Saturday, December 19, 2015

ஆகமம் - அர்ச்சகர் - அரசியல்வாதிகள் . உண்மையும் தீர்வும்


ஆகம விதிகளை பைபாஸ் செய்து விட்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டம் கொண்டு வந்தபோதே இது கோர்ட்டில் நிற்காது என்பது பலருக்கும் - குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு -  புரிந்துதான் இருந்தது.. காரணம் ஆகம விதிகளில் கை வைக்க நீதிமன்றம் விரும்பாது.. அது மத நம்பிக்கையில் குறுக்கிடுவதாகி விடும். ஆக , இது கோர்ட்டில் நிற்காது என தெரிந்து கொண்டு சும்மா புரட்சியாளர் அடையாளம் பெறும் பொருட்டு கொண்டு வரப்பட்ட சட்டம் இது..

உண்மையிலேயே ஒடுக்கப்ப்ட்டோர் மீது அக்கறை இருந்தால் , இன்னும் எத்தனையோ கிராமங்களில் கஷ்டப்பட்டு வரும் அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற ஏதேனும் செய்திருக்கலாமே...

சில ஆண்டுகள் முன்பு ,  அரசு பேருந்துக்கு ஒருக்கப்ப்ட்ட மக்களுக்கு போராடிய ஒரு தலைவர் பெயர் வைக்கப்பட்டது.. அந்த பேருந்தில் பயணம் செய்ய மாட்டோம் என அழிச்சாட்டியம் செய்த ஆதிக்கசாதியினருக்கு பயந்து , இனிமேல் தலைவர்கள் பெயரே வைக்கப்படாது என பம்மியது அரசு..

அப்படிப்பட்ட அரசியல்வாதிகள் கொண்டு வந்த இந்த சட்டம் ஆழமான சிந்தனை ஏதும் இல்லாத ஒன்று என்பது தெளிவு...  நலிந்த மக்களுக்கு ஆதரவாக செய்வதுபோல பம்மாத்து காட்டும் வேலைதான் இது..

இது ஒரு புறம்,

பிராமணர்கள் மட்டும்தான் அர்ச்ச்கர் ஆகலாம்போல என சிலர் நம்ப வைக்கப்பட்டு இருக்கிறார்கள்..

இது தவறு..

பிராமணர்கள் யாரும் அர்ச்சகர் ஆக முடியாது .. அது ஆகம விதிப்படி தவறு..

சிவாச்சாரியர் என்ற பிரிவினர்தான் சிவன் ஆலயங்களில் அர்ச்சகர் ஆக முடியும்.. ஆனால் இவர்களுமேகூட விஷ்ணு கோயில்களில் அர்ச்சகர் ஆக முடியாது..  அங்கு பட்டாச்சார்களுக்கு அந்த உரிமை உண்டு,..சிதம்பரம் நடராஜன் கோயிலிலில்  தீட்சிதர்களுக்கு அந்த உரிமையும் மேல்மலையனூர் ஆலயத்தில் பர்வத ராஜ குலத்தினர் அர்ச்சகர் ஆகலாம். வேறு யாரும் ஆக முடியாது.. பிராமணர்களுக்கு என சிறப்பு சலுகை ஏதும் இல்லை.

அப்படி என்றால் சிவாச்சார்யர்கள்தான் பிராமணர்களை விட உயர்ந்தவர்களா என்றால் இல்லை... பிராமணர்கள் யாரும் இவர்களுக்கு பெண் கொடுப்பதும் இல்லை. பெண் எடுப்பதும் இல்லை.. எந்த சம்பந்தமும் வைத்துக்கொள்வதில்லை...


ஆகம விதிகளில் கை வைக்க முடியாது. சரி.. வேறு என்ன செய்யலாம்...

அந்த ஆலயங்களை விட பிரமாண்டமாக அரசு பெரிய ஆலய்ங்கள் கட்டலாம்... அதில் அர்ச்சகர்கள் நுழைவுத்தேர்வு மூலம் , மதிப்பெண் அடிப்படையில்  நியமிக்க்கப்படுவார்கள் என அறிவிக்கலாம்... சாதி என்பது இதில் கணக்கில் கொள்ளப்படாது .


Friday, December 18, 2015

சில உன்னத கவிதைகள் - சீன, ஜப்பான் , இந்திய தத்துவ பார்வைகள்

1 சீனா

மனம் இல்லை   புத்தர் இல்லை

இருத்தல் இல்லை

சிதறிக்கிடப்பவை சூனியத்தி எலும்புகள்

இந்த பொன் சிங்கம்

ஏன் தேடி செல்ல வேண்டும்

அந்த நரிக் குகைக்கு



நீர் பறவை

வருகிறது செல்கிறது

ஆனால் விட்டுச்செல்வதில்லை

ஒரு காலடி சுவடி

அதற்கு தேவையும் இல்லை

ஒரு வழி காட்டி


72 ஆண்டுகள் அடக்கி வைத்திருந்தேன்

அந்த எருதை மிக கடுமையாக

இன்று

மீண்டும் பிளம் மலர் பூத்திருக்க

பனிப்பொழிவில் அலையவிட்டேன்

அதை

ஜப்பான்
----------------------------------------------------------------------------------------------

 இரவில் திருடசெல்பவன்

நிலவொளியில் சற்று நிற்கிறான்

ஹைக்கூ பாட

--------------------------------------------------------------------------
இந்தியா

எனக்கு ஞாபகமுள்ள பௌர்ணமிகள் நான்கு
ஒன்று
எதிர்விட்டு அம்மாளின்
துஷ்டிக்கு
சுடுகாடு சென்று
திரும்புகையில் பார்த்தது.
நள்ளிரவில்
பஸ் கிடைக்காமல்
லாரி டாப்பில்
பிரயாணம் செய்கையில்
பிரகாசித்தது.
ஐந்து நட்சத்திர ஹோட்டல் வாசலில்
அரசு அதிகாரி ஒருவரைக் காண
காத்திருக்கையில் கண்டது.
இண்டு இடுக்கு
மாடிக் குடித்தனத்தில்
மின்வெட்டு இருள்வேளையில்
ஜன்னல் வழியே
வந்து விழுந்தது.
*- தேவதச்சன்

Thursday, December 17, 2015

கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம் - என் பார்வையில்


கிளாசிக்  நாவல்கள் படிப்பதில் எப்பவுமே ஒரு மனத்தடை இருக்கும்.  பாதி படிக்கும்போது போரடித்தால் , நிறுத்தினால் அதுவரை படித்த நேரம் வீணாகி விடுமே என முழுதையும் படித்து , இன்னும் நேரம் வீணாகும்.

அதனால்தான் கரிச்சான் குஞ்சு படிக்கப்பட வேண்டிய எழுத்தாளர் என சாருவே சொன்னபோதிலும்  நான் படிக்கவில்லை...

ஒரு மழை நாள் இரவில் தற்செயலாக பசித்த மானிடம் நாவலை எடுத்தேன்.. சில வரிகளிலேயே நாவல் என்னை உள்ளே இழுத்துக்கொண்டு விட்டது. அந்த எழுத்தின் வசீகர தன்மை என்னை வென்று விட்டது..

உடல் பசி , ஆன்மிக பசி , அறிவு பசி என பசிகள் பல வகை , இதில் ஏதோ ஒரு பசி எல்லோருக்கும் இருக்கும். ஒரு பசி தீர்ந்தவுடன் அடுத்த பசி ஆரம்பிக்கும் என்றுதான் இன்றைய மனோதத்துவம் சொல்கிறது. நம் தத்துவ மரபும் இதைத்தான் சொல்கிறது..

பசிக்கு சாப்பிடுவது பசியை தீர்க்கிறதா அல்லது பசியை அதிகரிக்கிறதா அல்லது சாப்பிடுவது என்ற செயல் , பசி எனும் உணர்வை மழுங்கடிக்கும் ஒரு தீமையாக செயல்படுகிறதா என்பது நம் பலருக்கும் இருக்கும் குழப்பம்.


இதை கணேசன் , கிட்டா என்ற இரு பாத்திரங்கள் மூலம் அழகாக அலசுகிறது நாவல்.

கொஞ்சம்கூட போரடிக்காத நடை என்பது இந்த நாவலின் சிறப்பு. பின்னால் வரபோகும் முக்கிய காட்சிகளுக்கான குறிப்புகளை , ஆரம்பத்திலேயே ஆங்காங்கு தூவிச்செல்லும்  நடை திறமையான திரைக்கதை போல இருக்கிறது..

உதாரணமாக கணேசன் தன் கைப்பையை கட்டி அணைத்தவாறு உறங்குகிறான். அப்போது அவனுக்கு அந்த கைப்பை என்னவாக தோன்றுகிறது என்பதன் முக்கியத்துவம் அப்போது நமக்கு புரிவதில்லை. பிற்பாடு அது புரியும்போது அட என ரசிக்க வைக்கிறது..

கணேசன் என்பவன் அழகானவன் , சின்ன வயதில் இருந்தே பலராலும் விரும்பப்படுபவன். எல்லா சுகங்களையும் அனுபவித்து விட்டு பிற்காலத்தில் நோயால் பாதிக்கப்பட்டு அனைவராலும் அவமானத்தப்படும் அவல நிலைக்கு வீழ்கிறான். ஆனால் அவன் மனதில்  நிறைவு இருக்கிறது..


கிட்டா என்பவன் சின்ன வயதில் தோல்விகளை மட்டுமே சந்தித்த்தவன். பிற்காலத்தில் செல்வந்தன் ஆகிறான். ஆனால் அவன் மனதில் தான் ஒரு தோல்வியாளன் என்றே தோன்றுகிறது. இப்படி சுவையான இரு துருவங்கள்

இந்த துருவங்களும் நாவலின் ஒரு கட்டத்தில் இணைவது ஒரு சுவாரஸ்யம்.

இது மட்டும் அல்ல . நாவலில் இப்படிப்பட்ட சுவையான நிகழ்ச்சிகள் ஏராளம்.

கிட்டாவின் அண்ணனை ஒரு பைத்தியக்காரன் என நினைக்கும்படி காட்சி அமைப்புகள் இருக்கும். ஆனால் அந்த அண்ணனால் கிட்டாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை நிகழ்வது வாழ்வியல் அபத்தங்களில் ஒன்று.


வீடு தேடி அலையும் கணேசனுக்கு ஒரு வீடு கிடைக்கிறது. அந்த வீட்டில் இருப்பவர்கள் இவனால் பெரும் பலன் அடைகிறார்கள். அவர்கள் வாழ்க்கையே மாறி விடுகிறது. அந்த நன்றியை அவர்களால் மறக்க முடியவில்லை. ஆனால் அவனை வீட்டில் வைத்திருப்பதிலும் சிக்கல். ஆனால் வீட்டை விட்டு துரத்தும் அளவுக்கு அவர்கள் தீயவர்கள் அல்லர். இப்படி ஒரு முடிச்சு..

காமமே வாழ்க்கை என வாழ்ந்த கணேசனை அனைவரும் துரத்தும் நிலையில் சில இளம்பெண்கள் சகோதர வாஞ்சையுடன் பாதுகாக்கிறார்கள்.. அன்பு எனும் உன்னதத்துடன் வாழ்பவர்களும் உண்டு என அறிவதுதான் கணேசன் வாழ்வில் உச்சம் என நாம் நினைக்கும்போது அவன் அவர்களிடம் இருந்து பிரிகிறான். இப்படி ஒரு சுவையான முரண்.

ஏதோ ஒரு இலக்குடன் கிளம்புவன் ஒரு கட்டத்தில் எந்த இலக்குமே தேவை இல்லை என முடிவெடுக்கும்போது அவன் அடுத்து செல்ல வேண்டிய இடத்துக்கு எந்த சாலையிலும் செல்ல முடியும் என்ற நிலை ஏற்படும் மாற்றம்  ஜென் நிலை அளிக்கிறது..

கிட்டாவை எப்படியாவது ஓர் ஆளாக உருவாக்கி விட வேண்டும் என்ற தாயின் பரிதவிப்பு , ஊர் பெரிய மனிதரின் சின்னத்தனம் என எந்த ஒவ்வொரு கேரக்டரும் செதுக்கப்பட்டுள்ளது



அனாதரவாக ஊருக்கு வரும் கணேசனை ஒரு குருவாக நினைத்து உதவி செய்கிறார் பசிபதி எனும் காவலர். ஆனால் ஒரு வகையில் பசுபதியும் கணேசனுக்கு குருவாகி விடுகிறார்.

கணேசனை பயன்படுத்தி விட்டு பிறகு தூக்கி எறியும் பெண் டாக்டர் , அவனை மணந்து கொள்ளும் பெண் , பிச்சை எடுக்கும் பெண் வாழ்வில் கணேசன் இணைவது என ரசித்துக்கொண்டே இருக்கலாம்..

அந்த பிச்சைக்காரியிடன் கணேசன் சினேகமாக பேசுவதை உணர்ந்த அவள் சின்னஞ்சிறு மகன் , கணேசன் முன் ஒரு துணியை விரித்து சில காசுகளை போட்டு வைக்கிறான். இதை பார்த்து அவன் பிச்சை எடுக்கிறான் என உணர்ந்து மக்கள் காசு போடட்டுமே என்ற அந்த தொழில் அறிவு கணேசனை கவர்கிறது..

இந்த இடம் நம்மை கவர்கிறது.. பிற்காலத்தில் அந்த சிறுவனை படிக்க வைத்து பெரிய ஆளாக்கி விடுகிறான் கணேசன். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் இந்த வித்தியாசமான காட்சியை மறக்க முடியாது..

அதேபோல உதாவக்கரையாக இருந்த கிட்டாவின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக டிராக் மாறுவதும் அழகு, அவன் சந்திக்கும் முதிய்வர் - மனைவி - சீடன் சம்பவம் ஒரு ஹைக்கூ கதை..

அழகான உடல் இருந்தது. அதை அனுபவித்தோம். இப்போது அது இல்லை.. இதையும் அனுபவிக்கிறோம்.. ஆனால் அதை அனுபவித்த மனம் மட்டும் அழியவில்லை, ஒருவேளை இதுவும் அழியுமோ... அழிந்தால் அதையும் அனுபவித்துப்பார்ப்போமே என்ற கணேசனின் பார்வை நமக்கும் ஏற்படுவதே நாவலின் வெற்றி என்பேன்..


கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவல்


Tuesday, December 15, 2015

ராமராஜனும் ஜெய்சங்கரும் - வெள்ளம் - இருட்டு அனுபவம்



இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டதாக பலர் நினைக்கிறார்கள்... மின்சாரம் , நெட் , டிவி என சிலருக்கு கிடைப்பதால் அதை மட்டும் வைத்துக்கொண்டு எல்லோரும் சுகம் என நினைக்கிறார்கள்.. ஆனால் இதை பதிவிடும் 15.12.2015  நிலவரப்படி இன்னமும்கூட நீரில் மூழ்கி இருக்கும் இல்லங்கள் ஏராளம் , தண்ணீர் தொடர்ந்து இறைக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது...சாலைகள் சீரடையாத சூழலும் பல இடங்களில் உள்ளது

-----------------------------------------------------

என்னதான் கடைகளில் காய்கறி வாங்கி சாப்பிட்டாலும் நாமே நம் வீட்டில் காய்கறிகளை பயிரிட்டு உண்டால் அதன் சுவையே தனிதான்.. அதேபோல நம் வாகனங்களை சர்வீஸ் செய்ய விடுவதை விட , நாமே அதை கழுவி , பாகங்களை பிரித்து , உயவுப்பொருட்கள் தேவைப்படும் இடங்களில் அதை சேர்த்து மீண்டும் சரியாக பொருத்தி சரியாக வேலை செய்ய வைத்தால் அப்போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனிதான்.. வாகனம் என்பது சைக்கிளாக இருக்கலாம். அல்லது காராக இருக்கலாம்.  எதுவாக இருப்பினும் அனுபவம் ஒன்றுதான்

----------------------------

மின்சாரம் இல்லாத சென்னை ஒரு வித்தியாசமான அனுபவம் தந்தது. எங்கும் வெளிச்சமே இல்லை. கும்மிருட்டு , மையிருட்டு என்றெல்லாம் சொல்வார்களே...அதை அனுபவிக்க முடிந்தது, கண் மூடினால் எப்படி இருக்குமோ அதேபோலவே கண்ணை மூடினாலும் இருந்தது ஒரு வித்தியாசமான அனுபவம்.  நெட் , டிவி , மின்விளக்கு வெளிச்சம் இல்லாத சுகத்தை அனுபவித்தபின் மீண்டும் இவற்றை பயன்படுத்த மனம் வரவில்லை... தேவைப்படும் குறைந்த பட்ச மின்சாரம் , குறைந்தபட்ச நெட் , குறைந்தபட்ச டிவி என்பது எனக்கு பழக்கமாகி விட்டது

---------------------------------------------


அதுவரை அக்கம்பக்கத்தினர் யாரென்றே தெரியாமல் இருந்தவர்கள் , மின்சாரம் இல்லாமல் டிவி பார்க்க முடியாமல் , மொட்டை மாடி மீட்டிங் நடத்தி டொனால்ட் டிரம்ப் முதல் செம்பரம்பாக்கம் ஏரி வரை சகல விஷ்யங்களையும் அலசினர். என்னவோ ரொம்ப நாள் பழகிய மாதிரி கொஞ்சி குலவினர். மீண்டும் மின்சாரம் வந்ததும் மீண்டும் வீட்டிலேயே பம்ம ஆரம்பித்து விட்டனர்..

------------------------------------------------------


சில படங்களை ரசித்து பார்த்திருப்போம். நாயகர்களை போற்றி இருப்போம். அதே நாயகர்கள் மார்க்கெட் போன பின்பு சாதாரண படங்களில் நடிக்கையில் சற்று வருத்தமாக இருக்கும். உதாரணமாக ஜேம்ஸ் பாண்ட் பாணி படங்களில் நடித்த ஜெய்சங்கர் பிற்காலத்தில் வில்லனாக நடித்து சின்ன சின்ன நடிகர்களிடம் அடி வாங்கியதுபோல நடித்தது அவரது ரசிகர்களுக்கு வருத்தமாகவே இருந்தது...

ஒரு காலத்தில் ரஜினி , கமலுக்கே டஃப் ஃபைட் கொடுத்த  ராமராஜன் , இப்படி சாதாரண வேடங்களில் நடிக்க மாட்டேன் என சொல்லி இருப்பது மகிழ்ச்சி அளித்தது . ராமராஜன் என்றால் கரகாட்டக்காரன் நினைவு வந்தால்போதும்.


----------------------------------------------

சில எளிய மருத்துவ குறிப்புகள்

படித்தது...பகிர்கிறேன்... பிடித்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்..

தீப்புண்

வெங்காய சாறு + கால்பங்கு உப்பு கலவையை புண் மீது தடவிவர வேண்டும்

குளிர்காய்ச்சல்

1 வெங்காயம் + 9மிளகாய்கள் ..வாயில் போட்டு மென்று தின்ன வேண்டும்

பல்வலி 

வெங்காயம் + கிராம்பு சாறு...

காதில் எறும்பு அல்லது பூச்சி போய் விட்டால்

உப்பு கரைசலை காதில் ஊற்ற வேண்டும்


நகச்சுற்று

உப்பு , வெங்காயம் , சுடுசோறு .. நன்கு அரைத்து விரலில் கட்ட வேண்டும்



Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா