Showing posts with label சிவாஜி. Show all posts
Showing posts with label சிவாஜி. Show all posts

Monday, June 1, 2020

மேதைகளின் மோதல் .. சிவாஜி , டிஎம்எஸ் , சீர்காழி, அகிலன்


அந்த காலத்தில் சிவாஜி , எம்ஜிஆருக்கு டிஎம் எஸ்தான் பாடுவார்
இருவருக்கும் ஏற்றமாதிரி வேறுபட்ட பாணிகளில் பாடுவார்

இந்த சூழலில் குங்குமம் படத்தில் சின்னஞ்சிறிய வண்ணப் பறவை என்றொரு பாடல்.. வழக்கம்போல டிஎம் எஸ் சை அணுகினர்

இசை அமைப்பாளர் சொன்ன மெட்டை கேட்ட டிஎம்ஸ் இது எனக்கு செட் ஆகாது .உணர்வுடன் , baவத்துடன் பாடுவது என் பாணி. இந்த பாடல் ராகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாடல். பிருகாக்கள் அழகாக இடம் பெற்றுள்ளன. இதைப்பாட நான் தகுதியானவன் அல்லன்.  சீர்காழி கோவிந்தராஜன் இது போன்ற பிருகாக்களை துல்லியமாக தன் குரலில் கொண்டு வருவபவர். அவரைப் அணுகுங்கள் என்றார்

அதன்படி சீர்காழியை பாட வைத்தனர்

பாடலை கேட்ட சிவாஜி , பாடல் அற்புதம். ஆனால் நான் பாடுவது போல இல்லை. உணர்வு இல்லை.  டி எம் எஸ் ஸையேபாட வையுங்கள் பாட வையுங்கள் என்றார்
அதன்பின் பாடலின் ராக அம்சங்களை நீர்த்துப்போகச்செய்து ஜனரஞ்சகப்படுத்தி டிஎம்எஸ்ஸை பாட வைத்தனர்.  சீர்காழி பாடிய வெர்ஷனை தன்னால் பாடியிருக்க முடியாது என டிஎம்எஸ் பல மேடைகளில் பெருந்தன்மையாக தன்னை தாழ்த்திக் கொண்டு பேசியிருக்கிறார்.ஆனால் சீர்காழிக்கு சிவாஜி மேல் வருத்தம்தான்

பிறருக்கு விருந்து சாப்பாடு போடுங்கள் . வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால் என் எச்சில் இலையில் பிறரை சப்பிட வைக்காதீர்கள் என அவரிடமே தன் கோபத்தை நேரடியாக காட்டினார்

ஆனாலும் சிவாஜி சீர்காழி மேல் கோபப்படவில்லை.
சிவாஜி படங்களில் பிற பாத்திரங்களுக்கோ , அசரீரியாகவோ அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன

இதுபோல இன்னொரு சம்பவம்

பாவை விளக்கு படத்தில் காவியமா நெஞ்சின் ஓவியமா என்ற பாடல் தாஜ்மகாலில் படமாக்கப்பட்டது.

கதாசிரியர் அகிலனுக்கு பிடிக்கவில்லை. இயக்குனர் காரணம் கேட்டார்.
சிவாஜி சில்க் ஜிப்பா அணிந்திருப்பது கதாபாத்திர இயல்பையோ உணர்வையோ பிரதிபலிக்கவில்லை. நான் எழுதியபடி கதர்ச்சட்டைதான் பொருத்தமாக இருக்கும் என்றார்

சிவாஜியிடம் இந்த பிரச்சனை சென்றது
அவர் அகிலனை தனியாக அழைத்துச் சென்று பேசினார்
கதையை நீங்கள் அழகாக படைத்து விட்டீர்கள். அந்த உணர்வை காட்சி வடிவால் எப்படி கொண்டுவருவது என இயக்குனர் , ஒளிப்பதிவாளர் என பலர் யோசிக்கிறார்கள். நானும் என் பங்கை ஆற்றுகிறேன். சில்க் ஜிப்பா காற்றில் அசைகையில் அது ஒரு ஃபீல் உருவாக்கும்.  நீங்கள் சித்தரித்த உணர்வு காட்சி வடிவில் வந்து விடும். அதை செயல்படுத்ததான் அனைவரும் உழைக்கிறோம் என்றார் சிவாஜி

இதைக்கேட்ட அகிலன் , கதாசிரியன் அன்ற எல்லையை தாண்டி நான் பேசி இருந்தால் வருந்துகிறேன். இது ஒரு கூட்டு முயற்சி என்பதை ஏற்கிறேன் என்றார்

அடடா..  இதற்கு ஏன் வருத்தம் ? நீங்கள் கோட்டும் ஈடுபாடு எனக்கு மகிழ்ச்சிதான். அதனால்தானே கதாசிரியரான உங்களை படப்பிடிப்புக்கு அழைத்து வந்திருக்கிறோம். உங்கள் கலுத்துகளை சொல்ல தயங்காதீர்கள். என சொன்னார் சிவாஜி.
இருவரும் கட்டிஅணைத்துக் கொண்டனர்
ஒரு அழகான நட்பு உருவாகி கடைசி வரை நீடித்தது

Thursday, October 3, 2019

நடிக்க கற்றுக் கொடுப்பா.. கேஎஸ் ரவிகுமாரை கலாய்த்த சிவாஜி

சிவாஜி கணேசனை நடிப்பு அகராதி என்பார்கள். ஒரு சூழலில் எப்படி நடிக்க வேண்டும் என தெரிந்து கொள்ள அதேபோன்ற காட்சியில் அவர் எப்படி நடித்தார் என பார்த்துக் கொள்வது பல நடிகர்கள் வழக்கம்

ஒரு படத்தில் எப்படி நடப்பது என இயக்குனர் மேஜர் சுந்தர்ராஜன் சிவாஜிக்கு விளக்க தடுமாறினார். சிவாஜி உடனே பத்துவிதமாக நடந்து காட்டி , இதில் ஒன்றை தேர்வு செய்யுஙகள் என்றார்.  இயக்குனர் அசந்து விட்டார்

படையப்பா படத்தில் தனக்கு நடிப்பு சொல்லித் தரும்படி கே எஸ் ரவிகுமாரை செல்லமாக கலாய்த்த வரலாறும் உண்டு

சிவாஜி தன் சொத்துகள் அனைத்தையும் வில்லனுக்கு எழூதிக்கொடுக்கிறார். அவர் , மனைவி,  மகன் கையெழுத்துடுகின்றனர். கடைசியில் மகள் கைச்சான்று இடும்போது சிவாஜி கண்களில் கண்ணீர். காட்சியை விளக்கினார் இயக்குனர்

மகன் மனைவி கையெழுத்துப்போடும்போது அழுகை வராதா என சீண்டலாக கேட்டார் சிவாஜி

மகன் எப்படியாவது பிழைத்துக்கொள்வான்  மனைவியோ வாழந்து முடித்தவள். மகள்தான் பாவம். இனிமேல்தான் திருமணம் நடந்து வாழ வேண்டும். அதை நினைத்துதான் கண்ணீர் என்றார் கேஎஸ்ஆர்

சரி..  அழுது காட்டு என மீணடும் சீண்டினார் நடிகர்திலகம்

இயக்குனர் நடித்துக்காட்டினார்

எப்படிப்பா கண்ணீர் வரவழைச்ச என கேட்டார் சிவாஜி

நான் என் மகளை நினைச்சுக்கிட்டேன் சார் என்றார் கேஎஸ்ஆர்

அதன்பின் அந்த காட்சியை பிரமாதமாக நடித்துக் கொடுத்தார் சிவாஜி

Thursday, April 25, 2019

சிவாஜி ஓவர் ஆக்ட்டிங் ஆ? - மகேந்திரன்


இயக்குனர் மகேந்துரனும் சிவாஜியும்


தங்க பதக்கம் படத்துகு நான் வசனம்..  சிவாஜியின் மனைவி இறந்ததை அறிந்து அவர் எதிர்வினைக்கேற்ப வசனம் எழுத வேண்டும்

இதற்காக ஒரு நாற்பது பக்க நோட்டு தேவைப்படும் என நினைத்தார்கள்.. நானோ ஒரே ஒரு வரி எழுதி கொடுத்தேன் ..அனைவருக்கும் அதிர்ச்சி

நான் விளக்கினேன்

சார்.. உங்க நடிப்புக்கேற்ற காட்சி இது.. வசனம் அதை கெடுக்கலாகாது.. மவுனமாக பார்க்கிறீர்கள்.. பழைய சம்பவங்கள் மனதில் விரிகிறது... உங்கள் உணர்வுகளை முகபாவத்திலும் உடல் மொழியிலும் காட்டுகிறீர்கள்.. வசனம் வேண்டாம்

இப்படி சொன்னதும் சிவாஜி உற்சாகமாகி விட்டார்.. அப்படியே செய்கிறேன் என்று சொல்லி விட்டு பிரமாதமாக நடித்தார்

ஒரு மகா கலைஞன் அப்போது புதியவனான என் பேச்சுக்கு மதிப்பளித்தது என் வாழ்வின் பொன்னான தருணங்களில் ஒன்று

பிறகு ஒரு நாள் கேட்டேன்

இவ்வளவு இயல்பாக நடிக்கும் உங்களை ஓவர் ஆக்ட் செய்வதாக சொல்கிறார்களே என்றேன்

அவர் சிரித்தார்

வீரபாண்டியன் கட்டபொம்மன் படத்தின் புகழ்பெற்ற காட்சியான வானம் பொழிகிறது வசனத்தை இயல்பான தொனியில் பேசினார்

அசந்து போனேன்

இதை நீ ரசிக்கலாம்... ஆனால் அன்றைய கால கட்டம் அப்போதுதான் நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு நகர்ந்து கொண்டு இருந்த்து.. அதற்கேற்ப சற்று நாடக பாணியில் நடித்தேன்

என் கையில் ஒரு பென்சில் கொடுத்தால் அதற்கேற்ப எழுதுவேன்,, பேனா கொடுத்தால் வேறு பாணி
அதுபோல காலத்துக்கு ஏற்ப கதைக்கேற்ப என் நடிப்பு பாணி அமைகிறது என்றார் அந்த மேதை

--

நானும் சினிமாவும்  - மகேந்திரன்

Thursday, March 21, 2019

தம் படங்களை பார்க்க கூடாது என ஆணையிட சிவாஜியும் , எம்ஜிஆரும் - வினோத வரலாறு


அசோகனுக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்த சிவாஜியின் பெருந்தன்மை குறித்து எழுதினேன் அல்லவா..

ஆனால் அசோகன் அந்த நன்றியையோ மரியாதையையோ காட்டவில்லை... எம் ஜி ஆரிடம் நல்லபேர் வாங்க வேண்டும் என்பதற்காக சிவாஜியை தரக்குறைவாக பேசினார்.. தனியாகவும் சரி.. மேடைகளிலும் சரி.. இப்படி பேசி வந்தார்

அப்படி இருந்தும்கூட , வேறொரு சம்பவத்தில் எம் ஜி ஆரின்  கோபத்துக்கு ஆளானார்..

அசோகன் தயாரிப்பில் உருவாகி வந்த , தான் நடித்த  நேற்று இந்த நாளை படத்துக்கு தன்னால் முடிந்த இடைஞ்சல்களை செய்தார் எம் ஜி ஆர்

படம் ரிலிசான பிறகும் , தொல்லைகள் தொடர்ந்தன.. தான் நடித்த படம் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை.. அசோகன் அழிய வேண்டும் என நினைத்து தன் படத்தையே ஃபிளாப் ஆக்கினார் எம் ஜி ஆர்.. அந்த படத்தை யாரும் பார்க்க வேண்டாம் என தன் ரசிகர்களுக்கு ஆணையிட்டார்

இது ஓரளவு பலருக்கு தெரிந்த கதைதான்

சிவாஜியும் இப்படி தன் படத்தை பார்க்க வேண்டாம் என சொன்னதும் , விளம்பரமே கொடுத்ததும் பலருக்கு தெரியாது... அதை பார்ப்போம்

சிவாஜி நெகட்டிவ் நாயகனாக நடித்த படம் திரும்பி பார்.. கலைஞர் வசனத்தில் உருவான படம்.. நேருவை செம கிண்டல் செய்திருப்பார்கள்

(படம் குறித்த என் பார்வை)

சிவாஜிக்கு நல்ல பேர் கிடைத்த படங்களில் ஒன்று இது

சில ஆண்டுகளில் சிவாஜி காங்கிரசின் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார்...

காங்கிரஸ் காமராஜர் தலைமையில் ஸ்தாபன காங் என்றும் இந்திரா காந்தி தலைமையில் இந்திரா காங் என்றும் செயல்பட்ட காலம்.. காமராஜர் விசுவாசியாக இருந்த சிவாஜி , அந்த கட்சியின் செல்வாக்கை உயர்த்தும் பொருட்டு , மாபெரும் கூட்டங்களில் பேசலானார்..

அவர் கூட்டங்களுக்கு கட்டணம் நிர்ணயித்து அனுமதி அளித்தாலும் பெருங்கூட்டம் கூடும் அளவுக்கு செல்வாக்கு இருந்தது


சிவாஜியின் இந்த வீச்சை குறைக்க கலைஞர் திட்டம் தீட்டி ஒரு பிரமுகருக்கு யோசனை அளித்தார்.. அந்த பிரமுகர் அதன்படி , திரும்பி பார் படத்தின் வினியோக உரிமையை பெருந்தொகைக்கு வாங்கினார்..

இப்போதெல்லாம் எந்த படமும் ஒரு வாரத்துக்கு பின் தியேட்டர்களில் கூட்டத்தை ஈர்ப்பதில்லை...காரணம் நிறைய தியேட்டர் ரிலீஸ் , டிவி வெளியீடு என பல

ஆனால் அந்த காலத்தில் , ஒரு படம் இரண்டாம் முறை ரிலிசானாலும் நல்ல கூட்டம் வரும்...

எனவே பெருந்தொகைக்கு படத்தை வாங்கிய அவர் , ஊர் முழுக்க இப்படி விளம்பரம் செய்தார்

நய வஞ்சகன் ,  பெண் பித்தன் , தீமையின் உருவம்... உங்களை காண வருகிறான்... வந்து பாருங்கள்... திரும்பிப் பார்


படத்துக்கு விளம்பரம் கொடுப்பதுபோல கூட்டங்களுக்காக சுற்றுப்பயணம் செய்யும் சிவாஜியை கேலி செய்தார் அவர்

இப்படி செய்தால் படம் நல்ல வசூல் செய்யும்தான்,.. சிவாஜிக்கு ஒரு நடிகராக அது நல்லதுதான்.. ஆனால் காங்கிரஸ் பாதிப்படையும்

எனவே தன் தொழில் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என சிவாஜி விளம்ப்ரம் கொடுத்தார்

திரும்பிப்பார் படம் - யாரும் பார்க்காதீர்கள்

இதை எதிர்பாராத வினியோகஸ்தர் பயந்து போய் மன்னிப்பு கேட்டு , தன் இழிவான விளம்பரத்தை வாபஸ் பெற்றார்







Sunday, March 17, 2019

எதிரிக்கு நடிப்பு சொல்லி தந்த சிவாஜி


அந்த காலத்தில் எம் ஜி ஆரும் சிவாஜியும் இரு துருவங்களாக இருந்தனர்.. நடிப்பு பாணியில் மட்டும் அல்ல.. இயக்குனர்கள் , தயாரிப்பாளர்கள் , சக நடிகர்கள் என அனைத்து துறையினருமே இப்படி பிரிந்து இருந்தனர்

உதாரணமாக தேவர் ஃபில்ம்ஸ் சிவாஜியை வைத்து படம் எடுக்காது.,, அது முழுக்க முழுக்க எம் ஜி ஆர் ஆதரவு அணி.. அதுபோல பீம்சிங் போன்ற பலர் சிவாஜி அணியை சேர்ந்தவர்கள்

அசோகன் எம் ஜி ஆர் ஆதரவாளர் என்றாலும் , சிவாஜி படத்தில்( உயர்ந்த மனிதன் ) அசோகன் ஒப்பந்தம் ஆனார்... இது இருவருக்குமே பிடிக்கவில்லை என்றாலும் ஏ வி எம் என்ற பெரிய நிறுவனம் படம் என்பதால் சேர்ந்து நடித்தனர்

அதில் ஒரு காட்சியில் உணர்ச்சிகரமாக பேசி விட்டு அசோகன் மரணம் அடைவது போல ஒரு காட்சி... அசோகன் நடிப்பு இயக்குனருக்கு அவ்வளவாக பிடிக்காததால் ரீ டேக் வேண்டும் என்றார்

அசோகனை தனியாக அழைத்த சிவாஜி , அந்த காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என நடித்துக்காட்டினார்..

   நம் எதிரிக்கு நம் மேல் என்ன அக்கறை என அசோகனுக்கு குழப்பம்.. தப்பாக அட்வைஸ் கொடுத்து தன்னை வைத்து காமெடி செய்கிறாரோ என இயக்குனரிடம் கேட்டார்

சிவாஜி அப்படிப்பட்ட ஆள் இல்லை... அவர் சொன்ன மாதிரி செய்யுங்க என சொல்லி விட்டார் இயக்குனர்

சிவாஜி இயக்குனரிடம் சொன்னார்

அசோகனெல்லாம் ஓர் ஆள்.. அவனை எனக்கு சுத்தமாக பிடிக்காது. ஆனாலும் காட்சி நன்றாக வர வேண்டும் என்பதற்காக அவனுக்கு உதவ வேண்டியதாகி விட்டது என்றார்

எது எப்படியோ . காட்சி நன்றாக வந்தது.. ஒளிப்பதிவு  நடிப்பு , வெளிச்சத்துக்கு முக்கியம் கொடுத்து பதிவு செய்துள்ள நேர்த்தி என பலராலும் பாராட்டப்பட்ட காட்சியை நீங்களும் பாருங்கள்

அசோகன் நடிப்பு

Sunday, March 10, 2019

எம் ஜி ஆரின் ஸ்பெஷல் முத்தம்

அந்த காலத்தில் எம் ஜி ஆரும் சிவாஜியும் நடிப்பில் மட்டும் அல்ல... அரசியலிலும் இரு துருவங்களாக இருந்தனர்

இருவர் ரசிகர்களுக்கு இடையேயும் கடும் மோதல் போக்கு நிலவியது

எம் ஜி ஆர் தன்னை அவமதிப்பதாக நினைத்த சிவாஜி நடிகர் சங்க கூட்டங்களுக்கு இனி வர மாட்டேன் என சபதமிட்டு இருந்தார்..

அப்படி இருந்த அவர்கள் கடைசி காலங்களில் ஒருவரை ஒருவர் மதிக்க ஆரம்பித்தனர்

எம் ஜி ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது அவரை சந்திக்க அனுமதிக்கப்பட்ட வெகு சிலரில் சிவாஜியும் ஒருவர்

சிவாஜி நடிப்பை கேலி செய்து வந்த எம் ஜி ஆர் , தான் முதல்வராக இருந்தபோது சிவாஜியின் மிருதங்க சக்கரவர்த்தி படத்தை அவ்வளவுதூரம் ரசித்துப்பார்த்தார்

உலகின் சிறந்த நடிகர் சிவாஜி... இதை என் கருத்தாக உன் அப்பாவிடம் சொல் என பிரபுவிடம் சொன்ன எம் ஜி ஆர் , அந்த படத்துக்காக சிவாஜிக்கு அரசின் சார்பில் பரிசு வழங்கி மகிழ்ந்தார்

ஜல்லிக்கட்டு பட வெற்றி விழாவில் எம் ஜி ஆர் அதில் நடிதவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்

சிவாஜிக்கு வழங்கும்போது முத்தமிட்டு மகிழ்ந்தார்

அடுத்து நம்பியாருக்கு வழங்கும்போது  எனக்கும் முத்தம் வேண்டும் ..இல்லை என்றால் பரிசு வேண்டாம் என குழந்தைபோல சண்டையிட்டார் நம்பியார்

சிரித்த முதல்வர் எம் ஜி ஆர், அது ஸ்பெஷல் முத்தம் ,,, உங்களுக்கு இல்லை என்றார்

சிவாஜியும் குழந்தைபோல சிரித்தபடி நம்பியாரை விளையாட்டாக அடித்தார்

கடைசியில் எம் ஜி ஆர் நம்பியாருக்கும் முத்தம் கொடுத்தார்

மூன்று மேதைகள் அந்த மேடையில் குழந்தைகளாக மாறி ஒருவரை மேல் ஒருவர் வைத்துள்ள அன்பை மரியாதையை காட்டியது ஓர் அரிய நிகழ்வாக அமைந்தது

காரணம் , அதன் பின் சில மாதங்களில் எம் ஜி ஆர் மறைந்து விட்டார்...

Monday, October 29, 2018

நடிக்க மறுத்த சிவாஜி - சினிமா ஃபிளாஷ்பேக்



ஒவ்வொரு எழுத்தாளர்க்கும் ஒரு பிரத்யேக நடை உண்டு.. அது போல நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடையும் புகழ் பெற்ற ஒன்று

அந்த காலத்தில் கல் தூண் என்று படம் வந்தது,,, மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் சிவாஜி நடித்திருந்தார்

ஒர் காட்சியில் சிவாஜி கம்பீரமாக நடந்து வர வேண்டும்,   எப்படி நடப்பது என மேஜர் சொல்லிக்கொடுத்தார்..

ஆனால் அது அவருக்கே பிடிக்கவில்லை.. இன்னொரு விதமாக மாற்றினார்.. அதுவும் திருப்தி இல்லை

சிவாஜி சொன்னார் : ரொம்ப கஷ்டப்படாதே... நான் சில டைப்ல நடந்து காட்டுறேன்.. உனக்கு எது புடிக்குதோ அதை செலக்ட் பண்ணு... ஷூட்டிங்ல அதை ஃபாலோ பண்றேன் என சொல்லி விட்டு பத்து விதங்களில் நடந்து காட்டினார் சிவாஜி,, மேஜர் அசந்து போனார்...  நடிப்பின் அகராதிக்கு , நடிப்பு சொல்லத்தர முயன்ற தன் அசட்டுத்தனத்தை எண்ணி சிரித்துக்கொண்டார்

   என்னதான் நடிகர் திலகம் என பிறர் பாராட்டினாலும் இயக்குனர் சொன்னபடி நடிப்பதுதான் நல்லது என கருத்துடையவர் சிவாஜி


சாதனை என்றொரு படம்.. அதில் சிவாஜிக்கு இயக்குனர் வேடம்... பிரபுவுக்கு நடிப்பு சொல்லித்தருவது போல காட்சி


 எப்படி நடப்பது என பிரபுவுக்கு சொல்லித்தருவது போல காட்சி ... நீங்கள் அவருக்கு நடந்து காட்ட வேண்டும் என்றார் இயக்குனர்

இந்த காட்சியை நாளை எடுக்கலாமா என பணிவுடன் கேட்டார் சிவாஜி


ஏன் என வியப்புடன் கேட்டார் இயக்குனர்

பிரபுவுக்கு நடப்பதற்கு சொல்லித்தரும் முன் , முதலில் நான் நடந்து பயிற்சி எடுக்க வேண்டும் என்றார் சிவாஜி


இந்த சிரத்தைதான் சிவாஜி...

Saturday, November 12, 2016

தமிழ் சினிமாவின் ஓர் அபூர்வ பாடல் - ஒரு நாள் போதுமா

ஒரு நல்ல சினிமாவில் திரைமொழி , இசை மொழி , உடல் மொழி பல மொழிகள் இருக்கும்... அவற்றுக்கான காதுகள் , கண்கள் திறக்கும்போதுதான் அவற்றை முழுமையாக ரசிக்க முடியும்...

உதாரணமாக திருவிளையாடல் படத்தில் வரும் ஒரு நாள் போதுமா என்ற பாடல்... திமிர் பிடித்த ஒரு வட இந்திய பாடகர்  ,  தமிழக அரசவைக்கு வந்து என்னைப்போல யாரும் இல்லை என ஆணவத்தோடு பாடும் பாடல்..அந்த  திமிரை சிவன்  அதைவிட நல்ல பாடல் பாடி அடக்குகிறார் என்பது கதை..

அந்த ஆணவப்பாடலை பாடுவ்தற்கு சீர்காழி கோவிந்தராஜனை அழைத்தனர்... இது தோற்கப்போகும் பாடல்...இதை பாட விரும்பவில்லை என சொல்லி விட்டார்...

ஆனால் இதுவா தோல்விப்பாடல்? வெற்றி பெறுவதாக படத்தில் வரும் பாடலை விட மட்டும் அல்ல.. இது வரை வந்துள்ள சிறந்த பாடல்கள் பலவற்றை விட அருமையான ஒரு பாடல் இது..

காட்சி , நடிப்பு , இசை , பாடல் வரிகள் என எல்லாமே சரியாக அமைந்த பாடல் இது...பாடலை எழுதியவர் கண்ணதாசன்....


ஒரு நாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா?
நான் பாட இன்றொரு நாள் போதுமா?

நாதமா கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா?

புதுநாதமா சங்கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா 

அவரது தன்னம்பிக்கையை , ஆணவத்தை கண்ணதாசன் வரிகள் மூலம் சொல்வதுபோல இசை அமைப்பாளர் கேவி மாகாதேவனும் அந்த பாடகரைப்பற்றி தன் இசை மொழியால் சொல்கிறார்...எப்படி... அவர் பாட ஆரம்பிப்பது மாண்ட் எனும் ஹிந்துஸ்தானி  ராகத்தில்...எத்தனை வகை இசைகள் இருந்தாலும் தன் இசையே பெரிது என நினைக்கும் வட இந்திய பாடகர் என்பதை இந்த ராகத்தில் இசை அமைத்து , அவர் மனோபாவத்தை இசை மூலம் சொல்கிறார்..

தனக்கு அது மட்டும் அல்ல...கர்னாடக இசையும் தெரியும் என சொல்வது போல கடைசியில் அதையும் பாடிக்காட்டுவது போல தோடி , தர்பார் , மோகனம் , கானடா போன்ற ராகங்களில் சில வரிகளை பாடுகிறார் அந்த பாடகர் என சிந்தித்து இந்த ராகங்களில் கடைசி வரிகளை இசை அமைத்து தன் மேதமையை காட்டுகிறார் மகாதேவன்.. அதற்கேற்ப பாலையா நடிப்பை வழங்கியுள்ளார்..


அதற்கேற்ப கண்ணதாசனும் வார்த்தைகளில் விளையாடி இருப்பதுதான் இந்த பாடலை மாஸ்டர் பீஸ் என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளது..

பல ராகங்களை பாடிக்காட்டுகிறார் அல்லவா..அந்த ராகங்களுக்கான வரிகளை கவனியுங்கள்

இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ
எழுந்தோடி வருவாரன்றோ
இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ

எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ
தர்பாரில் எவரும் உண்டோ..
எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ

கலையாத மோகனச் சுவை நானன்றோ
மோகனச் சுவை நானன்றோ
கலையாத மோகனச் சுவை நானன்றோ

கானடா என் பாட்டுத் தேனடா

இசை தெய்வம் நானடா

பாடுபவரின் குணாதிசயத்தையும் கொண்டு வந்து ராகங்களையும் கொண்டு வந்த கவிஞர் ,  அந்தந்த ராகங்கள் வரும் வரிகளை அந்த ராகங்களில் இசை அமைத்த இசை அமைப்பாளர் , சிறப்பாக நடித்த நடிகர் என மிக சரியான ஒத்திசைவோடு அமைந்த அபூர்வமான பாடல் இது

இப்படி ஓர் அபூர்வ பாடலை பிறருக்கு விட்டுக்கொடுத்துள்ளார் படத்தின் நாயகன் சிவாஜி கணேசன்,, இதுவும் ஓர் அபூர்வமான தன்மைதான்

இந்த பாடலைப்பற்றி நான் எழுத முக்கிய காரணம் இதைப்பாடிய பாலமுரளி கிருஷ்ணா... மிக அற்புதமாக பாடி வரிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார் அவர்..

இன்னொருவரால் புறக்கணிக்கப்பட்ட தோல்விப்பாடல் என்றாலும் ஈகோ இல்லாமல் பாடினார் என்கின்றனர் சிலர்..

அவருக்கு இதை சொல்லாமல் மறைத்து பாட வைத்தனர் என்கின்றனர் சிலர்...

உண்மை தெரியவில்லை... எது எப்படி இருந்தாலும் , இந்த பாடல் அவருக்கு பெருமை சேர்க்கும் பாடல்..அவர் இந்த பாடலைப் பாடியதன் மூலம் சினிமாப்பாடல்களுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பதே உண்மை

Sunday, November 17, 2013

சிவாஜி - கலைஞர் காம்பினேஷனில் பராசக்தியை மிஞ்சிய பக்காவான திரைப்படம்


கலைஞர் சிவாஜி காம்பினேஷனில் பல படங்கள் வந்து இருந்தாலும் , அவற்றுள் மாஸ்டர் பீஸ் என நாம் நினைப்பது பராசக்தி. அது எவ்வளவு தவறான கருத்து என சமீபத்தில் உணர்ந்தேன்.

பராசக்தியை குறைத்து சொல்லவில்லை. திராவிட இயக்கத்தின் , தமிழ் நாட்டின் முக்கியப்படங்களில் ஒன்று.சிவாஜி எனும் கலைஞனை தந்த படம். கலைஞரின் சிறந்த வசனங்கள் , இனிய பாடல்கள் என ஜொலித்த படம். அதெல்லாம் வேறு.

ஆனால் கலைஞர் சிவாஜி காம்பினேஷனில் இதை விட சிறப்பான படம் ஒன்று வந்து இருக்கிறது.  புராண கதைகளை எடுத்துக்கொண்டு , அதை மாற்றி திராவிட இயக்க படமாக மாற்றிய புத்திசாலித்தனம், சிவாஜியின் இயல்பான நடிப்பு, கலைஞரின் நேர்த்தியான கூர்மையான வசனங்கள் . இனிய இசை , அரசியல் நையாண்டி என ஒரு முழுமையான பக்காவான திரைப்படமாக திகழும் திரும்பிப்பார் , பராசக்தியைவிட ஒரு படி மேல் என்றே சொல்வேன். அந்த காலத்தில் இந்த படம் மெகா ஹிட் ஆனது மட்டும் அல்ல... ஒரு டிரண்ட் செட்டராகவும் இருந்தது.

படத்தின் பெயர்  : திரும்பிப் பார்

பராசக்தி எனும் மெகா வெற்றிப்படத்தை தந்த இந்த கூட்டணி அந்த படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு திசையில் பயணிக்க தீர்மானித்ததே பெரிய ஆச்சர்யம். இன்றுகூட அப்படி துணிச்சல் யாருக்கும் வராது.

பராச்க்தியில் ஹீரோவாக நடித்த சிவாஜி இதில் பயங்கர வில்லன் . அந்த நாள் படத்தில் நெகடிவ் ரோல் என்றாலும், அதில் அவர் எதிர்மறை காரியங்கள் செய்வதற்கு வலுவான காரணங்கள் இருக்கும், அவர் தவறு ஜஸ்டிஃபை செய்யப்படும்.

ஆனால் இந்த படத்தில் எந்த ஜஸ்டிஃபிகேஷனும் கிடையாது. முழுக்க முழுக்க கெட்டவன். அழகான ,் திறமையான , புத்திசாலியான , ஸ்டைலான கெட்டவன் என்று அந்த காலத்திலேயே கேரக்டர் அமைத்து இருப்பது ஆச்சர்யமாக இருந்தது.

பரந்தாமன் ( சிவாஜி ) ஒரு பெண் பித்தன், பணத்தாசை பிடித்தவன்.  அவனை அவனுடைய அக்காதான்( பண்டரிபாய் ) வளர்த்து வருகிறார். பல பெண்களை ஏமாற்றுகிறான் தொழிலாளர்களை தன் நாவன்மையால் சுரண்டுகிறான். துரோகம் செய்கிறான். இன்னொருவர் எழுதிய நூல்களை தன் பெயரில் போட்டுக்கொள்கிறான்.

இப்படி என்னென்ன அயோக்கியத்தனம் உண்டோ அனைத்தையும் செய்கிறான், அவனுக்கு பரந்தாமன் என பெயர் வைத்து திராவிட இயக்க முத்திரை பதித்ததோடு நிற்கவில்லை. இவனுக்கு எதிர் நிலையில் நல்லவனாக திகழும் கேரக்டர் பெயர் பாண்டியன். ( பி வி நரசிம்ம பாரதி) ..

பரந்தாமன் , அவன் அக்கா, பாண்டியன் என்ற மூவருக்கிடையே நடக்கும் முரண்பாடுகளும் மோதலுமே கதை.

படம் அதிரடியாக ஆரம்பிக்கிறது.. ஆரம்பத்திலேயே கோர்ட் சீன்.  பாரந்தாமனை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு பாண்டியன் குற்றவாளி கூண்டில் நிற்கிறான். அவன் குற்றவாளி இல்லை பரந்தாமனின் அக்கா வாதிடுகிறாள்.. அவள் வார்த்தைகளில் படம் ஃபிளெஷ் பேக்காக நம் முன் விரிகிறது.

சிவாஜியின் அலட்டல் இல்லாத , மிகை நடிப்பற்ற , வில்லன் நடிப்பும் கலைஞரின் வசனங்களும் ஒன்றை ஒன்று நிரப்பிக்கொள்கிறேன்.  வசனம் என்றால் முழுக்க முழுக்க பிரச்சாரம் இல்லை. இயல்பான ஹ்யூமர் , அரசியல் பகடி என பிரித்து மேய்ந்து இருக்கிறார்கள்.

இங்கே ஒன்றை சொல்ல வேண்டும். சிவாஜி பிற்காலத்தில் காங்கிரஸ்காரராக அறியப்பட்டாலும் , ஆரம்பத்தில் அவர் திராவிட இயக்கத்தின் திரையுலக பிரதிநிதியாகத்தான் இருந்தார். ஆனால் சிலரது சூழ்ச்சிகளால்தான் அவர் காங்கிரசை நோக்கி தள்ளப்பட்டார் என்பது வரலாறு. ஆனால் அவர் திராவிட இயக்கத்தில் இருந்தபோது , அவர் திராவிட இயக்கத்துக்கு வலுவாக குரல் கொடுத்ததுபோல எம் ஜி ஆர் குரல் கொடுக்கவில்லை என்பது பழைய படங்களை பார்த்தால் தெரிகிறது/

அந்த காலத்தில் ஜவஹர்லால் நேரு திமுகவினரை நான் சென்ஸ் என விமர்சித்தார். இதை வைத்து அவரை ஓட்டு ஓட்டு என ஓட்டியிருப்பார்கள். நேருவைப்போல கருப்பு கண்ணாடி , கோட் அணிந்து சிவாஜி வருவார். நான்சென்ஸ் என்பார்.

ஒரு காட்சியில் ஒரு தொழிலாளி சம்பளம் கேட்டு வருவான்.

தொழிலாளி  : அய்யா.

( நேருவின் தோற்றத்தில் இருக்கும் ) சிவாஜி :   நான்சென்ஸ்

தொழிலாளி : நான்சென்சா... பெரிய மனுஷன்னு மதிச்சு பேசினா, பெரிய மனுஷன் பேசற பேச்சா இது


இன்னொரு காட்சி

கருடன் பதிப்பக உரிமையாளரும் ( துரைராஜ்)  சிவாஜியும் பேசிக்கொண்டு இருப்பார்கள்

துரைராஜ் : பரந்தாமா... புத்தகம் எழுது,,லாபத்துல எனக்கு முக்கால் ,,உனக்கு கால்..

தொழிலாளி : எனக்கு ?

துரைராஜ் : அவனுக்கு கால் ...உனக்கு அறை ( பளார் என ஓர் அறை )

சிவாஜி : ஹா ஹா

இந்த வசனத்தை ஆட்டையைப்போட்டு பிறகு ஒரு காமெடி காட்சி வந்ததை மறந்து இருக்க மாட்டீர்கள்



இன்னொரு காட்சி

துரைராஜ் : பரந்தாமா ,அந்த பாண்டியன்  நம் வழியில் அடிக்கடி குறுக்க வறான்... நாம வெளியிட்ட புத்தகத்தை திட்டினான், இப்ப நாம கல்யாணம் பண்ணிக்க போற...

சிவாஜி : டேய்

துரைராஜ் : இல்லை இல்ல.... நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணை கட்டிக்க பாக்குறான்.
இப்படி படம் முழுக்க ரகளையான , நக்கலான வசனங்கள்.

பாண்டியனிடம் அறை வாங்கும் சிவாஜி. இந்த அடிய வெளிய சொல்லிடாதடா என தன் சகாவை கெஞ்சுவது. துணிச்சலாக தவறாக செய்வது. அக்காவிடம் மாட்டிக்கொண்டால் செண்டிமெண்ட்டாக பேசுவது என செமையான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

போராட்டம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கோர்ட்டில் நிறுத்தப்பட்டு இருப்பார்.

பராசகதிபோல ஒரு முன்னரை கொடுத்து பேச ஆயத்தமாவார்... என்னவோ பேசப்போகிறார் என ஆவலாக காத்து இருபோம்..
இந்த குற்ற்ச்சாட்டு தவறு... அப்படி உண்மையாக இருப்பின் என்னை மன்னித்து விடுங்கள் என் ஒரு ஸ்டண்ட் அடித்து , ஒரு டாப்கிளாஸ் வில்லனாக அந்த காட்சியில் மிளிர்வார்.

அதற்கு முந்தைய காட்சி வரை தொழிலாளர்களின் வீர மிகு தலைவனாக தன்னை காட்டிக்கொண்டு , அந்த ஒரு காட்சியில் பல்ட்டி அடிப்பார்.

இயல்பாக நடிக்கும் சிவாஜி, வீரமாக நடிக்கும்போது மட்டும் வேண்டும் என்றே மிகை நடிப்பை காட்டுவார். இரு விதமாகவும் தன்னால் நடிக்க முடியும் என காட்டிய அவரை , மிகை நடிப்பாளர் என முத்திரை குத்துவது அறியாமையே.

புராண கதை ஒன்று உண்டு. முனிவரின் மனைவி அகல்யாவை கவர இந்திரன் திட்டம் இடுவான். முனிவர் தினமும் அதிகாலை எழுந்து நீராட செல்வார். இந்திரன் தன்னை சேவலாக மாற்றிக்கொண்டு , நடு இரவிலேயே விடியல் ஓசை எழுப்பி , அவரை ஆற்றுக்கு அனுப்பி விட்டு , அகல்யாவை நெருங்குவான். ஞான திருஷ்டி , சாபம் என அந்த கதை போகும், அதை அழகாக இந்த படத்தில் பயன்படுத்தி இருப்பார்கள்..இந்திரன் செய்த வேலையை சிவாஜி செய்வார்.

அதேபோல , இன்னொரு சம்பவம். பெண் பித்தராக அலையும் அருணகிரி நாதர் ஒரு வேசியை தேடிசெல்வார். உனக்கு பெண் தானே வேண்டும்,. என்னை எடுத்துக்கொள் என ஒரு கட்டத்துல் அவரது அக்கா கூற அதிர்ந்து போவார்.

இதையும் அழகாக காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

கடைசியில் அந்த மோசடி பதிப்பகத்தை விட்டு செல்லும்போது, கருடன் பதிப்பகம் என்ற பெயரின் முதல் எழுத்தை , தி என மாற்றி செல்வது தமிழ் குறும்பு.

பாண்டியனின் தந்தையாகவும் , சிவாஜியை நம்பும் ஏமாறுபவராகவும் நடித்து இருப்பவர் தங்கவேலு. கிருஷ்ணகுமாரி , கிரிஜா , முத்துலட்சுமி போன்றோரும் சிறப்பாக தம் பங்கை செய்து இருக்கிறார்கள்.

இசை ஜி ராம நாதன் ... ஒவ்வொரு பாடலும் இனிமை.

இயக்கம் டி ஆர் சுந்தரம். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு.

கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.. வசனத்துக்காக , சிவாஜியின் நடிப்புக்கா, இசைக்காக ., தமிழுக்காக , துணிச்சலுக்காக , நகைச்சுவைக்காக


Monday, November 4, 2013

பலமுறைகள் பார்க்க வேண்டிய சிவாஜி படம்


திரைப்படங்களில் பழைய படம் , புதிய படம் என்றோ கமர்ஷியல் படம் , கலைப்படம் என்றோ பார்க்க கூடாது. நல்ல படமா இல்லையா என்று மட்டுமே பார்க்க வேண்டும் என்பது என் கொள்கை. அந்த அடிப்படையில் தீபாவளி விடுமுறையில் சில படங்கள் பார்த்தேன்.

இதற்காக நான் டிவிடிகளை சூஸ் செய்வதைப் பார்த்து  கடைக்காரரும், சக நண்பரும் குழம்பினார்கள்.. காரணம் நான் தேர்ந்தெடுத்தது ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாத படங்கள். ப்ளாக் அண்ட் வெயிட் படங்கள், லோக்கல் படம், ஆங்கிலப்படம் , பிட்டு படம் என நான் எடுப்ப்பதைப்பார்த்து ஒரு கட்டத்தில் அவர்கள் தண்ணீர் தெளித்து விட்டு விட்டார்கள்.

அப்படி நான் பார்த்த முக்கிய படங்களில் ஒன்று அந்த நாள். எஸ். பாலச்சந்தர் இயக்கம். சிவாஜி நடித்த படம். இதை தொலைக்காட்சியில் அவ்வப்போது ஒளிபரப்பினாலும் , என்னால் ஏனோ இது வரை பார்க்க முடியாமல் போய் விட்டது.  ஒருவழியாக இந்த லீவில் பார்த்தேன்.

அந்த நாள் ஒரு முக்கியமான நாள் என ஒரு குரல் ஒலிப்பதுடன் படம் ஆரம்பிக்கிறது.. தமிழ் ஃபாண்டிலேயே தமிழ் எழுத்துகள் தோன்றுகின்றன. உலகப்போர் காலகட்டம். ஜப்பான் குண்டு வீசப்போகிறது என்ற அச்சமூட்டும் சூழல்  .அப்போது ஒரு திருவல்லிக்கேணி வீட்டில்...

இப்படி அதிரடியாக வித்தியாசமாக ஆரம்பிக்கிறது படம்.  சரி,,அந்த வீட்டில் என்ன நடக்கிறது. முதல் காட்சி. முதல் ஷாட். சிவாஜி சுட்டு கொல்லப்படுகிறார்.
கதா நாயகன் முதல் காட்சியிலேயே மரணம் அடைவது போல அந்த காலத்திலேயே எப்படித்தான் எடுத்தாரோ. தொடர்ந்து ஒரு பெரியவர் தடதடவென போலீஸ் நிலையம் நோக்கி ஓடுகிறார்.
அதன் பின் போலீஸ், சி ஐ டி விசாரணை என படம் பரபரவென செல்கிறது.

துப்பாக்கி சத்தத்தை கேட்டவுடனேயே அது கொலைதான் என்பதை எப்படி யூகித்தார் என்ற சுவாரஸ்யமான கேள்விக்கு அந்த பெரியவர் அவர் பார்வையில் கொலைக்கு காரணத்தை விளக்குகிறார்.

அண்ணன் தம்பி பிரச்சனையே கொலைக்கு காரணம் என்பது அவர் பார்வை.
ஆனால் தம்பியோ கொலையை இன்னொரு கோணத்தில் விளக்குகிறான்.

தம்பியின் மனைவியோ , நடனக்காரி ஒருவள்தான் கொலை செய்தாள் என்கிறாள். அந்த நடனகாரி தன் பார்வையில் இன்னொரு கதையை சொல்கிறாள்.
ஆக நமக்கு ஒரே படத்தில் பல்வேறு குறும்படங்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு கதையும் லாஜிக்கலாக இருக்கின்றன. ஓர் ஆரம்பம், ஒரு முடிச்சு , ஒரு முடிவு என பக்காவாக உள்ளன.

சிவாஜியின் நடிப்பு உச்சத்தில் இருப்பது இந்த படத்தில்தான் என்றால் மிகை இல்லை. புரட்சிகரமான பேசுவதிலும் , தன் திறமை மதிக்கப்படாத ஆதங்கத்தை காட்டுவதிலும் , காதலை காட்டுவதிலும் , தன் கனவுகளை விவரிப்பதிலும் , ஆட்டுமந்தையில் சேரமுடியாத ஆனால் மனிதர்களை நேசிக்கின்ற தன்மையை காட்டுவதிலும் , கடைசியில் வெறி கொண்ட மனிதனாக மாறுவதிலும் சிவாஜி ஒளிர்கிறார். மிகை நடிப்பு எங்கும் இல்லை.

அதே போல ஹீரோவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் பாணியும் இல்லை. சிவாஜியின் மனைவி, தம்பி , அவனது கோபக்கார மனைவி , பெரியவர் , அழகான நடனக்காரி , குதிரைக்காரன், சொல் வீச்சில் கில்லாடியான சைக்கிள்காரன், கடைக்காரர் , எதிர்கருத்துகளுக்கு வாய்ப்பு அளிக்கும்  சங்கத்தலைவர் , நிதி வசூல் மாணவன் , போலி மாணவர் தலைவர் , புத்திசாலித்தனமான சி அய் டி , அவரை அவ்வபோது கிண்டல் அடிக்கும் ஆனால் காரியத்தில் கண்ணாக இருக்கும் இன்ஸ்பெக்டர், வேலைக்காரன் என ஒவ்வொன்றும் அற்புதமாக செதுக்கப்பட்டு இருக்கிறது.






படத்தில் பாடல் கிடையாது. சில இடங்களில் பாடல் வைத்து இருக்கலாம் என தோன்றியது..அதற்கான சூழல் உள்ளது.. ஆனாலும் பாடல் வேண்டாம் என துணிச்சலாக முடிவு எடுத்திருக்கிறார் இயக்குனர்.

அந்த நாளிலேயே கேமரா மொழியை பயன்படுத்தி இருப்பதை பார்க்கையில் ஆங்கிலப்படம்போல இருந்தது. பழைய தமிழ் படங்களில் கேமரா அவ்வளவாக அசையாது. நாடகம் போல ஒரே திக்கில் பார்த்து வசனம் பேசுவார்கள் .கேமரா ஒரே இடத்தில் நின்று படம் பிடிக்கும்( இது போன்ற கேமராவை சமீபத்தில் ஓ ஆ படத்தில் பார்த்தேன் )

இந்த படத்தில் கேமரா கோணங்கள் ஆச்சர்யப்படுத்துகின்றன. சிவாஜியும் நடனக்காரியும் காரசாரமாக பேசும் காட்சி, கடைசியில் சக்கர நாற்காலி சுழலும் காட்சி , சாவியை தூக்கி போட்டு பிடிக்கும் காட்சி என பல காட்சிகளில் கேமரா விளையாடி இருக்கிறது. சிவாஜியின் கண்கள் , முகம் என அவர் நடிப்பை கச்சிதமாக உள் வாங்கி இருக்கிறது கேமரா.சிவாஜி ஏன் இந்த இயக்குனருடன் மீண்டும் ஏன் இணையவில்லை. ஏன் இது போல அதற்குபின் நடிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியவேஇல்லை..

பின்னணி இசை இன்னோர் அற்புதம். பதட்டம் , நிச்சயமின்மை போன்றவற்றை காட்டும் காட்சிகளில் இசை பதட்டம் அளிக்கிறது. மற்ற நேரங்களில் மவுனம் காக்கிறது. தேவை அற்ற இரைச்சல் இல்லவே இல்லை.

படத்தின் ஆரம்ப காட்சி எவ்வளவு நேர்த்தியாக இருக்கிறதோ அதே போல கடைசி ஷாட்டும் மிகபிரமாதம். நீங்கள் தனியாக அமர்ந்து பார்த்தாலும் கை தட்டாமல் இருக்க மாட்டீர்கள்.

படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க ஆவலாக இருப்பதற்கு இது மட்டும் காரணம் அல்ல. படம் முழுக்க விரவி இருக்கும் இயல்பான நகைச்சுவை படத்தை சுவையான அனுபவம் ஆக்குகிறது.

அந்த பெண்ணின் அடையாளத்தை சொல்லும்போது அவள் மூக்கு சி ஐ டி போல இருக்கும் என்பான் அந்த பையன். அதில் அவருக்கு ஒரு  வெட்கம் கலந்த பெருமை. இன்னொருவருக்கு அவர் அடையாளம் சொல்கையில் , சிவப்பாக இருப்பாள் , கருப்பு கண்கள், மூக்கு .. என ஆரம்பித்து லேசாக வெட்க்ப்படுவது செமையாக இருக்கும்.

அதேபோல அந்த பையன் கலகலப்பாக கலக்கி இருப்பான். யோவ் கான்ஸ்டபிள் இந்த பையனை கூட்டிக்கிட்டு போயா.. என்றதும் அவரு எதுக்கு சார்.. நான் தனியாகவே வீட்டுக்கு போறேன் என்பான். நீ வீட்டுக்கு போகல ..ஸ்டேஷன்லதான் இருக்க போற என்றதும் அவன் ரெஸ்பான்ஸ் சூப்பர்.

துப்பறியும் களேபரத்திலும் யானை கதை சொல்வதும், அதனால் சில நிமிடங்கள் தாமதாகி தேடியவரை பிடிக்க முடியாமல் போய் கிண்டலுக்கு ஆளாவதும் இயல்பான நகைச்சுவைக்கு சான்று.

 நாட்டு பற்று , பொது நல சேவை போன்றவை குறித்து சிவாஜி எடுத்து வைக்கும் மாற்று வாதங்கள் இன்றும் சிலிர்க்க வைக்கின்றன. இன்றைய இளைஞர் அந்த சிவாஜி கேரக்டரை நன்கு புரிந்து கொள்ள முடியும் என கருதுகிறேன்.

எதிர் துருவம் ஈர்க்கும் என்பது போல சிவாஜியுடன் காதல் வயப்பட்டு , மனைவியாகி , பிறகு கொல்வதும் அதை மறைப்பதும் , அதற்கு கூறும் காரணமும் ஃபர்ஸ்ட் கிளாஸ். உலகப்போர் , ஜப்பான் , சுதந்திர போர் போன்றவற்றை அழகாக இணைத்து , நம் மண்ணுக்கேற்ற புனைவு ஆக்கியிருப்பதை இளம் படைப்பாளிகள் கவனித்து கற்க வேண்டும்.

கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.. ஒரு முறை அல்ல..பல முறை

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா