Wednesday, October 22, 2014

ஜெயகாந்தனுடன் மோத விரும்பாமல் கிரைம் எழுத்தாளர் ஆனேன் - ராஜேஷ் குமார் பேட்டி

இலக்கியம் என்றெல்லாம் ஜல்லி அடிக்காமல் , ஃபேக் எழுத்து என்பதில் சற்றும் சிக்காமல் தன் பாணியில் முத்திரை பதிக்கும் எழுத்தாளர் ராஜேஷ் குமார் பேட்டி உங்கள் பார்வைக்கு ‘’  ( நன்றி- விஜயபாரதம்) 
உங்களது எழுத்துலகப் பிரவேசம் எப்படி நிகழ்ந்தது?
நான் கல்லூரியில் படிக்கும்போதே எழுதத் துவங்கிவிட்டேன். 1966-ல் நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது எழுதிய முதல்கதை (உன்னை விட மாட்டேன்) கோவையில் வெளியாகும் ‘மாலைமுரசு’ பத்திரிகையில் வெளியாகி ரூ. 10 பரிசைப் பெற்றுத் தந்தது. அதைப் பார்த்து நண்பர்கள் பலரும் என்னை ஊக்குவித்தனர். தொடர்ந்து பல இதழ்களில் எழுதி வந்தேன்.
அந்தச் சமயத்தில் அறிமுக எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியை தினமணிக்கதிரில் அதன் ஆசிரியர் சாவி நடத்தினார். அதில் என் கதை தேர்வாகி (நானும் ஒரு ஹீரோ தான்) வெளிவந்தது. அதன் பிறகு சாவி, ராணி பத்திரிகைகளில் அவ்வப்போது எழுதி வந்தேன்.
ஆனால் நீங்கள் ஆசிரியராகப் பணியாற்றிய பிறகு தானே எழுத்தாளரானீர்கள்?
ஆமாம், பி.எஸ்சி, பி.எட். படித்து முடித்தவுடன், பவானிசாகரில் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தேன் (1976). அங்கு ஒரேவிதமான பாடத்தை திரும்பத் திரும்ப ஏழு வகுப்புகளுக்கு சொல்லிக் கொடுத்ததில் எனக்கே அலுத்துவிட்டது. அதிலிருந்து மீள ஆசிரியர் பணியை விட்டுவிட்டு, என் தந்தை செய்துவந்த ஜவுளித் தொழிலில் ஈடுபட்டேன். அப்போது பல ஊர்களுக்குச் செல்லும் வாய்ப்பும் அதனால் பலதரப்பட்டவர்களைச் சந்திக்கும் அனுபவமும் கிடைத்தன. ஆனால், ஜவுளித் தொழிலில் எனக்கு நஷ்டமே ஏற்பட்டது. அப்போது தான் மீண்டும் எனது கவனம் எழுத்துலகில் திரும்பியது.
தொழிலில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து விடுபட எழுத்து எனக்கு மிகவும் துணையாக இருந்தது. அப்போது எனது எழுத்துத் திறனையே மூலதனமாக்கி முழுநேர எழுத்தாளராக முடியும் என்ற உறுதி ஏற்பட்டது. தொடர்ந்து எழுதத் துவங்கினேன்.
எந்தப் புதிய முயற்சியும் உடனே வெற்றி கண்டுவிடுவதில்லை. உங்களுக்கு எப்படி?
உண்மைதான். நானும் ஆரம்பகாலத்தில் பல சோதனைகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்திருக்கிறேன். ஆனால் அதனால் நான் நிலைகுலைந்ததில்லை. அதையே சவாலாக ஏற்று தொடர்ந்து எழுதி எனது எழுத்தை மேலும் மெருகேற்றிக் கொண்டேன்.
எனது முதல் கதை 1966-ல் வெளியானது. அதன்பிறகு பல பத்திரிகைகளில் எழுதியிருந்தாலும் பரவலாக நான் கவனம் பெறவில்லை. அந்தக் காலத்தில் ‘குமுதம்’ வார இதழில் எழுதுவதே பெரும் சாதனையாக இருந்தது. நானும் குமுதத்திற்கு தொடர்ந்து சிறுகதைகளை அனுப்பி வந்தேன். ஆனால், ஒருகதையும் வெளியாகவில்லை; நானும் விடவில்லை. தொடர்ந்து தினசரி ஒரு கதையை எழுதி அனுப்பிக் கொண்டே இருந்தேன். அதன் பட்டியலையும் தனியே தயாரித்து வைத்திருந்தேன்.
இவ்வாறு நூறு கதைகளுக்கு மேல் அனுப்பிய நிலையில் ஒருமுறை சென்னை, குமுதம் அலுவலகத்திற்கே நேரில் சென்றுவிட்டேன். அங்கு ஆசிரியர் குழுவில் இருந்த ரா.கி.ரங்கராஜன் அவர்களைச் சந்தித்து என்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோதுதான். நான் நூறு கதைகளைத் தொடர்ந்து அனுப்பியதே அவருக்கு தெரியவந்தது. அப்போது அவர், “நீங்கள் நூறு கதைகளை எழுதியது பெரிய விஷயமல்ல, குமுதம் பத்திரிகைக்கு ஏற்றவிதமாக எழுதினால் தான் அது வெளியாகும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு எழுதுங்கள்” என்று கூறி அனுப்பிவைத்தார். அதன்பிறகு அதுவரை குமுதத்திற்கு அனுப்பிய அனைத்துக் கதைகளும் ‘பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்’ என்ற கடிதத்தோடு திரும்பின. அதையே சவாலாக ஏறு, ‘இது நியாயமா?’ என்ற தலைப்பில், குமுதம் அளவுகோலுக்கு ஏற்றவிதமாக ஒரு சிறுகதை எழுதி அனுப்பிவைத்தேன். அந்தக் கதை அடுத்த வாரமே குமுதம் வார இதழில் வெளியானது.
அரசு ஆசிரியராகப் பணியாற்றுவதை விடுத்து, எழுத்துத் துறையில் சவாலாக இறங்கித்தான் நான் சாதித்தேன். இதுபோல பல சோதனைகளை, புறக்கணிப்புகளைக் கடந்து தான் உயர்நிலையை அடைந்திருக்கிறேன்.
எழுத்துலகில் பல துறைகள் இருக்கின்றன. அதில் ‘கிரைம்’ எனப்படும் குற்றப்புனைவுத் துறையை எப்படி உங்களுக்கு உரியதாகக் கண்டுபிடித்தீர்கள்?
Crime Novelsஉண்மையில் கிரைம் எழுத்து எனக்கு இயல்பிலேயே இருந்துள்ளது. இதற்கு எனது அம்மா சிறுவயதில் கூறிய கதைகளும் காரணமாக இருக்கலாம். எல்லா அம்மாக்களையும் போல எனது அம்மா சாதாரணக் கதை கூறியதில்லை. அவர் சொன்ன கதைகள் எல்லாமே வீரக்கதைகள். எனது தாத்தா காலத்தில் மருதமலைக்கு மாட்டுவண்டி ஓட்டிக்கொண்டு செல்வாராம். அந்தக் காலத்தில் மருதமலைப் பக்கம் இரவு நேரத்தில் செல்லவே அனைவரும் அஞ்சுவார்களாம். ஆனால் எனது தாத்தா துணிவுடன் அங்கு வியாபார விஷயமாக சென்று வருவாராம். அந்த அனுபவக் கதைகளை நேரில் பார்த்தது போல அம்மா சொல்லியிருக்கிறார். மருதமலை முருகன் கோயிலில் திருட முயன்ற மூன்று திருடர்களை முருகர் கல்லாக மாற்றிய கதையை எனது சிறுவயதில் சோறூட்டியபோது அம்மா சொன்னது இன்னமும் என் நினைவில் இருக்கிறது. இதுவும் கூட எனக்கு திகில் கதைகளை பின்னாளில் எழுதத் தூண்டுகோலாக இருந்திருக்கலாம்.
நான் எழுதத் துவங்கிய காலத்தில் எழுதிய பெரும்பாலான கதைகளில் இந்த அம்சம் வெளிப்பட்டதைக் கவனித்தேன். கடவுள் மீதான அச்சம் தான் மனிதனை நல்வழிப்படுத்தும் என்பதையும் எனது கதைகளில் சொல்லிவந்தேன். அதற்கு குற்றப்புனைவுக் கதைகள் உதவிகரமாக இருந்தன. 1976 வரையிலும் எனது கதைகளின் மூலப்பொருளாக குற்றச் செய்திகளும் ஒவ்வொருவருக்கும் இறையச்சம் தேவை என்ற அடிப்படை அறவுணர்வுமே இருந்து வந்தன. சட்டத்தின்முன் குற்றவாளி தப்பினாலும் இயற்கை அவனைத் தண்டிக்கும் என்ற நீதிபோதனையையே எனது கதைகளில் வலியுறுத்தி வந்தேன்.
1980களில் பத்திரிகைகளில் எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, லட்சுமி, சாண்டில்யன் போன்றோர் பிரபலமாக இருந்தார்கள். அவர்கள் அனைவருமே சமூகப் புதினங்கள் எழுதுவதில் தேர்ந்தவர்கள். அவர்களுடன் போட்டியிட முடியாது என்பதை எனது இளம் மனது உணர்ந்தது. அப்போதுதான், அவர்கள் தொடாத, அதே சமயத்தில் எனக்கு நன்றாக வரக்கூடிய குற்றப்புனைவுத் துறையை (கிரைம்) தொடரத் தீர்மானித்தேன்.
கடவுள் மீதான அச்சம் தான் மனிதனை நல்வழிப்படுத்தும் என நம்புகிறீர்களா?
கண்டிப்பாக. நான் எழுதும் எந்த குற்றப்புனைவு புதினத்திலும் இறுதியில் நியாயமே வெல்லும் என்பதையே உறுதிப்படுத்தி இருப்பேன். எனது ஆரம்பகாலக் கதைகளில் கடவுள் பக்தியே மனிதர்களைக் காக்கும் என்பதை பலவாறாகச் சித்தரித்திருக்கிறேன். உதாரணமாக ஒரு கதை. இக்கதை குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை அவர்களுக்குப் பிடித்த கதை.
அந்தக் கதையில் தாய் ஒருவர் நேர்த்திக்கடனாக அம்மனுக்கு சிவப்புப்புடவை சார்த்த வேண்டும் என்று நச்சரித்து விருப்பமில்லாத மகனுடன் கோயிலுக்குச் செல்வார். செல்லும் வழியில் ரயில்பாதையில் ஏற்பட்டிருக்கும் விரிசலைக் காணும் மகன், அம்மனுக்கு சார்த்த வைத்திருந்த புடவையை எதிர்த்திசையில் காட்டியபடி ஓடி, பெரும் விபத்து நேராமல் காப்பாற்றுவான். கதையில் முடிவே அதுதான். இதைத் தானே ‘தெய்வம் மனுஷ்ய ரூபே’ என்கிறார்கள்.
கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற விவாதத்துக்குள் பலர் செல்வார்கள். அதுவும் அவனது விளையாட்டுத் தான். கடவுள் எக்காலத்திலும் நேரடியாக வர மாட்டார். சக மனிதராகத் தான் அவர் வருவார். இந்த ஞானம் வர நீண்டகாலம் ஆகலாம்.
நான் கடவுள்பக்தி மிகுந்தவன். சிறுவயதில் தினசரி கோயிலுக்குச் செல்வேன். காமாட்சியம்மன், முருகன், தண்டுமாரியம்மன், சாயிபாபா கோயில் என முறைவைத்து ஒவ்வொருநாளும் கோயிலுக்குச் சென்ற காலம் உண்டு. பிறகு சக மனிதரை மகிழச் செய்வதே தெய்வகாரியம் என்பதை உணர்ந்தேன். கோயில் வழிபாடு வர்த்தகமயமாகிவிட்ட சூழலில், நேர்மையுடன், நல்ல காரியங்களைச் செய்வதே இறைபணி என்று தீர்மானித்துக்கொண்டேன். எனது கதைகள் மூலமாக சமுதாயத்திற்கு நல்லது செய்தாலே போதுமே?
நீங்கள் எழுத வந்த காலத்தில் தமிழ்வாணன், பி.டி.சாமி. புஷ்பா தங்கதுரை, சுஜாதா போன்றவர்கள் குற்றப்புனைவுக் கதைகளை எழுதிவந்தனர். அவர்களின் பாதிப்பு உங்களிடம் உண்டா?
நான் எழுதவந்த காலத்தில் தமிழ்வாணன் மறைந்துவிட்டார். ஆனால் அவரது புதினங்களைப் படித்திருக்கிறேன். சங்கர்லால் துப்பறியும் அக்கதைகள் குற்றப்புனைவுத் துறையில் எனக்கு ஆர்வம் ஏற்படுத்தின. ஆனால், அவரது தாக்கம் எனது எழுத்தில் வரக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். பிற எழுத்தாளர்களைப் போல ஆபாசமும் வக்கிரமும் கலந்து எழுதக் கூடாது என்றும் எனக்கு நானே கட்டுப்பாடு விதித்துக் கொண்டேன்.
எழுத்தாளர் சுஜாதாவின் தாக்கமும் என்மீது இருந்தது. அழுதான் என்பதை உடைந்தான் என்று புதிய சொல்லாட்சியாக அவர் எழுத்துலகில் கொண்டுவந்தார். இலக்கியம் என்றால் ஏதோ ஒரு ஜந்து என்றிருந்த நிலையை அவர் தான் உடைத்தார். எனினும் அவரது எழுத்தின் பாதிப்பு என்னிடம் வந்துவிடக் கூடாது என்பதிலும் நான் தெளிவாக இருந்தேன். எனக்கென்று ஒரு தனி பாணியை நானே உருவாக்கிக் கொண்டேன்.
ஆங்கிலத்தில் குற்றப்புனைவு இலக்கியம் பேரிடம் வகிக்கிறது. அகதா கிறிஸ்டியின் உலகப்புகழ் அனைவரும் அறிந்தது. எழுத்தாளர் ஆர்தர் கனான் டாயல் உருவாக்கிய புலனாய்வாளர் ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்திற்கு இன்றும் கோடிக் கணக்கான ரசிகர்கள் உண்டு. அவர்களின் தாக்கம் உங்களிடம் உண்டா?
நான் கல்லூரி நாட்களில் ஆங்கிலத்தில் வந்த குற்றப்புனைவுப் புதினங்களைப் படித்திருக்கிறேன். இத்துறையில் எனது ஈடுபாட்டை வளர்க்க அவை பயன்பட்டன. அதிலும், இர்வின் வாலஸ் (1916- 1990) எழுதிய அறிவியல் புனைகதைகளில் எனக்கு அந்நாட்களில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. அவரது ‘தி பிரைஸ்’ புதினம் நோபல் பரிசு வழங்குவதில் உள்ள ஊழல்களை வெளிப்படுத்தியது.
அவர் எந்தக் கதை எழுதினாலும், அதைப் பற்றி நன்கு ஆராய்ச்சி செய்து அதன் பின்னரே எழுதுவார். விமானநிலையம் பற்றிய கதையானால், அங்கேயே சென்று ஆராய்வார்; கார் தொழிற்சாலை பற்றிய கதையானால், அதே தொழிற்சாலையில் ஆய்வு செய்து நுட்பமான தகவல்களுடன் கதை எழுதுவார். இந்த அணுகுமுறை என்னைக் கவர்ந்தது. ஆனால், அவரைத் தொடர்ந்து படித்தால் அவரது பாதிப்பு என் எழுத்தில் படிந்துவிடும் என்பதால் அதையும் விட்டுவிட்டேன். நல்ல எழுத்தாளருக்கு கதைக் கரு எங்கிருந்தும் கிடைத்துவிடும். இதற்கு ஆங்கில புதினங்களைப் படிக்க வேண்டியதில்லை.
உங்கள் கதைகளில் பல தகவல்களை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறீர்கள். இந்தத் தகவல்களை எப்படித் திரட்டுகிறீர்கள்?
நான் எந்தக் கதை எழுதினாலும், அதற்கு பத்திரிகைகளில் வெளியாகும் உள்ளூர் செய்தித் துணுக்குகளே ஆதாரமாக இருக்கின்றன. எழுத்தாளனுக்கு முதல் தேவை தேடுதல் தான். நான் தினசரி பத்திரிகைகளில் படிக்கும் செய்திகளில் குற்றம் தொடர்பானவற்றை குறித்துவைத்துக் கொள்வேன். அதை எனது பாணியில் சம்பவங்களாகத் தொகுத்து, வளர்த்தெடுத்து கதையாக்குவேன்.
எனது புதினங்களில் பெரும்பாலானவை கற்பனையல்ல. நான் படித்த, பார்த்த, என்னை பாதித்த நிகழ்வுகளே கதையாக வடிவம் பெறுகின்றன. அதற்காக முன்னர் பத்திரிகைகளை நம்பி இருந்தேன். இப்போது இணையதள வசதியைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
ஒரு உதாரணம். செயற்கை இருதய வால்வ் தயாரிக்க பல்லேனியம் என்ற தனிமம் பயன்படுகிறது. அதைக்கொண்டு அமெரிக்காவில் அறுவைச் சிகிச்சை செய்து மனிதனின் வாழ்நாளை நீட்டிக்கிறார்கள் என்பது செய்தி. அதில் ஒரு முக்கிய தகவல், அணுக்கதிர் இயக்கம் கொண்ட இந்த வால்வின் விலை ரூ. 20 கோடி என்றும், இந்த அறுவைச் சிகிச்சையை ரகசியமாகச் செய்வார்கள் என்றும் ஓர் ஆங்கில பத்திரிகையில் படித்தேன். இந்த அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகளின் விவரங்களை பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளிப்படுத்த மாட்டார்கள் என்றும் அந்தச் செய்தி கூறியது. அதில் தான் எனது ‘ஃபர்ஸ்ட் ஃபிளைட் டு நியூயார்க்’ புதினத்திற்கான கரு கிடைத்தது. அந்த வால்வை இந்திய கோடீஸ்வரரின் ஒரே இளம்வயது மகளுக்குப் பொருத்த அவர் செய்யும் முயற்சியையும், அவளைக் கொன்று வால்வை அபகரிக்கத் திட்டமிடும் குற்றவாளியையும் சித்தரித்து புதினத்தை உருவாக்கினேன். குற்றவாளியிடமிருந்து அந்த இளம்பெண் எப்படித் தப்பினாள் என்பதே கதையின் முடிவு.
இப்படித்தான் அணுவியல், ஸ்டெம் செல், உடலுறுப்பு தானம் போன்ற புதிய விஷயங்களில் தகவல்களைத் திரட்டிக் கொள்வதன் மூலமாக புதிய கதைகளை உருவாக்குகிறேன். நான் இதுவரை விமானநிலையத்திற்கே போனதில்லை. ஆனால், விமானப்பயணம் செல்லும் லேனா தமிழ்வாணன் போன்ற நண்பர்களிடம் விமான நிலையம் குறித்த தகவல்களை கிரகித்துக் கொள்வேன்.
எனது ‘நந்தினி 440 வோல்ட்ஸ்’ புதினத்தில் குற்றவாளியிடமிருந்து கண்தானம் பெற்ற ஒரு பெண் எவ்வாறு அநீதிக்கு எதிரானவளாக தன்னை மாற்றிக்கொள்ள நாடகமாடுகிறாள் என்பதைச் சித்தரித்தேன். இப்படித்தான் புதிய கோணங்களில் கதையை நடத்துவேன். ஆர்வமூட்டும் துவக்கம், அதிரடித் திருப்பங்கள், திடீர் உச்சம் என எனது கதைக்கு ஒரு வடிவம் உள்ளது. அதன் முடிவில் நீதிபோதனை மறைந்திருக்கும்.
இப்போதும் கூட குமுதம் வார இதழில் எழுதும் ‘வெல்வெட் குற்றங்கள்’ தொடர்கதையில், காணாமல் போன மலேசிய விமானம் என்ன ஆனது என்று, சமீபத்திய பரபரப்புச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு எழுதி வருகிறேன். அதற்காக, காணாமல் போன விமானங்களின் வரலாறு, அதைக் கண்டுபிடிக்கச் செய்யப்படும் படிப்படியான நடவடிக்கைகள், கண்காணிப்பு விமானம், மீட்பு நடவடிக்கைகள், கடலுக்குள் உள்ள பொருள்களைக் கண்டறியும் ஒலி அலை தொழில்நுட்பம் போன்ற பல புதிய விஷயங்களை அறிந்துகொண்டு, அதை கதையில் எழுதுவதால், புதிய வாசகர்கள் மிகவும் வரவேற்கிறார்கள்.
1980 முதல் 1990களின் பிற்பாதி வரையிலும் வார இதழ்களின் பொற்காலமாக இருந்தது. தவிர காகிதக்கூழ் பதிப்பு (பல்ப் ஃபிக்‌ஷன்) எனப்படும் பாக்கெட் நாவல்களின் வளர்ச்சி அதீதமாக இருந்தது. அக்காலகட்டத்து எழுத்தாளர்களில் முதன்மையானவராக நீங்கள் திகழ்ந்தீர்கள். ஒரே சமயத்தில் 7 வார இதழ்களிலும் 3 பாக்கெட் நாவல்களிலும் தொடர் கதைகளாகவும், குறும் புதினங்களாகவும் எழுதித் தள்ளினீர்கள். எப்படி இதனை நீங்கள் சாதித்தீர்கள்?
எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் உழைப்பு தான். தவிர எனக்கு வாய்ப்பளித்த பத்திரிகை ஆசிரியர்கள், என்னைத் தொடர்ந்து படித்த வாசகர்களின் ஆதரவு இல்லாவிட்டால் இந்தச் சாதனை நிகழ்ந்திருக்காது.
குறிப்பாக குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அவர்கள், கல்கண்டு வார இதழில் 1980-ல் அளித்த தொடர்கதை வாய்ப்பே என்னை அனைவரும் உணரச் செய்தது. அதில் எழுதிய ‘7வது டெஸ்ட் டியூப்’ தொடர்கதை எனது அடையாளத்தை பதிவு செய்த்து. அதைத் தொடர்ந்து பல வார இதழ்கள் எனது படைப்புகளை வெளியிடத் துவங்கின. எனக்கும் வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம்.
எஸ்.ஏ.பி. மட்டுமல்ல, ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியம், இதயம் பேசுகிறது ஆசிரியர் மணியன், சாவி ஆசிரியர் விஸ்வநாதன், கல்கி ஆசிரியர் ராஜேந்திரன் போன்றவர்கள் என் மீது வைத்திருந்த அன்பே என்னை கடுமையாக உழைக்கச் செய்தது. அந்தக் காலத்தில் வாரத்தின் 7 நாட்களும் ஏதாவது ஒரு வார இதழில் எனது தொடர்கதை வந்து கொண்டிருந்தது. விகடன், ராணி, கல்கி, குமுதம், சாவி, இதயம் என அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த அனைத்து இதழ்களும் எனது தொடர்கதையையைக் கேட்டு வாங்கிப் பிரசுரித்தன.
தவிர எனது நண்பரும் உடன்பிறவாத் தம்பியுமான அசோகன் (ஜீயே) 1985-ல் ஆரம்பித்த பாக்கெட் நாவல்கள் விற்பனையில் சரித்திரம் படைத்தன. அசோகனுடனான எனது உறவு எழுத்தாளர்- பதிப்பாளர் என்ற நிலையையும் தாண்டியது. கடந்த 30 ஆண்டுகளில், அவருக்கு மட்டுமே 500-க்கு மேற்பட்ட புதினங்களை நான் எழுதி இருக்கிறேன்.
இவர்கள் அனைவருக்கும் கதை எழுத எனக்கு ஒருநாள் போதாது என்ற நிலைமை இருந்தது. தினமும் ஒவ்வொரு பத்திரிகைக்கும் தொடர்கதை அத்தியாயங்களை எழுதி கூரியரிலோ, அல்லது எனது வாசகர்களான ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் மூலமாகவோ சென்னைக்கு அனுப்பி விடுவேன்.
ஒவ்வொரு வார இதழிலும் வெவ்வேறு விதமான தொடர்கதை எழுதும்போது, எப்படி அதை நினைவில் கொண்டு எழுதுவீர்கள்?
உண்மையில் இதை கடவுளின் கிருபை என்று தான் சொல்ல வேண்டும். எனது ஞாபக சக்தி கூர்மையானது. தவிர, ஒவ்வொரு பத்திரிகைக்கும் எழுதும் அத்தியாயங்களின் சுருக்கத்தை தனிக் குறிப்பேட்டில் குறித்து வைத்திருப்பேன். எந்த ஒரு கைப்பிரதியையும் நகல் எடுத்து வைத்துக் கொள்வதில்லை.
நாம் எந்த ஒரு விஷயத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்கிறோமோ, அதை மறந்துவிட மாட்டோம். அப்படித்தான் எனக்கு என் கதைகளின் மீது மிகுந்த ஆர்வம் இருந்ததால் நினைவில் வைத்திருப்பதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. தவிர அர்ப்பணிப்பு மனநிலையில் நீங்கள் எழுதும்போது எல்லாம் கூட வரும். எழுத்துத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆவேசம் தான் என் அர்ப்பணிப்புக்குக் காரணம்.
இன்னமும் நீங்கள் கையில் தான் எழுதுகிறீர்களா?
ஆமாம். கணினியில் தட்டச்சு செய்யப் பழகி இருந்தாலும், கையில் எழுதும்போது வரும் தொடரோட்டம் தட்டச்சில் வருவதில்லை. எனவே, இப்போதும் கையில் தான் எழுதுகிறேன்.
முந்தைய காலத்தில் வார இதழ்களுக்கு இருந்த கிராக்கி தற்போது குறைந்துவிட்டது. புதினங்களைப் படிக்கும் வாசகர் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எல்லாமே மாற்றங்களுக்கு உட்பட்டது தான். மாறிவரும் தகவல் தொழில்நுட்ப உலகிற்கு ஈடு கொடுக்க பத்திரிகைகளும் மாறியாக வேண்டியிருக்கிறது. முன்னர் 6 லட்சம் பிரதிகள் விற்றது குமுதம். வாசகர்களுக்கு பொழுதுபோக வாசிப்பு மட்டுமே கருவியாக இருந்த காலம் அது. இப்போதோ அலைபேசிகள், தொலைக்காட்சிகள், இணையதளங்களின் காலம். எனவே ஒருநிமிடக் கதை, கால்பக்கக் கதைகள் என வாசகருக்கேற்ப வார இதழ்களும் வணிகரீதியாக மாறி இருக்கின்றன. ஆனாலும் தொடர்கதைக்கு இன்னமும் மவுசு இருக்கிறது.
வாசகர்களைப் பொருத்த வரை, புத்தக வாசிப்பு குறைந்திருந்தாலும், இணையதள வாசிப்பு பெருகி இருக்கிறது. அதற்கேற்ப மின்னூல்கள் வெளிவரத் துவங்கிவிட்டன. எனது புதினங்களே இப்போது மின்னூல் வடிவில் கிடைக்கின்றன.
1980- 1990களில் ஓய்வே இல்லாமல் எழுதிய நீங்கள் இப்போது எப்படி உணர்கிறீர்கள்? உங்கள் தேவை குறைந்துவிட்டதா?
இல்லை. இப்போதும் நான் மும்முரமாக எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். சொல்லப்போனால் முன்னை விட இப்போது தான் நான் அதிகம் எழுதுகிறேன். இப்போதும்கூட, மங்கையர் மலர் மாத இதழ், குமுதம், சூரியகதிர் வார இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறேன். தவிர தொலைக்காட்சிக்காக சின்னத்திரை தொடர்களிலும் எழுதுகிறேன். திரைப்படத் துறையிலும் எழுதுகிறேன். இவை தவிர, புனைவல்லாத கட்டுரைகளும் எழுதுகிறேன்.
நான் எப்போதுமே தொலைக்காட்சி பார்ப்பது கிடையாது. கோயிலுக்குப் போகக்கூட எனக்கு நேரம் இல்லை. இப்போதும்கூட பல்வேறு இதழ்களின் தீபாவளி மலர்களுக்கு சிறப்புச் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். இவையல்லாது முகநூலில் ‘கேள்வியும் நானே பதிலும் நானே’ என்ற தலைப்பில் பல புதிய விஷயங்களை எழுதி வருகிறேன். அங்கு எனக்கு மிகப் புதிய வாசகர்கள் பலர் அறிமுகமாகி வருகின்றனர்.
எனது மகன்கள் கூட, ‘ஏம்ப்பா கொஞ்சம் ஓய்வெடுக்கக் கூடாதா?’ என்று கேட்கிறார்கள். என்னால் ஓய்வெடுக்க முடியாது. ஓய்வெடுத்தால் எனக்கு வயதாகிவிடும் என்று அவர்களிடம் கூறுவேன்.

Monday, October 13, 2014

வாசகனின் பங்கேற்புக்கு இடம் அளிக்கிறேன் - கலை குறித்து ஓவியர் மசெ பேச்சு


ஓவிய கலை என்பது கடல் போன்ற பிரமாண்டமான ஒன்று. அதை ரசிப்பதற்கேகூட நல்ல பயிற்சி வேண்டும். நம்மில் பெரும்பாலானோருக்கு ஓவியம் என்பது பத்திரிக்கைகளில் வரும் கதைகளுக்கு போடப்படும் ஓவியம் மூலம் அறிமுகம் ஆகி இருக்கும். அந்த ஓவியங்களில் ஒவ்வொரு ஓவியருக்கும் ஒரு பாணி இருக்கும் , ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருக்கும், மில்க் பூத் என்ற டீ ஷர்ட் வாசகத்துடன் மு...மன்னிக்கவும் .. கலை அம்சத்துடன் ஒரு பெண்ணை  வரைந்த ஓவியர் இருக்கிறார்.  போட்டோபோலவே வரையும் ஓவியர்கள் இருக்கிறார்கள். ஒரு வித அமானுஷ்ய தன்மையுடன் வரைபவர்கள் இருக்கிறார்கள். இருப்பதை அப்படியே கண் முன் நிறுத்துவது ஒரு பாணி என்றால் வாசகனின் கற்பனைக்கு சற்று இடம் அளித்து , அழகியலும் கற்பனையும் சேர்த்து வரைவது மணியம் செல்வத்தின் பாணி. அவருக்கு என ஒரு ரசிகர் கூட்டம் உண்டு,

என்னை பொருத்தவரை மேலே சொன்ன டீஷர்ட் ஓவியர் முதல் , போட்டோகிராஃபி ஓவியர் வரை எல்லோரையுமே ரசிப்பேன். ரசிப்பதுடன் ஆழந்து கவனிக்கவும் செய்வது மணியம் செல்வத்தின் ஓவியங்களை..

இவரது தந்தை மணியனின் ஓவியங்கள் இன்னும் பேசப்பட்டாலும் ( குறிப்பாக பொன்னியின் செல்வன் ஓவியங்கள் ) தன் தந்தையையும் விஞ்சி நிற்பவர் மணியன் செல்வம்.

அவர்தம் ஓவியங்களை மட்டும் அன்று..அவர் பேட்டிகளையும் ஆர்வமாக கவனிப்பவன் என்ற முறையில் ஞாநி மற்றும் பாஸ்கர் சக்தி  நடத்தும் கேணி கூட்டத்தில் அவர் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளித்தது.

இயற்கையான சூழலில் கேணி கூட்டத்தில் கலந்து கொள்வது எப்போதுமே இனிய அனுபவம். இம்முறை சற்று வித்தியாசமாக , அறைக்குள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆரம்பத்தில் அது எனக்கு சற்று ஏமாற்றம் என்றாலும் , அறைக்குள் நடத்தியதால் , வீடீயோ காட்சிகள் மிக சிறப்பாக அமைந்திருந்தன என்பதால் மகிழ்ச்சியாக இருந்தது. அதிஷா , லக்கி யுவா போன்ற பிரபலங்கள் ஆஜர் ஆகி இருந்தனர். அவர்கள் வெற்றிக்கான காரணம் புரிந்தது. எதற்கு பிரியாரிட்டி கொடுப்பது என்பதே நம்மை உருவாக்குகிறது அல்லவா...

அரசியல் விமர்சகராக நாம் அறிந்த ஞாநி , ஓவியம் குறித்து பேசியது வியப்பாக இருந்தது,  ஓவிய மேதையான மாசெ அந்த அறிமுக உரையை ஆர்வத்துடன் கவனித்தார்.

ஞாநி பேசுகையில் , தனக்கு முதன் முதலில் மணியம் செல்வம் அறிமுகம் ஆனது வேறோரு பெயரில் என்று சொல்லி , அவரையே ஆச்சர்யப்பட வைத்தார்.  குமுதத்தில் , பிரபலங்களின் வாரிசுகளின் திறனைக்காட்டும் பகுதி ஒன்று பிரசுரிக்கப்பட்டதாம். அதில் மணியம் அவர்களின் மகன் என்ற முறையில் லோகனாதன் என்பவர் படம் வரைந்தாராம். அவர்தான் இன்றைய மசெ !!!!!   பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்ததன் ஒரு சின்ன "கால பயண மகிழ்ச்சி"  மசெ முகத்தில் தெரிந்தது.

ஞாநி தொடர்ந்து பேசினார்..

சினிமாவில் க்ளோசப் ஷாட் , லாங்க் ஷாட் , இந்த கோணம் , அந்த கோணம். மாண்டேஜ் என்றெல்லாம் இப்போது பேசுகிறோம் . அது போன்ற பேச்சுகள் இல்லாத அன்றைய கால கட்டத்தில் , இவற்றை ஓவியம் மூலம் செய்து காட்டுயவர்கள் அன்றைய ஓவியர்கள்..  தொடர்கதை , சிறுகதைகள் என பத்திரிக்கைகள் ஆதிக்கம் செய்த அன்றைய சூழலில் ஓவியர்கள் பிசியாக செயல்பட்டனர். ஒரு கட்டத்தில் திடீர் என கதைகளுக்கு இடம் இல்லாத சூழல் ஏற்பட்டது...அதை மசெ எப்படி எதிர்கொண்டார் என விளக்குவார் என கருதுகிறேன்.  நான் அந்த காலத்தில் இருந்தே மசெயை கவனித்து வளர்ந்து வந்தவன். அவர் போன்ற ஓவிய்ர்களை ரோல் மாடலாக கொண்டு , அவர்களைப்போலவே வரைய முயற்சி செய்தவன் நான்.. எனவேதான் என்னால் நல்ல ஓவியனாக உருவெடுக்க முடியவில்லை . யார் பாதிப்பும் இல்லாமல் நான் வரைந்த ஒரே ஓவியமான பாரதி ஓவியம் மட்டும் பிரபலமாக உள்ளது. மசெ பத்திரிக்கையில் மட்டும் வரையவில்லை. வேறு இடங்களிலும் தன் கலைத்திறனை காட்டி இருக்கிறார். பல ஆலயங்களில் வணங்கப்படும் சிலைகள் இவர் வடிவமைத்ததுதான். அவர் தன் அனுபவங்களை நம்முடம் பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன்..

இவ்வாறு அவர் பேசியதும் , தொடர்ந்து மசெ பேசினார். ஓவிய துறைக்கு எப்படி வந்தார் என்பதையும் அவரது தந்தைக்கும் கல்கி அவர்களுக்கும் இடையேயான நெருக்கம் குறித்தும் பல விஷயங்கள் சொன்னார்.  டெக்னாலஜி வளராத அன்றைய காலத்தில் , அட்டைப்படம் வரைவதெல்லாம் சாதாரண விஷயம் அன்று.  வரையும் படம் , ப்ரோசஸ் எல்லாம் முடிந்து ப்ரிண்டில் எப்படி வரும் என் கணிக்க தெரிந்திருக்க வேண்டும் . அட்டையில் வரும் எழுத்துகளை சரியாக மேட்ச் செய்ய வேண்டும் .  ப்ரிண்டிங் பற்றியும் தெரிந்து இருக்க வேண்டும் .உதாரணமாக ஓவியத்தின் ஒரு பகுதியில் அதிக கருப்பு பகுதி இருந்தால் ,  மை அதிகம் செலவாகி அதன் மற்ற பகுதியின் தரத்தையும் கெடுத்து விடும்,  அதையும் கணக்கில் கொண்டு , அந்த கறுப்பு பகுதியில் வேறேனும் விஷயங்களை பொருத்தமாகவும் அழகியலுடனும் சேர்க்க வேண்டும். அதாவது கலைஞனாக இருந்தால் மட்டும் போதாது. தொழில் நுட்ப அறிவும் வேண்டும் .. அப்படித்தான் அந்த காலத்தில் ஓவிய பணியாற்றினர்.  இதற்காக பெரிய அளவில் பொருளாதார ஆதாயங்கள் கிடைக்காமல் போகலாம். அதை எதிர்பார்க்கவும் இல்லை. அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே ஓவியர்களை இயங்க வைக்கிறது.

இப்படி பேசிய அவர் சில அபூர்வ ஓவியங்கள் , அவை உருவாகும் விதம் ஆகியவை குறித்து காணொளி மூலம் விளக்கினார்.  ஒரு சிறப்பிதழுக்காக குறிப்ப்பிட்ட அட்டைப்படம் காட்டினார். அதற்கு முதலில் வரையப்பட்டு இருந்த ஓவியத்தை காட்டினார். அது செம அழகாக இருந்தது. ஆனால் ஓவியருக்கு அதில் திருப்தி இல்லை..எனவே அதை புறக்கணித்து விட்டு இன்னொரு ஓவியம் தயார் செய்தார். இரண்டையும் நாம் பார்க்கும்போது , அவர் செய்த மாற்றம் , அது தரும் அழுத்தம் , அழகு போன்றவை பளிச் என தெரிந்தன. அப்படி வரையப்பட்ட படம் , ப்ரிண்டில் எப்படி வந்துள்ளது என்பதையும் காட்டினார். வாவ்வ்வ்வ்.. ப்ரிண்டில் நாம் பார்ப்பதை , ஓவியர் ஏற்கனவே மனக்கண்ணில் பார்த்து வரைந்தாக வேண்டும்.


வரலாற்று சிறப்புமிக்க சில இடங்களுக்கு சென்று வரையப்பட்ட படங்களை காட்டினார்.

சிலர்  நாளை மற்றும் ஒரு நாளே , ஜே ஜே சில குறிப்புகள் போன்ற  ஃபேக் நாவல்களை படித்துவிட்டு வாழ்க்கையை அப்படியே பதிவு செய்து இருக்கிறது என சிலிர்ப்பார்கள் அல்லவா.. அப்படியே பதிவு செய்வது கலை அல்ல என செம அழகாக விளக்கினார். வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் , சிலைகள் ஓவியர் கைவண்ணத்தில் எப்படி உரு மாறுகிறது என விளக்கியது அட்டகாசம்


செய்வதை முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள்.அத்தகைய படைப்புகள் காலத்தை விஞ்சி நிற்கும் என்றார் மசெ.


ஒரு விஷ்யத்தை நன்றாக தெரிந்து கொண்டு விட்டு , அதன் பின் அதை மீறி செல்வது நல்லது.  எதுவுமே தெரியாமல் , வெறும் பரபரப்புக்காக மீறல்களில் ஈடுபடுவது நல்லதனறு. அந்த காலத்தில் என் நண்பர் ஒருவர் மாடர்ன் ஆர்ட் வரைந்து பல பரிசுகள் வென்றார். ஆனால் இன்று அவருக்கு ஓவிய துறையில் எந்த இடமும் இல்லை. காரணம் அவரிடம் அடிப்படை அறிவு இல்லை. நான் மாடர்ன் ஆர்ட்டுக்கு எதிரி அல்லன். ஆனால் வலுக்கட்டாயமாக அதில் இறங்குவதில்லை. எப்போது தோன்றுகிறதோ அப்போது வரைகிறேன். கார்ட்டூனும் முயற்சி செய்துள்ளேன். ஆனால் அதில் அதிகம் இறங்கினால் , இயல்பான ஸ்டைல் கெட்டு விடும் என என் தந்தை எச்சரித்ததால் , அதை விட்டு விட்டேன்.

என் தாயார் பெயர் சரஸ்வதி. அவர் துணை இல்லாமல் என் தந்தை அவ்வளவு சாதித்து இருக்க முடியாது. எல்லாவித்திலும் என் அம்மா உற்ற துணையாக இருந்தார்,

என் படங்களில் வாசகனின் கற்பனைக்கு எப்போதுமே இடம் இருக்கும். இருப்பதை அபப்டியே வரைந்து , வாசகனின் கற்பனைக்கு இடம் இன்றி செய்வதில்லை.

அறீவியல் முன்னேற்றங்களை நான் பயன்படுத்திக்கொள்கிறேன். அதில் எனக்கு தயக்கம் இல்லை. ஆனால் டெக்னாலஜி நம்மை ஆதிக்கம் செலுத்திவிட அனுமதிக்க கூடாது. தேவையான அளவு நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். டெக்னாலஜி மூலம்தான் என் தந்தை ஓவியங்களை பாதுகாக்க முடிந்தது.

என்னால் அழகாக மட்டுமே வரைய முடியும் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு , தன் கதாபாத்திரங்களை அழகின் உச்சமாகத்தான் கதாசிரியர்கள் காட்டுகிறார்கள். எனவே நான் அழகாகவே வரைய வேண்டி இருக்கிறது. ஆனாலும் என் ஓவியங்கள் ஒரே மாதிரி இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன்.

கதாசிரியர்கள் விரும்புவதை ஓவியத்தில் கொண்டு வருவது என் கடமை. ரத்தம் ஒரே நிறம் நாவலில் சுஜாதா ஒரு காட்சியில் , யானையால் மிதிக்கப்பட்டு ரத்தம் பாய்ந்து சிதறுவதை , மயில் தோகை போல ரத்தம் சிதறியது என எழுதி இருப்பார். அதை ஓவியத்தில் அப்படியே கொண்டு வருவது சவாலாக இருந்தது. பொருத்தமான கோணாத்தை யோசிக்க வேண்டி இருந்தது   அந்த கதையின் ஓவியங்கள் எப்படி வர வேண்டும் என சுஜாதா ஆர்வம் காட்டினார், எனக்கு பல தகவல்கள் தந்தார்.


கதைகளுக்கான ஓவிய தேவை குறைந்த சூழலை எப்படி எதிர்கொள்கிறேன் என ஞாநி கேட்டார். இந்த தேவை இன்னும் குறைந்து , நான் முழுமையாக விடுபட்டால் நல்லதுதான் என கருதுகிறேன். நான் பத்திரிக்கையை மட்டும் நம்பி இருக்கவில்லை. ஓவியத்துறையில் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன.

ஓவியம் படித்தால் வேலை கிடைக்குமா என கணக்குபோடாமல் , ஆர்வத்துடன் இதில் இறங்கினால் வாய்ப்பு உங்களை தேடி வரும். கண்டிப்பாக சாதிக்கலாம்.

இவ்வாறு ம செ பேசினார்..





Wednesday, October 8, 2014

அசோகமிதரன் பாராட்டிய என் கதை நிராகரிக்கப்பட்டது - வெண்முரசு பற்றி ஜெயமோகனுடன் எக்ஸ்க்லூசிவ்

ஜெயமோகனின் வெண் முரசு தொடரை பலர் படித்து வருவீர்கள் என நம்புகிறேன். முதல் பாகம் தொடும் ஆழம் , அதற்கு பிந்தைய பகுதிகளில் வரும் உணர்வெழுச்சி போன்றவை அபாரமாக இருந்தன..  ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு மாதிரி என்றாலும் பொதுத்தன்மை என்றால் தமிழ் ஆளுமையை சொல்லலாம். சாரு இந்த தமிழை பாராட்டியதை மறந்திருக்க மாட்டீர்கள்.

ஆனால் முந்தைய பகுதியில் இருந்து சற்று வேறுபட்ட நடையில் வெளி வந்தது நீலம் எனும்  நாவல் . இதை புரிந்து கொள்ள முடியவில்லை.. பழைய பகுதிகள் போல இல்லை என சிலர் சொன்னார்கள்..இதுதான் நன்றாக உள்ளது என்பவர்களும் உண்டு..

இந்த முரண் குறித்து ஜெயமோகனிடம் கேட்டேன்.

நீலம் இப்படி பிரத்தியேக நடையில் எழுதப்பட காரணம் என்ன?

படிக்க கஷ்டமாக இருப்பதாக சிலர் சொல்கிறார்களே/?

இந்த பகுதி எந்த வகை வாசகர்களுக்காக எழுதப்பட்டது/?

இதை எப்படி வாசித்தால் நல்லது/?

இதற்கு ஜெயமோகன் அளித்த பதில் உங்கள் பார்வைக்கு

*****************************************************************


அன்புள்ள பிச்சைக்காரன்,

நீண்டகாலமாக எழுதிக்கொண்டிருப்பவன் என்றவகையில் எல்லா வினாக்களுக்கும் ஏற்கனவே ஓர் அனுபவமும் விடையும் என்னிடம் இருப்பதை புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன். நீங்களும் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். விரைவில் கண்டடைவீர்கள்.

என் ஆரம்பநாட்களில் ஆன் மிக நுட்பமானது என்று கருதும் கதை ஒன்று கணையாழியில் வெளிவந்தது. அசோகமித்திரன் அதைப்பாராட்டி எழுதியிருந்தார். ஆனால் அதை மிக நிராகரித்து ஒருவாசகர்கடிதம் வந்தது. எனக்கு கடும் வருத்தம். கதையில் என்ன பிரச்சினை என்று என்னுள்ளே கேட்டுக்கொண்டே இருந்தேன். அப்போது அசோகமித்திரன் எழுதிய சுருக்கமான கடிதம் வந்தது.

எல்லாபடைப்புகளும் எல்லாருக்குமானவை அல்ல என்று அவர் எழுதியிருந்தார். தஸ்தயேவ்ஸ்கியின் மாபெரும் செவ்வியல்படைப்புகள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. வாசகர்களின் வாசிப்புப் பயிற்சி, இயல்பு மட்டும் அல்ல அப்படைப்பை அம்முறை வாசிக்கும்போது அவர்களுக்கிருந்த மனநிலை ஆகியவையும் முக்கியம். ஒரு படைப்பை முழுமையாக நிராகரித்த ஒருவர் கொஞ்சநாட்கள் கழித்து சிறப்பானதாக எண்ணவும் கூடும். எழுத்தாளனுக்கே உள்ளூரத்தெரியும் சரியாகவந்திருக்கிறதா என்று, அது மட்டுமே முக்கியம் என எழுதியிருந்தார்

சரியாக ஒரு வாரம் கழித்து சி.மோகனைச் சந்தித்தேன். அசோகமித்திரனின் ஒற்றன் நாவலை அவர் நிராகரித்தார் என்றும் அது தற்போது மிகவும் பிடித்திருப்பதாகவும் சொன்னார். ஏன் நிராகரித்தீர்கள் என்றேன். அதை அவர் குமுதத்தில் சிறுகதைகளாக எழுதி ஒன்றாகச்சேர்த்து நாவலாக்கியது பிடிக்கவில்லை என்றார். அசோகமித்திரன் எவ்வளவு பார்த்திருப்பார் என பிரமித்தேன்.

அரசியல் காரணங்களுக்காகவும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் காழ்ப்பும்  மனவிலக்கமும் கொண்ட வாசகர்கள் உண்டு. வாசிப்பில் மிகமிகப் பின் தங்கி தேங்கிவிட்டவர்கள் உண்டு. எந்த ஒரு பேரிலக்கியத்தையும் நிராகரிக்கும் நோக்கத்துடன் வாசித்தால் அது எதையுமே அளிக்காமல் மௌனமாகி விடுவதை, தரமற்றதாகவே தெரிவதைக் காணலாம். ஏனென்றால் இலக்கியம் ஒன்றும் புறவமயான ஒரு பொருள் அல்ல. அது வாசகன் மனதில் நிகழவேண்டிய கற்பனை. அந்த கற்பனைக்கான தூண்டுதலை அளிக்கும் மொழிவடிவம் மட்டுமே இலக்கியத்தில் உள்ளது. கற்பனைசெய்ய மறுக்கும் வாசகன் ஓவியத்தை பார்க்கும் விழியற்றவனே.

அத்தகையோரை நாம் முழுமையாகவே நிராகரித்துவிடலாம். நான் எப்போதுமே சொல்வது போல நீ என் வட்டத்துக்குள் இல்லை என்றால் நான் உன் வட்டத்துக்குள் இல்லை என்பதே உண்மை.

நீங்கள் கேட்கும் வினா நுண்ணுணர்வுள்ள, தொடர்ந்து இதை வாசிக்கும் மனநிலை கொண்ட, பிறபகுதிகளை ரசிக்கும் வாசகர்களைப்பற்றியது. அதற்கான என் விடையை மேலேகுறிப்பிட்ட அ-வாசகர்களை வரையறை செய்து வெளியேதள்ளிய பிறகே செய்ய முடியும்.

நல்ல வாசகர்களில், தொடர்ந்து வாசிப்பவர்களிலேயே அனைவரும் சமானமானவர்கள் அல்ல. ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாசிப்புப்பயிற்சியும் மனநிலையும் ஒவ்வொன்று என்பதற்கு அப்பால் பொதுவான  ஒரு  பிரிவினை உள்ளது என நான் அவதானித்திருக்கிறேன். சமீபத்தில் இன்னொரு நண்பரிடம் இதை விரிவாக தொலைபேசியில் பேச நேரிட்டது

வாசகர்களில் மிகக்கணிசமானவர்கள் அவர்கள் கண்முன் அறியும் அன்றாடவாழ்க்கையில்  இருந்து நீட்சிகொள்ளும் புனைவிலக்கியத்தை மட்டுமே  ரசிப்பவர்களாக இருப்பார்கள். அன்றாடவாழ்க்கையின் இடைவெளிகளை நிறைப்பதாகவும், உணர்வுகளை வளர்ப்பதாகவும் அறிதல்களை நுட்பமானதாக ஆக்குவதாகவும் அவ்விலக்கியம் இருக்கவேண்டுமென நினைப்பார்கள். அவர்கள் வாசிப்பதே அதற்காகவே.

இத்தகையவர்கள் அதிகமாக வாசிப்பவர்கள் என்பதைக் காணலாம். கொஞ்சம் சுமாராக இருந்தால்கூட இவர்களால் புனைவை வாசித்துவிடமுடியும். அதில் ஏதேனும் சில வாழ்க்கைக்கூறுகள் இருந்தால்போதும். அவர்கள் வெளியே வாழ்வதைப்போல ஓர் அக வாழ்க்கையை புனைவு வழியாக வாழ்வார்கள். அவர்கள் பாராட்டும் ஒரு படைப்பில் அவர்கள் என்ன தான் கண்டார்கள் என்று கேட்டால் அவர்கள் ஏற்கனவே அன்றாட வாழ்க்கையில் அறிந்த ஒரு நுட்பமான விஷயத்தை அப்படைப்பு தொட்டுணர்த்தியிருப்பதைச் சொல்வார்கள். இலக்கியத்தில் அன்றாடவாழ்க்கையின் ஒரு விஷயம் குறிப்புணர்த்தப்பட்டிருந்தாலே அவர்களுக்குப்போதும். இவர்கள் தங்கள் அறிவுத்திறன் அல்லது நுண்ணுணர்வைக்கொண்டு அதைக் கண்டுபிடித்தால் அதுவே இலக்கிய அனுபவம்.

இத்தகையவர்கள் இலக்கியத்தின் மொழிநடை மீது கவனமற்றவர்கள். குறைந்தபட்ச உரைநடை, சுருக்கமான வெளிப்பாடு என்பதே இவர்கள் விரும்புவதாக இருக்கும். கவித்துவம் என்பது உலகியல்தளத்தைத் தொடும்போதன்றி அவர்கள் கண்ணுக்குப்படாது. கவிதையின் கருவிகளான அணிகள், படிமங்கள், உருவகங்கள் எவையும் இவர்களை பெரிதாகக் கவர்வதில்லை. தத்துவார்த்தமான தளங்களை இவர்கள் கவனிப்பதில்லை. ஆன்மீகமான உச்சங்களை நோக்கிச் செல்வதுமில்லை.  காரணம் இவர்கள் புனைவில் கற்பனைமூலம் வாழ்கிறார்கள். அந்த வாழ்க்கைக்குத் தடையில்லாதபடி மொழியும் புனைவுமுறையும் மிக இயல்பாக அவர்களை அறியாமல் அவர்களுடன் இருக்கவேண்டும். ஈர்த்து உள்ளே கொண்டுபோனபின் மொழி அவர்களை விட்டு விலகிவிடவேண்டும் .

இவர்கள் பெரும்பாலும் யதார்த்தவாதக் கதைகளை வாசிப்பவர்கள். வேறுவகைப்படைப்புகளில்கூட யதார்த்தவாத அம்சத்தைக் கண்டடைந்து ரசிப்பார்கள். இவர்கள் தொடர்ந்து வாசித்து தங்களுக்குரிய இடங்களைக் கண்டடைந்துகொண்டே இருப்பார்கள். மிகநுட்பமான வாசகர்களாக தங்களை நம்புவார்கள். ஓர் எல்லைவரை அது உண்மையும் கூட!


இன்னொருவகை வாசகர்களே செவ்வியல்தன்மைகொண்ட படைப்புகளை இன்னும் அதிகமாக நெருங்குபவர்கள். அவர்களிடம் மேலே சொன்ன வாசிப்புச்சுவை இருக்கும். கூடவே இலக்கியத்தை கொஞ்சம் விலகி நின்று பார்ப்பவர்களும் கூட. ஆகவே இலக்கியத்தின் புனைவுமொழியின் அழகை அவர்கள் தனியாகக் கவனிப்பார்கள்.  கவித்துவ உத்திகளை முழுமையாக உள்வாங்க முயல்வார்கள். மொழியின் ‘ஒழுக்கை’ விட அதன் ‘செறிவு’தான் இவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.

இவர்கள் பொதுவாக சில இயல்புகள் கொண்டிருப்பார்கள். தத்துவத்திலும் தொன்மங்களிலும் ஈடுபாடு கொண்டிருப்பார்கள். மரபிலக்கிய ஆர்வம் இருக்கும். மரபிலிருக்கும் அழகிய மொழிவெளிப்பாடுகளை நினைவில்கொண்டு சொல்ல முடிபவர்கள். இலக்கியத்தை அன்றாட வாழ்க்கையின் சித்தரிப்புக்கு அப்பால் செல்லும் ஒன்றாகவே எப்போதும் காண்பார்கள். ஆகவே இலக்கியத்தின் உலகியல் நுட்பம், அரசியல் கூர்மை ஆகியவற்றுக்கு மேலாக அது உருவாக்கும் பிரபஞ்ச அர்த்தம், ஆன்மீகமான எழுச்சி சார்ந்து அதிகக் கவனம் கொண்டிருப்பார்கள்.

இக்காரணத்தால் இவர்கள் இலக்கியத்தின் அணிகள், படிமங்கள், கவிருருவகங்களில் அதிகக் கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். ஏனென்றால் இலக்கியம் ஓர் அன்றாட உண்மையை ’மானுட உண்மையாக’  அல்லது ‘பிரபஞ்ச உண்மையாக’ ஆக்கவே இந்த  கவிதைக்கருவிகளைக் கையாள்கிறது.

வெண்முரசு ஒரு முழுமையான செவ்வியலை நோக்கிச் செல்ல முயல்கிறது. ஆகவே அதில் எல்லாவகையான புனைவுக்கும் இடமுண்டு. அதில் குழந்தைக்கதை, சாகசக்கதை, தேவதைக்கதை என எல்லாம் இருக்கும். தொன்மங்கள், படிமங்கள் எல்லாமே  கையாளப்படும். அன்றாடவாழ்க்கையின் நுண்ணிய சித்தரிப்பும் இருக்கும்.

வெண்முரசை வாசிக்கையில் அதில் அன்றாடவாழ்க்கை சார்ந்த நுட்பமான தருணங்கள் வந்துகொண்டே இருப்பதைக் காணலாம். எந்த ஒரு யதார்த்தவாதத் தமிழ்ப்படைப்பைவிடவும் அவை வெண்முரசில் அதிகம் என்று சொல்வேன். மனிதர்களுக்கிடையேயான மனநாடகங்கள். உறவுச்சிக்கல்கள். ஒன்றிலிருந்து ஒன்றாக விரியும் உணர்வுகளின் சிடுக்குகள்.  முழுக்கமுழுக்க என்றென்றும் வாழும் மனிதர்களின் வாழ்க்கைச்சிக்கல்களாகவே நாவல் முன்னகர்கிறது.

யதார்த்தவாதத்தின் வாசகன் கண்முன் தெரிந்துகொண்டிருக்கும் வாழ்க்கையையே புனைவிலும் வாசிக்கமுடியும் என்ற பலவீனம் கொண்டவன் அல்ல என்றால் வெண்முரசை எளிதில் வாசிக்கமுடியும், அதன் நுட்பங்களைக் கண்டடையவும் முடியும். ஆனால் அவனுக்குத் தடையாக இருப்பது அவனை ‘ஆற்றோட்டமாக’ இழுத்துச்செல்லாத செறிவான மொழி. அந்த மொழியையும் அவன் தனியாகக் கவனித்தாகவேண்டும். அது அவனை கற்பனைவாழ்க்கையில் இயல்பகா இருக்கமுடியாது வெளியே இழுத்துக்கொண்டே இருக்கும். அதேபோல அவ்வப்போது வந்துகொண்டே இருக்கும் படிமங்களும், உருவகங்களும், தொன்மங்களும்.அவையும் அவனை வெளியே இழுக்கும்.

அவை கொடுக்கும் மேலதிக அர்த்தம் அவனுடைய வாசிப்புக்குத் தேவை இல்லை. எனவே யதார்த்தவாத வாசகன் மொழிநடையை அவனை அறியாமலேயே குறைந்தபட்ச அர்த்தத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு வாசிக்கப்பழகிவிட்டிருப்பான். வர்ணனைகளையும் விவரணைகளையும் ‘என்ன கதை’ என்று தெரிந்துகொள்ளத் தேவையான அளவு மட்டுமே வாசிப்பான். கவித்துவத்தை முழுமையாக விட்டுவிடுவான்.

முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் ஆகியவற்றின் வழியாக ஒரு யதார்த்தவாத வாசகன் மேலே சொன்ன வாசிப்பினூடாக நகர முடியும். உதாரணமாக துரோணரின் கதையில் வரும் அவரது அடிப்படையான இக்கட்டு அவனை கவரும். அவரது வாழ்க்கை வழியாக அவன் பயணிப்பான். துரோணருக்கும் கிருபிக்குமான உறவின் நுட்பங்களெல்லாம் அவனைச் சென்றடையும்.  அந்த அடையாளச்சிக்கலும் பரிதவிப்பும் இன்றும் நாம் வாழ்க்கையில் காண்பதே. ஆனால் அவர்கையில் எப்போதுமிருக்கும் தர்ப்பை அவரது துயரில் தெய்வவடிவமாக விஸ்வரூபம் எடுப்பதை அவன் தாண்டிச்சென்றுவிடுவான். அது எந்தவகையான மனஎழுச்சியையும் உருவாக்காது

வெண்முரசின் முதல் மூன்றுநாவல்களும் மேலே சொல்லப்பட்ட இருவகை வாசகர்களுக்கும் இடமுள்ளவை. நீலம் இரண்டாம் வகை வாசகனுக்கு மட்டுமே இடமுள்ளது. யதார்த்தவாதத்தின் வாசகன் அதில் வாசிக்க எதுவுமே இல்லை. இதுதான் வேறுபாடு. அதில் கதை இல்லை. கதைத்தருணங்கள் இல்லை. கவித்துவத்தளம் மட்டுமே உள்ளது. மொழிவெளிப்பாட்டின் நுட்பம் வழியாக, படிமங்கள் மற்றும் தொன்மங்கள் வழியாக, மானுடவாழ்க்கையின் சில உச்சகணங்களைத் தொடுகிறது அது. காவியத்தன்மை மட்டுமே அதில் உள்ளது.

நான் பலமுறை சொன்னதுபோல நீலம் வெண்முரசின் ஒரு தனிப்பகுதி. ஓர் இணைப்பு போல. அதற்கும் வெண்முரசின் பொதுவான கதையோட்டத்துக்கும் தொடர்பு இல்லை. வெண்முரசின் அழகியல் கட்டுமானத்துக்கும் அதற்கும் நேரடி தொடர்பு இல்லை.

நீங்களே பார்க்கலாம். வெண்முரசு வரிசையில் நீலம் அளவுக்கு எதிர்வினைகள் வேறெந்த நாவலுக்கும் வரவில்லை. சொல்லப்போனால் மிதமிஞ்சிய எதிர்வினைகள் காரணமாக நானே அதிலிருந்து வெளியேறி பிரயாகைக்குள் நுழையமமுடியாமல் இருக்கிறே--  இன்னும்கூட ஆரம்பிக்கவில்லை. நீலத்துக்கான வாசகர்கள் வேறு. அவர்கள் துரோணரின் கதையில் தர்ப்பையைத்தான் பார்த்திருப்பார்கள். கர்ணன் கதையில் சூரியன் எப்படியெல்லாம் பொருள் அளிக்கிறது என்று பார்த்திருப்பார்கள். வெண்முரசின் படிமங்களையும் மொழியாட்சியையும் அதிகம் கவனித்திருப்பார்கள்.

என்ன பிரச்சினை என்றால் இவர்கள் நான் மீண்டும் மழைப்பாடல் ,வண்ணக்கடல் பாணிக்குச் செல்லக்கூடாது என்கிறார்கள். சென்றால் வெண்முரசு கீழே இறங்கிவிட்டது என்பார்கள். அவர்களுக்கும் இதேதான் பதில். இதில் எல்லாமே உண்டு.

நீலம் வாசிப்பதற்குரிய ஆரம்பகாலத் தடை சிலருக்கு இருக்கலாம். அதன் நடை மொழிமேல் ஒரு கவனத்தை கோரியபடியே இருப்பதுதான் முதல் தடை. அதற்குரிய வழி அதை கதையாக ‘என்ன நடக்கிறது, அடுத்து என்ன?’ என்றவகையில் வாசிக்காமலிருப்பதே. அதை வரிவரியாக கவிதைபோல வாசித்தாலே போதும்.

ஜெ

Monday, September 29, 2014

ஃபேக் இலக்கியம் ஃபேக் சினிமா ஃபேக் அரசியல் குயில்கள் வடிவில் சிறகடிக்கும் காகங்கள்

உயிர் எழுத்து பத்திரிகையில் வெளியான கட்டுரை - செப்டம்பர் மாத கட்டுரை

தமிழக அரசியலையே புரட்டிப்போட்ட நிகழ்வு அது. 1963ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் அலுவல் மொழி சட்ட முன் வரைவு கொண்டுவரப்பட்டது. அதில் ஹிந்தியுடன் ஆங்கிலமும் தொடரலாம் என அதன் மூன்றாவது பிரிவு கூறியது. “ஆங்கிலமும் தொடர்ந்தால் தொடரலாம், இல்லை என்றால் விட்டு விடலாம் என்கிற அர்த்தம் இதில் தெரிகிறது. இப்படி படிப்படியாக ஹிந்தியை திணிப்பீர்கள். இந்த பிரச்சினையே வேண்டாம். ஆங்கிலமும் தொடரலாம் என்பதை ஆங்கிலமும் தொடரும் என மாற்றுங்கள்” என திமுக தலைவர் பேரறிஞர் அண்ணா குரல் எழுப்பினார். தொடரலாம், தொடரும் இரண்டும் ஒன்றுதான் என்றார் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு. அதை திமுக ஏற்கவில்லை. இரண்டும் ஒன்றுதான் என்றால் நாங்கள் சொல்வதுபோல மாற்றுங்கள் என்றார் அண்ணா. ஆனாலும் திருத்தம் செய்யாமல் 27.04.1963இல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழகம் கொதித்தெழுந்தது. இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணா இந்திய அரசியல் சட்டத்தின் 17ஆவது பிரிவை துணிச்சலாக எதிர்த்தார். ஒரு நாட்டின் சட்டத்தை எரிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனாலும் தண்டனை குறித்து எள் முனை அளவும் கவலை இன்றி சட்டத்தை எரித்து சிறை சென்றார் அண்ணா. அதன் விளைவாக போராட்டம் வலுத்ததும், மத்திய அரசு பணிந்ததும், திமுக ஆட்சிக்கு வந்ததும் வரலாறு. அரசியல் சட்ட எரிப்பு என்பது தமிழக வரலாற்றில் முக்கியமான ஒன்று.
இதன் அடுத்த வெர்ஷன் 1986இல் அரங்கேறியது. அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது அகில இந்திய அண்ணா திமுக. ராஜீவ் காந்தியின் மத்திய அரசு இந்திக்கு ஆதரவான கல்விக் கொள்கையை கொண்டுவந்தது. அதை எதிர்த்து பிரதான எதிர்கட்சியாக இருந்த திமுக சட்ட எரிப்பு போராட்டத்தை அறிவித்தது. இங்கு சில சுவையான திருப்பங்களை கவனிக்க வேண்டும். 1963 சட்ட எரிப்பு போராட்டத்தின்போது, தமிழகத்திலும் மத்தியிலும் ஆளும் கட்சியாக காங்கிரஸ் இருந்தது. 1986இல் திராவிட கட்சிகளின் ஒன்றின் சார்பாக முதல்வராக இருந்தவர் எம்.ஜி.ஆர். எதிர்கட்சியாக இருந்ததும் திராவிடக்கட்சிதான் (திமுக). அதன் தலைவராக இருந்தவர் கருணாநிதி. அதாவது காங்கிரஸ் திமுக மோதல் அல்லது தேசியம் தமிழ் உணர்வு மோதல் என்பது புரட்சித் தலைவர் - கலைஞர் மோதலாக உருவெடுத்தது. ஹிந்தி எதிர்ப்பு என்பது அ.இ.அ.தி.மு.க.வுக்கும் உடன்பாடுதான் என்றாலும், திமுகவின் சட்ட எரிப்பை ஓர் ஆளும் கட்சி ஆதரித்தாலும் பிரச்சினை, எதிர்த்தாலும் தமிழ் துரோகி என்பார்கள் என்ற சிக்கல் எம்.ஜி.ஆர். அரசுக்கு ஏற்பட்டது. இதை எப்படி எம்.ஜி.ஆர். எப்படி சமாளிக்கப்போகிறார் என பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கவனித்தனர்.
ஆனால் அவர்கள் சட்ட எரிப்பு போராட்டத்துக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. யாரையும் கைது செய்யவில்லை.. தாராளமாக எரியுங்கள் என்பதுபோல விட்டுவிட்டனர். சட்டத்தை எரிக்க திமுகவினர் கூடியபோதுகூட ஒன்றும் செய்யவில்லை. காவல் துறை சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. எரித்து முடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்தனர். அதன் பின் ஃபார்மலான கைது என்றெல்லாம் நடந்தன. பிரச்சினை முடிந்தது என பலரும் கருதினர். ஆனால் பிறகுதான் எதிர்பாராத திருப்பம் நிகழ்ந்தது.
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இப்படி சட்டத்தை எரித்ததன் மூலம் சட்டத்தைக் காப்போம் என்ற அவர்களது உறுதி மொழியை மீறி விட்டனர். எனவே அவர்களை பதவி நீக்கம் செய்கிறேன் என அப்போதைய சபாநாயகர் பி.எச்.பாண்டியன் அதிரடியாக அறிவித்தார். பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். மிரண்டு போன திமுக, நீதிமன்றம் சென்று தாங்கள் எரித்தது சட்டத்தை அல்ல, வெறும் பேப்பரைத்தான் என்றெல்லாம் வாதிட்டது. மொத்தத்தில் இந்த இரண்டாம் வெர்ஷன் காமெடியாக முடிந்தது. நாங்க விளையாட்டா பேப்பரைக் கொளுத்தினோம்.. நீங்க சட்டம்னு நினைச்சுட்டீங்க.. அய்யோ அய்யோ என்பதுபோல வாதிட்டாலும் சாதகமான தீர்ப்பு வரவில்லை (ஆனாலும் இந்த போராட்டங்களும், அரசு சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானமும் ராஜீவை பின் வாங்கச் செய்தன.)
ஹிந்தி எதிர்ப்பில் திமுகவின் பங்கையோ, கலைஞரின் பங்கையோ குறைத்துக் காட்டுவது நம் நோக்கமல்ல. அரசியல் பேசுவதும் நம் நோக்கமல்ல. இந்தியாவையை அதிர வைத்த அண்ணாவின் சட்ட எரிப்பு போராட்டத்தை நம்மால் எப்படி மறக்க முடியாதோ அதே போல இந்த ஃபேக் சட்ட எரிப்பு போராட்டத்தையும் மறக்க முடியாதல்லவா.. அதுதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.
இந்த போலிகள் எல்லாத் துறைகளிலும் உண்டு. இலக்கியம், சினிமா, பத்திரிகை, ஆன்மீகம், பொறியியல், அறிவியல் என எதை எடுத்தாலும் அதில் போலிகளுக்கு முக்கிய இடம் உண்டு.
போலிகள் என்பது வேறு, .குப்பைகள் என்பது வேறு. குப்பைகள் என்பன அவ்வப்போது தோன்றி மறைவன, போலிகள் என்பன நிலைத்து நிற்பன. நாம் ஒன்றை போலி என சொன்னால் அது ஒருவகை பாராட்டுதான் என்பதை மறக்கக் கூடாது. எத்தனையோ நூல்கள் உலகில் தோன்றுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை கால வெள்ளத்தில் மறைந்து விடுகின்றன. வெகு சில மட்டுமே குறைந்தபட்சம் ஃபேக் நூல்கள் என்ற அளவிலாவது மனத்தில் நிற்கின்றன. தீமை எதில் அதிகம்? போலியிலா அல்லது குப்பையிலா என்பது சுவையான கேள்வி. திரிபுவாதம், வறட்டுவாதம் என்ற இரண்டுமே தீமைதான் என்றாலும் இரண்டுக்கும் இடையே வித்தியாசம் உண்டு என மாவோ விளக்கி இருப்பார். அதுபோன்ற விஷயம் இது.
திரிபுவாதம் அல்லது வலது சந்தர்ப்பவாதம் என்பது முதலாளித்துவ வர்க்க சித்தாந்த ஓட்டமே. இது வறட்டுவாதத்தைக் காட்டிலும் அபாயமானது. திரிபுவாதிகள், வலதுசாரி சந்தர்ப்பவாதிகள், மார்க்சியத்துக்கு சொல்லளவில் சேவை செய்கின்றனர். அவர்கள்கூட 'வறட்டுவாதத்தை'த் தாக்குகின்றனர். ஆனால், அவர்கள் உண்மையில் தாக்குவது மார்க்சியத்தின் மிக அடிப்படை அம்சங்களையே ஆகும். அவர்கள் பொருள்முதல்வாதத்தையும் இயக்கவியலையும் எதிர்க்கின்றனர் அல்லது திரித்துப் புரட்டுகின்றனர். என்கிறார் அவர்.
வறட்டுவாதம் என்பதைவிட திரிபுவாதம்தான் ஆபத்தானது என மாவோ சொல்வதைப் போல குப்பைகளைவிட போலிகள்தான் அதிகம் ஆபத்தானவை என கூறலாம். முதலாளித்துவத்தை எதிர்ப்பதைவிட கடுமையாக போலிகளை எதிர்த்தவர் லெனின் என்பதும் குறிப்பிடத்தக்கது. 'பாட்டாளி வர்க்கப் புரட்சியும் ஓடுகாலி காவுட்ஸ்கியும்' என்ற நூலை படித்தால் இதை உணரலாம்.
சமீபத்தில் 'வேலை இல்லா பட்டதாரி' என்ற படம் வந்தது. அதை எடுத்தவர்கள் அதை உலக சினிமா என நினைத்து எடுக்கவில்லை. அறிவுஜீவிகள் பாராட்ட வேண்டும் என்றும் நினைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், அறிவுஜீவிகளும் பண்டிதர்களும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்றுகூட நினைக்கவில்லை. (ஆனாலும், தேவையே இல்லாமல் ஓரிரண்டு அறிவு ஜீவிகள் பார்த்து விட்டு, அகிரா குரசோவா ரேஞ்சுக்கு படம் இல்லையே, சிட் ஃபீல்ட் சொன்னபடி திரைக்கதை இல்லையே, ராபர்ட் மெக்கீ சொன்னது மேட்ச் ஆகவில்லையே என கண்ணீர் விட்டனர். மன்னிக்கவும், இது உங்களுக்கான படம் அன்று) இந்தப் படத்தை பொருத்தவரை, இன்றைய சூழலில் எப்படி எடுத்தால் வெற்றி பெறும் என கணக்கிட்டு, ஒரு ஃபார்முலாப்படி எடுத்தார்கள். வென்றார்கள். இதில் நாம் கவலைப்பட ஒன்றும் இல்லை. இந்தப் படம் எல்லாம் காலப்போக்கில் மறக்கப்பட்டு விடும். இது போன்ற படங்களால் எல்லாம் தமிழ் சினிமா நெல் முனை அளவுகூட பாதிக்கப்படாது.
இது நல்ல சினிமா அன்று. ஆனால் ஃபேக் சினிமாவும் அன்று. இது எப்படிப்பட்ட படம் என நடித்தவர் முதல் டீ விற்பவர் வரை அனைவருக்கும் தெளிவாக தெரிந்திருக்கிறது.
இப்படி தன் அடையாளத்தை தெளிவாக காட்டாமல், நல்ல சினிமா என்ற பெயரில் வரும் போலிகளையே ஃபேக் சினிமா என்கிறோம். ஓநாயும் ஆட்டுக்குட்டியும், தங்க மீன்கள், குக்கூ, வழக்கு எண் 18/9 என ஃபேக் சினிமாக்களுக்கு ஏராளமான உதாரணங்கள் காட்ட முடியும். சமீபத்திய உதாரணம் சதுரங்க வேட்டை. இவை போன்ற படங்கள்தான் தமிழ் சினிமாவை அழிக்கின்றன.
பயங்கரமான கிரிமினல்களை ஒரு பெண் தன் அன்பால் திருத்தும் புதிய பாதை டைப் க்ளிஷேக்கள், அனைவரையும் இரக்கமின்றி கொன்றுதள்ளும் வில்லன், ஹீரோவை மட்டும் பொறுமையாக வசனம் பேசி (சிலசமயம் துப்பாக்கியை ஹீரோவிடம் கொடுத்து முடிந்தால் கொன்று பார். ஹா ஹா என்பார்) தப்பிக்க வாய்ப்புக் கொடுப்பது, சர்வ வல்லமை பொருந்திய, எதிர்ப்பே இல்லாத ஹீரோ என்ற பாத்திர அமைப்பு, அடுத்தடுத்து கால் செய்தால், ரிசீவரை எடுத்து கீழே வைத்து ஒட்டுக்கேட்க உதவும் அந்தக் கால அசட்டுப் பாத்திரங்கள் (இந்தப் படத்தில் அந்த பணக்கார அசட்டு கதாபாத்திரத்திடம் ஒரே ஒரு போன்தான் இருக்கிறது.. அதையும் ஆஃப் செய்து விடுகிறார்) என பழைய படம் போல இருக்கிறது இந்தப் படம். ஆனாலும் மாற்று சினிமா என சிலரால் முன் வைக்கப்படுகிறது. ஒரு பத்திரிகை இந்தப் படத்துக்கு 50க்கு மேல் மதிப்பெண் வ்ழங்கி தன்னை அடையாளம் காட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. அந்தப் பத்திரிகை அவ்வப்போது இப்படி அசிங்கப்படுவது வாடிக்கையான ஒன்றுதான். முன்பு ஒருமுறை ரஜினியின் சந்திரமுகி திரைப்படமும், கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படமும் ஒரே காலகட்டத்தில் வெளியாகின. அந்தப் பத்திரிகையின் ஒரே இதழில் இரு படங்களின் விமர்சனங்களும் வெளிவந்தன. அதில் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தை ஆகா ஓகோ என பாராட்டி அதிக மதிப்பெண்களையும், சந்திரமுகி படத்துக்கு குறைவாகவும் மதிப்பெண்களையும் வழங்கியது. ஆனால் பெரும் வெற்றியையும், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது சந்திரமுகி படம்தான். (அந்த இதழ் எந்த அடிப்படையில் இப்படி மதிப்பெண் வழங்குகிறது என விவரித்து எழுத உயிர் எழுத்தின் தரம் அனுமதிக்காது. ஃபேக் விமர்சனத்தின் ஓர் உதாரணமாக மட்டுமே இங்கே அதை கவனிக்க வேண்டும்)
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும். ஒரு படத்தை பிடித்தால் பார்க்கிறோம். பிடிக்காவிட்டால் புறக்கணிக்கப் போகிறோம். இதில் போலிகளை இனம் கண்டு என்ன ஆகப்போகிறது? நியாயமான கேள்விதான். ஆனால் இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. போலிகளின் ஆரவாரத்துக்கு மத்தியில் ஆரண்ய காண்டம் போன்ற நல்ல படங்கள் கவனிப்பாரின்றிப் போய்விடும் அவலம் அடிக்கடி நிகழ்கிறது. நல்லவேளையாக ஆடுகளம், புதுப்பேட்டை, பருத்தி வீரன், நான் கடவுள், கடல், ஜிகிர்தண்டா போன்ற நல்ல படங்களுக்கு இந்த அவலம் நிகழவில்லை. ஆயினும் போலிகளைப் பற்றிய விழிப்புணர்வு மிக அவசியம்.
இந்த விழிப்புணர்வு சினிமாவைவிட இலக்கியத்தில் அதிகம் தேவை. காரணம் ஒரு போலி சினிமா பார்ப்பதால், பெரிய இழப்பு ஒன்று நிகழாது. இன்னொரு சந்தர்ப்பத்தில் நல்ல சினிமா ஒன்றை பார்த்துக்கொள்ளலாம். ஆனால், இலக்கியம் அப்படி அன்று. நம் ஊரில் புத்தக வாசிப்பு வெகு குறைவு. இதை குறையாகச் சொல்லவில்லை. நம் சூழல் அப்படி இருக்கிறது. நாம் ஒரு வருடத்தில் படிப்பதே ஐந்து புத்தகங்கள்தான் இருக்கும். குப்பை என்பது தெளிவாகத் தெரிந்துவிடுவதால், எப்படியும் அவற்றை தவிர்த்து விட்டுத்தான் இந்த ஐந்தை தேர்ந்தெடுப்போம். இந்த ஐந்தில் நான்கின் இடத்தை போலிகள் பிடித்து விட்டால், படித்தே ஆக வேண்டிய சிறந்த நூல்களை நம் வாழ்நாளில் படிக்க முடியாமலேயே போய்விடும். நம் வாழ்நாள் எல்லை அற்றது என்றால் பிரச்சினை இல்லை. போலிகள், அசல்கள் என எல்லாவற்றையும் படிக்கலாம். ஆனால் நம் குறுகிய வாழ்நாளில் அனைத்தையும் படிக்க முடியாது. அப்படியே படித்தாலும் ஒரு ஃபேக் நூலை படிக்கிறோம் என்ற விழிப்புடன் படிப்பது அவசியம். அப்போதுதான் அடுத்த கட்டத்தை நோக்கி நாம் நகர முடியும்.
ஃபேக் இலக்கியம் என்றால் என்ன ? போலியான ஒன்றை நம்மை நம்பச் செய்வதே ஃபேக் இலக்கியம் என அழைக்கப்படுகிறது. ஒரு நாவல் வெளிவரும்போது உணர்ச்சி வசப்பட்டு சிலர் அதைப் பாராட்டி விடுவார்கள். மீள் வாசிப்பின்போது அந்தப் பாராட்டை திரும்பப் பெறுவது உண்டு. எனவே ஒரு நாவலின் உண்மைத்தன்மையை அறிய கொஞ்ச காலமாவது அதற்கான எதிர்வினைகளையும், அந்த நாவலையும் தொடர்ந்து கவனிக்க வேண்டி இருக்கிறது. ஃபேக் நாவல் அல்லது சிறுகதை என தனி ஒருவரின் தீர்ப்பை வைத்து முடிவு செய்ய முடியாது.
உதாரணமாக ஜி.நாகராஜனின் எழுத்துகள் அவை வெளிவந்த காலகட்டத்தில் முக்கியமானவைதான். அதுவரை பேசாத கதைக்களனை பேசியதால் அதிர்ச்சி அலைகள் உருவாகின. அந்த அடிப்படையில் பாராட்டப்பட்டது. சிலர் எதிர்க்கவும் செய்தனர். அந்த சர்ச்சைகள் இல்லாத இன்றைய நிலையில் அவை எப்படி மதிப்பிடப்படுகின்றன என்பதே முக்கியம். ஒரு நாவல் வெளிவரும்போதே, சென்சார் போர்டு போன்ற ஓர் அமைப்பு ஃபேக் நாவல் என தரம் பிரிப்பது இயலாத ஒன்று .
அவரது பூர்வாசிரமம் என்ற கதையை பார்க்கலாம். பாலியல் தொழிலாளி ஒருத்தியை தேடிச் செல்கிறான் ஒருவன். அவளுடன் பேசி விட்டு, சுகித்து விட்டு கிளம்புகிறான். அவளை அவனால் மறக்க முடியவில்லை. சில மாதங்கள் கழித்து மீண்டும் அவளைப் பார்க்கிறான். அவள் இல்லை. அவளுக்குத் திருமணம் ஆகி போய்விட்டதாகவும் இப்போது பாலியல் தொழில் செய்வதில்லை என்றும் சொல்கிறாள் அவள் அம்மா. அவன் ஏமாற்றம் அடைகிறான். அவளுக்குப் பாவமாக இருக்கிறது. சரி வந்தது வந்துட்ட, நீ ஏமாறவேண்டாம், என்னை எடுத்துக்கொள் எனச் சொல்லி அவனை சந்தோஷப்படுத்தி, வாடிக்கையாளர் சேவையை கச்சிதமாக முடித்து அனுப்புகிறாள். அதற்காக காசுகூட வாங்குவதில்லை. இலவச சேவையாம்.
இந்தக் கதையை படித்தால், பாலியல் தொழிலாளிகளின் கஷ்டங்கள், வலிகள் என எதுவும் நமக்குப் புரிவதில்லை. அவர்கள் என்னவோ மனப்பூர்வமாக இதைச் செய்வது போலவும், கஸ்டமர் சேடிஸ்ஃபேக்ஷன் மிக முக்கியம் எனக் கருதும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனம்போல நடப்பதாகவும் காட்டியுள்ளார். ஒரு பெரிய பிரச்சினை ஒன்றை நீர்த்துப் போகச்செய்து ரொமாண்ஸ் செய்கிறது இந்த்க் கதை.
ஆனால் படிக்க சுவையாகத்தான் இருக்கிறது. கண்டிப்பாக குப்பை என ஒதுக்கிவிட முடியாது. மொழி ஆளுமை, சித்திரிப்பு என அழகாக உள்ளது. எங்காவது இது உண்மையாக நடந்திருக்கவும்கூடும். ஆனால் அது கலாபூர்வமான அனுபவத்தை தரவில்லை. கதை ஆசிரியரை நாம் எந்த விதத்திலும் குறை சொல்லவில்லை. ஆனால் இது போன்ற ஃபேக் கதைகளில் தேங்கிவிட்டால், உண்மையான படைப்புகளைப் படிக்க நேரம் கிடைக்காமல் போய்விடும்.
உதாரணமாக, ஒரு சிறுகதையில் ஒரு பாலியல் தொழிலாளியின் வலியை அற்புதமாக படைத்துக்காட்டி இருப்பார் மாப்பசான். தமிழ் சூழலில் எத்தனைபேர் அதை படித்திருப்பார்கள்.
ஃபிரெஞ்சு, ஜெர்மன் யுத்த காலகட்டத்தில் சில ஃபிரெஞ்சு குடியானவர்கள் சிலர் வேறொரு ஊருக்கு புறப்பட்டுச் செல்கிறார்கள். அவர்களுடன் பாலியல் தொழில் செய்யும் பெண் ஒருத்தியும் செல்கிறாள். அவர்களுக்கு தன்னிடம் இருந்த உணவுப் பொருட்களை கொடுத்து மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்கிறாள். வழியில் அவர்கள் ஜெர்மன் அதிகாரியிடம் சிக்கிக்கொள்கின்றனர். அந்த அதிகாரி, அவர்களை விடுவிக்க வேண்டும் என்றால் அந்தப் பெண் தன்னுடன் படுக்க வேண்டும் என்கிறான். அவள் கோபமாக மறுக்கிறாள். மற்றவர்களும் அவளை ஆதரிக்கின்றனர். அதிகாரியோ பிடிவாதமாக இருக்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்கள் மனம் மாறுகின்றனர். அதிகாரியின் ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்தி சம்மதிக்கச் செய்கின்றனர். அவள் தன் தன்மானத்தை விட்டுக்கொடுத்து, எதிர்தரப்பு அதிகாரியுடன் படுத்து, அனைவருக்கும் விடுதலை வாங்கித் தருகிறாள். கிளம்பியதும் அவர்கள் நன்றி மறந்து, அவர்கள் கணவான்கள் போலவும் அவள் மட்டும் அற்பப் பிறவி போலவும் நடந்து கொள்கின்றனர். அவர்களுக்கு உணவும் விடுதலையும் அளித்த அவளுடன் பேசுவதும் இல்லை. தமது உணவை அவளுடன் பகிர்வதும் இல்லை. கதையில் இறுதியில் அவளுடன் சேர்ந்து நாமும் கண்ணீர் சிந்துகிறோம்.
இந்தக் கதையை படித்தால் அன்றைய சமூகச் சூழல் (அந்தப் பயணிகள் அன்றைய சமூகத்தை பிரதிபலிக்கும்படி சித்திரிக்கப்பட்டுள்ளனர்), தேச சூழல், புறக்கணிப்பின் வலி என மறக்க முடியாத அனுபவமாக நம்முள் சேகரமாகிறது. பலவீனமான ஒருவர் மீதான சமூகத்தின் புறக்கணிப்பு என்ற அர்த்தத்தில் இது நடந்த இடத்தையும் காலத்தையும் மீறி ஒட்டு மொத்த பார்வையை அளிக்கிறது. இந்த அனுபவம் பூர்வாசிரமம் கதையில் கிடைப்பதில்லை. இதுதான் அசலுக்கும் போலிக்குமான வித்தியாசம்.
நாளை மற்றுமொரு நாளே, குறத்தி முடுக்கு போன்ற ஆக்கங்களை படிக்கும்போது, நமக்குள் எதுவும் நிகழ்வதில்லை. வாசகன் குறுக்கீட்டுக்கோ, கற்பனைக்கோ எந்த இடைவெளியும் இல்லை. ஆனால் வடிவ நேர்த்தி, சுவையான நடை, வித்தியாசமான பாத்திரங்கள் என இருப்பதால் இவற்றை புறக்கணிக்கவும் முடியாது. கண்டிப்பாக இவற்றை வாசிக்க வேண்டும். ஆனால் ஃபேக் இலக்கியத்தைப் படிக்கிறோம் என்ற பிரக்ஞையும் வேண்டும்.
குறத்தி முடுக்கு நாவலில் தங்கம் என்ற பெண் தன் கணவனால் வஞ்சிக்கப்பட்டு பாலியல் தொழில் செய்து வருகிறாள். அவளை ஒருவன் உள்ளன்போடு நேசிக்கிறான். திருமணம் செய்யவும் ஆயத்தமாக இருக்கிறான். அவளோ கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என தன் கணவனுடனேயே வாழப் போய்விடுகிறாள். இப்படி 'கற்புக்கும்' கணவனே கண் கண்ட தெய்வமாக வாழ்வதற்கும் புதிய விளக்கம் அளிப்பது சராசரி தமிழ் மனதுக்கு குதூகலம் ஏற்படுத்தினாலும், அதில் யதார்த்தமும் இல்லை. நமக்கு எந்த வித உணர்வெழுச்சி ஏற்படுவதும் இல்லை.
நாளை மற்றுமொரு நாளே விளிம்பு நிலை மக்களைப்பற்றிப் பேசுகிறது. ஆனால், அவர்களது வலி, சந்திக்கும் ஏமாற்றம், அவர்களது மகிழ்ச்சி என எதுவும் நம் மனத்தில் பதிவதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அற்புதத் தெறிப்புகள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக ஒரு சாகச நாவலாகவே நம் மனத்தில் பதிகிறது. கதையின் வடிவத்திலும் நடையிலும், சுவையான சம்பவங்களிலும் காட்டப்படும் அக்கறை சமூக பாதிப்பு என்பதில் காட்டப்படவில்லை. நவீனத்துவ காலகட்டத்தில் உருவான ஒரு சார்பு எதார்த்தவாதமே நாவல் முழுக்க விரவி இருக்கிறது. கதையில் வரும் அனைத்து பாலியல் தொழில் பெண்களும் மனைவி என்ற அந்தஸ்தை பெரிதாக கருதுகிறார்கள். ஓர் ஆண் தான் அவர்களது இழி நிலைக்கு காரணமாக இருந்தாலும், ஆணின் பிடியில் இருந்து அவள் தப்ப நினைப்பதில்லை. என்ன இருந்தாலும் ஆணுடன் இருப்பதே பாதுகாப்பு என்ற சிந்தனை மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. தன்னுடன் வாழும் மீனாவை யாருடனாவது ஒப்படைத்து அவளை செட்டில் செய்வதற்கு கந்தன் அப்படி உருகுகிறான். மகள் திருமணத்துக்காக உருகும் யதார்த்த உலக தந்தை என்ற கான்சப்ட் லேசாக மாற்றப்பட்டு இருக்கிறது .அவ்வளவுதான். அதாவது நவீனத்துவம் என்ற பழைய சரக்குதான், போத்தல் மட்டும் மாறி இருக்கிறது. நாவல் என்பது திட்டவட்டமான முடிவை அளிக்கத் தேவையில்லை. அளிக்கவும் கூடாது. ஆனால் ஒட்டுமொத்த பார்வையை அளிக்க வேண்டும். இந்த நாவலைப் பொருத்தவரை சுவையாக படைக்கப்பட்ட ஓர் ஆவணமாகவே நின்று விடுகிறது.
செய்தித் தாளைப்போல நடப்பதை அப்படியே பதிவு செய்வது இலக்கியம் அல்ல. அதுவரை சொல்லப்படாத வாழ்க்கையை பதிவு செய்தது அன்றைய சூழலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இப்போது படிக்கையில் நமக்கு ஓர் ஒட்டுமொத்த பார்வை தருகிறதா, உணர்வெழுச்சி ஏற்படுத்துகிறதா என்பது கேள்வி.
உதாரணமாக புயலிலே ஒரு தோணி நாவல் நடக்கும் கதைக் களனும், காலமும் நமக்கு அன்னியமாக இருக்கலாம். ஆனால் அந்தக் கதை நமக்கு இன்றும்கூட புதிய அர்த்தங்களைத் தருகிறது
கடல் கூத்து எவ்வளவு நேரம் நீடித்தது என கணக்கிட முடியவில்லை. தொடங்கியபோதோ, முடிந்தபோதோ யாரும் கடிகாரம் பார்க்க்கவில்லை. பார்த்தபோது, எல்லா கடிகாரங்களும் நின்று போய் இருந்தன. என்பது போன்ற வரிகள், வெட்டப்பட்ட தலைகளுக்கு தலை சீவிவிடும் காட்சி என நம்மை சொற்களுக்கு அப்பாற்பட்ட இடத்துக்கு இழுத்துக் கொண்டுச் செல்கிறது.
மொழியின் ஊடாகவே மனிதன் சிந்திக்கிறான், உணர்கிறான், வாழ்கிறான். ஆனால் மொழி என்பது வெறும் ஊடகம்தான் என்பது அவன் ஆழ் மனத்துக்கு தெரிந்திருக்கிறது. மொழிக்கு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு கண்களுக்குப் புலப்படாமல் இருக்கும் ஒன்றை உணர விழைகிறான். அதற்கு மொழி உதவ வேண்டும் என எதிர்பார்க்கிறான் என்கிறார் ஜெர்மானிய அறிஞர் வில்ஹெம் வான் ஹம்போல்ட். மொழி ஆளுமை, செறிவான நடை ஆகியவை முக்கியம்தான். ஆனால் அவை மட்டுமே போதாது . மொழி மூலம் மொழிக்கு அப்பாற்பட்ட இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். புயலிலே ஒரு தோணியில் நடக்கும் இந்த ரசவாதம் நாளை மற்றுமொரு நாளேயில் நடக்கவில்லை.
விளிம்பு நிலை வாழ்க்கையை பதிவு செய்வது என்பது வேறு விஷயம். அந்தப் பதிவால் என்ன நிகழ்ந்தது என்பதே முக்கியம். உதாரணமாக காலத்தின் சுருக்கமான வரலாறு என்ற ஸ்டீவன் ஹாக்கின்ஸ் நாவல் முக்கியமான அறிவியல் பதிவு. ஆனால் அது நம்மை எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. யார் படித்தாலும் ஒரே விதமாகத்தான் புரியும் . ஆனால் ழார் பத்தாய் நாவலான கண்ணின் கதை அப்படி அன்று. நம்மை அது ஏதோ செய்து விடுகிறது. படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் தெரிகிறது. சிலருக்கு அது பாலியல் கதையாகத் தோன்றலாம். சிலருக்கு போரடிக்கலாம். சிலருக்கு வேறோர் அனுபவம் கிடைக்கலாம். நூறு பேர் படித்தால் நூறுவித கருத்துகள் சொல்லக்கூடும். வெறும் பதிவில் இது நிகழாது.
இலக்கியம், படைப்பாற்றல் என்பது யதார்த்தத்தை பதிவு செய்வது மட்டுமா.. ஒரு சம்பவத்தைக் கவனியுங்கள்
சோவியத் சோஷலிஸ்ட் குடியரசுகள் ஒன்றியத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். லெனின் அதை பார்வையிட வந்திருந்தார். பலரும் தம் கைத்திறமையைக் காட்டிக் கொண்டிருந்தனர். வண்ணங்கள் பூத்துக் குலுங்கும் பூங்கா, ஆர்ப்பரிக்கும் அருவி, சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சி, பனி அடர்ந்த புல்வெளி என ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் மிஞ்சும்வண்ணம் வரைந்து கொண்டு இருப்பது அவருக்கு மகிழ்ச்சி அளித்தது. ஆனால் ஒரு சிறுவனின் ஓவியம் அவரை திகைக்க வைத்தது. அவன் ஓவியம் வரையாமல் கறுப்பு நிறத்தை தீட்டிக்கொண்டு இருந்தான். என்ன செய்கிறான் என விசாரித்தார். வானத்தை வரைகிறேன் என்றான் பையன். லெனினுக்கு குழப்பம். தம்பி, வானத்தை நீ பார்த்ததில்லையா. ஊர்ந்து செல்லும் மேகம், நட்சத்திரம், சிறகடிக்கும் பறவை, ஒளி வீசும் நிலா என்றல்லவா வானம் இருக்கும் என்றார். அவன் அவரை தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தான். சென்றார். அது ஒரு சேரி போன்ற பகுதி. ஒழுங்கான சாலை இல்லை. சுகாதாரமற்ற சூழல். தாங்க முடியாத துர் நாற்றம். குறைந்தபட்ச வசதிகளுடன் ஒரு வீடு. உள்ளே அழைத்துச் சென்றான். என் ஜன்னல் வழியாகப் பாருங்கள் என்றான். ஒரு தொழிற்சாலை கரும்புகையை கக்கியபடி சூழலை மாசு படுத்திக்கொண்டு இருந்தது. இத்தைகைய சூழலில் வாழும் ஒருவனுக்கு வானம் அழகு கொஞ்சும் வெளியாகவோ தோன்றும்? கலை என்பது இருப்பதை பிரதிபலிப்பதல்ல. இருப்பதன் பொருளை சொல்வது என்கிறார் அரிஸ்டாட்டில். வானம் எப்படி இருக்கிறது என்பதை பதிவு செய்ய ஒரு புகைப்படக் கருவி போதும். ஆனால் வானம் எப்படி தோன்றுகிறது என்பதை தன் பார்வையில் சொல்லி அதன் மூலம் ஒரு தரிசனத்தை அளிக்க ஒரு கலைஞனால்தான் முடியும். அந்த சிறுவனில் ஒரு கலைஞனைக் கண்டார் லெனின். அவனை தனியே அழைத்து சென்று சிறப்புப் பயிற்சிகள் அளிக்க உத்தரவிட்டார். அந்தச் சிறுவன் பிற்காலத்தில் சோவியத் யூனியனுக்கான அடையாளச் சின்னம் உருவாக்கும் அணியில் பெரும்பங்கு ஆற்றினான் என்பதெல்லாம் வரலாறு.
வாழ்க்கையை, சமகால சூழலை பதிவு செய்வது தவறு என்பதல்ல நாம் சொல்வது. ஆவணப்படுத்துதல் என்பது முக்கியமான பணிதான். அதையும்கூட கலைப்பூர்வமாக செய்பவர்கள் நம்மிடையே உண்டு. ஆனால் பதிவு செய்தலுக்கு இலக்கிய பிரதிக்கும் இடையேயான வித்தியாசத்தைப் பற்றிய பிரஞ்ஞை மிகவும் முக்கியம். ஆழி சூழ் உலகு நாவல் கடல் வாழ்க்கையை பதிவு செய்வதால் மட்டும் முக்கிய நூலாக கருதப்படவில்லை. அந்த வாழ்க்கையின் ஊடாக நிலவும் காதல், காமம், துரோகம், பிரிவு என மானுட வாழ்வை அங்கே பிரதிபலிக்க செய்வதால்தான் அது முக்கிய நாவலாகிறது. சோ.தர்மனின் கூகை நாவல் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வை செய்தித்தாள்போல பதிவு செய்வதில்லை என்பது கவனிக்கத்தக்கது. வலுவான உடல் அமைப்பும், பலமும் கொண்ட கூகை, தன் பலம் அறியாமல் துரத்தப்படும் வாழ்வியல் அபத்தத்தை குறியீடாக மாற்றுவதன் மூலம் கலைப்படைப்பாக உருவெடுக்கிறது. சி.சு.செல்லப்பாவின் வாடிவாசலை படித்தால் கிராம அனுபவமோ, ஜல்லிக்கட்டு அனுபவமோ இல்லாத ஒருவனுக்குக்கூட அவனுக்கான பிரத்யேக அனுபவம், பார்வை கிடைத்து விடுகிறது. மிருகத்தை அதாவது இயற்கையை அடக்கி ஆள முனையும் ஆதி மனிதனின் இச்சையை நாவலில் கண்டடைய முடியும். அதே நேரத்தில் ஜல்லிக்கட்டுக்கான நுண் விபரங்கள், அன்றைய வாழ்வியல், தொழில் நுட்ப பயிற்சிகள் என ஆவணமாகவும் திகழ்கிறது. ஆவணமாக்கல் மட்டுமே கலையாகாது என்பதே நாம் சொல்வது. உதாரணமாக அகிரா குரசேவாவின் ரோஷமான் திரைப்படத்தில் மழை ஒரு முக்கிய பாத்திரமாக வருகிறது. அங்கு மழை பெய்கிறது என்ற தகவலை பதிவு செய்வதன்று அவர் நோக்கம். இயற்கை எதனாலும் பாதிக்கப்படாமல் அனைத்தையும் தொடர்ந்து கவனித்துக்கொண்டு அதன்போக்கில் சென்றுகொண்டே இருக்கிறது என்ற குறியீடாகவே மழை பயன்பட்டுள்ளது. எனவே அந்த மழை அனைவருக்கும் பொதுவான ஒரு மொழியாக மாறி விடுகிறது.
ஃபேக் எழுத்துகளை படைக்கும் நிர்ப்பந்தம் எப்படி ஒரு படைப்பாளிக்கு உருவாகிறது? உதாரணமாக பாலகுமாரனை பார்க்கலாம். அவர் பின் நவீனத்துவம், மெட்டா ஃபிக்ஷன், இருத்தலியல் என்றெல்லாம் கவலைப்படுவதில்லை. ஆன்மீகம், விழிப்புணர்வு என அவருக்கு தெரிந்ததை எழுதிக்கொண்டு இருக்கிறார். திடீரென யாராவது புகுந்து, இவ்வளவு பேசும் நீங்கள் தலித்திய நாவல் ஏன் எழுதவில்லை. அவர்கள் மேல் உங்களுக்கு அக்கறை இல்லையா எனக் கேட்கிறார்கள் என வைத்துக்கொள்ளுங்கள். அவர் சற்று யோசிப்பார். சரி நாமும் ஒரு தலித்திய நாவல் எழுதுவோம் என நினைத்து மேலோட்டமாக ஒரு நாவல் எழுதுவார். தலித்துகள் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்களது அவமானங்கள், அவர்களது வீரம் செறிந்த வரலாறு, அவர்களது தொன்மங்கள், நம்பிக்கைகள் போன்றவை எதுவும் தெரியாமல் எழுதப்படும் நாவல் ஃபேக் நாவலாக உருவெடுக்கிறது. இத்தகைய நாவல்களில் தொழில் நுட்பங்களும் சித்திரிப்புகளும் சரியாக இருக்கலாம் . ஆனால் இலக்கியத்தின் மற்ற கூறுகளான உணர்வெழுச்சி, நிகழ்வாழ்க்கை அனுபவம் போன்றவை இந்த நாவல்களில் கிடைக்கவே கிடைக்காது. முன் விளையாட்டு, கண்டு ரசித்தல், கேட்டு அனுபவித்தல், சுவைத்து மகிழல், மென்மையாக கிள்ளுதல், இதமாக கடித்தல், பதமாக தட்டுதல் என எல்லாமே முயக்கத்துக்கு அவசியம்தான். ஆனால் உச்ச நிலை எனும் ஆர்கசம் எய்தப்படாவிட்டால், அது முழுமை ஆகாது அல்லவா. அதுபோல ஃபேக் இலக்கியங்களில் முழுமை உணர்வு கிடைக்கவே கிடைக்காது. மொழி அழகு, செறிவார்ந்த நடை போன்றவை இருந்தால்தான் மனதை ஈர்க்க முடியும். நாவலை படிக்க வைக்க இது அவசியம் .ஆனால் இவை மட்டுமே நாவலின் வெற்றிக்கு போதாது. மொழியின் மூலம் மொழியற்ற உணர்வை, உணர்வெழுச்சியை அடைய செய்வதே நாவலின் படைப்பாற்றலின் வெற்றி. சாகச நாவல்கள், பல்ப் எழுத்துகளுக்கு இது தேவை இல்லை. இந்த உணர்வெழுச்சியை எழுப்பாத எழுத்துகள் இலக்கியப் படைப்புகள் என முன்வைக்கப்படும்போதுதான் அவை ஃபேக் என அழைக்கப்படுகின்றன.
சுந்தரராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் நாவல் ஃபேக் எழுத்துக்கு இன்னொரு சான்றாகும். வெளி நாட்டவர் இந்தியாவுக்கு இன்ப சுற்றுலா வந்துவிட்டு மேலோட்டமாக கருத்து சொல்வார்களே. அந்த பாணியிலான நாவல் இது. இதை பின் நவீனத்துவ நூலாக சிலர் முன்வைக்கிறார்கள். பின் நவீனத்துவம் என்பது புனைவை புனைவாகவே முன் வைக்கிறது. மெட்டா ஃபிக்ஷன் எனச் சொல்லப்படும் பாணியை கையாள்கிறது. லட்சியக்கனவுகளை நிராகரித்து பகடி செய்கிறது. தன்னையே நிராகரிக்கிறது. ஆனால் ஜேஜே சில குறிப்புகள் என்ற நாவலில் ஓர் எழுத்தாளனின் ஆளுமையை மையமாக வைத்தே நாவல் சுழலுகிறது. இந்த ஹீரோயிசமோ கடைசியில் அந்த எழுத்தாளனின் வீழ்ச்சிக்காக கண்ணீர் சிந்தும் சோக காவியமோ பின் நவீனத்துக்கு முற்றிலும் எதிரானது. இந்த காரணங்களால்தான் அந்த நாவல் வந்தபோதே பின் நவீனத்துவவாதிகளால் இந்த நாவல் புறக்கணிக்கப்பட்டது. பின் நவீனத்துவம் என்பதை தவிர்த்துவிட்டு ஒரு படைப்பாகவும் அது நம் மனதை கவரவில்லை. அது குறிப்பிட்ட காலத்துக்கான முக்கியமான படைப்பு என்ற பெயரை ஒரு புதிய வடிவத்துக்காக பெறுகிறதே தவிர காலம் கடந்த படைப்பாக ஏற்க இயலாது. இருத்தலிய கோட்பாட்டை சொல்ல முயன்று இருக்கிறார் நாவலாசிரியர். அதில் வென்றாரா என்றால் அதுவும் இல்லை என்றே சொல்ல வேண்டும். அலுப்பூட்டும் அளவுக்கு ஜேஜே கதாபாத்திரத்தின் சிந்தனைகள் ஆக்கிரமித்துள்ளன. அந்த சிந்தனைகளை எப்படி வந்தடைந்தான், அந்த சிந்தனைகளை செயல்படுத்த என்ன செய்தான் என்பதற்கு மண் சார்ந்து, காலம் சார்ந்து எந்தப் பின்னணியும் இல்லை. அவனுடைய எதிர்தரப்பு என்பதும் இல்லை. சமூகம் நம் மேல் சுமத்தும் விழுமியங்கள், மனரீதியான அழுத்தங்கள் போன்றவற்றுக்கு எதிரான தனி நபர்வாதத்தை நாவல் முன் வைக்கிறது. ஆனால் இது குறித்த முரணியக்க பார்வையோ, இருதரப்பு விவாதங்களோ இல்லவே இல்லை. அதை இன்றைய வாசகன் ஒருவன் படித்தால் அவன் அந்தப் பிரதியை எந்த விதத்திலும் இன்றைய கால அடிப்படையில் புரிந்துகொள்ளவே முடியாது. ஜே.ஜே. என்பவரைப்பற்றிய துதியாக மட்டுமே நாவல் நின்று விடுகிறது.
ஆனாலும் ஊடக பலம், சு.ராவின் ஆளுமைத் திறன், அற்புதமான மொழி வளம், கவிப்பூர்வமான சில சித்திரிப்புகள், அவருடைய சீடர்களின் ஆதரவு போன்றவை காரணமாக அதன் புகழ் இன்றும் சற்றும் மங்காமல் நீடிக்கிறது. இவர்களில் நாவல் வெளிவந்த புதிதில் சாரு அதை எதிர்த்து சிறு பிரசுரம் வெளியிட்டார். க.நா.சு., தி.க.சி. போன்ற பல விமர்சகர்களும் நாவலை நிராகரித்தனர். அப்போது நாவலைப் பாராட்டிய ஜெயமோகன் காலப்போக்கில் அவரும் எதிர்ப்பு ஜோதியில் கலந்துவிட்டார்.
நகுலன், அசோகமித்ரன், தஞ்சை பிரகாஷ், சிங்காரம் என பலர் இருக்கும்போது ஃபேக் நாவல்களை ரசிக்கும் போக்கை புரிந்துகொள்ள 'மார்க்ஸ் பிறந்தார்' (எழுதியவர் ஹென்றி வோல்கோவ், முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ) என்ற நூலில் இருந்து ஒரு மேற்கோளை கவனியுங்கள்.
“எளிய மனம் கொண்டவர்கள் ( ஃபிலிஸ்டைன்கள்) எப்போதும் மூலத்தை விட கேலி சித்திரத்தையே விரும்புவார்கள். புயற்காற்று அவர்களுக்கு பீதியை கொடுக்கிறது. ஆனால் அதற்கு பிறகு மிஞ்சும் புழுதி அவர்களிடம் குதூகலம் ஏற்படுத்தும்“.
இப்படி ஃபேக் எழுத்துக்கு உதாரணங்களை கொடுத்துக்கொண்டே போகலாம். ஜே.ஜே. சில குறிப்புகளையும், ஜி.நாகராஜன் படைப்புகளையும் மட்டும் இங்கே குறிப்பிட காரணம் இருக்கிறது. ஜே.ஜே. சில குறிப்புகளை முன் மாதிரியாகக்கொண்டு புற்றீசல் போல பல 'பின் நவீனத்துவ' நாவல்கள் வெளிவந்தன. அவை ஃபேக் என்ற அடையாளத்தைக்கூட பெற முடியாமல் காலமென்னும் பெருவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டன. அவற்றின் பெயர்களை எல்லாம் இது போன்ற கட்டுரைகளில் நினைவுபடுத்தினால்தான் உண்டு.
அதேபோல ஜி.நாகராஜனை முன் மாதிரியாகக்கொண்டு அதிர்ச்சி மதிப்பீடுகளை நோக்கமாகக் கொண்டு புற்றீசல்கள் கிளம்பின என்பதும் வரலாறு. எனவேதான் ஒரு சோற்றுப் பதமாக இரண்டை மட்டும் இங்கு குறிப்பிடவேண்டி இருந்தது.
இலக்கியம் என்பதில் ஃபேக் என்பது ஆபத்து என்றால் செய்திகளில் ஃபேக் என்பது இன்னும் மோசமான ஆபத்தாகும். உதாரணமாக காசா பிரச்சினையை எடுத்துக்கொள்வோம். இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் என்ற இயக்கத்துக்கும் மோதல் என செய்திகள் வெளியாகி நம் மனத்தில் பதிந்துள்ளது. ஹமாஸ் இயக்கத்தை பல நாடுகள் தீவிரவாத இயக்கமாகவே கருதவில்லை என்பதே உண்மை. காசா பகுதியை ஆட்சி செய்து வரும் அவர்கள் தம் பகுதி தாக்கப்படும்போது எதிர்த்துப் போராடுகிறார்கள். அதை அந்த இயக்கத்தின் மோதலாக சித்திரிப்பதே தவறு. உதாரணமாக கார்கிலில் பாகிஸ்தான் அத்துமீறியபோது, இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. அதை பிஜேபி படை பதிலடி கொடுத்தது என எழுதினால் அது தவறான தகவல் அல்லவா? அப்போது பிஜேபி ஆட்சி செய்தாலும், போரில் ஈடுபட்டது பிஜேபி தீவிரவாதிகள் அல்லர். தம் பகுதியை பாதுகாக்க இந்தியா எடுத்த நடவடிக்கை அது. அது போல, இஸ்ரேலின் தாக்குதலை தடுக்க எடுக்கப்படும் முயற்சிகளை, இஸ்ரேலுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையேயான மோதலாக செய்தி வெளியிடுவது ஃபேக் ரிப்போர்ட்டிங் ஆகும் .
சமீபத்தில் யுக்ரேனில் ஒரு பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அனைவரும் அவசர அவசரமாக அது போராளிகளின் (பிரிவினைவாதிகளின் ?) வெறிச்செயல் என செய்தி வெளியிட்டனர். ரஷ்ய அதிபர் புடின் பயணம் செய்த விமானத்தை சுட்டு வீழ்த்த யுக்ரேன் செய்த சதியாகவும் இருக்கலாம் என்பதை பலர் சுட்டிக்காட்டவில்லை. காலப்போக்கில் இது போன்ற ஃபேக் செய்திகளே நம் மனத்தில் பதிந்து விடுகின்றன. தமிழ் மீனவர்கள் சிறைப்பிடிப்பு (இந்திய மீனவர்கள் இல்லை), ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் (சீக்கிய மாணவர்கள் இல்லை) போன்றவையும் சிறந்த உதாரணங்கள் ஆகும்.
ஃபேக் என்பதில் அதிகம் பாதிக்கப்பட்ட இலக்கிய வடிவம் கவிதை எனலாம். குறிப்பாக ஹைக்கூ அதிகம் பாதிக்கப்பட்டு இன்று மூன்று வரிகளில் எழுதப்படும் எல்லாமே ஹைக்கூ என அழைக்கப்பட்டு வருகிறது.
"வங்கியில் நகை அடகு வைத்தேன்
மீட்டு விட்டேன்.
வங்கி ரிசப்ஷன் அழகியிடம் மனதை அடகு வைத்தேன்
மீட்க முடியவில்லை..
சுதந்திரம் தினம்
கொண்டாடினார்கள்
சிறைக்கைதிகள்
போலீஸ் காவலுடன்
பவனி வந்தார்
உலகை காக்கும் கடவுள்"
இப்படி எழுதி கவிதை என்கிறார்கள். இவற்றையாவது விடலைத்தனமான கவிதை எனலாம் . ஆனால் இலக்கியம் சார்ந்து செயல்படும் பல கவிஞர்களேகூட ஃபேக் கவிதைகளே எழுதி வருகிறார்கள். பட்டியல் கவிதை, ஃபார்முலா கவிதை, சமூக சீர்திருத்த கவிதை, கிசுகிசு பாணி கவிதை என எழுதி தமிழில் கவிதைக்கான இடமே இல்லாமல் செய்து விட்டார்கள். வாய்ப்பாடு கவிதை ஒன்றை தனது சிறந்த கவிதை என நம்பும் ஓர் இலக்கியவாதி, இலக்கியக் கூட்டங்களில் தவறாமல் அந்தக் கவிதையை சொல்லி பார்வையாளர்களை கலக்கத்துக்கு ஆளாக்குவதுண்டு.
கட்சிகளைப் பொருத்தவரை தமிழ்நாட்டில் ஃபேக் கட்சிகள் என எதுவும் இருப்பதாக சொல்ல முடியாது. எல்லா கட்சிகளின் நோக்கங்களும் மக்களுக்கும் கட்சியினருக்கும் தெளிவாக தெரிந்துள்ளன. ஜாதி நலன், குடும்ப நலன், மத நலன் என அவர்கள் நோக்கங்களை தெரிந்து வைத்துக்கொண்டேதான் எல்லா கட்சிகளுக்கும் ஆதரவு அளிக்கின்றனர். இவற்றில் இடதுசாரிக் கட்சிகளை ஃபேக் கம்யூனிச இயக்கங்கள் என ஒரு வாதம் உண்டு . ஆனால் வெகுஜனவாதமாக இல்லை. அகில இந்திய அளவில் ஆம் ஆத்மி கட்சி மீது ஃபேக் கட்சி என்ற குற்றச்சாட்டு உண்டு.
பொழுதுபோக்கு, மதம், ஜாதி, கட்சி நலன்களுக்காக நடத்தப்படும் பத்திரிகைகள் என்ற அடையாளத்துடன் நடத்தப்படும் பத்திரிகைகள் ஆபத்தானவை அல்ல. ஆனால் நடு நிலை, இலக்கியம் என்ற அடையாளங்களுடன் நடத்தப்படும் சார்பு நிலை பத்திரிகைகள் ஆபத்தானவை. அது போன்ற ஃபேக் இலக்கிய பத்திரிகைகள் இங்கு ஏராளம் உண்டு. ஒரு குறிப்பிட்ட கட்சி பிரமுகரின் நிதி உதவியுடன் பத்திரிகை ஆரம்பிக்க ஒரு கவிஞர் இன்னொரு பத்திரிகையின் ஆசிரியராக இருந்துகொண்டே முயற்சித்ததாகவும், அந்த பிரமுகரின் அன்பை சம்பாதிக்கும்பொருட்டு தான் ஆசிரியராக இருந்த பத்திரிகை சந்திப்புகளின்போது அலைபேசியை இயக்கத்தில் வைத்து ரகசியங்களை வெளியே கடத்தியதாகவும், அந்தப் பத்திரிகை உரிமையாளர் குற்றம் சாட்டினார். அந்த குற்றச்சாட்டு சரியான முறையில் எதிர்கொள்ளப்படவில்லை. ஆனால் அந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்வதுபோல அந்த பிரமுகர் சார்ந்த கட்சியிலேயே அந்த கவிஞர் ஐக்கியமாகி, அந்த இலக்கிய பத்திரிகையை கட்சி பத்திரிகையாக்கி விட்டது ஒரு பின் நவீனத்துவ காமெடி.
இவற்றில் எல்லாம் இருக்கும் போலிகள் ஒட்டுமொத்த சமுதாயத்தைப் பாதிக்கின்றன ஆனால் ஃபேக் பெண்ணியம் என்பது பெண்களை மட்டுமே அதிகம் பாதிக்கிறது. பெண்ணியம் சார்ந்த எழுத்துகள், காத்திரமான பணிகள் என ஒரு தரப்பு இயங்குவது மனத்துக்கு நிறைவளிக்கும் விஷயம். ஆனாலும் சில துறைகளில் ஃபேக் இருப்பதும் உண்டு. ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காரன் பாதிக்கப்பட்டால், அந்த ஜாதிக்காரர்கள் ஒன்றாக சேர்ந்து ஆதரவளிப்பார்கள். மதம், கட்சி என பலவற்றின் அடிப்படையில் இப்படி சேர்வார்கள் . ஆனால் ஒரு பெண்ணுக்கு பிரச்சினை என்றால் சக பெண் எழுத்தாளர், சக பெண் மருத்துவர் என எந்த அடிப்படையிலும் பெண்கள் ஒன்றாகச் சேர்வதில்லை.. ஆனால் அனைவரும் பெண்ணியம் பேசக்கூடியவர்கள் என்பது வினோதம். ஆங்கில மொழி பயன்பாட்டில் ஆணாதிக்க வார்த்தைகள் பெரும்பாலும் நீக்கப்பட்டு விட்டன. சேர்மன் என்பது சேர்பெர்சன் என மாறிவிட்டது. ஆக்ட்ரஸ் போன்ற வார்த்தைகள் ஆக்ட்டர் என மாறி விட்டன. எண்ணம் உறுதியாக இருந்தால், அவன் தான் எண்ணியதை நிச்சயம் அடைவான் என்பது போன்ற வாக்கியங்கள் வந்தால், அவன் / அவள் அடைவான் / அடைவாள் என இருபாலரையும் எழுதுகின்றனர். அல்லது புத்தக முன்னுரையில், இந்தப் புத்தகத்தில் அவன் என வருவது அவள் என்பதையும் குறிக்கும் என தெளிவாக சொல்லி விடுகின்றனர். இதெல்லாம் ஆங்கில சூழலில் பெண்ணிய இயக்கங்கள் எழுப்பிய குரலின் விளைவாகும். ஆனால், தமிழ் சூழலில் இன்னமும் நடிகை, ஆசிரியை, தலைவி, கவிதாயினி என்றே மரியாதைக்குறைவாக குறிப்பிட்டு வருகின்றனர். இதை மாற்ற பெண்ணிய இயக்கங்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவில்லை. செல்வி, திருமதி என்ற பிரிவை இன்னமும் ஒழிக்கவில்லை. கற்பழிப்பு என்ற சொல் இன்னும் பயன்பாட்டில் உள்ளது. சில பெண்ணியவாதிகள் குரல் கொடுப்பதை மறுக்கவில்லை. ஆனால் ஃபேக் பெண்ணியவாதிகளே அதிகம் என்பதால் எதுவும் மாறவில்லை. பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பதில் ஃபேக் பெண்ணியவாதிகளின் போலித்தனம் இன்னும் மோசமானது. தேர்தலில் பெண்களுக்கான ஒதுக்கீடு கேட்பார்கள். ஆனால் தமது கட்சிகளில் அவர்களாகவே முன்வந்து இட ஒதுக்கீடு கொடுக்க வலியுறுத்துவதில்லை.
பெண் சிசுக்கொலை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் போன்ற இன்னும் சில தீவிரமான விஷயங்கள் உள்ளன. ஆனால் அவை பெண்ணியவாதிகள் மட்டும் குரல் கொடுக்க வேண்டிய விஷயங்கள் அல்ல. பொதுவான பிரச்சினைகள் என்பதால் அவற்றை இங்கு குறிப்பிடவில்லை.
இப்படி பல தளங்களிலும் செயல்படும் போலிகளை ஒழிப்பது சாத்தியம் இல்லை என்றாலும் போலிகளைப் பற்றிய விழிப்புணர்வு சாத்தியமே. அதற்கு நம் மதிப்பீடுகளும் பார்வையும் உண்மையாக இருந்தால்போதும்.

உலகப்கோப்பை கால்பந்து: உள்ளங்களை ஒன்றிணைத்த உன்னதம்

உயிர் எழுத்து  இதழில் வெளியான கட்டுரை  - ஆகஸ்ட் மாத கட்டுரை

ஆஃப்சைடு (Offside, 2005, இயக்கம், எரெஸ் டட்மார் & கய் நாட்டிவ், Erez Tadmor & Guy Nattiv, இஸ்ரேல் ) என்கிற ஏழு நிமிடமே ஓடக்கூடிய குறும்படத்தை யாரும் மறந்து இருக்க முடியாது. எல்லை காக்கும் பணியில் இரு ராணுவ வீரர்கள். ஒரு சின்ன கையடக்கமான வானொலியில் கால்பந்து நேர்முக வர்ணனை கேட்டபடி ரோந்து வந்துகொண்டு இருக்கிறார்கள். உலகக்கோப்பை இறுதிப் போட்டி. ஆட்டம் அனல் பறக்கிறது. சிக்னல் அவ்வப்போது பிரச்சினை செய்தாலும், வானொலியை அப்படி இப்படி திருப்பி வர்ணனையை கேட்கிறார்கள். அப்போது எல்லைத் தடுப்பு வேலியில் எதிர்தரப்பு ராணுவ வீரர்கள் இருவரை பார்த்து விடுகிறார்கள். இரு தரப்பு துப்பாக்கிகளும் சுடுவதற்கு தயாராகின்றன. துப்பாக்கிகள் குறி வைத்தாலும், வானொலி வர்ணனை தொடர்கிறது. அந்த எதிர்தரப்பு வீரர்களும் அந்த வர்ணனையை ஆவலுடன் கேட்க ஆரம்பிக்கிறார்கள். எல்லைக்கோடு, அரசுகள், கட்சிகள், மொழி, சமுதாயம், மதம், துப்பாக்கி என பிரமாண்டமான பல விஷயங்கள் இரு தரப்பையும் பிரிக்கின்றன. அந்த சின்னஞ்சிறு வானொலிப்பெட்டி இரு தரப்பையும் இணைக்கிறது. மேட்ச் என்ன ஆகுமோ என இரு தரப்பு வீரர்களும் பதைபதைக்கின்றனர். வானொலிப்பெட்டி தவறுதலாக கீழே விழும்போது அனைவருமே பதறுகின்றனர். ஒரு வீரன், துப்பாக்கி குறி வைப்பதை நீக்கிவிடாமல், கால்களாலேயே வானொலியை மீண்டும் இயங்கச் செய்யும்போது, அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். வானொலி இணைக்கிறது. துப்பாக்கி பிரிக்கிறது. இந்த இரண்டும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்துகின்றன. கடைசியில் எது வென்றது என்பது கிளைமேக்ஸ். துப்பாக்கியா வானொலியா!!
கால்பந்துக்கு இப்படி அனைவரையும் இணைக்கும் ஆற்றல் உண்டு. இந்த இணைப்பு ஆற்றலை பல நாடுகளும் உணர்ந்துள்ளன. குறிப்பாக அன்றைய சோவியத் அரசு நன்கு உணர்ந்து இருந்தது. அன்றைய அதிபர் ஸ்டாலின் கால்பந்தில் ஆர்வம் காட்டி வந்தார். கம்யூனிச அகிலத்தின் தேசிய விளையாட்டாக கால்பந்து விளங்கியது என்றால் மிகையாகாது. இந்தியாவிலும்கூட கம்யூனிசம் வலுவாக உள்ள கேரளாவிலும், வங்காளத்திலும் (மட்டும்) கால்பந்து பிரபலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 1947 முதல் 1989 வரை கம்யூனிச நாடுகளில் ஒன்றாக விளங்கிய ஹங்கேரி, அந்தக் காலகட்டத்தில் கால்பந்தின் தன்னிகரற்ற சக்தியாக திகழ்ந்தது. இந்த நூற்றாண்டின் சிறந்த போட்டி என வரலாற்றில் இடம்பெற்ற அந்த ஆட்டம் 1953இல் இங்கிலாந்தில் நடந்தது. அதில் 90 ஆண்டுகளாக சொந்த மண்ணில் தோல்வியே காணாத இங்கிலாந்தை வீழ்த்தியது ஹங்கேரி. அந்த நாட்டில் கம்யூனிசம் வீழ்ந்தபின், கால்பந்தும் அங்கு நலிவடைந்தது வரலாறு. 1990இல் இருந்து இந்த ஆண்டு வரை (2014) உலக கோப்பை எதற்கும் தகுதி பெறாதது ஒரு காவிய சோகம்.
சோவியத் யூனியன் எந்த அளவுக்கு கால்பந்தில் ஆர்வம் காட்டியது என்பதற்கு ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். உள் நாட்டுப் பிரச்சினைகள் முற்றி, யூனியனே கலைந்து போகும் நிலையில் இருந்த 1990ஆம் ஆண்டில், அவ்வளவு பிரச்சினைகளுக்கும் மத்தியில் உலககோப்பை போட்டியை தனது நாட்டில் நடத்த ஆர்வம் காட்டியது சோவியத் யூனியன். இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் போட்டியிட்டது. போட்டியில் இருந்து மற்ற நாடுகள் விலகிய நிலையில் இத்தாலியும் சோவியத் யூனியனும் மட்டுமே கடைசியில் போட்டியில் இருந்தன. வாக்கெடுப்பில் போட்டியை நடத்தும் வாய்ப்பு இத்தாலிக்குக் கிடைத்தது. அந்தமுறை சோவியத் யூனியனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்து இருந்தால், சோவியத் யுக வரலாற்றில் அது ஒரு திருப்புமுனையாக இருந்திருக்கக்கூடும். அடுத்த உலகக் கோப்பை 2018இல் ரஷ்யாவில்தான் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 1990 வேறு. 2018 என்பது வேறு.
இப்படி அரசியல்ரீதியாக, பண்பாட்டுரீதியாக ஒவ்வொரு நாட்டுடனும் ஒவ்வொரு விதமாக கால்பந்து கலந்துள்ளது. நம் ஊரில் கால்பந்து முதன்மை விளையாட்டல்ல. இந்தியா உலக கோப்பைக்கு தகுதி பெறுவதும் இல்லை. ஆனால் வெவ்வேறு காரணங்களுக்காக நம் ஊரிலும் ரசிக்கப்படுகிறது. ஏன் ரசிக்கப்படுகிறது என்பதை சற்று ஆராய்ந்தால் ரசிக்கத்தக்க சில விஷயங்களைக் காண முடியும்.
ஜோர்ஜ் அமடோ, போர்ஹேஸ், ஜூலியோ கொர்த்தசார், கப்ரியேல் கர்ஸியா மார்கோஸ், இசபெல் அலண்டே, ப்யூந்தஸ், மரியோ பர்கஸ் யோசா, நெரூதா, ஆக்டோவியா பாஸ் என லத்தீன் அமெரிக்க இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டுள்ளவர்கள் சிலருக்கு லத்தீன் அமெரிக்க நாடுகளான பிரஸீல், அர்ஜெந்தீனா, கொலம்பியா, சிலே போன்றவற்றின் மீது ஒருவித ஈடுபாடு ஏற்பட்டு அந்தந்த நாடுகள் ஆடும் விளையாட்டுகளை ரசிக்க ஆரம்பிப்பார்கள் . இலக்கிய வாசகர்கள் எல்லோரும் இப்படி ரசிப்பார்கள் எனச் சொல்ல முடியாது.
இன்னும் சிலருக்கு தென் அமெரிக்க நாடுகளுக்கும் நமக்கும் இருக்கும் சில ஒற்றுமைகள் அவர்கள்பால் ஓர் ஈடுபாடு ஏற்படுத்தும். பெரும்பாலான தென் அமெரிக்க நாடுகளின் அலுவல் மொழி அவர்களது பூர்விக மொழி அன்று. 'வந்தேறி' மொழியான ஸ்பானிஷ் அல்லது போர்ச்சுகீசிய மொழிதான் அங்கு கோலோச்சுகிறது. இப்படி பண்பாட்டு, மொழி மோதல்கள் அல்லது கலப்புகள் அங்கு அதிகம். அவற்றை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. நம் மொழியை, நம் பண்பாட்டை தக்க வைத்துக்கொள்ள போராடி வரும் அனுபவம் நமக்கு இருப்பதால் அங்கு நடந்துள்ள மாற்றங்களை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அங்கு நிலவும் வறுமை, அரசியல் பிரச்சினைகள், ஏகாதிபத்தியங்களின் தலையீடு போன்றவையும் உணரக்கூடிய விஷயங்கள்தான். ஆகவே ஆப்ரிக்க அணிகளைவிட, வெள்ளைக்கார ஐரோப்பிய அணிகளைவிட தென் அமெரிக்க அணிகள் நமக்கு நெருக்கமாக உள்ளன.
ஒரு குறிப்பிட்ட அணியை ரசிக்க இன்னும் பல சுவையான காரணங்கள் உள்ளன. என் நண்பர் நிர்மலின் குழந்தை தீவிர ஜெர்மனி ஆதரவாளர். காரணம்? குழந்தைகளின் மனம் கவர்ந்த ரேப்பன்சல் இளவரசி ஜெர்மனியை சேர்ந்தவளாயிற்றே !!
மெஸ்ஸி, நெய்மார், கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரோபன், தாமஸ் முல்லர், அலெக்சிஸ் சான்செஸ் என சில வீரர்களை சிலருக்குப் பிடிக்கும். எனவே அவர்கள் சார்ந்த அணிகளை ஆதரிப்பார்கள் சிலர்.
என் தோழி ஒருவர் ஸ்பெயின் அணி வீரர் ஜெரார்ட் பிக்கின் தீவிர ரசிகை. ஸ்பெயின் முதல் சுற்றுடன் வெளியேறியதுடன் அந்தத் தோழிக்கும் உலக கோப்பை ஆர்வம் போய்விட்டது. உலக கோப்பையை சாக்காக வைத்து அவருடன் நேரம்கெட்ட நேரத்தில் போன் செய்து பேசலாம் என்ற என் கனவு இப்படியாக கலைந்து போய்விட்டது. பட்டர்ஃபிளை எஃபக்ட் என்பதை ஸ்பெயின் அணி எனக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு போனதுதான் இந்த உலக கோப்பையில் அந்த அணியின் ஒரே சாதனையாகும்.
இதுபோன்ற காரணங்களை தவிர்த்துவிட்டு, உண்மையிலேயே கால்பந்து விளையாட்டை கிளப் போட்டிகளில் இருந்து ஐரோப்பிய சாம்பியன்ஷிப், ஆஃப்ரிக்க தேசிய சாம்பியன்ஷிப், கோப்பா அமெரிக்கா என எல்லாவற்றையும் ரசித்து தகுதி வாய்ந்த அணிகளின் ரசிகர்களாக இருப்பவர்களும் கணிசமாக இருக்கிறார்கள். இவர்களில் பலர் கால்பந்து விளையாட்டு வீரர்களாக இருப்பதும் உண்டு. பீலே, மாரடோனா, ராபர்ட்டோ பாஜியோ, பெபட்டோ, ரொமரியோ என பாரம்பரியமாக ரசிப்பவர்களும் உண்டு .
இப்படி பல தரப்பினரையும் ஒன்றாக இணைப்பதுதான் கால்பந்தின் கவர்ச்சியாகும். இன, மத, மொழி வேற்றுமைகள் எல்லாம் மறந்து, காலம் இடம் அழிந்து ஒன்றாக மாறுவதை கால்பந்து மட்டுமே நடத்திக்காட்டுகிறது.
அதற்கேற்ப இந்த ஆண்டு போட்டிகள் விறுவிறுப்பாக அமைந்து இருந்தன. ஆட்டத்தை மந்தமாக்கும் காரணிகள் கண்டறிப்பட்டு அவ்வப்போது சரி செய்யப்படுவதால், விறுவிறுப்பு என்பது பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது என்று சொல்ல முடியும்.
உதாரணமாக முன்பெல்லாம் வெற்றிக்கு 2 புள்ளிகளும், டிரா ஆனால் இரு அணிகளுக்கு ஒரு புள்ளியும் கொடுக்கப்பட்டன. இதனால் பல அணிகள் தற்காப்பு ஆட்டம் ஆடி டிரா செய்து ஒரு புள்ளியை கைப்பற்ற முயன்றன. இதை தடுப்பதற்காகத்தான், வெற்றிக்கு 3 புள்ளிகள் கொடுக்கும் முறை வந்தது. டிரா ஆனால் ஒரு பாயிண்ட்தான் கிடைக்கும். இரண்டு புள்ளிகள் போய்விடும். இந்த அச்சத்தால் பல அணிகளும் முனைப்புடன் ஆடத் தொடங்கவே, அதிக கோல்கள், குறைந்த டிரா என ஆட்டங்கள் களை கட்ட ஆரம்பித்தன.
அதேபோல, கடைசி க்ரூப் ஆட்டங்களை ஒரே நேரத்தில் நடத்தும் முடிவும் நல்ல பலன்களைத் தந்து வருகிறது. கடைசி ஆட்டம் டிரா ஆனால் இரண்டு அணிகளும் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும் என தெரியவந்தால், இரு அணிகளும் ஒரு புரிதலுக்கு வந்து முனைப்பின்றி ஆடி டிரா செய்து வந்தன. தற்போது ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால், கடைசி ஆட்டம் முடிந்த பின்புதான் தகுதி பற்றிய விபரங்கள் தெரியும். எனவே வெற்றி பெறவே அனைத்து அணிகளும் முயல்கின்றன.
இப்படி தேவையான மாற்றங்கள் அவ்வப்போது செய்யப்பட்டு வருகின்றன. ஐரோப்பிய அணிகள் தென் அமெரிக்க மண்ணில் உலகக் கோப்பையை வென்றதில்லை என்பதற்கு, அதீத வெப்ப நிலை காரணமாகச் சொல்லப்பட்டது. இதற்குத் தீர்வாக இந்தமுறை குளுமைக்கான இடைவேளை என்ற புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி ஆட்டத்தின் முதற்பாதி இரண்டாம் பாதியில், சற்று இளைப்பாறிக்கொள்ள தலா 3 நிமிட இடைவேளை கொடுக்கப்படும். (கிட்டத்தட்ட 30ஆவது நிமிடத்திலும் 75ஆவது நிமிடத்திலும்) . இது எல்லா போட்டிகளுக்கும் கிடையாது. அந்தந்த போட்டிகள் நடக்கும்போது அதிக வெப்ப நிலை நிலவினால் மட்டுமே இந்த இடைவேளை கொடுக்கப்படும். க்ரூப் ஆட்டங்கள் எதற்கும் இந்த இடைவேளை கொடுக்க வேண்டிய நிலை வரவில்லை. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நெதர்லாந்தும் மெக்சிக்கோவும் மோதியபோது, கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக இந்த இடைவேளை கொடுக்கப்பட்டது.
ஆசிய அணிகள், ஆஃப்ரிக்க அணிகள், வட அமெரிக்க அணிகள் என ஒவ்வொரு பிரிவிலும் சில அணிகள் சிறப்பாக ஆடின. ஆனால் பெருவாரியாக ஆதிக்கம் செலுத்தியது ஐரோப்பிய அணிகளும், தென் அமெரிக்க அணிகளும்தான்.
ஐரோப்பிய அணிகள் ஆட்டத்திற்கும் தென் அமெரிக்க அணிகளின் ஆட்டத்திற்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் இருக்கிறது. ஐரோப்பிய அணிகளின் ஆட்டம் இலக்கணம் மீறாமல், மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து நேர்த்தியாக வழங்கப்பட்டும் பாரம்பரிய நடனம் போன்றது. தென் அமெரிக்க அணிகளின் ஆட்டம், இலக்கணத்தை மீறி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் களியாட்டம் போன்றது. அதிரடியும் ஆவேசமும் மிக்க சாம்பா நடனத்தின் விளையாட்டு வடிவம்தான் கால்பந்து என்பது பிரஸீல் போன்ற நாடுகளின் பார்வையாகும். இதில் எந்த முறை சிறந்தது என்பது அவரவர் பார்வையை பொருத்தது.
உதாரணமாக, கலவி என்பது இன்பமான விஷயம்தான், இதை முறைப்படி செய்வது ஒருவித சுகம். சிலவகை மூச்சுப் பயிற்சிகள் செய்தால் வெகு நேரம் வரை உடலுறவில் ஈடுபடலாம். பிராணவாயுவை சரியான முறையில் உலவச்செய்வதன் மூலம் வெகு நேரம் வரை கலவி சுகத்தை அனுபவித்துக்கொண்டே இருக்கலாம். முயக்கத்தில் ஈடுபட உரிய நேரத்தை தேர்ந்தெடுத்து, அதற்கு முன் மூச்சை ஒழுங்குபடுத்தி, முதலில் பேசிக்கொண்டு இருந்துவிட்டு, பிறகு விழிகளால் அழகைப் பருகி, அதன்பின் நாசிகளால் மணத்தை முகர்ந்து, காதல் மொழிகளை உதிர்த்து, மெதுவாக தொட்டு (எந்த வரிசையில் தொட வேண்டும் எவ்வளவு நேரம் தொட வேண்டும், எவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் வரையறைகள் உண்டு), லேசான கிள்ளல், மிதமாக கடித்தல், தட்டுதல், துன்பம் போன்ற இன்பம் தரும் அடுத்தடுத்த செயல்கள் என முறைப்படி செய்தால், அதை விட வேறு இன்பம் இல்லை.
மாசறு பொன்னே வலம்புரி முத்தே
மாசறு பொன்னே. வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
காசறு விரையே கரும்பே தேனே
யரும்பெறற் பாவா யாருயிர் மருந்தே
அரும்பெறல் பாவாய் ஆர் உயிர் மருந்தே
என கவிதை பாடி, வீணை இசைத்தல் போல பூரண சுகத்தை முறைப்படி பெறுவது ஒரு விதம்.. இதுதான் ஐரோப்பிய விளையாட்டு பாணி. திட்டமிட்ட ராணுவத் தாக்குதல் போன்றது
இப்படி எல்லாம் முறைப்படி யோசிக்கவெல்லாம் தேவை இன்றி, காமம் ஒரு கொண்டாட்டமாக, ஒரு களியாட்டமாக, ஒரு பித்தேறிய நிலையாக, காதலின் வெளிப்பாடாக பீறிட்டு தன்னை வெளிப்படுத்தி, தன்னையே மறக்கசெய்து, ஆண் பெண் என்ற இருமை அழிந்து அந்த சங்கமம் மட்டுமே கோலோச்சும் சந்தர்ப்பங்களும் உண்டு. அங்கு கவிதைகள் தேவைகள் இல்லை. காமத்தின் உச்சத்தில் வெளிப்படும் அர்த்தம் அற்ற சிணுங்கலே அங்கே கவிதை. ஆபாச முனகலே அங்கு தேசிய கீதம். எச்சிலே அமிழ்தம். உச்சகட்டமே சுப முகூர்த்தவேளை. பற்குறிகளும், நகக்குறிகளுமே பிரசாதம். எப்போது என்ன செய்ய வேண்டும் என அந்த இரண்டு உடல்களே அறியும். அந்த சங்கமம் எங்கும் எழுதி வைக்கப்பட்ட முறையில் நிகழ்வதில்லை. அங்குதான் முதல் முதலாக எந்த திட்டங்களும் அறிவுரைகளும் இன்றி தன்னிச்சையாக நிகழ்கிறது.
முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்கு தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தை சொல்லென்றால் சொல்லுமாறு எஞ்ஞனமே
என்கிறாரே திருமூலர். சொல்லித்தந்து வருவதல்ல மன்மதக்கலை. இயல்பான எதிர்பாராத தன்மையே அதன் சிறப்பு என்கிற கோணமும் இருக்கிறது.
இது தென் அமெரிக்க விளையாட்டு பாணி. குறைந்தபட்ச திட்டம் அதிகபட்ச திறன் என்ற முறையிலான அதிரடி.
ஐரோப்பிய முறையில் நேர்த்தியை, கட்டுக்கோப்பை ரசிக்கலாம். தென் அமெரிக்க முறையில் எதிர்பாரா ஆச்சர்யங்களை ரசிக்கலாம். எப்படி பாஸ் செய்வார்கள், எப்படி கோல் போடுவார்கள் என்பது அணி வீரர்களுக்கே தெரியாது. அந்தந்த கணத்தில் தீர்மானிப்பதுதான்.
ஐரோப்பிய பாணி என்பது கனிந்த காதலன் ஒருவன் காதலிக்கு முத்தம் கொடுப்பது போன்றது. அவளுக்கு எங்கு எப்படி முத்தம் கொடுத்தால் அவளுக்கு அதிகபட்சம் இன்பம் கிடைக்கும் என கணக்கிட்டு, பீத்தோவனின் சிம்பனி இசைபோல துல்லியமாக அதை நிகழ்த்துவது.
தென் அமெரிக்க பாணி என்பது ஒரு காதலன் தன் முதல் முத்தத்தை தன் காதலியிடம் இருந்து பெறுவதைப் போன்றது. அங்கு இருப்பது இளமையின், காதலின், வாழ்க்கையின் கொண்டாட்டம், அந்த கணத்தில் வாழும் நிலை ஆகியவை மட்டுமே.
இதனால்தான் தென் அமெரிக்க நாடுகளில் கால்பந்து என்பது விளையாட்டாக மட்டும் அல்லாமல் வாழ்க்கையாக, ஒரு மதமாக, ஓர் அடையாளமாக, உயிராக, உணர்வாக இருக்கிறது. கால்பந்து அங்கு இலக்கியமாகவும் இருக்கிறது என்பது எனக்கு ஆச்சர்யம் அளித்தது. ஒருமுறை சாருவுடன் பேசும்போது இதைக் குறிப்பிட்டார்.
உருகுவாய் எழுத்தாளரான எதுவார்தோ கலியானோ லத்தீன் அமெரிக்க இலக்கிய உலகில் முக்கியமான ஒருவராவார். அவரது SOCCER IN SUN AND SHADOW மிகவும் முக்கியமான நூலாக கருதப்படுகிறது. ஏழ்மை, வன்முறை, அரசியல் பிரச்சினைகள் என ஆயிரம் தடங்கல்களுக்கு மத்தியில் கால்பந்து அங்கு எப்படி வழிபடப்படுகிறது என்பதை அறிய விரும்புபவர்கள் கண்டிப்பாக இந்த நூலைப் படிக்க வேண்டும்.
அதேபோல சிலே நாட்டின் அரசியல் மாற்றத்தை அடிப்படையாக வைத்து சிலே நாட்டு எழுத்தாளர் அந்தோனியா ஸ்கார்மேத்தாவால் எழுதப்பட்ட I DREAMT THE SNOW WAS BURING என்ற நூலும் மிக முக்கியமான நூலாகும்.
இப்படி வெவ்வெறு பாணியிலான அணிகள் இறுதி போட்டிக்கு வந்தது கால்பந்து ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்தது. ஐரோப்பாவின் சார்பில் ஜெர்மனி, லத்தீன் அமெரிக்காவின் சார்பில் அர்ஜெந்தீனா என இரு அணிகள் இறுதிக்கு வந்தன என்றால் இரண்டுமே தகுதியான அணிகள்தான். இவை இரண்டுமே ஆட்டத்தில் சற்று வித்தியாசத்தையும் கூடுதல் திறனையும் காட்டியதால் மட்டுமே இந்த அளவுக்கு முன்னேற முடிந்தது. இன வேற்றுமைக்கு பேர்போன ஜெர்மனியில் பல இன மக்களுக்கும் இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக, மெசூத் அசில் துருக்கி பின்புலத்தை சார்ந்தவர். சாமி கிடீரா துனிசியா வம்சாவழியைச் சேர்ந்தவர். ஜெரோம் போவாத்தீங் கானா வம்சாவழியைச் சேர்ந்தவர். இப்படி ஜெர்மனி தன்னை மாற்றிக்கொண்டது அந்த அணிக்கு பலனளித்தது.
இந்த உலக கோப்பையை பொருத்தவரை, புதுமைகளை முயன்று பார்த்த அணிகளுக்கு வெற்றி கிடைத்தது. உதாரணமாக நெதர்லாந்து - கோஸ்த்தா ரிக்கா ஆட்டம் எந்த தரப்புக்கும் வெற்றி தோல்வி இன்றி பெனால்ட்டி ஷூட் அவுட் முறையில் முடிவு செய்யப்பட இருக்கிறது என்ற நிலை வந்தபோது, அதுவரை நன்றாக பணியாற்றிய கோல்கீப்பரை (ஜேஸ்பர் சிலிசன்) வெளியே அழைத்துக்கொண்டு டிம் க்ரூல் என்ற கோல் கீப்பரை பெனால்ட்டி ஷூட் அவுட்டை சந்திக்க அனுப்பினார் பயிற்சியாளர் வேன் கால். இந்த யுக்திக்கு வெற்றி கிடைத்தது. டிம் க்ரூல் இரண்டு கோல்களைத் தடுத்து அணியை அரை இறுதிக்கு எடுத்துச் சென்றார்.
ஆனால் மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளாத அணிகள் ஆரம்பத்திலேயே வெளியேறின. டிக்கி டாக்காவை நம்பிய ஸ்பெயின், தனது அலுத்துப்போன 4-2-3-1 வியூகத்தை (வீரர்கள் விளையாடும் நிலை) விடாப்பிடியாக கையாண்ட இங்கிலாந்து போன்ற பாரம்பரிய சிறப்பு பெற்ற அணிகள் முதல் சுற்றிலேயே வீழ்ந்தன.
இதை நெதர்லாந்து அணியின் வேன் கால் யுக்தியுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ஒவ்வொரு வியூகம் அமைத்தார். ஐந்து ஆட்டங்களுக்கு அவர் அமைத்த ஐந்து வியூகங்களை கவனியுங்கள் 5-3-2, 5-2-3, 4-3-3, 3-4-3, 3-3-1-3 மற்றும் 3-5-2.
ஜெர்மனியின் சீரான வெற்றிகளுக்கு காரணம் இந்த தகவமைக்கும் பண்புதான் என்றால் மிகை இல்லை. ஸ்ட்ரைக்கர் இல்லாமல்கூட வியூகம் அமைத்தது அந்த அணி. அதாவது பொய் ஸ்ட்ரைக்கர் என சொல்லப்படும் ஃபால்ஸ் நைன் முறையை லாகவமாகப் பயன்படுத்தியது ஜெர்மனி. இதில் அர்ஜெந்தீனாதான் கில்லாடியாக கருதப்பட்டது. அந்த யுக்திக்கு தன்னை தகவமைத்துக்கொள்ள ஜெர்மனி தயங்கவில்லை. அதேபோல ஸ்பெயினின் டிக்கி டாக்காவையும் கச்சிதமாக பயன்படுத்தியது ஜெர்மனி. அதைப் அப்படியே பயன்படுத்தாமல், தனக்கேற்றவாறு பயன்படுத்தியதில்தான் ஜெர்மனியின் வெற்றி இருக்கிறது. அரை இறுதியில் இந்த டிக்கி டாக்கா ஆட்டத்தை ஜெர்மனியிடம் எதிர்பார்க்காத பிரஸீல் வீரர்கள் திகைத்துப் போய்விட்டனர். என்ன நடக்கிறது என அவர்கள் புரிந்துகொள்வதற்கு முன்பே ஜெர்மனி வீரர்கள் கோல் மழை பொழிந்து விட்டனர்.
டிக்கி டாக்கா என்பது அணி வீரர்கள் ஒரு முக்கோணம் போன்ற அமைப்பை உருவாக்கி, தமக்குள் பந்தை பாஸ் செய்தவாறு கோலை நோக்கி முன்னேறுவது ஆகும். சிறிய சிறிய பாஸ்களை செய்தவாறு இப்படி விளையாடுவதற்கு அசாத்தியமான நிபுணத்துவமும், அணி வீரர்களுக்கிடையேயான புரிதலும் மிக முக்கியம். ஒருவரிடம் பந்து இருக்கும்போது சக வீரர்கள் அவருக்கு உதவியாக ஆங்காங்கு நிலை கொள்வார்கள். ஆக எண்ணற்ற முக்கோணங்கள் அங்கு உருவாகும். அதில் எந்த முக்கோணத்திற்கு பந்தை பாஸ் செய்கிறார் என்பதில் அந்த வீரரின் மேதமை இருக்கிறது.
நெதர்லாந்துக்கு எதிராக ஒரு கோல் போட்டு முன்னணியில் இருந்த மெக்சிக்கோ தாக்குதல் ஆட்டத்தை தொடர்ந்து இருந்தால், நெதர்லாந்துக்கு நெருக்கடி கொடுத்து இருக்க முடியும் . ஆனால் தாக்குதல் ஆட்டக்காரர்களை வெளியே அழைத்துக்கொண்டு, தற்காப்பை பலப்படுத்தி தற்காப்பு ஆட முற்பட்டது நெதர்லாந்தின் மீதான நெருக்கடியை குறைத்துவிட்டது. அவர்கள் தாக்குதலில் இறங்கி வெற்றி பெற்றுவிட்டார்கள். இது யுக்திரீதியான தவறாகும்.
அதேபோல, காலிறுதியில் நெதர்லாந்து அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்த, பெனால்ட்டி ஷூட் அவுட் ஸ்பெஷலிஸ்ட் டிம் க்ரூல் அரை இறுதியில் கை கொடுக்க - மன்னிக்கவும் - கால் கொடுக்க முடியவில்லை. காரணம் அந்தப் போட்டியில் ஏற்கனவே மூன்று மாற்று ஆட்டக்காரர்களை பயன்படுத்திவிட்டார் வேன் கால். இதுவும் யுக்திரீதியான தவறாகும்.
இப்படி பெரும்பாலான வெற்றி தோல்விகளுக்கு யுக்திகள் காரணமாக அமைந்தாலும், குயுக்திகளும் சில முடிவுகளை பாதித்தது வருந்தத்தக்கது. திட்டமிட்டு குறிப்பிட்ட வீரரை தாக்குவது, காயமடையச் செய்வது போன்றவை அதிகமாகக் காணப்பட்டன. இத்தாலி வீரரை கடித்த சுவாரஸ் தண்டனை பெற்றார். அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு இருந்தால், ஆட்டத்தின் முடிவு மாறி இருக்கக்கூடும். அதேபோல, பிரஸீல் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் நெய்மார், கொலம்பிய வீரர் ஜூவான் காமிலோ ஜுனிகாவால் காயப்படுத்தப்பட்டு தொடர்ந்து ஆட முடியாமல் போனார். விளைவாக 1-7 என்ற கணக்கில் பிரஸீல் அணி ஜெர்மனியிடம் அரை இறுதியில் படுதோல்வி அடைய நேரிட்டது. விளையாட்டில் காயம் அடைவது சகஜம். ஆனால் மேற்கூறிய இரண்டு சம்பவங்களும் திட்டமிட்ட தாக்குதல் என்பது வருந்தத்தக்கது.
இதுபோன்ற தாக்குதல்களை தடுக்க உரிய விதிகள் வேண்டும். உருகுவாயுடனான ஆட்டத்தில் இத்தாலி வீரருக்கு வழங்கப்பட்ட ரெட் கார்டு, ஐவரி கோஸ்ட் அணிக்கு எதிராக க்ரீஸ் அணிக்கு கொடுக்கப்பட்ட பெனால்ட்டி கிக், மெக்சிக்கோவுக்கு எதிராக நெதர்லாந்துக்கு கிடைத்த பெனால்ட்டி கிக், ரஷ்ய கோல் கீப்பரை திசை திருப்பி அல்ஜீரியா போட்ட கோல் போன்றவற்றில் சர்ச்சைகள் இருக்கின்றன. கிரிக்கெட் போல, இந்தச் சர்ச்சைகளை தீர்த்து வைக்க தொலைக்காட்சி நடுவர் அமைப்பது அல்லது வேறு மாற்று வழிகள் குறித்து ஃபிஃபா(FIFA) ஆராய வேண்டும்.
இதுபோன்ற தாக்குதல்களைத் தவிர அரசியல்ரீதியான தாக்குதல்களும் அவ்வப்போது நடப்பது சகஜம்தான். முதலாளித்துவ நாடுகள், ஐரோப்பிய நாடுகள் இதுபோன்ற வேலைகளில் நிபுணர்களாக விளங்குகின்றன.
1982 உலகக் கோப்பையில் அல்ஜீரியா, மேற்கு ஜெர்மனி, சிலே, ஆஸ்த்ரியா ஆகிய அணிகள் ஒரே க்ரூப்பில் இடம் பெற்று இருந்தன. அல்ஜீரியா இரண்டு வெற்றிகள் பெற்று தன் அனைத்து ஆட்டங்களையும் முடித்து இருந்தது. இரு வெற்றிகளை பெற்றிருந்த ஆஸ்திரியாவும், ஒரு வெற்றியை பெற்று இருந்த ஜெர்மனியும் கடைசி ஆட்டத்தில் மோதின.
அந்த ஆட்டம் டிராவில் முடிந்தாலோ ஆஸ்த்திரியா வென்றாலோ, அந்த க்ரூப்பில் இருந்து அல்ஜீரியாவும் ஆஸ்திரியாவும் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும். அல்லது அந்த ஆட்டத்தில் ஜெர்மனி மூன்று அல்லது அதற்குமேல் கோல் போட்டு வென்றால், ஜெர்மனியும் அல்ஜீரியாவும் தகுதி பெறும். ஆக, அல்ஜீரியா வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் ஜெர்மனியும் ஆஸ்திரியாவும் திட்டமிட்டு, அல்ஜீரியாவுக்கு எதிராக திட்டம் வகுத்தன. அதன்படி ஆட்டம் ஆரம்பித்த சில நொடிகளில் ஜெர்மனி ஒரு கோல் போட்டது. அதன்பின் இரு அணிகளும் கோல் எதுவும் போட முயற்சிக்கவில்லை. சும்மா பெயரளவுக்கு அளவுக்கு விளையாடி நேரம் கடத்தின. இறுதியில் மேற்கு ஜெர்மனி 1-0 என்ற கணக்கில் வென்று, ஜெர்மனியும் ஆஸ்த்திரியாவும் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. அல்ஜீரியா வெளியேற்றப்பட்டது. இது உலக அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மைதானத்துக்கு வெளியேயும் அணிகள் தோற்கடிக்கப்படுவது உண்டு. கால்பந்து உலகில் பெரிய சக்தியாக விளங்கிய அணி யுகோஸ்லேவியா. கம்யூனிஸ்ட் நாடான அதன் வெற்றி மற்ற நாடுகளுக்கு ஓர் உறுத்தலாகவே இருந்து வந்தது. 90களின் ஆரம்பத்தில் கம்யூனிச அகிலத்துக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில் யுகோஸ்லேவியாவில் இருந்தும் சில பகுதிகள் பிரிந்தன. யுகோஸ்லேவிய குடியரசு கூட்டமைப்பு என்ற பெயரில் யூரோ 92இல் போட்டியிட அந்த அணி ஆயத்தமாக இருந்தது. போட்டி ஆரம்பிக்க பத்தே நாட்கள் இருந்த நிலையில் அந்த அணி போட்டியிடக்கூடாது என்ற தடை விதிக்கப்பட்டது. அந்த அணிக்கு பதிலாக களமிறங்கிய டென்மார்க் அந்த சாம்பியன்ஷிப்பை வென்றது ஒரு நகைமுரண்.
அதேபோல, ஐரோப்பிய மண்டலம் க்ரூப் ஐந்தில் முதல் இடத்தில் இருந்த யுகோஸ்லேவியா, 1994 உலக கோப்பையில் விளையாட அனுமதிக்கப்படவில்லை. இப்படி கண்ணுக்குத் தெரியாத தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
1938 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இத்தாலியும், ஹங்கேரியும் மோதின. போட்டிக்கு முன் இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி இத்தாலி அணிக்கு ஒரு தந்தி அனுப்பியதாக ஒரு (நிரூபிக்கப்படாத) செய்தி உண்டு “உங்கள் முன் இரு வாய்ப்பு. வெற்றி அல்லது மரணம்“. அதாவது ஜெயிக்காவிட்டால் கொன்று விடுவார் என அர்த்தம் இல்லை. அந்த அளவுக்கு அவர் ஆர்வம் காட்டினார். கால்பந்து என்பது வெறும் விளையாட்டாக இல்லாமல் தேச கௌரவத்தின் அடையாளமாகவும் இருந்து வருகிறது.
உதாரணமாக, 1952 ஒலிம்பிக்கில் யுகோஸ்லேவியா, சோவியத் யூனியன் கால்பந்து அணிகள் மோதியபோது அது அரசியல் போட்டியாகவே கருதப்பட்டது. அதில் வென்றே ஆக வேண்டும் என்பதில் ஸ்டாலின் குறியாக இருந்தார். ஆனால் யுகோஸ்லேவியா வென்றது. டிட்டோ-3 ஸ்டாலின் -1 என சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. அந்தத் தோல்வி ஸ்டாலினுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அந்தச் செய்தி சோவியத் பத்திரிகைகளில் வெளியாகவே இல்லை.
அதுபோல எந்த நாடு போட்டியை நடத்துவது என்பதிலும் அரசியல் உண்டு. குறிப்பிட்ட நாடு போட்டியை நடத்த விடாமல் செய்ய மற்ற நாடுகள் அணி திரள்வது உண்டு. சில நேரங்களில் உள் நாட்டு அரசியலும் உண்டு. பிரஸீலை பொறுத்தவரை அதன் கனவு, வாழ்க்கை, அடையாளம் என எல்லாம் கால் பந்துதான். அதனால்தான் மிகுந்த பொருளாதார நெருக்கடிகளுக்கிடையே போட்டியை நடத்திக்காட்ட விரும்பியது. ஆனால் நம் நாட்டுக்கு இதெல்லாம் தேவை இல்லை என அந்த நாட்டு மக்களிலேயே ஒரு சாரார் எதிர்ப்புக்காட்டியதும் நடந்தது.
இந்த உலகக் கோப்பையில் மேட்ச் ஃபிக்சிங் குற்றச்சாட்டுகள், வீரர்களுக்கு சரியாக ஊதியம் கொடுக்காததால் ஏற்பட்ட பிரச்சினை போன்றவையும் சில அணிகளின் திறனை பாதித்தன.
நாம் துவக்கத்தில் கூறிய ஆஃப்சைடு படத்தில் வசனங்கள் ஏதும் இல்லை. வானொலி வர்ணனை மாத்திரம்தான். இரு தரப்பு வீரர்களும் துப்பாக்கியை நீட்டியபடியே வர்ணனையை கேட்கும்போது தவறுதலாக ஒருவன் சுட்டுவிட, மாறி மாறி இருதரப்பும் சுட்டு அனைவரும் பலியாகின்றனர். வர்ணனை தொடர்கிறது. அவர்கள் சுட ஆரம்பிக்கையில் கோல்ல்ல்ல் என வர்ணனையாளர் உற்சாகமாக சொல்கிறார். கூட்டம் ஆரவாரிக்கிறது. பிறகு தெரிகிறது. அது கோல் இல்லை. ஆஃப்சைடு விதியின் கீழ் அந்த கோல் தவறானதாக அறிவிக்கப்படுகிறது. இரு அணிகளும் வெற்றி பெறவில்லை. சுட ஆரம்பித்தவன், தன்னை வெற்றியாளனாக நினைத்து இருக்கலாம். ஆனால் அங்கும் இருதரப்பும் வெல்லவில்லை.
கால்பந்தும் விளையாட்டு நெறிகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டால், யாருக்கும் வெற்றி இல்லாமல் போய்விடக்கூடும். வெல்வது யாராகவும் இருக்கலாம். ஆனால் கால்பந்து தோற்றுவிடக்கூடாது. அதுவே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
இந்த உலகக் கோப்பையை பொருத்தவரை அந்த எதிர்பார்ப்பு பெரும்பாலும் நிறைவேறியது என்றே சொல்ல வேண்டும். இன வெறி அனேகமாக இல்லை என்றே சொல்லலாம். ஜெர்மனியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் குறித்து பார்த்தோம் அல்லவா. அது தவிர இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். ஜெர்மனி அபாரமாக ஆடி பிரஸீலை வென்ற போதும், பிரஸீலை கிண்டல் செய்யும் விதத்தில் நடந்து கொள்ளவில்லை. கோல் போட்டதும் மிதமாகவே ஒவ்வொரு கோலையும் கொண்டாடினர்.
ரசிகர்களும் விளையாட்டு அறத்துடன் (விளையாட்டுத்தனமான அறம் அன்று) நடந்து கொண்டனர். பிரஸீல் அணியின் தோல்வி உலகையே அதிர்ச்சி அடையச் செய்தது. பிரஸீல் தேசம் முழுக்க துக்கம் சூழ்ந்திருந்தது . ஆனாலும் சுதாரித்துக்கொண்டு மூன்றாம் இடத்துக்கான போட்டியை காண வழக்கமான உற்சாகத்துடன் திரளாக கலந்து கொண்டனர். (அதிலும் பிரஸீல் தோற்றது வேறு விஷயம்.)
ஜெர்மனி ஒருங்கிணைந்த நாடாக பெறும் முதல் வெற்றி என்பது இந்த உலகக் கோப்பையின் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இதற்குமுன் மேற்கு ஜெர்மனி என்ற பெயரில்தான் வென்றுள்ளது. அதேபோல தென் அமெரிக்க நாட்டில் நடக்கும் போட்டியில் ஐரோப்பிய அணி ஒன்று வெல்வதும் முக்கிய நிகழ்வாகும்.
இதைவிட முக்கிய நிகழ்வு என்பது மற்ற அணிகளை ரசிப்பது, மற்றவர்களிடம் இருந்து கற்பது, குறுகிய வேறுபாடுகளை கொஞ்ச நாளாக மறந்து இருந்தது, உள்ளங்கள் ஒன்றுபடுவதால் ஏற்படும் உவகையை உணர்ந்தது போன்றவைதான். யாரோ ஒரு ஸ்வீடன் பெண்ணும், சென்னையில் வாழும் ஒரு தமிழனும் ஜெர்மனி வெற்றிக்காக ஒன்றாக பிரார்த்திக்கும் அற்புதம் தொழில்நுட்ப வளர்ச்சியால் சாத்தியம் ஆனது.
ஜெர்மனி வெற்றியையும், கால்பந்தின் வெற்றியையும் இதைவிட சுருக்கமாக யாரும் சொல்ல முடியாது. பிரஸீலின் முன்னாள் வீரர் ஒருவர் இப்படி சொன்னார்: பிரஸீல் அணி என்ன செய்து வந்ததோ அதை ஜெர்மனி செய்து வருகிறது. ஜெர்மனி அணி எவற்றையெல்லாம் கை விட்டதோ அவற்றை பிரஸீல் செய்ய ஆரம்பித்துள்ளது

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா