Thursday, December 5, 2013

உலகை கலக்கிய தமிழனின் உன்னதமான புத்தகம் - புத்தககண்காட்சியில் என் சிபாரிசு


நம் அருகில் இருப்பதன் அருமை நமக்கு தெரிவதே இல்லை என்பதற்கு சிறந்த உதாரணம் உலகம் சுற்றிய தமிழன் ஏகே செட்டியார் அவர்கள்..அந்த காலத்திலேயே உலகம் எங்கும் சுற்றி இருக்கிறார் என்பது மட்டும் அன்று..அதையெல்லாம் எழுதி வைத்து அரிய ஆவணங்கள் ஆக்கி இருக்கிறார்.

ஆனால் அவருக்கு ஏன் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை..ஏன் யாரும் அவரைப்பற்றி பேசுவதில்லை ( சாரு மட்டும் ஓர் அழகான கட்டுரை எழுதி இருந்தார் ) என்பது அவரது நூல்களை படிக்கும்போதுதான் தெரிந்தது..

அவர் தன்னை காந்தியவாதியாக காட்டிக்கொண்டது முதல் காரணம்.. நம் ஊரில் அறிவு ஜீவிகளுக்கு அடிப்படை தகுதியே காந்தி எதிர்ப்புதானே...

இன்னொரு காரணம் செட்டியார் என்ற பெயர்... நம் ஊரில் என்னதான் சாதிப்பற்று / சாதி வெறி இருந்தாலும் வெளிப்படையாக ஜாதி என ஒன்று இல்லாதது போல காட்டிக்கொள்வது மரபு... எனவே செட்டியார் என்ற பெயர் , ஒரு விலகலை ஏற்படுத்தி இருக்கக்கூடும்..

அடுத்த காரணம் சாதாரணமான ஒரு லாஜிக்...பழைய கால எழுத்தாளர் நடை கடினமாக இருக்குமோ, புரியாதோ என அச்சம்... நானெல்லாம் இந்த பயத்தால்தான் இத்தனை நாள் படிக்கவில்லை..

தற்செயலாகத்தான் அண்ணலின் அடிச்சுவட்டில் என்ற புத்தகம் படிக்க நேர்ந்தது.. நண்பர் ஒருவர் இதை கொடுத்து படிக்க சொன்னார்.

அதை படிக்க படிக்கத்தான் அது ஒரு தங்கச்சுரங்கம் என்பது புரிந்தது... காந்தியைப்பற்றி டாக்குமெண்ட்ரி படம் எடுக்க முனைந்த தமிழர்..அதை எப்படி செய்து முடித்தார் என்பதுதான் இந்த புத்தகம்..

இதில் அவருக்கு கிடைக்கும் அனுபவங்கள் , அமெரிக்க ஜனாதிபதி முதல் , இந்திய ஜனாதிபதிவரை வியந்து பார்த்த வரலாற்று நிகழ்வு , எளிய மனிதர்களின் பெருந்தன்மை..பெரிய மனிதர்களின் சின்னதனம் , பயண அனுபவங்கள், சினிமா அனுபவங்கள் என ஒன்று விடாமல் அனைத்தையும் பதிவு செய்து இருக்கிறார்..

இந்தியா சுதந்திரம் பெற்ற வரலாற்று நிகழ்வின்போது , பெரிய பெரிய விஅய்பி கள் பங்கேற்கும் வகையில் இவரும் ஒரு வரலாற்று பணி ஆற்றி இருக்கிறார்.. வேறு மானிலத்தவர் யாரேனும் செய்து இருந்தால் , அது பாட புத்தகங்களில் இடம் பெற்று இருக்க கூடும்.. தமிழன் என்பதால் , அவர் செய்தது நமக்கே தெரியவில்லை..

இப்போது மொபைலில்கூட வீடியோ எடுக்க முடிகிறது..அன்றைய நிலையில் வீடியோ எடுப்பது அரிது...ஆனாலும் காந்தி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் படம் எடுத்து இருப்பார்கள்..அப்படி எடுக்கப்பட்ட அபூர்வ படத்துண்டுகளை உலகம் எங்கும் சுற்றி அலைந்து சேகரித்து தொகுத்து படமாக்க்கி இருக்கிறார் செட்டியார்.. தொகுத்தது மட்டும் அன்றி , இதற்காக சில காட்சிகளை ஷூட் செய்தும் சேர்த்து இருக்கிறார்...ஷூட் செய்வது என்றால் நடிகர்களை வைத்து நடிக்க சொல்வது அல்ல... உண்மையான நிகழ்ச்சிகள், தலைவர்களின் பேட்டி போன்றவற்றை ஷூட் எடுப்பது.

இவை எல்லாவற்றையும் சுவையான நடையில் எழுதியும் வைத்து இருக்கிறார் என்பதுதான் இதில் இன்னொரு சிறப்பு..

எத்தனை எத்தனை சம்பவங்கள்..ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறுகதை..

காந்தியின் சத்திய சோதனையில் வரும் பலரை நேரில் பார்த்து பேட்டி எடுத்தல் , last night we sang முக்தி நெறி என காந்தி தமிழில் எழுதி இருப்பதை பார்த்து வியத்தல், முசோலியின் ஃபாசிசப்படை காந்திக்கு அணி வகுப்பு மரியாதை கொடுக்கும் அபூர்வ பட  துண்டுகள் கிடைத்தல், அமெரிக்காவுக்கு காந்தி போனதே இல்லை என்றாலும் , அங்கு அவருக்கு இருக்கும் செல்வாக்கு , அங்கு இருக்கும் ஆவணங்கள் , எங்கோ கஞ்சிக்கு லாட்டரி அடித்துகொண்டு இருக்கும் ஆப்ரிக்காவில்கூட காந்தி பற்றிய ஆவணங்கள் கிடைத்தல் என சொல்லிக்கொண்டே போகலாம்..

அந்த காலத்தில் நம் தமிழ் நாட்டில் இருக்கும் ஓர் ஊரைப்பற்றி வாஷிங்டன் டைம்ஸ் இதழில் ஒரு தலையங்கம் வந்த ஆச்சர்யத்தையும் பதிவு செய்கிறார்..

அங்கு salem என்ற ஓர் ஊர் இருக்கிறது...அங்கு மது விலக்கு கொண்டு வர முயன்று , முடியாமல் போய் விட்டது...அதற்கு அவர்கள் எழுதினார்களாம்.. நம் நாட்டின் SALEM  நகரில் மது விலக்கு தோற்று விட்டது..ஆனால் இந்தியாவில் தமிழத்தில் இருக்கும் SALEM  நகரில் காங்கிரஸ் அரசு வெற்றிகரமாக மதுவிலக்கை அமுல் செய்துள்ளது என எழுதினார்களாம்..

 நோபல் பரிசு வென்ற ரொமெய்ன் ரோலந்த் என்பவர் சிறந்த காந்தியவாதி.ஃபிரஞ்ச்காரர்,,பல புத்தகங்கள் மூலம் காந்தியின் பெருமையை உலகறியச்செய்வதவர்,,,இந்த படத்துக்காக அவரை பேச சொன்னபோது மறுத்து விட்டாராம்..காரணம்? கேமரா கூச்சம்..பிறகு பேசினாராம்.. ஆனால் பெர்னாட்ஷாவிடம் பேட்டி எடுக்காதீர்கள் என்றாராம்...ஏன்?
அவர் பாராட்டி பேசினாலும் பேசுவார்... மூடு சரி இல்லை என்றால் கிண்டலாக ஏதேனும் சொல்வார்.. அதை கட் செய்தால் , எல்லா பத்திரிக்கைகளிலும் அறிக்கை வெளியிடுவார்... 

இதை பிறகு டாக்டர் ராதா கிருஷ்ணன் ஆமோதித்தாராம்..

“ காந்தியின் 70 ஆவது பிறந்த நாளுக்கு , வாழ்த்து செய்தி அனுப்புமாறு பெர்னாட்ஷாவை கேட்டேன்.. அவர் பதில் அனுப்பினார்... என்ன தெரியுமா? நான் ஏன் காந்தியின் 70ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்து செய்தி அனுப்ப வேண்டும்.. என் 70 ஆவது பிறந்த நாளுக்கு அவர் அனுப்பினாரா என்ன ? “
இது போல பல சுவையான தகவல்கள்..

ராட்டையில் நூல் நூற்கும் போஸ் கொடுங்கள் ... ஷூட் செய்து கொள்கிறோம் என இவர் கேட்க , நேரு மறுத்து விட்டாராம்... ஷூட் செய்வதற்காக நூற்க முடியாது.. நான் நூற்கும்போது ஷூட் செய்து கொள்ளுங்கள்...

நேருவுக்கு நூற்பதில் நம்பிக்கை இல்ல, திறனும் இல்லை என்றாலும் , காந்தி மீதான மரியாதை காரணமாக தினமும் நூற்றதை பதிவு செய்கிறார்..  நேரு நூற்பதை வைத்து வேட்டி செய்ய முடியாது..ஜமுக்காளம் வேண்டுமானால் செய்யலாம் என கேலியாக சொல்கிறார்.. நேரு நூற்கையில் அவ்வபோது நூல் அறுந்து விடும்..அதையும் விடாமல் எடுக்கவே நேரு டென்ஷனாகி முறைக்க. அதையும் ஷூட் செய்தார்களாம்... அதை படமாக பார்த்த ரசிகர்களுக்கு அது காமடியாக இருந்ததாம்..

அழகாக சின்ன வார்த்தைகளாக, எளிமையான தமிழில் , சின்ன பத்திகளில் இப்படி சுவையாக சொல்லிக்கொண்டே செல்கிறார்... நல்லதோ கெட்டதோ , ஒரு சம்பவம் சொல்லி முடித்தவுடன் வாழ்க நீ எம்மான் என சொல்லி நிறைவு செய்வது ஒரு வித ஆழம் தருகிறது..
அவரது தமிழ் சொற்கள் ரசிக்க வைக்கின்றன ...உதாரணம்  - முக்காலி (Tripod )  தலைப்பு ஏடு (Title Card)

அந்த காலத்தில்யே உலகம் சுற்றி இருக்கிறார் என்றால் , இந்த காந்திய பக்திதான் அதற்கு காரணமாக இருந்து இருக்கிறது..இதற்கு தகவல் சேகரிக்கும்பொருட்டுதான் சுற்ற ஆரம்பித்து இருக்கிறார். அதன் பின் , இந்த பணிக்கு அப்பாற்பட்டு வேறு சில நாடுகளுக்கு சென்று இருக்கிறார்.அவற்றை எழுதியும் இருக்கிறார். அவை இன்று முக்கிய ஆவணங்களாக திக்ழகின்றன..

ஆங்காங்கு காந்தி மீதான தன் அபிமானத்தை பதிவு செய்கிறார்.

காந்தி முன் வைத்தது Quit India  என்ற கோஷத்தை..அதை தமிழர்கள் தமக்கே உரிய மிகை உணர்ச்சியால் வெள்ளையனே வெளியேறு என மாற்றி விட்டார்கள்..காந்தி இப்படியா சொன்னார் என வருத்தப்படுகிறார்.

இன்னொரு சம்பவம்...

காந்தி படம் எடுத்து முடித்தததும் அது பத்திரிக்கையாளர்களுக்கு திரையிடப்பட்டது..அதை பலரும் பார்த்து கட்டுரைகள் எழுதினர். ஒரு பத்திரிக்கையில் இப்படி விளம்பரம் வந்ததாம்
Mahatma is becoming film star  அதிலும் ஒரு வார்த்தை லேசாக மறைந்த மாதிரி வெளியிட்டார்களாம்..Mahatma is becoming film star

அவர்கள் ஒரு விளம்பரத்துக்காக செய்து இருக்க கூடும்..ஆனால் செட்டியார் கோபித்துக்கொண்டு அவர்கள் உறவையே துண்டித்து விட்டார்.

சேரும் இடம் மட்டும் முக்கியம் இல்லை... அதை அடையும் வழியும் முக்கியம் என்பது முக்கியமான காந்தீய நெறி..அதை விட்டுக்கொடுக்காமல் , குறைந்த பட்சம் இந்த படம் முடியும் வரையுமாவது , வாழ்ந்து இருக்கிறார் செட்டியார்.

படத்தை அமெரிக்காவில் திரையிட்டால் , நல்ல காசு கிடைக்கும் என்ற நிலை..ஆனால் ஃபில்ம்களை எடுத்து செல்ல அரசு அனுமதிக்கவில்லை ( அப்போதைய பிரிட்டிஷ் அரசு ).. இவருக்கோ காசு அவசியதேவை...சட்ட விரோதமாக அதை அமெரிக்காவுக்கு கடத்தி சென்று சேர்க்க உதவ சிலர் முன் வருகிறார்கள்.. காந்திய நெறிகளை மனதில் வைத்து மறுத்து விடுகிறார்... ஒரு வேளை அப்படி அனுப்பி  அவர்கள் ஏமாற்றி இருந்தாலோ அல்லது விபத்துக்கு உள்ளாகி இருந்தாலோ எல்லாமே வீணாகி இருக்கும்..
அதேபோல பயணங்களில் குறைந்த பட்ச வசதிகளுடன் வாழும் காந்திய வாழ்க்கையே அவருக்கு கை கொடுத்து இருக்கிறது...

எந்த பதவியிலும் இல்லாத காந்திக்கு அன்று உலகம் முழுக்க இருந்த செல்வாக்கை ஆங்காங்கு குறிப்பிடுகிறார்/
இத்தாலி அமைச்சர் காண்ட்ரி என்பவர் அமெரிக்கா சென்றாராம். அவரை வரவேற்க வரலாறு காணாத கூட்டம்... திகைத்து போனாராம்..பிறகுதான் தெரிந்தது.. காந்தி வருகிறார் என மக்கள் நினைத்து விட்டார்களாம்..இத்தனைக்கும் காந்தி அமெரிக்கா சென்றதே இல்லை..அவர் அங்கு வருவதாக இருந்தால் , அவரது சமூக சேவைக்கு பெருமளவு நிதி தருவதாக சொல்லியும் அவர் போகவில்லை./

இந்த படத்தை ஹாலிவுட்டில் எடுத்து அங்கு திரையிட்ட போது அமெரிக்க ஜனாதிபதி , அவர் மனைவி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் அதை பார்வையிட்டனர் என்ற வரலாற்று தகவல் எத்தனை பேருக்கு தெரியும்..அது முக்கியமான செய்தியாக அன்று இருந்தது.

அதேபோல , இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முதல் நாள் இரவு டெல்லியில் இந்த படம் திரையிடப்பட்டது... ராஜேந்திர பிரசாத் போன்ற தலைவர்கள் பார்வையிட்டனர். இந்த படம் ஹிந்தியில் எடுக்கப்படவில்லை..அப்படி இருந்தும் அங்கு தலைவர்கள் உட்பட பலர் அதை ஆர்வமாக பார்த்தனர் ..

ஒரு தமிழ் படம் டெல்லியில் , ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாளில் திரையிடப்பட்டு , அதை தலைவர்கள் பார்த்தனர் என்ற வரலாற்று தகவல் நமக்கு தெரியவில்லை...இதை வேறு யாராவது செய்து இருந்தால் என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை..

ராஜாஜி இதற்கு முதலில் ஆதரவு கொடுக்கவில்லை... கேலி செய்து புண்படுத்தினார் என்பதையும் கடைசியில் பாராட்டினார் என்பதையும் சொல்கிறார்..

ஆனந்த விகடனில் இருந்த கல்கி அதை விட்டு விலக , இந்த படமும் ஒரு காரணமாக இருந்து இருக்கிறது..

எஸ் எஸ் வாசனிடம் இந்த படத்துக்காக உதவி கேட்டார் செட்டியார்.. உதவ தயார் ..ஆனால் படத்தை தான் சொல்லும்படி எடுக்க வேண்டும் என வாசன் சொன்னதை ஏற்க முடியாமல் வந்து விடுகிறார்..இதில் வாசனுக்கு கோபம்.
படம் வெளிவந்தபோது , இதற்கு ஒரு நடு நிலையான விமர்சனம் எழுதி, பிரசுரிக்க விரும்பும் கல்கியை வாசன் தடுத்து விடுகிறார்.. ஒரு மாதம் கழித்தே விமர்சனம் வந்தது..

இப்படி சில பெரிய மனிதர்களின் சின்னத்தனதை ஆங்காங்கு சுட்டிக்காட்டும் அவர் , எளிய மனிதர்களின் பெரிய மனதையும் சுட்டிக்காட்டுகிறார்.

படத்தின் ஃபில்ம் ரோலுடன் ரயில்வே ஸ்டேஷன் வந்து இறங்குகிறார்...அதிகாரி அதை சோதனை செய்யவேண்டும் என்கிறார்... போர்ட்டர் காசு கேட்டு பேரம் பேசுகிறான்... அதில் இருப்பது காந்தி படம் என சொன்னதும் அதிகாரி மென்மையாகி , அதை எடுத்து செல்ல அனுமதிக்கிறார்... அந்த போர்ட்டர் காரில் அதை ஏற்றி விட்டு , காசு வாங்க மறுத்து விடுகிறான்..

இதை இப்படி  நெகிழ்ச்சியாக சொல்லி முடிக்கிறார்.

“ காந்தி படம் எடுத்து விட்டோம் என ஒரு கர்வம் இருந்தது..ஆனால் தனக்குரிய  நியாயமான கூலியை , எவ்வளவு சொல்லியும் ஏற்க மறுத்த , அந்த போர்ட்டர் முன்பு என் கர்வம் அழிந்தது”

காந்தீயத்தின் சக்தியை இதை விட அழகாக சொல்ல முடியாது...

ஒரு காந்தியவாதியான  நெல்சன் மண்டேலாவுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்..

கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்....
அண்ணலின் அடிச்சுவட்டில் - எழுதியவர் ஏகே செட்டியார்... காலச்சுவடு பதிப்பகம்

புத்தக கண்காட்சியில் இதை கண்டிப்பாக வாங்கி படியுங்கள்..வாசிப்பு இன்பம், வரலாற்று தகவல்கள் என ஒரே அமர்வில் படித்து வைக்க விடும்...





***********************************************************
டெயில் பீஸ்
கஷ்டப்பட்டு எடுத்த படத்தை பிரிட்டிஷ் அரசு பறிமுதல் செய்து விடுமோ என பயந்து , சில காப்பிகள் எடுத்து , நண்பர்களிடம் கொடுத்து ஒளித்து வைக்க சொல்கிறார் செட்டியார்..ஒளித்த இடத்தை தன்னிடமேகூட சொல்ல வேண்டாம் என்கிறார்... அதன்பின் சுதந்திரம் பெற்ற பின்புதான், ஒளித்த இடம் இவருக்கே தெரியும்...இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு காப்பாற்றிய இந்த வரலாற்று பொக்கிஷத்தை நம் சுதந்திர நாடு காப்பாற்றி வைக்கவில்லை..எங்கோ தொலைந்து விட்டது... அதன் பின் கஷ்டப்பட்டு தேடி ஒரே ஒரு காப்பியை மீட்டனர்.. ஹாலிவுட்டில் எடுத்தார் அல்லவா..அதுதான் கிடைத்து இருக்கிறது... தமிழ் வெர்ஷன் கொஞ்சம்தான் கிடைத்து இருக்கிறது... 50,000 அடி ஃபில்ம்களை சேகரித்து , அதில் 12,000 அடியை மட்டுமே படத்தில் பயன்படுத்தினார்...இந்த 12,000 அடி படமே கிடைக்காத நிலையில் அந்த மீதி ஃப்ல்ம்களை நினைத்து வருந்த மட்டுமே முடியும்...



Wednesday, December 4, 2013

ஜன்னல் ஓரம் - ஜாலியான பயணம்

இயக்குனர் கரு.பழனியப்பன் படங்களை எனக்கு பிடிக்கும்..  சுயமான சிந்தனை , வக்கிரம் இல்லாத காட்சிகள் , ரசனையான வசனங்கள், இயல்பான ஹாஸ்யம் என அவர் முந்தைய படங்களை ரசித்து இருக்கிறேன். ஆனாலும் க்ளிமேக்ஸில் கொஞ்சம் தடுமாறுகிறாரோ என எல்லா படங்களிலுமே நினைத்து இருக்கிறேன்.

மேட்ச்சில் சென்சுரி அடிப்பது பெரிய விஷ்யம்தான்.. ஆனால் அந்த மேட்ச்சை ஜெயிப்பது அதை விட பெரிது... அவரது சில படங்களில் செஞ்சுரி அடித்தும் தோல்வியுற்ற உணர்வை அடைந்து இருக்கிறேன்..

தன்னை சுயபரிசோதனை செய்து கொண்டு ,குறைகளை நீக்கி , பெரிய சூப்பர் ஹிட் படமாக ஜன்னல் ஓரம் படத்தை கொடுத்து இருப்பார் என நினைத்து ஆவலுடன் படத்துக்கு சென்றேன்.


வித்தியாசமான கதைக்களன் .. பார்த்திபனும், விமலும் ட்ரைவர் கண்டக்டர்கள்..கிராம மக்களுடனும் , பயணிகளிடம் கலகலப்பாக பழகுகிறார்கள்...விமலுக்கு ஏற்படும் காதல் , பார்த்திபனின் கலகலப்பான கேரக்டருக்கும் பின் இருக்கும் மெல்லிய சோகம், ராஜேசின் மகன், ராஜேஷ் வளர்க்கும் பெண், அவளை மானசீகமாக விரும்பும் சாமி, அவளை பெண் கேட்கும் ஜஸ்டின், கல்யாணியின் பிசினஸ் , ராஜேஷின் மகன் மரணத்துக்கு விமல் குற்றம் சாட்டப்படுவது , ஜீப் பயணம், போலீஸ்காரரின் வன்மம், பேருந்தை எதிரியாக நினைக்கும் ஊர் தலைவர் என ஏராளமான சம்பவங்கள்..

பஸ் பயணத்தின் போது , ஜன்னல் வழியே தோன்றி மறையும் காட்சிகள் போல பல சம்பவங்கள் தோன்றி மறைவது இயல்பாக இருக்கிறது...விமலின் காதல் , அதற்கு எதிர்ப்பு, பிறகு ஒன்று சேர்தல் என்ற நேர்க்கோட்டில் இல்லாமல் , பல்வேறு சம்பவங்களில் அந்த காதலும் ஒன்று என்ற உணர்வை ஏற்படுத்தி இருப்பது சூப்பர்..

இதில் ஏதாவது ஒரு சம்பவத்தை மட்டுமே வைத்து தனி நாவலாக எழுதலாம்..உதாரணமாக ராஜேஷ் அந்த பெண்ணை ஏன் வளர்க்கிறார் அல்லது பார்த்திபன் தன் தங்கைக்கு எப்படி மணம் முடித்தார் என்பதையெல்லாம் தனியாகவே சொல்லலாம்..ஆனால் படத்தின் நோக்கம் அது அல்ல என இயக்குனர்  தெளிவாக இருக்கிறார்..

இடைவேளை வரை கேலியும் கிண்டலுமாக படம் ஜாலியாக  பரபரப்பாக செல்கிறது...இது பெரும்பங்கு பாராட்டு பார்த்திபனையே சேரும்..

என்ன ஆச்சி?

அதிமுக ஆட்சி...

ஊரில் பாதிப்பேருக்கு சிவாஜி செத்ததே தெரியாது..

மீதீப்பேருக்கு?

எம் ஜி ஆர் செத்தது தெரியாது


வரும்போது இந்திய பிரதம்ர் மாதிரி அமைதியா இருந்த,,இப்ப தமிழக முதல்வர் மாதிரி இந்த போடு போடுற...

கிளாஸ் எடுப்பா..

(கண் கண்ணாடியை கொடுத்து விட்டு ) இதில் எப்படி சரக்கு அடிப்பான்?

டூயட் பாடுவது மட்டுமே நடிப்பு , அது மட்டுமே ஹீரோயிசம் என்ற தவறான கருத்து தமிழ் நாட்டில் இருக்கிறது... இந்த படத்தில் வயதுக்கேற்ற வேடம் ஏற்று , அதில் கலக்கி இருக்கும் பார்த்திபன் நிச்சயம் பாராட்டுக்கு உரியவர்.. இதுவும் ஹீரோயிசம்தான்... கலகலப்பாக இருந்தாலும் பொறுப்புணர்வு , தன் சகாவை காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்பு என நல்ல கேரக்டர்.

விமல் இந்த அளவுக்கு நடித்து பார்த்தது இல்லை... சூப்பர்.. நகைச்சுவை , காதல் என கலக்கி இருக்கிறார்... லெட்டரை கல்யாணி பார்த்தால் பிரச்சனை வரும் என பதறுவதிலும் , கோபத்தில் அறைவதிலும் புதிய தோற்றம் எடுத்து இருக்கிறார்..
ஹீரோயின் அளவான கிளாமர் ..சூப்பர்... அதேபோல ராஜேஷின் நடிப்பு , தெளிவான வசன உச்சரிப்பு என எப்போதும் போல சூப்பர்.

வித்யாசாகரின் மெலடியான இசை யுகபாரதியின் வரிகளுடன் வெற்றிகரமாக இணைந்து இருக்கிறது...மிகவும் ரசித்தேன்..பின்னணி இசையும் அருமை

இவ்வளவு பிளஸ்கள் இருந்தாலும் வின்னிங் ஷாட் அடிக்கையில் விக்கட்டை ப்றிகொடுத்து விட்டார் இயக்குனர்...

மெட்டி என்ற மகேந்திரன் படம் 120 நிமிடங்கள் என வைத்துக்கொள்ளுங்கள்... 110 ஆவது நிமிடத்தில்கூட கிளைமேக்ஸ் என்ன என யூகிக்க முடியவில்லை.. 110ஆவது நிமிடத்தில் ஒரு அருமையான பாடல் வருகிறது... 116 ஆவது நிமிடத்தில் கிளைமேக்சை நோக்கி படம் நகர்கிறது... 120 ஆவது நிமிடத்தில் படம் முடிந்து விடுகிறது..

இந்த படம் 120 நிமிடங்கள் என வைத்துக்கொள்ளுங்கள்..( ஓர் உதாரணத்துக்கு )  குற்றவாளியை கண்டுபிடிப்பதுதான் க்ளைமேக்ஸ் என நமக்கு தெரிந்து , படம் கிளைமேக்சை நோக்கி , 80 ஆவது நிமிடத்தில் நகர ஆரம்பிக்கிறது,...100 ஆவது நிமிடத்தில் குற்றவாளி யார் என தெரிந்து விடுகிறது..அத்ற்கு அப்புறமும் 20 நிமிடங்கள் படம் ஓடுவது சோர்வை ஏற்படுத்துவதை திரையரங்கில் உணர முடிந்தது..

மற்றபடி காட்சிகள் சுருக்கமாக தெளிவாக இருக்கின்றன...குற்றம் ஏன் நடந்தது,,..எப்படி நடந்தது என்பதை ஏற்கனவே தெரிந்த நிகழ்ச்சிகளை வேறொரு கோணத்தில் சொல்வது அருமை..

இன்னும் கொஞ்சம் செதுக்கி இ

ருந்தால் சூப்பர் ஹிட் ஆகி இருக்கும்..

ஆனாலும் அழகான ஒளிப்பதிவு , இனிமையான இசை , வக்கிரமற்ற நகைச்சுவை , இயல்பான கதை , தேர்ந்த நடிப்பு போன்றவற்றுக்காக ஒரு முறை பார்க்க வேண்டிய படம் இது... முறைப்படி அனுமதி வாங்கி எடுக்கப்பட்ட படம்...எனவே இதை திரை அரங்குகளில் பார்ப்பதே முறை.. நல்ல ஒலி வசதி உள்ள திரையரங்கில் பார்த்தால்  நன்றாக ரசிக்கலாம்...

ஜன்னல் ஓரம் - ஒரு தரம் 





Tuesday, December 3, 2013

காதல் பித்தேறியவனின் காலம் கடந்த பாடல்- நந்தா நீ என் நிலா !!!


மாற்று சினிமா , உலக சினிமா என்றெல்லாம் பேசுகிறோம்.. அதே போல உலக இலக்கியம், செவ்வியல் படைப்பு என பேசுகிறோம்..ஆனால் இந்த வரையறைகளுக்குள் வராத சில படைப்புகளும் வேறு சில காரணங்களுக்காக நினைவு கூரப்படும்..

மாமனாரின் காம வெறி , புதிய பூக்கள் , மன்மத கலை, சாயாக்கடை சரசு , காமதாகம், பாவம் கொடூரன், அஞ்சரைக்குள்ள வண்டி போன்ற படங்கள் மாற்று படங்கள் அல்ல...ஆயினும் இன்றும் நம் மனதில் நிற்கின்றன என்றால் அதற்கு காரணம்  கில்மா படங்கள் என்ற பிரிவில் சிறந்து விளங்குவதே ஆகும்..

எல்லா படங்களுமே மாற்று சினிமாவாகவோ, மீயதார்த்த அல்லது யதார்த்த படங்களகாவோ இருக்க வேண்டியதில்லை... மாயாஜாலம் , வரலாறு , பொழுது போக்கு , நகைச்சுவை என ஏதாவது ஒரு பிரிவில் நன்றாக இருந்தால்போதும்.. அதேபோல பல்ப் நாவலாக இருந்தாலும்கூட , அந்த பிரிவில் சிறப்பாக இருந்தால் போதும்..

அந்த வகையில் எனக்கு பிடித்த படங்களில் ஒன்று நந்தா என் நிலா..  தமிழின் டாப்10 படங்களை பட்டியல் இட்டால் , கண்டிப்பாக இதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள்..ஆனால் தமிழின் டாப்10 வெகுஜன நாவல் என பட்டியலிட்டால் , கண்டிப்பாக நந்தா என் நிலா நாவலுக்கு இடம் உண்டு.. இதை எழுதியவர் புஷ்பா தங்கதுரை..தினமணிக்கதிரில் தொடராக வந்தது..

விறுவிறுப்பு, கவர்ச்சி , வித்தியாசமான நடை, மறந்தும்கூட யதார்த்தம் பிரதிபலித்துவிடாத கவனம் , கதை எங்கேயோ ஒரு கிரகத்தில் நடப்பது போன்ற பிரமையை உருவாக்குவது , ஏமாந்துபோய் கூட கதையில் லாஜிக் வந்து விடக்கூடாது என எச்சரிக்கையாக இருப்பது , வேறு ஏதோ ஒரு மொழியை தமிழில் பேசுவது போன்ற உணர்வை உருவாக்குவது என தனக்கு என ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டவர் புஷ்பா தங்கத்துரை..

அவரது இந்த ஸ்டைல் பக்காவாக அமைந்த நாவல்தான் , நந்தா என் நிலா..இதை அப்படியே சினிமா ஆக்கி இருக்கிறார்கள்..படத்துக்கு வசனம் இவர்தான்.. இயக்கம் ஜெகனாதன்..

 நந்தா என்ற பெண்ணை உருகி உருகி ஒருவன் காதலிப்பதே கதை,,, காதல்பித்தேறி, காண்பதெல்லாம் தன் காதலி நந்தா போல தோன்றும் தெய்வீக காதல் ( !!! )  நிலையை அடைந்து , இன்னொரு பெண்ணை நந்தா என நினைத்து , அவளுடன் உடல் ரீதியாக எல்லை மீறும் உயர் நிலையை ( ???? !!! ) அடைவதை அருமையாக சொல்லி இருப்பார்...படமும் இந்த பாணியில் கன்னாபின்னாவென ஜாலியாக செல்கிறது..

வழக்கமாக நாவலை காட்சிப்படுத்துவது கஷ்டம்..ஆனால் இதில் நாவலில் இருக்கும் கவர்ச்சியை அப்படியே காட்சிப்படுத்தி விட்டார்கள்...இதற்காகவே படாபட் ஜெயலட்சுமி எண்ணிலடங்கா முறை குனிந்து நிமிர்கிறார்... ஆனால் இன்று குனிந்துதான் கவர்ச்சி காட்ட வேண்டும் என்ற நிலை இல்லை..அப்படி இருந்தாலும் அன்றைய கவர்ச்சிக்கு ஈடு இணை இல்லை..

கிராமத்தில் குடும்பத்துடன் வசிப்பபள் நந்தா.( சுமித்ரா ) திருமணத்தில் ஆர்வம் இல்லை...என்னடா என்று பார்த்தால் ஃபிளாஷ் பேக்..அவள் சென்னைபோனபோது ராஜ் ( விஜயகுமார் ) என்பவனை பார்த்து காதல் கொண்டு இருக்கிறாள்..

அவள் தந்தை இறந்து விடவே, வேலை கிடைத்து சென்னை செல்கிறாள்...வேலை கிடைத்த கம்பெனியின் எம் டி விஜயகுமார்தான்,, ஆச்சர்யம் அடைகிறாள்...தன்னை மறந்து இருப்பானோ என நினைத்து கண்களால் தூது விடுகிறாள்... அவனும் அந்த தூதை ஏற்கிறான்..

இங்கே ஒரு ட்விஸ்ட்... ஒரு கட்டத்தில் இந்த விஜயகுமாரின் பெயர் வசந்த்... தான் காதலித்தவன் வேறு ஆள் என தெரிகிறது... ( வேலையில் சேர்ந்த போதே , எம் டி பெயரை கேட்டு இருந்தால் , அப்போதே அது வேறு ஆள் என தெரிந்து இருக்குமே ... )///

எம் டி தீவிரமாக நந்தாவை காதலித்து , காதல் பித்தேறி பைத்தியமாகவே ஆகி விடுகிறார்... அவளோ ராஜ் என்பவனையே காதலிக்கிறாள்...அவனுக்கு இவள் மேல் ஆர்வம் இல்லை... அவனது தாயும் இவளை விரும்பவில்லை...

எம் டிக்கு நிலாவைப்பார்தாலோ , வேறு பெண்ணை பார்த்தாலோ , நந்தாவாகவே தெரிகின்றன,,அந்த அளவுக்கு காதல் பித்து...இந்த காதல் பித்து உச்சம் அடைந்து , தன் செக்ரட்டரியுடன்  ( படாபட் ஜெயலட்சுமி ) எல்லை மீறி விடுகிறார்..
இப்படி ஒரு சிக்கலுக்கு என்ன தீர்வு என்பதே கதை..

லாஜிக்கோ , திரைமொழியோ, இலக்கியத்தரமோ இல்லாமல் இருந்தாலும் இது கண்டிப்பாக சிறந்த பொழுது போக்கு படம்... நாவல்களில் இருந்து சினிமா ஆக்கப்படங்கள் பெரும்பாலும் உருப்பாடாது...ஆனால் இந்த படம் சிறப்பாக உள்ளது...அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது..

வழக்கமாக ஒரு கதாபாத்திரத்தின் எண்ண ஓட்டத்தை குரல் ஒலி மூலம் உணர்த்துவார்கள்..இதில் சப் டைட்டில்மூலம் எண்ண ஓட்டத்தை சொல்வது வித்தியாசமாக இருந்தது...புஷ்பா தங்கதுரை நாவல் படிப்பது போன்றது இருந்தது..

நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  நாகேஷ் , ரவிச்சந்திரன் . ஸ்ரீகாந்த் போன்ற அன்றைய ஸ்டார்கள்...அவர்களுடன் நம் கமல்ஹாசனும் :)   .. அவர் அன்றே பெரிய ஸ்டார் என ரஜினி ஒரு கூட்டத்தில் பேசினார்..உண்மைதான் போல...கமலுக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்டுகிறார்கள்..

இந்த படம் நினைவுகூரப்படுவது இதில் இருக்கும் இரண்டு பாடல்களுக்காகத்தான்,..இசை வி தட்சணாமூர்த்தி என்ற மேதை...
 நெட் எல்லாம் பரவலாக வந்து ஐந்து ஆண்டுகள்தான் ஆகின்றன... அதற்கு முன் எல்லாம் பாடல்கள் கேட்பது அபூர்வம்...இப்போதுபோல டவுன்லோடு செய்து நினைத்தபோது கேட்க இயலாது....எப்போதாவது ரேடியோவில் ஒலிக்கும்போது , ஆசையாக கேட்டால்தான் உண்டு,,,அது போன்ற பாடல்கள் டீவியில் வர வாய்ப்பில்லை...

ஆக, பாடல்களுக்கு அபூர்வ தன்மை இருந்தது...ஒரு பாடல் என்ன படத்தில் வந்தது என கண்டுபிடிப்பதே சிரமம்.. நெட் பரவலான பின்புதான், ஆன்லைன் விவாதங்கள் மூலம் , இந்த பாடல்கள் குறித்து விபரங்கள் சேகரித்தேன்... அதற்கு உதவிய யாஹூ க்ரூப், ஆர்க்குட் போன்றவை இன்று கிடையாது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது...

இந்த படத்தை பார்த்தே ஆக வேண்டும் என சொல்ல மாட்டேன்,,,ஆனால் முக்கியமான நாவல் ஒன்று படமாக்கப்பட்டு இருக்கிறது என்ற செய்தியும் , அந்த படம் குறித்த சில அடிப்படை செய்திகளும் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு..

படத்தை பார்க்காவிட்டாலும் , இந்த இரு பாடல்களை ரசிக்கத்தவறாதீர்கள்..
நான் அடிக்கடி கேட்கும் பாடல்கள் இவை...

இந்த பாடல்களை படமாக பார்த்து , ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது  , மனதில் உருவாக்கி வைத்து இருக்கும் சித்திரம் அழிந்தி விடக்கூடாது என்பதற்காக இத்தனை ஆண்டுகள் இந்த படத்தை பார்க்கவில்லை... சரி,.,,இதை பார்க்காமல் இறந்து விட்டால் , ஆத்மா சாந்தி அடைவதில் ஏதேனும் பிரச்சனை வந்து விடப்போகிறதே என பயந்து கடைசியில் பார்த்து விட்டேன்... நீங்களும் பாருங்கள்...

நந்தா நீ என் நிலா   ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள்








Monday, December 2, 2013

காட்சிமொழியின் உச்சத்தில் கவிதையாக ஒரு மகேந்திரன் படம்

தமிழ் சினிமாவில் சாதனைகள் பல செய்த மகேந்திரன் சில வருடங்களாக சற்று ஒதுங்கி இருக்கிறார்.. ஆனாலும் அவருக்கு என இருக்கும் ரசிகர் கூட்டம் இன்னும் அப்படியே இருப்பதை கடந்த வாரத்தில் உணர்ந்தேன்.. உயர்ந்த ரசனைகள் கொண்டவர்கள் , படைப்பாளிகள் பலர் மகேந்திரனின் படைப்புகளை அனுபவித்து ரசித்து இருப்பதை உணர முடிந்தது... நான் எழுதும்போது விடுபட்ட தகவல்கள் , பிழைகள் , மாற்று கோணங்கள் என ஃபீட் பேக் கொடுத்து அசத்தி விட்டார்கள்... மகேந்திரன் ரசிகர் கிளப்பில் நான் தான் ஜூனியர் போல.. ஒவ்வொருவரும் அந்த அள்வுக்கு விஷ்யம் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

மெட்டி படம் பார்க்காமல் , உங்கள் அனுபவம் முழுமை அடையாது என நண்பர் காரிகன் உட்பட பலர் சொல்லி வந்தனர்.
கணவன் மனைவி உறவு , கை இல்லாத நிலையிலும் சுய கவுரவத்தை விட்டுக்கொடுக்காதவனின் தங்கை பாசம், ஒரு பெண்ணின் தூய காதலால் நெகிழும் கிரிமினல், நடுத்தர வர்க்கத்தின் பிரச்சனைகள், மனித மனதின் வக்கிரங்கள் , பெண் மனதின் புதிர்கள் என எல்லாவற்றையும் சொல்லி விட்டாரே..இதில் என்ன சொல்லப்போகிறார் என ஒரு வித ஆவலுடன் படம்பார்த்தேன்..

ஆரம்ப காட்சியிலேயே மெட்டி, மெட்டியை மனித மனிதனின் சிறந்த தன்மை , மகிழ்ச்சி போன்றவற்றுடன் இணைத்து நமக்கு அறிமுகம் செய்வது என ஆரம்ப காட்சிகள் கவிதைபோல இருக்கின்றன... இளையராஜாவின் பாடல் இதற்கு பக்கத்துணையாக இருக்கிறது..

தன் இரு மகள்களுடன் ( ராதிகா , வடிவுக்கரசி ) வசிக்கும் தாய் ,  அவர்கள் வீட்டு ஓனர் , எதிர்பாராத விதமாக அவர்களை சந்திக்க நேரும் நாயகன் ( சரத்பாபு )அவர்களுக்கிடையே என்ன உறவு ,  நாயகனின் தந்தை ( செந்தாமரை ) என முக்கிய கேரக்டர்கள் எல்லாம் பதினைந்தே நிமிடத்தில் அறிமுகம் ஆகி விடுவதை திரைக்கதையை கற்க விரும்புபவர்கள் குறித்து வைத்து கொள்ள வேண்டும்..

தன் தந்தையின் போக்கு நாயகனுக்கு பிடிக்கவில்லை..தந்தை ப்யங்கர குடிகாரர்...குறிப்பாக கைக்குழந்தையுடன் தன் சித்தியை ( தந்தையின் இரண்டாம் தாரத்தை ) வீட்டை விட்டு துரத்தியது மனதில் முள்ளாக இருக்கிறது... ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி இன்னோர் ஊருக்கு போய் விடுகிறான்.

அங்கே ஒரு பெண் தன் இரு மகள்களுடன் வசித்து வருகிறாள்.. வீட்டு ஓனர் ஒரு குஜராத்திக்காரர்... தாயும் மகள்களும் ஒருவருக்கு ஒருவர் அன்புடன் இருக்கின்ன்றனர்..அந்த வீட்டுக்கு நாயகன் வீடு தேடி வருகிறான்... கடைசியில் பார்த்தால் ,  அன்று தன் தந்தையால் துறத்தப்பட்ட சித்திதான் இந்த பெண்...அந்த இரு மகள்களும் தன் தங்கைகள் என உணர்கிறான்..

இந்த இடத்தில் இடவேளை என நினைப்பீர்கள்...அதுதான் இல்லை...இது எல்லாம் நடப்பது பத்தே நிமிடங்களில் !!
எல்லாம் காட்சிபூர்வமாக , வசனங்கள் குறைவாக வைத்து சொல்லப்படுவதால் , இவ்வளவு சுருக்கமாக ஆனால் தெளிவாக ஆழமாக சொல்ல முடிகிறது..

அந்த பெண் துரத்தப்படும்போதே , வயிற்றில் குழந்தையுடன் வந்தவள்..ஆனால் அவ்ள் கண்வன் உட்பட எல்லோருமே அந்த இரண்டாவது மகளை அந்த வீட்டு ஓனருக்கு பிறந்தவள் என தவறாக பேசுகிறார்கள்...

அந்த வீட்டு ஓனர் கொஞ்ச நேரம் வந்தாலும் அவரது மேன்மை நமக்கு புரிந்து விடுகிறது... கல்யாண புரோக்கராக வரும் வெண்ணிற ஆடை மூர்த்தி போன்ற சிறிய கேரக்டர்களும் உயிர்ப்புடன் இருப்பது குறிப்பிடத்தக்கது...அவருக்கு ஆறு மகள்கள்...அவர்களில் ஒருவரை நாயகன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்... ஆனால் , அந்த மகள்கள் பாடும் பாசப்பாடல்களோ. சரத்பாபுவுக்கும் அவர்க்ளுக்கும் டுயட்டோ கிடையாது,,இன்னும் சொல்லப்போனால் , அவர்கள் நேரடியாக காட்டபடுவதே இல்லை...அவர்கள் இருப்பு மட்டும் குறிப்பால் உணர்த்தப்படுகிறது... இப்படி தேவையற்ற காட்சிகள் எதுவுமே இல்லை..

அந்த தாய் இறந்து விடுகிறாள்..மீண்டும் அந்த வீட்டில் மெட்டி ஒலி சத்தம் கேட்க வேண்டும்...சந்தோஷம் திரும்பவேண்டும் , என கூடப்பிறக்காத தங்கைகளுக்காக அண்ணன் பாடுபடுவதே கதை...அன்பிற் சிறந்த தவம் இல்லை..அன்புக்கு அழிவும் இல்லை என்பதை சொல்லி இருக்கிறார்..

அன்பு என்றால் பாலுணர்வு என்ற புரிதலில் இருக்கும் தமிழ் சினிமாவில் அண்ணன் தங்கை அன்பு , அவர்களுக்கிடையே ஓர் இனிமையான பாடல் என ஒரு வித்தியாசமான அன்பை காட்டி இருக்கிறார் மகேந்திரன்...

மை சன்,என்னை அடிக்காதீங்க மை சன் என அலப்பரை செய்யும் லட்டான கேரக்டர் செந்தாமரைக்கு... தூள் கிளப்பி இருக்கிறார்...

படத்தில் ஒரு காட்சி.... தன் தங்கை யாரோ ஒருவனை காதலிப்பதாக சொல்கிறாள்..ஹீரோ கேட்கிறான் “ அவன் என்ன ஜாதி ? “ .... ஒரு ஹீரோ இப்படி ஒரு வசனம் பேசி எந்த படத்திலும் பார்த்ததில்லை... ஜாதி என ஒன்றே நம் சமூகத்தில் இல்லாதது போலவும் , வில்லன்கள் மட்டுமே ஜாதி பற்றி பேசுவது போலவும் நம் ஆட்கள் க்தை சொல்வார்கள்.. ஜாதி வித்தியாசம் பார்க்காமல் பலர் இருக்கிறார்கள் என்பது உண்மை..ஆனால் ஜாதி என ஒன்று இல்லாதது போல நடிப்பது யதார்த்தம் இல்லை... ஆனாலும் ஒரு விஜயோ , அஜித்தோ தன் படங்களில் யாரிடமாவது என்ன ஜாதி என கேட்பதை ஹீரோயிசத்துக்கு களங்கமாகவே நினைப்போம்... ஆனால் மகேந்திரன் துணிச்சலாக அந்த வசனத்தை தன் நாயகனுக்கு கொடுத்து இருக்கிறார்... அந்த நாயகன் ஜாதி வித்தியாசம் பார்க்காதவனாக இருக்கலாம். ஆனால் தன் தங்கையின் காதலன் குடும்பம் , ஜாதி , மதம் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவது இயல்புதானே..இந்த சாதாரண யாதார்த்தம் கூட நம் படங்களில் இருக்காது

இயல்பான ஹாஸ்யம்... முழுக்க முழுக்க ஹாஸ்யத்தின் அடிப்படையில் ஒரு பாடல்.. தன்னை காதலிப்பதாக சொல்லும் ராஜேஷிடம் தன் கணவன் எப்படி இருக்க வேண்டும்..தன் கல்யாணம் எப்படி நிகழ வேண்டும் என சொல்வதாக ஒரு பாடல்... அருமை...
 மேற்சொன்ன அந்த பாடல், மெட்டி ஒலி காற்றோடு பாடல் என்ற பாடல் , சந்த கவிதைகள் பாடிடும் என்ற இன்னொரு பாடல் என எல்லாமே சூப்பர் பாடல்கள்... இந்த பாடல்களை எழுதியவர் கங்கை அமரன்..

ஆனால் இளையராஜாவின் மேதமை. அவரது வித்தியாசமான முயற்சி , பாடல் வரிகள் என என் மனதை கவர்ந்த்து இந்த பாடல்தான்  rarest song- கேட்க தவறாதீர்கள்  ... மெட்டி மெட்டி என ஆங்காங்கு வார்த்தைகள் ஒலித்து மனதை என்னவோ செய்கிறது அல்லவா..

டீக்கடையில் சில பாடல்களை கேட்டால் , இது என்ன படம் என டீக்கடைக்காரரை கேட்போம்...அந்த அளவுக்கு அந்த பாடல் நம்மை ஈர்க்கிறது என்றால் அது அந்த பாடலின் வெற்றியாகும்.. அதுபோல மேற்கண்ட பாடல் என் உள்ளம் கவர்ந்தது... இதை எழுதியது யார் என தேடினேன்... அந்த பாடலைபடைத்தவர் மதுக்கூர் கண்ணன்...

இவர் யார் என விழி உயர்த்துகிறீர்க்ளா... யார் என்ற சூப்பர் ஹிட் படம் கொடுத்து ”யார் கண்ணன் ” என புகழ் பெற்றவர்தான் இவர்... நண்டு படத்தில் வரும் அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா...சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா என்ற அமர வரிகளை படைத்தவர் இவர்தான்..

எடிட்டர் , ஒளிபதிவாளர் என பல மேதைகள் ஒன்றிணைந்த அபூர்வ படம் இது..அந்த மேதைகளில் ஒருவராக இவரும் இந்த படத்தில் இருக்கிறார்..

மேலே போகும்  முன் இந்த புற நானூறு கவிதையை படித்து விடுங்கள்


பெருஞ்சோறு பயந்து பல் யாண்டு புரந்த
பெருங்களிறு இழந்த பைதற் பாகன்
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை
வெளிழ் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு
கலங்கினென் அல்லனோ, யானே – பொலந் தார்த்
தேர் வண் கிள்ளி போகிய
பேர் இசை மூதூர் மன்றம் கண்டே?

யானைக்கு அன்பாக சோறிட்டு வளர்த்த பாகன் , அவ்வளவு பெரிய யானை இல்லாதபோது , அது இருந்த இடத்தின் வெறுமையை பார்த்து கலங்குவான் அல்லவா...அதுபோல மன்றத்தை பார்த்து கலங்கினேன் என சோகத்தை சொல்கிறது பாடல்... இல்லாமையின் இருத்தலியல்..

இதை உணர்வுபூர்வமாக  காட்சிப்படுத்தி இருப்பார் மகேந்திரன்.

அந்த தாய் இறந்து விடுகிறாள்..அப்போதுகூட அந்த இழப்பு தெரியாது..ஆனால் அவள் உடல் எடுத்து செல்லப்பட்டவுடன்  தோன்றும் வெறுமை அவர்களை கதற வைத்து விடுகிறது.... அவள் உடம்பு வைக்கப்பட்ட இடம் வெற்றிடமாக உள்ளது..சுற்றிலும் மலர்கள், மாலைகள்...அந்த வெறுமையை அவர்களால தாங்க முடியவில்லை..கதறி விடுகிறார்கள்...

பிணத்தை பார்த்து அழும் காட்சிகளை பார்த்து இருக்கிறேன்.. வெற்றிடத்தை, வெறுமையை கண்டு அழும் காட்சியை பார்ப்பது இதுவே முதல் முறை..மகேந்திரன்... என்ன ஒரு கலைஞன் !!!!!

இந்த வெறுமையை நாம் வாழ்வில் உணரலாம்...முக்கிய பண்டிகைகளில் , நிகழ்ச்சிகளிதான் , மரணம் அடைந்த நம் தாத்தாவின் இல்லாமை , அவர்து கண்டிப்பு , அலட்டல் போன்றவை இல்லாமை நன்கு தெரியும்...இதை படம் பிடித்த கலைஞன் மகேந்திரன் மட்டுமே...

திருமணத்தை எதிர்த்து சரத்பாபுவும் , ராஜேசும் சண்டை இடுவது , பிறகு ராதிகாவிடம் காரியம் ஆக வேண்டும் என்பதற்காக இருவரும் ஒன்று சேர்ந்து அவர் காலில் விழுவது என்று அன்பை , அதன் வலிமையை , பெண்மையை. அதன் அழகை பீடத்தில் ஏற்றி இருக்கிறார் மகேந்திரன்..

ஒப்புக்கொள்கிறேன் நண்பர்களே..மெட்டி படம் பார்க்காமல் ஒருவன் வாழ்க்கை முழுமை அடையாது...




Saturday, November 30, 2013

ஆபாசம் இன்றி ஓர் அடல்ட்ஸ் படம்- ,மகேந்திரனின் மேஜிக்களில் ஒன்று

தமிழில் அடல்ட்ஸ் படங்கள் வந்ததே இல்லை... வக்கிரமான படங்கள் வேறு விதம்..அதுவல்ல..  குழந்தைகளுக்கு புரியாத சற்று பெரிய விஷயங்களை அலசும் படங்களை சொல்கிறேன். அந்த வகையில் தமிழில் முக்கியமான படங்களில் ஒன்று பூட்டாத பூட்டுக்கள்.

தலைப்பே சற்று வித்தியாசமாக இருக்கிறது அல்லவா...படமும் அப்படியே..

மகேந்திரன் படங்களுக்கு என சில தனித்தன்மைகள் உண்டு... முதல் காட்சியிலேயே படத்தை ஆரம்பிப்பது , இயல்பான நடிகர்கள் , இனிய பாடல்கள், கச்சிதமான ஒளிப்பதிவு , அழுத்தமான பெண் கதாபாத்திரங்கள், சிறப்பான துணை நடிகர்கள் , அழகான எடிட்டிங்,  நறுக் என ஒரு கவிதை போல முடிவது  என சிலவற்றை சொல்லலாம்..

பூட்டாத பூட்டுகள் படம் பற்றி பழைய ஆள் ஒருவரிடம் கேட்டார்...அது ஒரு கள்ளக்காதல் படம்பா என்றார்... எனக்கு கொஞ்சம் வியப்பாக இருந்தது.. இப்படி எளிதாக புரிந்து கொண்டதால்தான் அந்த காலத்தில் இந்த படம் அவ்வளவு சிறப்பாக ஓடவில்லை என்பது படம் பார்த்த பின் தெரிந்தது..

மனித மனதின் நுட்பங்களை , புதிர்களை , உறவுச் சிக்கல்களை சொல்லும் படம் இது..

படத்தின் பிரதான கேரக்டர்கள் யார், அவர்களுக்கு என்ன பிரச்சனை , கதையின் முடிச்சு என்ன என்பதெல்லாம் வெகு அழகாக குறைவான நேரத்திலேயே சொல்லப்பட்டு விடுகிறது..

குழந்தை இல்லாத தம்பதிகள்..குழந்தை குறித்து அடிக்கடி பிரச்சனை வருகிறது... தத்து எடுக்கும் முயற்சி சரிப்படவில்லை... நாயகனின் சகோதரனின் கோபமும் இதனால் ஏற்படுகிறது... 
நாயகனுக்கு தன் மனைவி மீது அன்புதான்...ஆனால் அதை சரியாக காட்டினானா? அன்பை கொட்டிக்கொடுக்க அவன் காத்து இருந்தும் , அவள் அன்புக்கு ஏங்கி வேறோர் இடம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம்...

காட்டாத அன்பு பூட்டாத பூட்டு போல பயனற்றதுதானே...அதேபோல , போலியான அன்பு எவ்வளவுதான் கொட்டப்பட்டாலும் அதனாலும் பலனில்லை..

இந்த அன்பு எப்படி ஓவ்வொருவரின் உறவுகளை பாதிக்கிறது என பல்வேறு கேரக்டர்கள் மூலம் கேஸ் ஸ்டடி செய்து இருக்கிறார் மகேந்திரன்,

படத்தின்  டைட்டிலில் முதல் பெயராக இடம் பெறுவது ஹீரோவின் பெயர் அல்ல... இந்த கதையை எழுதிய பொன்னீலவன் பெயர்தான் முதலில் காட்டப்படுகிறது..

மகேந்திரன் எப்போதுமே கதையை அப்படியே எடுப்பவர் அல்லர்.. ஒரு ஸ்பார்க் மட்டும் எடுத்துக்கொள்வார்... இதிலும் அப்படியே...ஆனால் வழக்கத்துக்கு மாறாக எழுத்தாளர் பொன்னீலவனுடனும் அவ்வப்போது விவாதித்து இருக்கிறார்.

பெண் கேரக்டர்களை அழுத்தமாக படைப்பது மகேந்திரன் இயல்பு..ஜானியில் ஸ்ரீதேவி கேரக்டரை ரஜினியை விட சற்று உயர்வாக காட்டி இருப்பார்... நாயகியை ஏமாற்ற முயலும் போலி ஜானி , நாயகியின் களங்கமற்ற அன்பை பார்த்து திகைத்து போவது படத்தின் முக்கிய திருப்பமாக இருக்கும்..
பெண்ணீயம் அல்லது பெண்ணடிமை என்ற துருவங்களில் சிக்காமல் , சில இடங்களில் பெண் ஆணை டாமினேட் செய்கிறாள்..சில இடங்களில் விட்டுக்கொடுக்கிறாள் என்ற எளிய யாதார்த்தம் இந்த படத்திலும் இருக்கிறது.

 கணவனை தூக்கி எறிந்து விட்டு , தனக்கு ஆசை காட்டியவனை தேடிசெல்கிறாள் நாயகி... அந்த துரோகியோ இவளை துரத்தி விடுகிறான்.. இவள் இப்போது என்ன செய்வாள்... கையறு நிலை... பெண் என்பவள் ஆண் சார்ந்துதான் இருக்க வேண்டி இருக்கிறது என்ற ஒரு நிலை..இங்கே பெண்மை பணிந்து போகும் நிலை...

இன்னொரு பெண்.. நாயகியுடன் சேர்ந்து வேலை செய்யும் ஓர் ஏழைப்பெண்... அவள் கணவனுக்கு கண் தெரியாது...அவனை இவளே காக்கிறாள்...இவள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றபோதும் , தன் கணவனை காக்கிறாள்.... ஒரு கட்டத்தில் கதானாயகனையே காக்கிறாள்... இன்னும் உச்சமாக, அவனுடைய மனைவியையும் தானே கவனிப்பதாக சவால் விடுகிறாள்..அங்கு பெண்மை விஸ்வரூபம் எடுக்கிறது..

இந்த இரண்டையும் அழகாக பேலன்ஸ் செய்கிறார் மகேந்திரன்...

இதை செண்டிமெண்ட் குப்பையாகவோ , ஆபாச களஞ்சியமாகவோ எடுத்து இருக்கலாம்... ( ஓர் இடைச்செருகல்...இந்த படம் தாமதமானதால் , இதே கதையை சற்று செக்சியாக எடுத்து , இதற்கு முன் ரிலீஸ் செய்து காசு பார்த்தது இன்னொரு படம் ).

ஆனால் மகேந்திரன் துளியும் ஆபாசமின்றி இந்த “ கள்ளக்காதல்” கதையை எடுத்து இருக்கிறார்..

ஊருக்கு புதிதாக வந்தவனின் பசப்பு மொழியில் , போலி அன்பில் நாயகி திசை மாறுகிறாள் என்பதை அவர் எப்படி ஒரே ஒரு ஷாட்டில் காட்டுகிறார் என்பதே அவரை சிறந்த கலைஞன் ஆக்குகிறது...ஆபாசம் ஆகி விடும் அந்த காட்சி கலையாக மிளிர்கிறது..

அவனுக்கு பரிமாற இலை விரிக்கிறாள் அவள்...அவன் சாப்பிட அமர்கிறான்... அவன் இலையில் அவன் சாப்பிட சோறு விழுவதற்கு முன் , அவள் தலையில் சூடியிருந்த பூவில் இருந்து ஒருபூ அவன் இலையில் விழுகிறது...இந்த காட்சி , அதற்கான இசை எல்லாம் உள் அர்த்தத்தை தெளிவாக விளக்கி விடும்... அவள் அவனுக்கு விருந்தாக முடிவெடுத்து விட்டாள்!!

அவன் கணவன் எந்த அளவுக்கு அப்பாவியாக இருக்கிறான்..?
அந்த ஆளை பார்க்க கணவன் போகிறான்.. தன்னை தேடி வருவதைப் பார்த்து அந்த ஆள் நடுங்குகிறான்... கணவனோ சம்பந்தம் இல்லாமல் வேறு என்னவோ சாதாரண விஷ்யம் பேசுகிறான்..தூரத்தில் இன்னொரு ஆளின் குரல் ஒலிக்கிறது... ஒரு அஞ்சு பைசா தொலஞ்சு போச்சு...தேடிக்கிட்டு இருக்கேன்... முக்கியமான ஒன்றே தொலையப்போகிறதே !!

இன்னொரு காட்சி..வயித்துக்கு துரோகம் பண்ணாம சாப்பிடுங்க..

அவன் பதில்// நான் ”வயித்துக்கு”  மட்டும்  துரோகம் பண்ண மாட்டேன்..


படம் எப்படி காட்சி ரீதியாக நகர்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்.

 நாயகனுக்கு பண நெருக்கடி ..சகோதரனிடம் போகிறான்.. அவனோ அவமானப்படுத்தி அனுப்புகிறான்.

சோகத்துடன் அந்த கண் தெரியாத கணவன் - மனைவி வீட்டுக்கு சென்று தன் சோகத்தை சொல்கிறான்..அந்த பெண் பாவம் ஏழை..கஷ்டப்பட்டு உழைத்தும் , க்டன் வாங்கியும் , தன் கணவன் கண் ஆப்பரேஷனுக்கு பணம் சேர்த்து வருகிறாள்..ஓரளவு பணம் சேர்த்து வைத்து இருக்கிறாள்.

தான் தன் கடையை விற்பதை தவிர வேறு வழி இல்லை என புலம்புகிறான் நாயகன்..

அவள் ஒரு முடிவுடன் எழுகிறாள்..தன் கணவன் தோளைத்தொட்டு ஏதோ பேசப்ப்போகிறாள்...அதற்குள் அந்த கண் தெரியாத கணவன் சொல்கிறான் “ நானும் அதைத்தான் நெனச்சேன் “  வேறு எந்த வசனமும் இல்லை... அவள் என்ன சொல்லப்போகிறாள் என்பது வசனம் இல்லாமல் அவனுக்கும் புரிகிறது.. நமக்கும் புரிகிறது.
லெனினின் எடிட்டிங் பற்றி சொல்ல வேண்டும்..ரஜினியின் ராஜாதிராஜா படத்துக்கு அவர்தான் எடிட்டர் என்பதும் , ப்டத்தின் வெற்றிக்கு அவர் எடிட்டிங் முக்கிய காரணம் என்பதும் பலருக்கு தெரியாது..
இந்த படத்தின் அழகுக்கு அவர் ஒரு முக்கிய காரணம்..முக்கியமான காட்சிகளை சஸ்டெயின் செய்து ஆழத்தை அதிகரிக்கிறார்... தேவையற்ற காட்சிகள் அறவே இல்லை..
இசை இளையராஜா...பின்னணி இசை அபாரம்.. பாடல்களில் பலருக்கும் பிடித்த பாடல் , ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது என்ற பாடல்..
ஆனால் எனக்கு பிடித்தது இந்த பாடல்..

இந்த பாடலின் தொடர்ச்சியாக , அந்த பெண்ணை கரக்ட் செய்துவிட்டதாக நாயகன் சொல்கிறான்.

இன்னொரு ஆளின் மனைவியை இப்படி செய்வது தப்பில்லையா என கேட்கிறான் ஊருக்கு புதிதாக வந்தவன்,,

இதில் என்ன தப்பு,,, அவளாத்தானே வந்தா என்கிறான் அவன்..

இந்த வார்த்தை அவனுக்கே பிறகு எதிராக போவது அவலச்சுவை..

இயல்பான ஹாஸ்யம், அழகான கேமரா என படத்தை ரசித்து பார்க்க முடிகிறது...

ஊரில் எல்லோரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை ஏளனமாக பார்க்கையில் , அது வரை பைத்தியமாக கருதப்பட்ட ஒருவன் , நான் ஏதேனும் உதவட்டுமா என்பான்,,, இது போன்ற அழுத்தமான காட்சிகள் படம் முழுக்க உண்டு,,

படம் முடிவதற்கு இரண்டு நிமிடம் முன்பு கூட படம் முடியபோவது தெரியாது,.சட் என ஒரு கவிதை போல முடிகிறது படம்..

படம் பார்த்து கொஞ்ச நாளைக்கு அந்த கணவன் மனைவியை மறக்க முடியாது... 

மொத்தத்தில் பார்த்தே ஆக வேண்டிய படங்களில் ஒன்று பூட்டாத பூட்டுகள்

 நடிப்பு - ஜெயன், சாருலதா , பிரபாகர் , சுந்தர் , குமரிமுத்து , சாமிக்கண்ணு மற்றும் பலர்
ஒளிப்பதிவு அசோக்குமார்
பாடல்கள்  பஞ்சு அருணாச்சலம்..









Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா