Sunday, January 18, 2015

சாரு மீதான தாக்குதல் - மனுஷ்யபுத்திரன் கண்டனம்

சாரு மீது நடந்த தாக்குதல் குறித்து மனுஷ்யபுத்திரன்
-______________________________________________________________

இன்று புத்தகக் கண்காட்சியின் சிற்றரங்கில் எழுத்தாளர்- வாசகர் சந்திப்பில் சாருநிவேதிதா பங்கேற்றார். வழக்கம்போல நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தேன். ஒரு வாசகர் ‘’ எல்லா எழுத்தாளர்களும் பெருமாள் முருகன் விவகாரத்தில் அவருக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும்போது நீங்கள் மட்டும் இந்த சமயத்தில் அவரை விமர்சித்து எழுதியிருப்பது சரியா?’’ என்று கேட்டார். அதற்கு சாரு ‘’ நான் நீண்ட காலமாக பொது அபிப்ராயங்களுக்கு மாற்றான கருத்துக்களைத்தான் கூறி வந்திருக்கிறேன். மாதொரு பாகன் ஒரு ’மீடியாக்கர்’ நாவல். பொதுவாக இதுபோன்ற நாவல்கள்தான் சர்ச்சைகள் மூலம் பிரபலமாகின்றன. உதாரணமாக தஸ்லிமா நஸ்லீனீன் லஜ்ஜா ஒரு குப்பை’’ என்று கூறி தான் ஏன் மாதொரு பாகனை நிராகரிக்கிறேன் என்பது குறித்து பேச ஆரம்பித்தார். அப்போது மயிலை பாலு எழுந்து ‘ நீ எழுதுறதுதான் குப்பை…வாயை மூடு’’ என்று சத்தம் போட ஆரம்பித்தார். பதிலுக்கு சாரு ’’ ஒரு புத்தகத்தை நிராகரிக்க எனக்கு உரிமை இல்லையா? அதென்ன அவ்வளவு புனிதமான டெக்ஸ்டா?’’ என்று கேட்டார். ஆனால் மயிலை பாலு அவரை பேசவிடாமல் ஏகவசனத்தில் சத்தம்போட ஆரம்பித்தார். பதிலுக்கு சாருவும் ’ என்னை பேசவிடாமல் தடுத்தால் செருப்பால் அடிப்பேன்’ என்றார். உடனே பாலுவும் அவருக்கு ஆதரவானவர்களும் சத்தம் போட ஆரம்பித்தனர். நான் ‘ சாரு தன் கருத்தை சொல்லி முடித்ததும் நீங்கள் தாராளமாக அவரிடம் கேள்வி எழுப்பலாம். அவரை பேச அனுமதியுங்கள்’’ என்றேன். அதை யாரும் கேட்கவில்லை. நான் பின்னால் இருந்து எழுந்த சப்தத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கூட்டத்தை நடத்த முயன்றேன். பாதுகாவலர்கள் பாலுவை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
சிறிது நேரத்தில் பாலு வேறு சிலரை அழைத்துக்கொண்டு அரங்கத்திற்குள் வந்தார். அதில் ஒருவர் சாருவை மிகமோசமான வார்த்தைகளில் திட்டிக்கொண்டே அடிப்பதுபோல சாருவை நோக்கி வந்தார். அவர்பின்னால் சிலர் வந்தனர். அவர்களை வேறு சிலர் தடுத்தனர். பயங்கர கூச்சல் குழப்பம் நிலவியது. சிறிது நேரத்தில் காவல்துறையினர் வந்தனர். கூச்சல் போட்டுக்கொண்டுருந்தவர்களை வெளியேற்றினர். வெளியேற்றப்பட்டவர்கள் அரங்கத்திற்கு வெளியே நின்று சிறிது நேரம் சப்தமிட்டுக்கொண்டிருந்தனர். காவலர்கள் ’இங்கே பெருமாள் முருகன் பற்றி எதுவும் பேசவேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டனர். ஒரு இறுக்கமான சூழலில் சாரு வேறு பல கேள்விகளுக்கு பிறகு பதில் அளித்தார். கூட்டம் முடிந்ததும் காவல்துறையினர் பாதுகாப்பாக சாருவை அழைத்துச்சென்றனர்.
எனக்கு இந்த சம்பவத்தில் புரியாத சில விஷயங்கள் இருக்கின்றன? சாரு ஒரு எழுத்தாளரை நிராகத்தால் அதற்காக அவரைப் பேசவிடாமல் தடுப்பது என்ன நியாயம்? இப்படி தடுப்பவர்கள்தான் பெருமாள் முருகனுக்கு கருத்து சுதந்திரம் வேண்டுமென்று போராடுகிறார்கள். அப்படி என்றால் கருத்து சுதந்திரம் என்பது நாம் ஆதரிக்கிற ஒரு தரப்புக்கு மட்டும் உரிய ஒன்றா? முதலில் மோசமான ஒரு சூழலை ஏற்படுத்திவிட்டு பிறகு ‘ அவன் என்னை செருப்பால் அடிப்பேன் என்று சொன்னான்’ எனச் சொல்லி அனுதாபம் தேடுவதற்காக ஆளைத்திரட்டிக்கொண்டு அடிக்க வருவதில் என்ன நியாயம் இருக்கிறது? மாற்று அபிப்பராயங்களை ஏற்க முடியாமல் திருச்செங்கோடில் சாதி வெறியர்கள் பெருமாள் முருகனுக்கு எதிராக நடந்துகொள்வதற்கும் இன்றைய கூட்டத்தில் சாருவுக்கு நடந்தற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. ?
முதல் முறையாக காவல்துறையின துணையுடன் ஒரு இலக்கியச் சந்திப்பை நடத்த நேர்ந்தற்காக மிகுந்த அவமானமடைகிறேன். இது ஒட்டுமொத்தமாக பைத்தியக்காரத்தனமான ஒரு சூழல் . இதில் எல்லோருமே கோமாளியாகிக்கொண்டிருக்கிறோம்.
கடைசியில் எல்லாம் இதற்குத்தானா?

1 comment:

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா