Saturday, June 13, 2020

யாமம் .. ரகசியங்களின் கதை


இருள் இருட்டு போன்றவற்றை நாம்
பெரும்பாலும் எதிர்மறையாகவே உருவகித்து வருகிறோம்.  இரவு என்ற வேண்டத்தகாத ஒன்றாகவும் விடிதல் என்பதை சந்தோஷமான ஒன்றாகவும் அன்றாட மொழியிலேயே நிலை பெற்று விட்டது

உண்மையில் இரவு என்பது வசீகரமானது. மர்மம் மிக்கது.  ரகசியஙககள் நிறைந்தது

இந்த இரவு என்பதை ஒரு படிமமாக்கி , மனதின் வரலாற்றின் மனிதனின் ரகசியமான பகுதிகளைப் பற்றி பேசும் நாவல்தான் எஸ் ராமகிருஷ்ணனின் யாமம்

யாமம் என்றால் இரவு. யாமம் என்ற பெயரில் தயாரிக்கப்படும் வசீகரம் மிக்க அத்தர் என்ற பின்னணியில் இந்த நாவல் அமைந்துள்ளது..

அத்தரின் அந்த வசீகரமிக்க கவரச்சி நாவல் முழுக்க விரவியுள்ளது

   நாவலின் கட்டமைப்பே வெகு சுவாரசியமானது

பாரம்பரியமாக பல தலை முறைகளாக அத்தர் உற்பத்தியில் பிரசித்தி பெற்ற குடும்பம் அது.  அந்த குடும்பத்தின் முதல் தலைமுறையான மீர் காசிம் என்பவர் கனவில் சுபி ஞானி பக்கீர் தோன்றி உவமை மொழியில் பேசி , சில தேர்வுகள் வைத்து , கடைசியில் யாரும் தயாரிக்க முடியாத அளவு சிறப்பான அத்தர் தயாரிப்பு முறையை கற்றுத் தருகிறார். அதைக்கற்ற மீர் காசிம் செல்வமும் கீர்த்தியும் பெறுகிறார்.

 அவரது வாரிசுகளும் அதை பின்பற்றி நன்றாக வாழ்கின்றனர்

   தற்போதைய நிகழ்கால வாரிசான அப்துல் கரீம் கனவில் பக்கீர் வருகிறார். இயேசு எப்படி தன்னை உவமைகளால் பேசுபவன் என சொல்லிக் கொண்டாரோ அதுபோல பக்கீரும் உவமைகளால் சில முன்னறிவிப்புகளை செய்கிறார் என ஆரம்பிக்கிறது கதை.
  கதையின் ஆரம்பமே பக்கீர் செய்யும் இந்த முன்னறிவுப்புதான்.  நாம் அப்போது மீர் காசிம் உரையாடலையோ , நாவலின் பிற சம்பவங்களையோ அறிந்திருக்க மாட்டோம் என்பதால் அவரது அறிவுரைகளின் முழு தாத்பர்யம் நமக்கு புரிவதில்லை. ஆண் குழந்தை பிறந்தால் மட்டுமே உன் வியாபாரம் விருத்தியாகும் என்று மட்டுமே அப்துல் கரீம் புரிந்து கொள்கிறார்

     அதன்விளைவாக  அவர் குடும்பம் என்ன ஆகிறது என்பது ஒரு கதை

     இதைத்தவிர பத்ரகிரி , அவனது தம்பி திருச்சிற்றம்பலம் ,  அவர்களது மனைவிமார்கள் , திருச்சிற்றம்பலத்தின் நண்பன் சற்குணம் , கிருஷ்ணப்ப கரையாளர் அவரது தோழி எலிசபத் , சதாசிவ பண்டாரம் ஆகியோரின் கதைகளும் யாமம் எனும் பொதுவான அம்சத்தின் கீழ் பிணைந்துள்ளன.

லண்டன் நகரும் ஆங்கிலேய சமூகமும்கூட கதாபாத்திரங்களாக வருகின்றன

          அப்துல் கரீம் , பத்ரகிரி , கிருஷ்ணப்ப கரையாளர், சதாசிவம் ஆகியோர் மட்டுமல்ல. முன்கதையில் வரும் இளவரசி உட்பட அனைவர் வாழ்விலும் நறுமணம் என்பது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வெவ்வேறு விதமான உணர்வுகளையும் விளைவுகளையும் உருவாக்குகிறது


 இவர்களை வசீகரமான ஒரு சக்தி வழி நடத்துகிறது. அதைத்தான் யாமம் என கவித்துவமாக உருவகமாக்கியுள்ளார் எழுத்தாளர்     தான் என அவர்கள் நினைப்பதற்கு சம்பந்தமில்லாத ஒன்றுக்கு இழுத்துச் செல்லப்படுகிறார்கள்.

      இவர்களில் சதாசிவ பண்டாரத்தை வழி நடத்தும் சக்தி மட்டும் வெளிப்படையாக தெரிகிறது. மற்றவர்கள் இரவு போன்ற மர்மமான ஒரு விசையால் இழுத்துச் செல்லப்படுகிறார்கள்

        தான் இங்கிலாந்து செல்வதே வெள்ளைக்காரிகளை புணருவதற்காகத்தான் என சொல்லக்கூடிய தன்னை பொறுக்கி என நினைக்ககூடிய சற்குணம் , சமூகநல போராளியாக மாறுகிறான்
   
தன் தம்பிக்கு தான் ஒரு தந்தை என மனப்பூர்வமாக நம்பும் பத்ரகிரி பெண்மோகத்தில் விழுகிறான்

      பற்றுகளுக்கு அப்பாற்பட்டவர் என தன்னை நினைத்துக்கொள்ளும் சதாசிவ பண்டாரம் தன் எல்லைகளை உணர்கிறார்

      தங்களை சுயநலவாதிகள் என்றும் அப்துல் கரீமின் சொத்துதான் தஙககளை பிணைத்து வைத்துள்ளது என நினைக்கும் அவரது மனைவிகள் அவர் இல்லாதபோதுதான் கடுமையான வறுமைக்கு மத்தியிலும் ஒருவருக்கு,ஒருவர் அவ்வளவு ஆறுதலாக அன்பாக இருக்கின்றர்

   
     வெளிப்படையாக தெரியாமல் தன் மனத்தால் தன் இருப்பைக் காட்டும் யாமம் போல மனிதனுக்குள் அவனுக்கே தெரியாமல் இன்னொரு மனிதன் இருப்பதும் அவன் தன் இருப்பைக் காட்டுவதும் கதையில் பல இடங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது

இது மனிதனுக்கு மட்டுமன்று. இமங்களுக்கும் பொருந்தும்
வசீகரமான லண்டன் நகரைப் பாரத்து இதுதான் சொர்க்கமா என நினைக்கும் அதன் இருளான பகுதியைஒரு
தூக்குதண்டனை சம்பவம் மூலம் அறிகிறான்

அதுபோல இந்தியாவை கரையான்போல அரிக்கும் ஆங்கிலேய ஆட்சியின் இன்னொரு முகமான பெண் கல்வி , ஜனநாயக யுகத்தின் பலன் ஆகியவையும் சொல்லப்படுகின்றன

தன் சொந்த மக்களின் ஒரு
பகுதியினரை கொடுமைக்குள்ளாக்கும் அதே ஆங்கில சமூகம்தான் தமிழன் ஒருவரை தன் புதல்வனாக பத்திரமாக பார்த்துக் கொண்டு மேடை ஏற்றி அழகு பார்க்கிறது

நெடுங்குருதி நாவலில் காலம், நிலவியல்
பற்றி தெளிவான குறிப்புகள் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டு இருக்கும். காரணம் அந்த நாவலின் தளம் வேறு. யாமம் நாவலில் இடம் மற்றும் காலம் பற்றிய குறிப்புகள் வெகு கவனமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான உழைப்பு ஆச்சர்யப்படுத்துகிறது.

முதன்முதலில் மீர் காசிம் கனவில் தோன்றும் பக்கீர்  , தனக்கு ஒரு உபகாரம் செய்ய வேண்டும் என்றும் கடலின் மீன்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு சொல்ல வேண்டும் எனவும் கேட்கிறார்.
அது எப்படி முடியும் என திகைத்தாலும் பதிலுக்காக தீவிரமாக தேடுகிறார். கடைசியில் அவருக்கு பதில் கிடைக்கிறது. அந்த பதிலைவிட அந்த தேடலும் நம்பிக்கையும் பக்கீருக்கு பிடித்து விடுகிறது. எனவே தொடரந்து உரையாட ஆரம்பிக்கிறார்

  தெரியாதை தேடிச் செல்லும் நம்பிக்கையும் குறியீட்டுப் பொருளை உணரும் ஆற்றலும் கொண்ட அவருக்கு அள்ள முடியாத நறுமணமிக்க திரவமான இருளை , வடிவற்ற இருளை , வடிவம் கொண்ட அத்தராக உருவாக்கும் வித்தையை கற்றுத்தரலாம் என முடிவெடுத்து அவருக்கு மாகற்றுத்தருகிறார்

ஆனால் இந்த தேடலோ குறியீடுகளை புரிந்தும் தன்மையோ அப்துல் கரீமிடம் இல்லை என்பதை கவனிக்க முடிகிறது.
     

இரவென்னும் ரகசிய நதி நம்மைச் சுற்றி எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறது

இரவு என்பது கால்கள் இல்லாமல் அலையும் பூனையை போன்றதுஇரவின் தீரா வாசனை எங்கும்  பரவி இருக்கிறதுபகலிலும் இரவை உருவாக்கும் திறன்

உங்களது வாசனை திரவியங்களுக்கு மட்டுமே உணடு


பசுவின் காம்பில் இருந்து பால் சொட்டுவதுபோல பிரபஞ்சத்தின் காம்புகளில் இருந்து இரவு சொட்டிக் கொண்டே இருக்கிறது

நீயும் உன் மூதாதையரும் இரவை சிருஷ்டிக்கும் ரகசியம் அறிந்தவர்கள்


   இரவின் ரகசியத்தை நீ உன் புதல்வனுக்கும் அவன் தன் புதல்வனுக்குமாக கைமாற்றி தர வேண்டும்.
         இது எப்போது நிற்கிறதோ அப்போது இந்த வித்தை உங்களை விட்டுப் போய் விடும்

 என மிகுந்த கருணையோடு முன்னறிவிக்கிறார் பக்கீர்

   மீன்களின் எண்ணிக்கை என்ற உலகியல் கேள்விக்கு விடை தேடி , ஆன்மிக அனுபவம் பெற்று , தத்துவரீதியான பதிலை தந்த தன் மூதாதையரின் நுண்திறன் இவருக்கு இல்லை

   இரவின் ரகசிய புத்தக செய்தியை நன்கு அறிந்து அதை உன் மகனுக்கு புகட்டு என்பதை உலகியல் ரீதியாகவே புரிந்து கொண்டு , ஆண் குழந்தை பெற உத்தரவிடுகிறார் என புரிந்து கொண்டு அதையே தன் லட்சியமாக மாற்றிக கொள்கிறார்.   படிப்படியாக அவர் வீழ்ச்சி ஆரம்பிக்கிறது. ராணிகள் போல இருந்த அவர் மனைவிகள் கூலி வேலை , மீன் விற்பனை என கஷ்டப்படும் சூழல் உருவாகிறது

    இவரது வீழ்ச்சிக்கு காரணமாக இருப்பது யாமம் . பிரசித்தி பெற்ற தனது அத்தர் பாட்டில்களை  அவர் குப்பைத் தொட்டியில் வீசி விடுகிறார்.

    இவரது பிரச்சனை காமம் கிடையாது. பேராசைதான் இவரது பிரச்சனை


  கிருஷ்ணப்ப கரையாளர் யாமம் அத்தரின் தீவிர ப்ரியர். தன் பிணத்தின் மீது அத்தரைக் கொட்டி புதைக்க வேண்டும் என்ற ஆசை இவருக்குண்டு. அன்பான அரவணைப்பு என்றுதான் யாமம் இவருக்கு பொருள்படுகிறது.  ஆனால் அது அவருக்கே தெரிவதில்லை.  சொத்துதான் தன்னை இயக்கும்விசை என நினைத்து அதற்காக வழக்காடுகிறார்.

   ஒரு மலைத்தங்கலின்போதுதான் , காமமோ பணமோ தனக்கு பொருட்டல்ல என்ற சுயதர்சனம் அவருக்கு கிடைக்கிறது;

இது சுவையான ஒரு சித்தரிப்பாகும்

தன்னை தியாகி என்றும் பொறுப்பான அண்ணன் என்றும் நினைக்கும் பத்ரகிரியின் ஆழ்மனத்தை காமம்தான் ஆட்டுவிக்கிறது. இவனுக்கு யாமம் என்பது காமமாக பொருள்படுகிறது

ஆனால் தன்னை பேராசைக்காரராகவும் காமக்கேளிக்கையாளராகவும் மதிப்பிட்டிருந்த கிருஷ்ணப்பரின் ஆழ்மனம் எளிய வாழக்கையே நாடி இருக்கிறது.

    கிழக்கிந்திய கம்பெனி இங்கு நிலைகொள்ள காரணமாக அமைந்தது மகள் மீது தந்தை கொண்ட பேரன்பு. அப்படி ஒரு நெகிழ்வான கணத்தில்தான் கிழக்கிந்திய கம்பெனிக்கு கதவுகளை திறந்து விடுகிறார்

    மதராபட்டணம் உருவானதற்கு பின்னணியில் இருப்பது பிரான்சிஸ்டே என்பவனுக்கு கிளாரந்தா மீதான பாலியல் கவர்ச்சி

    சதாசிவ பண்டாரம் தன் அன்னையை துச்சமாக நினைத்து துறந்தவர்..  மான அவமானம் , பொருளாசை , பெண்ணாசையைக்கூட துறந்து விடலாம் , ஆனால் ரத்த பந்தத்தை அறுப்பது எளிதல்ல என்பதை உணர்வதுதான் இவரை முழுமை ஆக்குகிறது. தான் பாலுறவு கொண்ட பெண்ணைப்பற்றி நினைப்பதைவிட தன் குழந்தை என்னவாயிற்று என்றே அவர் மனம் துடிக்கிறது.  தன் தாயின் துடிப்பை அப்போதுதான் அவரால் உணர முடிகிறது

      மதம் மாறிய ஒரு பெண் குறித்தும் அவள் ஏற்படுத்திய பெண் கல்வி புரட்சியும் ஒரு சித்தரிப்பு வருகிறது.அவள் மதம் மாறியதும் கலப்பு மணமும் அவள் பெற்றோருக்கு மரணத்தை ஒத்த மிகப் பெரிய வேதனை. அவளுக்கு சாவு சடங்குகளை செய்துவிட்டு ஊரைவிட்டே போய் விடுகிறார்கள்
தனியாகப் பார்த்தால் அந்த பெற்றோர் வேதனை குறிப்பிடத்தக்க ஒன்றுதான். ஆனால் சீர்திருத்தம் , பெண்கல்வி என பெரிய அளவில் பார்க்கும்போது தனி ஒருவர் கண்ணீருக்கு வரலாற்றில் என்ன பொருள் இருக்க முடியும்.
இந்த பின்னணியில்தான் தன் தாயின் கண்ணீரை புரிந்து கொண்டுஅதன்பின் அதை தாண்டும் பக்குவம் சதாசிவ பண்டாரத்துக்கு கிடைக்கிறது,..ஒரு சத்திரத்தில் தங்கியிருக்கும்போது ஒரு கல்லில் எங்குமே அனுபவித்திராத ஒரு சுகந்தமான மணம்  வீசுவதை கவனிக்கிறார். அது என்ன என்பது அப்போது புரிவதில்லை.  இரவெனும் ரகசியப்புதிரின் மணம் அவரைசூழ்வதன் முன்னறிவிப்பு என பிறகுதான் நமக்கு தெரிகிறது


    நாவலில் இரு சுவாரஸ்யமான காட்சிகள். அனைத்தையும் இழந்து சாலையில் செல்லும் பத்ரகிரி நாய் ஒன்றைப் பார்க்கிறான்.  பேசாமல் அனைத்தையும் விட்டு விட்டு இந்த நாயின் பின் போய்விடலாமா என அவனுகு தோன்றுகிறது

நாயை பின்தொடர்ந்து சென்று ஞானம் பெற்ற சதாசிவ பண்டாரம் நினைவு நமக்கு வருகிறது.

அதேபோல கப்பலில் செல்லும் திருச்சிற்றம்பலம் கடலின் மீன்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது குறித்து யோசிக்கிறான்.

நமக்கு மீர் காசிமிடம் மீன்களை கணக்கிட சொன்ன பக்கீர் நினைவு வருகிறது

    பக்கீர் அவர் கனவில் வந்து வழிநடத்துவதுபோல திருச்சிற்றம்பலத்தை அவன் அம்மா வழிநடத்துகிறாள்

   அப்துல் கரீம் இருந்தவரை தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த அவரது மனைவிகள் அவர் காணாமல் போனபின்பு எந்த நிரப்பந்தமும் இல்லாமல் ஒற்றுமையாகி விடுகினறனர், ,ரஹ்மானியின் குழந்தையை வகிதா வளர்க்கிறாள்.சுரையாவையும் தன்னுடன் வைத்துக் கொள்ள விரும்புகிறாள்

மனித மனதின் விசித்திதங்களுக்கு எல்லையே இல்லை போலும்

எதற்கும் ஆசைப்படாத அதிகம் பேசாத விசாலா ஆசைப்படுவது அத்தர் ஒன்றுககாக மட்டுமே..

தையல் நாயகியுடனான தன் கணவன் உறவை அறிந்து அவனை தூக்கி எறிந்து விட்டு சென்று விடுகிறாள்

தைரியமான பெண் என நினைக்கும் தையல் நாயகியில் குணநலன்கள் கடைசியில் வெகுவாக மாறி அவளது சுயரூபம் அவளுக்கே தெரிகிறது

நடைமுறை ஞானத்துடன் பேசும் ஏ எஸ் ஐயர் , பகல் குறித்த எந்த அக்கறையுமற்ற டோபிங் , கலகலப்பான சிறுவன் சந்தீபா , அவனது கிளி, வெள்ளையர்களுக்கு மட்டுமே ஏழு கிணறு என உத்தரவிட்ட பிரிட்டிஷ் அரசு அதை கத்தியின்றி ரத்தமின்றி போராட்டமின்றி கருப்பர்களுக்கு கொடுத்து விடுதல் , இம்பாலா லாட்ஜ் வாசக சாலை , கனவில் வந்து கணக்குக்கு உதவும்"சடட்நாதன் , கால்குலேட்டர் கண்டுபிடிப்பு , நட்சத்திரஙகளுடன் உரையாடும் பத்ரகிரி , பறவைகளை எண்களாக காணும் திருச்சிற்றம்பலம் , அடிமைகளாக மாறவிருத்த மகர் இன ஏழைகள் அரசு மாறகறஙககளால் பெறும் குதூகல வாழ்வு என ஏராளமன சுவாரஸ்யங்கள்

காட்டில் சிறுசிறு திருட்டுகளைச் செய்யக்கூடிய ஆனால் காட்டை
நேசிக்கக்கூடிய ஒரு பாத்திரம் வருகிறது. அதேகாட்டுக்கு காட்டின்மீது மரியாதை இல்லாத காட்டை நுகர்வுப்பொருளாக மாற்றக்கூடிய கனவான்களின் வருகையும் சித்தரிக்கப்பட்டுள்ளது


கைவிடப்பட்ட சிறுமியாக வாழக்கையை ஆரம்பித்து பலவித சிதகதரவதைகளை அனுபவித்து , வாழ்க்கை அவ்வளவுதான் என நினைத்த நிலையில் ஒரு பெரிய மலைக்கே உரிமையாளர் ஆகிறாள் எலிசபத். அவளது மனபிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து விடுகிறது மலைப்பயணம் அந்த மகிழச்சியுடன் லண்டன் கிளம்புகிறாள். திரும்பி வரும்போது ஒரு அதிர்ச்சியை சந்திக்கவிருக்கிறாள்

லண்டனில் பெரும்புகழ் பெற்று தமிழகம் வரும் திருச்சிற்றம்பலம் இங்கே பெரிய அதிர்ச்சியை சந்திக்கிறான். அடுத்து என்ன செய்வான் என நம்மைப்போல அவனுக்குமே தெரியாது

யாவரின் சுகதுக்கங்களும் அறிந்த இரவு ஒரு ரகசிய நதியைப்போல முடிவற்று எல்லா பக்கங்களிலும் ஓடிக்கொண்டே இருந்தது .அதன் சுகந்தம் எப்போதும்போல உலகமெங்கும் நிரம்பியிருந்தது என முடிகிறது நாவல்


 நள் இரவு நேரங்களில் வெளியூரிலிருந்து வீடு திரும்பும்போது பகலில் பாரத்த நம் வீதிகள் அந்த இரவில் நமக்கே அந்நியமாக புதிதாக தோன்றும்

  அதுபோல இந்த கதை பாத்திரங்கள் தமக்குள் இருக்கும் ரகசிய வெளியைப் பார்த்து , இதுதான் நானா என திகைத்துப்போகின்றனர்

நறுமணம் மூலம் இறைவனுடன் உரையாடுதல் என்ற சுபி மற்றும் இந்திய தொன்மங்களை சற்றே மாற்றி நறுமணம் மூலம் அறியமுடியாமையுடன் உரையாடல் என மாற்றிப்போட்டு இருக்கிறார்

 உனக்குள் இருக்கும் கடவுளை கண்டுபிடி என்பதைவிட உனக்குள் இருப்பது கடவுளாக இருக்கலாம் சாத்தானாக இருக்கலாம் எளிய மனிதனாக இருக்கலாம்.  அதைக்கண்டுபிடிப்பதுதான் முக்கியம்.

இதை படித்து முடித்ததும்  நாம் என நினைத்துக் கொண்டிருக்கும் நாம் உண்மையில் யார்.  நமக்கு தெரியாமல் நமக்குள் எத்தனை ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன என்ற யோசனை வருவதை தவிர்க்க முடியாது


  யாமம் நாவல் அற்புதமான அனுபவம்.

தேசாந்திரி பதிப்பக வெளியீடு

கண்டிப்பாக படியுங்கள்
   
    

 No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா