Tuesday, January 19, 2016

அ தி மு க ஆட்சி மீதான நம்பிக்கை தளர்ந்து வருகிறது - சோ - துக்ளக் விழா ( இறுதி பகுதி)







பழ கருப்பையா

புகழ் மிக்கவர்களின் புதல்வர்களான ஈவிகேஎஸ் இளங்கோவன் , அன்புமணி ராமதாஸ் அவர்களே , 110 விதியின் கீழ் சட்டசபையில் பேசுவதுபோல உரிமையுடன் பேசும் அதிகாரம் படைத்த செல்லப்பிள்ளை சரத்குமார் அவர்களே , அமைச்சருக்குரிய தோரணை கொண்ட பொன் ராதாகிருஷ்ணன் அவர்களே , கண்ணதாசனுடன் பழகும் வாய்ப்பு கிடைத்த எஸ் ஆர் பி அவர்களே அனைவருக்கும் வணக்கம். இத்தனை பெரிய சான்றோர்களுடன் ஒப்பிட்டால் என் தகுதி மிகவும் குறைவு என நினைத்ததாலோ என்னவோ என்னை கடைசியாக அழைத்துள்ளார் சோ என நினைக்கிறேன் ( இல்லை என கூட்டத்தினர் கோஷமிட்டனர் )

இன்றைய அரசியல் பற்றி பேசுவதென்றால் , இப்போதெல்லாம் ஓர் அமைச்சர் கீப் வீட்டுக்கு போவதென்றாலும்கூட எஸ்கார்ட் கார் பாதுகாப்புக்கு போகிறது.. காரணம் அவர் பப்ளிக் சர்வெண்ட். காந்தி , காமராஜரால் வளர்க்கப்பட்ட காங்கிரஸ் இன்று  நக்மா , குஷ்புவை நம்புகிறதே..இதுதான் இன்றைய அரசியல் .

இளங்கோவன் என் சகோதர்தான்..இப்படி பேசுவதால் தப்பாக நினைக்க மாட்டார்.. காமராஜரிடம் பணியாற்றி விட்டு எப்படி அய்யா நடிகைகளுடன் பணியாற்றுகிறீர்கள்..

 நான் அடிக்கடி சந்தித்த தலைவர் காமராஜர். அதுபோல அடிக்கடி சந்திக்கும் ஒரே நபர் சோ தான்…  காமராஜரைப்போலவே சோவும் மிகவும் ஷார்ப்பானாவர்.. நாம் சொல்லபோகும் விஷயத்தை சில நிமிடங்களில் புரிந்து கொண்டு , இதைத்தானே சொல்ல வருகிறாய்…  நேரடியாக விஷ்யத்துக்கு வா என்பார் காமராஜ். ஒரு பில்ட் அப் கொடுக்க முடியாது..சோவும் அப்படித்தான்

 சோ இன்று நம் முன் நலமாக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவர் மகனும் மருமகளும்தான்.. இரவு பகலாக அவரை கவனித்து அவரை தேற்றி இருக்கின்றனர். நர்சுகள் ஏதேனும் சாப்பிட சொன்னால்கூட , தன் பார்வை மூலமாகவே மருமகள் அனுமதி கேட்டபின்பே சாப்பிடுவார் சோ
சோவின் பணி இன்னும் முடியவில்லை.. ராஜாஜி பெரியார் ஆகியோர் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மன உறுதியால்தான் நீண்ட நாட்கள் வாழ்ந்தனர். அப்படியே சோவும் வாழ வேண்டும்.

சோ 40 ஆண்டுகளுக்கு முன் போட்ட நாடகங்கள் இன்றும் பொருத்தமாக இருப்பது சமூக அவலம். நேர்மை உறங்கும் நேரம் , உண்மையே உன் விலை என்ன , யாருக்கும் வெட்கமில்லை என அனைத்தும் இன்றும் பொருத்தமாக உள்ளன.

அரசியலில் ஜன நாயகம் சற்றும் இல்லை. இப்போதெல்லாம் தீர்மானங்கள் விவாதிக்கப்படுவதே இல்லை. வாசிக்கமட்டுமே செய்கிறார்கள். அவை அப்படியே ஏற்கப்படுகின்றன.

புருஷன் பொண்டாட்டியே ஒத்துப்போக முடியவில்லை. ஆயிரக்கணக்கான எல்லா பொதுக்குழு உறுப்பினர்களும் ஒருமித்து ஒரே மனதாக தீர்மானத்தை நிறைவேற்றுகிறார்களாம்.

ஒரு கருத்து முன்வைக்கப்ட்டால் , அதை எதிர்த்து இன்னொரு கருத்து தோன்ற வேண்டும். இந்த இரண்டின் கருத்து மோதலால் புதிதாக ஒரு கருத்து உருவாகும் , இதுதான் ஆரோக்கியமானது என்கிறார் ஹெகல். இப்படி புதிதாக உருவான கருத்தும்கூட இறுதியானது அல்ல. அதுவும் இன்னொரு கருத்தால் மோதப்பட வேண்டும்.
ஆனால் எந்த கட்சியும் இப்படி செயல்படுவதில்லை. எந்த கட்சியிலாவது சர்வாதிகாரம் இல்லை என்றால் அது போதுமான அளவுக்கு வளரவில்லை என பொருள் ( பலத்த கை தட்டல் )

கடவுளையே வியாபார பொருள் ஆக்கி விட்டார்கள். என் மனைவி அடிக்கடி ஆலயம் செல்வார். அவர் அளவுக்கு எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் அவருடன் செல்வேன். கோயில் உண்டியல் அவருக்கு எட்டாது. கஷ்டப்பட்டு அதில் காசு போடுவார். ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறாய். நம் அமைச்சர் அவ்வளவு வறுமையிலா இருக்கிறார் என்பேன் . ( பலத்த கை தட்டல் ) . நாம் போடும் காசு கடவுளுக்கா போகிறது. அமைச்சர்களுக்குதானே போகிறது. ஏன் இப்படி பேசுகிறீர்கள் என மனைவி கோபிப்பார்

மதம் நிறுவனம் ஆகி விட்டது. தனக்கு மொட்டை போடுவது பக்தி.  காசு கொடுத்து அழைத்து வந்து 2000 பேருக்கு மொட்டை போடுவது அசிங்கம் இல்லையா., கடவுளையும் கேவலப்படுத்தி நம்மையும் கேவலப்படுத்திக்கொள்கிறோம்

முன்பெல்லாம் கோடீஸ்வரன் என்றால் ஒரு கோடி வைத்திருப்பார்கள். இன்றோ ஒரு லட்சம் கோடி , ஆயிரம் கோடி என்று ஆகி விட்டது. இப்போதெல்லாம் ஊழல்கள் என்றாலே லட்சம் கோடிகள்தான்.

எனக்கு என்ன சந்தேகம் என்றால் இவ்வளவு காசை வைத்து கொண்டு என்ன செய்வார்கள். 30 வேளை சாப்பிடுவார்களா.. பணத்தை உள்ளே வைத்து மெத்தை செய்வார்களா.. அப்படி செய்தால் அந்த படுக்கை சுகமாக இருக்காதே

அதிகார வர்க்கம் துணையின்றி இவ்வளவு ஊழல் நடக்காது. வல்லபாய் பட்டேல் அமைச்சராக இருந்தபோது அதிகாரிகள் பாதுகாப்பை உறுதி செய்வதாக சொன்னார் , அரசியல்வாதிகளுக்கு பயப்பட வேண்டாம் என்றார். அதற்கேற்ப விதிகள் உருவாக்கப்பட்டன.

மூன்று கடிவாளங்களை உருவாக்கினார். அதிகார வர்க்கம் , பத்திரிக்கை , நீதி துறை ஆகிய மூன்று மூக்கணாங்கயிறுகள் அரசியல்வாதிகளை அடக்கும் என நினைத்தார்
ஆனால் அதிகார வர்க்கம் இன்று விலை போய் விட்டது.. அவர்களுக்கும் பண ஆசை காட்டி தங்கள் பக்கம் இழுத்து விட்டனர் அரசியல்வாதிகள்.

விளம்பரம் கொடுத்து பத்திரிக்கைகளையும் வாங்கி விட்டனர். நீதி துறைதான் ஓரளவாவது பரவாயில்லை. ஆனாலும் சல்மான்கான் போன்றோர் விஷ்யத்தில் சந்தேகம் வரத்தான் செய்கிறது. அவரும் கொல்லவில்லை , டிரைவரும் கொல்லவில்லை என்றால் அத்தனைபேர் எப்படி இறந்தனர் ( கைதட்டல் )

சில அதிகாரிகள் சுடுகாட்டில் படுக்கும் அளவுக்கு நேர்மையாக இருப்பதும் உண்டு. அப்படிப்பட்ட நல்லவர்களையே மக்கள் தேடுகிறார்கள்.  முன்பெல்லாம் நல்லவர்கள் என்றால் பெண் கொடுப்பார்கள். இப்போதோ முதல்வர் ஆக்க விரும்புகிறார்கள். அதனால்தான் கேஜ்ரிவால் வர முடிந்தது.

( நேரம் முடிந்து விட்டதாக துக்ளக் நிருபர் கூறுகிறார். பேசுங்கள் பேசுங்கள் என கூட்டம் குரல் கொடுக்கிறது )

கூட்டத்தை அமைதிப்படுத்தி விட்டு பழ கருப்பையா தொடர்ந்தார்

 இல்லை.. விதிக்கு கட்டுப்பட்டாக வேண்டும். பேச்சை முடிக்கிறேன். ஒன்றே ஒன்று சொல்கிறேன்

சங்க காலத்தில் பாதீடு என்ற முறை இருந்தது..போரில் வெல்லும் அரசன் தான் வென்றதை போர் வீரர்கள் , அதிகாரிகள் , போருக்கு நாள் குறித்தவர் என அனைவருக்கும் பகிர்ந்து அளிப்பான்... அப்படிப்பட்ட சங்க கால தமிழர் பண்பாடு இன்று மீண்டும் செழித்து வளரத்தொடங்கியுள்ளது... கொள்ளை அடிக்கும் அமைச்சர் கொள்ளை பணத்தை அதிகாரிகள் உட்பட பலருக்கும் பகிர்ந்து அளிக்கிறார் 

இதெல்லாம் மாற வேண்டும்

கடைசியாக சோ நிறைவுரை ஆற்றினார்

 சோ

பழ கருப்பையா நல்ல சிந்தனையாளர். சிந்தனையாளனுக்குத்தான் குழப்பம் வரும். அவரை ஜனதா கட்சியில் இருந்த காலத்தில் இருந்தே அறிவேன். நேர்மையாளர்.

அதிமுக ஆட்சி என்றால் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும் , உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தது., அது தற்போது தளர்ந்து வருகிறது. எதிர்ப்பை பற்றி கவலை இன்றி உறுதியான நடவடிக்கை எடுப்பது அவசியம்
பணம் வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது

நிறைகளும் உள்ளன. வெள்ள நிவாரணம் சரியாக வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் பல்வேறு பவர் செண்டர்களாக குடும்ப ஆட்சி நடந்தது. அது ஒழிக்கப்பட்டுள்ளது

திமுக மீண்டும் வந்து விடக்கூடாது. திமுகவை தோற்கடிக்கும் கட்சி எது என கண்டறிந்து அதற்கு வாக்களிக்க வேண்டும். தோற்கும் கட்சிகளுக்கு வாக்களித்து வாக்கை வீணாக்க கூடாது

மோடி ஆட்சியின் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. எனவே சகிப்பின்மை என புதிதாக சொல்கிறார்கள். மன்மோகன்சிங் ஊழலை சகித்துக்கொண்டார். மோடியிடம் அந்த சகிப்புத்தன்மை இல்லைதான்

நல்ல சமயமிது.இதை நழுவ விடலாமா என ஒரு பாடல் உண்டு. மோடியை நாம் தவற விட்டு விடக்கூடாது. அவர் நம் காலத்தின் தேவை

விஜயகாந்துக்கு டெபாசிட் வாங்கும் அளவுக்குகூட வாக்கு கிடையாது. ஆனால் அவர் பெறும் வாக்குகள் மற்றவர்கள் வெற்றியை பாதிக்கும் , அப்படி ஒரு 8% வாக்குகளை அவர் அப்படியே வைத்திருப்பது பெரிய சாதனைதான்.

ஆனால் அவர் தன்னை முதல்வர் வேட்பாளர் என்கிறார். வேறு சிலரும் சொல்கின்றனர். ஆனால் இவர்களுக்கு வாக்களிப்பது திமுக எதிர்ப்பு வாக்குகளை சிதறடிக்கவே செய்யும். திமுகவை தோற்கடிக்கும் கட்சிக்கு வாக்களித்து , திமுக பெரிய தோல்வியை சந்தித்தால்தான் , தமிழ் நாட்டில் மாற்று அரசியல் கட்சி உருவாக முடியும்


இதன்பின் தேசிய கீதம் பாடப்பட்டு கூட்டம் முடிந்தது

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா