Sunday, November 17, 2013

சிவாஜி - கலைஞர் காம்பினேஷனில் பராசக்தியை மிஞ்சிய பக்காவான திரைப்படம்


கலைஞர் சிவாஜி காம்பினேஷனில் பல படங்கள் வந்து இருந்தாலும் , அவற்றுள் மாஸ்டர் பீஸ் என நாம் நினைப்பது பராசக்தி. அது எவ்வளவு தவறான கருத்து என சமீபத்தில் உணர்ந்தேன்.

பராசக்தியை குறைத்து சொல்லவில்லை. திராவிட இயக்கத்தின் , தமிழ் நாட்டின் முக்கியப்படங்களில் ஒன்று.சிவாஜி எனும் கலைஞனை தந்த படம். கலைஞரின் சிறந்த வசனங்கள் , இனிய பாடல்கள் என ஜொலித்த படம். அதெல்லாம் வேறு.

ஆனால் கலைஞர் சிவாஜி காம்பினேஷனில் இதை விட சிறப்பான படம் ஒன்று வந்து இருக்கிறது.  புராண கதைகளை எடுத்துக்கொண்டு , அதை மாற்றி திராவிட இயக்க படமாக மாற்றிய புத்திசாலித்தனம், சிவாஜியின் இயல்பான நடிப்பு, கலைஞரின் நேர்த்தியான கூர்மையான வசனங்கள் . இனிய இசை , அரசியல் நையாண்டி என ஒரு முழுமையான பக்காவான திரைப்படமாக திகழும் திரும்பிப்பார் , பராசக்தியைவிட ஒரு படி மேல் என்றே சொல்வேன். அந்த காலத்தில் இந்த படம் மெகா ஹிட் ஆனது மட்டும் அல்ல... ஒரு டிரண்ட் செட்டராகவும் இருந்தது.

படத்தின் பெயர்  : திரும்பிப் பார்

பராசக்தி எனும் மெகா வெற்றிப்படத்தை தந்த இந்த கூட்டணி அந்த படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு திசையில் பயணிக்க தீர்மானித்ததே பெரிய ஆச்சர்யம். இன்றுகூட அப்படி துணிச்சல் யாருக்கும் வராது.

பராச்க்தியில் ஹீரோவாக நடித்த சிவாஜி இதில் பயங்கர வில்லன் . அந்த நாள் படத்தில் நெகடிவ் ரோல் என்றாலும், அதில் அவர் எதிர்மறை காரியங்கள் செய்வதற்கு வலுவான காரணங்கள் இருக்கும், அவர் தவறு ஜஸ்டிஃபை செய்யப்படும்.

ஆனால் இந்த படத்தில் எந்த ஜஸ்டிஃபிகேஷனும் கிடையாது. முழுக்க முழுக்க கெட்டவன். அழகான ,் திறமையான , புத்திசாலியான , ஸ்டைலான கெட்டவன் என்று அந்த காலத்திலேயே கேரக்டர் அமைத்து இருப்பது ஆச்சர்யமாக இருந்தது.

பரந்தாமன் ( சிவாஜி ) ஒரு பெண் பித்தன், பணத்தாசை பிடித்தவன்.  அவனை அவனுடைய அக்காதான்( பண்டரிபாய் ) வளர்த்து வருகிறார். பல பெண்களை ஏமாற்றுகிறான் தொழிலாளர்களை தன் நாவன்மையால் சுரண்டுகிறான். துரோகம் செய்கிறான். இன்னொருவர் எழுதிய நூல்களை தன் பெயரில் போட்டுக்கொள்கிறான்.

இப்படி என்னென்ன அயோக்கியத்தனம் உண்டோ அனைத்தையும் செய்கிறான், அவனுக்கு பரந்தாமன் என பெயர் வைத்து திராவிட இயக்க முத்திரை பதித்ததோடு நிற்கவில்லை. இவனுக்கு எதிர் நிலையில் நல்லவனாக திகழும் கேரக்டர் பெயர் பாண்டியன். ( பி வி நரசிம்ம பாரதி) ..

பரந்தாமன் , அவன் அக்கா, பாண்டியன் என்ற மூவருக்கிடையே நடக்கும் முரண்பாடுகளும் மோதலுமே கதை.

படம் அதிரடியாக ஆரம்பிக்கிறது.. ஆரம்பத்திலேயே கோர்ட் சீன்.  பாரந்தாமனை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு பாண்டியன் குற்றவாளி கூண்டில் நிற்கிறான். அவன் குற்றவாளி இல்லை பரந்தாமனின் அக்கா வாதிடுகிறாள்.. அவள் வார்த்தைகளில் படம் ஃபிளெஷ் பேக்காக நம் முன் விரிகிறது.

சிவாஜியின் அலட்டல் இல்லாத , மிகை நடிப்பற்ற , வில்லன் நடிப்பும் கலைஞரின் வசனங்களும் ஒன்றை ஒன்று நிரப்பிக்கொள்கிறேன்.  வசனம் என்றால் முழுக்க முழுக்க பிரச்சாரம் இல்லை. இயல்பான ஹ்யூமர் , அரசியல் பகடி என பிரித்து மேய்ந்து இருக்கிறார்கள்.

இங்கே ஒன்றை சொல்ல வேண்டும். சிவாஜி பிற்காலத்தில் காங்கிரஸ்காரராக அறியப்பட்டாலும் , ஆரம்பத்தில் அவர் திராவிட இயக்கத்தின் திரையுலக பிரதிநிதியாகத்தான் இருந்தார். ஆனால் சிலரது சூழ்ச்சிகளால்தான் அவர் காங்கிரசை நோக்கி தள்ளப்பட்டார் என்பது வரலாறு. ஆனால் அவர் திராவிட இயக்கத்தில் இருந்தபோது , அவர் திராவிட இயக்கத்துக்கு வலுவாக குரல் கொடுத்ததுபோல எம் ஜி ஆர் குரல் கொடுக்கவில்லை என்பது பழைய படங்களை பார்த்தால் தெரிகிறது/

அந்த காலத்தில் ஜவஹர்லால் நேரு திமுகவினரை நான் சென்ஸ் என விமர்சித்தார். இதை வைத்து அவரை ஓட்டு ஓட்டு என ஓட்டியிருப்பார்கள். நேருவைப்போல கருப்பு கண்ணாடி , கோட் அணிந்து சிவாஜி வருவார். நான்சென்ஸ் என்பார்.

ஒரு காட்சியில் ஒரு தொழிலாளி சம்பளம் கேட்டு வருவான்.

தொழிலாளி  : அய்யா.

( நேருவின் தோற்றத்தில் இருக்கும் ) சிவாஜி :   நான்சென்ஸ்

தொழிலாளி : நான்சென்சா... பெரிய மனுஷன்னு மதிச்சு பேசினா, பெரிய மனுஷன் பேசற பேச்சா இது


இன்னொரு காட்சி

கருடன் பதிப்பக உரிமையாளரும் ( துரைராஜ்)  சிவாஜியும் பேசிக்கொண்டு இருப்பார்கள்

துரைராஜ் : பரந்தாமா... புத்தகம் எழுது,,லாபத்துல எனக்கு முக்கால் ,,உனக்கு கால்..

தொழிலாளி : எனக்கு ?

துரைராஜ் : அவனுக்கு கால் ...உனக்கு அறை ( பளார் என ஓர் அறை )

சிவாஜி : ஹா ஹா

இந்த வசனத்தை ஆட்டையைப்போட்டு பிறகு ஒரு காமெடி காட்சி வந்ததை மறந்து இருக்க மாட்டீர்கள்



இன்னொரு காட்சி

துரைராஜ் : பரந்தாமா ,அந்த பாண்டியன்  நம் வழியில் அடிக்கடி குறுக்க வறான்... நாம வெளியிட்ட புத்தகத்தை திட்டினான், இப்ப நாம கல்யாணம் பண்ணிக்க போற...

சிவாஜி : டேய்

துரைராஜ் : இல்லை இல்ல.... நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணை கட்டிக்க பாக்குறான்.
இப்படி படம் முழுக்க ரகளையான , நக்கலான வசனங்கள்.

பாண்டியனிடம் அறை வாங்கும் சிவாஜி. இந்த அடிய வெளிய சொல்லிடாதடா என தன் சகாவை கெஞ்சுவது. துணிச்சலாக தவறாக செய்வது. அக்காவிடம் மாட்டிக்கொண்டால் செண்டிமெண்ட்டாக பேசுவது என செமையான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

போராட்டம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கோர்ட்டில் நிறுத்தப்பட்டு இருப்பார்.

பராசகதிபோல ஒரு முன்னரை கொடுத்து பேச ஆயத்தமாவார்... என்னவோ பேசப்போகிறார் என ஆவலாக காத்து இருபோம்..
இந்த குற்ற்ச்சாட்டு தவறு... அப்படி உண்மையாக இருப்பின் என்னை மன்னித்து விடுங்கள் என் ஒரு ஸ்டண்ட் அடித்து , ஒரு டாப்கிளாஸ் வில்லனாக அந்த காட்சியில் மிளிர்வார்.

அதற்கு முந்தைய காட்சி வரை தொழிலாளர்களின் வீர மிகு தலைவனாக தன்னை காட்டிக்கொண்டு , அந்த ஒரு காட்சியில் பல்ட்டி அடிப்பார்.

இயல்பாக நடிக்கும் சிவாஜி, வீரமாக நடிக்கும்போது மட்டும் வேண்டும் என்றே மிகை நடிப்பை காட்டுவார். இரு விதமாகவும் தன்னால் நடிக்க முடியும் என காட்டிய அவரை , மிகை நடிப்பாளர் என முத்திரை குத்துவது அறியாமையே.

புராண கதை ஒன்று உண்டு. முனிவரின் மனைவி அகல்யாவை கவர இந்திரன் திட்டம் இடுவான். முனிவர் தினமும் அதிகாலை எழுந்து நீராட செல்வார். இந்திரன் தன்னை சேவலாக மாற்றிக்கொண்டு , நடு இரவிலேயே விடியல் ஓசை எழுப்பி , அவரை ஆற்றுக்கு அனுப்பி விட்டு , அகல்யாவை நெருங்குவான். ஞான திருஷ்டி , சாபம் என அந்த கதை போகும், அதை அழகாக இந்த படத்தில் பயன்படுத்தி இருப்பார்கள்..இந்திரன் செய்த வேலையை சிவாஜி செய்வார்.

அதேபோல , இன்னொரு சம்பவம். பெண் பித்தராக அலையும் அருணகிரி நாதர் ஒரு வேசியை தேடிசெல்வார். உனக்கு பெண் தானே வேண்டும்,. என்னை எடுத்துக்கொள் என ஒரு கட்டத்துல் அவரது அக்கா கூற அதிர்ந்து போவார்.

இதையும் அழகாக காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

கடைசியில் அந்த மோசடி பதிப்பகத்தை விட்டு செல்லும்போது, கருடன் பதிப்பகம் என்ற பெயரின் முதல் எழுத்தை , தி என மாற்றி செல்வது தமிழ் குறும்பு.

பாண்டியனின் தந்தையாகவும் , சிவாஜியை நம்பும் ஏமாறுபவராகவும் நடித்து இருப்பவர் தங்கவேலு. கிருஷ்ணகுமாரி , கிரிஜா , முத்துலட்சுமி போன்றோரும் சிறப்பாக தம் பங்கை செய்து இருக்கிறார்கள்.

இசை ஜி ராம நாதன் ... ஒவ்வொரு பாடலும் இனிமை.

இயக்கம் டி ஆர் சுந்தரம். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு.

கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.. வசனத்துக்காக , சிவாஜியின் நடிப்புக்கா, இசைக்காக ., தமிழுக்காக , துணிச்சலுக்காக , நகைச்சுவைக்காக


Sunday, November 10, 2013

கமல்ஹாசனின் வரலாற்று துரோகமும் அந்த காலத்து பெண்ணீய த்ரில்லரும்

பெண்ணீயம் பேசும் இந்த காலத்தில் வருகின்ற படங்களைப்பார்த்தால் அது பெண்களுக்கு பெருமை சேர்ப்பதாக இருப்பதில்லை . கவர்ச்சிக்காகவும் , பாடல்களுக்கு ஆடிப்போகவும் மட்டுமே பெண்களை பயன்படுத்துகிறார்கள் . ஆனால் அந்த காலத்தில் ஒரு பெண் துப்பு துலக்குவது போல ஒரு படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது என்பது எனக்கு ஆச்சர்யம் அளித்தது. அதில் சினிமா மேதை எஸ். பாலச்சந்தர் நடித்திருக்கிறார் என்பது கூடுதல் ஆச்சர்யம்.

எனவே டாக்டர் சாவித்ரி இந்த படதை பார்க்க முடிவு செய்தேன். எஸ் பாலச்சந்தர் , என் எஸ் கே , அஞ்சலி தேவி , மதுரம், ராஜம் , நம்பியார் , அசோகன்  போன்ற அந்த கால நட்சத்திர பட்டாளமே படத்தில் இருக்கிறது.

கதை , திரைக்கதை எழுதியதுடன் வேலன் மற்றும் இளங்கோவனுடன் இணைந்து வசனமும் எழுதி இருப்பவர் ஆச்சார்யா. இந்த ஆச்சார்யா யார் என்பது கண்டிப்பாக ஒவ்வொரு சினிமா ரசிகனுக்கும் தெரிந்து இருக்க வேண்டும்.
அந்த காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சந்திரலேகா படம் இவரது கதையில் இருந்து உருவானதுதான், படத்தை இவர்தான் இயக்குவதாக இருந்தது. பெரும்பாலான காட்சிகளை இவர்தான் இயக்கினார், வாசனுடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் அவர் விலக நேரிட்டது. அந்த படத்தில் வரும் புகழ் பெற்ற டிரம் டான்ஸ் காட்சிகளை இவர்தான் எடுத்தார்.

மங்கம்மா சபதம் , அபூர்வ சகோதரர்கள் போன்ற சூப்பர் ஹிட் படங்கள் எடுத்தார். இவரது புகழை குழி தோண்டி புதைக்க முயன்ற பலரில் கமலஹாசனும் ஒருவர்.   மேற்கண்ட இரண்டு பெயர்களிலும் கமலும் சில சராசரி படங்கள் எடுத்தார். இன்று அபூர்வ சகோதரர்கள் என்றால் கமல் எடுத்த படம்தான் இன்றைய இளைஞர்களுக்கு நினைவு வருமாறு செய்தது ஒரு வரலாற்று துரோகம் என்றே சொல்ல வேண்டும். அதேபோல மங்கம்மா சபதம் என்ற பெயரில் ஒரு ஃபிளாப் படமும் எடுத்தார் என்பது குறிப்படத்தக்கது.

ஆனால் இந்த துரோகங்களையும் மீறி ஆச்சார்யவைப்பற்றி இன்றும் ஒருவன் எழுதுகிறான், அதை நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் அதற்கு காரணம் அவர் மேதமைதான். என்றும் யாராவது ஒருவரால் அவர் பேசப்பட்டுக்கொண்டேதான் இருப்பார்.
இப்பொதெல்லாம் டிவிடி , ஆன்லைன் டவுன்லோடு என்றெல்லாம் இருக்கின்றன. அதெல்லாம் இல்லாத அந்த காலத்திலேயே நல்ல நல்ல ஆங்கிலப்படங்களை தேடிப்போய் பார்த்து , குறிப்புகள் எடுத்து தன் சினிமா அறிவை வளர்த்து கொண்டு அதன் மூலம் தமிழ் சினிமாவை வளர்த்த மாமனிதன் அவர்.

இந்த படத்தின் இயக்குனர் ஆர் எம் கிருஷ்ணசாமியும் லேசுப்பட்ட ஆளில்லை. தூக்குத்தூக்கி போன்ற மறக்க முடியாத படங்கள் எடுத்தவர். ஆரம்ப கால படங்களை தமிழ் சினிமாவின் பொற்காலம் என்பார்கள். காரணம் அந்த கால இயக்குனர்கள் தொழில் நுட்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதால் , டெக்னிக்கல் விஷ்யங்களில் படம் கில்லியாக இருக்கும். இவரும் ஒளிப்பதிவில் இருந்து பிறக்கு இயக்கத்திற்கு வந்தவர், இன்று தயாரிப்பாளர்க்கு நன்றாக கதை சொல்லத்தெரிந்தவர்தான் நல்ல இயக்குனர் என்றாகி விட்ட நிலையில், டெக்னிக்கல் மேட்டர்களில் தமிழ் படங்கள் குப்பையாகிவிட்டதை வேதனையோடுதான் பார்க்க வேண்டியிருக்கிறது.

சமீபத்தில் சிம்பிளாகி ஒந்து லவ் ஸ்டோரி என்றொரு கன்னடப்படம் பார்த்தேன்.அதன் தரத்தில் பாதியைக்கூட சமீபத்திய தமிழ் படங்கள் எட்டவில்லை என்பது வேதனையான உண்மை.

டாக்டர் சாவித்ரி படத்திற்கு இசை ஜீ ராம நாதன், பாடல்கள் உடுமலை நாராயணகவி மற்றும் மருதகாசி.

இப்படி மேதைகள் பலர் பணியாற்றிய இந்த படம் பார்ப்பதற்கு இன்றும் இனிமையாக இருக்கிறது. காமெடி ,பாடல்கள்., ரொமான்ஸ் , சஸ்பென்ஸ் என பெண்ணீய பிரச்சாரம் இல்லாமல் பொழுதுபோக்கு படமாக மிளிர்கிறது.

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட தன் கணவனை கதா நாயகி எப்படி மீட்கிறாள் என்பதே கதை.
கதா நாயகி உதவும் உள்ளம் கொண்ட ஓர் டாக்டர்.  கணவன் , குழந்தை , தந்தை , தம்பி , தன் வேலை என இனிமையான வாழ்க்கை.  அவள் தம்பி ( நம்பியார் )ஒரு பெண்ணை (ராஜம் ) தற்செயலாக சந்திக்கிறான். மோதலில் ஆரம்பித்து நட்பாக மாறும் நிலையில் அவளைப்பற்றி தெரிய வருகிறது. அவளது கார்டியனான வக்கீல் அவளை மிரட்டி தன் கைப்பிடியில் வைத்து இருப்பது தெரிகிறது.

அவள் தன் கையில் இருந்து தப்பிவிடக்கூடாது என்பதற்காக அவள் மன நலம் சரியில்லாதவள் என ஒரு போலி சான்றிதழை ஒரு சீக்கிய டாக்டரிம் ( எஸ் பாலச்சந்தர் ) இருந்து மிரட்டி வாங்குகிறார் . டாக்டருக்கு அதில் விருப்பம் இல்லை. ஆனால் வேறு வழியின்றி கொடுக்கிறார்.

வக்கீல் பிடியில் இருந்து தப்பி டாக்டர் சாவித்ரி வீட்டில் அடைக்கலம் ஆகிறாள் அந்த பெண். சமரசத்துக்கு வரும் வக்கீல் தன் வீட்டுக்கு வந்து அவளுக்கு சொந்தமாக பணத்தையும் நகைகளையும் வாங்கி செல்ல சொல்கிறார். டாக்டர் குடும்பமும் அந்த பெண்ணும் அதன்படி வாங்கி வருகின்றனர். வக்கீல் போலீசுக்கு போன் செய்து தன் வீட்டில் இருந்து அவர்கள் திருடிவிட்டு தப்பியதாக புகார் செய்கிறார். சாவித்ரியின் கணவன் , அந்த பெண் அனைவரும் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். அவர்கள் மறுக்கிறார்கள். விசாரணைக்கு அழைக்க வக்கீலை அழைக்கையில் அவர் கொல்லப்பட்டு இருப்பது தெரிகிறது.

கடைசியாக அவர் வீட்டுக்கு சென்றவர் சாவித்ரியின் கணவன் என்பதாலும், வக்கீலின் புகாரின் அடிப்படையிலும் கொலைப்பழி  அவர் மேல் விழுகிறது. அவரை டாக்டர் சாவித்ரி எப்படி காப்பாற்றினார். உண்மை கொலையாளியை எப்படி துப்பு துலக்கி கண்டு பிடித்தார் என்பதே கதை.

என் எஸ் கே வெறும் காமெடியானாக இல்லாமல் , கொலையில் சந்தேக வலையில் சிக்கும் முக்கிய நபராக வருகிறார். அவருக்கே உரிய தமிழில் தரமான டபுள் மீனிங் ஜோக்குகள். முன்சீப்பை அவர் கோபத்தில் வெட்டி விட்டதாக போலீஸ் தேடுகிறது, அவர் ஒளிகிறார். கடைசியில் பார்த்தால் அது வேறு வாழை சீப்பு. சொந்த குரலில் மூன்று பாடல்கள் பாடி இருக்கிறார். அதில் காசிக்கு போனால் என்ற பாடல் அந்த காலத்தில் ப்யங்கர ஹிட்..இன்றும் கேட்க இனிமையாக இருக்கிறது.

சீக்கிய டாக்டராக எஸ்.பாலசந்தர். மிகை அற்ற நடிப்பு. சீக்கியர் ஏன் இங்கு இருக்கிறார். ஏன் வக்கீலிடம் அஞ்சுகிறார். ரகசிய அறையில் என்ன செய்கிறார் , வக்கீலின் வேலைக்காரனுடன் இவருக்கு என்ன உறவு என சுவாரஸ்யமான பாத்திரப்படைப்பு.


அந்த காலத்தில் பின்னணி இசை , முன்னணி இசையாக மாறாமல் , பின்னணியிலேயே இருப்பது சிறப்பு. கடைசி காட்சியில் டாக்டர் சாவித்ரி தனியாக துப்பறிய செல்கையில் பிஜிஎம் அருமை.. முடிந்தால் பிறகு அப்லோட் செய்கிறேன். கேட்டு பாருங்கள்.

அதே போல பி லீலாவின் குரலில் தேன் சுவை என்ற பாடல் மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும், இசையிலும் படமாக்கப்பட்ட விதத்திலும்.

மிக்சர் சாப்பிடும் கணவன், துப்பறியும் மனைவி என்பது அந்த காலத்தில் பெரிய பரபரப்பாக இருந்தது, பல்வேறு வேடங்களில் செல்வது , ஒரு கட்டத்தில் இன்னொருவன் காதலியாக நடிப்பது என்றெல்லாம் இருந்தாலும் , செயற்கையாக இல்லாமல் இருப்பதே அன்று மக்கள் இதை ஏற்க காரணமாக இருந்தது.

பலமுறை பார்க்க வேண்டிய படம் என சொல்ல மாட்டேன். அனைவரும் ஒரு முறையேனும் பார்க்க வேண்டிய படம் இது.. வாய்ப்பு கிடைக்கும்போது மிஸ் செய்யாமல் பார்த்து விடுங்கள்..









Wednesday, November 6, 2013

ஆங்கிலப்படங்களுக்கு சவால் விடும் அந்த கால படம் - அவனா இவன்

உலக படங்களை தேடி தேடி பார்க்கிறோம். ஆனால் தமிழிலேயே எத்தனையோ உன்னதமான சினிமாக்கள் வந்துள்ளன. அதை பார்த்திருக்க மாட்டோம்.  பார்த்த பின்புதான் அட்டா, இதை எப்படி மிஸ் செய்தோம் என நினைப்போம். அப்படி இன்று பார்த்த படம்தான் வீணை எஸ் பாலச்சந்தரின் அவனா இவன் படம்.

இப்படி ஒரு படம் இருக்கிறது... அதை பாருங்கள் என எனக்கு சொன்னவர் நண்பர் காரிகன். அந்த நாள் படம் பார்க்கவும் இவர்தான் உந்துசக்தியாக இருந்தார்.




குறிப்பாக அவனா இவன் பார்க்கையில் இவரை அடிக்கடி நினைத்துக்கொண்டேன்.

பழைய படங்களை பார்க்கையில் சில சலுகைகள் கொடுத்து ஸ்ட்ரிக்டாக மதிப்பிடுவதை தவிர்ப்போம். அந்த காலத்துக்குரிய நாடக பாணியிலான ஓவர் ஆக்டிங் , பாடல்கள்,  செயற்கையான வசனங்கள் போன்றவற்றை பழைய படம்னா அப்படீத்தான் இருக்கும் என சலுகை கொடுத்து ரசிப்போம். ஆனால் இத்தகைய சலுகைகளை கோராமல் இன்று எடுக்கப்பட்ட புதுப்படம் போல மிளிர்கிறது அவனா இவன். கேமிரா கோணங்கள் , திரைக்கதை , இசை , பாடல் இடம்பெறும் இடம் என ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கிறது.

ஆரம்பத்தில் பாடல் , சண்டைக்காட்சி , கோயிலில் சாமி கும்பிடுவது என இல்லாமல் முதல் ஷாட்டிலேயே கதை ஆரம்பித்து விடுகிறது. ஒரு சிறுவன் , சிறுமி , பெற்றோர் , மூத்த மகள் , அவள் காதலன்,  அவளை மணக்க துடிக்கும் நாயகன் என பிரதான பாத்திரங்கள் சில நிமிடங்களிலேயே அறிமுகம் ஆகி விடுகின்றனர்.

பணத்துக்காக நாயகியை மணக்க விரும்பும் நாயகன் , தன் காதலியை கொன்று விடுகிறான். அவன் பிடிபட்டானா , நாயகி அவனிடம் இருந்து தப்பித்தாளா என்ற திசையில் படம் செல்லப்போகிறது என்பது சில நிமிடங்களில் தெளிவாக தெரிந்து விடுவதால் படத்துடன் ஒன்ற முடிகிறது. அவன் பிடிபடுவான என்ற சஸ்பென்ஸ் கடைசி வரை நீடிக்கிறது.

கதா நாயகன் தன் காதலியை கொல்லும்போது தற்செயலாக ஒரு சிறுமியும் ( நாயகியின் தங்கை ) அவள் தோழனான சிறுவனும் பார்த்து விடுகின்றனர் என்பது சுவையான ட்விஸ்ட்.

பாதிப்படத்தில்தான் இது நிகழ்கிறது. அதுவரை தன் அக்காவுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை அவன் என்பது சிறுமிக்கு தெரியாது. திருமண பத்திரிக்கியை கொடுக்க வரும்போதுதான் அவன் முகத்தை பார்த்து பீதி அடைகிறாள்.. அன்று பார்த்த கொலைகாரனா இவன், அவனா இவன் என அதிர்கிறாள். இந்த இடத்தில் டைட்டில் ஓடத்தொடங்குகிறது. கிட்டத்தட்ட பாதிப்படம் முடிந்த நிலையில் டைட்டில் ஓடுவது அந்த காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

அந்த டைட்டில் இசையை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். எளிமையான் இசைக்கருவிகளை வைத்து மாயாஜாலம் செய்து இருக்கிறார் எஸ் பாலச்சந்தர் . கதை , திரைக்கதை , இயக்கம் , இசை இவர்தான் .  பியானோ மேதை ஹாண்டல் மேனுவல் இதில் பணியாற்றி இருக்கிறார். பாடல்கள் மற்றும் வசனம் வித்வான் வே லட்சுமணன்

டைட்டில் இசை உங்கள் செவிகளுக்கு

படத்தில் பின்னணி இசை கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். முக்கியமான கட்டங்களில் மட்டுமே இசை ஒலித்து சிலிர்ப்பூட்டுகிறது. உதாரணமாக கொலைக்காட்சி. நாயகன் தன் காதலியுடன் ஜாலியாக பேசிக்கொண்டு செல்கிறான், அப்போது இசை ஏதும் இருக்காது, பறவைகள் ஒலிகள் , காற்றோசை கேட்டுக்கொண்டு இருக்கும். கொலை செய்து விட்டு அவள் பிரேதத்தை அப்புறப்படுத்தும் நேரத்தில் பறவை ஓசையா கேட்கும்.. பதட்டம் மட்டும்தானே இருக்கும். இதை அழகாக உணர்ந்து , இசையை அளித்து இருப்பார் பாலச்சந்தர். சிலிர்ப்பூட்டும் அந்த இசையை கேட்டுப்பாருங்கள்.கொலையின் இசை

கருப்பு கண்ணாடி , கருப்பு ஆடை , வாயில் புகையும் சிகரட் என ஸ்டைலாக நடித்து இருப்பார் பாலச்சந்தர் . அலட்டிக்கொள்ளாத வில்லன் ரோலை அன்றே செய்து இருப்பது ஆச்சர்யம். கடைசியில் கைதாகி செல்லும்போது சிறுமி டாட்டா காட்டுவாள். அதற்கு அவர் ரெஸ்பான்ஸ் அற்புதம்.

இயல்பான வசனங்கள் , கதையோட்டத்தில் அமைந்த காமெடி, இனிய பாடல்கள் என படம் சுவையான அனுபவமாக இருக்கிறது.

குழந்தைகள் கொலையை பார்த்து விட்டாலும் யாரும் அவர்களை நம்பவில்லை. கொலைகாரனிடமே சென்று , நீ கொலைகாரன் என்பது தெரியும் . கல்யாணம் வேண்டாம் என வாதிடுவார்கள். அந்த காட்சியில் காமெரா விளையாடி இருக்கும். அன்றே கேமிரா மொழியை பயன்படுத்தி இருப்பது வியப்பளித்தது.

அந்த காலத்தில் ஆங்கிலம் கலந்து பேசுவது , அதிலும் நேர்த்தியாக பேசுவது படிப்பிற்கான அடையாளமாக இருந்து இருப்பது தெரிகிறது.

சி கே சரஸ்வதி , வீ எஸ் ராகவன் , செருகளத்தூர் சாமா போன்ற சிலர் அந்த படத்துக்கு பிறகும் வெகு நாட்கள் நடித்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வீ எஸ் ராகவன் இன்றைய யுகத்திலும் கூட சில படங்களில் நடித்தது ஆச்சர்யம்தான். இம்சை அரசன் படத்தில் முக்கியமான ரோலில் வருவாரே.. இதில் குழந்தையாக வரும் பேபி பத்மினியும் பிறகு நிறைய நடித்தார்.

மொத்ததில் அவனா இவன் படம் ஆங்கிலப் படங்களுக்கு சவால்விடும்  அந்த கால படம் 








Tuesday, November 5, 2013

பப்ப பொட்ட தப்ப - ஆங்கில எழுத்துருவில் படித்த பலான கதை அனுபவம்

அந்த காலத்தில் எல்லாம் கம்யூட்டர் பரவலாக இருக்காது.. நெட் செண்டர்தான்..ஒரு ம்ணி நேரத்துக்கு நாற்பது ரூபாயெல்லாம் சில இடங்களில் உண்டு.

 அங்கு போய் tamil sex story என டைப் செய்து தேடினால், சில கதைகள் கிடைக்கும்.. கதை ஆங்கில எழுத்துருவில் இருக்கும்.. இப்போது போல தமிழ் அவ்வளவாக கிடையாது... வந்த வரை லாபம் என அறிவு தேடலை ஆங்கில எழுத்துருவிலேயே ஆரம்பிப்போம்.

படிக்க ஆரம்பித்த உடனேயே  சிக்கல்.. பப்ப பொட்ட தப்ப - என்ன இது என திகைப்போம்.பிறகுதான் அது பாப்பா போட்ட தாப்பா என புரியும் ( papa potta thappa ) சிலர் மட்டுமே நெடிலுக்கு ரெண்டு ஏஏ போடுவார்கள்..பலர் ஒரு ஏ தான் போடுவார்கள்... அவன் ஒத்துக்கொண்டான் என்பதை தவறாக படித்து கிளர்ச்சி அடைவோம்.. பிறகு உண்மை புரிந்து அடங்கி போவோம்.. ஒரு மணி நேரம் போராடிய பிறகு ஆடை நனைந்து விடும் , வியர்வையில்... போராடிய களைப்பில்... எரிச்சலுடன் காசை கொடுத்து விட்டு வருவோம்... காலப்போக்கில் ஆங்கில எழுத்துரு கை விடப்பட்டு , தமிழில் அது போன்ற புனிதமான கதைகள் வரத்தொடங்கி விட்டன .. நான் பெற்ற துன்பம் வேறு யாரும் படக்கூடாது என நானும் சில கதைகளை பெயர்போடாமல் அப்படிப்பட்ட இணைய தளங்களுக்கு அனுப்பி இருப்பது இங்கு முக்கியம் இல்லை... மீண்டும் ரிவர்ஸ் கியர் சென்று ஆங்கில எழுத்துருவுக்கு போவது சற்றும் பயனற்றது என்பது அனுபவபூர்வ உண்மை

வெளி நாடுகளில் இருக்கும் தமிழர்களுக்கு தமிழ் பேசத்தெரியும். புரிந்து கொள்ள முடியும். ஆனால் தமிழ் எழுதப்படிக்க தெரியாது... பேசாமல் தமிழை ஆங்கில எழுத்துருவில் எழுதினால் அவர்களும் தமிழ் படிக்க வாய்ப்பு ஏற்படுமே என்றொரு வாதம் வைக்கப்படுகிறது... அது தவறான கருத்தாகும்.
ஒருவருக்கு ஒரு மொழியில் இருக்கும் விஷ்யங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால் , அந்தந்த மொழியை கற்க ஆர்வம் காட்ட ஆரம்பித்து விடுவார்.. உதாரணமாக சாருவையே கூட எடுத்து கொள்ளலாம்.. பல மொழிகளை கற்க ஆர்வம் காட்டுகிறாரா இல்லையா...
அது போல தமிழில் படிப்பதற்கு பல விஷ்யங்கள் இருக்கின்றன என்பது அயல் நாட்டு தமிழர்களுக்கு தெரிய வந்தால் , அவர்கள் தமிழை கற்க ஆர்வம் காட்ட ஆரம்பித்து விடுவார்கள்.. 
உதாரணமாக எனக்கு தெரிந்த சில கன்னட பெண்0  தோழர்கள் ( தோழிகள் என அழைக்கும் அளவுக்கு நெருக்கமானவர்கள் அல்லர் )   , வேதாத்திரி மகரிஷியின் அமைப்பில் இருக்கிறார்கள்..வேதாத்திரி மகரிஷியின் கருத்துகளை அவர் மொழியிலேயே தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழ் எழுத்துருவை கற்றவர்களை எனக்கு தெரியும் .. 
ஆக நம்முடைய பணி தமிழில் படிக்கவேண்டியவை ஏராளம் இருக்கின்றன என்ற நிலையை உருவாக்குவதுதான். சீரோ டிகிரியின் ஆங்கிலப்பதிப்பு உலகளாவிய ரீச்சை எட்டும் பட்சத்தில் , அவர்களில் சிறிய சதவிகிதத்தினராவது , தமிழிலிலேயே நேரடியாக படிக்க முனைவார்கள்.. அப்போது இயல்பாகவே தமிழை கற்க ஆரம்பிப்பார்கள்...
இதமிழ் எழுத்துருதான் அயல் நாட்டு தமிழர்கள் தமிழ் படிக்காமைக்கு காரணம் என்பது தவறு.. கோணங்கி எழுத்தை தமிழ் எழுத்துருவில் படித்தாலே புரியாது.. இதில் ஆங்கில ஃபாண்டில் எப்படி படிப்பார்கள்?

நம்மில் பலரையே உதாரணமாக வைத்து பாருங்கள்.. நம்மில் பலர் வெளி மானிலங்களில் , வெளி நாடுகளில் வேலை செய்து சில மொழிகளை பேச , புரிந்து கொள்ள கற்று இருப்போம். எழுதப்படிக்க தெரியாது என்ற நிலை இருக்கும்.. அதற்காக ஆங்கில எழுத்துருவில் அந்தந்த மொழி இலக்கியங்களை படிக்க சொன்னால் படிப்போமா?


உதாரணமாக எனக்கு கன்னட மொழி பேசத்தெரியும் , புரிந்து கொள்ள முடியும் என்பதற்காக ஆங்கில ஃபாண்டில் கன்னட நாவலை படிக்க சொன்னால் சத்தியமாக படிக்க மாட்டேன். எனக்கு தெரிந்த ஒரளவு கன்னடத்தை வைத்து கன்னட எழுத்திலேயேதான் படிக்க முயல்வேன்...
ஆக ஜெயமோகன் முன் வைக்கும் வாதம் தவறு என்பதை அழுத்தமாக இங்கு பதிவு செய்கிறேன்.

Monday, November 4, 2013

பலமுறைகள் பார்க்க வேண்டிய சிவாஜி படம்


திரைப்படங்களில் பழைய படம் , புதிய படம் என்றோ கமர்ஷியல் படம் , கலைப்படம் என்றோ பார்க்க கூடாது. நல்ல படமா இல்லையா என்று மட்டுமே பார்க்க வேண்டும் என்பது என் கொள்கை. அந்த அடிப்படையில் தீபாவளி விடுமுறையில் சில படங்கள் பார்த்தேன்.

இதற்காக நான் டிவிடிகளை சூஸ் செய்வதைப் பார்த்து  கடைக்காரரும், சக நண்பரும் குழம்பினார்கள்.. காரணம் நான் தேர்ந்தெடுத்தது ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாத படங்கள். ப்ளாக் அண்ட் வெயிட் படங்கள், லோக்கல் படம், ஆங்கிலப்படம் , பிட்டு படம் என நான் எடுப்ப்பதைப்பார்த்து ஒரு கட்டத்தில் அவர்கள் தண்ணீர் தெளித்து விட்டு விட்டார்கள்.

அப்படி நான் பார்த்த முக்கிய படங்களில் ஒன்று அந்த நாள். எஸ். பாலச்சந்தர் இயக்கம். சிவாஜி நடித்த படம். இதை தொலைக்காட்சியில் அவ்வப்போது ஒளிபரப்பினாலும் , என்னால் ஏனோ இது வரை பார்க்க முடியாமல் போய் விட்டது.  ஒருவழியாக இந்த லீவில் பார்த்தேன்.

அந்த நாள் ஒரு முக்கியமான நாள் என ஒரு குரல் ஒலிப்பதுடன் படம் ஆரம்பிக்கிறது.. தமிழ் ஃபாண்டிலேயே தமிழ் எழுத்துகள் தோன்றுகின்றன. உலகப்போர் காலகட்டம். ஜப்பான் குண்டு வீசப்போகிறது என்ற அச்சமூட்டும் சூழல்  .அப்போது ஒரு திருவல்லிக்கேணி வீட்டில்...

இப்படி அதிரடியாக வித்தியாசமாக ஆரம்பிக்கிறது படம்.  சரி,,அந்த வீட்டில் என்ன நடக்கிறது. முதல் காட்சி. முதல் ஷாட். சிவாஜி சுட்டு கொல்லப்படுகிறார்.
கதா நாயகன் முதல் காட்சியிலேயே மரணம் அடைவது போல அந்த காலத்திலேயே எப்படித்தான் எடுத்தாரோ. தொடர்ந்து ஒரு பெரியவர் தடதடவென போலீஸ் நிலையம் நோக்கி ஓடுகிறார்.
அதன் பின் போலீஸ், சி ஐ டி விசாரணை என படம் பரபரவென செல்கிறது.

துப்பாக்கி சத்தத்தை கேட்டவுடனேயே அது கொலைதான் என்பதை எப்படி யூகித்தார் என்ற சுவாரஸ்யமான கேள்விக்கு அந்த பெரியவர் அவர் பார்வையில் கொலைக்கு காரணத்தை விளக்குகிறார்.

அண்ணன் தம்பி பிரச்சனையே கொலைக்கு காரணம் என்பது அவர் பார்வை.
ஆனால் தம்பியோ கொலையை இன்னொரு கோணத்தில் விளக்குகிறான்.

தம்பியின் மனைவியோ , நடனக்காரி ஒருவள்தான் கொலை செய்தாள் என்கிறாள். அந்த நடனகாரி தன் பார்வையில் இன்னொரு கதையை சொல்கிறாள்.
ஆக நமக்கு ஒரே படத்தில் பல்வேறு குறும்படங்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு கதையும் லாஜிக்கலாக இருக்கின்றன. ஓர் ஆரம்பம், ஒரு முடிச்சு , ஒரு முடிவு என பக்காவாக உள்ளன.

சிவாஜியின் நடிப்பு உச்சத்தில் இருப்பது இந்த படத்தில்தான் என்றால் மிகை இல்லை. புரட்சிகரமான பேசுவதிலும் , தன் திறமை மதிக்கப்படாத ஆதங்கத்தை காட்டுவதிலும் , காதலை காட்டுவதிலும் , தன் கனவுகளை விவரிப்பதிலும் , ஆட்டுமந்தையில் சேரமுடியாத ஆனால் மனிதர்களை நேசிக்கின்ற தன்மையை காட்டுவதிலும் , கடைசியில் வெறி கொண்ட மனிதனாக மாறுவதிலும் சிவாஜி ஒளிர்கிறார். மிகை நடிப்பு எங்கும் இல்லை.

அதே போல ஹீரோவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் பாணியும் இல்லை. சிவாஜியின் மனைவி, தம்பி , அவனது கோபக்கார மனைவி , பெரியவர் , அழகான நடனக்காரி , குதிரைக்காரன், சொல் வீச்சில் கில்லாடியான சைக்கிள்காரன், கடைக்காரர் , எதிர்கருத்துகளுக்கு வாய்ப்பு அளிக்கும்  சங்கத்தலைவர் , நிதி வசூல் மாணவன் , போலி மாணவர் தலைவர் , புத்திசாலித்தனமான சி அய் டி , அவரை அவ்வபோது கிண்டல் அடிக்கும் ஆனால் காரியத்தில் கண்ணாக இருக்கும் இன்ஸ்பெக்டர், வேலைக்காரன் என ஒவ்வொன்றும் அற்புதமாக செதுக்கப்பட்டு இருக்கிறது.






படத்தில் பாடல் கிடையாது. சில இடங்களில் பாடல் வைத்து இருக்கலாம் என தோன்றியது..அதற்கான சூழல் உள்ளது.. ஆனாலும் பாடல் வேண்டாம் என துணிச்சலாக முடிவு எடுத்திருக்கிறார் இயக்குனர்.

அந்த நாளிலேயே கேமரா மொழியை பயன்படுத்தி இருப்பதை பார்க்கையில் ஆங்கிலப்படம்போல இருந்தது. பழைய தமிழ் படங்களில் கேமரா அவ்வளவாக அசையாது. நாடகம் போல ஒரே திக்கில் பார்த்து வசனம் பேசுவார்கள் .கேமரா ஒரே இடத்தில் நின்று படம் பிடிக்கும்( இது போன்ற கேமராவை சமீபத்தில் ஓ ஆ படத்தில் பார்த்தேன் )

இந்த படத்தில் கேமரா கோணங்கள் ஆச்சர்யப்படுத்துகின்றன. சிவாஜியும் நடனக்காரியும் காரசாரமாக பேசும் காட்சி, கடைசியில் சக்கர நாற்காலி சுழலும் காட்சி , சாவியை தூக்கி போட்டு பிடிக்கும் காட்சி என பல காட்சிகளில் கேமரா விளையாடி இருக்கிறது. சிவாஜியின் கண்கள் , முகம் என அவர் நடிப்பை கச்சிதமாக உள் வாங்கி இருக்கிறது கேமரா.சிவாஜி ஏன் இந்த இயக்குனருடன் மீண்டும் ஏன் இணையவில்லை. ஏன் இது போல அதற்குபின் நடிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியவேஇல்லை..

பின்னணி இசை இன்னோர் அற்புதம். பதட்டம் , நிச்சயமின்மை போன்றவற்றை காட்டும் காட்சிகளில் இசை பதட்டம் அளிக்கிறது. மற்ற நேரங்களில் மவுனம் காக்கிறது. தேவை அற்ற இரைச்சல் இல்லவே இல்லை.

படத்தின் ஆரம்ப காட்சி எவ்வளவு நேர்த்தியாக இருக்கிறதோ அதே போல கடைசி ஷாட்டும் மிகபிரமாதம். நீங்கள் தனியாக அமர்ந்து பார்த்தாலும் கை தட்டாமல் இருக்க மாட்டீர்கள்.

படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க ஆவலாக இருப்பதற்கு இது மட்டும் காரணம் அல்ல. படம் முழுக்க விரவி இருக்கும் இயல்பான நகைச்சுவை படத்தை சுவையான அனுபவம் ஆக்குகிறது.

அந்த பெண்ணின் அடையாளத்தை சொல்லும்போது அவள் மூக்கு சி ஐ டி போல இருக்கும் என்பான் அந்த பையன். அதில் அவருக்கு ஒரு  வெட்கம் கலந்த பெருமை. இன்னொருவருக்கு அவர் அடையாளம் சொல்கையில் , சிவப்பாக இருப்பாள் , கருப்பு கண்கள், மூக்கு .. என ஆரம்பித்து லேசாக வெட்க்ப்படுவது செமையாக இருக்கும்.

அதேபோல அந்த பையன் கலகலப்பாக கலக்கி இருப்பான். யோவ் கான்ஸ்டபிள் இந்த பையனை கூட்டிக்கிட்டு போயா.. என்றதும் அவரு எதுக்கு சார்.. நான் தனியாகவே வீட்டுக்கு போறேன் என்பான். நீ வீட்டுக்கு போகல ..ஸ்டேஷன்லதான் இருக்க போற என்றதும் அவன் ரெஸ்பான்ஸ் சூப்பர்.

துப்பறியும் களேபரத்திலும் யானை கதை சொல்வதும், அதனால் சில நிமிடங்கள் தாமதாகி தேடியவரை பிடிக்க முடியாமல் போய் கிண்டலுக்கு ஆளாவதும் இயல்பான நகைச்சுவைக்கு சான்று.

 நாட்டு பற்று , பொது நல சேவை போன்றவை குறித்து சிவாஜி எடுத்து வைக்கும் மாற்று வாதங்கள் இன்றும் சிலிர்க்க வைக்கின்றன. இன்றைய இளைஞர் அந்த சிவாஜி கேரக்டரை நன்கு புரிந்து கொள்ள முடியும் என கருதுகிறேன்.

எதிர் துருவம் ஈர்க்கும் என்பது போல சிவாஜியுடன் காதல் வயப்பட்டு , மனைவியாகி , பிறகு கொல்வதும் அதை மறைப்பதும் , அதற்கு கூறும் காரணமும் ஃபர்ஸ்ட் கிளாஸ். உலகப்போர் , ஜப்பான் , சுதந்திர போர் போன்றவற்றை அழகாக இணைத்து , நம் மண்ணுக்கேற்ற புனைவு ஆக்கியிருப்பதை இளம் படைப்பாளிகள் கவனித்து கற்க வேண்டும்.

கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.. ஒரு முறை அல்ல..பல முறை

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா