கியவர்.  ரஜினியின் ஆரம்பகால தண்பர்..   நல்ல அறிமுகம் கிடைத்தன . வெற்றிகள் கிடைத்தன.

ஆனால் ரஜினிக்கும் கமலுக்கும் இருந்த முனைப்பு இவருக்கு இல்லை

பட்டினப்பிரவேசத்தில் அறிமுகமாகி பிரசித்தி பெற்று இருந்தார்.
அடுத்து பாரதிராஜா இயக்கத்தில் வாயப்பு தேடி வந்தது. கிழக்கே போகும் ரயிலில் நடிக்க வேண்டியவர் இவர்தான். காரணமே இன்றி இவர் மறுத்து விட்டார். விதி , வேறு என்ன சொல்வது

இன்றளவும் பேசப்படும் அவள் அப்படித்தான் படத்தில் நடித்தார்

பொல்லாதவன் , வெள்ளைரோஜா போன்ற பல படங்களில் 80களில் வில்லனாக நடித்தார்

அந்த வில்லன் இடத்தையும் சத்யராஜிடம் பறி கொடுத்தார்

சில படங்கள் இயக்கினார் , தயாரித்தார்.  கதை வசனம் எழுதினார்

சமீபத்தில் அரசி மெகா சீரியலில் இவரை பார்க்க முடிந்தது

திரைக்கலைஞர் லட்சுமியை மணந்து சம்யுக்தா என்ற இனிய புதல்வியுடன் வாழக்கை இனிதாக சென்றாலும் , வீணடிகப்பட்ட திறமைசாலியாகவே வரலாறு இவரை மதிப்பிடும்

திறமைக்கு வயது பொருட்டில்லை. இன்று சினிமா எடுப்பதில் திரையிடுவதில் நிறைய மாறுதல்கள் வந்துளளன . இதை பயன்படுத்தி , தன் அனுபவம் துணைகொண்டு , படங்கள் இயக்கி தன்னை நிரூபிக்க இன்றும் வாய்ப்பிருக்கிறது.  வாழ்த்துகள்




Monday, March 4, 2019

கமலும் ஜாதியும் - ராகிர படப்பிடிப்பு


கமல் ஹாசனின் சாதி குறித்த கண்ணோட்டத்தை எழுத்தாளர் ராகி ரங்கராஜன் குறிப்புள்ளதை படிக்க நேர்ந்தது,, அதை பகிர்கிறேன்

கமல்ஹாசனின் சாதி வெறி என்றெல்லாம் சீப்பாக எழுதினால் அது அந்த எழுத்தாளரை அசிங்கப்படுத்துவதாகும் ,, சும்மா ஜாலியாக இருவரும் பேசிக்கொண்டதை பகிர்ந்துள்ளார்,,, அவ்வளவுதான்

மகா நதி படத்தில் ஒரு கேரக்டருக்கு ஒரு நடிகரை பரிந்துரைத்தார் ராகிர.

அய்யய்யோ , அவர் வேண்டாம்.. நான் ஐயங்கார்., வாலி ஐயங்கார்... நம் நண்பர் சுஜாதா அய்யங்கார்.. நீங்களும் அய்யங்கார்... அந்த நடிகரும் அய்யங்கார்

அவருக்கு வாய்ப்பளித்தால் அய்யங்கார் கோஷ்டி என சொல்லி விடுவார்கள்.. அவர் வேண்டாம் என்றாராம் கமல்...

அந்த நடிகர்யார் என அவர் சொல்லி இருந்தாலும் நான் தவிர்த்து விட்டேன்

..

இன்னொரு சம்பவம்

கமலுக்கு அய்யங்கார் பாணியில் நாமம் அணிந்து நடிக்க ஓர் ஆசை இருந்தது.,, ஹே ராம் படத்தில் அது அமைந்தது

எப்பூடி என நாமம் படத்தை காட்டினார் கமல்

சம்யோஜிதமாக வடகலை நாமம் இருக்கும்படி செய்து விட்டீர்களே என்றேன் கேலியாக

காரணம் நானும் அவரும் வடகலை

அதை கேலியாக சொன்னேன்

ஆனால் அவர் அப்படி வைத்த்தில் ஜாதி கண்ணோட்டம் ஏதும் இல்லை’


இப்படி ராகிர சொல்லி இருக்கிறார்



ஜெய்சங்கர் குறித்த ஒரு நினைவுக்குறிப்பு... ராகிர ஒரு கசப்பான சம்பவத்தை எப்படி இலகுவாக சொல்கிறார் பாருங்கள்

என் கதை ஒன்று நாடகம் ஆக்கப்பட்டு டிவியில் ஒளிபரப்பானது

பார்த்து விட்டு ஜெய்சங்கர் போன் பேசினார்

வெகு அருமை.. இப்படி ஒரு படைப்பை  பார்த்ததே இல்லை என்றார்

கொஞ்சம் ஓவராக புகழ்கிறாரோ என தோன்றியது,,, அடக்கத்துடன் நன்று சொன்னேன்

அவர் விடவில்லை... வெகு நேரம் பாராட்டிய பின்புதான் ஓய்ந்தார்


சில மாதங்கள் கழித்து அவரிடம் எனக்கு ஓர் உதவி தேவைப்பட்டது

போன் செய்தேன்’

- நான் ரா கி ர பேசுறேன் என்றேன்

-சரி,, அதுக்கென்ன என்றார் சாதாரணமாக

- சும்மாதான், ஓர் உதவி என்றேன்

- அப்படியா,, என்றார் அலட்சியமாக

தேவைப்படும் உதவியை சொன்னேன் ( பள்ளி ஒன்றில் நண்பர் பையனுக்கு அட்மிஷன் )

- ஓஹோ... அப்படியா என்று கேட்டு விட்டு லைனை கட் செய்தார்

என்ன செய்வது... அன்று அவர் மூடு சரியில்லாமல் இருந்திருக்கலாம்.,, சில மாதங்களுக்கு முன் நல்ல மன நிலையில் இருந்திருக்கலாம்

Tuesday, January 22, 2019

அஜித் படம் இயக்க விஜயிடம் அனுமதி - இயக்குனர் அனுபவம்


வசூலில் விஞ்சி நிற்பது பேட்டயா விஸ்வாசமா என விவாதம் அனல் பறக்கிறது,,,   டீனேஜ் பருவத்தில் இது சுவையான விவாதமாகும்..  வரவேற்கத்தக்கதும் கூட.. காரணம் எல்லோருமே இதை கடந்துதான் வந்திருப்போம்

ஆனால் சில வியாபாரிகள் இந்த விவாதத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்துவது தவறு...

காரணம் இதில் எல்லாம் கற்றுக்கொள்ள ஒன்றும் இல்லை,, வசூல் வெற்றி என்பது படத்துக்கு பெருமையோ சிறுமையோ அல்ல

உதாரணமாக நாயகன் படத்தை விட மனிதன் படம்தான் அதிக வசூலைப் பெற்றது.,,,,அதனால் நாயகன் படத்தின் பெருமை குறைந்து விட்டதா என்ன? இரண்டு படங்களையும் விட விஜய்காந்தின் உழவன் மகன் பல இடங்களில் நல்ல வசூல்...  ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் மனிதன் மாபெரும் வெற்றிப் படம்.. நாயகன் என்றும் நினைவுகூரப்படத்தக்க முக்கியமான படம் ....

அவ்வளவு ஏன் ? தளபதி குணா ஆகிய படங்களை விட சில இடங்களில் “ தாலாட்டு கேட்குதம்மா “ “ பிரம்மா “ படங்களின் வசூல் அதிகம்,,  ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் தளபதி மெகா ஹிட்... குணா மிகச்சிறந்த கிளாசிக்

அவ்வளவு ஏன் ? பல சந்தர்ப்பங்களில் ராமராஜன் படம் அப்போதைய முன்னணி நாயகர்கள் அனைவரையுமே வசூலில் மிஞ்சியதும் உண்டு... எனவே வசூல் அக்கப்போர்கள் எல்லாம்  நீண்ட கால நோக்கில் எந்த முக்கியத்துவமும் அற்றவை.. ஆனால் அவை தவறு என்பதல்ல.. சின்ன வயதில் அது சிறந்த பொழுதுபோக்குதான்

ரசிகர்கள் இப்படி சண்டையிட்டாலும் கலைஞர்கள் அப்படி இருப்பதில்லை.

இயக்குனர் பேரரசு எழுதிய ” என்னை பிரமிக்க வைத்த பிரபலங்கள் “ என்ற நூல் படித்தேன்..   ரஜினி , கமல் , அஜித் , விஜய் , எம் ஜி ஆர் , கலைஞர் , ராஜேஷ் , மனோரமா , பாரதிராஜா , பாக்யராஜ் உட்பட பலர் குறித்து எழுதியுள்ளார்.


கமல் , ரஜினியை இயக்கிய எஸ் பி எம் போல விஜய் அஜித் என பணிபுரிந்தவர் அவர்..  அவரிடம் நிறைய எதிர்பார்த்தோம் .. ஆனால் குடும்ப பிரச்சனைகள் அவர் வளர்ச்சிக்கு தடை போட்டன,,  மீண்டு வருவார் என எதிர்பார்ப்போம்...


அந்த புத்தகத்தில் பல விஷயங்கள் சுவாரஸ்யமாக உள்ளன...


இவர் எழுதிய சிறுகதை ஒன்றை தாய் இதழில் படித்துதான் ராம நாராயணன் இவரை தன் உதவியாளராக சேர்த்துக்கொண்டு திரைப்பயணத்தை ஆரம்பித்து வைத்தார்

அதன் பின் தனியா பிரிந்த பின்னும் கூட , ஏதேனும் பிரச்சனை என்றால் என்னிடம் மீண்டும் வா என் அன்பாக கூறி அனுப்பிய அன்புள்ளம் கொண்டவர் ராம நாராயணன்.. ஏன் எப்போதும் மிருகங்களை வைத்து எடுக்கிறீர்கள்.. சமுதாய சிந்த்னைகளை காட்டலாமே என்று கேட்டதற்கு “ சோறு “ என்றொரு நல்ல படம் எடுத்து பல மாதங்கள் சோற்றுக்கு கஷ்டப்பட்ட கதையை சொன்னாராம் அவர்


நடிகர் விஜய் பல நல்ல இயக்குனர்களை உருவாக்கியுள்ளார்.. எந்த சிபாரிசும் இல்லாமல் , தான் சொன்ன கதையை மட்டுமே நம்பி தனக்கு திருப்பாச்சி பட வாய்ப்பை  அளித்ததை நன்றியுடன் பதிவு செய்துள்ளார்..  அடுத்து சிவகாசி பட வாய்ப்பும் அளித்து , படம் வென்றதும் கார் ஒன்றை பரிசளித்ததையும் சொல்லி இருக்கிறார்



அப்போது ஏ வி எம் நிறுவனம் இவரை அழைத்து அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தது... விஜயால் அறிமுகம் ஆன தன்னை அஜித் ஏற்பாரா என அச்சத்துடன் ,  நான் தான் இயக்குனர் என அஜித்திடம் சொன்னீர்களா என கேட்டார்,.,, ஆமாம் ..,,சொன்னோம்.. அவருக்கும் மகிழ்ச்சிதான் என்றது ஏவி எம் நிறுவனம்


எதற்கும் விஜயிடம் இதை சொல்லிவிடுவோம் என அவரிடம் சொன்னதற்கு “ ரொம்ப மகிழ்ச்சினா.,,, நல்ல விஷ்யம்.... இதை எல்லாம் என்னிடம் சொல்லி அனுமதி வாங்க வேண்டியதில்லை... எனக்கு சந்தோஷம்தான் “ என சொன்னது மட்டும் அன்றி , பட பூஜைக்கு வந்து வாழ்த்தினார் விஜய்..

அஜித் வீட்டுக்கு பல முறை டிவி எஸ் 50யில் சென்றிருக்கிறார் பேரரசு,,, ஷாமிலி குழந்தை நட்சத்திரமாக ராம நாராயாணன் படத்தில் நடித்தபோது பழக்கம் என்பதால் ஒரு துணை இயக்குனராக குடும்ப நண்பராக சென்றிருக்கிறார்... இப்போது இயக்குனராக , அவரிடம் கதை சொல்வதற்கு அவர் வீட்டுக்கு விஜய் பரிசளித்த காரில் சென்றதை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்


பாரதிராஜாவை கிரக பிரவேசத்துக்கு அழைத்தபோது அன்றைய தேதியில் பிசி என்றார் பாரதிராஜா... உங்களுக்கு வசதியான தேதியை சொல்லுங்கள் என்று கேட்டு அந்த தேதியில் கிரகபிரவேசத்தை வைத்தார் பேர்ரசு..

பாரதிராஜா வந்து பார்த்தபோது வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆனால் வேறு விருந்தினர்கள் யாரும் இல்லை... என் விழாவுக்கு நீங்கள் மட்டும் வந்தால்போதும் என்பதால்தான் இந்த ஏற்பாடு.,,காரணம் உங்களைப் பார்த்து உருவானவன் நான் என சொல்லி அவரை நெகிழச்செய்திருக்கிறார் பேர்ரசு

ரஜினி ரசிகனான இவர் சின்ன வயதில் 60 கிமீ சைக்கிள் மிதித்து மதுரையில் ரஜினி படம் பார்த்தவர்

அப்படிப்பட்ட ரஜினி இவர் படங்க்ளை பார்த்து விட்டு ( திருப்பாச்சி , சிவகாசி ) போன் செய்து பாராட்டியதை பெருமையாக நினைக்கிறார்.,,  ரஜினிக்கு பிரத்யேகயமாக திருப்பதி படம் திரையிட்டப்பட்டு அவருடம் படம் பார்த்ததையும் சொல்லி இருக்கிறார்


வாலி , வைரமுத்து போன்றோருடனான அனுபவம் , இவர் பாடால் குறித்து விஜ்யின் கமெண்ட்,,,  நெகிழ வைத்த எஸ் பி எம்  , ஆச்சர்ய்படுத்திய மணிர்த்னம் என பல தகவல்கள்’

கண்டிப்பாக படியுங்கள்


என்னைப் பிரமிக்க வைத்த பிரபலங்கள் - இயக்குநர் பேரரசு
பக்.160; ரூ.110; 
கற்பகம் புத்தகாலயம்

Sunday, December 20, 2015

கேள்வி கேட்கும் கலை - உளறல் நிருபர்களும் கமல்ஹாசனும் - ஒப்பீடு

இடம் பொருள் தெரியாமல் கத்துக்குட்டித்தனமாக கேள்வி கேட்பவர்கள் பரபரப்பை மட்டுமே நம்பி இருக்கிறார்கள்... ஆனால் ஒரு நல்ல ஊடகம் பரபரப்பை மட்டும் நம்பி செயல்படாது.. பரபரப்பு என்பது ரொம்ப நாள் நிற்காது என்பது அவர்களுக்கு தெரியும்..
கொஞ்ச நாட்களாக தொலைக்காட்சி , இணையத்தில் இருந்து விலகி அதிகம் வானொலிதான் கேட்கிறேன்..அதில் ஹலோ எஃப் எம்மில் கேட்ட ஒரு நிகழ்ச்சி இன்னும் என் நினைவில் தங்கி இருக்கிறது...
இதில் கலந்து கொண்டவர் கமல்ஹாசன்..
பரபரப்பு ஏற்படுத்தி இருக்கலாம் என்ற வாய்ப்பு இருந்தும் அதை எப்படி அவர் தவிர்க்கிறார் என்பதை கவனியுங்கள்
எச் ஐ வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் பெற்றால்தான் பிள்ளையா என்றொரு அமைப்பு செயல்பட்டு வருகிறது... கமல்ஹாசனும் , ஹலோ எஃப் எம்மும் இணைந்து இதை வழி நடத்துகிறார்கள்...
சிறுவர்களுக்கு எப்படி எய்ட்ஸ் வருகிறது என்றால் , அவர்களது பெற்றோர்கள் மூலம் பிறக்கும்போதே வந்து விடுகிறது...
அப்படி பாதிக்கப்பட்டோருடன் கமல் பேசுவதை கவனியுங்கள்.. அந்த பண்பை பாருங்கள்
--------------
வணக்கம்மா... என் பேரு கமல்ஹாசன்... உங்களைப்பத்தி சொல்லுங்க

அவரைப்பற்றி எல்லோருக்கும் தெரியும் என்றாலும் தன்னை அறிமுகம் செய்தபின்பே பேசும் நாகரிகம்...அது மட்டும் அல்லாமல் , ஒரு செலிப்ரிட்டியாக பேசாமல் , ஒரு நண்பன் போல அவர்கள் பிரச்சனையை , அவர் சொல்லாமல் விட்டதைக்கூட நினைவு படுத்தி பேசுகிறார்..

எப்ப கல்யாணம் ஆச்சு

எனக்கு பதினாறு வயசுலயே , முப்பது வயசு ஆளு ஒருவருடன் கல்யாணம்

ரொம்ப வயசு வித்தியாசமா இருக்கே..எப்படி ஒத்துக்கிட்டீங்க

என்னை யாரும் கேட்கல... கடமையை முடிச்சா போதும்னு ரெண்டாம் தாரமா பண்ணி வச்சுட்டாங்க..அவர் மூலமா எனக்கு இந்த நோய் வந்திருச்சு

ஓ..ரெண்டாம் தாரமா...அப்ப இன்னொரு பொண்ணும் பாதிக்கப்பட்டு இருப்பாரே...
-------------
அடுத்து சிறுவனுடன் பேசுகிறார்
வணக்கம்,... நான் யாருனு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்... உங்க பேரு என்னனு சொல்ல வேண்டாம்... அது தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கலாம்...
அவர்கள் அடையாளத்தை சொல்லி பரபரப்பு ஏற்படுத்த விரும்பாத தன்மையை கவனிக்கவும்.. பரபரப்பு வேண்டாம் ..ஒரு எமோஷனல் டச் கொடுப்பதற்காகக்கூட பெயரை பயனபடுத்தலாகாது என நினைக்கிறாரே... அது பெரிய மனம்
------- 

பெற்றால்தான் பிள்ளையா எனும் இந்த அமைப்பு குறித்தி அறிந்து கொள்ள ஹலோ எஃப் எம்மை கேட்கவும்

Sunday, June 8, 2014

கமல்ஹாசன் முகத்துக்கு நேராக பேச மாட்டார் - ரோகிணி பரபரப்பு பேச்சு - பிரத்தியேக கவரேஜ்

பலதரப்பட்ட ஆளுமைகளின் உரைகளை கேட்க , அவர்களுடன் உரையாட நல்வாய்ப்பாக அமைந்து இருப்பது ஞாநி நடத்தும் கேணி கூட்டங்கள்...  இலக்கியம் , சினிமா, மருத்துவம் , அரசியல் என பல துறையினரை இங்கு சந்திக்கலாம்..

அந்த வகையில் இன்று ( ஜுன் எட்டாம் தேதி , 2014) நடந்த கூட்டத்தில் நடிகர் & இயக்குனர் ரோகிணி பேசினார்.. மறுபடியும் , மகளிர் மட்டும் என பல படங்களில் இவரை மறந்து இருக்க முடியாது..தவிர சில திரைப்பட பாடல்கள் எழுதியுள்ளார்.. அப்பாவின் மீசை எனும் படம் எடுத்து வருகிறார்.

மரங்கள் சுழ்ந்த இனிமையான இடம்.. நல்ல கூட்டம்.  திரைத்துறையினர் , முக நூலர்கள் , பத்திரிக்கையாளர்கள் என பலர் வந்து இருந்தனர்.

ஞாநி வரவேற்புரை நிகழ்த்தினார்.. வழக்கமாக சுருக்கமாக பேசும் அவர் , சற்று விரிவாகவே பேசினார்... ரோகிணியுடனான தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசியது...

ரோகிணியை எனக்கு வெகு நாட்களுக்கு முன்பே தெரியும், அவரை நான் முதன்முதலில் சந்தித்தது அவருக்கே நினைவு இருக்குமா என தெரியவில்லை.. தூர்தர்ஷனுக்காக ஒரு நிகழ்ச்சி செய்தேன். அதில் ஒரு பேட்ட்டிக்காக ரோகிணியை சந்தித்தேன்.. அப்போது அவர் சிறிய பெண்.  அப்போதைய இடத்தில் இருந்து , இப்போது நிறைய டிரான்ஸ்ஃபார்ம் ஆகி இருக்கிறார்.  அந்த மாற்றமே அவரை இங்கே அழைக்க செய்தது.. நிறைய வாசிக்கிறார். தற்போது ஒரு படம் இயக்குகிறார்.

 நடிகர்கள் பலருக்கு பொதுவான விஷயங்கள் தெரிவதில்லை.. நான் உட்பட பலருக்கும் பிடித்த நடிகர் சிவாஜி கணேசன். அற்புதமான நடிகர். பழகுவதற்கு மிக இனிமையானவர். அவர் ஜனதா தள் தலைவராக இருந்தபோது , விபி சிங் ஆதரவு நிலையில் சிவாஜியுடன் இணைந்து செயலாற்றி இருக்கிறேன். எளிமையாக இனிமையாக பழகுவார்.  ஆனால் அவருக்கு சினிமா, அதில் தான் ஏற்கும் பாத்திரம் இவை மட்டுமே தெரிந்தவர் அவர்.

மாறாக ரஞ்சன் என்ற நடிகர் அந்த காலத்தில் இசை பத்திரிக்கை வெளியிட்டார். பல விஷ்யங்கள் தெரிந்து வைத்து இருந்தார். தற்போது நாசர் உட்பட சிலருக்கு மட்டுமே பொது விஷ்யங்கள் தெரிகின்றன. பெண் நடிகர்களில் விஷ்யங்கள் தெரிந்தவர்கள் குறைவு. இவர்களில் சற்று மாறுபட்டவர் ரோகிணி. நிறைய வாசிக்கிறார். தெளிவாக முடிவெடுக்கிறார்.

அவரை வைத்து குறும்படம் ஒன்றை இயக்கினேன்.. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட பத்து நிமிட படம் அது. சிறப்பாக நடித்தார். இன்னொரு படத்துக்காக அணுகிய போது  , அந்த கதை பிடிக்காமல் நடிக்க மறுத்து விட்டார். நோ சொல்ல தெரிந்தவர் அவர்.. அவர் இப்போது பேசுவார்”

பிறகு ரோகிணி பேசினார்...

ஒரு கல்லூரிக்கு பேச போனேன். நிறைய தயார் செய்து பேசினேன்.. பேசி முடித்து விட்டு , ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என கேட்டேன்.. " ஆமா...சீக்கிரம் பேச்சை முடிங்க... பஸ்சுக்கு லேட் ஆகுது என்றார்கள்.. இப்படி சில இடங்களில் ஆகிறது..

இன்னொரு கல்லூரிக்கு போய் இருந்தபோது ஆரம்பத்திலேயே கேட்டு விட்டேன். என்ன டாபிக் பேச விரும்புகிறீர்கள்.. அவர்கள் சொன்னார்கள் , மறுபடியும் படத்தில் வரும் ஆசை அதிகம் வச்சு பாடலுக்கு டான்ஸ் ஆடுங்கள். திகைத்து போனேன். நான் அதற்கு பிராக்டிஸ் செய்திருக்கவில்லை.. அவர்கள் எண்ணமோ டான்ஸ் பார்ப்பதில்தான் இருந்து இருக்கிறது.

பார்வையாளர்களுக்கு ஏற்பவே பேச்சு அமையும். வேறு எங்கும் பேச முடியாத சிலவற்றை இங்கே பேச விரும்புகிறேன்.

நாம் எப்படி பிறக்கிறோம்.. எங்கே பிறக்கிறோம் என்பது முற்றிலும் தற்செயலானது.. நான் பெண்ணாக பிறந்தது , நடிகை ஆனது எல்லாம் தற்செயலானவை..

ஆரம்பத்தில் இதற்காக வேதனைப்பட்டு இருக்கிறேன். காரணம் இங்கே பெண்கள் என்றாலே இரண்டாம் இடத்தில்தான் வைத்து பார்க்கிறார்கள்.. அதிலும் பெண் நடிகர் என்றால் மதிப்பதே இல்லை..

ஆரம்பத்தில் நான் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது நடிப்பு இனிமையாக இருந்தது.. காரணம் சாக்லேட் கிடைக்கும், அழுகை சீனாக இருந்தாலும் , நன்றாக அழுதால் சாக்லேட் கிடைப்பதால் அதை ஜாலியாக செய்வேன்.

15 அல்லது 16 வயதில் இளமைப்பருவத்தில் நடித்த போதுதான் , சிக்கல் ஆரம்பித்தது. ஒரு கவர்ச்சியான ஆடையை எனக்கு அணிவித்து , என்னை விட 20 வயது பெரிய நடிகர் ஒருவருடன் காதல் பாட்டுக்கு ஆட சொன்னபோது திகைத்தேன்..  கவர்ச்சிக்கன்னி , ரோகினி எனும் வன மோகினி என்ற கேப்ஷன்களுடன் என் படங்கள் பத்திரிக்கைகளில் வெளி வருவதை எப்படி எதிர்கொள்வது என்பதெல்லாம் எனக்கு குழப்பமாக இருந்தது...

காலப்போக்க்கில் காதல் என்பதை எப்படி வெளிக்காட்டுவது , நடிப்பு போன்ற வற்றை கற்றேன். ஒரு கட்டத்தில் நடிப்பதற்கோ , பெண்ணாக இருப்பதற்கோ வேதனைப்படக்கூடாது என முடிவெடுத்தேன். நடிகர் என்பதில் பெருமைப்படுகிறேன்.

ஆனால் பல எழுத்தாளர்களும்கூட பெண் நடிகர்களைப்பற்றி தவறாக எழுதுகிறார்கள்.. குறிப்பாக அசோக மித்ரன் நாவல் ஒன்றை படித்து மனம் நொந்தேன்.

மெத்தப்படித்தவர்கள்கூட பெண் நடிகர்கள் என்றால் இழிவாகவே நினைக்கிறார்கள்.  ஒரு நிகழ்ச்சிக்கு மனுஷ்ய புத்திரன் என்னை அழைத்தார். அப்போது பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் பாடல் எழுதி இருந்தேன்.. அந்த அடிப்படையில் அழைத்தார்.  அதில் எழுத்தாளர் சுஜாதாவும் கலந்து கொண்டார்.

ஒருவர் புத்தகம் வெளியிட நான் அதை பெற்றுக்கொண்டேன். அதைப்பார்த்த சுஜாதா என்னிடம் கேட்டார் “ என்ன, உனக்கு படிக்கவெல்லாம் தெரியுமா “ அவர் அப்படி கிண்டலாக கேட்டது என்னை புண்படுத்தியது.

இப்படி பெண்களுக்கு எதிரான சூழலே இங்கு உள்ளது.. இதை மறுத்து யாராவது பேசினால் மகிழ்வேன் .. “

இப்படி அவர் பேசி முடித்ததும் ஞாநி பேசினார்.

நீங்கள் இப்படி நம்பிக்கை இழக்க தேவை இல்லை.. அசோக மித்ரன் வேறொரு  நாவலில் பெண் நடிகர்களைப்பற்றி பாசிட்டிவாக எழுதியுள்ளார். வேறு பலரும் எழுதி இருக்கிறார்கள்.. சரி..இப்போது பார்வையாளர்கள் கேள்விகள் கேட்கலாம்..

*****************************************************

பாடல் எழுதிய அனுபவம் குறித்து சொல்லுங்கள்..

அது தற்செயலான ஒன்று.. ட்யூனுக்காக அல்லாமல் கவிதை ஒன்றை எழுதி தருமாறு கவுதம் மேனன் கேட்டார் , பச்சைக்கிளி முத்துச்சரம் படத்துக்காக, எழுதிக்கொடுத்தேன்.. ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ் அந்த கான்செப்ட்டை விரும்பவில்லை.. ட்யூனுடன் கூடிய பாடல்தான் வேண்டும் என்றார்.  என் வரிகள் ட்யூனுக்கு செட் ஆகவில்லை..இப்போது கவுதம் மேனனுக்கு தர்ம சங்கடம். ட்யூனுக்கு ஏற்றபடி 20 வகையான வரிகள் எழுதித்தாருங்கள்..அதில் சிறந்ததை பயன்படுத்திக்கொள்கிறோம் என்றார்..  நான் நான்கு வகையில் எழுதினேன்.. அதில் அவர்கள் தேர்ந்தெடுத்ததுதான் படத்தில் இடம் பெற்றது


*****************************************************

ரகுவரன் , நாசர் போன்றோர் திரைப்படக்கல்லூரியில் பயிற்சி பெற்றவர்கள்..உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காதது குறித்த ஏக்கம் இருக்கிறதா?

இது போன்ற பயிற்சிகளை நான் வரவேற்கிறேன். கூத்துப்பட்டறை போன்றவற்றில் கொடுக்கப்படும் பயிற்சிகள் ஆரோக்கியமானதே.  ஆனால் இந்த பயிற்சிகளுக்கு நான் போனதில்லை என்பதில் வருத்தம் இல்லை.. காரணம் எனக்கு பல குரு நாதர்கள் கிடைத்துள்ளனர்.. அவர்களிடம் கிடைத்த பயிற்சியை பெரிதாக நினைக்கிறேன். பரதன் போன்ற இயக்குனர்கள் காட்சியை விளக்குவதே பெரிய பாடம்தான்..

 நாகேஷ் இயக்கத்தில் ஒரு படம்.. நான் அழுவதாக காட்சி..அவர் எனக்கு கிளிசரின் தரவில்லை.. தன் கண்களையே பார்க்குமாறு சொன்னார்.. பார்த்தேன்,,, அவர் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.. பார்த்ததும் என் கண்களிலும் கண்ணீர்.. அப்படியே நடிக்க சொன்னார்...இதெல்லாம் பாடம்தானே

ஞாநி

நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.. ரகுவரனுடன் நான் பழகி இருக்கிறேன்.. அவர் ஒரு போதும் தான் பயிற்சி வகுப்புகளுக்கு சென்றதாக சொன்னதில்லை.. பயிற்சிகளை ஆதரித்தோ எதிர்த்தோ அவர் பேசியதில்லை..  நாசர் பயிற்சி வகுப்புகளுக்கு போய் இருக்கிறார்..  எப்படி நடிக்கக்கூடாது என அங்கே கற்றதாக அவர் கூறுவார்

*********************************************************





உங்கள் வாசிப்பு அனுபவம் குறித்து சொல்லுங்களேன்..

 நான் ஆரம்பத்தில் வாசிக்க ஆரம்பித்தது கல்கிதான்.. கிட்டத்தட்ட அனைத்தும் வாசித்துள்ளேன்.. பொன்னியின் செல்வன் போன்றவை மிகவும் பிடிக்கும். பிறகு ஜெய காந்தன் , தி ஜா ரா வாசிக்க ஆரம்பித்தேன்..

ஆரம்பத்தில் புரியவில்லை...போக போக , மோக முள் போன்றவற்றை புரிந்து கொண்டு ரசிக்க ஆரம்பித்தேன்.  சுந்தர ராமசாமி , பஷீர் என வாசிப்பு வளர்ந்தது..குழந்தைகளி உலகை புரிந்து கொள்ள பஷீர் சிறுகதைகள் உதவின

******************************************************************

 நீங்கள் ஒரு டப்பிங் கலைஞரும்கூட...டப்பிங் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

டப்பிங் என்பது எனக்கு எக்சைட்டிங்கான ஒன்று.. எழுத்தாளர் ஒன்றை படைக்கிறார்..இயக்குனர் ஒன்றை உருவாக்குகிறார்.. நடிப்பவர் ஒரு பரிமாணத்தை சேர்க்கிறார்.. இந்த மூவர் சேர்ந்து உருவாக்கிய ஒன்றில் கூடுதலாக ஒன்றை சேர்க்கும் டப்பிங் பணி சுவையான ஒன்று..

இதயத்தை திருடாதே , இருவர் போன்ற படங்களில் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்.. அந்த படங்களில் என் இயல்பான குரலையே பயன்படுத்த அனுமதித்தார். ஆனால் பம்பாய் படத்தில் மனிஷா கேரக்டருக்கான குரல் மென்மையாக இருக்க வேண்டும் என விரும்பினார்.. இதற்காக பல குரல்களில் பேசி காண்பித்தேன்.. கடைசியாக ஒரு குரலை ஒப்புக்கொண்டார்..இந்த குரலுக்காக நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது..

ராவணன் படத்தில் நான் பாரதியார் பாடலை பாடிய விதம் அவருக்கு பிடிக்கவில்லை.. இந்த அளவுக்கு இனிமையாக வேண்டாம்.. கடத்தப்பட்ட பெண் கத்தி இருப்பார்..அழுது களைத்து இருப்பார்.. அந்த குரல் இவ்வளவு இனிமையாக இருக்ககூடாது என்றார்... அவர் கேட்ட குரலை கொடுப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டேன்.

இப்படி கஷ்டப்பட்டாலும் , குரல் மூலம் ஒரு காட்சி செழுமை அடையும்போது இயக்குனர்கள் மகிழ்வார்கள்..


*************************************************************************

திரைத்துறையில் இருக்கும் பெண்கள் ஃப்ரீயாக இருப்பார்கள் என்பது உண்மையா

ரோகிணி : ஃப்ரீயா என்றால் என்ன அர்த்தம் //ஃபிரீ செக்சா

ஞாநி :  மற்ற பெண்களுக்கு இல்லாத சுதந்திரம் உங்களுக்கு உண்டா என கேட்கிறார்..

ரோகிணி ; முன்பே சொன்னது போல சினிமாவுக்காக கவர்ச்சி ஆடைகள் அணிய வேண்டி இருக்கும்.. ஆனால் அன்றாட வாழ்வில் அப்படி ஆடை அணிய முடியாது...   ஸ்லிவ்லெஸ் அணியக்கூட வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள்... இரவு  நேரங்களில் வெளியே சுற்ற விட மாட்டார்கள்... மற்ற பெண்களுக்கு இருக்கும் எல்லா கட்டுப்பாடுகளும் எங்களுக்கு உண்டு

ஞாநி : எல்லா துறைகளைப்பற்றியும் இப்படி மித்கள் இருப்பதும் , உடைவதும் இயல்பானதே.. நான் பத்திரிக்கையாளன் என்பதால் , என்னுடன் பேசவே உறவினர் பயப்படுவார்கள்..  சொல்வதை பேப்பரில் எழுதி விடுவேன் என பயம்.. செய்தியாளன் என்றால் எல்லாவற்றையும் எழுதிவிடுவான் என்பது மித்..அதேபோல , ஐ டி பெண்கள் , ஆண்கள் எல்லோரும் பப்பிலேயே விழுந்து கிடப்பார்கள் என்பதும் கற்பனையான ஒன்றுதான்

**************************************************************

உங்களை கவர்ந்த சில இயக்குனர்கள் குறித்து ?

பலரை சொல்லலாம்.. பரதன் ஒரு ஷாட்டை எப்படி வைக்க வேண்டும் என்பதில் நிபுணத்துவம் கொண்டவர்.. அதை அனாயசமாக செய்வார்.. இவரது திறமையில் ஒரு பங்கை மிஷ்கினிடம் காணலாம்.

சிங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் கேஷுவலாக இருப்பார்... அவருக்கு வேண்டியதை நம்மிடம் இருந்து எடுத்து விடுவார்..

மகளிர் மட்டும் பெருவெற்றி அடைய எங்களது டீம் ஸ்பிரிட்டே காரணம் என பாராட்டினார்,, நான் , ஊர்வசி  , ரேவதி ஆகிய மூவரும் ஈகோ இல்லாமல் நடித்தோம்.. ஊர்வசி சிறப்பாக நடிக்கிறார் , அவருக்கு பாராட்டு கிடைக்கும் என நன்கு தெரிந்திருந்தது... ஆனாலும் அவர் நடிப்பை ரசித்தோம்...படம் ரிலிசான பின் , யாருக்கு வரவேற்பு அதிகம் தெரியுமா என கமல் போனில் கேட்டார்..  ஊர்வசிக்குத்தானே சார் என சிரித்துக்கொண்டே கேட்டேன்.. ஊர்வசி என்னை விட சிறந்த நடிகர்

***********************************************
கமல் பற்றி உங்கள் கருத்து?

அவர் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன்.. எனக்கு மட்டும் அல்ல .. பலருக்கும்..புதிதாக பல விஷ்யங்களை கற்றுக்கொண்டே இருப்பார்... எந்த கம்ப்யூட்டரிலும் இல்லாத அளவுக்கு இன்ஃபர்மேஷன்களை தன் மூளையில் சேர்த்து வைத்து இருப்பார்.. இவ்வளவு விஷ்யங்கள் தேவையா என்று நமக்கு தோன்றும்.. இவைதான் அவரை உயிர்ப்புடன் வைத்து இருக்கின்றன என்றும் தோன்றும்.. அவரை பொருத்தவரை , கற்பதே அவரது ரிலாக்சேஷன்...

 நல்ல விஷ்யங்களை யார் செய்தாலும் பாராட்டி விடுவார்.. ஆனால் முகத்துக்கு நேராக பாராட்ட மாட்டார்..  நான் அவருடன் பல படங்களில் வேலை செய்து இருக்கிறேன்.. என்னை பாராட்டியதே இல்லை. ஆனால் மற்றவரகளிடம் என்னை குறிப்பிட்டு பாராட்டியதாக அவர்கள் சொல்வார்கள்..

உன்னை போல ஒருவன் படத்தில் டப்பிங் பணிக்காக என்னை அழைத்தார்.. பணியின்போது அதை கண்டு கொள்ளவே இல்லை.. வழக்கமாக அது சரி இல்லை , இது சரி இல்லை என உயிரை வாங்கும் அவர் இப்படி நடந்து கொள்வது ஆச்சர்யமாக இருந்தது.. பிறகுதான் தெரிந்தது.. அவர் என்னை அழைத்ததே மிஷ்கினை பாராட்டத்தான்... நந்தலாலா படத்தைப்பற்றி பாராட்டிக்கொண்டே இருந்தார்...

ஒருவரை நேரில் பாராட்டாமல் இன்னொருவரிடம் பாராட்டுவது அவர் பாணி..


**************************************************************

ரகுவரனின் சினிமா ஈடுபாடு பிரபலமான ஒன்று...  அவர் குறித்த உங்கள் பார்வை..

அவரைப்பற்றி எவ்வளவோ சொல்லலாம்... ஒரு கதாபாத்திரம் முடிவான உடன் , அந்த பாத்திரத்துக்குள் செல்வதற்கான பணியை தொடங்கி விடுவார்.. பொருத்தமான ஆடை , அதற்கான துணி என இறங்கி விடுவார்.. எந்த துணியாக இருந்தால் என்ன என்றால் கேட்க மாட்டார்...  எப்படிப்பட்ட கண்ணாடி அணிய வேண்டும் என யோசிப்பார்.. அந்த கேரக்ட்டர் கண்ணாடியை உடைத்து விடும் , எனவே உடையாத கண்ணாடிதான் வாங்கிக்கொடுப்பார்கள் என யோசிப்பார்...  கண்ணாடி அதற்கான பட்டை என தேர்ந்தெடுப்பார்.

அவரது ஷாட் முடிய எவ்வளவு நேரம் ஆனாலும் அதை முடித்து விட்டுதான் சாப்பிடுவார்... அல்சர் , டயாப்படீஸ் என பாதிக்கப்பட்ட உடல் நிலையில் இருந்தாலும் பிடிவாதமாக இருப்பார்...  சில இயக்குனர்கள் , அவர் நிலையை உணர்ந்து அவர் காட்சியை சீக்கிரம் முடித்து விடுவார்கள்..

கதாபாத்திரத்தைப்பற்றியே யோசித்து சில ஐடியாக்களை இயக்குனர்களுக்கு பரிந்துரைப்பார்.. பல நேரங்களில் அவை ஏற்கப்பட்டுள்ளன...

பார்த்தேன் ரசித்தேன் படத்தில் அவர் கேரக்டர் ஹீரோயினின் அண்ணன் என்று இருந்ததை ஸ்டெப் பிரதர் என மாற்றியது அவர்தான்.. பூவிழி வாசலிலே படத்தில் செயற்கை கால் என்பது அவர் ஐடியாதான்.. சில நேரங்களில் அவர் ஈடுபாடு பயமாக இருக்கும்...

வாசிப்பில் அவருக்கு தீவிர ஈடுபாடு உண்டு.. ஆனால் படித்த கதாபாத்திரங்களை படத்தில் பயன்படுத்தினாரா என தெரியவில்லை...  வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களின் குணாதிசயங்களை படத்தில் பயன்படுத்துவார்.. கோபப்படும்போது நான் அமைதியாகி விடுவேன்.. இதை ஒரு படத்தில் பயன்படுத்தினார்...

அவர் பேசும் பாணி பாராட்டு பெற்றதால் அப்படியே படங்களில் பேசினார்.. ஆனால் ரியல் லைஃபில் அப்படி பேச மாட்டார்... அந்த பாணியில் பேசாமலும் நடித்துள்ளார்.
ஒசாமா பின் லேடன், ஜிட்டு கிருஷ்ண மூர்த்தி போன்ற வேடங்களில் நடிக்க விரும்பினார்

********************************************************************

உங்கள் ரோல் மாடலாக யாரை நினைக்கிறீர்கள்

அருந்ததி ராயின் துணிச்சல் எனக்கு பிடிக்கும்,, பிரச்சனையை பின் பாயிண்ட் செய்து அவர் பேசுவதை ரசிப்பேன்

******************************************************************

நீங்கள் நடிக்க விரும்பும் கதாபாத்திரம்?

 வண்ணநிலவனின் எஸ்தர்

************************************************************************

நீங்கள் இயக்கும் படத்தைப்பற்றி?

அப்பாவின் மீசை என்ற என் படம் கண்டிப்பாக அனைவரும் ரசிக்கும்படி இருக்கும்... இந்த படம் வந்த பின் , என் திறமை பரவலாக அனைவருக்கும் தெரிய வரும்... அதன் பின் , என் ஆலோசனைகளுக்கு இயக்குனர்கள் மத்தியில் மதிப்பு ஏற்படும் என கருதுகிறேன்

**********************************************





Friday, December 6, 2013

மேதைகள் ஒன்றிணைந்த அபூர்வமான கமல்ஹாசன் திரைப்படம்

ஒரு ஊதாப்பூ கண்  சிமிட்டுகிறது - மேதைகளின் சங்கமம்
 
நடிப்பு - கமல் , சுஜாதா , விஜயகுமார், வீராசாமி
இசை  - வீ .தட்சிணாமூர்த்தி
கதை   - புஷ்பா தங்கதுரை
இயக்கம் - எஸ் பி முத்துராமன்
கதை - தன் காதலிக்காக கொலை செய்து ஜெயிலுக்க்கு போகும் இளைஞன் , விடுதலை ஆகும்போது அவள் வேறு ஆணை மணந்து விட்டாள்... ஒரு கட்டத்தில் கணவனை விட்டுவிட்டு பழைய காதலனுடன் செல்ல முடிவு செய்கிறாள்... கிளைமேக்சில் ”பண்பாடு ”

காக்கப்படுகிறது





*****************************************************************************
தமிழின் டாப் 100 படங்களை பட்டியல் இட்டால் இந்த படம் அதில் இடம்பெறாது...  ஆனாலும் எழுத்தில் தனக்கென ஒரு பாணி வைத்து இருந்த புஷ்பா தங்கத்துரை , இளையராஜாவே சாமி என மரியாதையுடன் அழைத்த மேதை வி தட்சிணாமூர்த்தி , இன்னும் தன் பாணியில் சமரசம் செய்யாமல் நடித்து வரும் கமல் , கவியரசர் கண்ணதாசன் என்ற  நான்கு மேதைகள் ஒன்றிணைந்த அபூர்வ படம் என்ற வகையில் இந்த படம் பற்றி லேசாக பேசலாம்.

வாரப்பத்திரிக்கைகள் , தொடர்கதைகள் கொடிகட்டிப்பறந்த அந்த நாட்களில் சுஜாதா தன்னிகரற்ற ஸ்டாராக விளங்கினார்.. வித்தியாசமான நடை , புதுமையான கரு என மக்களை ஈர்த்தார்...கூடுதல் அட்ராக்‌ஷனாக வார்த்தை விளையாட்டுகள்..

உதாரணமாக டைப் அடித்தேன் என எழுத மாட்டார்..டைப்பினேன் என்பார்..அன்பளித்தேன், டயலினேன் என்றெல்லாம் எழுதுவார்...

அவன் படியில் இருந்து



    ற

          ங்

                கி

                          னா

                                      ன்


என எழுதுவார்...

பழைய வார்த்தைகளை வேண்டுமென்றே பயன்படுத்துவார்... எனக்கு விருது வழங்கினார்கள்.. நான் தன்யனானேன் என்பார்.


இதை எல்லாம் விளையாட்டாக செய்தாரே தவிர இதுதான் தன் பலம் என நினைக்கவில்லை..

ஆனால் அப்போது இருந்த எழுத்தாளர்கள் பலர்., இதுபோலவே வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபட்டு சுஜாதா போல தாங்களும் எழுதுவதாக நினைத்துக் கொண்டனர்...

க்ளிஷேக்களை தவிர்க்க சுஜாதா முயன்றார்..ஆனால் இவர்களோ சுஜாதாவின் வார்த்தைகளையே க்ளிஷேக்கள் ஆக்கி விட்டார்கள்..கடைசிவரை இரண்டாம் தர எழுத்தாளர்க்ளாகவே இருந்தனர்...( இலக்கியம் சார்ந்து செயல்பட்டவர்க்ளை இங்கு சொல்லவில்லை.. நாம் பேசுபது வணிக / வெகு ஜன எழுத்தாளர்க்ளை ).

இதில் தமது அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல் எழுதியவர்களும் உண்டு,...உதாரணம் ராஜேஷ் குமார்...அதேபோல , புஷ்பா தங்கத்துரையும் , முற்றிலும் வேறுபட்ட தன் பாணியை என்றும் விட்டுக்கொடுக்கவில்லை...

கடைசிவரை (உண்மையான ) பிரம்மச்சாரியாக வாழ்ந்த அவர் , காமரச எழுத்தில் சிறந்து விளங்கினார்... அவரது முக்கியமான நாவல்களில் ஒன்றுதான் , ஒரு ஊதாப்பு கண் சிமிட்டுகிறது.. கதையில் கவர்ச்சிக்கான ஸ்கோப் அதிகம்.அப்போதைய கமலில் காதல் இளவரசன் இமேஜுக்கு பொருத்தமான கதை என்பதால் , இந்த கதையை படமாக்கி இருக்கிறார்கள்..

மர்ம நாவல்களுக்கே உரிய பரபரப்புடன் படம் ஆரம்பிக்கிறது... கமல் தான் சிறையில் இருந்து வருவதாக சொல்லி அதிர்ச்சி அளிக்கும்போது டைட்டில் ஓட ஆரம்பிக்கிறது...அவர் அப்பா உட்பட அனைவரும் அவரை வெறுக்கிறார்கள்... அவர் ஏன் சிறைக்கு சென்றார்..அவரை ஏன் வெறுக்கிறார்கள் என்ற ஃபிளாஷ்பேக் மெல்ல விரிகிறது..

ஊதாப்பூவாக கண் சிமிட்டி ஓர் இளைஞனின் வாழ்க்கையில் சூறாவளி ஏற்படுத்திய பெண்ணின் கதை...

”கற்புக்கு “ பங்கம் வராமல் முன்னாள் காதலனுடன் ஒரு நாள் மனைவியாக வாழ்வது, இன்னொரு பெண் கமலை மயக்க , புழுக்கத்தை காரணமாக சொல்லி , ஆடைகளை களைவது என அந்த கால கமல் ரசிகர்களுக்கு விருந்து படைத்து இருக்கிறார்கள்..

இப்படி எல்லாம் செய்து விட்டு மெசேஜ் சொல்லி பண்பாட்டை காப்பாற்றி விடுகிறார்கள்...

ஒரு கில்மா படத்தின் விளிம்பைத்தொட்டாலும் , இந்த படத்துக்கு ஒரு மரியாதையை தருவது தட்சிணாமூர்த்தியின் இசை...

கமலும் அவர் காதலியும் முதன் முதலாக பார்ப்பது , பார்வையால் காதலை வளர்ப்பது என ஒரு பத்து நிமிடத்துக்கு இசையாலேயே கதை சொல்லி இருப்பார்...அதுவும் கர்னாட்டிக் பாணியிலான இசையில்...சூப்பர்..

இவர் இளையராஜா உட்பட பலருக்கு குருவாக இருந்தவர்... ஜேசுதாஸ் இவரைப்பற்றி உயர்வாக பேசுவார்...கொஞ்ச நாள் சாமியாராக இருந்து விட்டு வந்தவராம்.. ப்லரும் இவரை சாமி என்றே அழைப்பார்கள்..

முறுக்கு  ,கை முறுக்கு என டீ கே கலாவின் அட்டகாசமான குரலில் ஒரு பாடல், ஆண்டவன் இல்லா உலகம் எது..ஆசைகள் இல்லா இதயம் எது என டீ எம் எஸ் குரலில் ஒரு பாடல்.. மேலும் கண்ணதாசன் வரிகளில் ஒரு எவர்க்ரீன் பாடல்

நல்ல மனம் வாழ்க 
நாடு போற்ற வாழ்க 
தேன் தமிழ் போல் வான் மழை போல் , 
சிறந்து என்றும் வாழ்க 

பூவுலக லட்சியங்கள்
பூப்போன்றே வாடும்
தெய்வசொர்க்க நிச்சயம்தான்
திருமணமாய் கூடும்.



பொருத்தமென்றால் புது பொருத்தம்
பொருந்திவிட்ட ஜோடி
நான் புலவன் என்றால் 
பாடிடுவேன் கவிதை ஒரு கோடி 


மண வாழ்க்கை அமைவ்தற்கோ 
மனைவி வாய்க்க வேண்டும் 
குலமகளாய்க் கிடைப்பதற்கோ 
கொடுத்து வைக்க வேண்டும் 

நல்ல மனம் வாழ்க 
நாடு போற்ற வாழ்க 

அருமைகளும் பெருமைகளும் 
நிறைவதுதான் இன்பம் -நீ
அத்தனையும் பெற்றுவிட்டாய் 
ஆனந்தமாய் வாழ்க 

நல்ல மனம் வாழ்க 
நாடு போற்ற வாழ்க


இதை சிறப்பான படம் என சொல்ல முடியாது..ஆனால் நினைவுகூரத்தக்க படம்
         

Monday, January 14, 2013

டி டி எச் குளறுபடி- மன்னிப்பு கேட்ட கமல் ஹாசன் - கீழே விழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டாத ஊடகங்கள் !!



     

    அனைவரும் எதிர்பார்த்ததுதான். படத்தின் விளம்பரத்துக்காக ரிலீசுக்கு முன்பே  டி டி எச் ஒளிபரப்பு  என்று படம் காட்டிய கமல் ஹாசன் , இப்போது பிப்ரவரி இரண்டாம் தேதிதான் டி டி எச் ஒளிபரப்பு என அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

   போலி வாக்குறுதி அளித்ததற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார்.

       ரிலீசுக்கு பின்புதான் டி டி எச் என்பதால் , கட்டணத்தை குறைப்பதாகவும் , படம் பார்க்க விரும்பாதவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதாகவும் அறிவித்துள்ளார்.

 தவறுக்கு வருத்தம் தெரிவித்த பின் , அவரை விமர்சிப்பது நாகரிகம் இல்லை.

ஆனால் அவர் என்னவோ புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தி விட்டதாக , விபரங்கள் ஒன்றும் தெரியாமல் சில பத்திரிக்கைகள் உருகி உருகி எழுதின.. அவர்கள் அறியாமை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 டி டி எச் என்பதை கமல் கண்டு பிடிக்கவில்லை..   டி டி எச் மூலம் புதுப்படங்களை ஒளிபரப்புவது என்பதும்  கமல் கான்சப்ட் அல்ல...

தேவையில்லாமல் இவர் புகுந்து குழப்பி , ஒரு புதிய தமிழ் சினிமாவில் வருவதை கசப்பான அனுபவமாக ஆக்கியதுதான் இவர் சாதனை  என்கிறார்கள் நடு நிலையாளர்கள்.

       அவருக்கு பொருளாதார நெருக்கடிகள்  இருந்து இருக்கலாம். அதை சமாளிக்க இப்படி ஒரு ஸ்டண்ட் அடித்து இருக்கலாம். அதைக்கூட மன்னித்து விடலாம்.

  ஆனால் ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகள் போல அவர் ஆதரவு பத்திரிக்கைகள் ஆடிய ஆட்டம் மறக்க கூடியதா?

        கண்டிப்பாக கமல் சொன்னதை செய்து விடுவார் என்றும் , தியேட்டர்கள் பணிந்து விட்டன என்றும் எந்த தரவுகளும் இல்லாமல் , தெரிந்தே பொய் செய்திகள் வெளியிட்டார்களே !!

     சில பத்திரிக்கைகள் அறியாமை காரணமாக , அவற்றை உண்மை என்று நம்பி வெளியிட்டன என்பதும் உண்மைதான்.

  பத்தாம் தேதி டி டி எச் என ந்மபி பணம் கட்டியவர்கள் முறையிட்ட போது ஏளனம் செய்தன சில பத்திரிக்கைகள்.

அதையும் நேரடியாக செய்யாமல் வாசகர் கடிதம் என்ற பெயரில் செய்தன.

 அவர் என்ன கோடி கோடியாகவா ஏமாற்றி விட்டார்... சீட்டுக்கடை மோசடி, ஈமூ மோசடி போல இது என்ன அவ்வளவு பெரிதா,,,  என்பது போல ”கடிதங்கள் “ வெளியிட்டன.


      தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக பொய் செய்திகள் வெளியிடலாமா?  இப்படி செய்யும் இவர்கள் , அரசியல்வாதிகளை குற்றம் சாட்ட என்ன தகுதி இருக்கிறது ?
 
          ஒரே நாளில் ஆயிரம் கோடி வசூல் , கமலுக்கு ஆதரவாக தியேட்டர்கள் அணி வகுப்பு என்றெல்லாம் பொய் செய்திகள் வெளியிட்டு , கமலுக்கு நெருக்கடி ஏற்படுத்திய்து  இந்த ஊடகங்கள்தான்.

                இனியாவது இப்படிப்பட்டவர்களை நம்பி கமல் எந்த முடிவும் எடுக்க கூடாது என்பதே  நடு நிலையாளர்கள் விருப்பம் மட்டுமல்ல.. அவர் நலம் விரும்பிகளும் விருப்பமும் கூட.
   
   கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல இது சம்பந்தமான செய்திகள் வெளியிட்டு வரும் ஊடகங்கள் , இனி மேலாவது நடு நிலையுடனும் செய்திகள் வெளியிட வேண்டும் என்பதே நடு நிலையாளர்கள் எதிர்பார்ப்பு.



Tuesday, January 8, 2013

விஸ்வரூபம் சிக்கலுக்கு சுமூக தீர்வு- கமல், தியேட்டர் அதிபர்கள் சந்திப்பில் உடன்பாடு



விஸ்வரூபம் பட சர்ச்சை சுமுகமாக முடியும் நிலை உருவாகியுள்ளது.
திரையரங்குகளில் வெளிவரும் முன்பே டி டி எச் மூலம் ஒளிபரப்பும் முயற்சி வட மாநிலங்களில் செய்து பார்க்கப்பட்டு தோல்வியில் முடிந்தது.
கமல் இதை தமிழ் நாட்டில் செய்து பார்க்க முயன்றார். ஆனால் எதிபார்த்த அளவு புக்கிங் ஆகவில்லை என கூறப்படுகிறது. திரையரங்களிலும் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே டி டி எச் மூலம் ஒளிபரப்பு என்பதில் சமரசத்துக்கு இடமேயில்லை என்ற கமல் , சற்று இறங்கி வந்து பேச்சு வார்த்தைக்கு ஒப்புக்கொண்டார். 

இதைத்தொடர்ந்து கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய அலுவலகத்தில், தியேட்டர் அதிபர்கள் நேற்று இரவு சந்தித்து பேசினார்கள்.
இந்த பேச்சுவார்த்தையில் பட அதிபர் கேயார், தமிழ்நாடு திரையரங்க சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இரவு 7 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை 10 மணி வரை நடைபெற்றது. பேச்சுவார்த்தை முடிவடைந்து வெளியே வந்த கமல்ஹாசன், இரு தரப்பினரும் சந்தித்து பேசினோம். நாளை (இன்று) மீண்டும் சந்தித்துப்பேச இருக்கிறோம் என்றார்.அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கூறும்போது, முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. விஸ்வரூபம் படம் தியேட்டர்களில் முதலில் ரிலீஸ் செய்யப்படும். ரிலீஸ் தேதி பற்றி, நாளை (இன்று) மீண்டும் சந்தித்து பேசியபின் அறிவிக்கப்படும் என்றார்கள்.

Sunday, December 30, 2012

மின் தடையும் , டிடிஎச்சும் - கமல் மீது மோசடி வழக்கு பாயுமா ? சட்ட நிபுணர்கள் கருத்து

மர்ம யோகி படத்துக்காக நான்கு கோடி ரூபாய் அட்வான்ஸ் வாங்கி ஏமாற்றி விட்டதாக கமல் மேல் புகார் செய்யப்பட்டதை அடுத்து விஸ்வரூபம் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது..

2008ம் ஆண்டு சாய் மீரா நிறுவனத்திடம் இருந்து கமல் நான்கு கோடி ரூபாய் அட்வான்ஸ் பெற்றாராம் , மர்ம யோகி என்ற படத்தை எடுத்து தருவதாக ஒப்பந்தமாம்.

ஆனால் அவர்களை ஏமாற்றி , அந்த காசை வேறு வகையில் செலவிட்டு விட்டாராம்.  சினிமாவில் சம்பாதித்த காசை சினிமாவிலேயே செலவிடுகிறேன் என்று செய்திகளைப் பரப்புபவர் , ம்ற்றவர்கள் சம்பாதித்த காசை இப்படி செல்விட்டது கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதாம்..

கமலாகப் பார்த்து காசை திருப்பி கொடுப்பார் என்று காத்து இருந்த பார்த்த அந்த நிறுவனம் வேறு வழியின்றி வழக்கு தொடர்ந்து இருக்கிறது,

 இதை தொடர்ந்து கமலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 இது ஒரு புறம் இருக்க , இன்னொரு சிக்கலிலும் கமல் சிக்கியுள்ளதாக சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள்.

 விஸ்வரூபம் படம்  எதிர்பார்த்தபடி வரவில்லை என்பதால் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.  இதனால் , அவசர அவசரமாக டி டிஎச்சில் வெளியிட்டு , படத்தைப்பற்றிய கருத்து பரவும் முன்பே சம்பாதிக்க கமல் திட்டமிட்டார் என பேசப்படுகிறது..

    இது தமிழ் சினிமாவை அழிக்கும் என்றாலும் , சட்டப்படி தவறல்ல..

ஆனால் பிரச்சினை வேறொரு வகையில் கிளம்பியுள்ளது.  லட்சக்கணக்கானோர் ஆயிரம் ரூபாய் செலுத்தி விஸ்வரூபம் படம் பார்க்க பதிவு செய்துள்ளனர் என ஏர் டெல் அறிவித்துள்ளது.

இதில் கணிசமானோர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் .  இதில் சென்னையை சேர்ந்தவர்கள் குறைவுதான்.  சென்னையைத்தவிர்த்த ஏனையை பகுதிகளில்தான் அதிகமாக புக்கிங் ஆகி இருக்கிறதாம்.

     சென்னையை தவிர்த்த ஏனைய பகுதிகளில் எப்போது மின்சாரம் வரும் , எப்போது வரும் என யாருக்கும் தெரியாது.. சென்னையிலும் கூட அவ்வபோது மின்சார தடை ஏற்படுகிறது..

  மின்சார தடையால் படம் பார்க்க முடியாமல் போனால் , ஆயிரம் ரூபாய் கட்டி ஏமாந்தவர்கள் நீதி மன்றம்  செல்ல வாய்ப்பு இருப்பதால சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 எதிர்பாராத இடையூறு ஏற்பட்டால் விற்பனையாளருக்கு பொறுப்பு ஏதும் இல்லை என்பது சட்டம். ஆனால் , மின்சார தடை என்ற இடையூறு ஏற்படும் என்பது தெரிந்த ஒன்று..எனவே இது எதிர்பாராத இடையூறு என்பதில் வராது.

   வாடிக்கையாளர்கள் தெரிந்துதானே வாங்கினார்கள் என்று சொல்லி தப்ப முடியாது... வாடிக்கையாளர்கள் விளம்பரம் போன்றவற்றால் மயங்கினாலும் ,  நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை அளிப்பது மோசடியாக கருதப்படும்.

கோடிக்கணக்கான ரூபாய் சம்பந்தப்பட்டு இருப்பதால்,  கமல் மேல் மோசடி மற்றும் நம்பிக்கை துரோக வழக்கு  ( இந்திய தண்டனை சட்டம் பிரிவு 405 409  மற்றும் பிரிவு 421 424பாயக்கூடும் என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

          சீனியர் நடிகரான கமல் , இப்படி மோசடி வழக்குக்ளில் சிக்குவது நடு நிலை சினிமா ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது .



Friday, December 21, 2012

விஸ்வரூபம் படத்தை திரையிடமாட்டோம்- திரையரங்க உரிமையாளர்கள் திட்டவட்டம்


கமல் ஹாசனின் விஸ்வரூபம் படத்தை திரையிட முடியாது என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதனால் உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக , திரையரங்குகிற்கே வராத விஸ்வரூபம் படத்தை நேரடியாக தொலைக்காட்சிகளிலேயே ரிலீஸ் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
            விஸ்வரூபம் படத்தை எடுத்து முடித்து பல மாதங்கள் ஆகியும் , படம் விற்பனை ஆகவில்லை. காரணம் எதிர்பார்த்த அளவுக்கு அவுட்புட் இல்லை என கூறப்படுகிறது.  படத்தில் பல புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, ஆனால்  ஒரு ரசிகனைப் பொருத்த வரை , end product எப்படி இருக்கிறது என்பதே முக்கியம். அதை எப்படி தயாரித்தார்கள் என்பது அவனுக்கு தேவை இல்லாத ஒன்று. எனவே என்னதான் கஷ்டப்பட்டு அந்த படத்தை எடுத்திருந்தாலும், படம் சரியாக வரவில்லை என்பதால் , படத்தை அடிமாட்டு வில்லைக்கு கேட்பதாக கூறப்படுகிறது.
இதனால் எரிச்சல் அடைந்த கமல் , நேரடியாக டிடிஎச் மூலம் ஒளிபரப்பும் உரிமையை விற்று , அதன் மூலம் கிடைக்கும் காசுடன் பாதுகாப்பாக இருந்து கொள்ள முடிவு செய்து விட்டாராம். எப்படியும் படம் ஓடப்போவதில்லை என்பதால், திருட்டு விசிடி குறித்து கவலைப்படவில்லையாம்.
இந்த நிலையில் , தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய கூட்டு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் ஆர்.எம்.எம்.அண்ணாமலை, பொதுச்செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம், பொருளாளர் ஹரிகோவிந்த், இணை செயலாளர் ஸ்ரீதர், வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு தலைவர் எல்.சுரேஷ், மற்றும் மதுரை அன்பு செழியன், செல்வின்ராஜ், அருள்பதி உள்பட ஏராளமான தியேட்டர் அதிபர்களும், வினியோகஸ்தர்களும் கலந்து கொண்டார்கள்.
அறிக்கை
கூட்டத்தின் முடிவில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் கூட்டு கூட்டம் நடந்தது. அதில், திரைக்கு வருவதற்கு முன்பே டி.டி.எச். அல்லது வேறு எந்த தொழில்நுட்பம் மூலமாக வெளியிடும் எந்த படத்தையும், திரைப்பட அரங்குகளில் வெளியிட ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்து வரும் தமிழ்நாடு வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு மற்றும் அபிராமி ராமநாதனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

Saturday, December 15, 2012

கமல் ஹாசனுக்கு நன்றிக் கடன்பட்டுள்ள தமிழகம்


எழுத எவ்வளவோ இருக்கிறது...  கமலின் சினிமா அழிப்பு முயற்சி குறித்தே எழுதுகிறீர்களே,, அவரைப்ப்பற்றிதான் எல்லோருக்கும் தெரியுமே.. ஒரு சிலர் அறியாமை காரணமாகவோ,  உள் நோக்கத்துடனோ அவரை ஆதரிக்க்கிறார்கள்... யார் என்ன எழுதினாலும் அவர்கள் மாறப்போவதில்லை. எனவே எப்படி பார்த்தாலும் , நீங்கள் எழுதுவது வீண் வேலை என சிலர் உரிமையோடும் , அன்போடும் சொன்னார்கள்.

பக்காவாக திட்டம் இட்டு, ஆளும் கட்சிக்கு சாதகமாக இருப்பது போல காட்டிக்கொண்டு  கமல் இதில் இறங்குகிறார். இதை தடுக்க இயலாது என்பது தெரிந்ததுதான்..  இதனால் ஒட்டு மொத்த சினிமா துறைக்கும் பாதிப்பு ஏற்பட்டாலும் , கமலுக்கு லாபம் கிடைக்கும் என்பதால் அவர் யார் பேச்சையும் கேட்கப்போவதில்லை. ஆனால்  தொலை நோக்கு கண்ணோட்டத்தில் பார்த்தால் , கமலுக்கும் நஷ்டம்தான் என்பது அவருக்கு புரியவில்லையா அல்லது புரியாதது போல நடிக்கிறாரா என்பது தெரியவில்லை.

      நமக்கு பயன்படுகிறதோ இல்லையோ.. புதிதாக ஒரு பொருளைப்பார்த்தால் , வாங்கி வைத்து கொள்ளும் தமிழ் நாட்டு மனப்பான்மையிம் அடிப்படையில் சிலர் அவர் பேச்சில் மயங்குகிறார்கள்.  ஆனால் ஒரு சிலராவது அவரை கண்டித்து வருகிறார்கள்.

 ஒரு தீய செயல் நடக்கும்போது , ஆட்டு மந்தைகள் போல எல்லோரும் அவரை ஆதரிக்காமல், ஒரு சில நேர்மையான குரல்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதாலேயே நான் எழுத வேண்டி இருக்கிறது..

           விஷ்யம் என்ன , என்ன பாதிப்பு என்பது புரியாமலேயே பலர் கருத்து சொல்லி வருகிறார்கள்.

         கேபிள் டிவியில் திரைப்படங்கள் ஒளிபரப்புவதை அன்று பலரும் எதிர்த்தார்களாம்.. அப்போது கமல் மட்டுமே கேபிள் டிவியில் திரைப்படங்கள் ஒளிபரப்பாவதை ஆதரித்தாராம். இப்போது அனைவருமே தனியார் தொலைக்காட்சிகளுக்கு திரைப்படங்களை தருகிறார்களாம். இது கமலின் தீர்க்க தரிசனத்தை காட்டுகிறது என அவர் தொண்டர்கள் புளகாங்கிதம்  அடைகிறார்கள்..

       ஆனால் தனியார் தொலைகாட்சிகளில் கன்னாபின்னாவென அலுப்பூட்டும் அளவுக்கு சினிமா ஒளிபரப்பாவதால் , சினிமா மீதான ஈர்ப்பு வெகுவாக குறைந்து விட்டது இவர்களுக்கு புரியவில்லை.

    திரையுலக ஜாம்பவான்களான பாலசந்தர் போன்றோர் இதை எதிர்த்தது அதனால்தான். ஆனால் அவர்களும் இன்று  தனியார் தொலைகாட்ச்சிக்கு வந்து விட்டார்களே என லொள்ளு பேசுகிறார்கள் சிலர்..

ஒரு பொதுவான போக்கை கவனியுங்கள்..

 ஒரு துறையில் இருப்பவர்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால் அனைவருக்கும் நல்லது.. இந்த நிலையில் ஒருவர் மட்டும் அந்த துறைக்கு துரோகம் செய்தால் , அந்த துரோகத்துக்கு பெரிய லாபம் கிடைக்கும்.

 இந்த நிலையில், நஷ்டத்தை தவிர்க்க வேண்டி , அனைவருமே தவறான வழியில் இறங்க வேண்டி வரும். இதில் அனைவருக்குமே நஷ்டம்தான்...  இந்த அனைவருக்குமே நஷ்டம் என்ற நடைமுறையே தற்போது நிலவுகிறது.. இது கமல் பெருமைப் பட வேண்டிய விஷ்யமா?

                      இதில் சராசரி ரசிகனுக்கு என்ன பாதிப்பு ?

   தமிழில் படம் எடுப்பது நஷ்டம்தான் என்ற நிலை உருவாகி இருப்பதால் , நல்ல படங்கள் பார்க்க வேண்டும் என்றால், வேறு மொழிப்படங்களையே நாட வேண்டி இருக்கிறது.  life of pie போன்ற படங்கள் எல்லாம் தமிழில் வர வாய்ப்பே இல்லை.

  தியேட்டர்களில் டிக்கட் விலை அதிகம் என்பதால்தான் கூட்டம் வருவதில்லை என மக்கள் பல்ஸ் புரியாமல் இன்னொரு கதையை பரப்ப ஆரம்பித்து இருக்கிறார்கள் .

   இன்றைய நிலையில், இலவசமாகவே திரையிட்டாலும் , பார்ப்பதற்கு ஆள் இல்லை என்பதே யதார்த்தம். அந்த அளவுக்கு தொலைக்காட்சிகளில் சினிமா ஓவர் டோசாகி விட்டது.

    முன்பெல்லாம் , வீடியோ கேசட்டை வைத்து , சில இடங்களில் ( கிராமப்புற பகுதிகளில் )தொலைக்காட்சிப்பெட்டிகளில்  சினிமா காட்டி காசு வசூலிப்பார்கள்.. அதிகமான காசு , சிறிய திரை , வசதி குறைவு என்றெல்லாம் யாரும் யோசித்ததில்லை.  கூட்டம் செமையாக வரும்.

 இன்று அப்படி செய்தால் சிரிக்க மாட்டார்களா...   கோயில் விழாக்களில் , திரையைக்கட்டி பழைய படங்களை திரையிடுவார்கள்..அதற்கும் பயங்கர கூட்டம் வரும். இன்று அது போன்ற பழைய படங்களை பார்க்க காசு கொடுத்தாலும் வர மாட்டார்கள் . அதுதான் 24 மணி நேரமும் டிவியில் பார்க்கிறார்களே...

எனவே டிக்கட் விலைக்கும், கூட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை...

 நம் ஊர் டிராபிக்கில் திரையரங்கு சென்று வந்தால் , ஒரு நாள் முழுக்க அதற்கே செலவாகி விடும். அப்படியும் சினிமா செல்ல வேண்டும் என்றால் , அந்த அளவுக்கு ஈர்ப்பு வேண்டும். அந்த ஈர்ப்பை சினிமா இழந்து வருகிறது. காரணம் தனியார் தொலைக்காட்சிகளில் வரைமுறை இல்லாமல் சினிமா காண்பிக்க்படுவது..

ஒரு காலத்தில் ஞாயிற்று கிழமை தூர்தர்ஷனில் சினிமா ஒளிபரப்பினால் , தெருவில் ஆளே இருக்காது... அந்த ஈர்ப்பு இன்று இருக்கிறதா ?

   அமெரிக்காவை பார், ரஷ்யாவைப்பார் , இங்கிலாந்தைப் பார் என்கிறார்கள் அவர்கள். அந்த நாடுகளின் பொருளாதாரம் , சமூக அமைப்பு வேறு..அவர்கள் செய்வதை நாமும் செய்வோம் என முட்டாள்தனமாக பின்பற்ற கூடாது..


  இப்படி கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவை சிலர் அழித்து வந்தாலும் , சினிமா தன் ஜீவனை ஒரு விஷ்யத்தில் தக்க வைத்து வந்தது.. அதை தொலைக்காட்சிகள் அழிக்க முடியாமல் இருந்தது..

அதுதான் முதல் நாள் , முதல் காட்சி பார்க்கும் பெருமிதம். முதல் சில நாட்களில் , கூட்டத்தினருடம் அமர்ந்து படம் பார்க்கும் அனுபவமே அலாதி. இந்த முதல் சில நாட்களுக்கு வரும் கூட்டத்தையும் ஆஃப் செய்யும் முயற்சிதான் , ரிலீசுக்கு முன்பே தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது..

      ரஜினி படம் முதல் நாள் முதல் காட்சி பார்க்க , ஓர் ஆளுக்கு ஆயிரம் ரூபாய்   ஆகிறது என வைத்து கொள்ளுங்கள். ஐந்து பேருக்கு ஐந்தாயிரம் ரூபாய். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் , முதல் நாள் முதல் காட்சி அனுபவத்தை ஐந்து பேரும் ( தலைக்கு 200 ரூபாய் என்ற கணக்கில் ) பெற முடியும் என்றால் , தியேட்டர்களுக்க்கு யார் போக போகிறார்கள் ?

 கண்டிப்பாக இந்த முறையால் தயாரிப்பாளருக்கு லாபம்தான். இந்த முறை புழக்கத்துக்கு வந்தால் , ரஜினி உட்பட பலரும் இந்த முறையில் , சம்பாதிக்கவே நினைப்பார்கள்.

ஆனால் திரையரங்குகள் தமது கடைசி தடுப்பு சுவரையும் இழந்து , தம் ஈர்ப்பை முழுக்க இழக்கும்.

பெரிய பெரிய ஆடம்பர திரையரங்குகள் மட்டுமே இருக்க முடியும். எளிய மனிதன் இது போன்ற திரையரங்குகளுக்கு செல்லப்போவது இல்லை.

ஒரு வகையில் பார்த்தால் , கமல் செய்வது ஒரு தேசிய சேவைதான்.

   சினிமா என்ற மாயையில் சிக்கி , தமிழன் அழிகிறான் என சிலர் சொல்வதுண்டு. சினிமாவால் சமூகம் சீரழிவதாகவும் சிலர் தவறாகவோ சரியாகவோ பேசி எழுதி வருகிறார்கள்..

சினிமா என்ற துறையை அழிக்க எத்தனையோ பிரச்சாரங்கள் செய்தும் பார்த்து விட்டார்கள்.

அவர்களால் முடியாத , சினிமா ஒழிப்பு என்ற விஷயத்தை கமல் வெகு வெகு இலகுவாக செய்ய இருக்கிறார். இவருக்கு தமிழகம் கடமைப்பட்டு இருக்கிறது.  நன்றிக்கடன் பட்டு இருக்கிறது...



 

     
   

Tuesday, December 11, 2012

கமலிடம் இந்த முறை ஏமாற மாட்டோம்- உயர்திரு. ஜவாஹிர் அலி பதிலடி


               தன் படத்துக்கு தடை விதிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தினால்தான் , முன்கூட்டியே கிடைத்தவரை சுருட்டி கொள்ள முடிவெடுத்து , டி டி எச்சில் விஸ்வரூபம் படத்தை வெளியிட கமல் முடிவெடுத்தெடுக்கிறார் என்று நடு நிலையாளரும் , தமிழுணர்வு மிக்கவருமான வே. மதிமாறன் கூறியுள்ளார்.


   அவர் தன் சமீபத்திய பதிவில் கூறியிருப்பதாவது..


 

விஸ்வரூபம்’ படம், வெளியாவதற்கு, 8 மணி நேரத்திற்கு முன்பாக, டி.டி.எச்., முறையில், ஒரே ஒரு காட்சி, “டிவி’யில் வெளியிட, கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். கமலின் இந்த முயற்சி, தமிழ் சினிமாவை அழித்துவிடும் எனவும், இந்த முயற்சியை கைவிட வேண்டும் எனவும், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கங்கத்தைச் சேர்ந்தவர்கள், வலியுறுத்தி வருகின்றனர்.
இன்னும் சிலரோ, ‘கமல் இந்திய சினிமாவின் வர்த்தகத்தை எங்கேயோ கொண்டு சென்று விட்டார்.’ என்று வரவேற்கிறார்கள்.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு போல், ‘சினிமா வியாபாரத்தில் திரையரங்குகளைத் தாண்டிய ஒரு வருமானம்’, என்கிற பாணியில் குதித்திருக்கிற கமலின் இந்த முயற்சிக்கு,
இயக்குநர்களும், தயாரிப்பாளார்களும் ‘படம் ரிலீசாவதற்கு முன்பே நமக்கு லம்பா கிடைக்கும்போல..’ என்ற கனவில், அவர்களும் இதை வரவேற்று இருக்கிறார்கள்.
ஆனால், எனக்கென்னவோ இது கமல்ஹாசனின் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் தெரிகிறது.
“விஸ்வரூபம்’ படத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு தீவிரமாக இருக்கலாம். அதனால் இந்தப் படத்தை திரையிட்ட முதல் நாளே அதற்கான எதிர்ப்பு அதிகமாகி படத்தில் உள்ள முக்கிய காட்சிகளை நீக்க வேண்டும் என்ற நிலை ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் ஒட்டுமொத்த படத்தையுமே நிறுத்த வேண்டியிருக்கும் என்பதால், அதை டி.டி.எச் முறையில் டிவி’யில் வெளியிடுவதின் மூலம், தன் பணத்திற்கான ‘மினிமம் கேரண்டி’ என்ற பாணியில்தான் இந்த டி.டி.எச் சேவை.
‘துப்பாக்கி’ படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பிற்கு பின்னேதான் கமலுக்கு இப்படி ஒரு யோசனை வந்திருக்க வேண்டும். ஏனென்றால் அதற்கு முன் வரை, குறிப்பாக நவம்பர் 7 தேதி, தனது பிறந்தநாள் அன்று,
“விஸ்வரூபம்’ படம் தான் ஆசியாவிலேயே ஆரோ 3டி என்ற புதிய சவுண்ட் தொழில்நுட்பத்தில் வெளிவரும் முதல்படம். சாதாரணமாக இருக்கும் ஸ்டீரியோ சவுண்ட் சிஸ்டத்தில் ஒலி இரு பக்கவாட்டிலும் இருந்து கேட்கும்.
ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தில் தலைக்கு மேலிருந்தும் கூட ஸ்பீக்கர்களில் ஒலி கேட்கும். படம் பார்க்கும் போது தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும்.
சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் மட்டும் இந்த தொழில்நுட்பம் அமைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் 30 தியேட்டர்களில் இந்த தொழில்நுட்பம் உள்ளது. அதேபோல ‘விஸ்வரூபம்’ படம் மூலம் தமிழ்நாட்டிலும் குறைந்தது 30 தியேட்டர்களிலாவது இந்த தொழில்நுட்பம் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.” என்று விஸ்வரூபம் காலமாதத்திற்கான காரணம் சொன்னார் கமல்.
விஸ்பரூபம் படத்தை இன்றைய நவீன திரையங்குகளில்கூட பார்ப்பதற்கான வசதிக் கிடையாது. என்று சொன்ன கமல்தான் இப்போது அதை டி.வியில் பார்ப்பதற்கு தீவிரமாக பரிந்துரைக்கிறார். முயற்சிக்கிறார்.
இதில் வெறும் வர்த்தகம் மட்டும் பின்னணியாக இல்லை. நாம் முன்பே குறிப்பிட்டதைப் போல் சர்வதேசிய ‘இஸ்லாமிய தீவிரவாத்திற்கு’ எதிராக அமெரிக்க சார்பு கொண்ட ஒரு அய்யங்கரின் அதிரடி ஆக்ஷன் படமாகத்தான் இருக்கு வேண்டும். வைணவ டச்சஸோடு.
‘என் படத்தை பார்த்து முஸ்லீம்கள் மனம் மாறி, தேவையில்லாமல் சந்தேகப்பட்டு விட்டோமே’ என்று, வருத்தப்படுவர் என, கமல்ஹாசன் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஒரு விசயத்தைக் குறித்து ஆயிரம் விளக்கங்களை விட, ஒரு செயல் அதை தெளிவாக விளக்கிவிடும்.
முக்கியமான இஸ்லாமியத் தலைவர்களுக்குப் படத்தை போட்டுக் காண்பித்தால் அவர்களே படத்தை வரவேற்று அறிக்கை கொடுத்துவிட்டு போகிறார்கள். ஏன் இந்த தேவையில்லாத பதட்டம்? விளக்கம்?
உண்மையிலேயே கமல்ஹாசன் சொல்வதுபோல், விஸ்வரூபம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இல்லை என்றால்..?
ரொம்ப மகிழ்ச்சி.
‘படத்தில் முஸ்லிம்களை அவமதிக்கும் காட்சிகள் இல்லையெனில், கமல்ஹாசன் முன்னிலையில் பத்தாயிரம் ஏழைக் குழைந்தைகளுக்கு பிரியாணி வழங்கப்படும்’ என்று இந்திய தேசிய முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது.
நம்மளும் வரிசையில் நின்னு உலக நாயகன் கையால, ஒரு பிரியாணி பொட்டலத்த வாங்கி சாப்பிட்டு வரவேண்டியதுதான்.
எனக்கென்னமோ, பிரியாணி தானம் நடக்காதுன்னுதான் தோணுது.


*******************************************************8




  இன்னொரு புறம் பார்த்தால் , முஸ்லீம், லீக் கமலின் உறுதி மொழியை  நிராகரித்துள்ளது.


இவ்விவகாரம் தொடர்பாக முஸ்லிம் லீக் அமைப்பின் தலைவர் உயர்திரு.  ஜவாஹிர் அலி கருத்து வெளிடுகையில்,

 'சகோதரர் கமலஹாசன் தயாரித்து நடித்து வெளிவரும் 'விஸ்வரூபம்' படத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான காட்சிகளும் வசனங்களும் உள்ளதாக செய்திகள் வெளிவர தொடங்கியுள்ள நிலையில் கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் முஸ்லிம்கள் இப்படத்தைப் பார்த்து மனம் மாறி தேவையில்லாமல் சந்தேகப்பட்டு விட்டோமே என்று மனதில் வருதப்படுவார்கள் என கூறியுள்ளார்.

'ஹேராம்' மற்றும் 'உன்னைப்போல் ஒருவன்' படம் வெளிவந்தபோதும் இப்படியே கூறினார். ஆனால் அத்திரைப்படங்களில் இஸ்லாமியர்களை காயப்படுத்தும் வகையில் வசனங்களும் காட்சிகளும் அமைந்திருந்தன. ஆனால் அச்சமயம் எங்களுக்குள் வலுவான ஒற்றுமை இல்லாததினால் பெரிய அளவில் எங்களின் எதிர்ப்புகளை காட்டவில்லை.

ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்துக்குள் மிகப் பெரிய வலுவான ஒற்றுமையும் உணர்வும் வந்திருப்பதால் முஸ்லிம்களை காயப்படுத்தும் வசனங்களோ, காட்சிகளோ எந்த திரைப்படத்தில் இடம் பெற்றாலும் அதை எதிர்க்க தயங்க மாட்டோம்.

'விஸ்வரூபம்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இல்லாமல் இருந்தால் சகோதரர் கமலஹாசன் கூறுவதுபோல் அவர் முன்னிலையில் ஏழைகள் 10 ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்க இந்திய தேசிய முஸ்லீம் லீக் தயாராக உள்ளது,' என்று குறிப்பிட்டுள்ளார்.



Sunday, December 9, 2012

விஸ்வரூபம் - கமல் அறிக்கையும் , மக்களின் எதிர்வினையும்


  
   விஸ்வரூபம் படம் , கோடிக்கணக்கான ரூபாய்களை விழுங்கிய பின்னும் , எதிர்பார்த்தபடி அவுட் புட் இல்லை எனவும் எனவே நேரடியாக டீவியில் வெளியிட்டு கிடைத்த பணத்துடன் சேஃபாக இருந்து கொள்ள கமல் திட்டமிட்டுள்ளார் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதற்கு கமல் பதில் அளித்துள்ளார். ஆனால் அந்த பதில் சால்ஜாப்பாக இருப்பதாகவும், தெளிவில்லை என்றும் கூறப்படுகிறது.

  கமல் அறிக்கையும் , நடு நிலையாளர்களின் எதிர்வினையும் பின் வருமாறு..

*********************************************************************
  கமல் : புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்...அவைகளைக் கண்டனம் செய்வதும் கூட உலக வழக்கம். உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத் துறையினர் வரை இம்மனப்பாங்கு நீடிக்கிறது.

   நடு நிலையாளர்கள்   எல்லா புதிய கண்டு பிடிப்புகளும் நன்மைக்காகவே என்று சொல்லி விட முடியாது. மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் என்ற விஷ்யத்தை இங்கு புகுத்தி விவசாயத்தை அழிக்க சிலர் முயற்சி செய்தார்கள் . புதிய விஷ்யம் என அதை ஏற்க முடியுமா?  அணு சக்தி என்ற கண்டு பிடிப்பு கோடிக்கணக்கானோரை அழிக்கவில்லையா... 
 இன்னொரு நாட்டிற்கு பொருந்தகூடிய விஷ்யம் நம் நாட்டிற்கும் பொருந்தும் என்ற அடிமை மனப்பான்மை கமல் போன்றோரிடன் நீடிப்பது வருந்தத்தக்கது.  


ராஜ்கமல் நிறுவனத்தின் DTH முயற்சியையும் புரிதல் இல்லாததால் ‘புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம்' என்ற பதற்றக்குரல்கள் எழுகின்றன. தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம்.
          புரிந்து கொண்டுதான் எதிர்க்கிறார்கள்.. 

ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம் - பெரும்பான்மை - ‘இது சினிமாவர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி; தமிழ் சினிமாவை, ஏன்...உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளைக் கடக்கவைக்கும் முயற்சி' என்று என்னைப் பாராட்டுகிறது.

    ஒரு பொருள் நன்றாக இருக்கிறதா இல்லையா என்று தெரிந்து வாங்கும் உரிமையை நுகர்வோரிடம் இருந்து பறிக்கும் இந்த முறை , அம்பானி போன்ற பணக்கார முதலாளிகளுக்கு உவப்பாகத்தான் இருக்கும். அவர்கள் இதை வரவேற்க கூடும், ஆனால் மற்றவர்கள் இதை எதிர்க்கிறார்கள் . முதல்வரிடம் மனு கொடுக்கும் அளவுக்கு கோபம் அடைந்து இருக்கிறார்கள். 
இது சந்தோஷமான செய்தி. DTHற்கு வெகுவானவரவேற்பு உள்ளது. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபாரக்கிளை. ஒரு சிறுபான்மை மட்டும் இதுநாசம் விளைவிக்கும் என்று ஆவேசம் கொள்கிறது.
                      இது நாசம் விளைவிக்கும் என சிறுபான்மை அல்ல.. பெரும்பான்மையான திரையரங்கு உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், ரசிகர்கள் நினைக்கிறார்கள்.            
ல்லார் வீட்டிலும் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியாஎன்றால் இல்லை. நல்ல வசதி உள்ளவர்கள் அதிகப் பணம் கட்டி ஒரு கருவியின் மூலம் பல சானல்களையும் சினிமாவையும் பார்க்க உதவும் கருவி.
சினிமா அரங்குக்கே செல்ல மறந்த மறுத்த வசதியான கூட்டம் சினிமாவை வீட்டோடு அனுபவிக்க உதவும் ஊடகம் இந்த DTH.
        வசதியானவர்களை தாஜா செய்ய நினைத்து , எளியவர்களை பலியாக்குவது தவறல்லவா ?

இப்படி வீட்டோடு தங்கியவர்களையும் சினிமா பக்கம் ஈர்க்கும் முயற்சியே இது. இதை விடுத்து படம் சரியாக அமையாததால் கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு ஓடப்பார்க்கிறார் கமல் என்று புரளிகள் கிளப்புகிறார்கள்.
கிடைத்ததைச் சுருட்டும் பழக்கம் எனக்கில்லை என்பதற்கு என் சினிமா வாழ்வும் நான் எடுத்த சினிமாக்களும் சான்று.
  என்ன பெரிய சான்று? கமலால் நஷ்டம் என புலம்பாத தயாரிப்பாளர் உண்டா.. முக்தா சீனிவாசன் , கலைப்புலி தாணு என மாபெரும் பட்டியலே இருக்கிறதே.... 

என்படம்முடிந்து 7 மாதங்களாகின்றன. இப்பொழுது என் படத்திற்கு விலை கொடுத்து வாங்கப் பலர் பெரிய விலைகளைச் சொல்லியும் விற்காமல் எல்லா ஊடகங்களிலும் படம் நல்ல வசூலை ஈட்ட வழி செய்யவே இந்த முயற்சி.

 யார் என்ன விலை கேட்டார்கள்... சொல்ல முடியுமா? சில படங்கள் திரைய்ரங்குகளுக்கே வராமல் நேரடியாக தொலைக்காட்சிக்கே விற்கப்பட்டுள்ளன... அதிக விலை கேட்டும் , இப்படி செய்யவில்லை. விலைபோகாமல் போனதால் தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டன. 

முழுமையாக மக்களின் ஆர்வம் வருமானமாக மாறி படத் தயாரிப்பாளர்கையில் சேர்ந்தால் திரை உலகு மேம்படும். நேர்மையான வியாபாரத்தில் அனைவரும் ஈடுபட்டு நல்லபடி வரிகட்டி அரசிடம் எடுத்துச் சொல்லி கறுப்புப் பண விளையாட்டைக் குறைத்துக் கொண்டால், 5 வருடத்தில் தமிழ் சினிமா இந்தி சினிமாவின் வசூலுக்கு நிகராகும்.
    இதையெல்லாம் விட , நல்ல படம் எடுக்க வேண்டும் என்பது முக்கியம். காப்பி அடிப்பதோ, மொழி பெயர்ப்பு செய்வதோ மட்டும் போதாது. 

ஒரே நாளில் விஸ்வரூபத்தின் தமிழ்இசை இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசைதகடாக இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசைதகடாக முதல் இடத்திற்குவிஸ்வரூம் வரும் என்கிறது வியாபார வட்டாரம்.
         இசை வெளிவந்ததே பலருக்கு தெரியாது என்பதே உண்மை... இசைத்தகடு சேல்ஸ் ரிப்போர்ட் மிக மோசமாகவே இருக்கிறது..

இது ஒரு வர்த்தக சாதனை. ஏற்கனவே உலக வர்த்தகம் இந்திய சினிமாவை நல்ல பொருள் ஈட்டும் களம் என நம்புகிறது. உலகத்துக்கு இருக்கும் நம்பிக்கை உள்ளூரிலும் இருக்க வேண்டாமா?

         இந்திய சினிமாவை நம்புகிறது..ஓகே..கமல் படத்தை நம்புகிறதா ? 
DTH ல் ஒரே ஒரு காட்சி காட்டப்படும். இதை பதிவு செய்ய முடியாது. பிரத்தி யேகக்காட்சி முடியும் போது படம் DTH கருவியில் தங்காது. 
           தங்காவிட்டாலும் , வேறு முறையில் காப்பி செய்யலாம் என்பது அனைவருக்கும் தெரியும். 
ஒருமுறை இப்படத்தைப் பார்க்க 1000 ரூபாய் கட்டணம். தியேட்டர் கட்டணத்தைப் போல் பத்து மடங்கு. காட்சியை வீட்டில் பார்த்த சந்தோஷம் தவிர சினிமா தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாய்க் கிடைக்காது.
          தியேட்டர் கட்டணத்தை போல பத்து மடங்கு என்பது சரியான கணக்கல்ல.. அந்த ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ஆள் மட்டுமா வீட்டில் படம் பார்ப்பார் ? 

விஸ்வரூபத்தில் ஒலி அமைப்பு இதுவரை இந்திய ரசிகர்கள் கேட்டிராத அளவு அற்புதமாக செய்திருக்கிறோம். ஹாலிவுட் படத் தயாரிப்பில் அதுவும் மேல் தட்டுப் படங்களில் மட்டுமே தென்படும் தரமிது. இத்தனையும் செய்தது TV-ல்காட்டுவதற்கு மட்டும் அல்ல.
               பிறகு ஏன் டீவியில் காட்டுகிறீர்கள். இது ஆயிரம் ரூபாய் கொடுப்பவனை ஏமாற்றுவது ஆகாதா ? 

DTH வசதி தமிழக ஜனத் தொகையில் 3 விழுக்காடு வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருக்கிறது. அதில் நாங்கள் 1½ விழுக்காடு வாடிக்கையாளர்களிடம் மட்டுமே காட்ட முடியும் என்கிறது கணக்கு. 100 பேர் ஒருவனுக்கு பயப்படுவது ஆச்சரியம்.
            அந்த 1 1/2 விழுக்காட்டினர், படம் குப்பை என சொல்லி விட்டால் , நெகடிவ் பப்ளிசிட்டி ஆகி 100 விழுக்காட்டையும் பாதிக்குமே ...

7½ கோடியில் ஒரு விழுக்காடு படம் பார்த்தால் குடியே கெடும் என்பவர்கள் நமது வருமானத்தில் 50% ஐ கள்ள DVD வியாபாரிகொண்டுபோவதைத்தடுப்பதற்குசிறுமுயற்சிகளேசெய்கிறார்கள். கள்ள DVDக்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து பயிரை மேயும் வேலியை விட்டு விட்டு நேர்மையான வியாபாரத்தைத் தடுப்பது கண்டிக்கத்தக்கது.
 திருடனுக்கு 50% கொடுத்தாலும் கொடுப்பேன்; உடையவனுக்கு ஒன்றுகூட சேரக் கூடாது என்பது நியாயமில்லாத வாதம்.

ஒரு தவறு , இன்னோரு தவறை நியாயப்படுத்தாது.. இரண்டுமே தவறு... 
இந்த முயற்சியால் தியேட்டரில் கூட்டம் குறையாது. தொலைக்காட்சியில் இலவசமாய் படம் காட்டினால் வியாபாரம்கெடும் என்று எதிர்த்துத்தோற்ற இதே வியாபாரிகள் இன்று சுபிட்சமாக வாழும் சான்றே போதுமானது.
 சிலர்தான் சுபிட்சமாக வாழ்கிறார்கள்..பல வெற்றி படங்களை கொடுத்த தயாரிப்பாளர்கள் , சினிமாவை விட்டே போய் விட்டார்கள்.. பல சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன.  சில மூடப்பட இருக்கின்றன.  
பகுத்தறிவாளனாக இருப்பினும் பெரும்பான்மையினர் புரிந்துகொள்ள ஒருபக்தி விளக்கம். வீட்டில் பெருமாள் படம் காலண்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்குப் போவதைக் குறைத்துக் கொண்டதாய்த் தெரியவில்லை.
      ஆனால் கேபிள் டிவி , விசிடி வரவால் சினிமாவுக்கு போவதை குறைத்து கொண்டார்கள். முன்பெலலாம் தியேட்டர்களில் கூட்டம் அலை மோதும்ம். இப்போதோ போதிய ஆட்கள் வராமல் காட்சிகள் ரத்தாகின்றன. 

கிட்டதட்ட அந்த நிலைதான் சினிமா அரங்க அனுபவத்திற்கும் வீட்டில் மின்விசிறி இருப்பினும் காற்று வாங்க கூட்டம் கடற்கரைக்கு வருகிறது. ரேடியோவில் தன்குரல் கேட்டால் புகழ் குறையும் என்று, நினைத்துப் பாடாமல் இருந்த கர்நாடக பாகவதர்கள் போல் இருப்பது உசிதமல்ல. 
        சமையலறையும் நல்ல சமையலும் பல வீடுகளில் இருப்பதால் ஹோட்டல்களை மூடிவிட்டார்களா என்ன?
ஹோட்டல்களை மூடவில்லை... ஆனால் சினிமா வீடுகளுக்கே வருவதால் , பல தியேட்டர்களை மூடி விட்டார்கள். 


முடிவாக இது முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் படம் என்று சந்தேகப்படுகிறதாம் ஒரு சில முஸ்லிம் அமைப்புகள். இந்த முஸ்லிம்கள் படத்தை பார்த்து, மனம் மாறி, தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டு விட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர். அவர்கள் மனதிற்குள் வருந்தினால் மட்டும் போதாது. நான் விடமாட்டேன். சகோதரனைச் சந்தேகப்பட்டதற்கு பிராயச்சித்தமாக அந்த முஸ்லிம் சகோதரர்கள் அடுத்த பக்ரீத்துக்கு அண்டாஅண்டாவாக பிரியாணி விருந்தளிக்க வாக்களிக்க வேண்டும்.
 அவ்வளவு உறுதியாக இருந்தால் , இஸ்லாமிய பெரியவர்களுக்கு படத்தை முன்கூட்டியே திரையிட்டு காட்டலாமே.. படம் இஸ்லாத்தின் மாண்பை உயர்த்துவதாக் இருந்தால் , வேண்டிய அளவு விருந்தளிப்பார்களே... 
அத்தனை பிரியாணியையும் நான் ஒரு ஆள் சாப்பிட இயலாது. ஆதலால் நம் அன்பின் சான்றாக பசித்த ஏழைப் பிள்ளைகளுக்கு அதை விருந்தாக்குங்கள் எப்போதும் போல அக்குழந்தைகளின் சாதி-மதம் பார்க்காமல் அதைச்செய்யுங்கள். அப்பெரு விருந்தில் கலந்துகொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்.

                இஸ்லாம் பெரியவர்களுக்கு திரையிட்டு காண்பித்து அனுமதி பெற்றால் , கண்டிப்பாக உங்கள் கோரிக்கையை மகிழ்ச்சியுடன் செய்வார்கள்...

Saturday, December 8, 2012

என்னை கவர்ந்த டாப் ஃபைவ் கமல் படங்கள்



தமிழ் சினிமாவை அழிக்கும் நோக்கில் கமல் செயல்படுவதாலும், அதை தட்டிக்கேட்க வேண்டிய ஊடகங்கள் பூணூல் பாசத்தால் அமைதி காப்பதாலும்,   கமலை கண்டித்து எழுத வேண்டிய அவசியம் மாற்று ஊடகமான வலைப்பூக்களுக்கு ஏற்ப்பட்டது.

டி டி எச் முறைப்படி தயாரிப்பாளருக்கு உறுதியான லாபம் - வினியோகஸ்தர்களுக்கு படத்தின் தரத்தை பொறுத்து லாபம் என்ற நியாயமற்ற வியாபாரத்தை கண்டித்து எழுதியதை வைத்து , சிலர் கமலை நான் கண் மூடித்தனமாக எதிர்ப்பதாக நினைக்கிறார்கள்.

அதுதான் இல்லை.  நான் சினிமாவுக்கு செல்ல ஆரம்பித்த பள்ளி நாட்களிலிருந்து , இன்று வரை வெளியான அனைத்து கமல் படங்களையும் நான் மிஸ் செய்யாமல் பார்த்து வருகிறேன்.

சாரு சொன்னதுபோல , கமல் ஒரு நிகழ மறுக்கும் அற்புதம் என்றே நினைக்கிறேன். அப்படி ஒரு அற்புதம் என்றேனும் ஒரு நாள் நிகழும் என உறுதியாக நினைக்கிறேன்.

அற்புதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் , ஒரு சராசரி ரசிகனாக என்னை கவர்ந்த டாப் ஃபைவ் கமல் படங்களை பட்டியிலிட விரும்புகிறேன்.



5  கல்யாண ராமன் 

இப்போது வழக்கொழிந்து விட்ட ஒரு பழக்கம் முன்பெல்லாம் இருந்தது. அதுதான் சினிமா கதை சொல்வது. டைட்டில் முதல் எண்ட் கார்ட் வரை , வரிசையாக காட்சி வாரியாக சினிமா கதை சொல்லும் கில்லாடிகள் அன்று இருப்பார்கள்.

கேபிள் டிவி , சிடி இல்லாத அன்றைய காலத்தில் இந்த கில்லாடிகளுக்கு பெரிய மதிப்பு.  கல்யாணராமன் வெளிவந்த போது நான் சின்னப்பையனாக இருந்திருப்பேன் என நினைக்கிறேன்.  பெரிய பையன்கள் கதை சொல்லும்போது கேட்டு இருக்கிறேன். பேய் கமல் காட்சிக்ளை சுவையாக சொல்வார்கள் , இப்படி கதை கேட்டு கேட்டே , அந்த படம் மீது ஈர்ப்பு வந்தது.  பிறகு படம் பார்க்கும்போதும் சுவையாகவே இருந்தது. பாடல்கள் அபாரம்.


4 மகா நதி 

  பொழுதுபோக்குக்காக சினிமா பார்ப்போம். ஆனால் ஒரு படத்தை பார்த்து , மனம் கமக்க வெளியே வரும் படங்கள் வெகு குறைவே. அந்த வகையில், ரசிகர்களால் மறக்க முடியாத படம் மகா நதி.

இதில் வரும் எந்த ஒரு கேரக்டரையும் நம்மால் மறக்க முடியாது. தேவையற்ற காட்சிகளோ , கேரக்டர்களோ படத்தில் இருக்காது என்பது சிறப்பம்சங்கள்

 நீண்ட நாட்களாக பிரிந்த மகளை , கமல் மீட்பார். தூக்கத்தில் அவள் உளறுவதை கேட்டு , கமல் அடையும் வேதனை, அனைவர் மனதையும் கனக்க செய்யும்.

3 இந்தியன் 

வழக்கமாக ஷங்கர் படங்களில் காமெடி அவ்வளவாக சோபிக்காது.  ஆனால் இந்த படத்தில் , சீரியசான கதை என்றாலும் , படம் முழுக்க காமெடிக்கு குறைவிருக்காது.  எல்லா காட்சிகளையும் கமலே டாமினேட் செய்யாமல் , கவுண்டமணி- செந்திலுக்கும் ஸ்கோப் இருக்கும். கமல் படங்களில் இது அபூர்வம்.


இரு கமல்களுக்கும் ஏற்படும் மோதல்கள், மகன் கமல் தந்தையை தகாத வார்த்தையில் திட்டும்போது , தந்தையின் அதிர்ச்சி , வயதானவர்களின் மேனரிசத்தை சரியாக செய்திருப்பது என பல காட்சிகளை ரசிக்கலாம்.

2 மூன்றாம் பிறை 

கவியரசு கண்ணதாசன் கடைசியாக இந்த படத்துக்குத்தான் பாடல் எழுதினார் என்ற சிறப்பு இந்த படத்துக்கு உண்டு. பிரிவை இதை விட சோகமான சொன்ன படம் ஏதும் இல்லை. அந்த அளவுக்கு இயல்பாக , இரக்கம் இல்லாமல் பிரிவு நிகழும்.

பிரிதல் என்பது முடிவாகிவிட்டால் , அதற்கு முன் இருந்த உறவு எந்த விதத்திலும் அந்த பிரிவை தடுக்க இயலாது. அந்த வகையில், அந்த உறவுக்கு அர்த்தமே இல்லை. ஆனால் அந்த உறவு , சம்பந்தப்பட்ட ஒருவர் பார்வையில் உன்னதமானது.
கிளைமேக்ஸ் காட்சியை , யாராலும் மறக்க முடியாது.

1. நாயகன் 


எழுத்து சித்தரின் அபார வசனம் முத்திரை பதித்த படம் இது.  பல வசனங்கள் , பலமுறை பலரால் பயன்படுத்தப்பட்டு விட்டன. ( உதாரணம் - நல்லவனா கெட்டவனா, நாலு பேரு நல்லா இருக்கணும்னா, நான் அடிச்சா செத்துடுவ )

இசை ஞானியும் பட்டையை கிளப்பி இருந்தார். ஆனால் , சமீபத்திய பேட்டியில் நாயகன் குறித்து பேசுகையில் , இளையராஜா பெயரை ஏனோ தவிர்த்து விட்டார்.

இந்த படம் வரும்போது , போட்டியாக  ரிலீஸ் ஆன படம் ரஜினியின் மனிதன், அது ஒரு சாதாரண மசாலா படம் என்றாலும் , நாயகனை விட அதுதான் நன்றாக ஓடியது.

அதுவரை ரஜினிக்கு போட்டியாக மசாலா படங்களில் நடித்து வந்த கமலுக்கு , இந்த படம் மூலம் வேறோர் பாதையை காட்டினார் மணிரத்தினம். அந்த வகையில், கமலுக்கு திருப்பு முனையாக அமைந்த படம்தான் நாயகன்.


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா