Tuesday, August 4, 2020

கோவில் கோயில் எது சரி ?


கோவில்...  கோயில்.. இரண்டில் எது சரி என்பதில் சிலருக்கு சந்தேகம்.

எவ்வளவோ பார்த்து விட்டோம்.. இதைப்பார்க்க மாட்டோமோ.. 

வாங்க பார்த்து விடுவோம்..

தலைவனின் அரசனின் அல்லது இறைவனின்  இல்லம் என்பதுதான் கோ இல்  

   கோ மற்றும் இல் ஆகியவை சேர்ந்தால் என்ன ஆகும் என்பதே கேள்வி

இரு சொற்கள் சேர்ந்தால் உருவாகும் புது சொல் எப்படி இருக்கும் என்பதற்கு சில விதிகள் இருக்கின்றன

பூ + தொட்டி  = பூந்தொட்டி ( புது எழுத்து உருவாதல்)

மண் + வெட்டி     = மண்வெட்டி ( எந்த எழுத்தும் சேரவில்லை/ அழியவில்லை)

பனை + காய்  = பனங்காய்  ( ஐ அழிந்து , அங் என்ற சாரியை உருவானது)

இப்படி எல்லாம் பல்வேறு விதிகள் உள்ளன

கோ  இல் என்பது  எப்படி சேரும்?


கடல் .. அலை என்பது கடலலை என மாறும்..  தாய் .. அன்பு என்பது தாயன்பு என சேரும்


புள்ளி வைத்த எழுத்தை ( மெய் எழுத்து)  தொடர்ந்து இன்னொரு சொல் வரும்போது அதிக சிக்கல் இன்றி அப்படியே இணைவு நடக்கிறது

ஆனால் அடுத்து வரும் சொல் க ச ட த ப என்பதில் ஆரம்பித்தால் கவனம் தேவை
நாய் கடி   என்பது நாய்க்கடி என க் சேரும்

தாய் பாசம்   என்பது தாய்ப்பாசம் என்றாகும் 

 முதல் சொல் உயிர் எழுத்தில் முடிந்து அடுத்த சொல் உயிர் எழுத்தில் ஆரம்பித்தால் , வ் அல்லது ய் என புதிதாய் ஓர் எழுத்து சேர்ந்து , அவ்விரு சொற்களையும் சேர்த்து வைக்கும்

உதாரணமாக மொழி ;. அறிவு...    என்ற சொற்களுக்கு மத்தியில் ய் தோன்றுகிறது


மொழி  ய்  அறிவு  = மொழியறிவு

திரு  வ்  அருள்         = திருவருள் 


வ் வருமா ய் வருமா என தொல்காப்பியரிடம் கேட்டால் , அவர் இப்படி எல்லாம் திட்டவட்டமாக சொல்லக்கூடாது என்கிறார்

எல்லா மொழிக்கும் உயிர் வரு வழியே

உடம்படுமெய்யின் உருபு கொளல் வரையார்

உயிர் எழுத்தும் உயிர் எழுத்தும் சேர்ந்தால் , வ் ய் அன்ற எழுத்து  தோன்றும். ஆனால் இந்த எழுத்துதான் வரும் என வரையறுக்க மாட்டார்கள்

என்கிறார்

தக்காளி, அப்ப என்னதான் தீர்வு?

எழுத்து ஓரன்ன பொருள் தெரி புணர்ச்சி

இசையின் திரிதல் நிலைஇய பண்பே


சொற்களின் ஓசை நயத்துக்கேற்ப புது எழுத்து தோன்றும் என்கிறார்


 நன்னூல் என்ன சொல்கிறது ?


இ ஈ ஐ வழி “ய” வ்வும்

ஏனை உயிர்வழி “வ” வ்வும்

ஏமுன் இவ் இருமையும்

உயிர்வரின் உடம்படுமெய் என்றாகும்


அதாவது முதல் சொல் இ ஈ ஐ என முடிந்தால் , ய் என்ற எழுத்து தோன்றும்


பள்ளி   அறை    -- பள்ளி  ய் அறை        பள்ளியறை


வாழை  இலை    ---  வாழை  ய் இலை      வாழையிலை


ஏ என்ற சொல்லில் முடிந்தால் ,  வ் ய் என இரண்டுமே வரக்கூடும்


மற்ற உயிர் எழுத்துகளில் முடிந்தால் ,வ் தோன்றும்

 

மா  இலை    மாவிலை


அளவு  அறிந்து   அளவறிந்து


இந்த விதிப்படிதான் , கோ இல் என்பதை சிலர் கோவில் என எழுதுகிறார்கள்


ஆனால் சங்க இலக்கியங்களில் கோயில் என்றே வருகிறது. .பேச்சு வழக்கில் கோயில் என்றுதான் சொல்ல முடிகிறது..   கோவிலுக்கு போகிறேன் என்பதில் இயல்பு இல்லை
மா  + இருள் என்பது இந்த விதிப்படி மாவிருள் என்றுதான் வர வேண்டும் .. ஆனால் மாயிருள் என்பதே சரியானதுஅதற்கு காரணம் , இ என்ற சொல்  வந்தால் அங்கே ய் தோன்றும் என நன்னூல் சொல்வதை , இரண்டாவது சொல்லில் வைத்து பார்க்க வேண்டும் என்கிறார்கள் சிலர்


அதாவது  மா   + இருள் என்பதில் இரண்டாம் சொல் இ என்பதால் , அங்கே ய் தோன்றி மாயிருள் ஆகிறது


அதேபோல கோ இல் என்பது கோயில் என்றுதான் ஆகும்..


அதுமட்டுமின்றி தொல்காப்பியர் சொன்னதுபோல , இசை நயம்தான் முக்கியம் என்ற விதிப்படியும் கோயில்தான் சரி .. அதனால் சங்க நூல்களில் கோயில் என்றுதான் குறிப்பிடப்படுகிறது என்கிறார்கள்


சில ஆர்வக்கோளாறு இலக்கணப்பண்டிதர்களால் , கோவில் என்பதும் பயன்பாட்டில் உள்ளது.. ஆனால் அது தவறு என நிறுவ முடியாது.. நன்னூல் விதியின்படி கோவில்தான் சரி என்பார்கள்.


ஆனாலும் கோயில்தான் சரியான் சொல்.. யாராவது கோவில்தான் சரி என்று சொன்னால் , மையமாக புன்னகைத்து நகருங்கள்.. 


    

4 comments:

 1. வெகுநாள் சந்தேகம் இன்றுதான் தீர்ந்தது. எடுத்துக்காட்டுகள் அருமை.

  ReplyDelete
 2. தெளிவான விளக்கம். எங்கள் தமிழாசிரியர் கோயில் என்பது இலக்கணப்போலி எனக்கூறியது நினைவுக்கு வருகிறது. இலக்கணப்படி தவறாக இருந்து,பயன்பாட்டில் இருக்கும் சொல் எனில் அது இலக்கண போலி என நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இன்றும் நினைவில் நிற்கும்படி சொல்லித்தந்த அவ்வாசிரியர்க்கு நம் வணக்கங்கள்

   Delete
  2. நன்றி. அவர் பெயர் கொடையரசன்

   Delete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா