Sunday, April 15, 2012

கொள்கைகள் முட்டாள்தனமானவை - ஜே கிருஷ்ணமூர்த்தி

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சற்றே வித்தியாசமானவர். ஆத்திகம் , நாத்திகம் என எல்லா சித்தாத்தங்களையும் விமர்சிப்பவர். கன்சிஸ்டென்சி புனிதமானதல்ல என அதிரடியாக பேசுபவர். அவர் பொன்மொழிகளில் சில , உங்கள் பார்வைக்கு


************************************************
 ஜே கே பொன்மொழிகள் 

  • ஒருவர் தன் சிந்தனையில் ஒரே மாதிரியாக இருந்தால் , அவருக்கு  சிந்திக்கும் ஆற்றல் இல்லை என்று அர்த்தம். குறிப்ப்பிட்ட சிந்தனை வட்டத்திற்குள் அவர் சிக்கி கொண்டுள்ளார். ஒரே மாதிரியாக வாழ்க்கை முழுதும் பேசுகிறார்.








  • பயம் இல்லாத ஒருவனிடம் வன்முறையோ ஆக்கிரமிப்பு எண்ணமோ இருக்க முடியாது. எந்த வடிவிலும் அச்சம் இல்லாதவன் அமைதியாகவும் சுதந்திரமாகவும் இருப்பான் .





  • மதம் சார்ந்த அல்லது அரசியல் சார்ந்த  எந்த வகையாக இருந்தாலும் , கொள்கைகள் கோட்பாடுகள் போன்றவை முட்டாள்தனமானவை. இவை மனிதர்களை பிரிக்கின்றன. 

  • ஒரு பிரச்சினையை புரிந்து கொள்ள வேண்டுமானால், பிரச்சினைக்கான தீர்வை பெற வேண்டும் என்ற பதட்டம் நம்மிடம் இருக்க கூடாது. 

  • அனைவரிடமுமே ஆதிக்க எண்ணமும், அதிகாரத்துக்கான ஆவலும் மறைந்து இருக்கின்றன. ஹிட்லரிடமும் , முசோலினியிடமும் இது வெளிப்படையாக தெரிகிறது. ஒவ்வொருவரிடமும் மறைந்து இருக்கும் இந்த வித்து அகற்றப்படாவிட்டால் , வெறுப்பு , யுத்தம் , பகைமை போன்றவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். 

  • உண்மையை அடைவதற்கு பாதை ஏதும் இல்லை. எந்த மதமோ , எந்த இயக்கமோ உண்மையை அடைய உங்களுக்கு உதவாது. 

  • பிரச்சினையை சரியாக புரிந்து கொண்டு விட்டால் , தீர்வு அதில் இருந்தே கிடைத்து விடும். ஏனென்றால் பிரச்சினையும்  , தீர்வும் வெவ்வேறு அல்ல. 

  • உலகம் ஒவ்வொருவரிடமும் உறைந்துள்ளது. எப்படி கற்பது என தெரிந்து விட்டால், கதவுக்கான சாவி உங்கள் கையில் கிடைத்து விடும். உங்களை தவிர வேறு யாரும் அந்த சாவியை உங்களுக்கு தர முடியாது. கதவை உங்களுக்காக யாரும் திறந்து விட முடியாது. 


  • ஒரு நம்பிக்கை மீண்டும் மீண்டும் உறுதி படுத்தி கொள்வது, உங்கள் மனதில் இருக்கும் அச்சத்தின் அடையாளம். 

  •  நாம் அனைவருமே பிரபலமாக விரும்புகிறோம்.  ஏதோ ஒன்றை அடைய விரும்பும் அந்த கணமே நம் சுதந்திரத்தை இழந்து விடுகிறோம். 




Friday, April 13, 2012

தமிழ் புத்தாண்டு - பாரதிதாசன் கருத்தும் , மாற்று கருத்தும்


புத்தாண்டு பிரச்சினை பரபரப்பாக அலசப்ப்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில், நானும் எந்த முன் முடிவும் இல்லாமல் தரவுகளை தேடினேன்.. என்னால் எந்த முடிவுக்கும் வர இயல்லவில்லை..

ஆனால் திராவிட நாடுகள் என அழைக்கப்படும் ஆந்திரா , கர்னாடகா போன்றவற்றில் எல்லாம் ஏப்ரல்வாக்கில்தான் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள் என அறிந்து கொள்ள முடிந்தது..  ஜனவரிலொ மேலை நாடுகளில் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள்.. மேலை நாடுகளுடன் சமரச முய்றசியாக தமிழ் ஆண்டு தொடக்கமாக ஜனவரியை வைத்து கொள்ள அன்றைய தமிழ் அறிஞர்கள் முயன்ரார்களா என தெரியவில்லை.. 
விபரம் தெரிந்ததும் எழுதுகிறேன்..
இப்போதைக்கு இரு வேறு கருத்துகளை உங்கள் முன் வைக்கிறேன்.. 

********************************************************************************************
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு
தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று
பல்லாயிரத்தாண்டாய் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தை முதல் நாள் பொங்கல் நன்னாள்; நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்கவந்த ஆரியக்கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டு
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

***************************************************************************************************************

பாரதிதாசன் சொன்னால் போதுமா ? - பழ கருப்பையா 

தமிழ்ப் புத்தாண்டு ஆண்டாண்டு காலமாய் சித்திரையிலேதான் தொடங்கியது. இடையில் சிறிது குழப்பம்; இந்தக் குழப்பம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் உண்டானது! இப்போது மீண்டும் வண்டி தண்டவாளத்தில் ஏற்றப்பட்டுவிட்டது!
 கருணாநிதி தையில்தான் தமிழாண்டு தொடங்குகிறது என்று போட்ட சட்டம் தலைமைச் செயலகத்தைத் தாண்டி தலையை நீட்ட முடியவில்லை.
 சட்டமன்றம் இருக்கிறது. ஆளுங்கட்சியின் எண்ணிக்கை போதாமையை ஈடுகட்டுவதற்கு குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கும் காங்கிரஸ்காரர்கள் இருக்கிறார்கள்; ஒரு சட்டம் செய்து அரசிதழில் வெளியிட்டுவிட்டால் கடல்கூட நூறு அடி உள்வாங்கி விடும் என்று நம்பியவர் கருணாநிதி! அதிகாரத்தின் தன்மை அதுதான்! அது மெல்ல மெல்ல ஒரு மனிதனைக் கடவுளாக்கிவிடும்; இரணியர்கள் இப்படித்தான் உண்டானார்கள்!
 ஆனால், மக்கள் வழக்கம்போல் தை முதல்நாளை அறுவடை நாள் மற்றும் தமிழர் திருநாளாகவும், சித்திரை முதல்நாளை ஆண்டுப் பிறப்பாகவும் தொடர்ந்து கொண்டாடி வருவதில் உள்நுழைந்து கருணாநிதியின் சட்டம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. விளைவை உண்டாக்க முடியாத சட்டம் சட்டப்புத்தகத்திற்கே ஓர் அசிங்கம்!
 சித்திரைப் புத்தாண்டு அன்று இரவில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள புகழுடைத் தெய்வமான அம்மனோ சாமியோ குதிரை வாகனங்களில் எழுந்தருளி ஊர்வலமாக மக்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று அருள்பாலிப்பது வழக்கம். இரவு முழுவதும் நாகசுரக் கச்சேரி, பாட்டுக் கச்சேரி, நாட்டியக் கச்சேரி என்று ஊரைத் தூங்க விடாமல் கிறங்க அடிக்கும்!
 இதில் போய் குறுக்குசால் ஓட்டினார் கருணாநிதி. அவ்வாறு குறுக்குசால் ஓட்டுவதற்கு அவர் மறைமலை அடிகளையும் உழவர் குழுவையும் துணைக்கு அழைத்துக் கொண்டார்.
 "தமிழ் விடுதலைதான் தமிழரின் விடுதலை' என்பதைப் புரிய வைத்தவர்கள் மறைமலை அடிகள் தொடங்கி அண்ணா வரையிலானவர்கள்! மறைமலை அடிகள் தொடங்கிய தனித்தமிழ் இயக்கம் உழவர்கள் மட்டத்திலேயே தேங்கி விடாமல், அண்ணா அதை மக்கள் இயக்கமாக்கினார்.
 1920-ல் தொடங்கி 1970 வரை தமிழ் மறுமலர்ச்சிக் காலம்! ஒவ்வொரு இளையோனும் இளையோளும் தங்கள் பெயர்களை இளம்வழுதி, இளவழகன், செழியன், செங்குட்டுவன்,தேன்மொழி, கயல்விழி என்றெல்லாம் மாற்றிக்கொண்ட காலம்! சங்க இலக்கியம் போற்றப்பட்ட காலம்; சிலப்பதிகாரம் முன்னிறுத்தப்பட்ட காலம்; வள்ளுவன்தான் தமிழரின் முகம் என்று வலியுறுத்தப்பட்ட காலம்! அது தமிழரின் பொற்காலம்! பொற்காலத்தைச் சமைக்க ஓர் இயக்கம் ஆளுங்கட்சியாக இருக்க வேண்டுமென்னும் கட்டாயமில்லை. பக்தி இயக்கம், சித்தர்களின் கழகம் என்று தமிழ்நாட்டு வரலாற்றில் அதிர்வுகளையும் மாற்றங்களையும் தோற்றுவித்தவர்கள் ஆளும்தரப்பினர்களாக இருந்ததில்லை.
 "அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை திராவிடர் உடைமையடா' என்னும் எம்.ஜி.ஆரின் இனஉணர்வுப் பாடல் 1970-க்கு முந்தியது.
 "முஸ்தபா முஸ்தபா; டோன்ட் ஒர்ரி முஸ்தபா' என்பது 1970-க்குப் பிந்தியது.
 நரேஷ், சுரேஷ், சந்தோஷ், ப்ரியா, அனுஷா என்பவைதாம் இன்றைய தமிழர்களின் பெயர்கள்!
 காங்கிரஸ் தலையாட்டி பொம்மைகளைக் கைக்குள் வைத்துக்கொண்டு நாடாண்ட கருணாநிதி இவர்களை ஒழுங்காகப் பெயர் வைத்துக்கொள்ளச் சொல்லியும் ஒரு சட்டம் போட்டிருக்கலாம். மறைமலை அடிகளின் பெயரால் இதையும் செய்திருக்கலாம்!
 இவை அனைத்துமே அந்தந்தக் காலத்தின் வெளிப்பாடுகள்.
 1921-ல் பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் தலைமையில் திரு.வி.க., க. சுப்பிரமணிய பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், கி.ஆ. பெ. விசுவநாதம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் கூடித் தமிழருக்கென ஒரு "தனி ஆண்டு' தேவை என்று திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினைப் பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டாகக் கொள்வது என்றும், ஆண்டின் தொடக்கமாக தை முதல்நாளைக் கொள்வது என்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் அந்த அறிஞர் குழு எடுத்த முடிவுக்குத்தான் தான் சட்டவடிவம் கொடுத்ததாக கருணாநிதி குறிப்பிடுகிறார்.
 தமிழர்கள் தற்போது கடைப்பிடித்து வரும் வடமொழி ஆண்டுமுறை அவர்களுக்குரியது இல்லை. வடமொழி ஆண்டுமுறை மிகவும் குழப்பமானது. சித்திரபானு ஆண்டு ஒரு மன்னன் பிறந்தான் என்று சொன்னால் எந்த சித்திரபானு என்று கண்டறிய முடியாது. 3000 ஆண்டுகளில் 50 சித்திரபானு வந்து சென்றிருக்கும்.
 ஆகவே, அந்த ஆண்டு முறை குழப்பமானது என்பதாலும் அது தமிழர்க்கு உரியது அன்று என்பதாலும் அந்த ஆண்டு முறையை ஒழித்துக்கட்ட அறிஞர் குழு எண்ணியது என்பது சரியானதே!
 வள்ளுவன்தான் தமிழர்களை அடையாளப்படுத்தவந்த முகம் என்பதனால் அறிஞர்க்கெல்லாம் அறிஞனான அந்த வள்ளுவன் பெயரில் ஒரு தொடர் ஆண்டு முறையை அமைப்பதென அறிஞர் குழு முடிவெடுத்ததும் மிகச்சரியானதே.
 ஆனால், அதே மறைமலை அடிகள் தலைமையிலான குழுதானே தை முதல்நாள் தான் வள்ளுவர் ஆண்டின் தொடக்கம் என்று சொல்லியிருக்கிறது; அதுமட்டும் கசக்கிறதா என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கேட்பார்!
 500 புலவர்கள் கூடியெடுத்த முடிவு என்னும் ஒன்றே கருணாநிதி தான் எடுத்த நிலைப்பாட்டுக்குப் போதுமானது என்று கருதுகிறார்.
 500 புலவர்களும் நிகரற்றவர்கள்தாம்; ஆனாலும் 6 கோடித் தமிழர்களும் பல நூற்றாண்டுகளாக சித்திரைதான் ஆண்டின் தொடக்கம் என்று கொண்டிருப்பதை புலவர்கள் கருத்தில் கொண்டிருந்தார்களா என்பதை நம்மால் அறிய முடியவில்லை.
 சித்திரபானு, சுபானு, பார்த்திப என்பவை வடமொழி ஆண்டுகள்தாம்; ஆனால், சித்திரையும், வைகாசியும் வடமொழி மாதங்களா? அவை தமிழ் மாதங்கள் இல்லையா?
 ஆண்டு முறை தமிழர்க்கு இருந்ததை நம்மால் அறிய முடியவில்லை. ஆனி, ஆடி என்று மாதமுறையும் ஞாயிறு, திங்கள் என்னும் கிழமை முறையுமா தமிழர்க்கு இல்லாமல் போய்விட்டது?
 திருவள்ளுவர் ஆண்டு சித்திரையில் தொடங்குகிறது என்று பழைமையைக் கருத்தில்கொண்டும், மக்களின் பழக்கத்தைக் கருத்தில்கொண்டும் ஏற்கெனவே அறிவித்திருக்க வேண்டும்!
 ஆனால், அந்த அறிஞர் குழு அறிவார்ந்த மக்களை உள்ளடக்கியதுதான்! வடமொழி ஆண்டின் தொடக்கம்தான் சித்திரை என்று அன்றுவரை நம்பப்பட்டது!
 காலம் அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்த ஆறாச்சினத்தின் காரணமாக, வடமொழியோடு சேர்த்துச் சித்திரையையும் புறந்தள்ளிவிட்டார்கள் என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது.
 மறைமலை அடிகள் தலைமையிலான அந்த அறிஞர் குழு தொன்றுதொட்ட நடைமுறையையும் மக்களிடையே ஆழமாக வேரோடி இருக்கும் நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொள்ளாமல், தை முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்று அறிவித்ததால் திருவள்ளுவராண்டு மக்களிடையே புழக்கத்திற்கு வராமலேயே போய்விட்டது!
 கருணாநிதிதான் இதற்குச் சட்டம்போட்டுப் பார்த்தாரே; கடந்த மூன்று ஆண்டுகளில் அந்தச் சட்டத்திற்குப் பயந்து எந்த மக்களாவது திருவள்ளுவர் ஆண்டைக் கடைப்பிடிக்கிறார்களா? அது மக்கள் நினைப்பிலாவது இருக்கிறதா? குறைந்தது அவர் போட்ட சட்டத்திற்கு எ.வ. வேலுவாவது, பேரன் உதயநிதியாவது பயந்ததாகக் காட்டிக்கொண்டாவது கடைப்பிடித்ததுண்டா?
 மறைமலை அடிகள் தொடங்கிய தமிழ் இயக்கம் வெல்ல முடிந்தது; திருவள்ளுவர் ஆண்டு முறை மட்டும் வெல்லவில்லையே, ஏன்? சித்திரையை மாற்றித் தை என்று அறிவித்த நெருடல்தான் அதற்குக் காரணம்.
 கதிரவன் மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து அதனின்று வெளியேறும் வரையிலான காலத்தை பழந்தமிழர்கள் சித்திரை மாதமாகக் கொண்டார்கள் என்று தெளிவான காலக்கணிதத்தை முன்வைக்கிறார் முதல்வர் ஜெயலலிதா!
 கதிரவனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டுதான் தமிழர்களின் காலக்கணிப்பு முறை உருவாகியிருக்கிறது; வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் தமிழர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டு அறிவியல்பூர்வமாக சித்திரை தொடங்கிய மாத வரிசை முறையை ஓர் ஆண்டாகக் கொண்டுள்ளார்கள்.
 இன்னும் சொல்கிறார் முதல்வர் ஜெயலலிதா! கோடைகாலமே முதலாவது பருவம் என சீவகசிந்தாமணி சொல்கிறது!
 பத்துப்பாட்டு நெடுநெல்வாடையில் கதிரவன் மேஷத்தில் சஞ்சாரம் செய்து சுழற்சியைத் தொடங்கும் உண்மையை நக்கீரர் தெளிவுபடுத்தி உள்ளார் என்று தெளிவுபடுத்துகிறார் முதல்வர் ஜெயலலிதா.
 சீவகசிந்தாமணியையும் நெடுநெல்வாடையையும் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியையும் கல்வெட்டுகளையும் சான்றாதாரங்களாகக் கொண்டுள்ள இன்றைய முதல்வர் ஜெயலலிதா எங்கே?
 "பாரதிதாசன் சொன்னார்; பாரதிதாசன் சொன்னார்' என்று கிளிப்பிள்ளைபோல் சொல்லுகின்ற நேற்றைய முதல்வர் கருணாநிதி எங்கே?
 பழந்தமிழர் காலக்கணிப்பு முறை என்ன என்பதே கேள்வி. அதற்கு திருத்தக்கதேவரும், நக்கீரரும் உதவ முடிவதுபோல் பாரதிதாசன் உதவ முடியாது!
 ஆகவே முதல்வர் ஜெயலலிதா கூறுவதுபோல தமிழ் ஆண்டின் தொடக்கம் தை இல்லை; சித்திரைதான்!
 ஆனால், எந்த ஆண்டு முறைக்கு சித்திரை முதல்நாள் தொடக்கம் என்னும் கேள்வி எஞ்சி நிற்கும்!
 தமிழருக்கான ஆண்டு முறை பிற மொழியாளர்கள் பலர் ஆண்டபோது தொலைந்து போயிருக்கக்கூடும்.
 ஆகவே, மறைமலை அடிகள் காட்டுவித்த திருவள்ளுவர் ஆண்டைத் தமிழரின் ஆண்டு முறையாகக் கொண்டு தைக்குப் பதிலாக சித்திரையையே ஆண்டுப்பிறப்பாகக் கொண்டால் திருவள்ளுவர் ஆண்டு மக்களின் நடைமுறைக்கு வந்துவிடும். இல்லாவிடில் சித்திரைப் பிறப்பை நந்தன ஆண்டுப் பிறப்பாகவே கருணாநிதி ஏளனம் செய்வார்.
 திருவள்ளுவர் தை முதல்நாள் பிறந்தார் என்பது கற்பனைதானே! அவரை சித்திரை முதல்நாளில் பிறக்க வைப்பதால் தமிழினம் வாழும்; உரம் பெறும் என்றால் அந்தத் தெய்வப்புலவன் மறுக்கவா போகிறான்?
 ஒருவேளை அவன் பங்குனியில்கூட பிறந்திருக்கக்கூடும்! தாசில்தாரிடம் திருவள்ளுவர் பிறப்புச் சான்றிதழா வாங்கப் போகிறார், காசு கொடுக்காமல் பெற முடியாதே என்று கவலைப்படுவதற்கு?
 திருவள்ளுவர் ஆண்டு சித்திரை முதல்நாளில் பிறக்கிறது என்னும் சிறு மாற்றத்தை முதல்வர் ஜெயலலிதா சட்டத்தில் செய்தால் போதும்!
 சித்திரை என்னும் வழமையும் நிலைபெறும்; வள்ளுவர் ஆண்டும் மக்களிடையே பழக்கத்திற்கு வந்துவிடும்!
 நந்தன, விபவ, தாரண என்னும் ஆண்டுமுறை ஒழிந்துவிடும்! ராமநாதபுரம் பாம்புப் பஞ்சாங்கக்காரன்கூட 2043-ஆம் திருவள்ளுவர் ஆண்டு பஞ்சாங்கம் என்று போடத் தொடங்கி விடுவான்!
 "காலக்கணிதத்தை ஒழுங்குபடுத்திய முதல்வர்' என்று ஜெயலலிதாவை வரலாறு சுட்டும்!


Thursday, April 12, 2012

தமிழ் புத்தாண்டு - என் நிலைப்பாடு


புத்தாண்டு விடுமுறை என சந்தோஷமாக இருந்தேன். காலையில் சீக்கிரம் எழ தேவையில்லை, ஏதாவது படிக்கலாம் என நினைத்து கொண்டு இருந்த போது , நண்பர் ஒருவரிடம் இருந்து மெசேஜ் .. “  புத்தாண்டு சித்திரையா ? ”தை” யா ? உன்  நிலைப்பாடு என்ன ? “

கொஞ்ச நேரத்தில் இன்னொரு கால், வெளி மானிலத்தில் பணி புரியும் நண்பர் வேறொரு விஷ்யமாக பேசினான்.. பேச்சு முடிவடையும் நிலையில், சும்மா இருக்காமல், புத்தாண்டு வாழ்த்துகள் என்று சொல்லி தொலைத்து விட்டேன். உனக்கு தமிழ் வரலாறு தெரியவில்லை என ஆரம்பித்து கொத்து பரோட்டா போட்டு விட்டான்..

காலம் என்பது எல்லை அற்றது. ஒரு வசதிக்காக நாட்களாக , ஆண்டுகளாக பிரித்து வைத்து இருக்கிறோம். 

ஒரு காலத்தில் ஒவ்வொரு நாடும் , ஒவ்வொரு இனமும் ஒவ்வொரு காலண்டர் வைத்து புத்தாண்டி கொண்டாடி வந்தனர்.,  ஆனால் உலக நாடுகளுடையே தொடர்பு அதிகரித்த நிலையில், பொதுவான கால வரையரை தேவைப்பட்டது.

எனவெ இப்போது கிட்டத்தட்ட பொதுவான காலண்டர் உருவாகி இப்போது 2012ல் இருப்பதை அனைவரும் ஒத்துகொண்டு விட்டோம்..

ஆனாலும் பழமையை விட்டு விடக்கூடாது என்பதும் உண்மையே..

முன்பு அனைவருமே ஏப்ரலில்தான் புத்தாண்டு கொண்டாடினார்களாம்.. அப்புறம் ஜனவரிக்கு புத்தாண்டு மாற்றப்பட்டாலும், சிலர் ஏப்ரலிலேயே கொண்டாடவே , அவர்கள் ஏப்ரல் ஃபூல் என அழைக்கப்பட்டார்களாம்..

அனைத்துமே மாறக்கூடியது.. இன்று நாம் சித்திரையில் புத்தாண்டு கொண்டாடினாலும் , தை மாதத்தில் கொண்டாடினாலும் , இன்னும் 500 வருடங்கள் கழித்து இவைவும் மாறி விடும் என்பதே யதார்த்தம்..

சில வருடங்கள் முன்பு தமிழர்கள் ஒன்று கூடி , இனி தை மாதத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாடுவோம் என முடிவு எடுத்தார்களாம். 
நல்லதுதான்..

ஆனால் அதை அண்ணா , காமராஜ் போன்றவர்கள் இதை நிறைவேற்றி இருந்தால் , ஏதோ நல்லது நடக்கிறது என எடுத்து கொள்ளலாம். ஆனால் இன்றைய அரசியல்வாதிகளுக்கு , இது போன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும் தகுதி இருக்கிறதா எனப்து சரியாக தெரியவில்லை..

தை மாதத்தில் புத்தாண்டு கொண்டாடினால், பொங்கல் தினத்திற்கு இருக்கும் பெருமையும் போய் விடும், சித்திரைக்கு இருக்கும் பெருமையும் போய் விடும் என்ற கவலையும் இருக்கிறது..

ஆனால் யதார்த்தமாக யோசித்தால் , எதிலும் வெளி நாட்டை காப்பி அடிக்கும் நாம், ஜனவரியுடன் இணைந்து வரும் வகையில், தமிழ் ஆண்டு  துவக்கத்தை மாற்றி கொள்வது பொருத்தமாக இருக்கும் என்றும் தோன்றுகிறது..


ஆனால் இப்போதைக்கு , சித்திரை முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடுபவர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

தை மாதம் கொண்டாடுபவர்க்ளுக்கு, அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துகள் 



Sunday, April 8, 2012

ஹாரி பாட்டர் பாணியில் ஜான் கிரிஷாம் நாவல்- வாசிப்பு அனுபவம்

போரும் அமைதியும் , One Hundred Years of Solitude   போன்ற சில புத்தகங்கள் படிப்பதற்காக எடுத்தேன்.. ஆனால் அவற்றை ஆரம்பிக்கு முன் , பொழுது போக்கு புத்தகம் ஒன்றை படித்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ள படித்ததுதான் ஜான் கிரிஷாமின் Theodore Boone :half the man, twice the lawyer எனும் நாவல்..




பொழுது போக்கு நாவல்களுக்கு நான் எதிரி அல்ல. பொழுது போக்கு நாவல் என்ற பிரிவில் அந்த நாவல் சிறந்ததாக இருக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.

பல தமிழ் நாவல்கள் என்னை ஏமாற்றி உள்ளன. எனவேதான் சற்று ஆங்கிலம் பக்கம் திரும்பினேன்..

இது போன்ற நாவல்களில்  நாம் இலக்கியத்தையோ, சிந்தனை தூண்டலையோ எதிர்பார்ப்பதில்லை.. வாசிக்க சுவையாக இருக்க வேண்டும். அவ்வளவுதான்...

இந்த எதிர்பார்ப்பை நாவல் நிறைவேற்றியதா?

அவரது முந்தைய  நாவல்களுக்கும் இதற்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு. இது ஒரு பதிமூன்று வயது சிறுவனை கதா நாயகனாகக் கொண்ட  நாவல் என்பது முக்கிய வித்தியாசம், ஹாரி பாட்டர் பாணியில் நான் எழுதக்கூடாதா என ஜான் கிரிஷாம் நகைச்சுவையாக இதைப்பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். 

அதற்காக அப் நார்மலாகவோ, சூப்பர் மேன் போலவோ அவன் எதுவும் செயவதில்லை. லாஜிக்கிற்கு உட்பட்டுதான் செயல்படுகிறான். 

அவரின் மற்ற நாவல்களை போல , இதுவும் கோர்ட் , வழக்கு என்றுதான் நாவல் செல்கிறது.  சொற்சிக்கனம் , நகைச்சுவை , கோர்ட் நடவடிக்கைகளை கண் முன் நிறுத்துதல் என பரபரவென நாவல் செல்கிறது..


 நம் கதா நாயகன் பள்ளி மாணவன். கோர்ட் நடவடிக்கைகளில் பெரிய ஈடுபாடு கொண்டவன். அந்த வயதில்யே தன்னை வழக்கறிஞராக நினைத்து கொண்டு பலருக்கு சட்ட ஆலோசனைகள் சொல்பவன். அவன் தோழியின் பெயர் ஏப்ரல்.

ஒரு கொலை வழக்கை வேடிக்கை பார்க்க செல்லும் அவன் , அந்த வழக்கின் போக்கையே மாற்றக்க்கூடிய  நிலை ஏற்படுவதே கதை..


கதையை விட , ஜான் கிரிஷாமின் எழுத்துதான் அதிகம் ஈர்க்கிறது. 
மனைவியை கொன்று விட்டதாக குற்றவாளி கூண்டில் நிற்பவனை , குற்றவாளி என நிரூபிக்கவும் காப்பாற்றவும் நடக்கும் வாதங்கள் அருமை. மனைவி  இறந்தால்  இன்ஸுரன்ஸ் பணம் கிடைக்கும் என்பதால்தான் கொலை நடந்தது என்ற வாதததை , எதிர் தரப்பு வழக்கறிஞர் கையாளும் ம் முறை அட என சொல்ல வைக்கிறது.. 

அவரது வாதம், பேச்சு , பாடி லாங்குவேஜ் என செமையாக கொண்டு செல்கிறார் ஜான் கிரிஷாம்..


அதே போல , 13 வயது கதானாயகன் விஷ்ய ஞானத்துடன் பேசுவதும், அதே நேரத்தில் சிறுவர்களுக்கு உரிய இயல்புடன் சித்திரிக்கப்பட்டு இருப்பதும் நல்ல பாத்திரப் படைப்பு.

 நிரபராதியை மாட்டி விடும் உண்மையான குற்றவாளியை கண்டு பிடிக்கப்போகிறார்களா அல்லது உண்மையான குற்றவாளி தப்பிக்க முயல்கிறானா என்ற சஸ்பென்ஸ்தான் நாவலின் முற்பாதி. அதன் பின் ஹீரோ எடுக்கும்  நடவடிக்கைகள் இரண்டாம் பாதி. 

பெரிய மைனஸ் என்றால், முக்கால் பங்கு நாவல் முடிந்தவுடன், முடிவு தெரிந்து விடுகிறது. அதன் பின் நாவலின் வேகத்தில் தொய்வு ஏற்பட்டு விடுகிறது.ஆனாலும் அவர் எழுத்தாற்றல் முழுதும் படிக்க வைத்து விடுகிறது..

ஏப்ரலின் அண்ணன் மற்றும் அக்காவின் பெயர்கள் ,  அதே சமயம் வயதை மீறாத லைட்டான ரொமான்ஸ் , நண்பர்களுக்கு அளிக்கும் சட்ட ஆலோசனை, வழக்கை பார்வையிட சக மாணவர்களுக்கு அனுமதி கேட்டு நீதிபதியுடன் பேசுதல், கோர்ட் நடவடிக்கைகளை வகுப்பில் விவரித்தல், மிருகங்கள் கோர்ட் , வழக்கின் முக்கிய சாட்சி முகம் காட்ட முடியாது என்ற ட்விஸ்ட்  என ரசிப்பதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன..

263 பக்கங்களில் நல்ல எண்டர்டைனர்..


வெர்டிக்ட்

Theodore Boone :half the man, twice the lawyer - half suspense:  full entertainment 






Monday, April 2, 2012

அதிர வைத்த சார்த்தர் புத்தகம்

எனக்கு வாழ்க்கை வரலாற்று வரலாற்று புத்தகங்கள் மிகவும் பிடிக்கும். இலக்கிய மேதை சார்த்தரையும் மிகவும் பிடிக்கும்.

ஆனால் அவர் வாழ்க்கை வரலாற்று புத்தகமான சொற்கள் நூலை வெகு நாளாக படிக்காமலேயே வைத்து இருந்தேன் .. ஏன்?

இந்த சொற்கள் நூல் அவரது சிறு வயது ஆண்டுகளைப் ப்ற்றியது என்பது எனக்கு சற்று ஏமாற்றம்தான்.. சிறு வயது சம்பவங்கள் அனைவருக்கும் பிடிக்கும் தான். ஆனால் ஒரு ஹீரோவைப் பற்றி படிக்க நினைப்பவர்கள் அவரது , திறமைகள் பளிச்சிடக்கூடிய , சவால்கள் நிறைந்த இளமை மற்றும் பின் இளமை பருவம் பற்றித்தானே படிக்க நினைப்பார்கள்.. மழ்லை வயது அனுபவங்களில் என்ன கிக் இருக்கிறது .

இந்த எண்ணங்களால் அந்த நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வமே வரவில்லை..

சென்ற வாரம் கொஞ்சம் நேரம் கிடைத்தது.. ஆனால் படிக்க வேறு புத்தகங்கள் கையில் இல்லை. எனவே சொற்கள் நூலை புரட்டினேன்..

மிட்டாய் வாங்கி சாப்பிட்டேன், பால் குடித்தேன், பசங்களுடன் விளையாடினேன் என சம்ப்வங்களின் அடுக்காக இருக்கும் என நினைத்து படிக்க ஆரம்பித்த எனக்கு இனிய அதிர்ச்சி.. உலகின் உன்னதாமான புத்தகங்கள் ஒன்றை படித்து கொண்டு இருக்கிறோம் என்பது புரிய ஆரம்பித்தது..

ஒருவர் தன் குழந்தை பருவத்தை , 20 வயதில் நினைத்து பார்ப்பது வேறு, ஆனால் இந்த புத்தகத்தை சார்த்தர் தன் 59ஆவது வயதில் எழுதி இருக்கிறார்.. ஆகவே இது குழந்தைத்தனமான எழுத்தல்ல... ஒருவர் தன் உன்னத கால கட்டத்தில் இருக்கும்போது படைத்த உன்னத எழுத்து..

 சில இடங்களில் அவரது நேர்மையான எழுத்து திடுக்கிட செய்கிறது. உண்மைக்கு மிக அருகே செல்லும்போது ஏற்படும் படபடப்பு அது..

சில பகுதிகளில் , அந்த குழந்தை பருவத்திலேயே  நாம் வாழ்கிறோம். சில இடங்களில் பழைய சம்ப்வங்களை நினைத்து பார்ப்பது போல உணர்கிறோம்.. சோ ஸ்வீட்...


காதலியை ரசிப்பது போல , புத்தகத்தை ரசிப்பது தொட்டு பார்ப்பது , முதன் முதலில் வாசிக்க தெரிந்தவுடன் ஏற்படும் மகிழ்ச்சி என பிரத்தியேக உணர்வுகளை சுட்டி காட்டி இருக்கிறார் சார்த்தர்..

************************************************************

என்னை அதிர வைத்த் வரிகள் சில


  • உலகில் நல்ல தந்தையர்களே கிடையாது.. என் தந்தை உயிரோடு இருந்து இருந்தால் என்னை ஒரு வழி ஆக்கி இருப்பார் 
  • எல்லா குழந்தைகளும் மரணத்தின் கண்ணாடிகள்
  • தூசி தட்டுவதற்கு தவிர புத்தகங்களை தொட தடை விதிக்கப்பட்டு இருந்தது. வாசிக்க க்ற்கும் முன்பே நான் அந்த நிற்கும் கற்களை “செங்கற்களை “ வணங்கினேன்
  • என்னை பொருத்தவரை  நான் ஒருத்திக்கு சகோதரனாக இருந்து இருந்தால், எங்களுக்குள் தகாத உறவு ஏற்பட்டு இருக்கும்
  • பூச்சிகளை கொன்ற நான் , அவற்றின் இடத்தை பிடித்து கொள்கிறேன். நானே பூச்சியாக மாறி விடுகிறேன்’
**************************************************************



வெர்டிக்ட் _    சொற்கள்:-    சோ ஸ்வீட் 


வெளியீடு - தோழமை பதிப்பகம் 

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா