Tuesday, July 17, 2012

அவமதிக்கப்பட்டவர்களும் , நிந்திக்கப்பட்டவர்களும் - தாஸ்தயேவ்ஸ்கியின் மாஸ்டர் பீஸ்

சிந்தனை , அறிவு போன்றவற்றின் மீது நமக்கு பெரிய மயக்கம் உண்டு. இது புரிந்து கொள்ளக்கூடியதுதான். மனிதனை , மற்ற உயிரினங்களில் இருந்து வேறு படுத்தி காட்டுவது சிந்தனை சக்தியே. அதாவது மனம் என்ற அம்சம்.

ஆனால் யோசித்து பார்த்தால் , நாம் காணும் பல பிரச்சினைகளுக்கு காரணம் மனம் தவறாகவும் , துவேஷத்துடனும் இயங்குவதுதான். விலங்குகள் பசிக்காக , மற்ற விலங்குகளை கொல்லக்கூடும். ஆனால் கூட்டம் கூட்டமாக சக விலங்குகளை கொல்வதோ , இழிவு படுத்துவதோ இல்லை. இவை மனித இனத்தின் தனி “சிறப்புகள்”.

இப்போது சொல்லுங்கள். அறிவாற்றல் , சிந்தனை சக்தி என்பது வரமா அல்லது சாபமா? எல்லோருமே அப்பாவிகளாக இருக்கும் உலகம் ஒன்று இருந்தால் , அங்கு இது போன்ற கொடூரங்கள் நடக்காதோ.. அப்பாவியாக , அசடனாக இருப்பதே மேன்மையா..


இது போன்ற கேள்விகளுக்கு தாஸ்தயேவ்ஸ்கியின் நூல்களில் பதில்களை காணலாம்.

அவமதிக்கப்பட்டவர்களும், நிந்திக்கப்பட்டவர்களும் - இது அவரது முக்கியமான நாவல்களில் ஒன்று.

என்ன கதை ?


**********************************************
வான்யா என்ற இளம் எழுத்தாளன் கதையை சொல்கிறான். நாவல் முழுக்க இவன் பார்வையிலேயே இருக்கிறது.

நிக்கோலே மற்றும் அன்னா ஆண்ட்ரேயேவ்னா ஆகிய தம்பதிகளின் பெண் நடாஷா. இவர்கள் பணக்காரர்களாக இருந்தவர்கள். ப்ரின்ஸ் வால்கோவ்ஸ்கி என்பவனால் ஏமாற்ற்றப்பட்டு கஷ்டங்களை சந்தித்தவர்கள். சந்திப்பவர்கள்.
வால்கோவ்ஸ்கி மிகவும் தந்திரசாலி , அறிவாளி. யாரையும் இவனால் தன் அறிவால் வெல்ல முடியும் . ஏமாற்ற முடியும். இவன் மகன் அலக்சே தன் தந்தைக்கு நேர் எதிர். அப்பாவி. எடுப்பார் கைப்பிள்ளை. இவனது அப்பாவித்தனத்தால் கவரப்பட்டு , நடஷா அவனை காதலிக்கிறாள். பெற்றோர்கள் எதிர்ப்பையும் மீறி தன் காதலனை மணக்கும் பொருட்டு வீட்டை விட்டு வெளியேறி பெற்றோர்களின் எதிர்ப்பை சம்பாதிக்கிறாள்.

இவளை உளப்பூர்வமாக காதலிக்கும் வான்யாவுக்கு இவள் எடுத்த முடிவு ஏமாற்றம்தான். ஆனாலும் அவளுக்கும், அவள் காதலுக்கும் உதவியாக இருக்கிறான்.

வால்கோவ்ஸ்கிக்கு தன் மகன் காதலை ஏற்க விருப்பம் இல்லை. பணக்கார பெண்ணான கத்ரீனாவை அவனுக்கு மணம் முடிக்க நினைக்கிறான். கடைசியில் வழக்கம்போல அவன் அறிவு கூர்மை வெல்கிறது, மகன் தன் தந்தை முடிவுக்கு கட்டுப்படுகிறான்.

இதற்கிடையில் , ஸ்மித் என்ற கிழவர் இறப்பதை தன் கண் முன் காணும் வான்யா , அந்த கிழவனின் பேத்தியான எலினாவை காப்பாற்ரி தன்னுடன் வைத்து கொள்கிறான். எலினாவுக்கு ஒரு ஃப்ளேஷ் பேக். எலினாவின் தாய் , தன் தந்தையின் எதிர்ப்பை மீறி தன் காதலனுடன் சென்றவள். எலினா பிறந்தவுடன், அவள் சொத்துகளை பறித்து கொண்டு அனாதாரவாக விட்டு சென்றவன் அவன். கொஞ்ச காலத்தில் எலினாவின் தாய் இறந்து விடுகிறாள். இப்போது அவள் தாத்தாவான ஸ்மித்தும் இறந்து விட்டார்.

எலினாவை , ந்டஷாவின் பெற்றோர்களிடன் ஒப்படைக்க நினைக்கிறான் வான்யா. அந்த சிறுமியின் கதை நடாஷாவின் பெற்றோர்கள் மனதை மாற்றுகிறது. தம் கோபத்தை மறந்து நடாஷவை மீண்டும் ஏற்கின்றனர். நடாஷா , வான்யாவின் காதலை புரிந்து கொண்டு அவனுடன் சேர்கிறாள் .

எலினாவின் தந்தை யார் என்ற திடுக்கிடும் உண்மை வெளியாகிறது.

*****************************************************


அறிவு கூர்மை மிக்க வால்கோவ்ஸ்கி , வெற்றி மீது வெற்றி பெறுவதாகவும் , நல்லவர்களான மற்றவர்கள் நிந்திக்கப்படுவதாகவும் , அவமதிக்கப்படுவதாகவும் தோன்றுகிறது. இதன் மூலம் தாஸ்தயேவ்ஸ்கி என்ன சொல்கிறார் ? எந்த கேரக்டரை மேன்மையாக சித்திரிக்கிறார் ?அறிவோ , பணமோ ஒரு பொருட்டே இல்லை. சரியாக கையாளப்படாவிடில் இதனால் , கஷ்டம்தான். வால்கோவ்ஸ்கி வெற்றி மீது வெற்றி பெறுவதாக தோன்றினாலும் , அவன் வாழ்வின் உன்னதங்களை அனுபவிப்பதாக சொல்ல முடியாது. ஒரு மெஷின் போல வாழ்ந்த வாழ்க்கையே மீண்டும் மீண்டும் வாழ்கிறான்.
மற்ற அனைவரும் அவமதிப்புகளையும் கஷ்டங்களையுமே சந்திக்கிறார்கள். ஆனால் கஷ்டப்படுவது மட்டுமே ஒரு தகுதி அல்ல. அந்த கஷ்டங்களை எப்படி சந்திக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

அறிவாற்றலுக்கு எதிர் துருவமான அப்பாவித்தனத்தின் இலக்கணமாக , வால்கோவ்ஸ்கியின் மகன் சித்திரிகப்பட்டுள்ளான். அறிவு என்பது முழுமையை அனுபவிக்க உதவாது என்றால், இந்த மகன் வாழ்வின் முழுமையை உணர்ந்தானா? இவனை வான்யாவை விடவும் உத்தமனாக காட்டுகிறார் தாஸ்தயேவ்ஸ்கி . அப்படி என்றால் இவன் தான் வாழ்வை உணர்ந்தவனா?

இல்லை. இவனும் வாழ்வில் தோல்வியுற்றவனே. இவன் நல்லவன் தான் , இவனே நினைத்தாலும் கூட யாருக்கும் கெடுதல் செய்ய தெரியாத உன்னதமானவன் தான். ஆனால், வாழ்வின் இன்ப துன்பங்களை, அதன் கொடூரங்களை , மகிழ்ச்சிகளை இவன் அனுபவிக்கவே இல்லை. பாதுகாப்பாக ஓர் இட்த்தில் பத்திரமாக நிற்கும் கப்பல் போன்றவன் இவன், கடலில் இறங்கி , அலைகளை புயல்களை இவன் சந்திக்கவே இல்லை. இவன் பயணம் துவங்கவே இல்லை.
இவன் தந்தை ஒரே இடத்தை சுற்றி சுற்றி வருகிறான். இவனோ அதை கூட செய்ய முடியாமல் , தேங்கி நிற்கிறான். ஒரு வேளை , தந்தையை எதிர்த்து , நடாஷாவுடன் வழ்ந்து இருந்தால் , பண ரீதியாக கஷ்டப்பட்டு இருக்கலாம். ஆனால் அந்த க்‌ஷ்டத்தில் வாழ்க்கையை உணர்ந்து இருப்பான்.

கஷ்டத்திற்கு இரையாகி, தான் பட்ட கஷ்டங்களை மற்றவர்களும் அனுபவிக்க வைப்பவர்கள் பலர். ஆனால் வான்யா, தான் கஷ்டப்பட்டாலும் , அதையும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக எடுத்து கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறான். தன் காதலி எடுத்த முடிவு தவறு என சுட்டி காட்டுகிறான். அந்த முடிவை அவள் மறுத்த நிலையில், அவள் மீது கோபம் கொள்ளாமல் , அவளுக்கு உதவ முனைகிறான் .

அவன் பெரிய பணக்காரன் எல்லாம் அல்லன். ஆனால் அவன் விழிப்புணர்வும், அன்பும், வாழ்வின் அனுபவங்களும் அவனை முழுமை ஆக்குகின்றன.

கஷ்டங்களை மட்டுமே பார்த்த எலினாவின் மனதில் அன்பு பூ பூக்கும் காட்சி செமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கையை அப்படியே ஏற்க வேண்டும் என சொல்லும் இந்த நாவல் , தாஸ்தயேவ்ஸ்கியின் மாஸ்டர் பீஸ் என்றே சொல்லலாம்.

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா