Wednesday, June 10, 2020

எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி.. ஒரு பார்வை


எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவல் தமிழ் இலக்கியத்தின் சிறப்பானசாதனைகளுள் ஒன்று

ஆனால் ஒரு முரண்நகைச்சுவை இதில் இருக்கிறது.

இந்த நாவலை படித்த சிலர் இதைப் புகழ்வதாக நினைத்து , இந்த நாவலைப்பற்றி இப்படி சுருங்கச்சொல்வாதுண்டு

"வேம்பலை என்ற கிராமத்தின் மீது படிந்திருக்கும் துயர் எனும் இருளையும் அவ்வூர் மக்களின் வேதனைமிகு வாழ்வையும்  சொல்லும் நாவல்தான் நெடுங்குருதி"

 இதைக் கேட்கும் புதிய வாசகன் ஒருவன் இதை ஒரு புரட்சிகர நாவலாகவோ , சமூக நாவலாகவோ , மெலோடிலாமா வகை எழுத்தாகவோ நினைத்து விடக் கூடும்

   உண்மையில் இந்த நாவல் இதுபோன்ற குறுகிய வரையறைகளுக்கு அப்பாற்பட்டு ஒட்டு மொத்த மானுடத்தை நோக்கி உரையாடும் நாவலாகும்

அதே நேரத்தில் கதை நடக்கும் பூமியில் தன் பாதங்களை ஆழமாக ஊன்றி இருக்கிறது நெடுங்குருதி..

தனது பூமியின் துயர்களை , வலிகளை , சந்தோஷத்தை முழுமையாக உணர்ந்து , உலக இலக்கியங்களில் தேர்ந்த ஞானம் கொண்ட ஒருவரால்தான் இப்படி ஒன்றை படைக்க முடியும்

இன்று எழுதும் பலருக்கு பெரிதாக தாம் வாழும் நிலம் குறித்த பரிச்சயம் இருக்காது. படித்ததை வைத்து எழுதுவார்கள். அந்த எழுத்து வெகு அன்னியமாக நமக்கு தோன்றும்

சிலருக்கு அனுபவம் இருக்கிறது. இலக்கியம் குறித்த புரிதல் இருக்காது. இவர்கள் எழுத்தைப் படிக்கையில் ஆவணப்படம் பாரப்பது போல இருக்கும்.ரஷ்ய பனியை அனுபவித்தராத நாம் எப்படி தஸ்தயேவ்ஸ்கி எழுத்தில் ரஷ்ய சூழலையும் அதன் உணர்வுகளையும் உணர்கிறோமோ அதுபோல வெயிலையே அறிந்திராத ஒரு வசதியான நகரில் வாழும் மனிதனுடனும் உரையாடதக்க பொதுவான மானுட மொழிதான் நாவலின் சிறப்பு

கதை நடக்கும் காலகட்டம் குறித்தோ நில எல்லைகள் குறித்தோ பெரிதாக அக்கறைகாட்டாமல் மனிதனுள் உள்ளே பயணிக்கிறது எஸ். ராவின் எழுத்து

நாகு , அவன் பெற்றோர் , சகோதரிகள் , தாத்தா , மல்லிகா , ரத்னாவதி , ஆதிலட்சுமி, சென்னம்மா , ஜெயராணி , பவுல் , கிருபை , பாதிரி ,சமண துறவிகள் , சிங்கி , குருவன் , தெய்வானை , பக்கீர் , அவனது மனைவி , கிராம ஆசிரியர் , வசந்தா, சேது , சங்கு, திருமால் , லயோனல் , வீரம்மாள் என ஒவ்வொருவர் பாத்திரமும் அவர்கள் சார்ந்த சம்பவங்களும் அற்புதமாக அழகான சிறுகதைகளாக மிளிர்கின்றன. வெயிலும் ஒரு பிரதான பாத்திரமாக வருகிறது. வெயில் மட்டுமன்று. இருளும்கூட

500 பக்கங்களில் 100 அத்தியாயங்களில் பிரமாண்டமாக விரிந்திருக்கும் நாவல் ஒற்றை மையத்தை , ஒற்றை சரடை , ஒற்றை கருத்தை கொண்ட நாவல் அல்ல. படிக்கும் ஒவ்வொருவரும் தனக்கான கதையை உருவாக்க இடம் தரும் எழுத்து இது

உதாரணமாக , வேம்பலையின் நிழல் நகரமாக ஒரு ஊர் வருகிறது. வேம்மலையில் மறைந்தவை அங்கு வாழ்கின்றன
சென்னையில் அருண் ஹோட்டல் , ஆனந்த் தியேட்டர் போன்றவை மறைந்து விட்டாலும் இன்றும் அருண் ஹோட்டலுக்கு பஸ்சில் டிக்கெட்  கேட்டு வாங்க முடிகிறதல்லவா.  மறைந்தும் மறையாமல் வாழ்கிற ஊரை காண முடிபவர்களால் அந்த சித்திரத்தை தமக்குள் பொருத்திப் பார்க்க முடியுமக
எல்லா பாத்திரங்களும் முக்கியமனவை. அனைத்துக்கும் தனியாக கதை இருக்கிறது
   
உதாரணமாக கதையில் நாகுவின் அப்பா கேரக்டர்

பொறுப்பற்ற தன்னலமிக்க பாத்திரமாக அறிமுகம் ஆகிறது. பக்கீர் என்ற தன் நண்பனுக்கு துரோகம் செய்து அவன் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்துகிறார்.  பொறுப்பில்லாமல் தன் குடும்பத்தை பிரிந்து செல்கிறார்

ஆனால் அந்த பாத்திரம் பரிணாம வளர்ச்சி அடைந்து , அவர் மருமகள் அவர் தன் மேல் பெத்த அப்பனாக பாசம் காட்டி பார்த்துக் கொள்கிறார் என சொல்லத்தக்க அளவு உயர்கிறார்
இந்த மாற்றம் கவித்துவமாக ஒரு இடத்தில் குறிப்பால் உணர்த்தப்படுகிறது.

 ஒரு மழைக்காலத்தில் தன் மகளின் சமாதிமீது ஊரந்து செல்லும் மண்புழுவை பத்திரமாக எடுத்து வந்து தன் வீட்டின் அருகே விடுகிறார். இனிமேல் இங்கே இருந்துக்கோ தாயி என நெகிழ்வாக சொல்கிறார். அழகான தருணம்

அதேபோல ரத்னாவதி. பாலியல் தொழில் செய்யும் பெண். கலகலப்பான இனிய பெண். அவளுக்குள் காதல் ஏற்படும் மந்திர கணம்.  குழந்தை பிறப்பு. காதலித்தவனின் இறப்பை உணர்தல். குழந்தையால் வேறு ஒரு பரிணாமத்தை அடைதல்.  தன் மகனை படிக்க வைக்க வேண்டும் என்ற லட்சியம்.  மறுமணம்.அத்தையின் பிரிவு. கணவன் இறப்பு. அதன்பின் தன் இனிய சுபாவங்களை இழந்து கசப்பையேதன்  வாழ்வாக கொள்ளுதல்.  அந்த வாழக்கையில் தொடும் உச்சம். அதில் காணும் வீழ்ச்சி . என இவளை வைத்தே தனியாக நாவல் எழுதலாம்.  அந்த சூழலிலும் கழிவிரக்கம் கொண்டு கதறாமல் வாழ்வை நெஞ்சுரத்துடன் எதிர் கொள்கிறாள். கடைசியில் மரணத்தைக்கூட ஒரு சந்தோஷமான சூழலில் மகிழ்ச்சியுடன் தழுவுகிறாள்.
மகனை ஆளாக்கி விட்டபின் , அவனைப்பற்றி சற்றும் நினைப்பதும் இல்லை. எதையும் எதிர்பார்ப்பதும் இல்லை.

பக்கீரின் மனைவி அந்த ஊரின் வந்தேறி. அநாதரவாக வந்தவள். காலப்போக்கில் அந்த ஊரில் இரண்டறக்கலக்கிறாள். ஊருக்கு மணீக்கூண்டு அமைத்து தருகிறாள்.   வெயில் கொளுத்தும் பூமி.  அங்குள்ள உயிர்கள் வீரியமானவை.  அங்குள்ள பாம்புகள் கடும் விஷம் கொண்டவை.அங்குள்ள தாவரங்கள் குறைந்தபட்ச தண்ணீரை வைத்து உயிர் வாழும் போராட்டத்தில் இருப்பவை. தமது வேர்கள் மூலம் எல்லாதிசைகளிலும் அலைபாயந்து உயிர் வாழ துடிப்பவை

இதுதான் இக்கதை பாத்திரங்களின் இயல்பாகவும் இருக்கிறது

 வேட்டையாடப்படும் வேம்பர்களுக்கு வேப்ப மரம் அடைக்கலம் அளிக்கிறது , கடும் உக்கிரத்துடன் அமைதியாக நின்றிருக்கும் ஊமை மரம் போன்றவை அழகிய படிமங்கள்.
இயற்கை வேம்பர்களை உருவாக்கி , காத்து , அழிக்கவும் செய்கிறது. ஆரம்பத்தில் வரும் எறும்புகள் முதல் கடைசியில் வரும் கொக்குகள் வரை இதை சொல்கின்றன

இதை வேம்பர்களுக்கு மட்டுமல்ல .  எந்த தேச மனிதனுக்கும் பொருத்தி பார்க்க முடியும்.

, நாவலில் இரண்டு இடங்களில் அணையாத நெருப்பு எனற காட்சி வருகிறது.  வெற்றிலைச் சத்திரத்தில் இருக்கும் கண்ணகி மூட்டிய நெருப்பு. மகான் ஒருவரின் சமாதியில் இருக்கும் அணையா தீபம்


இதில் வெற்றிலை சத்திர நெருப்பை , நாகுவும் காண்கிறான். அவனது மகன் இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கிறான்.  ஆனால் இருவருக்கும் அது அளிக்கும் புரிதல் என்பது வெவ்வேறு

  நாகுவின் மகள் வசந்தா பார்த்திருந்தால் அவளுக்கு நாகு அடைந்த உணர்வெழுச்சி ஏற்பட்டிருக்ககூடும்.  வேம்பலையின் வீரிய ரத்தம் அவளுள்தான் ஓடுகிறது என்பதை நாகுவின் பறவைக்காடசி அவளுக்கும் கிடைத்தது என்பதில் உணர்கிறோம்

 அவளுக்குதான் வேம்பலையின் அழைப்பு கிடைக்கிறது.  வேம்பலை மீதான ஈர்ப்பு காரணமாகவே அவளுக்கு ஜெயக்கொடி என்ற சகமாணவி மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்த நட்பு மரணத்தின் விளிம்புவரை எடுத்துச் செல்கிறது.

ஆக வேம்பலையின் அழைப்பே அதன் வேலையை காட்ட ஆரம்பித்து விடுகிறது. வலி வேதனை காதல் காமம் என அனைத்திலுமே உச்சம் தொடுவதுதான் வேம்பலை

  இந்த பாதிப்புகள் எதையும் சந்திக்காத,ஒரே பாத்திரம் அன்னலட்சுமி மட்டுமே. நடக்க முடியாதவள். பகல் கனவுகளில் வாழ்பவள். பிறர் விஷயங்களை தெரிந்து கொள்வதில் மகிழ்பவள்..  கடைசி வரை பரிணாம மாற்றம் அடையாமல் நிம்மதியாக இருக்கும் பாத்திரம் என்பது தற்கால மனிதனை சுட்டுகிறதோ என தோன்றுகிறது

முகநூல் , ட்விட்டர் , அரசியல் அக்கப்போர்கள் என தங்களுக்கென்று தனி உலகம் அமைத்துக்கொண்டு , வாழ்வின் வெம்மையை சற்றும் அனுபவிக்காமல் வாழ்ந்து மறையும் ஒரு சவலை சமூகம் உருவாகி வரும் சூழலில் அன்னலட்சுமி கேரக்டர் முக்கியத்துவம் பெறுகிறது

   நாவலின் பாத்திரங்கள் மரணஙகளை வலிகளை இழப்புகளை சந்தித்தாலும்.அவர்களுக்குள் அணையா விளக்காக இருப்பது அன்புதான்

   திருமாலிடன் லயோனல் சார் சொல்கிறார். உலகில் அன்பைவிட உயர்ந்த ஒன்று உண்டு . அதற்காக காத்திருக்கிறோம்

படித்தவர்களுக்கும் , செல்வந்தர்களுக்கும் , நகரவாசிகளுக்கும் எட்டாக்கனியான அன்பு இந்த எளிய மக்களிடம் அபரிமிதமாக கொட்டிக்கிடக்கிறது

  தன் கணவனை அழித்த நாகு குடும்பத்தின்மீது பாசம் பொழிரும் பக்கீர்,மனைவி , அவளே ஒரு அபலை என்றாலும் நாகுவின் சகோதரி திருமணத்தை நடத்துவதில் அவள் காட்டும் உறுதி ,  மரண விளிம்பில் இருக்கும் சிங்கியை அரவணைத்து தன் அன்பால் அவனை உருவாக்கும் தெய்வானை , பிறகு கொடூரமாக மாறி விட்ட அவளை பிரிந்தாலும் அவள் இறப்புக்காக கதறும் சிங்கி கிழவன் , தன் மனைவி மக்களைக்கூட கொடூரமாக நடத்தும் கிருபைக்கு தன் தாய் மீது கசியும் பாசம் , துரோகியாக அறிமுகமாகும் நாகுவின் அப்பா செல்லையாவுக்கு தரும் வாழ்வு , அதற்கு செல்லையாக காட்டும் நன்றி என இந்த நாவலை வாதையின் நாவலாக அல்லாமல் அன்பின் நாவலாகவும் வாசிக்கலாம்.

  ஒவ்வொரு ஊராக சென்று அங்கு தூக்கம் எப்படி வருகிறது என டெஸ்ட் செய்யும் விசித்திரமான பாத்திரம். வேம்பலையில் தூங்கி பார்த்துவிட்டு , ஊரா இது? இரவு தூக்கம் வரவில்லை. இரவுதான் புத்துணர்வாக உற்சாகமாக இருக்கிறது. இது திருட்டுப்பசங்களுக்குத்தான் செட் ஆகும் என கோபமாக சொல்லி செல்கிறான். அதைக்கேட்டு ஊர்க்காரர்கள் நினைத்து நினைத்து சிரிக்கிறாரகள். காரணம், அது அவர்களுக்கே தெரிந்த உண்மைதான்

பேயுடன் ஆடுபுலி ஆட்டம் , தானிய குலுக்கைக்குள் அடக்கமாகும் சென்னம்மா , மரணமற்ற நிலை அடைவது , தீராதாகம் , ஆட்டு நாக்கு , மழை பெய்யும் கருவி என ஒவ்வொரு பக்கத்திலும் சுவாரஸ்யம்.

   தானிய குலுக்கைக்குள் போடும்,முன் கடைசியாக வெளி உலகை பார்க்குமபொருட்டு சென்னம்மாவை வெளியே கொண்டு வந்து வெளி,உலகை காண வைக்கிறார்கள்,  வேம்பலையை விட்டு நிரந்தரமாக வெளியேற முடிவு செய்த மல்லிகா கடைசியாக ஒரு முறை தன் தெருவை பார்த்துக்கொள்கிறாள் என இரு காட்சிகள் வருகின்றன . அதேபோல கிணற்றில் இருந்து நிரந்தரமாக வெளியேறவுள்ள ஆமை கடைசியாக ஒருமுறை தலைநீட்டி கிணற்றை பாரத்துக்கொள்வதாக ஒரு காட்சி. செம

விடைபெறும் வசந்தகாலம்
பறவைகள் கண்களில் கண்ணீர்
மீன்கள் கண்களிலும்;
என்ற ஹைக்கூநினைவு வந்தது

  ரத்னாவதி ஓர் அபலை. ஆனால் அந்த சூழலிலும் தனக்காக எதுவும் கேட்காமல் தன் தோழி குழந்தைக்கு கோயிலில் முடி இறக்க நாகு ஏற்பாடுகள் செய்ய கோருகிறாள் மறுபேச்சின்றி நாகுவும் ஒப்புக்கொண்டு ஒரு தாய்மாமன் ஸ்தானத்தில் குழந்தைக்கு அதை செய்கிறான்.அந்த தாய் கண்கலங்கி கைகூப்புகிறாள்

இப்படி பல குறுங்கதைகளை குறுங்கவிதைகளை நாவல் முழுக்க பார்க்கிறோம்

   அன்பும்  கொடும் சூழலிலும் போராடும் வீரமும் என்றென்றும் அழியாத நெடுங்குருதியாக வாழையடிவாழையாக வேம்பலை மக்களிடம் நீடிப்பதை நாவல் காட்டுகிறது
    தேசாந்திரி பதிப்பக வெளியீடு. கண்டிப்பாக வாங்கி படியுங்கள்

    பலமுறை படிப்பது உறுதி

நான் அடிக்கோடிட்டு ரசித்த சில வரிகள்

............

கத்தியை யாரோ சாணை பிடிப்பதுபோல தெருவை வெயில் தீட்டிக் கொண்டிருந்தது

  யாரோ முனகுவதுபோல மண் புரண்டு சப்தமிட்டது. புதையுண்டு கிடந்த மூதாதையர் எலும்புகள் வெக்கை தாங்காமல் திமிறிக் கொண்டு வெடித்தன

பள்ளிக்கு வெளியே தொங்கிய தண்டவாளத்தில் மணியை எடுத்து அடித்தாள். அடங்கியிருந்த இருள் சப்தம் கேட்டு கலைந்து திரும்பியது


சுனையில் நீர் சுரப்பதுபோல வேம்பு காற்று கசிந்து கொண்டிருந்தது

இருட்டு தண்ணீரைப்போல சரசரவென ஊரந்து போய்க்கொண்டு இருந்தது

மழைக்குப்பின் ஊரின் சுபாவம் மாறி இருந்தது. பேச்சில்கூட குளிர்மையேறிருந்தது

இருள் வெளிச்சத்தை தன் விரல்களால் பிடித்து அணைத்துவிட துடிப்பதைப்போல நெருங்கிக் கொண்டிருந்தது

 

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா