ஒரு சாமியார் ஒரு கிளி வளர்த்து வந்தார். அதற்கு பகவத் கீதை கற்றுக்கொடுத்தார். தினமும் காலை எழுந்தவுடன் ஒரு சுலோகம் சொல்லும்படி பயிற்சி கொடுத்து இருந்தார்.
பார்ப்பவர்கள் கிளியின் பக்தியை பார்த்து பரவசமடைந்து பாராட்டுவது வழக்கமாகி விட்டது.
ஆனாலும் சிவனுக்கு முக்கியத்துவம் கொடுக்க நினைத்தார் சாமியார். இன்னொரு புத்திசாலி கிளியை தேடி பிடித்தார். ஏகப்பட்ட பணம் செல்வழித்து வாங்கிய அந்த கிளிக்கு சிவபுராணம் கற்று கொடுத்தார். அந்த கிளியும் நன்றாக கற்றுக்கொண்டு தினமும் காலையில் சொல்ல ஆரம்பித்தது. சாமியாருக்கு ஏக சந்தோஷம்.
ஆனால் சிறைய மனக்குறை. இரண்டும் ஆண் கிளிகள். ஒரு பெண் கிளியும் வளர்க்க நினைத்தார். கஷ்டப்பட்டு பெண் கிளியை வாங்கி விட்டு வீட்டுக்கு வந்தார்.
வீடு திரும்ப அதிகாலை ஆகி விட்டது. அவரது கிளிகள் கீதை , சிவபுராணம் சொல்லும் நேரம் என்பதால் , வழக்கம் போல மக்கள் கூடி இருந்தனர்.
கிளிகள் புத்தகங்களை புரட்ட ஆரம்பிக்கையில் சாமியார் பெண் கிளியுடன் வீட்டுக்குள் நுழைந்தார்.
பெண் கிளியை பார்த்ததும் , அந்த கிளிகள் ஸ்லோகங்களை நிறுத்தி விட்டு , விசில் அடித்தன. சாமியார் திகைத்தார். ” என்ன இது ” அலறினார்.
” தினம்தோறும் நாங்கள் செய்த பிரார்த்தனை நிறைவேறி விட்டதே... இனி எதற்கு ஸ்லோகங்கள்..சீக்கிரம் பெண் கிளியை உள்ளே அனுப்புங்கள் . “ என்றன.
அத்தனை நாள் , எந்த மன நிலையில் கிளிகள் ஸ்லோகங்கள் சொல்லி வந்தன என அப்போதுதான் மக்களுக்கு புரிந்தது.
*******************************************
ஒருவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் அவரது உண்மையான சுயரூபம் என்றாவது ஒரு நாள் வெளிவராமால் போகாது.
அப்படி ஒரு நிகழ்வு சமீபத்தில் நடந்தது.
சன் டீவியில் விவாத நிகழ்ச்சி ஒன்று நடந்தது. மது விலக்கு சாத்தியமா இல்லையா என்பது தலைப்பு.
ஒவ்வொருவரும் தம் கருத்தை எடுத்து வைத்தனர்.
“ மதுவால் நாட்டில் குற்றங்கள் நடக்கின்றன. குறிப்பாக சாலை விபத்துகள் அதிகம் நடக்கின்றன. எனவே மது விலக்கு கொண்டு வர வேண்டும் “ என்பது ஒரு தரப்பு.
“ மது அருந்தி விட்டு , வாகனம் ஓட்டுவது அயோக்கியத்தனம். டாஸ்மாக் வாசலில் நின்று பார்த்தால் , எத்தனையோ பேர் மது அருந்தி விட்டு கிளம்பி செல்வதை பார்க்கலாம். அவர்களை அங்கேயே கைது செய்யலாமே...
மது அருந்தி விட்டு சச்சரவு செய்பவர்கள் , வன்முறையில் ஈடுபடுவர்களுக்கு தண்டனை கொடுக்கலாம். மற்றபடி மதுவை வாங்கி வீட்டில் அமைதியாக அருந்துவது , ஒருவரது தனி உரிமை. அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை . கள் என்பது போதைப்பொருள் அன்று. அது ஓர் உணவு வகை. பண்டை தமிழகத்தில் கள் எனபது தவறாக கருதப்படவில்லை “ என மறு தரப்பு தன் கருத்தை எடுத்து வைத்தது.
இதில் சாரு நிவேதிதா பேசுகையில் மது விலக்கு சாத்தியம் இல்லை என்றார். மது விலக்கு என்பது கள்ள சாராயத்துக்கு வழி வகுக்கும் என்றார். தற்போது கடைகளில் கிடைப்பது தரம் குறைந்த மது. இதை அருந்தினால் தீமைதான். இதை ஒழுங்கு செய்ய வேண்டும் . விற்பனையிலும் ஒழுங்கு முறைகள் தேவை. மற்றபடி அனைவரும் மது அருந்த வேண்டும் அல்லது அருந்த கூடாது என தான் சொல்லவில்லை. அது அவரவர் சுதந்திரம் . ஆனால் மது அருந்தி விட்டு மற்றவர்களுக்கு இடைஞ்சல் செய்வது அயோக்கித்தனம் என்று தன் கருத்தை சொன்னார்.
மது அருந்துபவர்கள் அநாகரிகமாக நடந்து கொள்வார்கள் என்று வாதிட்ட தரப்பு, சாருவின் இந்த வாதத்தால் சற்று திணறியது.
இந்த நிலையில் “ காந்தியவாதி”யான தமிழருவி மணியன் பேச அழைக்கப்பட்டார்.
அவர் மதுவுக்கு எதிரானவர். மது அருந்தும் பழக்கம் இல்லாதவர். எனவே அந்த விவாதத்தில் கலந்து கொண்ட மது எதிர்ப்பாளர்களின் லாஜிக்படி , அவர் நாகரிகமாக தன் கருத்துகளை எடுத்து வைக்க வேண்டும்.
ஆனால் அவரோ அதிரடியாக நாகரிமற்ற வகையில் பேச ஆரம்பித்தார். சாருவை அவன் இவன் என ஏக வசனத்தில் திட்ட ஆரம்பித்தார். அந்த விவாதத்தில் சாருவை விமர்சித்த அரசியல் கட்சிகள் , இயக்கங்களை சேர்ந்தவர்கள் காந்தியவாதிகள் அல்லர். ஆனால் அவர்கள் நாகரிமான வார்த்தைகளில்தான் வாதம் செய்தனர்.
ஆனால் காந்தியவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழருவி மணியன் இப்படி பேசியதைக்கேட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரே கொஞ்சம் ஆடிப்போனார். அத்துடன் தமிழருவி மணியனின் பேச்சை துண்டித்தார்.
தமிழருவி மணியன் வெகு காலமாகவே காந்தியத்தை பற்றி பேசி வருகிறார். அந்த காந்தியம் அவருள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்றால் , காந்தியம் என்பதே உள்ளீடற்ற ஒன்றா அல்லது தமிழருவி மணியன் சரியாக காந்தியத்தை புரிந்து கொள்ளவில்லையா என்ற கேள்வி அந்த நிகழ்ச்சியைப்பார்த்த லட்சக்கணக்கான மக்கள் மனதில் எழுந்தது.
ஒழுக்கவாதிகளாக அடையாளப்படுத்திக்கொள்பவர்கள் , உள்ளூர ஒழுக்கமின்றி இருப்பதை பல இடங்களில் பார்க்கிறோம். மாமிசம் சாப்பிடாத ஆச்சார சீலரான ஹிட்லர்தான் , பேரழிவுக்கு காரணமாக இருந்தார்.
அதே நேரத்தில் எந்த இசத்திலும் சேராமால் , வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவர்கள் யாரையும் எந்த நிலையிலும் காயப்படுத்துவதில்லை.
மரியாதைக்குறைவாக பேசியபோது , அதை ஒரு பிரச்சினையாக்கி , அனுதாபம் தேடி, விவாதத்தை சாரு திசை திருப்பவில்லை. ஒரு ஜென் குரு போல அதை புறக்கணித்து விட்டு மேலே தொடர்ந்தார்.
கடல் படத்தில் ஒரு காட்சி வரும். ஒரு சிறுவனை டேப் ரிக்கார்டர் முன் ஏதாவது சொல்லுமாறு அரவிந்த் சாமி சொல்வார். அவன் ஏதேதோ ஆபாசமாக பேசுவான். கடைசியில் அவன் ஆழ் மன ஏக்கத்தை , தாய்ப்பாசத்துக்கு ஏங்குவதை சொல்வான்.
இன்று இண்டர்னெட்டில்யே எத்தனையோ பேர் பார்க்கிறோம். ஆபாச அர்ச்சனைகள் , வசவுகள் என்பதற்காகவே இணையத்தை பயன் படுத்துகிறார்கள். அவர்களுக்கு ஏதோ உளவியல் சிக்கல் என கடந்து போய் விடுகிறோம்.
ஆனால் தமிழருவி மணியன் போன்றவர்களும் , இது போன்ற உளவியல் சிக்கலில் இருப்பதை அறிகையில் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த உளவியல் பிரச்சினைகளை மறைக்கும் முக மூடிதான் காந்தியமா அல்லது காந்தியம்தான் இந்த உளவியல் சிக்கலுக்கு காரணமா என புரியவில்லை.
மது அருந்திய பின் , சாரு மதுக்குப்பியை எறிந்து விடுகிறார். தமிழருவி மணியன் போன்றவர்கள் மதுக்குப்பியை மனதில் சுமந்து கொண்டே திரிகிறார்கள் போல.
நான் எத்தனையோ முறை சாருவை சந்தித்து இருக்கிறேன். கூட்டங்களில் அவருடன் கலந்து கொண்டு இருக்கிறேன் . தனிப்பட்ட முறையில் யாருடனும் அவர் வன்மத்துடனோ மரியாதை குறைவாகவோ பேசியதில்லை.
அவ்வளவு ஏன் , மற்றவர்களும் மரியாதை குறைவாக பேச அனுமதிப்பதில்லை.
ஒரு முறை ஜெயமோகனை மரியாதை குறைவாக பேசிய ஒரு நண்பரை கடுமையாக எச்சரித்தார். “ இலக்கியம் என்ற தளத்தில் நான் விமர்சிப்பது வேறு. ஆனால் நீங்கள் அவரை உரிய மரியாதையுடன் பேச வேண்டும். அவர் உழைப்புக்கு, அறிவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் “ என கண்டிப்புடன் சொன்னார்.
அதே போல , வாசகர் வட்ட சந்திப்புகளில் கல்லூரி மாணவர்களை மது அருந்த அனுமதிக்க மாட்டார் . குடிப்பழக்கம் இல்லாதவர்கள் , முதல் முறையாக சந்திப்புகளில் குடிக்க விரும்பினாலும் அனுமதிக்க காட்டார். குடிக்க யாரையும் வற்புறுத்தவும் மாட்டார்.
அவரது இப்படிப்பட்ட நயத்தகு நாகரிகத்தை பார்க்கும் நமக்கு அவர் படித்த நூல்கள்தான் அவரை இந்த அளவுக்கு பண்படுத்தி இருக்கின்றன என நினைத்து அவற்றை நாமும் படிக்க விழைகிறோம் .
ஆனால் ஒழுக்கவாதிகளின் செயலை பார்க்கையில் , அவர்கள் சார்ந்த கொள்கை மீதும் , அவர்கள் ஏற்றுக்கொண்ட தலைவர்கள் மீதும் வெறுப்புதானே ஏற்படுத்துகிறது.
தமிழருவி மணியனின் செயல் ஒட்டுமொத்த காந்தியர்களை தலைகுனிய வைத்து விட்டது என்றால் மிகையில்லை.
தமிழருவி மணியனுக்கு ஒன்றே ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
பழைய தமிழ் பாடல் ஒன்று,,,
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்கொடையும் பிறவிக் குணம்
இதை தமிழருவி மணியன் இப்படி புரிந்து கொண்டு இருப்பார்.
வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும்.
ஆனால் இதல்ல அர்த்தம்.
மனிதனுக்கு இரண்டு இயல்புகள் உண்டு.
உண்மையான இயல்புகள் , கற்றுகொண்டு வரும் பண்புகள்.
ஓவியம் ,. மொழி , கல்வி போன்றவை எல்லாம் நம் இயல்பான பண்புகள் அல்ல. கற்றுக்கொண்டு வருபவை.
ஆனால் அன்பு, இரக்கம் , ஈகை போன்றவை மனிதனின் இயல்பான குணங்கள்.
பல நேரங்களில் நமது படிப்பும் , சூழ் நிலைகளும் நம் இயல்பான இந்த குணங்களை சிதைத்து விடுகின்றன.
எனவே காந்தியம் , மது அருந்தாமை போன்றவற்றை வெறும் தத்துவரீதியாக பின்பற்றுவதை விட , அதையெல்லாம் விட்டு விட்டு இயல்பாக வாழ்ந்தால் போதும் . மது என்பது ஒரு பொருட்டு அல்ல என்ற மன நிலை தானாகவே வந்து விடும், காந்தி போதித்த நற்குணங்கள் வெறும் பேச்சாக இல்லாமல் , உண்மை இயல்பாக மாறி விடும்.
********************************************************************************************
_-