Saturday, April 6, 2019

பூர்வ ஜென்ம நினைவுகளை மறக்காத வித்தை - பாபா


சத்ய சாய் பாபா உரையாடலை படித்த பலர் , இது போன்ற ஞான மார்க்கத்தை அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்றனர்,..

உண்மையில் ஞானம் , கர்மம் , பக்தி என்பதெல்லாம் ஒன்றுதான்.. உதாரணமாக உருவ வழிபாடு செய்த ராமகிருஷ்ண பரமஹம்சர் அடையாத ஞானமா.. செய்யாத சேவையா..

ஆகவே இந்த பிரிவினைகள் தேவை இல்லை

எல்லா இடங்களில் இருந்தும் நல்ல விஷ்யங்களை கிரகிப்பதே முக்கியம்

----------

வெளி நாட்டினர் சிலர் சாய் பாபாவிடம் நிகழ்த்திய உரையாடல்

ஸ்வாமி.. நினைவாற்றல் என்பது ஆன்மிக வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு அவசியம்?

பாபா- இறந்த கால சுமைகள் என்பது ஆன்மிகத்துக்கு தேவை இல்லை... கஷ்டப்பட்டு ஒன்றை மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை.. ஆனால் உண்மையிலேயே ஆர்வம் இருப்பின் மந்திரங்கள் , குரு உபதேசம் மறக்காது


ஒரு முறை அர்ச்சுனன் கிருஷ்ணனிடம் கேட்டான்,,, எனக்கு கடந்த பிறவிகள் எல்லாம் நினைவு இல்லை.. உனக்கு மட்டும் எப்படி பூர்வஜன்ம நினைவுகள் எல்லாம் அப்படியே இருக்கின்றன

கிருஷ்ணன் கேட்டான்.. போன மாதம் காலை உணவாக என்ன சாப்பிட்டாய்?

அர்ச்சுனன் சொன்னான்.. மறந்து விட்டதே

போன வருடம் முதன் முதலாக யாரைப்பார்த்தாய்?

நினைவு இல்லையே

உனக்கு முதன் முதலில் வில் வித்தை கற்றுத்தந்தவர் யார்?

நினைவு இருக்கிறது

போன வருடம் , போன மாதம் நீ உலகில் இருந்தாய்.. ஆனால் உனக்கு அவை நினைவு இல்லை. நினைவு இல்லை என்பதால் போன வருடம் என்பது இல்லை என ஆகி விடாது

சில விஷ்யங்கள் உனக்கு நினைவு உள்ளது. காரணம் அவற்றின் மீது மட்டும் உனக்கு அக்கறை உண்டு

இப்போது புரிகிறதா... எனக்கு எதுவுமே மறப்பதில்லை.. காரணம் எனக்கு எல்லாவற்றின் மீதுமே அக்கறை உண்டு



Friday, April 5, 2019

எல்லாம் தெரிந்த கடவுளுக்கு என் தேவை தெரியாதா? பிரார்த்தனை குறித்து சாய்பாபா


புட்டபர்த்தி சாய் பாபா என்றால் , சென்னை குடி நீர் பிரச்சனையை தீர்த்தது ,,  அவர் செய்யும் மந்திர ஜாலங்கள் போன்றவைதான் பலர் நினைவுக்கு வரும்.. ஆனால் வெளி நாட்டினர் அவருடன் ஆழமான விவாதங்கள் நிகழ்த்தியுள்ளனர்

-------------------------


ஒருவரின் கர்மா ஒத்துழைத்தால்தான் அவரது பிரார்த்தனை ஏற்கப்படுமா?

பாபா- இல்லை... ஒருவரது இதயம் , சிரத்தை ஆகியவற்றை பொருத்து கர்மாவையும் மீறி இறையருள் வேலை செய்யும்

கடவுள் அனைத்தையும் அறிந்தவர்.. எனக்கு என்ன வேண்டும் என்பது அவருக்கு தெரியாதா... அவரிடம் ஏன் பிரார்த்திக்க வேண்டும்?

பிரார்த்தனை என்பது ஒரு ஆன்மிக பயிற்சியாகும்.. எல்லாம் உன் செயல்... நீ பார்த்து எனக்கு நல்லது செய் என கேட்குமபோது ஈகோ அழிகிறது,,, இதயத்தில் அன்பு மலர்கிறது... கடவுளுக்கு எல்லாம் தெரியும் என்றாலும் நீ கேட்க வேண்டும் என்பது உன் நல்லதற்காகத்தான்... உதாரணமாக குழந்தை சின்ன வயதில் வாய் விட்டு அழுவது ஒரு வகை உடற்பயிற்சிதான்... ஒரு தாய்க்கு குழந்தையின் பசி தெரியாது என்பதல்ல்... ஆனால் அழுதவுடன் பால் கொடுப்பதுதான் நல்லது

பிரார்த்தனை என்பது ஒரு வகையில் பிச்சை எடுப்பது போல தோன்றுகிறதே?

இல்லவே இல்லை... உன்னை விட பெரிய மகான்கள் , இறைசக்தியுடன் நீ நடத்தும் உரையாடல்தான் , பிரார்த்தனை என்பது... பெரியவர்களுடன் உரையாடுகையில் நீயும் அவர்கள் அளவுக்கு உயர்கிறாய்...  இன்னொரு வகையில் பார்த்தால்  , கடவுளிடம் உனக்கு வேண்டியதை கேட்கும் முழு உரிமை உனக்கு இருக்கிறது.... உன் உரிமையைத்தான் நீ கேட்கிறாய்


எனக்கு எந்த தேவையும் இல்லாதபோது என்னவென பிரார்த்திப்பது?

மன அமைதி வேண்டும் என்று கேள்

மன அமைதி என்பது என்ன?

உண்மையில் மனம் என ஒன்றும் இல்லை... வெயிலின் இயல்பு சுடுவது , பனியின் இயல்பு குளிர்வது என்பது போல மனதின் இயல்பு என்பது அலைவது... அலையாத அமைதியான மனம் என பேச்சு வழக்கில் சொல்கிறோம்... உண்மையில் மனம் அழிவது என்பதுதான் விரும்பத்தக்கது




Thursday, April 4, 2019

இலக்கியத்தரத்தில் ரஜினி- மகேந்திரன் கூட்டணியில் வெளியான படம் - கை கொடுக்கும் கை

பல படங்களை ரீமேக் செய்கிறார்கள்...ரீமேக் செய்தால் , ஒரிஜினல் படத்தை விட்டு இன்று நன்றாக ஓடும் வாய்ப்பு உள்ள படம் கை கொடுக்கும் கை

மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி , ரேவதி நடிப்பில் வெளியான படம் இது

ஆக்சன் ஹீரோவாக தோன்றும் ரஜினி பண்பட்ட நடிப்பை காட்டுவார்.. ரேவதியும் பார்வையற்ற பெண்ணாக நடித்து இருப்பார்

பார்வையற்ற சூழலை பயன்படுத்தி பண்ணையார் ரேவதியிடம் தவறாக நடந்து கொள்வார்

அவனை கொன்று சிறைக்கு சென்றால் பாதிக்கப்படபோவது தன் மனைவிதான்

மனைவி மீதான காதல்தான் முக்கியம் என நினைப்பார் ரஜினி.. ரேவதியோ தான் களங்கப்பட்டு விட்டதாக நினைத்து அழுவார்

உன் மீது எந்த களங்கமும் இல்லை.. நீ கெட்டுப்போகவும் இல்லை...   கெட்டுப்போனது இந்த ஊர்தான்...  இந்த கேவலமான ஊர் நமக்கு வேண்டாம்,, வேறு ஊருக்க்கு செல்வோம்.. எல்லாவற்றையும் மறந்து புதிதாக வாழ்வோம் என தன் மனைவியை அழைத்துக்கொண்டு வேறு ஊருக்கு சென்று விடுவார் ரஜினி

இப்படி ஒரு கிளைமேக்ஸ் எந்த படத்திலும் வந்தது இல்லை.. குறிப்பாக ஒரு மாஸ் ஹீரோ படத்தில் இப்படி ஒரு முடிவை யாருமே வைக்க மாட்டார்கள்.. ஒரு விஜயோ , அஜீத்தோ  , எம் ஜி ஆரோ நடிக்கவும் மாட்டார்கள்...

ஜெயகாந்தனின்   அக்னி பிரவேசத்துக்கு நிகரான இலக்கியத்தரமான ஒரு படைப்பு என்ற பெருமை மட்டுமே இந்த படத்துக்குப்போதும்.. முரட்டுக்காளை போலவோ , தம்பிக்கு எந்த ஊரு படம் போலவோ ஓட வேண்டியது இல்லை என்ற தெளிவுடன் படத்தில் பணியாற்றிய ரஜினிக்கும் மகேந்திரனுக்கும் தமிழ் சினிமா உலகம் கடமைப்பட்டுள்ளது


Wednesday, April 3, 2019

மகேந்திரன் எனும் மகத்தான் கலைஞன் - மெட்டி

 ( சில ஆண்டுகளுக்கு முன் எழுதியது,, மீள்பதிவாக உங்கள் பார்வைக்கு )


தமிழ் சினிமாவில் சாதனைகள் பல செய்த மகேந்திரன் சில வருடங்களாக சற்று ஒதுங்கி இருக்கிறார்.. ஆனாலும் அவருக்கு என இருக்கும் ரசிகர் கூட்டம் இன்னும் அப்படியே இருப்பதை கடந்த வாரத்தில் உணர்ந்தேன்.. உயர்ந்த ரசனைகள் கொண்டவர்கள் , படைப்பாளிகள் பலர் மகேந்திரனின் படைப்புகளை அனுபவித்து ரசித்து இருப்பதை உணர முடிந்தது... நான் எழுதும்போது விடுபட்ட தகவல்கள் , பிழைகள் , மாற்று கோணங்கள் என ஃபீட் பேக் கொடுத்து அசத்தி விட்டார்கள்... மகேந்திரன் ரசிகர் கிளப்பில் நான் தான் ஜூனியர் போல.. ஒவ்வொருவரும் அந்த அள்வுக்கு விஷ்யம் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

மெட்டி படம் பார்க்காமல் , உங்கள் அனுபவம் முழுமை அடையாது என நண்பர் காரிகன் உட்பட பலர் சொல்லி வந்தனர்.
கணவன் மனைவி உறவு , கை இல்லாத நிலையிலும் சுய கவுரவத்தை விட்டுக்கொடுக்காதவனின் தங்கை பாசம், ஒரு பெண்ணின் தூய காதலால் நெகிழும் கிரிமினல், நடுத்தர வர்க்கத்தின் பிரச்சனைகள், மனித மனதின் வக்கிரங்கள் , பெண் மனதின் புதிர்கள் என எல்லாவற்றையும் சொல்லி விட்டாரே..இதில் என்ன சொல்லப்போகிறார் என ஒரு வித ஆவலுடன் படம்பார்த்தேன்..

ஆரம்ப காட்சியிலேயே மெட்டி, மெட்டியை மனித மனிதனின் சிறந்த தன்மை , மகிழ்ச்சி போன்றவற்றுடன் இணைத்து நமக்கு அறிமுகம் செய்வது என ஆரம்ப காட்சிகள் கவிதைபோல இருக்கின்றன... இளையராஜாவின் பாடல் இதற்கு பக்கத்துணையாக இருக்கிறது..

தன் இரு மகள்களுடன் ( ராதிகா , வடிவுக்கரசி ) வசிக்கும் தாய் ,  அவர்கள் வீட்டு ஓனர் , எதிர்பாராத விதமாக அவர்களை சந்திக்க நேரும் நாயகன் ( சரத்பாபு )அவர்களுக்கிடையே என்ன உறவு ,  நாயகனின் தந்தை ( செந்தாமரை ) என முக்கிய கேரக்டர்கள் எல்லாம் பதினைந்தே நிமிடத்தில் அறிமுகம் ஆகி விடுவதை திரைக்கதையை கற்க விரும்புபவர்கள் குறித்து வைத்து கொள்ள வேண்டும்..

தன் தந்தையின் போக்கு நாயகனுக்கு பிடிக்கவில்லை..தந்தை ப்யங்கர குடிகாரர்...குறிப்பாக கைக்குழந்தையுடன் தன் சித்தியை ( தந்தையின் இரண்டாம் தாரத்தை ) வீட்டை விட்டு துரத்தியது மனதில் முள்ளாக இருக்கிறது... ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி இன்னோர் ஊருக்கு போய் விடுகிறான்.

அங்கே ஒரு பெண் தன் இரு மகள்களுடன் வசித்து வருகிறாள்.. வீட்டு ஓனர் ஒரு குஜராத்திக்காரர்... தாயும் மகள்களும் ஒருவருக்கு ஒருவர் அன்புடன் இருக்கின்ன்றனர்..அந்த வீட்டுக்கு நாயகன் வீடு தேடி வருகிறான்... கடைசியில் பார்த்தால் ,  அன்று தன் தந்தையால் துறத்தப்பட்ட சித்திதான் இந்த பெண்...அந்த இரு மகள்களும் தன் தங்கைகள் என உணர்கிறான்..

இந்த இடத்தில் இடவேளை என நினைப்பீர்கள்...அதுதான் இல்லை...இது எல்லாம் நடப்பது பத்தே நிமிடங்களில் !!
எல்லாம் காட்சிபூர்வமாக , வசனங்கள் குறைவாக வைத்து சொல்லப்படுவதால் , இவ்வளவு சுருக்கமாக ஆனால் தெளிவாக ஆழமாக சொல்ல முடிகிறது..

அந்த பெண் துரத்தப்படும்போதே , வயிற்றில் குழந்தையுடன் வந்தவள்..ஆனால் அவ்ள் கண்வன் உட்பட எல்லோருமே அந்த இரண்டாவது மகளை அந்த வீட்டு ஓனருக்கு பிறந்தவள் என தவறாக பேசுகிறார்கள்...

அந்த வீட்டு ஓனர் கொஞ்ச நேரம் வந்தாலும் அவரது மேன்மை நமக்கு புரிந்து விடுகிறது... கல்யாண புரோக்கராக வரும் வெண்ணிற ஆடை மூர்த்தி போன்ற சிறிய கேரக்டர்களும் உயிர்ப்புடன் இருப்பது குறிப்பிடத்தக்கது...அவருக்கு ஆறு மகள்கள்...அவர்களில் ஒருவரை நாயகன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்... ஆனால் , அந்த மகள்கள் பாடும் பாசப்பாடல்களோ. சரத்பாபுவுக்கும் அவர்க்ளுக்கும் டுயட்டோ கிடையாது,,இன்னும் சொல்லப்போனால் , அவர்கள் நேரடியாக காட்டபடுவதே இல்லை...அவர்கள் இருப்பு மட்டும் குறிப்பால் உணர்த்தப்படுகிறது... இப்படி தேவையற்ற காட்சிகள் எதுவுமே இல்லை..

அந்த தாய் இறந்து விடுகிறாள்..மீண்டும் அந்த வீட்டில் மெட்டி ஒலி சத்தம் கேட்க வேண்டும்...சந்தோஷம் திரும்பவேண்டும் , என கூடப்பிறக்காத தங்கைகளுக்காக அண்ணன் பாடுபடுவதே கதை...அன்பிற் சிறந்த தவம் இல்லை..அன்புக்கு அழிவும் இல்லை என்பதை சொல்லி இருக்கிறார்..

அன்பு என்றால் பாலுணர்வு என்ற புரிதலில் இருக்கும் தமிழ் சினிமாவில் அண்ணன் தங்கை அன்பு , அவர்களுக்கிடையே ஓர் இனிமையான பாடல் என ஒரு வித்தியாசமான அன்பை காட்டி இருக்கிறார் மகேந்திரன்...

மை சன்,என்னை அடிக்காதீங்க மை சன் என அலப்பரை செய்யும் லட்டான கேரக்டர் செந்தாமரைக்கு... தூள் கிளப்பி இருக்கிறார்...

படத்தில் ஒரு காட்சி.... தன் தங்கை யாரோ ஒருவனை காதலிப்பதாக சொல்கிறாள்..ஹீரோ கேட்கிறான் “ அவன் என்ன ஜாதி ? “ .... ஒரு ஹீரோ இப்படி ஒரு வசனம் பேசி எந்த படத்திலும் பார்த்ததில்லை... ஜாதி என ஒன்றே நம் சமூகத்தில் இல்லாதது போலவும் , வில்லன்கள் மட்டுமே ஜாதி பற்றி பேசுவது போலவும் நம் ஆட்கள் க்தை சொல்வார்கள்.. ஜாதி வித்தியாசம் பார்க்காமல் பலர் இருக்கிறார்கள் என்பது உண்மை..ஆனால் ஜாதி என ஒன்று இல்லாதது போல நடிப்பது யதார்த்தம் இல்லை... ஆனாலும் ஒரு விஜயோ , அஜித்தோ தன் படங்களில் யாரிடமாவது என்ன ஜாதி என கேட்பதை ஹீரோயிசத்துக்கு களங்கமாகவே நினைப்போம்... ஆனால் மகேந்திரன் துணிச்சலாக அந்த வசனத்தை தன் நாயகனுக்கு கொடுத்து இருக்கிறார்... அந்த நாயகன் ஜாதி வித்தியாசம் பார்க்காதவனாக இருக்கலாம். ஆனால் தன் தங்கையின் காதலன் குடும்பம் , ஜாதி , மதம் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவது இயல்புதானே..இந்த சாதாரண யாதார்த்தம் கூட நம் படங்களில் இருக்காது

இயல்பான ஹாஸ்யம்... முழுக்க முழுக்க ஹாஸ்யத்தின் அடிப்படையில் ஒரு பாடல்.. தன்னை காதலிப்பதாக சொல்லும் ராஜேஷிடம் தன் கணவன் எப்படி இருக்க வேண்டும்..தன் கல்யாணம் எப்படி நிகழ வேண்டும் என சொல்வதாக ஒரு பாடல்... அருமை...
 மேற்சொன்ன அந்த பாடல், மெட்டி ஒலி காற்றோடு பாடல் என்ற பாடல் , சந்த கவிதைகள் பாடிடும் என்ற இன்னொரு பாடல் என எல்லாமே சூப்பர் பாடல்கள்... இந்த பாடல்களை எழுதியவர் கங்கை அமரன்..

ஆனால் இளையராஜாவின் மேதமை. அவரது வித்தியாசமான முயற்சி , பாடல் வரிகள் என என் மனதை கவர்ந்த்து இந்த பாடல்தான்  rarest song- கேட்க தவறாதீர்கள்  ... மெட்டி மெட்டி என ஆங்காங்கு வார்த்தைகள் ஒலித்து மனதை என்னவோ செய்கிறது அல்லவா..

டீக்கடையில் சில பாடல்களை கேட்டால் , இது என்ன படம் என டீக்கடைக்காரரை கேட்போம்...அந்த அளவுக்கு அந்த பாடல் நம்மை ஈர்க்கிறது என்றால் அது அந்த பாடலின் வெற்றியாகும்.. அதுபோல மேற்கண்ட பாடல் என் உள்ளம் கவர்ந்தது... இதை எழுதியது யார் என தேடினேன்... அந்த பாடலைபடைத்தவர் மதுக்கூர் கண்ணன்...

இவர் யார் என விழி உயர்த்துகிறீர்க்ளா... யார் என்ற சூப்பர் ஹிட் படம் கொடுத்து ”யார் கண்ணன் ” என புகழ் பெற்றவர்தான் இவர்... நண்டு படத்தில் வரும் அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா...சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா என்ற அமர வரிகளை படைத்தவர் இவர்தான்..

எடிட்டர் , ஒளிபதிவாளர் என பல மேதைகள் ஒன்றிணைந்த அபூர்வ படம் இது..அந்த மேதைகளில் ஒருவராக இவரும் இந்த படத்தில் இருக்கிறார்..

மேலே போகும்  முன் இந்த புற நானூறு கவிதையை படித்து விடுங்கள்


பெருஞ்சோறு பயந்து பல் யாண்டு புரந்த
பெருங்களிறு இழந்த பைதற் பாகன்
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை
வெளிழ் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு
கலங்கினென் அல்லனோ, யானே – பொலந் தார்த்
தேர் வண் கிள்ளி போகிய
பேர் இசை மூதூர் மன்றம் கண்டே?

யானைக்கு அன்பாக சோறிட்டு வளர்த்த பாகன் , அவ்வளவு பெரிய யானை இல்லாதபோது , அது இருந்த இடத்தின் வெறுமையை பார்த்து கலங்குவான் அல்லவா...அதுபோல மன்றத்தை பார்த்து கலங்கினேன் என சோகத்தை சொல்கிறது பாடல்... இல்லாமையின் இருத்தலியல்..

இதை உணர்வுபூர்வமாக  காட்சிப்படுத்தி இருப்பார் மகேந்திரன்.

அந்த தாய் இறந்து விடுகிறாள்..அப்போதுகூட அந்த இழப்பு தெரியாது..ஆனால் அவள் உடல் எடுத்து செல்லப்பட்டவுடன்  தோன்றும் வெறுமை அவர்களை கதற வைத்து விடுகிறது.... அவள் உடம்பு வைக்கப்பட்ட இடம் வெற்றிடமாக உள்ளது..சுற்றிலும் மலர்கள், மாலைகள்...அந்த வெறுமையை அவர்களால தாங்க முடியவில்லை..கதறி விடுகிறார்கள்...

பிணத்தை பார்த்து அழும் காட்சிகளை பார்த்து இருக்கிறேன்.. வெற்றிடத்தை, வெறுமையை கண்டு அழும் காட்சியை பார்ப்பது இதுவே முதல் முறை..மகேந்திரன்... என்ன ஒரு கலைஞன் !!!!!

இந்த வெறுமையை நாம் வாழ்வில் உணரலாம்...முக்கிய பண்டிகைகளில் , நிகழ்ச்சிகளிதான் , மரணம் அடைந்த நம் தாத்தாவின் இல்லாமை , அவர்து கண்டிப்பு , அலட்டல் போன்றவை இல்லாமை நன்கு தெரியும்...இதை படம் பிடித்த கலைஞன் மகேந்திரன் மட்டுமே...

திருமணத்தை எதிர்த்து சரத்பாபுவும் , ராஜேசும் சண்டை இடுவது , பிறகு ராதிகாவிடம் காரியம் ஆக வேண்டும் என்பதற்காக இருவரும் ஒன்று சேர்ந்து அவர் காலில் விழுவது என்று அன்பை , அதன் வலிமையை , பெண்மையை. அதன் அழகை பீடத்தில் ஏற்றி இருக்கிறார் மகேந்திரன்..

ஒப்புக்கொள்கிறேன் நண்பர்களே..மெட்டி படம் பார்க்காமல் ஒருவன் வாழ்க்கை முழுமை அடையாது

Tuesday, April 2, 2019

ரஜினியை உருவாக்கிய , எம்ஜிஆரால் உருவாகிய மகேந்திரன்


என்ன படம் எடுக்கிறீர்கள்.. கொஞ்சம் கூட யதார்த்தமே இல்லையே என எம் ஜி ஆர் முகத்துக்கு நேராகவே விமர்சித்தவர் இயக்குனர் மகேந்திரன்

சரி.. நீதான் நல்ல படம் எடுத்துக்காட்டு பார்க்கலாம் என அவரை சென்னைக்கு வரவழைத்து சினிமாவுக்கு முயற்சி செய்ய சொன்னார் எம் ஜி ஆர்

அவரும் சென்னை வந்து விட்டார்..

ஒரு நாள் அவருடன் பேசியபோதுதான் , நண்பர்கள் அறையில் தங்குவதையும் அவர்கள் தயவில் சாப்பிடுவதையும் அறிந்தார் எம் ஜி ஆர்

வசதியான பையன் என நினைத்ததால் அவரது செலவுகளைப் பற்றி யோசிக்காமல் வரவழைத்து விட்டோமே என நினைத்த எம் ஜி ஆர் , நான் ஒரு பாவி, நான் ஒரு பாவி என கண்கலங்க தன் தலையில் அடித்துக்கொண்டார். அன்று முதல் மகேந்திரனுக்கு மாதம் தோறும் உதவி தொகை வழங்கி வந்தார்

முள்ளும் மலரும் படம் பார்த்த எம் ஜி ஆர் , என்னிடம் சவால் விட்ட மாதிரி நல்ல படம் எடுத்து விட்டீர்கள்.. வார்த்தை வராமல் தவிக்கிறேன்,, பிறர் பாராட்டுகளை படித்தும் கேட்டும் மனம் பூரித்துப்போய் இருக்கிறது.. பிறர் சொல்வது என்ன.. நான் சொல்கிறேன்,,, முள்ளும் மலரும் படம் இந்திய சினிமாவின் ஒரு திருப்பு முனை எனலாம்

கடைசி காட்சியில் ரஜினி சொல்வாரே... இப்பவும் உங்களை எனக்கு பிடிக்கல சார்.. ஆனா அவளுக்கு பிடிச்சு இருக்கு.. 

அந்த காட்சியில் எழுந்து நின்று கைதட்டினேன்..

இப்படி மகேந்திரனை வளர்த்து விட்டு ரசித்தவர் எம் ஜி ஆர்

சிவாஜி மட்டும் என்ன,.. மகேந்திரனை கொண்டாடியவர் அவர்

தங்கப்பதக்கம் படத்தில் சிவாஜியின் மனைவி இறந்து விடுகிறார்.. அந்த காட்சிக்கு வசனம் எழுத வேண்டிய மகேந்திரனை அழைத்தார் சிவாஜி

தம்பி.. இது முக்கியமான காட்சி,, வசனங்கள் அருமையாக இருக்க வேண்டும்.. நன்கு யோசித்து விரிவாக எழுது என்றார்

மகேந்திரனும் யோசித்து எழுதினார்’’

அடுத்த நாள் அவர் காட்டிய பேப்பரை பார்த்த சிவாஜிக்கு அதிர்ச்சி.

என்னப்பா இது ,, பேப்பரில் எதுவுமே இல்லையே? என்றார்

இந்த காட்சிக்கு வசனமே தேவையில்லை சார்.. உங்க முகபாவமும் நடிப்புமே போதும்.. உங்கள் மனைவியை பார்த்ததும் பழைய நினைவுகளால் துடிக்கிறீர்கள்.. கதறுகிறீர்கள்..அதுபோதும் என்றார் மகேந்திரன்’

புதியவன் என நினைக்காமல் அவர் சொன்னதை மதித்து ஏற்றார் நடிகர் திலகம்.. அந்த காட்சி வெகு சிறப்பாக அமைந்தது


ரஜினியை தன் இரண்டாம் தாய் என குறிப்பிடுபவர் மகேந்திரன்.. மகேந்திரன் தன்னை தனக்கே அடையாளம் காட்டியவர் என்பவர் ரஜினி

என்னப்பா..உனக்கு பிடித்த இயக்குனர் மகேந்திரன் என சொல்லி இருக்கிறாயே..என்னை எல்லாம் பிடிக்காதா என பாலச்சந்தரே விளையாட்டாக கேட்கும் அளவுக்கு மகேந்திரனை போற்றியவர் ரஜினி

 நானெல்லாம் மாதம் ஒரு முறையாவது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மகேந்திரன் குறித்து பேசுபவன் ,, எழுதுபவன்

ஓர் உதாரணம்.. மகேந்திரன் பழைய பதிவு


அந்த வகையில் மகேந்திரன் மறைவு பெரிய துக்கம் ..

ஆனாலும் பேட்ட எனும் மெகா ஹிட படத்தில் நடித்து தன் நண்பனின் பெரிய வெற்றியில் கலந்து கொண்ட மகிழ்ச்சியுடன் விடை பெறுகிறார் என்பதில் சின்ன ஆறுதல்

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா