Saturday, August 15, 2015

தங்க மீன்கள் போன்ற குப்பைகளை திட்டுவது தவறா- சாரு உருக்கம்


சுவாரசியமான ஆரம்பம் ,  நகைச்சுவை என பேச்சை ஆரம்பித்து கைதட்டல் வாங்குவது சிலர் பாணி.
ஆனால் சாரு அப்படி அல்லர்.. அவர் தொழில்முறை பேச்சாளர் போல பேச மாட்டார்... சுவையான ஆரம்பம் . ஆங்காங்கு நகைச்சுவை , கொஞ்சம் கொஞ்சமாக முடிவை நோக்கிச்செல்லுதல் எனும் ஃபார்முலா அவரிடம் இல்லை...

15.08.2015 அன்று விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 15 சென்னையில் நடந்தது...

இலக்கியமும் இன்றைய வாழ்க்கையும் என்ற தலைப்பில் சாரு பேசினார்...

 நல்ல கூட்டம்...  வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் இலக்கிய ரசனை கொண்டவர்கள் . ஆனால் முழு நேர இலக்கியவாதிகள் அல்லர்.. இளைஞர்கள் , பெரிய வேலைகளில் இருப்பவர்கள் , பெண்கள் என வித்தியாசமான சூழல்.. ஜிப்பா ஜோல்னா பை எனும் அந்த கால இலக்கிய கூட்ட அம்சங்கள் எதுவும் இல்லை...
சாரு தன் பேச்சில் இதை குறிப்பிட்டார்...

அந்த காலங்களில் இலக்கியம் பேச சரியான இடம் கிடைக்காது... அழுக்கு நிறைந்த ஏதோ ஒரு கட்டிடம் கிடைக்கும்..போய் விட்டு வந்தால் ரெண்டு நாள் தூசி போகாது.. வாசகர்கள் என யாரும் இருக்க மாட்டார்கள்.. எழுதுபவர்கள்தான் படித்தும் ஆக வேண்டும். எனவே ஒரு சின்ன கூட்டமாகவே அன்றெல்லாம் கூட்டம் நடக்கும். இப்போது நிலை பரவாயில்லை.. இத்தனை வாசகர்களை பார்ப்பதில் சந்தோஷம்.  முன்பைவிட நிலை தேவலாம் என்றாலும் இதுவும் போதாது.. இன்னும் அதிகமாக வேண்டும்.

எனக்கு பேச தெரியாது. நான் ஓர் எழுத்தாளன். என் மகனிடம்கூட அதிகம் பேசுவதில்லை. மெயில்தான் அனுப்புகிறேன்.ஆனாலும் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இலக்கியவாதிகளுக்கு மதிப்பில்லாத நிலையே சமூகத்தில் நிலவுகிறது. ஒரு நடிகருக்கு மேடையில் கை கொடுக்க போனேன். அவரோ என் கையை தட்டி விட்டு போய் விட்டார். இப்படி அவமரியாதை செய்வது மனித தன்மையா.. சாரு என்றாலே பலர் தீண்டத்தகாதவன் என ஒதுக்கி வைக்கும் நிலையில் என்னை துணிச்சலாக கூட்டத்துக்கு அழைத்த அழகிய சிங்கருக்கு என் நன்றி. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

உண்மை சொல்வதற்காக நான் வெறுக்கப்படுகிறேன். ஊரே பாராட்டுகிறது என்பதற்காக என்னால் பரதேசி படத்தை பாராட்ட முடியாது. அது ஒரு தப்பான படம் என்பதை நான் மட்டும் தனி ஆளாக சொல்லி பலர் வெறுப்புக்கு ஆளானேன்.. இத்தனைக்கும் டைரக்டர் பாலா மேல் எனக்கு அன்பு உண்டு.

எனக்கு இதய பிரச்சனை காரணமாக  நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது , தன் வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு என்னை வந்து பார்த்தவர் வசந்த பாலன்.  அவர் என்  மேல் அன்பு காட்டுபவர்  என்பதற்காக அவ்ரது எல்லா படங்களையும் என்னால் பாராட்ட முடியாது. பிடிக்கவில்லை என்றால் யாராக இருந்தாலும் விமர்சிப்பேன்..

தங்க மீன்கள் என ஒரு மோசமான படம். தற்கொலை செய்து கொள்வது எப்படி என குழந்தைகளுக்கு சொல்லித்தரும் படம். கடுமையாக திட்டி எழுதினேன். இப்படி சராசரி மன நிலைக்கு எதிராக நான் இயங்குவதால் பலராலும் வெறுக்கப்படுகிறேன்.

அந்த காலத்தில் பல நல்ல சிற்றிதழ்கள் வந்தன. பலர் தம் சொத்துகளை விற்று நகைகளை விற்று இலக்கியத்தை வளர்த்தனர். சி சு செல்லப்பா ஊர் ஊராக சென்று புத்தகம் விற்றார். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும் தம் பணியை செய்து கொண்டே இருந்தனர். அவர்களது நீட்சியாக  , விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் நான் எழுதி வருகிறேன்.

யாரையும் துன்புறுத்துவது என் நோக்கம் அல்ல.. என் வீட்டுக்குள்  நுழைந்து விடும் பூரான்களைக்கூட நான் கொல்வதில்லை.. எந்த காயமும் ஏற்படாமல் ஒரு பேப்பரில் எடுத்து வெளியே தூக்கி போடுவேன்

சிலர் என்னை தவறாக புரிந்து கொள்வதே பிரச்சனைக்கு காரணம். அதிகமாக செக்ஸ் எழுதுவதாக ஒரு குற்றச்சாட்டு. பாலியல் வறட்சியில் வாடும் நாடு என்பதால் , நான் பத்து பக்கத்துக்கு பாலியல் எழுதினால் , நூறு பக்கங்களுக்கு கற்பனை செய்து கொள்கிறார்கள்.

தாய்லாந்து போன்ற நாடுகளில் சில கடைகளில் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை என எழுதி வைத்துள்ளனர். காரணம் நம் ஆட்கள் கடைகளுக்கு போனால் , அங்கிருக்கும் பெண்களுடன் போட்டோ எடுக்க க்யூவில் நிற்கின்றனர். பஸ்ஸில் செல்லும் சுற்றுலா பயணிகள் இப்படி க்யூவில் நின்று போட்டோ எடுத்து முத்தம் கொடுத்து அதை பெருமையாக இங்கே சொல்லலாம்.. ஆனால் நம் பெயர் கெட்டு விடுகிறது. இந்தியர்கள் வர வேண்டாம் என்கிறார்கள்>.

இதற்கு காரணம் பாலியல் வறட்சி மட்டும் அல்ல...சென்சிப்லிட்டி இன்மையும் இதற்கு காரணமாகும்.  இலக்கிய பரிட்சயம் இல்லை என்றால் இப்படித்தான் இருப்பார்கள்.

மேம்போக்காக கருத்துகளை சொல்லும் சராசரி மனிதனைப்போலவே மெத்தப்படித்த பேராசியர்களும் இருக்கிறார்கள். ராணுவ ஆட்சி வந்தால் எல்லாம் சரியாகி விடும் எனும் மேம்போக்கான கருத்தையே ஒரு பேராசிரியரும் சொல்கிறார்.

ஒரு பேட்டிக்காக ஒரு பேராசியர் என்னிடம் கேள்வி கேட்டார்.. நீங்கள் யார் , என்ன தொழில் செய்கிறீர்கள் என்கிறார். இப்படித்தான் பொது அறிவு இருக்கிறது..

ஒரு பேராசியருக்கு மெயில் அனுப்பினேன்... டியர் மேடம் என பதில் எழுதுகிறார் அவர்..

அப்துல் கலாமிடம் உங்களுக்கு பிடித்த சிந்தனையாளர் யார் என கேட்டால் , விவேக் என்கிறார்.. நிலை இப்படி இருக்கிறது..

பலரது மானசீக குருவாக இருப்பவர் மௌனி. அவரை எனக்கு பிடிக்கும் என சொல்ல முடியாது. ஒரே கதையை மீண்டும் மீண்டும் எழுதுகிறார் என தோன்றும் . ஆனாலும் அவரது எழுத்தாளுமையின் ரசிகன் நான். அதற்காகவே அவர் எழுத்தை படிப்பேன்.. அந்த வகையில் அவர் என் குரு. ஜெயகாந்தனும் அவரை குருவாக நினைத்தவர் .

அப்படிப்பட்ட மௌனியின் கொள்ளு  பேத்தியை சமீபத்தில் சந்தித்தேன். இலக்கியம் அளவுக்கு எனக்கு நாய்களை பிடிக்கும். வளர்ப்பு பிராணிகள் ஆர்வலர்கள் கூட்டங்களுக்கு செல்கையில் மௌனியின் பேரனோடு  பழக்கம் ஏற்பட்டது.  அவரோடு மௌனியைப்பற்றி பேசுவதை பார்த்து குழம்பிய அவள் என்ன டாப்பிக் பேசுகிறீர்கள் என கேட்டாள்/. உன் கொள்ளு தாத்தா மிகப்பெரிய ரைட்டர் என்றேன். அப்படியா எனக்கு தெரியாதே என்றாள்t; திடுக்கிட்ட நான் , ஏன் இதை மகளிடம் சொல்லவில்லை என அவரிடம் கேட்டேன்.. ஏன் சொல்ல வேண்டும் என கேட்டார் அவர்.

கலாம் அளவுக்கு மௌனி கொண்டாடப்பட்டு இருந்தால் அவர் இப்படி கேட்டிருக்க முடியுமா....  மௌனி பல்கலைக்கழகம் , மௌனி நெடுஞ்சாலை , என இருந்தால் அந்த பேத்திக்கு அவரை தெரியாமல் இருந்திருக்குமா

சம்பத் குறித்து எழுத அவரது நூல்கள் தேவைப்பட்டன. கிடைக்கவில்லை. ஏன் தெரியுமா... அந்த நூல்கள் வெளியிடப்படக்கூடாது என அவர் மனைவி தடை வாங்கி இருக்கிறார். அந்த அளவுக்கு குடும்பத்தார் எழுத்தாளர்களை வெறுக்கின்றனர்...

சர்வதேச அளவில் சிலாகிக்கப்படும் நூல்களை விட சிறந்த ஆக்கங்க்ளை படைத்தவர் தஞ்சை பிரகாஷ். அவரது காரமுண்டார் வூடு நாவல் கிடைப்பது இல்லை. நல்ல நூல்களை நாம் கொண்டாடுவது இல்லை. இவரது நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டு இருந்தால் சர்வதேச புகழ் பெற்றிருக்கும். ஆனால் நம் ஊரிலேயே இவர் நூல்கள் கிடைப்பதில்லை

சி சு செல்லப்பாவுடன் அவர் தாயார் பல ஆண்டுகள் பேசவில்லை...எழுத்துக்காக இப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டி இருக்கிறது..

ஆனால் இப்படி கஷ்டப்படுவதற்கான பலன் குறைவுதான்.

எழுத்துக்காக பல தியாகங்களை செய்த தஞ்சை பிரகாஷ் . குறித்து சராசரி வாசகன் தெரிந்து கொள்ளாவிட்டால் பரவாயில்லை.. அவர் உயிர் நண்பரான வெ சா என்ன எழுதுகிறார் பாருங்கள்

முப்பது வருடமாக ப்ரகாஷ் என் உயிர் நண்பர்; ஒரே தட்டில்தான் சாப்பிட்டோம். ஆனால் அவர் சாவுறதுக்குக் கொஞ்ச நாள் முந்திதான் அவர் எழுதுவார் என்றே தெரிந்தது

வெ சா எ ( வெங்கட சாமி நாதன் எழுதுகிறார் )  என ஒரு பத்திரிக்கை நடத்தியவர் தஞ்சை பிரகாஷ். அவரைப்பற்றி இப்படி எழுதுகிறார் வெங்கட சாமி நாதன்

இப்படித்தான் நம் சூழல் இருக்கிறது...


இதற்கு முக்கிய காரணம் என நான் நினைப்பது மொழி என்பது நம்மிடம் ஒரு தகவல் தொடர்பு சாதனமாகவே மட்டும் இருக்கிறது. இது தவறு . மொழி என்பது கலாச்சார சின்னமாக பண்பாட்டு அடையாளமாக இருக்க வேண்டும்.

 நல்லா இருக்கியா ..சாப்பிட்டியா என தகவல்களை சொல்ல மட்டும் பயன்படுவது மொழி அல்ல.. நம் மரபு , பண்பாட்டின் சின்னமாகவும் மொழி இருக்க வேண்டும்.

விமானத்தில் ஒருவர் பயணித்தார். காசு எடுத்து வரவில்லை.. பசி.. ஏதாச்சும் சாப்பிட கொடுங்கள் . விமான நிலையத்தில் இறங்கிய அடுத்த நொடி காசு தந்துவிடுகிறேன் என்றார்.. படித்த ஸ்டைலிஷான் ஏர்ஹோஸ்டஸ் அதை ஏற்கவில்லை..

இதுவே கிராமமாக இருந்தால் அவருக்கு உணவு கிடைத்து இருக்கும்.

 உ வெ சா வாழ்வில்  உதாரணம் ...   அவர் வீடு அருகே ரயில் நிலையம் ... இரவில் ரயில் அங்கே வரும்.. ரயிலில் இருந்து இறங்குபவர்கள்  யாருக்காவது தேவைப்படுமே என அவரது தாயார் சோறு வைத்து இருப்பார். சில நேரங்களில் ரயில் தாமதமாக வரும்... அந்த நேரங்களில் ரயில் வரும்வரை சோற்றில் தண்ணீர்  ஊற்றாமல்
 காத்திருப்பார்இலக்கியம் என்பது நுண்ணுணர்வை வளர்க்கும் என சொன்னேன்.. கிராமங்களில் எல்லோரும் இலக்கியம் படிப்பதில்லை. ஆனாலும் எப்படி நுண்ணுணர்வு எப்படி இருக்கிறது...காரணம் அவர்கள் அன்றாட மொழியே இலக்கியமாக இருக்கிறது.. கூத்து , நடனம் என இலக்கியம் அவர்களை அடைகிறது..

ராமாயணம் , பாரதம் என பாட்டிகள் சொல்லும் கதைகள்  அவற்றில் பல புனை கதைகள் , கட்டுக்கதைகள் . அவைகள் ஒரு மன நிலையை உருவாக்குகின்றன.. சுருட்டு புகையுடன் என் பாட்டி சொன்ன கதைகள் என்னை உருவாக்கின... 

நம் மொழியை நாம் காக்க வேண்டும்...

தன் மண்ணின் மொழியை படிக்காமல் அங்கு வாழ முடியும் என்பது இங்கு மட்டுமே இருக்கும் அபத்தம்.உலகில் எங்குமே இப்படி இல்லை..

என் மகனும் தமிழ் படிக்கவில்லை... ஏன்/?? தமிழில் மார்க் கிடைக்காது என்றான்... வேறு ஆப்ஷன் இருக்கிறது என்கிறான்..தமிழைத்தவிர வேறு ஆப்ஷன் ஏன் கொடுக்கிறீர்கள்>.. தமிழ் படித்தே ஆக வேண்டும் என்ற நிலை வேண்டாமா

 நான்கு பேர் கொண்ட குடும்பம் ஸ்கூட்டரில் போவதை பார்க்கையில் முன்பெல்லாம் கோபம் வரும். இப்போது அவர்களுக்கு வேறு வழி இல்லை என புரிந்து கொள்கிறேன். மெட்ரோ , பேருந்து என ஐரோப்பாவில் இருக்கும் ஆப்ஷன்கள் இங்கு இல்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது..

மண்ணில் தெரியுது வானம் எனும் நாவல் என்னை மாற்றிய நாவல்களில் ஒன்று. என்னிடம் இருக்கும் வன்முறையை அது ஒழித்து விட்டது.. முப்பது ஆண்டுகளுக்கு முன் இதை படித்திருந்தால் , என் வாழ்க்கை  வேறு மாதிரி இருந்திருக்கும்.. ஆனால் என் நாவல்கள் இதேபோலத்தான் இருந்திருக்கும் .பக்திமானாக இருந்து கொண்டே , பாலியலை எழுதினாரே வெங்கட்ராம். அவரைப்போல என் வாழ்க்கை இருந்திருக்கும்..

என்னை மாற்றிய இன்னொரு நாவல் , மொராக்கோ எழுத்தாளர்  தகர் பென் ஜெலுன் எழுதிய ஃபிரஞ்ச் நாவலான This Blinding Absence of Light ..இதுதான் என் ஆன்மீக பார்வையை உருவாக்கிய நாவல் எனலாம்..தமிழ் நாட்டைப்போல இலக்கிய அறிவு இல்லாத இடம் உலகிலேயே இருக்காது என நினைத்தேன்...அதை மாற்றிய நாடுகள் துருக்கியும் தாய்லாந்தும்... நம் வாசிப்புகூட அங்கு இல்லை... அந்த எழுத்தாளர்களை ஒப்பிட்டால் நம் ஊரில் இருக்கும் சில எழுத்தாளர்களை கோயில் கட்டி கும்பிடலாம்..

சௌதி அரேபியாவில் அப்துல் ரஹ்மான் முன்ஃப் என ஒரு எழுத்தாளர் இருந்தார்.. அவர் கருத்துகள் பிடிக்காத அரசு அவரை நாடு கடத்தியது.. அங்கே அந்த அளவுக்கு எழுத்தாளர்களை குறித்த சென்சிப்லிட்டி இருக்கிறது... நம் ஊரில் எழுத்தாளனை யாரும் கவனிப்பதில்லை....பிற்காலத்தில் அவரை மீண்டும் அழைத்தார்கள்>. அவர் போகவில்லை..இங்கே பல பிரச்சனைகளுக்கு மத்தியில்தான் எழுத வேண்டி இருக்கிறது..

ஷேக்ஸ்பியர் நாடகத்தில் கண் இழந்த நிலையிலும் எழுகின்ற இன்னிசை குறித்த காட்சி வருமே... அதுதான் ஊக்கசக்தியாக இருக்கிறது...

எழுத்துக்கு ஒருவித தீவிர, தேவை.  நான் அந்த காலத்தில் அடிக்கடி தருமு சிவராமுவை சந்திப்பது வழக்கம். ஒன்றாக தேனீர் அருந்துவோம். ஒரு முறை நான் அவர் கவிதையை குறை கூறியிருப்பது வருத்தம் அளிப்பதாக சொல்லி டீ அருந்த மறுத்தார்... உங்கள் கவிதை எனக்கு மிகவும் பிடிக்குமே.. நான் குறை சொல்லவில்லையே என்றேன்.. அதன் பின் வீட்டுக்கு அழைத்து சென்றார். என் கட்டுரை வந்த பத்திரிக்கையை எடுத்து பார்த்த பின்பே சமாதானம் ஆனார். அந்த அளவுக்கு தீவிரமாக இருந்தவர் அவர்...

கொரில்லா படைபோல எழுத்தாளர்களும் வாசகர்களும் செயல்பட வேண்டிய சூழல்தான் இங்கு இருக்கிறது..

டீவி பார்ப்பதை குறைத்தால் படிக்க நேரம் கிடைக்கும். படியுங்கள்...

இவ்வாறு சாரு பேசினார்...

சாருவின் துணிச்சலுக்கு தான் எப்பவும் ரசிகர் என்றார் அழகிய சிங்கர்

அடிக்கடி சாருவை வைத்து கூட்டம் நடத்தும் அளவுக்கு கூட்டம் வெகு சிறப்பாக நடந்ததாக அமைப்பாளர்கள் கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்...
6 comments:

 1. charu ondru theriyamal pesugirar eluthu ilakiyam ellam luxury avai thina vazhkaiku ondrum prayojanam iruka povathillai padithavrgalin rasanai mempaduvathai thavira ithai kattayam padika vendum ena ivar en valiyuruthugirar. appadiyenral kattayam cinema nadakam koothu parka vendum kattayam hotelil sapida vendum kattayam club sella vendum endrellam pesa arambithal enna agum. kalam thannalam atra manithan ilaignargalin siruvargalin manathil karpanayai vithaithavar appazhukatravar thalaimai pathaviyil irunthum thavaru seiyathavar atharkagave kondadapattar ithil thavar enna irukirathu.sari kalam eluthiya 5 puthagangali charu padithirukirara non fiction endra ondru undu ariviyal varalaru thathuvam ellam apadi than eluthapadugirathu endru charuvirku yaravathu vilaki sonnal paravayillai.

  ReplyDelete
 2. நேரில் கேட்பது போன்ற உணர்வை கொடுக்கும் பதிவு. நன்றி.

  ReplyDelete
 3. சாரு புத்தகம் படிப்பதுதான் கொஞ்சம் கஷ்டம், ஆனால் பேச்சில் அனைத்து பாலையும் சிக்ஸர் அடிப்பார். ஏதாவது ஒரு டி.வி நிகழ்ச்சியில் அவரைக் கண்டுவிட்டால், இறுதிவரை சேனலை மாற்ற மனம் வராது.

  ReplyDelete
 4. போகப் போக ஜால்ரா சத்தம் ரொம்ப அதிகமா கேக்குது.

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா