Tuesday, November 26, 2013

ரஜினியின் காசை மறுத்த ஸ்ரீதரின் மாஸ்டர் பீஸ்- கவனிக்கப்படாத அற்புதம்

 
 நான் பார்த்த முதல் ஸ்ரீதர் படம் துடிக்கும் கரங்கள். ரஜினி ரசிகன் என்ற முறையில் பழைய படங்களை  தேடி தேடி பார்ப்பேன். அந்த வகையில் இந்த படத்தை பார்த்த எனக்கு பெரிய  ஏமாற்றம் ஏற்பட்டது..
எனக்கு பிடிக்காத ரஜினி படம் என்றால் அது இதுதான். இயக்குனர் யார் என்று கேட்டேன், ஸ்ரீதர் என்றார்கள்..

ஸ்ரீதர் என்றால் யாரோ கத்துகுட்டி இயக்குனர் போல என அப்போது நினைத்துக்கொண்டேன்.

அதன் பிறகுதான் காதலிக்க நேரமில்லை , நெஞ்சில் ஓர் ஆலயம் எல்லாம் அறிமுகமாகின. ரசித்து பார்த்தேன். இது ஒரு கால கட்டம்.

அதன் பின் ஹிட் படங்களை கொடுத்ததால் மட்டும் அவர் பெரிய இயக்குனரா என்ற கேள்வி எழுந்த கால கட்டம். மீண்டும் அவரை இளக்காரமாக பார்க்க ஆரம்பித்தேன்.
அதன் பின் லேசாக சினிமா பற்றி கொஞ்சம் தெரிந்த கால கட்டத்தில் , கிட்டத்தட்ட அனைத்து சினிமா வல்லுனர்களுமே ஸ்ரீதர் படத்தை பார்க்க சொன்னார்கள். அவர்க்ள் வழிகாட்டுதலில் ஸ்ரீதர் படங்களை பார்க்கையில் , புதிய ஜன்னல் திறந்து கொண்டது போல இருந்தது.

சிவாஜி , எம் ஜி ஆர் காலத்தில் இருந்து , ரஜினி கமல் என தொடர்ந்து விக்ரம் காலம்வரை சினிமா மீது ஆர்வம் கொண்ட அவரது மேன்மை இன்னொரு சந்தர்ப்பத்தில் புரிந்தது.

அவரது மேதமை புரிந்தது. அவரது கம்பீரம் இன்னொரு சந்தர்ப்பத்தில் புரிந்தது,


அருணாச்சலம் என்ற படத்தை ரஜினி பழைய மேதைகளுக்கு உதவும்வண்ணம் எடுத்தார்..பலரை  தயாரிப்பாளர் ஆக்கினார்.

இது குறித்து அருணாச்சலம் தயாரிப்பாளர்களில் ஒருவரான விகேராமசாமி சொல்லி இருக்கிறார்.

வழக்கமாக ஒரு படம் தயாரிப்பது என்றால் , நாம் காசு போட்டு எடுக்க வேண்டும். அதை விற்று லாபம் பார்க்க வேண்டும். ரஜினி படங்கள் அப்படி அல்ல.. பூஜை போடும்போதே வியாபாரம் ஆகி விடும், அந்த காசில் படம் எடுக்கலாம்.  எங்களை பெயரளவுக்கு தயாரிப்பாளர் ஆக்கினாரே தவிர , நாங்கள் காசு போடவில்லை.. லாபத்தை மட்டும் எங்களுக்கு கொடுத்தார். மட்டுமல்ல, என்னை அதில் நடிக்க வைத்து அதற்கு தனியாக ஊதியம் கொடுத்தார்..( எனது கலைப்பயணம் - விகே ராமசாமி)

மேதைகளுக்கு இந்த கவுரவமும் உதவியும் செய்யப்பட வேண்டியதுதான்..

ஆனால் ஸ்ரீதர் இந்த உதவியை ஏற்க மறுத்து விட்டார்.

தன்னால் உருவாக்கப்பட்ட ரஜினியிடம் உதவி பெற விரும்பவில்லை “ எனக்கு உதவி என்றால் வேண்டாம்.. இலவசமாக காசும் வேண்டாம்.. எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் எனக்கு உன் படம் எதையாவது இயக்கும் வாய்ப்பளித்து அதற்கு சம்பளமாக காசு கொடு.. சும்மா எதுவும் வேண்டாம் “ என்றாராம்.
ரஜினியிடமே இப்படி பேசிய தில், காசை மதிக்காத உழைப்பை நம்பிய அந்த மனம் போன்றவற்றை மிகவும் ரசித்தேன்.

இந்த அளவுக்கு அவர் தன்னை நம்பி இருக்கிறார் என்றால் அது சும்மா இல்லை.. அவரிடம் சரக்கு இருந்து இருக்கிறது..
கல்யாணப்பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம்,  நெஞ்சம் மறப்பதில்லை, காதலிக்க நேரமில்லை என பெரிய லிஸ்ட்டே இருக்கிறது.

ஆனால் இவற்றில் இருந்தெல்லாம் மாறுபட்டு , ஒரு வித்தியாசமான மாஸ்டர் பீசை அவர் கொடுத்து இருக்கிறார். அது போதிய கவனம் பெறவில்லை.. எங்கும் குறிப்பிடப்படுவதும் இல்லை.

படத்தின் பெயர் அலைகள் . வெளியான ஆண்டு 1973.

கன்னட சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்த்தன் தமிழில் அறிமுகமான படம். கதானாயகி சந்திரகலா.

அவர் படங்களில் மட்டும் அன்று,,,தமிழ் சினிமாவிலேயே ஒரு வித்தியாசமான படம் என அதை சொல்வேன்.

அம்மா , செண்டிமெண்ட் , ஒருதலைக்காதல், அரசியல் , நகைச்சுவை என சென்று கொண்டு இருந்த காலகட்டத்தில் ( பிறகு ஸ்ரீதரும் இதில் கலந்தது வேறு விஷ்யம் ) , இது போன்ற கதைகளுக்கு முக்கிய்த்துவம் கொடுக்காமல், ஓர் ஆண் , ஒரு பெண் - இருவரின் உணர்வுகளை மட்டும் ஒரு கேஸ் ஸ்டடியாக பார்ப்பதே படம். எதிர்பாராத திருப்பம். , தியாகம் என்றெல்லாம் எதுவும் இல்லை//

தற்செயலாக ஓர் இன்ஸ்பெகடரும் , ஓர் அனாதைப்பெண்ணும் சந்திக்க நேர்கிறது... இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி பாதிக்கிறார்கள்... எப்படி பரிணாம வளர்ச்சி அடைகிறார்கள் என்பதே படம்.

ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியான பரிணாம வளர்ச்சி அடைவதில்லை.. ஆண் மையம் சார்ந்து இயங்குபவன்.. பெண் அலைத்தன்மை வாய்ந்தவள்... மையமற்றவள் ஆண் பார்ட்டிக்கிள் என்றால் பெண் வேவ் எனலாம்..அவனுடைய வளர்ச்சி  நேர்க்கோட்டில் வள்ர்ந்து ஓர் இடத்தில் முடியும். பெண்ணின் வளர்ச்சி அலையலையாக செல்லக்க்க்கூடியது. சுழற்சித்தன்மை வாய்ந்தது...

 நான் அலுவலகம் செல்கையில் தினமும் என் கண்களில் பட்டுவிடுவாள் அந்த பெண். எங்க்ள் தெருவில் வச்ப்பவள். மான் விழி என படித்து இருப்பீர்கள்..உண்மையிலேயே பார்க்க வேண்டும் அவளிடம்தான் பார்க்க வேண்டும். அப்படி ஒரு நளினம். சில சந்தர்ப்பங்களில் என்னுடன் பேச வேண்டி வரும் , உதடுகளுக்கு வலித்து விடக்கூடாது என்பது போல அவ்வளவு மென்மையாக பேசுவாள்.


ஒரு நாள் தற்செயலாக அவளும் அவள் தோழியும் பேசிக்கொண்டு போவதை பார்த்தேன். செம மெட்ராஸ்பாஷை... யாரைப்பற்றியோ பேசிக்கொண்டு போனார்கள்... “ விடுடீ...என்னிக்காச்சும் என் கையால சிக்காமயா போய்டுவான்.. குடலை உருகிடுறேன்,” இதை மெட்ராஸ் பாஷையில் பேசியபடி, இருவரும் ரவுடி போல போய்க்கொண்டு இருந்தார்கள்..அவளா இவள் என நினைத்துக்கொண்டேன்.

இதே பெண்ணை அவள் குடும்பத்துடம் பார்த்திருக்கிறேன். அடக்க ஒடுக்கமாக,. யாரையும் கவனிக்காமல் பவ்யமாக இருப்பாள்..

ஓர் ஆணால் நடிக்க முடியும்..ஆனால் ஒரே நேரத்தில் இத்தனைவிதமாக இருப்பது ஆணால் முடியாது...அதுதான் அலைப்பண்பு.

கொஞ்சம் அறிவியல்

அருகருகே இரு துவாரங்கள் இடப்பட்ட சுவர் உங்கள் முன் இருக்கிறது.. ஒளியின் ஒரு துகளை பிரித்து எடுத்து , அதை நோக்கி செலுத்துகிறீர்கள்... அந்த துகள் எந்த துவாரத்தில் நுழையும்? இடதா வலதா?

இரண்டிலுமே செல்லும் ...அலைப்பண்பு காரணமாக..

படத்தின் நாயகி ஒரே கால கட்டத்தில் அபலையாக, புரட்சி வீராங்கனையாக , காதலியாக , முட்டாளாக , புத்திசாலியாக இருப்பதை அருமையாக சித்தரித்து இருப்பார் இயக்குனர். நாயகனோ இந்த எல்லா கட்டத்தையும் ஒன்று ஒன்றாக கடந்து கடசியில் தன் உச்சதை அடைகிறான்.

வெகு வெகு இயல்பான காட்சிகள்.. துவக்க காட்சியில் தொடர்வண்டியில் அவர்களுக்கிடையே அறிமுகம் நிகழ்வது வெகு அழகு,, வெகு இயல்பு..

அவள் ஓர் அனாதை..  தற்செயலாக அவளை ரயில் வண்டியில் காண்கிறான். முதல் காட்சியிலேயே அவள் துணிச்சல் . அவள் கேரக்டர் எஸ்டாபிளிஷ் செய்யப்பட்டு விடுகிறது...

அதனால் இம்ப்ர்ஸ் ஆகும் நாயகன் அவளுக்கு சிறிய உதவி ஒன்றை செய்கிறான். அவளுக்கு முழுமையாக உதவும் துணிச்சல் அவனுக்கு இல்லை.
ரயிலை விட்டு இறங்கி சென்னை வரும் அவளுக்கு யாரையும் தெரியாது... ஒரு மேல்தட்டு  பெண் அவளுக்க்கு உதவுவதாக சொல்லி , தவ்றான வழியை காட்டுகிறாள். அங்கிருந்து , அந்த மேல்தட்டு பெண்ணின் தம்பியிடம் இருந்து தப்பும் அந்த பெண்ணுக்கு மீண்டும் இன்ஸ்பெக்டர் உதவும் நிலை...

ஆனால் மீண்டும் அவனால் முழு அடைக்க்கலம் கொடுக்க முடியவில்லை...மீண்டும் அவளுக்கு சிக்கல்...

கடல் அலைக்ள் மீண்டும் மீண்டும் கரையை நாடி வருவது போல , அவள் அவனையே மீண்டும் மீண்டும் தேடி வர வேண்டி இருக்கிறது.

அவன் கொஞ்சம் துணிச்ச்லால முடிவு எடுத்து இருந்தால் , இருவருமே மகிழ்ச்சியாக இருந்து இருப்பார்கள்..ஆனால் அவனோ அற்ப காரணங்களுக்கெல்லாம் அவளை புறக்கணிக்கிறான்,’

கிளைமேக்சில் அவன் எடுக்கும் முடிவு, எந்த சந்தர்ப்பத்தில் அந்த முடிவை எடுக்கிறான் என்பதே படத்தின் உச்சம்..அந்த நாயகன் முழுமை பெறுகிறான்...

போலீஸ் ஸ்டேஷனில் , பாலியல் தொழிலாளிகளில் ஒருவளாக அவ்ள் நிறுத்தப்படுகிறாள்... நீயா என அதிர்கிறார் இன்ஸ்பெக்டர்.. அவளை ஏற்கனவே தெரிந்தவள் என்பது அந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் என கருதும் நாயகி , அவரை தெரியாதது போல காட்டிக்கொள்கிறாள்...

அத்தகைய மதி நுட்பம் கொண்டவள் , டூத் பேஸ்ட்டை தின்பண்டம்  என நினைப்பவள்..பல அறியாமைகள் நிறைந்தவள்..

தனக்கு யாரும் இல்லை என கையறு நிலையில் கலங்கும் அவள், வீரப்பெண்ணாக உருவெடுத்து இன்ஸ்பெக்டரை தவ்றாக பேசும் ஆளின் சைக்கிளை உடைத்து எறிகிறாள்..

தனக்கு ஆதரவாக இன்ஸ்பெக்டர் இருக்கிறான்,,,தன்னை காதலிக்க ஒருவன் இருக்கிறான் என்ற நிலையில் அவள் பாடி லேங்குவேஜ் , மூக்கை உறிஞ்சும் மேனரிசம் , கம்பீரம்,இன்ஸ்பெகடரையே மிரட்டும் உரிமை என வேறு மனுஷியாக இருக்கிறாள்...யாரும் இல்லை என தெரிய வரும்போது இதெல்லாம் காணாமல் போகிறது...சிறந்த பாத்திரப்படைப்பு..

 நம் சமகாலத்தில் வந்து சூப்பர் ஹிட் ஆன ஆப்தமித்ரா ( சந்திரமுகியின் கன்னட வடிவம் ) படம் தந்த கன்னட சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்த்தன் , அந்த காலத்திலேயே தமிழ் படத்தில் நடித்து இருப்பது வியப்பாக இருந்தது...

கர்னாடகத்தில் ராஜ்குமார் கோஷ்டியினர் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் செய்தனர்..  தமிழில் இப்படி ஒரு நல்ல படத்தில் நடித்த அவருக்கு அந்த அங்கீகாரம் கிடைக்காமலேயே போய் விட்டது சோகம்தான்.

ஸ்ரீதர் படம் என்றாலே ஒளிப்பதிவு கலக்கலாக இருக்கும்... இதிலும் ஒவ்வொரு ஷாட்டும் அவ்வளவு அழகாக இருக்கிறது..

இசை எம் எஸ் வி... இரண்டு பாடல்களில் கலக்கி இருக்கிறார்.. டிரெய்னில் பார்த்த சுருளி வரும் காட்சியின்போது மட்டும் பின்னணி இசை க்ரியேட்டிவாக இருந்தது.. மற்ற இடங்களில் ஓக்கே ரகம்தான்... ஆனால் பாடல்கள் சூப்பர்..

கண்ணதாசனுக்கும் ஸ்ரீதருக்கும் என்ன உடன்பாடோ...இருவர் காம்பினேஷன் எப்போதுமே அட்டகாசமாக இருக்கும்..
கண்ணாதாசனின் குரலில் ஒலிக்கும் கவிதை ஒன்றும் படத்தில் இருக்கிறது....

பொன் என்ன பூவென்ன கண்ணே என ஒரு பாடல்... தயவு செய்து கேளுங்கள் என பாதம் தொட்டு கேட்டு கொள்கிறேன்...இதை கேட்காவிட்டால் , முக்கியமான ஒன்றை இழக்கிறீர்கள் என்று பொருள்..







 செவ்வான மேகங்கள் குழலாகுமா
செந்தூரம் விளையாடும் முகமாகுமா
நடை போடுமா இசை பாடுமா
நடந்தாலும் அவை யாவும் நீயாகுமா



மொத்தத்தில் அலைகள் கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய படம் 







Monday, November 25, 2013

சின்ன தாதாவுடன் நடந்த சண்டை , ஆதி மூல கிருஷ்ணனின் அட்வைஸ், வெட்டி பிளாக்கர்ஸ் சிறுகதைப்போட்டி

  நான் பதிவுலகில் நுழைந்தபோது , பதிவுலகில் எனக்கு என ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது முதல்தலைமுறை பதிவர்களான பரிசல் மற்றும் ஆதி இணைந்து நடத்திய சிறுகதை போட்டிதான்.


இணைய எழுத்தின் முன்னோடிகள் பலர் நடுவர்களாக இருந்து , சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்தார்கள். அதில் எனக்கு கிடைத்த பரிசும் , எனக்கு கிடைத்த கவனிப்பும் என் பொறுப்பை அதிகரித்தன. அதுவரை தினமும் எழுதவேண்டும் என்பதற்காக எதையாவது எழுதி வந்த நான் , அதன் பின் விஷ்யம் இருந்தால் மட்டும் எழுதலானேன்.

அந்த போட்டிக்கான பரிசை தபால் மூலம் அனுப்புவதாக ஆதி சொன்னார். ஓக்கே என சொல்லி இருந்தேன். அது வரை அவருடன் எனக்கு பழக்கம் கிடையாது. அடுத்த நாள் அவரே கால் செய்து பேசினார். இரவு 9.30 இருக்கும். வாழ்த்திய அவர் , நன்றாக எழுதுகிறீர்கள் , ஆனால் சில சமயம் பரபரப்புக்காக கொஞ்சம் எல்லை மீறி எழுதுகிறீர்கள் ..அது உங்களுக்கு அப்போதைக்கு ஒரு சென்சேஷனை தருமே ஒழிய , அதை கொஞ்ச நாள் கழித்து பார்த்தால் , உங்களுக்கே அசிங்கமாக இருக்கும். யாராவது ஓர் இலக்கியவாதியோ , ஒரு வி.அய்.பியோ த்ற்செயலாக அதை பார்க்க நேர்ந்தால் , அதன்பின் ஒரு போதும் உங்களை மதிக்க மாட்டார்கள். அவர்களுக்கு நேரம் இல்லை..ஏதேனும் ஒன்றை படித்து விட்டு , அதன் அடிப்படையில் உங்கள் மேல் கருத்தை உருவாக்கி கொள்வார்கள்..அதன்பின் அதை  மாற்ற முடியாது என்று சொல்லி விட்டு சில அனுபவங்களையும் சொன்னார். யாரென்றே தெரியாத என் மேல் அக்கறைகொண்டு இவ்வ்ளவு தூரம் பேசியது அவர்மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தியது. எனவே அவரை சந்திக்க விரும்பினேன்.

பரிசை அனுப்பாதீர்கள். நானே வந்து வாங்கி கொள்கிறேன் என சொல்லிவிட்டு , அவருக்கு உகந்த நேரத்தில் , அவர் இல்லம் சென்று அவர் கையாலேயே பரிசு பெற்றேன். தேனீர் அருந்தபடியே அவருடன் விவாதித்த சில விஷ்யங்கள் இன்னும் நினைவில் நிற்கின்றன.( குட்டிப்பையனாக அன்று பார்த்த அவர் பையன் இப்போது எப்படி இருக்கிறான்? ) 

அந்த சிறுகதைப்போட்டி ஓர் இனிய நினைவாக இன்னும் நினைவில் இருக்கிறது.. வெற்றியோ தோல்வியோ முக்கியம் இல்லை... அந்த போட்டிக்காக விதம் விதமாக எழுதிப்பார்த்தது... அனுப்பியது...அதனால் கிடைத்த ஃபீட் பேக். ஆரகனைசர்களின் பொறுப்புணர்ச்சி , போட்டிக்கதைகளுடன் நம் கதையை ஒப்பிட்டு பார்த்தல், முடிவுகளுக்காக காத்திருத்தல் என எண்ணற்ற சுவாரஸ்யங்கள்.

அடுத்து இன்னொரு அனுபவம். ஒரு சிறுகதைப்போட்டியின் நடுவர்களில் ஒருவராக நான் பொறுப்பேற்றிருந்தேன். போட்டிக்கு எழுதுவதை விட நடுவராக இருப்பது டென்ஷன் மிக்கது என உணர்ந்த கால கட்டம் அது..

அதில் ஒரு சுவாரஸ்யம். யார் எழுதிய கதை என்பது நடுவர்களுக்கு தெரியாது... சக நடுவர்கள் என்ன மதிப்பெண் வழங்கினார்கள் என்றும் தெரியாது.. கடைசியில் எல்லோருடைய மதிப்பெண்களும் தெரிய வரும்போது , ஒருவித ஆர்வத்துடன்  மற்றவர்கள் வழங்கிய மதிப்பெண்களுடன் நான் வழங்கிய மதிப்பெண்களை ஒப்பிட்டு பார்ப்பேன். காரணம் மற்ற நடுவர்கள் எல்லோருமே எழுத்தில் கில்லாடிகள்/...  இலக்கிய புலிகள்...  அவர்கள் நல்ல மார்க் வழங்கிய கதைக்கு நான் மட்டும் குறைவாக வழங்கினாலோ , அல்லது அவர்களால் புறக்கணிக்கப்பட்ட கதைக்கு நான் மட்டும் அதிக மார்க் வழங்கினாலோ , என் ரசனையில் ஏதோ பிரச்சனை என எனக்கு குழப்பம் ஏற்பட்டு இருக்கக்கூடும். எந்த நடுவர் எத்தனை மார்க் வழங்கினார் என்பது மற்றவர்களுக்கு தெரியாது... எனவே மற்றவர்கள் எதுவும் கேட்கப்போவதில்லை.. ஆனால் எனக்கு ஒரு மாதிரியாக இருந்திருக்கக்கூடும். நல்லவேளையாக , எல்லா நடுவர்களின் மதிப்பீடும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தது.  யாரும் பேசி வைத்துக்கொண்டு செய்யாமல் இப்படி நிகழ்ந்தது ஆச்சர்யம்தான்.. 

ஆனாலும் அந்த போட்டியில் வாக்களிப்பு முறை என ஒன்று இருந்தது... அதாவது படிப்பவர்கள் யார் வேண்டுமாலும் வாக்களிக்கலாம். அந்த வாக்களிப்பின் முடிவுகள் , நடுவர்களின் முடிவை தலைகீழாக்கியது.. அதாவது அந்த போட்டியை பொறுத்தவரை போட்டி முடிவுகள் அறிவிக்கபடும்போதுதான் நடுவர்களுக்கே முடிவுகள் தெரியும்.  நாம் தேர்ந்தெடுத்த கதைகள் பரிசு பெறுமா என்ற பதைபதைப்பு நடுவர்களுக்கும் கடைசி வரை இருந்தது. 

இந்த கால கட்டத்தில் சிறுகதைகள் , அதன் இலக்கணங்கள், அதன் நவீன போக்குகள் , நுணுக்கங்கள் பற்றிய பல புத்தகங்களை தேடித்தேடி படித்தேன், வாங்கி படித்தேன்,, வரவழைத்து படித்தேன்,,, இரவல் வாங்கி படித்தேன் ( ஞாபகமாக திருப்பி கொடுத்து விட்டேன் ) ...  அந்த போட்டி எனக்கு கற்றுக்கொடுத்தது அனேகம்... 

இதை ஆர்கனைஸ் செய்த நண்பர் சின்ன தாதாவுடன் இந்த கால கட்டத்தில் நாள்தோறும் டிஸ்க்ஸ் செய்வேன்.  நானும் அவரும் பல்வேறு விஷ்யங்களில் இருதுருவங்கள்.. நான் சாரு ரசிகன் என்றால் , அவருக்கு சாருவை பிடிக்காது... எனக்கு மாண்புமிகு வாழும் வள்ளுவர் டாக்டர் கலைஞரின் கலைச்சேவை பிடிக்கும் என் றால் , அவருக்கு மாண்புமிகு டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கலைச்சேவை  பிடிக்கும்...இப்படி இருந்தாலும் எங்களுக்குள் சண்டை வந்ததில்லை .. 

ஆனால் சிறுகதை போட்டி நடந்த கால கட்டத்தில் அடிக்கடி பிரச்சனை வரும். எனக்கு லேசான மனக்கசப்புகள் ஏற்பட்ட்டதுண்டு. உதாரணமாக வாக்களிப்பு முறை, மதிப்பெண் வழங்குவதில் சில விதிமுறைகள் நடுவர்களின் சுதந்திரத்துக்கு இடையூறாக இருந்தது போன்றவற்றை திருத்த சொன்னேன்.  நான் சொல்வதில் இருக்கும் நியாயத்தை அவர் ஒப்புக்கொண்டாலும் , என் ஒருவனுக்காக அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயத்தை மாற்ற முடியாது என கறாராக சொல்லி விட்டார்.. இப்படி சில மனக்கசப்புகள் இருந்தாலும் , நல்லபடியாக நடந்து முடிந்தது மன நிறைவாக இருந்தது..

அதில் இன்னொரு விஷ்யம்...

யாரெல்லாம் நடுவர்கள் என அனைவருக்கும் தெரியும் என்றாலும்கூட , ஒருவர்கூட தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு தமக்கு சாதகமாக நடக்கும்படி சொல்லவில்லை என்பதை என்றென்றும் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்வேன். அதேபோல , சக நடுவர்கள் யாரும் தொடர்பு கொண்டு , யாரையும் பிரமோட் செய்ய முயலவும் இல்லை என்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷ்யம்... பங்கேற்றவர்கள் , சக நடுவர்கள் , ஆர்கனைஸ்கர்கள் என அனைவரும் மிக மிக கண்ணியமாக நடந்து கொண்டதை என் வாழ்னாள் முழுக்க மறக்க மாட்டேன்

பரிசு பெறுவது, பெறாதது எல்லாம் இரண்டாம் பட்சம்..இது போன்ற அனுபவங்கள்தான் முக்கியம்..

அந்த வகையில் இணைய சிறுகதை போட்டிகள் என்றால் எனக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு. போட்டியாளராக , ஆர்கனைசராக , நடுவராக , மார்க் ஷீட் போடுபவனாக , ஏதேனும் எடுபிடி வேலை செய்பவனாக என ஏதோ ஒரு வகையில் இது போன்ற போட்டிகளில் இணைந்து இருப்பதை எப்போதுமே விரும்புகிறேன்..

 இந்த நிலையில் , வெட்டி பிளாக்கர் குழுமம் நடத்தும் சிறுகதைப்போட்டி மகிழ்ச்சி அளித்தது.

சீனியர் பதிவர் , ஜூனியர் பதிவர் என்ற வித்தியாசம் இன்றி அனைவரும் இதில் கலந்து கொண்டு , இதை ஒரு பெரிய கொண்டாட்டமாக மாற்ற வேண்டும் என கேட்டுகொள்கிறேன்..

******************************************************

வெட்டி பிளாக்கர் நண்பர்கள் நடத்தும் வலைபதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி.

அனைத்து வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்.
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் நமது ப்ளாக்கர் நண்பர்களுக்கு என்று ஒரு குழுமம் ஆரம்பிக்க வேண்டும் என்று சென்னையில் யூத் பதிவர் சந்திப்பு டிஸ்கவரி புக் பேலஸ்சில் நடைபெற்ற போது முடிவெடுக்கப்பட்டு அவ்வாறே வெட்டி பிளாக்கர் என்கின்ற பெயரில் குழு தொடங்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நம் பதிவுகளை பகிர ஒரு திரட்டியாகவும்நம் வலையுலக நண்பர்களுக்கு ஒரு நட்பு பாலமாகவும் திகழ்ந்து வருகின்றது…!

 ஒரு சிறுகதைப் போட்டி நடத்தலாம் என்று நண்பர்களால் முடிவெடுக்கப்பட்டு நடத்தப்படுகிறது. உங்களுடைய திறமையை குடத்திலிட்ட விளக்காக அல்லாமல் குன்றிலிட்ட விளக்காக இந்த உலகத்துக்கு பறைசாற்ற இது ஒரு அருமையான வாய்ப்பு. உங்கள் சிறுகதைகள் புகழ் பெற்ற பல தமிழ் எழுத்தாளர்கள்,திரை இயக்குனர்கள் பதிப்பகத்தார்கள் என அனைவரின் பார்வையில் இருக்கின்றது என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு எழுதுங்கள்;வெல்லுங்கள்.
  
பரிசுத் தொகை

முதல் பரிசு ரூ 5000

இரண்டாம் பரிசு ரூ 2500

மூன்றாம் பரிசு ரூ 1500

சிறப்பு பரிசு ரூ500 ஐந்து நபர்களுக்கு

விதிமுறைகள்.

1.வலைப்பதிவர்கள் மட்டும் (வலைப்பதிவு தொடங்கினால் போதுமானது)

2.ஒருவர் மூன்று கதைகள் வரை அனுப்பலாம்.

3.இதுவரை எங்கும் வெளியாக கதைகளாக இருக்க வேண்டும்

4.இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

5. கதைக்களம் இலக்கியம்க்ரைம்சஸ்பென்ஸ்நகைச்சுவை எதுவாகவும் இருக்கலாம். கட்டுப்பாடுகள் கிடையாது.

6. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது; வெட்டிப்பிளாக்கர் அட்மின்கள் கலந்து கொள்ளக் கூடாது.


கதைகளை அனுப்பும் முறை & அதற்கான விதிமுறைகள்
----------------------------------------------------------------------------------------------

உங்களுடைய கதைகளை உங்கள் பெயர்வலைத்தள முகவரிஉங்கள்தொடர்பு எண்  குறிப்பிட்டு vettiblogger2014@gmail.com என்கின்ற முகவரிக்கு 25-11-2013 லிருந்து 25-12-2013 இரவு 12.00க்குள் அனுப்பவும். 
  • கதாசிரியரின் பெயர், தொடர்பு எண்கள் பொதுவெளியில் வெளியிடப்படாது. போட்டி முடிந்தபின் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும். 
  • நடுவர்களுக்கே யார் எழுதியது என்று தெரிவிக்கப்படமாட்டாது
  • போட்டி முடிந்தபிறகு உங்கள் வலைத்தளங்களில் வெளியிடலாம் அதுவரை வெளியிடக்கூடாது.
  • கதைகள் http://vettibloggers.blogspot.in/ தளத்தில் மட்டுமே வெளியிடப்படும்


நடுவர்கள்
முதல் சுற்று நடுவர்கள்

கே.ஆர்.பி.செந்தில்
செங்கோவி
உணவுஉலகம் சங்கரலிங்கம்
மயிலன்
சிவக்குமார்
செல்வின்
தமிழ்வாசி
சங்கவி(சங்கமேஸ்வரன்)
வீடு.சுரேஷ்குமார்
முத்தரசு
ஆருர் மூனா செந்தில்

இரண்டாம் சுற்று நடுவர்கள்

பிச்சைக்காரன் (சாரு வாசகர் வட்டம்)
ராஜராஜேந்திரன் (சாரு வாசகர் வட்டம்)
செல்வேந்திரன்(விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)

மூன்றாம் சுற்று நடுவர்கள்

வாமுகோமு (எழுத்தாளர்)
வா.மணிகண்டன் (எழுத்தாளர்)
அதிஷா (புதியதலைமுறை நிருபர் வலைப்பதிவர்)

ஏதேனும் சந்தேகங்களெனில் vettiblogger2014@gmail.com  என்ற முகவரிக்கு மடல் வரைக.

Friday, November 22, 2013

அந்த கால சஸ்பென்ஸ் த்ரில்லர்- கண்ணாடி மாளிகை

பழைய படம் என்பதற்காகவே ஒரு படத்தை கிளாசிக் என புகழ் முடியாது. என்னைபொருத்தவரை , ஒரு படம் காலத்தை வென்ற படமாக இருக்க வேண்டும் ( அந்த நாள் போல ) . அல்லது அந்த கால கட்டத்திலாவது சிறந்த படமாக இருந்திருக்க வேண்டும்.

அந்த வகையில் அந்த காலத்தில் பாடலுக்காகவும் , எம் ஆர் ராதா நடிப்புக்காகவும் புகழ் பெற்ற ஒரு படத்தை ஒரு பெரியவர் ரெகமண்ட் செய்தார்.

படத்தின் பெயர் கண்ணாடி மாளிகை.

அந்த காலகட்டத்துக்கு கொஞ்சம் வித்தியாசமான பெயர்தான். டைட்டில் கார்டில் எம் ஆர் ராதா பெயரைத்தான் ஹீரோ போல போடுகிறார்கள். ஆனால் அவர் ஹீரோ அல்லர்.
ராதாராணி என்பவர்தான் கதா நாயகி , அவர்தான் இந்த படத்தை தயாரித்தவரும் கூட. அசோகன் , நாகையா போன்றோரும் நடித்து இருக்கிறார்கள்.

இந்த படம் காலத்தை வென்ற படம் என்ற லிஸ்ட்டில் வராது. அதற்காக குப்பைப்படம் அல்ல, அந்த கால ரசனைக்கேற்ப எடுக்கப்பட்ட , அந்தக்கால கமர்ஷியல் படம்.

ஆரம்பம் கலக்கலாக ஆரம்பிக்கிறது. ஒரு பெண்ணை ஒரு பேய் அல்லது மர்ம உருவம் துரத்துகிறது. அவள் கண்ணாடி மாளிகை என்ற பங்களாவில் தஞ்சம் புகுகிறாள் என்று அதிரடியாக எதிர்பார்ப்பை கிளப்புகிறது படம்.
ஆனால் அப்படி முழுமையான் சஸ்பென்ஸ் த்ரில்லராக கொண்டு போகாமல் , ஆட்டம் பாட்டம் டான்ஸ் பாடல் சண்டை என எண்டர்ட்டெயினராக எடுத்து இருக்கிறார்கள்.

ராதாராணி தயாரிப்பாளர் என்பதால் , அவருக்கு அதிகப்படியான பாடல்கள் , சண்டைகள் .ஆம், அவரே சண்டை எல்லாம் போடுகிறார். துப்பறிகிறார். எம் ஜி ஆர் பாணியில் ஆலமர விழுதுகளைப்பிடித்து ஜம்ப்  செய்கிறார், மாறு வேடம் போடுகிறார்.. கண்ணாடி ஜன்னலை உடைத்து டைவ் அடிக்கிறார்.

அந்த காலத்தில் சாட்டையடி சந்திரகாந்தா , டாக்டர் சாவித்ரி என பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் சில வந்தன. அதில் ஒன்றாக இது வந்து இருக்கிறது.

கண்ணாடி மாளிகையில் வசிக்கும் பணக்காரர் நாகையாவுக்கு வாரிசு இல்லை. அவரது தங்கை மகன் எம் ஆர் ராதா கூடவே வசிக்கிறார். பணத்தை சுருட்ட திட்டமிடுகிறார், சின்ன வயதில் காணாமல் போன தங்கையை தேடுகிறார்.  பணக்காரரின் நம்பிக்கைக்கு உரிய  நபர் அசோகன்.

முதல் காட்சியில் வந்த பெண் தான் கதா நாயகி . அவள்  அங்கே வேலை பார்ப்பவள். அவளை காதலித்துவிட்டு கல்யாணம் செய்யாமல் ஏமாற்றி விடுகிறார் அசோகன். அவள் காட்டுக்கு சென்று வசிக்கிறாள். அவளுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. அது தொலைந்து போய் நாகையாவிடம் கிடைக்க அவரே வளர்க்கிறார்.

கதானாயாகி மாறு வேடம் பூண்டு மக்கள் நலனுக்காக பல்வேறு சாகசங்கள் செய்கிறாள். அவ்வப்போது வரும் மர்ம உருவத்திடம் இருந்து தன் மகளை காக்கிறாள். ஆனால் அந்த மகளுக்கு தன் தாய் என தெரியாது.

அந்த மகள் வளர்ந்த நிலையில் தன் மகள் என தெரியாமல் அவளிடமே தவறாக நடக்க அசோகன் முய்ல, கதானாயகி வந்து எல்லாவற்றையும் சுமுகமாக முடிக்கிறாள்.
அவ்வபோது வந்த மர்ம உருவம் எம் ஆர் ராதாதான்.. அவர் தேடிக்கொண்டிருந்த தங்கைதான் ஹீரோயின் என சஸ்பென்ஸ் கடைசியில் உடைகிறது.

ஆனால் பெரிய சஸ்பென்ஸ் எல்லாம் இல்லை. பெரிய திகிலும் இல்லை

ஆயினும் இதை எம் ஆர் ராதாவிற்கு பார்க்கலாம். இன்றும் ரசிக்கத்தக்க கிண்டல் பேச்சு , டயலாக் டெலிவரி , குரலில் ஏற்ற இறக்கம் என கலக்கி இருக்கிறார்.

வேலைகாரிக்கு பேர் ராணியா..என்னடா இது..யார்டா பேரு வச்சா என கரகர குரலில் கிண்டலாக கேட்பது போன்ற பல காட்சிகள் அவரை காலத்தை மிஞ்சிய கலைஞன் ஆக்குகின்றன.

”சிரித்த முகம் வேணுமடி பெண்ணே/ அதுதான் சேவை செய்யும் பெண்களுக்கு அழகு தரும் கண்ணே...” என்ற  சுசீலாவின் அழகான பாட்டு அந்த காலத்தில் பயங்கர ஹிட். இசை பத்மன்
இயக்கம் சாமி மற்றும் மகேஷ்
வசனம் பாடல்கள் முடியரசன்

பார்த்தே ஆக வேண்டிய படமும் அல்ல...தவிர்க்க வேண்டிய படமும் அல்ல...





Thursday, November 21, 2013

சாரு எனக்கு கசந்ததேன்... ஒரு தன்னிலை விளக்கம்


தன் சிஷ்யன் ஏகலைவனின் கட்டைவிரலை குரு தட்சணையாக கேட்ட வரலாறை படித்து இருக்கிறோம். ஆனால் இன்றைய சிஷ்யர்கள் தாம் கற்ற கல்விக்கும் , பெற்ற அறிவு செல்வத்துக்கும் காணிக்கையாக எதுவும் கொடுப்பதில்லை. மாறாக குருவின் கட்டை விரலையே கேட்கின்றனர். இப்படி எத்தனையோ முறை சிஷ்யர்களால் முதுகில் குத்தப்பட்டும்,  எந்த பயமோ சந்தேகமோ இன்றி புதிதாக வரும் அடுத்த சிஷ்யனை உருவாக்கி விட அதே புன்னகையுடன் கைகுலுக்கும் சாருவை சிலர் முட்டாள் என நினைக்கலாம்.. ஆனால் அந்த மேட்னஸ்தான் , அந்த அப்பாவித்தனம்தான் , அந்த வெகுளித்தனம்தான் சாருவை இத்தனை அவதூறுகளுக்கும் மத்தியில் இயங்க வைக்கிறது என்றே கருதுகிறேன்.
அவரால் உருவாக்கப்பட்டவர்கள் துணை இருக்க வேண்டியதே இல்லை.. தெய்வம் நமக்கு துணை பாப்பா...ஒரு தீங்கு வர மாட்டாது பாப்பா என்ற கான்சப்ட்தான்...

இப்போதைய ஃபேஸ்புக் இலக்கியவாதிகளை விடுங்கள்.. ஓரளவுக்கு இலக்கிய பரிச்சயம் உள்ளவர்களுக்கு அந்த காலத்தில் இலக்கியத்தில் கலக்கிக்கொண்டிருந்த இருவரை கண்டிப்பாக தெரிந்து இருக்கும். 
ஆனால் அவர்களுக்கு உருக்கொடுத்து , உயிர் கொடுத்து உலவ விட்டது சாருதான் என்பது பலருக்கு தெரியாது.

அவர்களும் வழக்கம்போல நன்றி காட்டினர். ஆம் .. நம்பவே முடியாத ஒரு குற்றச்சாட்டை , புரளியை , வதந்தியை உலவ விட்டனர். அந்த இரட்டையருக்கிடையே என்ன உறவு , என்ன பழக்கம் என்றெல்லாம் இங்கு விவரித்து என் தரத்தை குறைத்து கொள்ள விரும்பவில்லை.

ஆனாலும் அவர்கள் எழுத்தும் எனக்கு பிடிக்கும். அவர்களது அனைத்து நூல்களையும் படித்து இருக்கிறேன்.
இந்த நெட் யுகத்தில் அவர்கள் ஏன் மவுனமாக இருக்கிறார்கள் என ஆரம்பத்தில் புரியவில்லை. விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி அளித்தன.  குரு துரோகத்துக்கு தெய்வம் இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்குமா என்ற பயத்தில் என ஜூரமே வந்து விட்டது.

அன்று அவதூறு பரப்பினார்கள் என இன்று சாரு சொன்னால்தான் அவர்க்ளைப்பற்றி  தெரியும் என்ற  நிலை... பழைய இலக்கிய பத்திரிகளை எடுத்து பார்த்தால் , அவர்கள் இல்லாமல் ஓர் இதழ் கூட இருக்காது.. அவர்களிடம் நிறைய எதிர்ப்பார்ப்பதாக அன்றைக்கு சாரு கூறி அதுவும் பதிவாகி இருக்கிறது.

திறமைசாலி , புத்திசாலி என ஆயிரம் இருந்தும் குரு துரோகம் என்ற ஓர் அம்சம் அவரை வீழ்த்தி விட்டது. அவரது பெயரையோ , அவரது இன்றைய நிலையோ பற்றி சொல்வது மனிதாபிமானமன்று.. விஷ்யம் மட்டுமே முக்கியம்.

இப்படி ஓர் துரோகத்தை சந்தித்தால் ஒருவர் அடுத்து எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. ஆனால் சாரு அப்படி அல்ல.. மீண்டும் மீண்டும் நம்புவார்...ஏமாறுவார்..  

முட்டாள் என்பது மோசமான தன்மை...அப்பாவித்தனம் என்பது ஒரு வித தெய்வத்தன்மை... முட்டாள் , தன்னை ஒரு அறிவாளியாக மாற்றிக்கொள்ள முயன்று , அதில் தோற்று முட்டாளாகவே நீடிப்பான்.  ஓர் அப்பாவி , மேலும் மேலும் அப்பாவியாக மாறிக்கொண்டே செல்வான் என்கிறார் ஓஷோ.
அந்த அப்பாவித்தனம் இல்லாமல் இறை நிலை சாத்தியம் இல்லை என்கிறார் அவர். சாருவின் எழுத்தில் இறைவன் நடனமா







டுகிறான் என்றால் அதற்கு காரணம் இந்த அப்பாவித்தனம்தான்.
அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும் என்கிறது பைபிள்... சகலத்தையும் விசுவாசிக்கும் என்பதை காண்பது அரிது... என் அனுபவத்தில் அதை சாருவிடம் மட்டுமே காண முடிந்து இருக்கிறது.

இப்படிப்பட்ட ஒருவருக்கு துரோகம் செய்பவர்கள் ஏதாவது ஒன்றை சொல்லித்திட்ட வேண்டும் அல்லவா... என்ன சொல்லி திட்டுவது...ஏதாவது வித்தியாசமாக சொல்லி திட்டினால் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் அவர்கள் திட்டுவது குறிப்பிட்ட ஒரு டெம்ப்ளேட்டிலேயே இருப்பதை கவனித்து இருப்பீர்கள்.. சாரு தன் புத்தகங்களில் , எழுத்துகளில் வெளிப்படையாக சொன்னவற்றை தமது கண்டுபிடிப்பு போல சொல்லி அதை வைத்து திட்டுவார்கள்.

பத்து வருடம் சாருவுடன்  பழகி இருப்பார் ஒருவர்.. சாருவை வைத்து அவருக்கு ஓர் அடையாளம் கிடைத்து விடும்.  உலக இலக்கியம் ,  உலக சினிமா , இசை என கொஞ்சம் தெரிந்து விடும்
அவருக்கு என சில புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்..உடனே அவர் தன்னை சாருவுக்கு இணையான ஒருவராக நினைத்து கொள்வார்.

சாருவை திட்ட ஆரம்பிப்பார்.. நமக்கு அதிர்ச்சியாக இருக்கும்.. சரி..ஏனப்பா திட்டுகிறாய் என கேட்போம்.

ஓர் எழுத்தாளன் சமூகத்துக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அவன்போய் மது அருந்தலாமா.. அதுவும் அதைப் பற்றி எழுதலாமா..சமூகம் கெட்டுவிடாதா என கொந்தளிப்பார் . அடப்பாவி...அதை இப்போதுதான் கண்டுபிடித்தாயா... அதை அவர் மறைவாகவா செய்கிறார்..அவர் எழுதியதை வைத்துதானே இதை சொல்கிறாய்... இதெல்லாம் உனக்கு அவர் ரத்தத்தை உறிஞ்சிய கால கட்டத்தில் தெரியாமல் போய் விட்டதா என நினைத்து கொள்வோம்.

 நேற்று சொன்னதுக்கு முரணாக பேசுகிறாரே என திடீர் என கண்டுபிடிப்பார்கள்...அவர் ஒரு பண்டிதர் அல்ல... ஒரு mad man  என்பதெல்லாம் தெரிந்த விஷ்யம் ஆயிற்றே...  இதற்கு ஒரு பஞ்சாயத்தா

அவர்  வாசகர்களிடன் பணம் கேட்டு நச்சரிக்கிறார் என்பது அடுத்த குற்றச்சாட்டு.  அவர் நினைத்தால் , வெளிப்படையாக கேட்காமல் , ரகசியமாக கேட்க முடியாதா.... தன் தேவையை அதுவும் எழுத்து சம்பந்தமாக எழுத்து எனும் வேள்விக்காக வெளிப்படையாக போஸ்ட் போடுகிறார்.. சில நாடுகளில் சினிமா ஓர் இயக்கமாக மாறியது இப்படித்தான்... சினிமா திரையிடப்படும்., ஓர் உண்டியல் வைக்கப்படும். விருப்பப்பட்டவர்கள் தாம் விரும்பும் தொகையை , ஒரு ரூபாயோ , ஒரு கோடியோ , கட்டணமாகவோ , காணிக்கையாகவோ செலுத்தலாம்... செலுத்தாமலும் போகலாம்.. இதை களங்கப்படுத்துவது நம்மை நாமே அசிங்கப்படுத்திகொள்வது போன்றது. கேட்கிறார்,,, முடிந்தால் கொடுங்கள்/..இல்லாவிட்டால் விடுங்கள்... முடிந்தது விஷ்யம்... ஓர் எழுத்தாளன் இப்படி ஒரு நிலையில் இருப்பது நமக்குத்தான் அசிங்கம்..அதை கிண்டல் செய்வது அதை விட அசிங்கம்.

தனிப்பட்ட வாழ்க்கையில் தனக்காக ஒரு சின்ன விஷயத்தை கேட்கக்கூட கூச்சப்படுபவர் சாரு என்பது அவருடன் பழகிய என் போன்றோருக்கு தெரியும். 

ஒரு முறை ஒரு விஅய்பி சாருவை பார்க்க வந்திருந்தார்.. இருவரும் இலக்கியம் குறித்து பொதுவான ஆனால் முக்கியமான விஷ்யம் ஒன்றை பேசிக்கொண்டு இருந்தனர்.

திடீரென என் பக்கம் திரும்பிய சாரு “ பிச்சை ..உங்களுக்கு கஷ்டம் இல்லைனா ஒரு ஹெல்ப் செய்வீங்களா “ என்றார். 

எனக்கு பதட்டம்..அவர் முன் இப்படி கேட்கிறாரே... “ என்ன சாரு,,என்னவென்றாலும் சொல்லுங்க...செஞ்சுடலாம் “ என்றேன் பரபரத்துப்போய்.

” நாங்க ஒரு முக்கியமான விஷ்யம் பேசுறோம்..இது ஒரு பத்திரிக்கையில் வரபோகுது...அதை நோட்ஸ் எடுக்க முடியுமா “ என்றார்.

அந்த இடத்தில் வேறு சிலரும் இருந்தார்கள்...இதை செய் என செய்துவிட்டு போய் விடுவார்கள்..அதற்குப்போய் இவ்வளவு தயக்கம்.

சரி என தெளிவாக நோட்ஸ் எடுத்தேன். நோட்ஸ் எடுத்ததை தவிர அதில் என் பங்களிப்பு ஏதும் இல்லை

சென்னை வந்ததும் அதை டைப் செய்து மெயில் செய்தேன் ( காரணம் என் கை எழுத்து தலை எழுத்து போல இருக்கும் )

அடுத்த நாள் போனில் பேசினார்

“ பிச்சை...மெயில் கிடைத்தது... இதை பத்திரிக்கைக்கு எழுத பயன்படுத்திக்கலாமா” என்றார்...எனக்கு பயங்கர அதிர்ச்சி... 
இதை சொல்ல நான் யார்... அவர் என்னிடம் இப்படி கேட்க அவசியமே இல்லை... எனக்கும் அந்த மேட்டருக்கும் சம்பந்தமே இல்லை... அவர் பேசியதை , அவர் சொல்லி நான் நோட்ஸ் எடுத்தேன்... அவ்வளவுதான் ..இதற்குபோய் ஃபார்ம்லாக கேட்கிறாரே என நினைத்தேன்.

இப்படி ஒவ்வொன்றிலும் கண்ணியத்தை , கட்டுப்பாட்டை கடைபிடிப்பவர் சாரு. 

தனக்காக எதையும் கேட்க விரும்பாத சாரு, ஒன்றை மட்டும் கூச்சப்படாமல் கேட்பார்..அது அறிவு சார்ந்த விஷ்யமாக இருக்கும். ஏதாவது ஒரு விபரமோ , தகவலோ தனக்கு தெரியவில்லை என்றாலோ  , குழப்பம் என்றாலோ , பலர் முன்னிலையில் பகிரங்கமாக கேட்பார். தனியாக அழைத்து சென்று கேட்கும் தந்திரம் அவருக்கு தெரியாது.

பெண்கள் சம்பந்தப்பட்ட விஷ்யங்களில் பொதுவாக நம் மக்கள் கேவலமாக நடந்து கொண்டு , வெளியே உத்தமனாக காட்டிக்கொள்வார்கள். ஆனால் சாரு எழுத்திலேயே சொல்ல வேண்டியதை வெளிப்படையாக சொல்லி விடுவார்.

நம் மக்கள் அதைப்படித்து விட்டு , தமது கண்டுபிடிப்பு போல பிற்காலத்தில் அதிர்ச்சி அடைவது அவ்வப்போது நடக்கும் ஒன்று...

ஹேர் ஸ்டைலை கொஞ்சம் மெருகெற்ற ஆலிவ் ஆயில் வாங்கினேன்... உயர் ரக ஷாம்பூ....சிகைக்காய் தூள் , இன்னும் சில வாசனை எண்ணெய்கள் , ஆயுர்வேத பொடிகள் , நாட்டு மருந்து என கணிசமாக செலவிட்டு முடியை சீராட்டுவது என் இயல்பு.. அந்த அளவுக்கு பாசமாக , பக்குவமாக , பாந்தமாக பார்த்துக்கொள்வேன்... 

காலையில் சீவும்போது ஒரு முடி உதிர்ந்து விட்டது என வைத்துக்கொள்ளுங்கள்...  கொஞ்ச நேரம் முன்பு வரை ராஜ கவனிப்பு பெற்ற அந்த முடி குப்பைத்தொட்டிக்கு போய் விடுமா இல்லையா..

அதுபோல , சாரு என்று அல்ல , எந்த ஒரு குருவாக இருந்தாலும் அவருடன் இருக்கும்வரைதான் மதிப்பு... குருவின் ஆசியுடன் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கும் , அவரை வயிறெரிய விட்டு ஒரு செயலை ஆரம்பிப்பதற்கும் வேறுபாடு உண்டு.. 

வள்ளலாரின் இந்த பாடலை பாருங்கள்..சில கொடிய பாவங்களை பட்டியல் இடுகிறார்..

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!

மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!

களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!

ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!
வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ!

இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!
கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!
நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ!
கலங்கி யொளித்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ!

குருவை வணங்கக் கூசிநின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ!

அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!

தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் து‘ஷணஞ் செய்தேனோ!
தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறியேனே!


சாருவிடம்தான் ஒரு சினிமாவை எப்படி ரசிக்க வேண்டும் என கற்றேன்...உலக இலக்கியங்கள் பற்றி தெரிந்து கொண்டேன்...உழைப்பைக்கற்றேன்... உண்மையை கற்றேன்...
இலக்கியத்தை படைக்க எந்த நாயாலும் முடியும்.. ஆனால் இலக்கியமாகவே வாழ சாரு எனும் தாயால் மட்டுமே முடியும் என மனப்பூர்வமாக கருதுகிறேன்.

இந்த அருந்தமிழ் பாடலை கவனியுங்கள்




வாங்கும் கவளத்து ஒரு சிறிது வாய் தப்பின்தூங்கும் களிறோ துயறுரா - ஆங்கதுகொண்டுஊரும் எறும்பு இங்கு ஒருகோடி உய்யுமால்
ஆரும் கிளையோடு அயின்று.


ஒரு யானை சாப்பிடுகிறது என வைத்துக்கொள்ளுங்கள்/.. அதில் கொஞ்சூண்டு சிதறி விடுகிறது..அதனால் யானைக்கு எந்த இழப்பும் இல்லை.. ஆனால் அந்த கொஞ்சூண்டு சோற்றில் கோடிக்கணக்கான எறும்புகள் பசியாறும்.. அப்படி எறும்புகள் பசியாறியதுகூட யானைக்கு தெரிய வாய்ப்பில்லை..

அதுபோல , உலக ஞானங்களை தேடிக்கண்டுபிடிக்கும் வேள்வியில் சாரு தன்னையே ஆகுதியாக கொடுக்கிறார் என்றால் எந்த ஞானச்சாற்றில் ஒரு சொட்டு கிடைத்தாலே பல்லாயிரக்கணகான  வாசகர்களுக்கு போதுமானது..இப்படி எத்தனை ஆயிரம் பேர் பயன் பெற்றார்கள் என்பதுகூட சாருவுக்கு தெரிய வாய்ப்பில்லை..

இதை நான் மிகைப்படுத்தி எல்லாம் சொல்லவில்லை..இணையத்தை பாருங்கள்... சாருவை திட்ட வேண்டும் , அல்லது பாராட்ட வேண்டும்... இதை செய்யாமல் யாரும் இணையத்தில் இருக்க முடியாது என்ற நிலை இருப்பதை யார் வேண்டுமானாலும் சோதித்து பார்க்கலாம்.. தெரிந்தோ தெரியாமலோ இத்தனைபேர் தமிழில் எழுதுகிறார்கள் என்பதை யாரும் மறுக்கவும் முடியாது...அதே நேரத்தில் மறைக்கவும் முடியாது

எத்தனையோ வாசகர் சந்திப்புகள் நடந்து இருக்கின்றன.,..எத்தனையோ பேரை சந்திக்கிறார். ஒரு போதும் தனக்கு ஏன் காசு கொண்டு வரவில்லை என யாரையும் கோபித்தது இல்லை..  பொதுவான செல்வுகளை ஷேர் செய்வோமே தவிர அவருக்கு என கேட்டு திட்டியதில்லை.

ஆனால் வேறு விஷ்யங்களுக்கு திட்டி இருக்கிறார்.

குடியை ஒரு கொண்டாட்டமாக ராணுவ ஒழுங்குடன் செய்யாமல் ஒழுங்கீனமாக நடந்ததற்கு திட்டி இருக்கிறார்.. ஒரு சந்திப்பில் ஒரு சின்னஞ்சிறிய நாய்க்குட்டியை சரியாக கவனிக்கவில்லை என திட்டி இருக்கிறார்.. தான் சொன்ன படங்களை பார்க்கவில்லை..இசையை கேட்கவில்லை என திட்டி இருக்கிறார்.

ஒரு சந்திப்பில் நண்பர் சாம் , தான் சாருமூலம் தெரிந்து கொண்ட இசை மற்றும் சினிமா பற்றி பேசினார்...
எனக்கு இசைஞானம் அவ்வளவு இல்லை... எனவே சும்மா விழித்து கொண்டு இருந்தேன்.. 

இவர் சொன்னதை வேறு யார் கேட்டு இருக்கிறீர்கள் என்றார்... யாரும் பதில் சொல்லவில்லை..டென்ஷன் ஆகி விட்டார்.

 நான் சொல்வதை படிக்கத்தான் மாட்டேன் என்கிறீர்கள்... இசையை கேட்பதில் என்ன க்‌ஷ்டம்.... படத்தை பார்ப்பதில் என்ன கஷ்டம் என பொரிந்து தள்ளிவிட்டார்.

நான் சொன்ன zorba the greek படித்து விட்டீர்களா என என்னை கேட்டார்...இல்லை என தயக்கத்துடன் தலை ஆட்டினேன்.

இனி என்னை பார்ப்பதாக இருந்தால் , இதை படித்து விட்டு வாருங்கள்..இல்லை என்றால் இனி என்னிடம் வர வேண்டாம் என்றார்.

அதன் பின் , அதை படித்து  பதிவிட்டதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

இதெல்லாம் கசப்பு மருந்துதான் என்றாலும் , அந்த மருந்து நல்லதே செய்திருக்கிறது.

வார்த்தைகளில் இனிப்பை தடவி , இதயத்தில் நஞ்சை வைத்து இருக்கும் மனிதர்களிடையே , இந்த கசப்பு எனக்கு தேனாக இருக்கிறது....  மேலும் கசப்புதான் எனக்கு பிடிக்கும்..கசப்பு ஆரோக்கிமானது.... 

ஆம் .. நான் என்றும் எங்கும் யாரிடமும் சொல்வேன்

சாரு எனக்கு கசந்த தேன்..சலிக்காத தேன்...மீண்டும் மீண்டும் பருகும் தேன்...தமிழ் தேன்..இலக்கிய தேன்...மலை தேன்... மலைத்தேன்

Tuesday, November 19, 2013

எலும்புகூடு, கொலை ,பேய் - தவறவிடக்கூடாத தமிழ் திரைப்படம்


சில படங்களை பார்க்க வெகு நாளாக ஆசையாக இருக்கும். கடைசியில் ஒரு நாள் பார்த்து மகிழ்வோம். அந்த அளவுக்கு பிரபலமான படமாக இருக்கும்.

ஆனால் ஒரு விரல் ( 1965 ) என்ற படத்தை பற்றி வெகு சமீபத்தில்தான் கேள்விப்பட்டேன்.  எம் ஜி ஆர் , சிவாஜி போன்ற பெரிய நடிகர்களோ , பெரிய இயக்குனர்களோ இல்லாமல் இருந்தும்கூட ரிஸ்க் எடுத்து பார்க்கலாம் என படம் பார்த்தேன். எதிர்பாராத இன்ப ஆச்சர்யத்தை கொடுத்து விட்டது படம்.

படம் ஆரம்பமே அசத்தி விட்டது. ஆரம்பத்திலேயே ஒரு மரணம்  , எலும்புக்கூடு என பிக் அப் ஆகி பயணத்தை தொடங்கி விட்டது படம். புதிய படம்போன்ற ஒளிப்பதிவு.
மருத்துவரின் அறைக்கு கொஞ்சம் கொஞ்சமாக அழைத்து செல்லும் அழகு, உரையாடலை நிழலில் இருந்து துவக்கும் நேர்த்தி , இருளின்  வீர்யம் என கலக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் டி ஜே சேகர்.

பணக்காரர் ஒருவர் இறந்து விடுகிறார். அவரது இரு மகன்களும் அலறி அடித்துக்கொண்டு தந்தையின் எஸ்டேட்டுக்கு வருகிறார்கள். அவர்களது தோழனும் துப்பறியும் ஆர்வத்தில் வருகிறான். மூவரும் இன்னோர் ஊரில் படித்து கொண்டு இருப்பவர்கள்.

அண்ணன் சற்று பொறுப்பில்லாதவன். ரேஸ் , ஆடம்பரம் என இருக்கிறான். தம்பி பொறுப்பானவன். கணக்கு வழக்குகளை சோதிக்கையில் மேனேஜர் ஏதோ ஃபிராடு செய்வதை கண்டு பிடிக்கிறான். மேனேஜருக்கு உதவியாக தேங்காய் சீனிவாசனை நியமிக்கிறான்.

தந்தை இறப்பதற்கு முதல் நாள் , ஒரு பெண்ணுடன் பிரச்சனை ஏற்பட்டு , அதனால் அவள் அண்ணன் அவரை கொல்லப்போவதாக மிரட்டியது தெரிய வருகிறது. எனவே அது கொலையாக இருக்கலாமோ என தம்பியும் அவன் தோழனும் கண்டு பிடிக்க முனைகிறார்கள்.
அந்த தோழன் , குடும்ப மருத்துவரின் மகளுடன் காதலில் வீழ்கிறான். அது மருத்துவருக்கு பிடிக்கவில்லை.
இதற்கிடையே எஸ்டேட்டில் பேய் இருப்பதாக ஒரு பேச்சு கிளம்புகிறது. சில ஆதாரங்களும் கிடைக்கின்றன. எலும்புக்கூட்டின் விரல் ஒன்று கிடைக்கிறது.

துப்பறியும் பணியில் ஈடுபடும் அந்த தோழன் ஒரு கட்டத்தில் பேயைப்பார்த்து அந்த அதிர்ச்சியில் இறந்து விடுகிறான்.

அது பேயல்ல,,,தன் தந்தைதான் அவனை கொன்று விட்டார் என எண்ணும் மருத்துவரின் மகள் உண்மையை கண்டறிய முனைகிறாள்.

அந்த மேனேஜர் பணத்தை சுருட்ட திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறார்.

அந்த பேயை கண்டு பிடிக்கும் முயற்சியில் , அது பேயல்ல , யாரோ ஒருவர்தான் இதை எல்லாம் செய்கிறார் என்பதை மருத்துவரின் பெண் கண்டு பிடிக்கிறாள்... ஆனால் அந்த மர்ம உருவம் அவளை கொன்று விடுகிறது.

இதற்கெல்லாம் யார் காரணம், தந்தையை கொன்றது யார்.. ஏன் என்பதெல்லாம் கிளமேக்சில் தெரியும்போது அட என வியந்து போகிறோம்.

அந்த அளவுக்கு லாஜிக்கான இயல்பான  எதிர்பாராத கிளைமேக்ஸ்.

ஒரு நல்ல சஸ்பென்ஸ் படம் என்றால் , கிளெமேக்சில் புதிதாக ஏதாவது கேரக்டரை கொண்டு வந்து படத்தை முடிக்க கூடாது. ஏற்கனவே இருக்கும் கேரக்டர்களை வைத்து , ஏற்கனவே வந்த சம்பவங்களின் கன்சிஸ்டென்சி பாதிக்கப்படாமல் மர்மத்தை விடுவிக்க வேண்டும். அதை கச்சிதமாக செய்கிறது படம்.

இசை வேதா.  நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன் உட்பட பக ஹிட் பாடல்களை கொடுத்த இவர், இந்த படத்திலும் அருமையான பாடல்களை கொடுத்து இருக்கிறார்.

சமாதியை தேடிச்செல்லுதல் , எலும்புக்கூடு பேசுவது போன்றவற்றில் பின்னணி இசை மிரட்டுகிறது.

ஒரு விரல் கிருஷ்ணராவ் என பிற்காலத்தில் புகழ்பெற்ற காமெடி நடிகர் இதில்தான் அறிமுகம் ஆனார். தேங்காய் சீனிவாசனுக்கும் இதுவே முதல் படம், முதல் படத்திலேயே காமெடி கலந்து கலக்கி இருக்கிறார். அவர் ஒரு ரகசிய போலீஸ் என்பது சுவையான ஒரு ட்விஸ்ட்

மலேசியா ராதிகா  மற்றும் திலகா ஆகியோர் நாயகிகளாக அழகாக வருகிறார்கள்.. எதிர்பாராத ட்ரீட்டாக ஒரு கவ்ர்ச்சி காட்சி,, வாவ்...
ஒரு ஸ்டைலான நடனக்காட்சி..பாடல் இல்லாமல் இசை மட்டும்.. அதுவும் லல்வி.  ஒரேயடியாக மூடி வைக்காமலும் , ஒரேயடியாக ஓப்பனாக இல்லாமலும் அளவோடு இருக்கும் கவர்ச்சி சூப்பராக இருக்கிறது. 1965ல் இது கொஞ்சம் ஓவர்தான் என நினைக்கிறேன்.
அந்த மேனேஜர் ரோலில் வருபவர் கவர்ச்சி வில்லன் என அழைக்கப்பட்ட கண்ணன். மற்றும் பண்டரினாத் , மீனாகுமாரி, பிரேம் ஆனந்த் ஆகியோர் கச்சிதமாக தம் பணியை செய்து இருக்கிறார்கள்.
பாடல்கள் ஆலங்குடி சோமு, இயக்கம் சி எம் வீ ராமன்.  இயக்கம் மேற்பார்வை பீ எஸ் மூர்த்தி. தயாரிப்பு சல்வந்தர் பெர்னாண்டஸ் .

அந்த கால படம் என்றாலும் ஆங்கில படம் போல 120 நிமிடங்களில் முடிந்து விடுகிறது. ரீமேக் செய்யாமல் , கலரில் மாற்றி வெளியிட்டால் , புதுப்படம் போலவே இருக்கும்.

அந்த காலத்தில் இதி மிகப்பெரிய ஹிட் ஆன படம் ..ஆனாலும் இது போன்ற படங்கள் அதன் பின் ஏனோ அதிகம் வரவில்லை..


கண்டிப்பாக பார்க்க வேண்டிய சஸ்பென்ஸ் த்ரில்லர் - ஒரு விரல் 



Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா