Thursday, November 21, 2013

சாரு எனக்கு கசந்ததேன்... ஒரு தன்னிலை விளக்கம்


தன் சிஷ்யன் ஏகலைவனின் கட்டைவிரலை குரு தட்சணையாக கேட்ட வரலாறை படித்து இருக்கிறோம். ஆனால் இன்றைய சிஷ்யர்கள் தாம் கற்ற கல்விக்கும் , பெற்ற அறிவு செல்வத்துக்கும் காணிக்கையாக எதுவும் கொடுப்பதில்லை. மாறாக குருவின் கட்டை விரலையே கேட்கின்றனர். இப்படி எத்தனையோ முறை சிஷ்யர்களால் முதுகில் குத்தப்பட்டும்,  எந்த பயமோ சந்தேகமோ இன்றி புதிதாக வரும் அடுத்த சிஷ்யனை உருவாக்கி விட அதே புன்னகையுடன் கைகுலுக்கும் சாருவை சிலர் முட்டாள் என நினைக்கலாம்.. ஆனால் அந்த மேட்னஸ்தான் , அந்த அப்பாவித்தனம்தான் , அந்த வெகுளித்தனம்தான் சாருவை இத்தனை அவதூறுகளுக்கும் மத்தியில் இயங்க வைக்கிறது என்றே கருதுகிறேன்.
அவரால் உருவாக்கப்பட்டவர்கள் துணை இருக்க வேண்டியதே இல்லை.. தெய்வம் நமக்கு துணை பாப்பா...ஒரு தீங்கு வர மாட்டாது பாப்பா என்ற கான்சப்ட்தான்...

இப்போதைய ஃபேஸ்புக் இலக்கியவாதிகளை விடுங்கள்.. ஓரளவுக்கு இலக்கிய பரிச்சயம் உள்ளவர்களுக்கு அந்த காலத்தில் இலக்கியத்தில் கலக்கிக்கொண்டிருந்த இருவரை கண்டிப்பாக தெரிந்து இருக்கும். 
ஆனால் அவர்களுக்கு உருக்கொடுத்து , உயிர் கொடுத்து உலவ விட்டது சாருதான் என்பது பலருக்கு தெரியாது.

அவர்களும் வழக்கம்போல நன்றி காட்டினர். ஆம் .. நம்பவே முடியாத ஒரு குற்றச்சாட்டை , புரளியை , வதந்தியை உலவ விட்டனர். அந்த இரட்டையருக்கிடையே என்ன உறவு , என்ன பழக்கம் என்றெல்லாம் இங்கு விவரித்து என் தரத்தை குறைத்து கொள்ள விரும்பவில்லை.

ஆனாலும் அவர்கள் எழுத்தும் எனக்கு பிடிக்கும். அவர்களது அனைத்து நூல்களையும் படித்து இருக்கிறேன்.
இந்த நெட் யுகத்தில் அவர்கள் ஏன் மவுனமாக இருக்கிறார்கள் என ஆரம்பத்தில் புரியவில்லை. விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி அளித்தன.  குரு துரோகத்துக்கு தெய்வம் இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்குமா என்ற பயத்தில் என ஜூரமே வந்து விட்டது.

அன்று அவதூறு பரப்பினார்கள் என இன்று சாரு சொன்னால்தான் அவர்க்ளைப்பற்றி  தெரியும் என்ற  நிலை... பழைய இலக்கிய பத்திரிகளை எடுத்து பார்த்தால் , அவர்கள் இல்லாமல் ஓர் இதழ் கூட இருக்காது.. அவர்களிடம் நிறைய எதிர்ப்பார்ப்பதாக அன்றைக்கு சாரு கூறி அதுவும் பதிவாகி இருக்கிறது.

திறமைசாலி , புத்திசாலி என ஆயிரம் இருந்தும் குரு துரோகம் என்ற ஓர் அம்சம் அவரை வீழ்த்தி விட்டது. அவரது பெயரையோ , அவரது இன்றைய நிலையோ பற்றி சொல்வது மனிதாபிமானமன்று.. விஷ்யம் மட்டுமே முக்கியம்.

இப்படி ஓர் துரோகத்தை சந்தித்தால் ஒருவர் அடுத்து எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. ஆனால் சாரு அப்படி அல்ல.. மீண்டும் மீண்டும் நம்புவார்...ஏமாறுவார்..  

முட்டாள் என்பது மோசமான தன்மை...அப்பாவித்தனம் என்பது ஒரு வித தெய்வத்தன்மை... முட்டாள் , தன்னை ஒரு அறிவாளியாக மாற்றிக்கொள்ள முயன்று , அதில் தோற்று முட்டாளாகவே நீடிப்பான்.  ஓர் அப்பாவி , மேலும் மேலும் அப்பாவியாக மாறிக்கொண்டே செல்வான் என்கிறார் ஓஷோ.
அந்த அப்பாவித்தனம் இல்லாமல் இறை நிலை சாத்தியம் இல்லை என்கிறார் அவர். சாருவின் எழுத்தில் இறைவன் நடனமாடுகிறான் என்றால் அதற்கு காரணம் இந்த அப்பாவித்தனம்தான்.
அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும் என்கிறது பைபிள்... சகலத்தையும் விசுவாசிக்கும் என்பதை காண்பது அரிது... என் அனுபவத்தில் அதை சாருவிடம் மட்டுமே காண முடிந்து இருக்கிறது.

இப்படிப்பட்ட ஒருவருக்கு துரோகம் செய்பவர்கள் ஏதாவது ஒன்றை சொல்லித்திட்ட வேண்டும் அல்லவா... என்ன சொல்லி திட்டுவது...ஏதாவது வித்தியாசமாக சொல்லி திட்டினால் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் அவர்கள் திட்டுவது குறிப்பிட்ட ஒரு டெம்ப்ளேட்டிலேயே இருப்பதை கவனித்து இருப்பீர்கள்.. சாரு தன் புத்தகங்களில் , எழுத்துகளில் வெளிப்படையாக சொன்னவற்றை தமது கண்டுபிடிப்பு போல சொல்லி அதை வைத்து திட்டுவார்கள்.

பத்து வருடம் சாருவுடன்  பழகி இருப்பார் ஒருவர்.. சாருவை வைத்து அவருக்கு ஓர் அடையாளம் கிடைத்து விடும்.  உலக இலக்கியம் ,  உலக சினிமா , இசை என கொஞ்சம் தெரிந்து விடும்
அவருக்கு என சில புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்..உடனே அவர் தன்னை சாருவுக்கு இணையான ஒருவராக நினைத்து கொள்வார்.

சாருவை திட்ட ஆரம்பிப்பார்.. நமக்கு அதிர்ச்சியாக இருக்கும்.. சரி..ஏனப்பா திட்டுகிறாய் என கேட்போம்.

ஓர் எழுத்தாளன் சமூகத்துக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அவன்போய் மது அருந்தலாமா.. அதுவும் அதைப் பற்றி எழுதலாமா..சமூகம் கெட்டுவிடாதா என கொந்தளிப்பார் . அடப்பாவி...அதை இப்போதுதான் கண்டுபிடித்தாயா... அதை அவர் மறைவாகவா செய்கிறார்..அவர் எழுதியதை வைத்துதானே இதை சொல்கிறாய்... இதெல்லாம் உனக்கு அவர் ரத்தத்தை உறிஞ்சிய கால கட்டத்தில் தெரியாமல் போய் விட்டதா என நினைத்து கொள்வோம்.

 நேற்று சொன்னதுக்கு முரணாக பேசுகிறாரே என திடீர் என கண்டுபிடிப்பார்கள்...அவர் ஒரு பண்டிதர் அல்ல... ஒரு mad man  என்பதெல்லாம் தெரிந்த விஷ்யம் ஆயிற்றே...  இதற்கு ஒரு பஞ்சாயத்தா

அவர்  வாசகர்களிடன் பணம் கேட்டு நச்சரிக்கிறார் என்பது அடுத்த குற்றச்சாட்டு.  அவர் நினைத்தால் , வெளிப்படையாக கேட்காமல் , ரகசியமாக கேட்க முடியாதா.... தன் தேவையை அதுவும் எழுத்து சம்பந்தமாக எழுத்து எனும் வேள்விக்காக வெளிப்படையாக போஸ்ட் போடுகிறார்.. சில நாடுகளில் சினிமா ஓர் இயக்கமாக மாறியது இப்படித்தான்... சினிமா திரையிடப்படும்., ஓர் உண்டியல் வைக்கப்படும். விருப்பப்பட்டவர்கள் தாம் விரும்பும் தொகையை , ஒரு ரூபாயோ , ஒரு கோடியோ , கட்டணமாகவோ , காணிக்கையாகவோ செலுத்தலாம்... செலுத்தாமலும் போகலாம்.. இதை களங்கப்படுத்துவது நம்மை நாமே அசிங்கப்படுத்திகொள்வது போன்றது. கேட்கிறார்,,, முடிந்தால் கொடுங்கள்/..இல்லாவிட்டால் விடுங்கள்... முடிந்தது விஷ்யம்... ஓர் எழுத்தாளன் இப்படி ஒரு நிலையில் இருப்பது நமக்குத்தான் அசிங்கம்..அதை கிண்டல் செய்வது அதை விட அசிங்கம்.

தனிப்பட்ட வாழ்க்கையில் தனக்காக ஒரு சின்ன விஷயத்தை கேட்கக்கூட கூச்சப்படுபவர் சாரு என்பது அவருடன் பழகிய என் போன்றோருக்கு தெரியும். 

ஒரு முறை ஒரு விஅய்பி சாருவை பார்க்க வந்திருந்தார்.. இருவரும் இலக்கியம் குறித்து பொதுவான ஆனால் முக்கியமான விஷ்யம் ஒன்றை பேசிக்கொண்டு இருந்தனர்.

திடீரென என் பக்கம் திரும்பிய சாரு “ பிச்சை ..உங்களுக்கு கஷ்டம் இல்லைனா ஒரு ஹெல்ப் செய்வீங்களா “ என்றார். 

எனக்கு பதட்டம்..அவர் முன் இப்படி கேட்கிறாரே... “ என்ன சாரு,,என்னவென்றாலும் சொல்லுங்க...செஞ்சுடலாம் “ என்றேன் பரபரத்துப்போய்.

” நாங்க ஒரு முக்கியமான விஷ்யம் பேசுறோம்..இது ஒரு பத்திரிக்கையில் வரபோகுது...அதை நோட்ஸ் எடுக்க முடியுமா “ என்றார்.

அந்த இடத்தில் வேறு சிலரும் இருந்தார்கள்...இதை செய் என செய்துவிட்டு போய் விடுவார்கள்..அதற்குப்போய் இவ்வளவு தயக்கம்.

சரி என தெளிவாக நோட்ஸ் எடுத்தேன். நோட்ஸ் எடுத்ததை தவிர அதில் என் பங்களிப்பு ஏதும் இல்லை

சென்னை வந்ததும் அதை டைப் செய்து மெயில் செய்தேன் ( காரணம் என் கை எழுத்து தலை எழுத்து போல இருக்கும் )

அடுத்த நாள் போனில் பேசினார்

“ பிச்சை...மெயில் கிடைத்தது... இதை பத்திரிக்கைக்கு எழுத பயன்படுத்திக்கலாமா” என்றார்...எனக்கு பயங்கர அதிர்ச்சி... 
இதை சொல்ல நான் யார்... அவர் என்னிடம் இப்படி கேட்க அவசியமே இல்லை... எனக்கும் அந்த மேட்டருக்கும் சம்பந்தமே இல்லை... அவர் பேசியதை , அவர் சொல்லி நான் நோட்ஸ் எடுத்தேன்... அவ்வளவுதான் ..இதற்குபோய் ஃபார்ம்லாக கேட்கிறாரே என நினைத்தேன்.

இப்படி ஒவ்வொன்றிலும் கண்ணியத்தை , கட்டுப்பாட்டை கடைபிடிப்பவர் சாரு. 

தனக்காக எதையும் கேட்க விரும்பாத சாரு, ஒன்றை மட்டும் கூச்சப்படாமல் கேட்பார்..அது அறிவு சார்ந்த விஷ்யமாக இருக்கும். ஏதாவது ஒரு விபரமோ , தகவலோ தனக்கு தெரியவில்லை என்றாலோ  , குழப்பம் என்றாலோ , பலர் முன்னிலையில் பகிரங்கமாக கேட்பார். தனியாக அழைத்து சென்று கேட்கும் தந்திரம் அவருக்கு தெரியாது.

பெண்கள் சம்பந்தப்பட்ட விஷ்யங்களில் பொதுவாக நம் மக்கள் கேவலமாக நடந்து கொண்டு , வெளியே உத்தமனாக காட்டிக்கொள்வார்கள். ஆனால் சாரு எழுத்திலேயே சொல்ல வேண்டியதை வெளிப்படையாக சொல்லி விடுவார்.

நம் மக்கள் அதைப்படித்து விட்டு , தமது கண்டுபிடிப்பு போல பிற்காலத்தில் அதிர்ச்சி அடைவது அவ்வப்போது நடக்கும் ஒன்று...

ஹேர் ஸ்டைலை கொஞ்சம் மெருகெற்ற ஆலிவ் ஆயில் வாங்கினேன்... உயர் ரக ஷாம்பூ....சிகைக்காய் தூள் , இன்னும் சில வாசனை எண்ணெய்கள் , ஆயுர்வேத பொடிகள் , நாட்டு மருந்து என கணிசமாக செலவிட்டு முடியை சீராட்டுவது என் இயல்பு.. அந்த அளவுக்கு பாசமாக , பக்குவமாக , பாந்தமாக பார்த்துக்கொள்வேன்... 

காலையில் சீவும்போது ஒரு முடி உதிர்ந்து விட்டது என வைத்துக்கொள்ளுங்கள்...  கொஞ்ச நேரம் முன்பு வரை ராஜ கவனிப்பு பெற்ற அந்த முடி குப்பைத்தொட்டிக்கு போய் விடுமா இல்லையா..

அதுபோல , சாரு என்று அல்ல , எந்த ஒரு குருவாக இருந்தாலும் அவருடன் இருக்கும்வரைதான் மதிப்பு... குருவின் ஆசியுடன் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கும் , அவரை வயிறெரிய விட்டு ஒரு செயலை ஆரம்பிப்பதற்கும் வேறுபாடு உண்டு.. 

வள்ளலாரின் இந்த பாடலை பாருங்கள்..சில கொடிய பாவங்களை பட்டியல் இடுகிறார்..

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!

மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!

களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!

ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!
வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ!

இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!
கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!
நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ!
கலங்கி யொளித்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ!

குருவை வணங்கக் கூசிநின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ!

அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!

தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் து‘ஷணஞ் செய்தேனோ!
தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறியேனே!


சாருவிடம்தான் ஒரு சினிமாவை எப்படி ரசிக்க வேண்டும் என கற்றேன்...உலக இலக்கியங்கள் பற்றி தெரிந்து கொண்டேன்...உழைப்பைக்கற்றேன்... உண்மையை கற்றேன்...
இலக்கியத்தை படைக்க எந்த நாயாலும் முடியும்.. ஆனால் இலக்கியமாகவே வாழ சாரு எனும் தாயால் மட்டுமே முடியும் என மனப்பூர்வமாக கருதுகிறேன்.

இந்த அருந்தமிழ் பாடலை கவனியுங்கள்
வாங்கும் கவளத்து ஒரு சிறிது வாய் தப்பின்தூங்கும் களிறோ துயறுரா - ஆங்கதுகொண்டுஊரும் எறும்பு இங்கு ஒருகோடி உய்யுமால்
ஆரும் கிளையோடு அயின்று.


ஒரு யானை சாப்பிடுகிறது என வைத்துக்கொள்ளுங்கள்/.. அதில் கொஞ்சூண்டு சிதறி விடுகிறது..அதனால் யானைக்கு எந்த இழப்பும் இல்லை.. ஆனால் அந்த கொஞ்சூண்டு சோற்றில் கோடிக்கணக்கான எறும்புகள் பசியாறும்.. அப்படி எறும்புகள் பசியாறியதுகூட யானைக்கு தெரிய வாய்ப்பில்லை..

அதுபோல , உலக ஞானங்களை தேடிக்கண்டுபிடிக்கும் வேள்வியில் சாரு தன்னையே ஆகுதியாக கொடுக்கிறார் என்றால் எந்த ஞானச்சாற்றில் ஒரு சொட்டு கிடைத்தாலே பல்லாயிரக்கணகான  வாசகர்களுக்கு போதுமானது..இப்படி எத்தனை ஆயிரம் பேர் பயன் பெற்றார்கள் என்பதுகூட சாருவுக்கு தெரிய வாய்ப்பில்லை..

இதை நான் மிகைப்படுத்தி எல்லாம் சொல்லவில்லை..இணையத்தை பாருங்கள்... சாருவை திட்ட வேண்டும் , அல்லது பாராட்ட வேண்டும்... இதை செய்யாமல் யாரும் இணையத்தில் இருக்க முடியாது என்ற நிலை இருப்பதை யார் வேண்டுமானாலும் சோதித்து பார்க்கலாம்.. தெரிந்தோ தெரியாமலோ இத்தனைபேர் தமிழில் எழுதுகிறார்கள் என்பதை யாரும் மறுக்கவும் முடியாது...அதே நேரத்தில் மறைக்கவும் முடியாது

எத்தனையோ வாசகர் சந்திப்புகள் நடந்து இருக்கின்றன.,..எத்தனையோ பேரை சந்திக்கிறார். ஒரு போதும் தனக்கு ஏன் காசு கொண்டு வரவில்லை என யாரையும் கோபித்தது இல்லை..  பொதுவான செல்வுகளை ஷேர் செய்வோமே தவிர அவருக்கு என கேட்டு திட்டியதில்லை.

ஆனால் வேறு விஷ்யங்களுக்கு திட்டி இருக்கிறார்.

குடியை ஒரு கொண்டாட்டமாக ராணுவ ஒழுங்குடன் செய்யாமல் ஒழுங்கீனமாக நடந்ததற்கு திட்டி இருக்கிறார்.. ஒரு சந்திப்பில் ஒரு சின்னஞ்சிறிய நாய்க்குட்டியை சரியாக கவனிக்கவில்லை என திட்டி இருக்கிறார்.. தான் சொன்ன படங்களை பார்க்கவில்லை..இசையை கேட்கவில்லை என திட்டி இருக்கிறார்.

ஒரு சந்திப்பில் நண்பர் சாம் , தான் சாருமூலம் தெரிந்து கொண்ட இசை மற்றும் சினிமா பற்றி பேசினார்...
எனக்கு இசைஞானம் அவ்வளவு இல்லை... எனவே சும்மா விழித்து கொண்டு இருந்தேன்.. 

இவர் சொன்னதை வேறு யார் கேட்டு இருக்கிறீர்கள் என்றார்... யாரும் பதில் சொல்லவில்லை..டென்ஷன் ஆகி விட்டார்.

 நான் சொல்வதை படிக்கத்தான் மாட்டேன் என்கிறீர்கள்... இசையை கேட்பதில் என்ன க்‌ஷ்டம்.... படத்தை பார்ப்பதில் என்ன கஷ்டம் என பொரிந்து தள்ளிவிட்டார்.

நான் சொன்ன zorba the greek படித்து விட்டீர்களா என என்னை கேட்டார்...இல்லை என தயக்கத்துடன் தலை ஆட்டினேன்.

இனி என்னை பார்ப்பதாக இருந்தால் , இதை படித்து விட்டு வாருங்கள்..இல்லை என்றால் இனி என்னிடம் வர வேண்டாம் என்றார்.

அதன் பின் , அதை படித்து  பதிவிட்டதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

இதெல்லாம் கசப்பு மருந்துதான் என்றாலும் , அந்த மருந்து நல்லதே செய்திருக்கிறது.

வார்த்தைகளில் இனிப்பை தடவி , இதயத்தில் நஞ்சை வைத்து இருக்கும் மனிதர்களிடையே , இந்த கசப்பு எனக்கு தேனாக இருக்கிறது....  மேலும் கசப்புதான் எனக்கு பிடிக்கும்..கசப்பு ஆரோக்கிமானது.... 

ஆம் .. நான் என்றும் எங்கும் யாரிடமும் சொல்வேன்

சாரு எனக்கு கசந்த தேன்..சலிக்காத தேன்...மீண்டும் மீண்டும் பருகும் தேன்...தமிழ் தேன்..இலக்கிய தேன்...மலை தேன்... மலைத்தேன்

13 comments:

 1. மிக அருமையான சிறுகதை படைப்பு! வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 2. Neenga ellaam nalla varuveenga.

  ReplyDelete
 3. குரு பக்தி ,அருமை !

  ReplyDelete
 4. குரு பக்தி ,அருமை !

  ReplyDelete
 5. வாளால் அறுத்துச்சுடினும் மருத்துவன் மேல் மாறாத காதல் நோயாளன் போல என்ற வரிகள் மனதில் ஓடின உங்கள் படைப்பை படித்ததும் ...

  ReplyDelete
 6. வாளால் அறுத்துச்சுடினும் மருத்துவன் மேல் மாறாத காதல் நோயாளன் போல என்ற வரிகள் மனதில் ஓடின உங்கள் படைப்பை படித்ததும் ...

  ReplyDelete
 7. எனக்கும் ஒருமுறை உங்கள் குருவை சந்திக்க ஆசை

  ReplyDelete
 8. “கசந்ததேன்” என்று படித்ததும் பதறிவிட்டேன். சாருவிடம் பழகத்தேவையில்லை அவரைப் (முழுதாகப்) படித்தாலே போதுமே.. .... இதெல்லாம் தெரிந்துவிடும்

  ReplyDelete
 9. ஐயோ பாவம், இப்படியெல்லாம் எழுதியும் தூக்கிட்டாங்களே.

  ReplyDelete
 10. அருமையாகச்சொன்னீர்கள். ரசித்தேன். உண்மை.

  ReplyDelete
 11. Ivvalavu pughazchiku thagudhiyana aal kidayathu ungaloda guru,avar oru poli...

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா