எது நல்ல கவிதை என்பதை யாரும் வரையறுக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவிதை பிடிக்கும். என்னைப் பொறுத்த ஒரு கவிஞர் தன் உணர்ச்சிகளை தன் உணர்வுகளைத் துல்லியமாக வாசகனுக்கு கடத்தி விட்டார் என்றால் அது நல்ல கவிதை.
போராளி முத்துக்குமரன் மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு. அவர்தம் மரண சாசனத்தில் ஒவ்வொரு வரியையையும் செதுக்கி இருப்பார். ஞானிகள்தாம் தம் மரணத்தை திட்டமிட்டு வரவழைக்க முடியும் என்பார்கள். உணர்ச்சி வசப்படாமல் ஒரு முடிவு எடுத்து , இப்படி ஒரு தியாகத்தை இந்த முறையில் செய்தவர்கள் வேறு யாரும் இருப்பதாக தெரியவில்லை.
இவர்தம் கவிதை நூலை படிக்க ஒரு வித தயக்கம் இருந்தது. மாமனிதர் என்பது வேறு. ஆனால் கவிதை என்பது வேறு துறை. ஒரு கவிஞராக எப்படி இருப்பார் என்பது தெரியாததால் படிப்பதை ஒத்தி போட்டுக்கொண்டே இருந்தேன்.
ஒரு நாள் என் தோழி ஒருவரைப்பார்த்து பேசி கொண்டிருந்த போது தற்செயலாக என் பையில் நெஞ்சத்து நெருப்புத் துணுக்கு என்ற புதியவன் கு. முத்துக்குமரனின் ( இந்த பெயரில்தான் அவர் ஒரு கவிஞராக அடையாளப்பட விரும்பினார் ) கவிதை புத்தகத்தை பார்த்தார்.
அந்த தோழிக்கு கவிதை, அரசியல் என எதிலும் ஆர்வம் இல்லை. அட்டைப்படத்தை பார்த்து விட்டு, இதில் முத்துக்குமார் யார் என கேட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
புத்தகத்தை கேஷுவலாக புரட்டியவர் ஆங்காங்கு நிறுத்தி படிக்க ஆரம்பித்தார்.
அதன் பின் , “ படித்து விட்டு நாளை தரட்டுமா “ என்றார்.
ஆச்சர்யமாக இருந்தது. முதல் முறையாக கவிதை படிக்கிறார் . நல்லது என இரவல் கொடுத்தேன்.
மறு நாள் புத்தகம் கொடுத்து விட்டு, பாராட்டி பேசினார். அப்போதுதான் எனக்கும் படிக்கும் ஆவல் ஏற்பட்டது ( இதில் இணைக்கப்பட்டுள்ள கடைசி அறிக்கையை இப்போதுதான் முழுமையாக் படிக்கிறார் . கலங்கி விட்டார் )
அதன் பின் நான் படிக்க ஆரம்பித்தேன்.
படித்த பின்பு , முத்துக்குமாரைப்பற்றி புதிய பார்வை கிடைத்தது. அவருக்குள் லட்சிய நெருப்பு எப்போதுமே இருந்து வந்து இருக்கிறது. அதே சமயம் நுண்ணிய ரசனைகள், நகைச்சுவை உணர்வு, காதல் என எல்லாமும் இருந்து இருக்கிறது. முழுக்க முழுக்க சீரியசான, பிரச்சார பாணியில் கவிதை நூல் இருக்கும் என நினைத்த எனக்கு இது ஒரு சர்ப்ரைஸ்
தாய் மடி என்ற கவிதை
செருப்பை உதறி விட்டு நடக்கிறேன்
இது என் தாய் மண்ணல்ல
தாய் மடி
இவை வெறும் சொற்கள் அல்ல. அவரது நம்பிக்கை. உணர்வு.
இதை முன்னுரையில் அழகாக விளக்குகிறார் கவிதாசரண்.
இப்படி தீவிரமான உணர்வுடன் கவிதை எழுதிய அவரே , மிக லைட்டான கவிதைகளும் படைத்து இருக்கிறார்.
உருவம் காட்டி
சகியே
இமைகளை
சிமிட்டாதே
நான் என்
முகம் பார்க்க
வேண்டும் உன் கண்ணில்
வாங்க, ஆவியைப் பற்றி பேசலாம் என்ற தலைப்பில் நகைச்சுவை கவிதை ஒன்று, ரஜினியை வம்புக்கிழுக்கும் கவிதை, இலங்கை பிரச்சினை, தீக்குளிப்பு, செய்தி விம்ர்சன கவிதை, காற்றையும் காதலியையும் ஒப்பிடும் கவிதை என எல்லாமே ரசிக்க வைக்கின்றன.
நான் மிகவும் ரசித்தது இந்த கவிதை
உன் வீட்டு
குப்பை தொட்டியை
பற்றி சொல் - நான்
உண்மையில் சொல்வேன்
உன்னைப்பற்றி
ஞெகிழி
குப்பையா? - நீ
மத்திய வர்க்க
சுகவாசி
காகித
வெங்காய
குப்பையா? - நீ
அன்றாடங் காய்ச்சி
புதிய
கவிஞர்களின்
முறிந்த சிறகுகள் குப்பையாகவா?
மன்னிக்கவும்
நீங்கள்தான்
“ மாண்புமிகு எழுத்தாள்ர்”
சுஜாதா
இதில் இவரது இறுதி அறிக்கையை இணைத்து இருப்பது சிறப்பு. முன்னுரையும் அருமை
கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். கவிதைகள் பிடிக்காது என்பவர்கள்கூட முத்துக்குமரனை அறிந்து கொள்ள இதை படிப்பது அவசியம்
வெளியீடு : கவிதாசரண் பதிப்பகம்
விலை : ரூ 50
Nedumaran, VaiKo, Ramadoss, ThiruMa, Seeman, etc are all live, why did he commit suicide? I am sorry to say this but I consider that stupidity!
ReplyDelete