Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Monday, December 16, 2024

ஈழ எழுத்தாளர் சாந்தன் சிறுகதை ஒன்று

ஈழ எழுத்தாளர்  சாந்தன் அவர்களது சிறுகதை தொகுதி ஒன்று படித்தேன்..

ஒவ்வொன்றும் அற்புதம்..


:சாந்தனின் உருவ அமைதி பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அவருடடைய கதைகள் எங்கு முடியவேண்டும் என்பதில் அவருக்குள்ள நிர்ணயத் திறன் அபூர்வமானது. இதுவே அவருடைய படைப்புக்கள் எழுத்துச் சிக்கனத்தோடு விளங்குவதற்குக் காரணமாகியுள்ளது. புனைகதையில் இதுவொரு விசேஷ சாதனை” என அசோகமித்திரன் சொல்வது உண்மை



தமிழர் சிங்களர் உறவு குறித்த இக்கதையைப் படித்துப்பாருங்கள்




 என் நண்பன் பெயர் நாணயக்கார... - சாந்தன் 


கொ ட்டாஞ்சேனையிலிருந்து, நாணயக்காரவும் நானும் கோட்டைக்குவந்தோம்.‘யாழ்தேவி யில் ராஜநாயகம் வருவதாகக் கடிதம் போட்டிருந்தான். வண்டி வருவதற்கு இன்னமும் ஒரு மணி நேரத்திற்கு மேலிருந்தது.


"என்னடா செய்யலாம்?" என்றான் நாணா. எனக் கும் புரியவில்லை. இனி, எங்கள் அறைக்கு - பம்பலப்பிட்டிக் குப் போய் விட்டுத் திரும்பி வருவது முடியாத காரியம்.


"ஸ்ரேஷனடியிலை பேசிக்கொண்டிருக்கலாம்; வா. சாப்பிட்டு வருவோம்" என்றேன்.


சாப்பிட்டுவிட்டுத் திரும்பி 'ஸ்ரேஷ'னின் முன்னால் 'ஒல்கொட்' சிலையருகில் வந்த போது, நாணா மிக உற்சாக மாயிருந்தான். அவன் 'எடுத்த' அந்த 'ட்றாம்' அதற்குக் கார ணமாய் இருந்திருக்கக்கூடும். அவன் எப்போதுமே இப்படித் தான்; அளவுக்கு மேல் போகாது. அந்த ஆறடி உயரமும். அதற்கேற்ற ஆகிருதியுமான உடம்புமுள்ள நாணாவின் கம் பீரத்திற்கு இந்த 'மப்'பின் உசார் மேலும் பொலிவூட் டும். தீர்க்கமான மூக்கும், அதன் கீழ்க் 'கருகரு' மீசையு மாய் - ஒரு சாயலில் ராவணனைக் கற்பனை செய்து கொள் ளலாம்.


'ஏண்டா, ராவணா...' என்று செல்லமாக நான் அழைக்கும்போதெல்லாம் 'கட கட'வென்று அவன்  சிரிக் குந் தொனியில், 'மாத்தறை -யாழ்ப்பாண'மோ, அல்லது 'சீனா - தானா'வோ தலைநீட்ட முடியாத அளவுக்கு எமக் கிடையில் இறுகியிருந்த நட்பின் வைரந் தெரியும். கல்லூரி யில் ஒரே வகுப்பு. ஒரே அலுவலகத்தில் ஒரே வேலை. தவிர நாணா இப்போது என் 'ரூம் மேட்'.


"நிப்பமா? உள்ளுக்குப் போவமா?" என்றான்.


"இதிலையே கொஞ்சம் நிப்பம்


இன்னும் அரைமணி நேரம் இருந்தது.


ஒரே குளிர். பனி மூட்டங்களிடை வாகனங்களின் ஒளிக் கதிர்கள் பீச்சப்படுகையில் முப்பரிமாணமுள்ள குவி யமாகிற பரிணாமம்... உடலைச் சிலிர்க்க வைக்கிற காற்று.. அங்கொன்றும் இங்கொன்றுமான யந்திர ஒலிகள் இல்லா விட்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.


"இவர்களையெல்லாம் பார்த்தாயா?" என்றான் நாணா, கீழே படுத்துக் கிடந்தவர்களைக் காட்டி


ஆண் - பெண் குழந்தை - கிழவர் என்று ஒரு 'மினி' உலகமே அங்கு -ஒல்கொட்' சிலையடியிலிருந்து 'ஸ்ரேஷன்' விறாந்தை வரை வியாபித்திருந்தது. நாணா கேட்டதுந் தான் அதைக் கவனித்தேன். இவ்வளவு நாளும் வருகிற போகிற போதெல்லாம் கண்டு கண்டு அது ஒரு சாதா ரண விஷயமாய்ப் போய்விட்ட காரணத்தால், அதைக் கவனிக்கவில்லை. நான்


"இவர்கள் இந்நாட்டு மக்களில்லையா?"- சிகரட்டை ஊதியபடி நாணா சேட்டான்.


நான் பேசவில்லை.


"...டேய், இவங்களுக்கு வேலைவேண்டாம், காக சாப்பாடு கொடுக்க வேண்டாம். ஒரு சாத்திரமாவது கட் டிப் போட்டா, இந்தப் பனியிலை இப்படிக் கிடக்கத் தேவையில்லையடா......"


ஆங்காங்கே தூவப்பட்டிருந்த அந்தக் கும்பலிடை, பலர் இன்னமுந் தூங்கவில்லை. நாணாவின் உரத்த பேச் சால் ஈர்க்கப்பட்டு, எங்களை அவதானித்தனர்.


"நீ சொல்றது சரிதான்; கொஞ்சம் மெதுவாகப் பேசு. எல்லாரும் பார்க்கிறார்கள்" என்றேன்.


உண்மையில் நாணாவின் துடிப்பு எனக்குப் புரிந்து தான் இருந்ததென்றாலும், இந்த இரண்டு 'மொட்டை யன்'களும் பேசி ஆகிற காரியமா இது?


நாணா பிறகு பேசாமலிருந்தான். இருவருமாக நடந்து போய் ஸ்ரேஷன் விறாந்தையில் நின்றோம். திரும்பு கையில் நுழை வாசலருகில் நின்றவர்களைக் கண்டதும் எனக்குத் திடுக்கிட்டது.


சிறில்!


இலேசான ஒரு குளிர் முள்ளந்தண்டில் ஓடுவது பால-'ராஜநாயகத்தைப் பார்த்துக்கொண்டிராமல், பேசாமல் அறைக்குப் போய் விட்டாலென்ன' என்று நினைத் தேன். 'என்னைக் கண்டால் என்ன செய்வானோ' என் கின்ற பயம் மேலோங்கிற்று. திரும்பி நாணாவை மெல்லத் தட்டுவதற்குள் - சிறில் என்னைக் கண்டு கொண்டான்!


அந்தப் பார்வை- அதிற் பின்னியிருந்த கொடூரம்... எனக்கு வியர்த்தது. நாணாவின் கரங்களை இறுகப் பற் றிக்கொண்டேன். சிறில், என்ன நினைத்தானோ, "விடு விடென்று ஸ்ரேஷனுக்குள் போய்விட்டான். ஆனால், எனக்கென்னவோ, அவன் சும்மாயிருப்பானென்று தோன்றவில்லை. நடுங்கிய கரங்களை உணர்ந்ததும், நாணா "என்னடா?" என்றான்.


"சிறில்..." - எனக்கு மேலே பேச வரவில்லை.


"எங்கே?" என்றவனின் கண்டத்திலிருந்து 'கட கட' வென்ற வெண்கலச் சிரிப்பொலி எழுந்தது. அந்தக் கம்பீரத்தில் - அதன் தைரியத்தில் - நான் சமநிலைக்கு வரு கையில், "வீணாகப் பயப்படாதே; நானிருக்கிறேன்" என் றான் நாணா.


வெளியே உறைத்த குளிர், இப்போது அதிகரித்தது போலொரு உணர்வு. சிறிலுக்கு நான் பயப்படுகிற கார ணம் - நாணாவும் அறிவான் -


ஓர் அபலைப் பெண்ணைப் பழிவாங்க இந்த சிறில் முன்பொருதரம் முயன்றபோது, என் தலையீட்டால் அவன் திட்டங்கள் கவிழ்ந்து -


அதன் விளைவாய் இந்த 'தெமலப்பய'லுக்கு ஒரு பாடங்கற்பிக்க முனைந்து அலையும் சிறில்......


எங்கள் சொந்தக் 'கொழுவ' லுக்கு ஒரு இனவாத முலாம் பூசும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறான்!


நாணா உலுக்கினான்.


"என்னடா, இன்னுமா நடுக்கம்?'


நான் தலையாட்டினேன்.


ராஜநாயகம் வந்தாயிற்று. மூவரும் பஸ்தரிப்புக்கு வந்தோம்.


பஸ்ஸைப் பார்த்துக்கொண்டு நின்ற அலுப்பில் நேரம் ஊர்வது போலிருந்தது. பஸ்தரிப்பில் எங்களைவிட வேறெவருமில்லை. இரைந்தபடி குறுக்கும் நெடுக்கும் போய்க்கொண்டிருந்த 'டாக்ஸி'களும் மறைந்துவிட்டன.


பின் புறத்திலிருந்து ஒரு திரும்பினால் - செருமல் கேட்டது.


சிறில்! இன்னும் யாரோ இரண்டுபேருடன் நின்றான். "நாணா......" என்றேன். இதற்குள் சிறில் மிக அருகில் வந்துவிட்டான் - தமிழர்களைப் படுமோசமாகத் திட்டியபடி. அவனுக்கு நல்ல வெறி. "இண்டைக்கு நான் உன்னைக் கொன்றாலுஞ் சரி! ஆனா நீ என்னைத் தொட் டியோ, 'தமிழன் சிங்களவனை அடித்தா'னென்று நாளைக்கு கொழும்பே கலங்கும். கவனம்!" என்னைப் பார்த்துக் குழறினான். 


நாணயக்கார வாயிலிருந்த சிகரட்டை எறிந்த அடுத்த கணம் சிறிலின் சட்டை அவன் கையிலிருந்தது! '''சி'யைத் 'த' அடித்தால்தானே, பிழை? டேய் காவாலி! 'சி'யை 'சி'யே அடிக்கிறேன் - நானும் 'சி' நீயும் 'சி'! இனி எப்படி இனக்கலவரம் வரும்? எளிய ராஸ்கல்...... உன்ர அக்கிரமத்துக்கு அவன் துணை வரேல்லையெண்டு. இந்த வேலையா செய்யிறாய்?"--நாணாவின் வாய்ப்பேச்சு இவ்வளவு தான்.


அம்மூவரும் ' நிறைவெறி'யில் நின்றதால் என் நண் பனின் வேலை இலகுவாயிற்று. திகைப்பில் கரைந்த  நிமிடங்கள்…..


"இனி, இந்த வேலையை நினையாதே!" - விழுந் தவனுக்கு நாணாவின் குரல் அபயமளித்தது.


ராஜநாயகம் 'டாக்ஸி'க்கு கைதட்டினான்.

Wednesday, April 29, 2020

லங்காராணி .. நிகழாமல்,போன அற்புதம்


சில நூல்களை படிக்கலாம். சிலவற்றை படிக்க வேண்டும். சிலவற்றை படித்தேஆக வேண்டும்

படித்தே ஆக வேண்டிய சில நூல்களுள் ஒன்றுதான் " லங்காராணி" 
அருளர்  எழுதிய இந்த நாவல் , ஈழப் போராட்டத்தின் அரியதொரு ஆவணமாகவே கருதப்படுகிறது.

1977ல் கொழும்பு நகரில் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் நடந்தது. வசதியாக வாழ்ந்த பலர் அகதிகளானார்கள். ஏற்கனவே துன்பத்தில் உழல்வோரும் அகதிகளானார்கள்.
இப்படிப்பட்ட 1200 அகதிகளை சுமந்து கொண்டு கொழும்பு துறைமுகத்தில் இருந்து லங்காராணி என்ற கப்பல் யாழ்ப்பாணம் நோக்கி கிளம்பியது.

இது இரண்டு நாள் பயணமாகும். இந்த இரண்டு நாட்களில் கப்பலில் நடக்கும் சம்பவங்கள் , விவாதங்கள் , போர்த்திட்டங்கள் , பிரச்சனை குறித்தும் தீர்வு குறித்தும் அலசல்கள்.. இவற்றை அடக்கியதுதான் இந்த நூல்

விடுதலைப்புலிகள் , டெலோ , ப்ளோட் , ஈபிஆர்எல்எப் , ஈரோஸ் என பல போராட்டக்குழுக்கள் இருந்தாலும் இன்றைய சூழலில் தமிழகத்தில் பலருக்கும் புலிகளையும் பிரபாகரனையும்தான் தெரியும்
ஆனால் ஆரம்ப காலங்களில் தமிழகத்தில் பிரபலமாக இருந்தது ஈரோஸ் இயக்கம்தான்

அதன் தலைவர்களில் ஒருவர்தான் லங்காராணி அருளர்

லங்காராணியில் பேசப்பட்ட விஷயங்களை ஆககப்பூர்வமாக விவாதித்து முன்னெடுத்திருந்தால் அங்குள்ள தமிழர்களுக்கு ஒரு விடிவு கிடைத்திருக்கும். ஆனால் ஆரம்பத்தில் சித்தாந்த ரீதியான போராட்டத்தை ஏற்றுக்கொண்ட இயக்கங்கள் பிற்பாடு தன்னிச்சையாக செயல்படத்தொடங்கி அழிவைத்தேடிக் கொண்டதை முன்னுரையில் வருத்தத்துடன் பதிவு செய்கிறார் நூலாசிரியர்

   நூலில் கவித்துவமான தருணங்கள் , மானுட கீழ்மையை கண்முன் நிறுத்தும் தருணங்கள் ஏராளம்

   அகதிகள் அனைவருக்கும் கப்பலில் உணவு வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட குடும்பத்துக்கு வழங்கும்போது ஒரு பெரியவர் குறுக்கிடுகிறார் " அவர்களெல்லாம் பசி பட்டினிக்கு பழகியவர்கள்.  அவர்களுக்கு என்ன அவசரம் " 
இந்த கீழ்த்தரமான பேச்சு பலரை டெனஷனாக்குகிறது

யாழ்ப்பாணத்துக்கு செல்வதை வெளிநாடு செல்வதாக நினைக்கும் அறியாமை , கபிச்சத்தீவை ஒரு தேசமாக நினைக்கும் அறிவீனம் போன்ற பலவற்றை நூல் ஆவணப்படுத்துகிறது

தனியொருவனாக பகைவர்களை கலங்கச் செய்த சிவகுமாரன்தான் ஈழப்போரில் முதன்முதலாக சயனைட் அருந்தி உயிர்தியாகம் செய்தவர். இவரைப்பற்றிய பகுதிகள் சிறப்பாக உள்ளன


 சிங்கள மொழியை ஆட்சி மொழியாக்கி தமிழனை இரண்டாம்தர குடிமகனாக்கியது மன்னிக்க முடியாத அயோக்கியத்தனம்

ஆனால் அது மட்டும் பிரச்சனை இல்லை. தமிழகத்தில் இருந்து வேலை செய்ய அழைத்துச்செல்லப்பட்ட மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட கொடுமைதான் இதற்கெல்லாம் ஆரம்பம்

அது நடந்தபோது இலங்கையின் பூர்விக தமிழர்கள் இதை பெரிதாக நினைக்கவில்லை. அப்போதைய தமிழ்க்கட்சிகளும் அதை பெரிதாக எதிரக்கவில்லை

ஈரோஸ் இயக்கம் அந்த காலகட்டத்தில் இல்லை. 70 களில்அது தொடங்கப்பட்டபோது , ஈழப்போராட்டம் என்பது மலையகத்தமிழர்களையும் உள்ளடக்கியதாகவே இருக்க வேண்டும் என்ற கொள்கையை முன்வைத்தது

இது மொழிப்பிரச்சனை அல்ல. இது வர்க்கப்போராட்டம் , தேசிய இனங்களின் போராட்டம் என்பதை விவாதங்கள் வழியாக சொல்கிறது நூல்

  ஒரு குறிப்பிட்ட பகுதியினரை எதிரிகளாக சித்தரிப்பது ஓட்டு வாங்க பயன்படும் குறுக்குவழி.

தமிழ் நாட்டில் , ஆரிய பிராமண வெறுப்பு வாதமெல்லாம் கைதட்ட உதவுமேதவிர வாக்குகளாக மாறாது..  ( பாகிஸ்தான் எதிர்ப்பு வாதம் வட மாநிலங்களில் வாக்குகளாக மாறுகிறது)

ஆனால் இலங்கையில் தமிழர் வெறுப்புவாதம் சிஙகள அரசியல்வாதிகளுக்கு வாக்குகளைப்பெற்றுத்தருகிறது. அப்பாவி சிங்களனின் வாழக்கைத்தரத்தை உயர்த்தமனமின்றி தமிழ் வெறுபபு வாதத்தை வைத்து தம்மை வளமாக்கிக் கொள்கின்றனர் சிஙகள அரசியல்வாதிகள்.
ஆக . சிங்கள அரசு என்பது சிங்கள பாட்டாளிக்கும் எதிரானதுதான்

சில சுயநல தமிழ் அரசியல்வாதிகளும் இந்த சுரண்டலில் பங்கேற்றவர்கள்தான்

சிங்கள அரசின் இந்த சுரண்டலை ஆயுதப்புரட்சி மூலம் சிங்கள போராளிகள் சிலர் வீழ்த்த முயன்று தோற்றனர். ஏராளமான சிங்கள இளைஞரகள் கொன்று குவிக்கப்பட்டனர்;

அரசியல்வாதிக்கு சிங்களன் தமிழன் என்பதில்லை. அனைவரையும் சுரண்டுவான்

எனவே அங்கு அனைவரும் ஒன்றிணைந்த பாட்டாளி வரக்க புரட்சி நடந்திருந்தால் ,  அப்போது வலுவாக இருந்த தமிழ் அமைப்புகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் , அப்போது வலுவாக இருந்த கம்யூனிச அகிலத்தின் ஆதரவுடன் உலகின் முன்மாதிரி தேசம் உருவாகி இருக்ககூடும்

லங்காராணி நூல் நிகழாமல் போன ஓர் அற்புதத்தின் ஆவணமாக என்றும் நிலைத்திருக்கும்

Monday, April 13, 2020

சீன அதிபருடன் ஒரு தமிழன்

கம்யூனிச வரலாறு என்பது புதிர்களும் மர்மங்களும் கொண்டது

ரஷ்யப்புரட்சி முடிந்து லெனின் ஆட்சியில் அவருக்கு நெருக்கமாக இருந்தவர் டிராட்ஸ்கி. ஆனால் லெனினுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர் ஸ்டாலின். டிராட்ஸ்கி நாடு கடத்தப்பட்டார். துரோகியாக சித்தரிக்கப்பட்டார். கடைசியில் கொல்லப்பட்டார்

அதன்பிறகு ஆட்சிக்கு வந்த குருச்சேவ் , ஸ்டாலின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். சில ஆண்டுகளில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். வல்லரசின் அதிபர் 400 ரூபிள் பென்ஷனுடன் சிறிய வீடு ஒன்றில் அரசு கண்காணிப்பில் தன் கடைசி காலத்தை கழித்தார்

சோவியத் யூனியனின் நண்பனாக இருந்த சீனா , பிறகு அதன் எதிரியானது.

இதுபோன்ற சர்வதேச நிகழ்வுகள் , இந்யா இலங்கை போன்ற நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் பிளவுகளை நிகழ்த்தியது

இலங்கை பொதுவுடமை கட்சியின் அடையாளமாக விளங்கிய என். சண்முகதாசனின் " ஒரு கம்யூனிச போராளியின் அரசியல் நினைவுகள் " நூல் இலங்கையின் அரசியல் செயல்பாடுகளைப் பற்றி மாறுபட்ட பார்வையை அளிக்கிறது

கம்யூனிச வரலாறு மட்டுமல்ல . தமிழர் பிரச்சனை குறித்தும் யாழ் நூலக எரிப்பு போன்ற சம்பவங்கள் குறித்தும் அரிய ஆவணமாக திகழ்கிறது நூல்

ஜெயவர்த்தன , பிரேமதாச , ராஜபக்சே என அனைவரும் தமிழர்களை அழிக்க வேண்டும் என்பதே நோக்கமாக கொண்டவர்கள் என நினைக்கிறோம்

உண்மையில் அவர்களது நோக்கம் சிங்களர் நலனும்கூட அல்ல. அரசியல்வாதிகளின் ஒரே நோக்கம் தன்னலமும் தமது குடும்பத்தினர் நலனும்தான். அதற்காக தமிழனையும் கொல்வார்கள். சிங்களர்களையும் கூட்டம்,கூட்டமாக கொல்லத் தயங்க மாட்டார்கள் என்ற வரலாற்று உண்மையை பதிவு செய்கிறார் நூலாசிரியர்

மாவோ இவருக்கு நேரம் ஒதுக்கி தனியாக இவருடன் உரையாடிய நிகழ்வு ஒரு தமிழனாக நம்மை பெருமைப்பட வைக்கிறது

தொப்புள்கொடி உறவு போன்ற வீர,வசனங்கள், இந்திய ராணுவ நடவடிக்கை போன்றவை அங்குள்ள தமிழர்களுக்கு துன்பத்தைதான் தருகிறது என்பதை படம் பிடித்துள்ளார்

வர்க்க போராட்டம் ,தொழிற்சங்க போராட்டங்கள் , கல்லூரி காலத்தில் காட்டிய தலைமைப்பண்பு , சிறைவாசம் என ஏராளமான விஷயங்கள் பதிவாகியுள்ளன

கம்யூனிஸ்ட்டாக இருந்தாலும் நேர்மையுடன் சோவியத் யூனியனையும் சீனாவையும் விமர்சித்துள்ளார்

நேர்மையான நூல்

Friday, May 10, 2019

கலைஞர் மனம் கவர்ந்த போராளி சபாரத்தினம்





 ஒரு காலத்தில் தமிழகத்தில் ஈழ விடுதலைப்போரின் முகமாக தமிழகத்தில் இருந்தது டெலோ இயக்கம் தான்...  தன்னுடைய பாலைவன ரோஜாக்கள் படத்தில் நாயகனின் பெயருக்கு கலைஞர் சூட்டிய பெயர் சபாரத்தினம்

சிறீ சபாரத்தினத்தை கௌரவிக்கும் வகையில் அந்த பெயரை சூட்டி இருந்தார்

எம் ஜி ஆர் விடுதலைப் புலிகளை ஆதரித்தார்

அப்போது எம் ஜி ஆர் முதல்வர் என்பதால் விடுதலைப்புலிகளுக்கு பொருளதவி செய்ய முடிந்தது,,, விளைவாக புலிகள் மற்ற இயக்கங்களைவிட பலம் பெற்றனர்.. ஒரு கட்டத்தில் மற்ற இயக்கதவரை கொல்ல ஆரம்பித்தனர்...


சபாரத்தினம் என் சகோதரர் போன்ற்வர் ..அவரை ஒன்றும் செய்யாதீர்கள் என்ற கலைஞரின் வேண்டுகோளையும் மீறி அவரை கொலை செய்தனர் புலிகள்


ஒரு வேளை சபாரத்தினம் சாகாமல் இருந்திருந்தால் ஈழ தீர்வு விரைவில் ஏற்பட்டு இருக்கலாம்

அதன் பின் கால மாற்றங்களால் அவரை எல்லோரும் மறந்து விட்டார்கள்போல என நினைத்தேன்

ஆனால் அவர் கொலை செய்யப்பட்ட நினைவு நாளை ஒட்டி பரவலாக சுவரோட்டிகளை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருந்தது

எந்த கட்சிகள் ஆதரவும் இன்றி மக்கள் தன்னிச்சையாக இப்படி ஒரு போராளிக்கு மரியாதை செய்வது ஆச்சர்யம்தான்

போராளிகள் புதைக்கப்படுவது இல்லை... விதைக்கப்படுகின்றனர்

Friday, April 20, 2012

பள்ளிவாசலை இடிக்க சொல்லி இலங்கையில் அட்டூழியம்- விழித்தெழுமா உலக சமுதாயம்.?

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்து வரும் அநீதி உலக வரலாற்றில் கருப்பு அத்தியாயமாக என்றென்றும் இருக்கும். இந்த அட்டூழியங்கள் நடந்து வரும்போது நாம் கையாலாகாத நிலையில் ஒன்றும் செய்யாமல் இருந்தோம் என்ற இழிவான பெயர் , நம் தலைமுறைக்கு கண்டிப்பாக உண்டு.

அங்கு நடக்கும் கொடூரங்களை நாம் சரியான வகையில் உலக அரங்குக்கு எடுத்து செல்ல வில்லை என்பது வரலாற்று சோகம்.

அங்கு நடப்பது சிறுபான்மை மொழிக்கு எதிரான செயல் மட்டும் அன்று. மத அடிப்படையிலும் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுகின்றனர். இதையெல்லாம் சரியான படி வெளி உலகுக்கு எடுத்து செல்லவில்லை..


சில மாதங்களுக்கு முன்னர் முஸ்லிம் தர்காவொன்று பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவொன்றால் தகர்க்கப்பட்டது..

முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களை  பெளத்தர்கள் முன்னெடுத்துவருகின்றனர்.

இந்த நிலையில்  , இலங்கையின் மத்திய மாகாணத்தில் தம்புள்ளை நகரத்தில் பௌத்தக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றை அகற்ற வேண்டும் என கோசமிட்டார்கள்.
முன்னதாக, இன்று வெள்ளிக்கிழமை  3.30 மணிளவில் பெட்ரொல்ல் குண்டைப் போன்ற ஒன்று அந்தப் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளது. அதில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை.

 தொழுகையில் ஈடுபட தயாராகியிருந்த போது, சுமார் 50 பிக்குகள் அடங்கலாக 500க்கும் அதிகமானவர்கள் அங்கு வந்து கலகத்தில் ஈடுபட்டதாகவும், பள்ளிவாசலை இடிக்க வேண்டுமென்று கோசம் போட்டு, கற்களை வீசியெறிந்ததாகவும் பள்ளிவாசல் தரப்பினர் கூறுகின்றனர்.
அந்த இடத்துக்கு அருகில் ஊடகவியலாளர்கள் எவரும் சென்று படம் பிடிக்க அனுமதிக்கப்படவில்லை என்று உள்ளூர் ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

'இது எங்கள் சிங்கள நாடு, எங்கள் நாடு பௌத்த நாடு, அதனை காப்பாற்றுங்கள்' என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமி்ட்டிருக்கிறார்கள்.

'பௌத்த பூமியை பாதுகாப்பதற்காக உயிரைக்கொடுக்கவும் தயார் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள்.


தங்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க முடியாது என்ற பட்சத்தில் தம்மை அங்கிருந்து காவல்துறையினர் அப்புறப்படுத்தியதாக பள்ளிவாசல் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை ரத்து செய்யப்பட்டது. 
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலர் மற்ற பகுதிகளிலிருந்து பஸ்களில் கொண்டுவந்து இறக்கப்பட்டதாகவும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கூறினர்





Thursday, March 22, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானம் - எதிர்த்து யார்.. ஆதரித்தது யார்- ரிப்போர்ட்

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி பெற்றதுள்ளது... இதை ஆதரித்தவர்கள் யார் ? எதிர்த்தது யார்?

 ஆதரவு நாடுகள்...


பெனின் , காமரூன் , லிபியா , மொரீஷியஸ் ,  நைஜீரியா , இந்தியா !!! , சிலி , கோஸ்டா ரிக்கா , Guatemala, மெக்சிகோ , உருகுவே, ஆஸ்திரியா , பெல்ஜியம் , இத்தாலி, நார்வே, ஸ்பெயின் , ஸ்விஸ் , அமெரிக்கா, செக் குடியரசு , போலந்து , ஹங்கேரி, மால்டோவா, ருமேனியா

மொத்தம் - 24


 நடு  நிலை  நாடுகள்



அங்கோலா,  Botswana, Burkina Faso , Djibouti , செனகல், ஜோர்டான் , க்ரிகிஸ்தான் , மலேசியா


மொத்தம் - 8


எதிர்ப்பு நாடுகள்


  காங்கோ ,  Mauritania , உகான்டா  , பங்களாதேஷ் , சீனா , இந்தோனேஷியா , குவைத் , மாலத்தீவுகள், பிலிப்பைன்ஸ் , கட்டார் , சவுதி, தாய்லாந்து, க்யூபா, ஈக்வெடார் , ரஷ்யா !!!!    


மொத்தம் - 15







 

Sunday, April 10, 2011

நோ பாஸ்போர்ட்- இலங்கை அடாவடி





வெளி நாடுகளில் "அகதி"  என்ற அந்தஸ்துக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு இலங்கை நாட்டின் பாஸ்போர்ட் வழங்கப்படாது என அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது உடனடியாக அமுலுக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நடந்த யுத்தம் காரணமாக இல்ங்கையில் இருந்து வந்த பலருக்கு அமெரிக்கா , இங்கிலாந்து போன்ற நாடுகளில் அடைக்கலம் வழங்கப்பட்டது. 

அகதி என்ற அந்தஸ்து அங்கு வழங்கப்பட்டது.

இது போன்றவர்கள் இங்கிலாந்தில் நிரந்தரமாக வசிக்க முடியும். ஒரு வருடம் கழித்து இங்கிலாந்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். 

மீண்டும் இலங்கைக்கு செல்ல விரும்பினால் லண்டனில் இருக்கும் இலங்கை தூதரகம் மூலம் இலங்கை பாஸ்போர்ட் வாங்கி வந்தனர்..

இந்த நிலையில் இங்கிலாந்தில் அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு இலங்கை நாட்டின் பாஸ்போர்ட் வழங்கப்படாது என இல்ங்கை அறிவித்துள்ளது. 

இத்னால் பலர் நாடற்ற நிலைக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது..


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா