Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, June 8, 2021

அன்றாட வாழ்வின் அழகியல் − கவிதை நூல் பார்வை

 

   உலகத்தால் கைவிடப்பட்டதான பாவனை அல்லது  எல்லாப் பெண்களாலும் காதலிக்கப்படுவதாக ஒரு ஃபேண்டசி  அல்லது தானும் இளைஞன் எனக்காட்டிக் கொள்ளும்பொருட்டு சிலர் எழுதும் போலி எழுத்துகள் என சமகால கவிதைகள் சற்று அலுப்பூட்டினாலும் நமக்கையூட்டும் சில நல்ல கவிஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் .

அப்படி நம்பிக்கையூட்டும் கவிஞர்களில் ஒருவர்தான்  " மதார் "

இவரது வெயில் பறந்தது கவிதை நூல் பரவலான வரவேற்பைப் பெற்ற நூலாகும்.


போலித்தனமற்ற  சிடுக்குகளற்ற இயல்பான குரலில் இக்கவிதைகள் அமைந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது.

  விழிப்புணர்வுடன் இருந்தால்  காற்றில் பறக்கும் சிறு இலை கூட அரிய மெய்ஞான தரிசனம் அளித்து விடும் என்பார் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி.


ஒரு கவிஞன் அன்றாட சம்பவங்களில்கூட இந்த அரிய கணத்தை கண்டு கொள்கிறான


பலூன்  இளைக்கும்போது கேட்கிறது 

அகக்காற்றை அழைத்துப் போகும் 

புறக்காற்றின் அவசரம்

என்று ஒரு கவிதை.


ஒரு கணத்தை ஒரு தருணத்தை படம் பிடித்துக் காட்டுகிறார்.  இது நம்மை எடுத்துச் செல்லும் உயரங்கள் அதிகம்.

   நதி கடலில் சங்கமிக்கச் செல்லும்போது கடல் சில அடிகள் முன்,நகரந்து நதியை தன்னுள் இழுத்துக் கொள்ளும் . காதல் காமம்  ஆன்மிகம் என  அனைத்துக்கும் பொதுவான  சங்கமம் ,  அழிவின்மை , சாஸ்வதத்தன்மை என பலவற்றை இந்த சில வரிகள் நினைவு படுத்துகின்றன

 


எங்கிருந்தோ 

ஒரு பந்து வந்து 

கைகளில் விழுந்தது  


தான் இன்னாருக்குச் சொந்தம் 

என்று அறிவித்துக்கொள்ளாத 

பந்து 

பூமியைப் போலவே இருந்தது 


உள்ளங்கையில்

பொதிந்திருந்த பந்து

 ஒருமுறை 

ஒரேயொரு முறை 

சிரித்தது


எங்கிருந்தோ வந்து விழும் பந்து வழியாக கவிஞன் காணும் தரிசனமும் அதை அந்த பந்தும் அக்னாலட்ஜ்  செய்வதும் கவிதையும் யதார்த்தமும் படைப்பாற்றலும் கைகுலுக்கும் அழகான இடம்



அமைதியான ஒரு அறை 

சுற்றி இருட்டு 

ஒரு மெழுகுவர்த்தி தரும்

 நம்பிக்கையில் 

அமர்ந்திருக்கும் பெண்

 திரியில் விளக்காடுவதை 

அவள் எவ்வளவு நேரம்தான் பார்த்துக்கொண்டிருப்பாள்

 ‘ஒரு பனிக்காலத்து மாலை 

தரையில் கண்டெடுத்த 

தேவையற்ற பொருளை பத்திரப்படுத்துவதின் அவசியம் இப்போது புரிகிறது’ 

என அவள் தனது டைரியில் எழுதுகிறாள் எழுதி முடித்ததும் 

அறைச்சுவர் நான்கும் 

அவளை நெருங்கி வந்து அமர்கின்றன


இந்தக்கவிதையில் வரும் பெண்ணும் , பனிக்கால"மாலையும் , இருளில் ஒளிரும் மெழுகுவர்த்தியும் அழகான காட்சிப்படிமங்களாக மனதில் தைத்துவிடுகின்றன

தேவையற்ற பொருளை பத்திரப்படுத்துவதன் அவசியம் என்பது சுவாரஸ்யமான வரிகள்.

நல்லவேளை ,  தேவையற்ற பொருள் என ஒதுக்கிவிடாமல் பத்திரப்படுத்தினோமே என ஆறுதல் பெருமூச்சு விடுகிறாள்.  பத்திரப்படுத்தாமல் போனோமே என வருந்துகிறாள் என்ற இரு சாத்தியங்களுமே கவிதைக்குள் உள்ளன.  உண்மை என்ன என்பது ஒருபோதும் வெளிவரமுடியாத,ரகசியம் என்பதை கடைசி வரிகள் சொல்கின்றன.


இது பூடகமான கவிதை என்றால் அடுத்து சற்று வெளிப்படையான கவிதை 



நதிக்கு ஓடும் பைத்தியத்தை 

சொந்த ஊருக்குத் திரும்பியவன் பார்க்கிறான் 

பைத்தியம் தெளிபவனின்

 மண்டையில் நிகழும் 

மாற்றங்களுக்கு 

ஒப்பானது அது

இந்த அனுபவம்,பலருக்கும் கிடைத்திருக்கும்..


மரத்தின் உச்சிக்கொம்பில் 

அமரும் அது 

தனது ஒற்றைப் பார்வை 

வாயிலாகவே

 மாநகர் முழுவதையும் 

கூர்மையாகப் பார்க்கிறது 

நான் வெறுமனே

 காகத்தின் கண்களை 

கூர்மையாகப் பார்க்கிறேன்

உலகை அளக்கும் காக்கையின் கண்கள் வழியே உலகைக்காணல் என்பது அழகான பார்வை..   


முகத்திற்குத் 

தண்ணீர் ஊற்றினேன்

 வெயில் கழுவினேன் 

மீண்டும் ஊற்றினேன் 

வெயில் கழுவினேன்

வெயில் என்ற அருவம், உருவமாக மாறும் தருணம்

கதவும் நானும் 

ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம் 

ஞாபகப்படுத்திச் சொன்னேன் ‘மரம்தானே நீங்க’ 

கதவு சொன்னது

ஏ! குட்டிப் பயலே’

கல்லைக் கண்டால் நாயைக்காணோம் நாயைப்பார்த்தால் கல் தெரியாது


நாற்காலி ,  கதவு என பார்ப்பவர்களுக்கு அவை வெறும் ஜடப்பொருட்கள்தான்.   அவை எல்லாம் மரங்கள் என அடையாளம் கண்டு கொள்ளவும் சிலர் உண்டு என்பதைவிட  அப்படி அடையாளம் கண்டுகொள்வதற்கு எப்படிப்பட்ட  மனம் தேவை என்பதுதான் கவிதை..   இயற்கையை நாம் அறியும்போது இயற்கையும் நம்மை அறிகிறது என்ற ஜென் கணம் கடைசிவரியில் சரேல் என நிகழ்கிறது

நமத்துப் போன தீக்குச்சி 

ஒன்றுக்கும் உதவாது 

எனச் சபித்து எறிகிறாய்

 அது அமைதியாக விழுகிறது

 எரியாத காட்டின் 

பறவைக்கூட்டிற்குக் கீழ்

    மிகப்பெரிய சாத்தியக்கூறு ஒன்று நிகழாமல் போவதன் காட்சி வெளிப்பாடு


சரியான  கண்கள் பார்வை இருந்தால் அன்றாட கணங்களும் அற்புதம்தான் ,  வாழ்க்கை ஒரு கொண்டாட்டம்தான் என்ற இக்விதை தொகுப்பின் சாரத்தை இக்கவிதை சுட்டுகிறது


சன்னலைத் திறந்ததும்

 ஒரு பெரும் ஆச்சர்யம் -  

ஆகாசத்தின் கதவா

 என் எளிய சன்னல்

மதார் அவர்களுக்கு வாழ்த்துகள்


வெயில் பறந்தது கவிதை நூல்   தவறவிடக்கூடாத ஒன்று












Tuesday, February 4, 2020

அப்துல்கலாம் முதல் அசோகமித்திரன் வரை .. நூல்,அறிமுகம்

நல்ல கவிதைளுக்கான  தேடல் சுவாரஸ்யமானது.  ஆயிரம் மொக்கைகளுக்குப்பின்பே நல்ல கவிதை ஒன்று கிடைக்கும். ஆயிரம் மொக்கைகளைப்படித்த களைப்பை போக்கும் எனர்ஜி அந்த ஒற்றைக்கவிதையில் இருக்கும். எனவே மீண்டும் உற்சாகமாக தேடலை ஆரம்பிப்போம்

நெல்லை முத்துவின் " சில சந்திப்புகள் , சில பதிவுகள் " நூலை அதில் இருக்கும் ஹைக்கூக்களுக்காகவே வாங்கினேன். நூலாசிரியர் பல இலக்கிய ஆளுமைகளுடன்  பழகியவர் , அப்துல் கலாமின் நண்பர் , பல விருதுகளைப்பெற்ற எழுத்தாளர் என்பதைவிட அவரது,ஹைக்கூ அலசலககளுக்காகவே இதை படித்தேன்

கநாசு , வல்லிக்கண்ணன் , திகசி , பொன்னீலன் , ஆ மாதவன் , சுந்தர ராமசாமி , நீல பத்மநாபன் , அசோகமித்திரன் என பலரது லிகழ்ச்சிகள் , பேட்டிகள் , சிறுகதை அலசல்கள் என நல்ல இலக்கிய விருந்து. அப்துல் கலாம் குறித்த கட்டுரை நேரடி அனுபவத்தில் மிளிர்கிறது

தற்போதைய மைக்ரோ கதைகள் , குறுங்கவிதைகளுக்கு என வெகு ஜன இதழ்கள் ஒரு பார்முலா வைத்துள்ளன

கல்வி , கண்  போன்றது
போஸ்டர் ஒட்டினான்
குழந்தை தொழிலாளி !!

உலகை காக்கும்
சாமி சிலைக்கு
போலிஸ் காவல்!!!

நாத்திக  தலைவர்
நிகழ்ச்சிக்கு புறப்பட்டார்
சகுனம்  பார்த்து !!


இப்படி எழுதிக்கொண்டே போகலாம். பத்திரிக்கைகளும் மனசாட்சி  இன்றி பிரசுரிக்கின்றன


இலக்கிய இதழ்கள் செய்வது வேறு வகை காமெடி

இந்த சூழலில் , சில அற்புதமான ஹைக்கூக்களை மேற்கோளாக அவர் சுட்டியிருப்பது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது

கோமயாஷி இஸ்ஸா"வின் ஹைக்கூ ஒன்று..


எனக்கொரு காலம் வரும்
அப்போது விருந்துக்கு அழைப்பேன்
வந்துவிடுங்கள் ஈக்களே.


படித்ததும் ஒரு காட்சி , ஒரு வாழ்க்கை , ஒரு மனிதனின் முழுச்சித்திரம் கண் முன் தெரிகிறதல்லவா.

ஷிகி என்பவரின் ஜப்பானிய ஹைக்கூ

கடும்கோடை
சுடுமணலில்
நமது கால்தடங்கள்

என்ன ஒரு விஷுவல் கவிதை !!



இன்னொரு ஹைக்கூ.

மலைச்சிகரத்தின் உச்சியில்
நிலவின் விருந்தாளியாக
இன்னும் ஒருவர்


இதை வைத்து ஒரு குறும்படமே எடுத்துவிடலாம் போல..

பிரேம்ரமேஷ் , ஜெயமோகன் , சாரு நிவேதிதா , பிரம்மராஜன் என பல்வேறு ஆளுமைகள் நூலில் வருகின்றனர்.இதில் வரும் என் ஆர் தாசன் குறித்து அநேகமாக நம் வலைத்தளத்தில் மட்டுமே பார்க்க முடியும் என நினைக்கிறேன் http://www.pichaikaaran.com/2020/02/blog-post_4.html?m=1

இது வருத்தம் தரும் சூழல்

முன்னோடிகளைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு இந்நூல் ஈதவும்

ஒரே அமர்வில் படிக்கக்கூடிய சுவையான நூல்

ஐந்திணைப் பதிப்பக வெளியீடு



Monday, March 18, 2019

காசி ஆனந்தன் கவிதை நூல் - ஒரு பார்வை


கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் எனக்குப் பிடிக்கும்

இலங்கை படுகொலைகளை பலரும் மறந்து விட்டு காங்கிரஸ் ஆதரவாளர்களாக மாறி விட்ட சூழலில் , இன்றும்கூட காங்கிரஸ் எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் சிலரில் இவரும் ஒருவர்..

அவர் கவிதைகள் பலவும் பிரபலமானவை என்றாலும் , காசி ஆனந்தன் நறுக்குகள் என்ற கவிதை நூல் தனித்துவம் வாய்ந்தது என்பதால் அனைவரும் வாங்கிப்படிக்கலாம்

அதற்கு முக்கிய காரணம் , இவரது முன்னுரை.. சிறுகதை , புதுக்கவிதை போன்றவை ஆங்கிலத்தில் இருந்து இங்கு வந்தன என்ற கருதுகோளே தவறு என ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறார்... ஆங்கிலம் என்ற மொழி தோன்றுவதற்கு முன்பே , தமிழில் கவிதைகள் வந்து விட்டன என ஆதாரங்கள் தருவது ஆச்சர்யம் அளிக்கிறது

பாரதிதாசனை ஏற்போர் சிலர் பாரதியை ஏற்பதில்லை..இவரோ இருவரையும் ஏற்கிறார்..அதுதான் கவிதை மனம்,, இருவரைப்பற்றியும் அழகாக எழுதி இருக்கிறார்

இன்னொரு சிறப்பம்சம் , திகசி யின் அணிந்துரை

சிறப்பு மேல் சிறப்பாக இன்னொரு சிறப்பு , வல்லிக்கண்ணனின் சிறப்புரை

வீர சந்தானம் அவர்களின் ஓவியம் கூடுதல் சிறப்பு

கண்டிப்பாக படியுங்கள்

நூல் : காசி ஆனந்தன்  நறுக்குகள்




சில கவிதைகள்



முரண்..
இறைவனின் வாகனம் என்றான் நாயை
அவதாரம் என்றான் பன்றியை
இறைவனே என்றான் குரங்கை
இவனே திட்டினான் என்னை
நாயே! பன்றியே! குரங்கே!


நாற்காலி..
இங்கே வேறுபாடு அதிகம் இல்லை
நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.
வீடு தூங்க கட்டில்
நாடு தூங்க நாற்காலி

ஞானம்..
ஞானம் பெற்றது
நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்
கட்டப்பட்டதால் நான்-என் மண்ணில்
பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்.


பாடம்..
புரட்சியாவது வெங்காயமாவது
என்கிறாய்
தெரிந்து பேசு
காயப்படுத்தியவனின் கண்ணீரை
வாங்கும் வெஙகாயம்.
சென்னிரை வாங்கும் புரட்சி



கோயில்..

செருப்புகளை வெளியே விட்டு
உள்ளே போகிறது அழுக்கு.


தளை..
கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள்
பெண்கள் விடுதலை அமைப்பில்சேர.


வில்..
வீழ்ந்த தமிழன் கதையை
விம்மி விம்மி பாடிக்கொண்டிருக்கிறது
மேடையில்-
வெட்கம் கெட்ட வில்


பெண்மை..
தெரிவது உனக்கு அவள் கண்களில்
வண்டும் மீனும் பூவும்
தெரிவதில்லை கண்ணீர் 


வெறி..
எரியவில்லை அடுப்பு சேரியில்.
போராடினோம்…
எரிந்ததுஅடுப்பல்ல-சேரி


வீரம்..
உன் கனவில் பாம்பு துரத்துகிறது
நீ ஓடுகிறாய்
குறவன் அவன் துரத்துகிறான்
பாம்பு ஓடுகிறது
வீரம் தொழிலாளிக்கு . 


சாமி..
எங்கள் குடிசையில்
அடிக்கடி சாமி ஆடுவாள்
அம்மா ஏனோ தெரியவில்லை
அன்றும் இன்றும்
குடிசைக்கே வருகிறது சாமி
மாடிக்கே போகிறது வரம். 


நிழல்..
எதிரிகளால் அழிக்கப்பட்டன எங்கள் காடுகள்
நிமிர்ந்தோம்
இன்று-போராளிகளின் நிழலில் மரங்கள்
மாவீரன்..இது உயிருக்கு வந்த சாவு அல்ல
சாவுக்கு வந்த உயிர்;


போர்..
ஊரில் உங்கள் சுடுகாடு.
சுடுகாட்டில் எங்கள் ஊர்.


உறுத்தல்..
இரவெல்லாம் விழித்திருந்து
எங்களுர் ஆச்சி இழைத்தபனைபபாய்…
வாங்கினேன் உறங்குவது எப்படி
இவள் பாயில்?


மனிதன்..
இவன் பசுவின் பாலைக்கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையை திருடிற்று என்கிறான்
இப்படியாக மனிதன்….


மானம்..
உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா?
அவன் கைகளை வெட்டு
கெஞ்சி கோவணம் கட்டாதே
அம்மணமாகவே போராடு.


அறுவடை..
திரைப்படச்சுவரொட்டியை
தின்றகழுதை கொழுத்தது
பார்த்த கழுதை புழுத்தது


மந்தை..
மேடை
தமிழா!
ஆடாய் மாடாய்
ஆனாயடா…
நீ என்றேன்
கைதட்டினான்


பெண்..
ஏடுகளில் முன்பக்கத்தின்
அட்டையில்
வீடுகளில் பின்பக்கத்தில்
அடுப்பங்கரையில்.


கொடை..
தங்க வளையலைக்கழற்றி
போராளியிடம் தந்தாள்
செலவுக்குவைத்துக்கொள்
உங்களில் பலருக்கு
கைகளே இல்லை
எனக்கு எதுக்கு வளையல்.


திமிர்..
வேலைக்காரன்மேல் பாய்ந்தார்
நாயே பீட்டரை கவனித்தாயா?
இவர் வீட்டில் பீட்டர் என்றால் நாய்
நாய் என்றால் மனிதன்


கொலை..
ஒரு நாள் வாழ்க்கை பூவுக்கு…
விரியுமுன்பே பறித்து
இனறவனுக்கு அர்ச்சனை
செய்கிறான்
நூறாண்டு வாழ்ககை வேண்டி தனக்கு


அடக்கம்..
அடக்கம் செய்யப்படுகிறோம்…
இரண்டு பெட்டிகளில்.
சவப்பொட்டியிலும்
தொலைக்காட்சிப் பெட்டியிலும்


உலகமைதி..
மாந்த நேயம் பேசின அணுகுண்டுகள்
புறாக்களை பறக்கவிட்டன கழுகுகள்.
போராடிக்கொண்டிருக்கிறது அமைதி.


அடி ..
கலையை கலைஞனை
போற்றிய நாடிது என்கிறாய்…
காலம் காலமாய்
பறையை பறயனை தாழ்த்திய நீ.


ஆணாதிக்கம்..
எப்படியும் இருக்கலாம்
ஆணிண் திமிர்
திரௌபதைக்கு கணவன் ஐந்தாகவும்
அர்ச்சுனனுக்கு மனைவி ஐந்தாகவும்


வேலி..
மயில் இறகு புலித்தோல்
மான் கொம்பு யானைத்தந்தம்
அழகாய் இருக்கிறது எங்கள் வீடு.
வனவிலங்குகள் காப்பாளர் அப்பா


காலம்..
உன் கையிலா கடிகாரம்?
கடிகாரத்தின் கையில் நீ.


கடற்கரை..
உடல் நலம் தேடி
காற்றுவாங்க வந்து போகும்
பெரியஇடத்து மாடிகள்
இங்கேயே நோயோடும் நொடியோடும்
ஒடுங் கிடக்கும் மீனவர் குடிசைகள்


நிலவு..
புராணமாய் இறைவனின் தலையில்
வரலாறாய் மனிதனின் காலில்.


இருள்..
பகலிலும் தலைவர்கள் குத்துவிளக்கு ஏற்ற
நிகழ்ந்தன விழாக்கள்.தேடுகிறோம்…
எங்கேவெளிச்சம்?


தாஜ்மஹால்..
காதலி புதைக்கப்படட இடம் காட்டுகிறாய்
காதலை புதைத்த இடம் காட்டு
எங்கே ஷாஜஹானால் கசக்கி எறியப்பட்ட
அந்தப்புரப்பெண்களின் கறுப்புகல்லறைகள்?


புலமை..
கண்ணீர் சிந்துகிறோம் கண்ணீருக்காக
இவன் உவமைகளும்…முத்துக்கள்
என்றானே கண்ணீரை!


பால்..
என்னைத் தெய்வம் ஆக்கினாய்
சிவன்பாதி சக்திபாதி என்றாய் ஏமாற்றாதே-
உன்பால் வேறுபாடு அழுத்தமானது
சிவனுக்கு பசுப்பாலும் சக்திக்குகள்ளிபாலும்


அரண்..
என் வலகையில் ஐந்துவிரல்கள்
உண்ணவும் வணங்கவும் மட்டுமல்ல
அறையவும்தான்.


தேர்தல்..
மாலை வளையல் ழூக்குத்தி
பென்னான எதுகும் இல்லை
எங்கள் குடிசையில்.
அவன் செல்கிறான்
இருக்கிறதாம் எங்களிடம்…
பொன்னான வாக்குகள்

இனவெறி..
மாடுகள் காணாமல்போகும் என்று
தோலில் குறிபோடும் எங்கள் மண்
கொஞ்சநாளாய்…
மனிதர்களையே காணவில்லையே.


குப்பைத்தொட்டி..
அலுவலகத்தில் இருக்கிறவனுக்
இது குப்பைத்தொட்டி
குப்பை பொறுக்கி வாழ்கிறவனுக்கு
இதுஅலுவலகம்.


ஏழ்மை..
சதை பிடித்து விடுகிறாள்
அழகு நிலையத்தில்
எலும்புக்கைகளால்


கண்ணோட்டம்..
செருப்பைப்பார்கையில் நீங்கள்
அணிந்திருக்கிறவனின்
காலைப்பார்க்கிறீர்கள்.
நான் செய்தவனின்
கையைப்பார்க்கிறேன்


நிமிர்வு..
தேவை பயில்வன்களல்ல வீரர்கள்
உன் உடலின் கூனல்பற்றிய கவலைவிடு
வில்லில் இல்லாத நிமிர்வா?


கூண்டு..
விடுதலை ஆவாரா சிறையில்
இருந்து என்கணவர்?
சோதிடம கேட்கிறாள்
கூண்டுக்கிளியிடம்


மண்..
என்னை என் மண்ணில்
புதைத்தாய் பகைவனே!
என் மண்ணை
எங்கே புதைப்பாய்?


குடுகுடு..
நல்லகாலம் வருகுது
நல்லகாலம் வருகுது..
தெருவிலேயே நிற்கிறான்
குடுகுடுப்பைக்காரன்

Thursday, February 14, 2019

படித்தவற்றில் பிடித்தவை - இரு கவிதைகள்

படித்தவற்றுள் பிடித்தவை

( சுமதி இராமசுப்ரமணியம் கவிதைகள்)

மருதமலை ஏறி

மாடிப்படி ஏறுகையில்
பயம் கொள்ளும் சிறுமியவள்

அப்பா இருசக்கர வாகனம் இயக்க
முன்னால் நின்றபடி

மருதமலை உயரம் ஏறி
கிழித்துப்போட்ட பேப்பர் துண்டுகளாய்
வீடுகள் தெரியும் அடிவாரம் நோக்கி

அலட்சியமாய் வீசி எறிகிறாள்

தன் பயத்தை’


---------------------

சிறுமியின் மரம் வளர்க்கும் ஆசை

அப்பாவின்

சிநேகிதர் வீட்டு திருமண விழாவில்

தாம்பூல பைக்கு பதிலாக

மரக்கன்று தரப்பட்டது

” அப்பா அம்மாவுக்கு ஒன்று போக
எனக்காக ஒன்று ”

ஆசையோடு கேட்டு வாங்கிக்கொண்டாள்

வாடகை வீட்டில் வசிக்கும் சிறுமி

Saturday, November 10, 2018

ஓர் எழுத்தில் மாறும் அர்த்தம் - இளையராஜா குறித்து மேத்தா ருசிகரம்


கவிதை உலகில் மு மேத்தாவுக்கு என தனி இடம் உண்டு.. புதுக்கவிதைகளுக்கு என தனி இடம் உருவாக்கி கொடுத்தவர்களில் இவரும் ஒருவர்

அதே நேரத்தில் அற்புதமான திரை இசை பாடல்களும் தந்தவர்


யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ
மேகம் தன்னை மேகம் மோதி மின்னல் மின்னுதோ ஹோ
மின்னல் இந்த நேரம் எந்தன் கண்ணில் மின்னுதோ
ஒரு ராகம் புது ராகம்
அதில் சோகம் தான் ஏனோ



படிச்சவங்க விடுற பட்டமும்
காகிதம் தான் காகிதம் தான்
படிக்காதவன் விடுற பட்டமும்
காகிதம் தான் காகிதம் தான்
புத்தகம் உள்ளது பையில அங்க
வித்தைகள் உள்ளது கையில இங்க
நான் படிப்பது மனுஷன தாண்டா



கண்ணகி இங்க வந்தா கண்ணடிக்கும் கூட்டமுங்க
மதுரைய எரிச்சவளே மனசு மாற கூடுமுங்க
நித்தமும் வீதியில் ஊர்வலமா
சத்தமும் சண்டையும் சம்மதமா
நித்தமும் வீதியில் ஊர்வலமா
சத்தமும் சண்டையும் சம்மதமா
புத்தனும் இப்போ பட்டணம் வந்தா போதை மரத்துல ஏறிக்குவான்



என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
என் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
கல கலவென துள்ளி குதிக்கும் சின்னஞ்சிறு அலையே
என் நிலையை கேட்டால் உங்கள் துள்ளலும் தன்னால் அடங்கிவிடும்
உங்களைப்போல சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன்
சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன்
ஒரு பாட்டு போதுமோ எடுத்து கூறவே இதயம் தாங்குமோ நீ கூறு

என பல அற்புதமான வரிகள் தந்தவர் இவர்

..
--------------------------

இளையராஜாவின் செல்லப்பிள்ளை இவர்,,, அவருடனான சில சுவையான நிகழ்வுகள்

ஆகாய கங்கை படத்தில் இளைய ராஜா இசையில் எழுதினார்..


தேனருவியில் நனைந்திடும் மலரோ,,, என பாடல் ஆரம்பிக்கும்... 
அந்த பாடலில் இளையராஜா ஒரு மாற்றம் செய்தார்

 நீ நிலவோ... ஏன் தொலைவோ என்பது இவர் எழுதிய வரி,

 நீ என்ன நிலவோ... எட்ட முடியா தொலைவில் இருக்கின்றனயே என பொருள் தருகிறது,,, கவித்துவமாக இருக்கிறது...   ஒரு கவிதையாக சிறப்பாக இருக்கிறது...  ஒரு தனி கவிதை என்றால் மிகச்சிறப்பாக இருக்கும்

ஆனால் இது பாடல்.. அதுவும் பிரிவைப்பற்றிய பாடல்...   நிலவின் குணாதிசங்களை விட பிரிவைச் சொல்வதுதான் முக்கியம்

எனவே இதை இப்படி மாற்றினார் ராஜா... 

ஏன் தொலைவோ,.... நீ நிலவோ

ஏன் எட்ட முடியாத தொலைவில் இருக்கிறாய்?  நீ குளிர் பொருந்திய இனிமையான நிலவு என்பதால் இந்த தொலைவோ,,,

நச் என பொருந்துகிறது அல்லவா


இதே போல இன்னொரு சம்பவம்

சிறையில் மோகன் இருக்கிறார்.. ரேவதி வெளியில் இருந்து பாடுகிறார் , 

 நிலவைப்பார்த்தபடி மோகனுக்கும் பொருந்தும்படி பாடுகிறார்

பாடு நிலாவே.. தேன் கவிதை,, பூ மலர    என்பது அவர் எழுதிய வரி

இளையராஜா கேட்டார்,.. நல்ல வரிதான்.. ஆனால் சிறையில் இருக்கும் மோகன் இதை எப்படி பாட முடியும்,, அவருக்கு நிலா தெரியாதே 

ஒரே ஒரு எழுத்து மாற்றம் இந்த சந்தேகத்தை போக்கியது

இப்படி மாற்றப்பட்டது

பாடும் நிலாவே.. தேன் கவிதை... பூ மலரே

ஹீரோயின் பாடும்போது , பூ மலர்வதற்காக பாடுவாய் நிலவே என்ற அர்த்தம் வருகிறது

ஹீரோ பாடும்போது , ஹீரோயினை நிலவு என்றும் மலர் என்றும் வர்ணிப்பது போல வருகிறது’

தமிழ் அழகு,.. இசை இனிது.... மு மேத்தா இளையராஜா போன்றோரின் திறமை இனிது






Friday, November 9, 2018

பிரச்சினைகளுக்கு தீர்வு யாதென கேட்டேன் - பிரசுரம் ஆகாத கண்ணதாசன் கவிதை



 கேவலமான சாலைகளுக்கு

தீர்வு யாதெனக் கேட்டேன்

ஹெல்மெட் இல்லாதவர்களுக்கு

அபராதம் போடுவோம் என்றார்

அரசாங்க பிரதிநிதி

ஆலைகள் , புகை என சுற்றுச்சூழல்

சீர்கேடுகளுக்கு தீர்வு என்ன என்றேன்

தீபாவளிக்கு பட்டாசு கொளுத்தும்

குழந்தைகளை சிறை வைப்போம் என்றார் அரசு அதிகாரி

வேலை இல்லா திண்டாடத்துக்கு தீர்வு கேட்டேன்

வேலை இல்லாதவர்களுக்கு அபராதம் விதிக்க

யோசிக்கிறோம் என்றார் அவர்


பிளாஸ்டிக் குப்பை மலைகளை

எப்படி சமாளிப்பீர்கள் என கேட்டேன்

பிளாஸ்டிக் பையில் பொருட்கள் வாங்க

கூடுதல் கட்டணத்தை உங்கள் மீது திணிப்போம் என்றார் அவர்

தக்காளி... எல்லா பிரச்சனைகளுக்கு பலி ஆடுகள் நாங்கள் என்றால்

அரசு என ஒன்று எதற்கு என கேட்டேன்

அரசாங்க பிரதி நிதி அருகே வந்து ரகசியமாய் சொன்னார்..


அந்த பிரச்சனைகளை உருவக்குவதற்கு ஆள் வேண்டாமா

அவற்றை உருவாக்குவதே நாங்கள்தானே 

Tuesday, January 10, 2017

மறக்க முடியாத குமரகுருபரன் கவிதை


குமரகுருபரனின் ஞானம் நுரைக்கும் போத்தல் நூல் வெளியீட்டு விழாவில் பேசுவதற்காக நான் திட்டமிட்டிருந்த உரை , நேரமின்மை காரணமாக அங்கு பேச முடியவில்லை..இங்கே பதிவேற்றுகிறேன்

-----

அனைவர்க்கும் இனிய மாலை வணக்கம்..

குமரகுருபரன் கவிதை வாசிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.. நீங்களும் உங்களுக்குப் பிடித்த கவிதையை வாசித்து ஏன் பிடித்திருக்கிறது என சொல்லுங்கள் என ஆணையிட்டு விட்டு என் சம்மதத்துக்குக்கூட காத்திராமல் லைனை கட் செய்து விட்டார் கவிதா..

அங்கு வருபவர்கள் எல்லாம் இலக்கிய ஜாம்பவான்கள்... அப்படிப்பட்ட இரும்புக்கடையில் இந்த ஈக்கு என்ன வேலை என ஒரு கணம் நினைத்தேன்.. இன்னொன்று ..குமார் கவிதைகள் அனைத்துமே பிடிக்கும்.. இதில் எதை பேசுவது என்றும் குழப்பம்.. சரி. கவிதை எல்லாம் வாசிக்கவில்லை.. வறேன்.. பஃபே டின்னர் சாப்பிட்டு விட்டு கவிதைகளை கேட்டு விட்டு நண்பர்களைப் பார்த்து பேசி விட்டு கிளம்புகிறேன் என சொல்ல நினைத்தேன்.. ஆனால் அவர் போன் செய்தாலும் போனை எடுக்கவில்லை...அவள் அப்படித்தான் என நினைத்துக்கொண்டேன்.

 நண்பர்களே... அவர் கவிதைகள் எல்லாம் பிடித்தாலும் ஒரு குறிப்பிட்ட கவிதையை சொல்ல விரும்புகிறேன். அவரது சில கவிதைகளை அவ்வபோது ரிலாக்ஸ் செய்ய படிக்கலாம்..சில கவிதைகளை சற்று மன தளர்ச்சியின்போது படித்து சார்ஜ் செய்து கொள்ளலாம்.. சிலவற்றை மகிழ்ச்சியான தருணங்களில் அந்த சந்தோஷத்தை கவிதையுடன் கொண்டாடலாம். சில கவிதைகளை ப்ரிண்ட் எடுத்து கண்ணில் படும்படி ஒட்டி தினமும் படிக்கலாம்.. அப்படிப்பட்ட கவிதை இது.
----------------------------------------------------------
சிதைந்து போன கனவுகளில் ஒன்று 
எழுந்து போகாமல் அருகிலேயே 
அமர்ந்திருந்தது.

வெகு நேரமாய் அது பேசாமல் இருக்கவும் 
அந்த கனவு உருவான தருணம் குறித்த
ஓவியமொன்றை வரைந்து அளித்தேன்.

தன் முழுமை
தான் சிதைந்து பார்க்கும் கொடூரமொன்றை
அளிக்கிறாயே என்று முனகியது அக் கனவு.

இருக்கலாம்
அதற்குள் நானும் நீயும் நம்பிக்கையுடன்
இருந்தோம் என்பதை அது ஞாபகப் படுத்தும்
அல்லவா என்றேன்.

கனவற்று போன நொடியும்
அதற்குள்ளாகத் தானே இருக்கிறது
என்றது சிதைந்த கனவு.

உன் கனவுக்குள்
உன் கனவு உட்கார்ந்திருந்த சமயமும்
அதற்குள் தான் என்றேன்.

புதிதாக ஒன்றைக் கனவு காண் என்றது

சிதைந்த கனவொன்றை
ஞாபக மடிப்புகளுக்குள் மயிலிறகாக்கி
வைத்துக் கொள்வேன் என்றேன்.

மயில் ஆட மறப்பினும்
மயில் இறகு ஆடும்.

சிதைந்த கனவு எழுந்து
எனக்குள் மறுபடியும் வந்தது.

இந்த முறை
நான் அமைதியாக அதனை
அணைத்துக் கொண்டேன்.

கனவின் சிதைவும் கனவே
காணீர்


----------------------’’

இது ஆயிரம் வாசல் இதயம்..அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம். நம் கனவுகள் எத்தனை எத்தனை..

நண்பர்களே.. நானும் சில நண்பர்களும் முழுக்க முழுக்க இயற்கை வழியில் நடக்கும் விவசாயம் ஒன்றை கனவு கண்டோம்.. விவாதித்தோம்..உழைத்தோம்...எத்தனை இனிமையான நினைவுகள்.. ஆனால் சில காரணங்களால் அதை தொடர முடியவில்லை.. கெமிக்கல் உரங்களுக்கு மாறினோம்..இன்று நன்றாக நடக்கிறது.. ஆனால் அந்த கனவு சிதைந்து விட்டது...

இதனால் நான் வருந்திய இரவுகள் ஏராளம்..
ஆனால் இக்கவிதை என்னை மீட்டெடுத்தது

சிதைந்த கனவொன்றை 
ஞாபக மடிப்புகளுக்குள் மயிலிறகாக்கி
வைத்துக் கொள்வேன்
நானும் நீயும் நம்பிக்கையுடன் 
இருந்தோம் என்பதை அது ஞாபகப் படுத்தும் 
அல்லவா

இவ்வரிகள் என்னை ஏதோ செய்தன....   அந்த கனவு சிதைந்து இருக்கலாம்.. ஆனால் அந்த கனவின் ஆரம்பன கணங்களில் அது கொடுத்த நம்பிக்கை...அதன் இனிய நினைவுகள் அப்படியேதான் இருக்கின்றன...அந்த கணத்தை ஒரு பொக்கிஷம் போல , மயிலிறகாக்கி காப்பாற்ற வேண்டாமா என இக்கவிதை என்னிடம் வினவியது

அந்த கனவு உருவான தருணத்தை ஓவியமாக்கி என் முன் உலவ விட்டது கவிதை

இபப்டி உலவ விட்டால் நான் என்ன கேட்பேன் என்பதையும் எனக்காக குமார் யோசித்து என் சார்பில் எழுதுவார்

தான் சிதைந்து பார்க்கும் கொடூரமொன்றை 
அளிக்கிறாயே என்று முனகியது அக் கனவு

அந்த இனிய நினைவுகளை நினைக்கையில் அதன் அழிவும் நினைவுக்கு வருமே

-வரட்டுமே..அந்த நம்பிக்கையும் இனிய நினைவுகளும் அதற்குள்தானே இருக்கின்றன

-இதற்கு மேல் பேச முடியாமல் அந்த இனிய நினைவுகள் என்னுள் படர்தன

மயில் ஆட மறப்பினும் மயில் இறகு மறக்குமோ

என்னவொரு ஆழமான படிமம்

நம் மனம் இயங்க மறப்பினும் ஆழ் மனம் , ஆழ மனத்தை கடந்த நான்.. ஆன்மா... துரிய நிலை என எங்கேயோ அழைத்துச் செல்கிறது இந்த வரிகள்

கனவு சிதைவுமேகூட கனவுதான்..

பிக் பாங்க் மூலம் உலகம் உருவான அந்த முதல் கணத்திலேயே , அது எப்படி வளர வேண்டும் ..எப்படி சிதைய வேண்டும் போன்ற்வை தீர்மானிக்கப்பட்டு விட்டன

சிதைவு என்பது அஞ்ச வேண்டிய ஒன்றல்ல...அதுதான் வளர்ச்சி... நிலை மறுத்தல் , நிலை மறுத்தலை நிலை மறுத்தல் என க்ம்யூனிச நூல்களில் சொல்கிறார்களே.. எண்ட்ரோபி என அறிவியலில் சொல்கிறார்களே... விதையின் சிதைவுதான் கோதுமை.. கோதுமையின் சிதைவுதான் மீண்டும் விதை

விதை சிதைந்து மீண்டும் கோதுமை சிதைந்து விதை ஆகும்போது , முன்பு இருந்ததைவுட பல மடங்கு விதை உற்பத்தி ஆகி இருக்கும்..

கனவின் சிதைவும் கனவே கண்டீர்


அமைதியாக நம் கனவுகளை அணைக்கக் கற்றுக்கொண்டால் வாழ்வில் ஏது துயரம்.. ஏது வன்முறை.. ஏது ஆசிட் வீச்சுகள்.. வன்முறைகள் ..தற்கொலைகள்

லைஃப் இஸ் அ செலப்ரேஷன்.. செலப்ரேட் இட்..லைஃப் இஸ் அ கேம்..ப்லே இட்.. என கற்றுத்தரும் இக்கவிதை ப்ரிண்ட் செய்யபட்டு ஒவ்வொருவரின் பாக்கெட்டிலும் லாமினேட் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்பதே இப்போதைய என் கனவு என சொல்லி விடைபெறுகிறேன்.    நன்றி... வணக்கம்



Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா