Saturday, November 30, 2013

ஆபாசம் இன்றி ஓர் அடல்ட்ஸ் படம்- ,மகேந்திரனின் மேஜிக்களில் ஒன்று

தமிழில் அடல்ட்ஸ் படங்கள் வந்ததே இல்லை... வக்கிரமான படங்கள் வேறு விதம்..அதுவல்ல..  குழந்தைகளுக்கு புரியாத சற்று பெரிய விஷயங்களை அலசும் படங்களை சொல்கிறேன். அந்த வகையில் தமிழில் முக்கியமான படங்களில் ஒன்று பூட்டாத பூட்டுக்கள்.

தலைப்பே சற்று வித்தியாசமாக இருக்கிறது அல்லவா...படமும் அப்படியே..

மகேந்திரன் படங்களுக்கு என சில தனித்தன்மைகள் உண்டு... முதல் காட்சியிலேயே படத்தை ஆரம்பிப்பது , இயல்பான நடிகர்கள் , இனிய பாடல்கள், கச்சிதமான ஒளிப்பதிவு , அழுத்தமான பெண் கதாபாத்திரங்கள், சிறப்பான துணை நடிகர்கள் , அழகான எடிட்டிங்,  நறுக் என ஒரு கவிதை போல முடிவது  என சிலவற்றை சொல்லலாம்..

பூட்டாத பூட்டுகள் படம் பற்றி பழைய ஆள் ஒருவரிடம் கேட்டார்...அது ஒரு கள்ளக்காதல் படம்பா என்றார்... எனக்கு கொஞ்சம் வியப்பாக இருந்தது.. இப்படி எளிதாக புரிந்து கொண்டதால்தான் அந்த காலத்தில் இந்த படம் அவ்வளவு சிறப்பாக ஓடவில்லை என்பது படம் பார்த்த பின் தெரிந்தது..

மனித மனதின் நுட்பங்களை , புதிர்களை , உறவுச் சிக்கல்களை சொல்லும் படம் இது..

படத்தின் பிரதான கேரக்டர்கள் யார், அவர்களுக்கு என்ன பிரச்சனை , கதையின் முடிச்சு என்ன என்பதெல்லாம் வெகு அழகாக குறைவான நேரத்திலேயே சொல்லப்பட்டு விடுகிறது..

குழந்தை இல்லாத தம்பதிகள்..குழந்தை குறித்து அடிக்கடி பிரச்சனை வருகிறது... தத்து எடுக்கும் முயற்சி சரிப்படவில்லை... நாயகனின் சகோதரனின் கோபமும் இதனால் ஏற்படுகிறது... 
நாயகனுக்கு தன் மனைவி மீது அன்புதான்...ஆனால் அதை சரியாக காட்டினானா? அன்பை கொட்டிக்கொடுக்க அவன் காத்து இருந்தும் , அவள் அன்புக்கு ஏங்கி வேறோர் இடம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம்...

காட்டாத அன்பு பூட்டாத பூட்டு போல பயனற்றதுதானே...அதேபோல , போலியான அன்பு எவ்வளவுதான் கொட்டப்பட்டாலும் அதனாலும் பலனில்லை..

இந்த அன்பு எப்படி ஓவ்வொருவரின் உறவுகளை பாதிக்கிறது என பல்வேறு கேரக்டர்கள் மூலம் கேஸ் ஸ்டடி செய்து இருக்கிறார் மகேந்திரன்,

படத்தின்  டைட்டிலில் முதல் பெயராக இடம் பெறுவது ஹீரோவின் பெயர் அல்ல... இந்த கதையை எழுதிய பொன்னீலவன் பெயர்தான் முதலில் காட்டப்படுகிறது..

மகேந்திரன் எப்போதுமே கதையை அப்படியே எடுப்பவர் அல்லர்.. ஒரு ஸ்பார்க் மட்டும் எடுத்துக்கொள்வார்... இதிலும் அப்படியே...ஆனால் வழக்கத்துக்கு மாறாக எழுத்தாளர் பொன்னீலவனுடனும் அவ்வப்போது விவாதித்து இருக்கிறார்.

பெண் கேரக்டர்களை அழுத்தமாக படைப்பது மகேந்திரன் இயல்பு..ஜானியில் ஸ்ரீதேவி கேரக்டரை ரஜினியை விட சற்று உயர்வாக காட்டி இருப்பார்... நாயகியை ஏமாற்ற முயலும் போலி ஜானி , நாயகியின் களங்கமற்ற அன்பை பார்த்து திகைத்து போவது படத்தின் முக்கிய திருப்பமாக இருக்கும்..
பெண்ணீயம் அல்லது பெண்ணடிமை என்ற துருவங்களில் சிக்காமல் , சில இடங்களில் பெண் ஆணை டாமினேட் செய்கிறாள்..சில இடங்களில் விட்டுக்கொடுக்கிறாள் என்ற எளிய யாதார்த்தம் இந்த படத்திலும் இருக்கிறது.

 கணவனை தூக்கி எறிந்து விட்டு , தனக்கு ஆசை காட்டியவனை தேடிசெல்கிறாள் நாயகி... அந்த துரோகியோ இவளை துரத்தி விடுகிறான்.. இவள் இப்போது என்ன செய்வாள்... கையறு நிலை... பெண் என்பவள் ஆண் சார்ந்துதான் இருக்க வேண்டி இருக்கிறது என்ற ஒரு நிலை..இங்கே பெண்மை பணிந்து போகும் நிலை...

இன்னொரு பெண்.. நாயகியுடன் சேர்ந்து வேலை செய்யும் ஓர் ஏழைப்பெண்... அவள் கணவனுக்கு கண் தெரியாது...அவனை இவளே காக்கிறாள்...இவள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றபோதும் , தன் கணவனை காக்கிறாள்.... ஒரு கட்டத்தில் கதானாயகனையே காக்கிறாள்... இன்னும் உச்சமாக, அவனுடைய மனைவியையும் தானே கவனிப்பதாக சவால் விடுகிறாள்..அங்கு பெண்மை விஸ்வரூபம் எடுக்கிறது..

இந்த இரண்டையும் அழகாக பேலன்ஸ் செய்கிறார் மகேந்திரன்...

இதை செண்டிமெண்ட் குப்பையாகவோ , ஆபாச களஞ்சியமாகவோ எடுத்து இருக்கலாம்... ( ஓர் இடைச்செருகல்...இந்த படம் தாமதமானதால் , இதே கதையை சற்று செக்சியாக எடுத்து , இதற்கு முன் ரிலீஸ் செய்து காசு பார்த்தது இன்னொரு படம் ).

ஆனால் மகேந்திரன் துளியும் ஆபாசமின்றி இந்த “ கள்ளக்காதல்” கதையை எடுத்து இருக்கிறார்..

ஊருக்கு புதிதாக வந்தவனின் பசப்பு மொழியில் , போலி அன்பில் நாயகி திசை மாறுகிறாள் என்பதை அவர் எப்படி ஒரே ஒரு ஷாட்டில் காட்டுகிறார் என்பதே அவரை சிறந்த கலைஞன் ஆக்குகிறது...ஆபாசம் ஆகி விடும் அந்த காட்சி கலையாக மிளிர்கிறது..

அவனுக்கு பரிமாற இலை விரிக்கிறாள் அவள்...அவன் சாப்பிட அமர்கிறான்... அவன் இலையில் அவன் சாப்பிட சோறு விழுவதற்கு முன் , அவள் தலையில் சூடியிருந்த பூவில் இருந்து ஒருபூ அவன் இலையில் விழுகிறது...இந்த காட்சி , அதற்கான இசை எல்லாம் உள் அர்த்தத்தை தெளிவாக விளக்கி விடும்... அவள் அவனுக்கு விருந்தாக முடிவெடுத்து விட்டாள்!!

அவன் கணவன் எந்த அளவுக்கு அப்பாவியாக இருக்கிறான்..?
அந்த ஆளை பார்க்க கணவன் போகிறான்.. தன்னை தேடி வருவதைப் பார்த்து அந்த ஆள் நடுங்குகிறான்... கணவனோ சம்பந்தம் இல்லாமல் வேறு என்னவோ சாதாரண விஷ்யம் பேசுகிறான்..தூரத்தில் இன்னொரு ஆளின் குரல் ஒலிக்கிறது... ஒரு அஞ்சு பைசா தொலஞ்சு போச்சு...தேடிக்கிட்டு இருக்கேன்... முக்கியமான ஒன்றே தொலையப்போகிறதே !!

இன்னொரு காட்சி..வயித்துக்கு துரோகம் பண்ணாம சாப்பிடுங்க..

அவன் பதில்// நான் ”வயித்துக்கு”  மட்டும்  துரோகம் பண்ண மாட்டேன்..


படம் எப்படி காட்சி ரீதியாக நகர்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்.

 நாயகனுக்கு பண நெருக்கடி ..சகோதரனிடம் போகிறான்.. அவனோ அவமானப்படுத்தி அனுப்புகிறான்.

சோகத்துடன் அந்த கண் தெரியாத கணவன் - மனைவி வீட்டுக்கு சென்று தன் சோகத்தை சொல்கிறான்..அந்த பெண் பாவம் ஏழை..கஷ்டப்பட்டு உழைத்தும் , க்டன் வாங்கியும் , தன் கணவன் கண் ஆப்பரேஷனுக்கு பணம் சேர்த்து வருகிறாள்..ஓரளவு பணம் சேர்த்து வைத்து இருக்கிறாள்.

தான் தன் கடையை விற்பதை தவிர வேறு வழி இல்லை என புலம்புகிறான் நாயகன்..

அவள் ஒரு முடிவுடன் எழுகிறாள்..தன் கணவன் தோளைத்தொட்டு ஏதோ பேசப்ப்போகிறாள்...அதற்குள் அந்த கண் தெரியாத கணவன் சொல்கிறான் “ நானும் அதைத்தான் நெனச்சேன் “  வேறு எந்த வசனமும் இல்லை... அவள் என்ன சொல்லப்போகிறாள் என்பது வசனம் இல்லாமல் அவனுக்கும் புரிகிறது.. நமக்கும் புரிகிறது.
லெனினின் எடிட்டிங் பற்றி சொல்ல வேண்டும்..ரஜினியின் ராஜாதிராஜா படத்துக்கு அவர்தான் எடிட்டர் என்பதும் , ப்டத்தின் வெற்றிக்கு அவர் எடிட்டிங் முக்கிய காரணம் என்பதும் பலருக்கு தெரியாது..
இந்த படத்தின் அழகுக்கு அவர் ஒரு முக்கிய காரணம்..முக்கியமான காட்சிகளை சஸ்டெயின் செய்து ஆழத்தை அதிகரிக்கிறார்... தேவையற்ற காட்சிகள் அறவே இல்லை..
இசை இளையராஜா...பின்னணி இசை அபாரம்.. பாடல்களில் பலருக்கும் பிடித்த பாடல் , ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது என்ற பாடல்..
ஆனால் எனக்கு பிடித்தது இந்த பாடல்..

இந்த பாடலின் தொடர்ச்சியாக , அந்த பெண்ணை கரக்ட் செய்துவிட்டதாக நாயகன் சொல்கிறான்.

இன்னொரு ஆளின் மனைவியை இப்படி செய்வது தப்பில்லையா என கேட்கிறான் ஊருக்கு புதிதாக வந்தவன்,,

இதில் என்ன தப்பு,,, அவளாத்தானே வந்தா என்கிறான் அவன்..

இந்த வார்த்தை அவனுக்கே பிறகு எதிராக போவது அவலச்சுவை..

இயல்பான ஹாஸ்யம், அழகான கேமரா என படத்தை ரசித்து பார்க்க முடிகிறது...

ஊரில் எல்லோரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை ஏளனமாக பார்க்கையில் , அது வரை பைத்தியமாக கருதப்பட்ட ஒருவன் , நான் ஏதேனும் உதவட்டுமா என்பான்,,, இது போன்ற அழுத்தமான காட்சிகள் படம் முழுக்க உண்டு,,

படம் முடிவதற்கு இரண்டு நிமிடம் முன்பு கூட படம் முடியபோவது தெரியாது,.சட் என ஒரு கவிதை போல முடிகிறது படம்..

படம் பார்த்து கொஞ்ச நாளைக்கு அந்த கணவன் மனைவியை மறக்க முடியாது... 

மொத்தத்தில் பார்த்தே ஆக வேண்டிய படங்களில் ஒன்று பூட்டாத பூட்டுகள்

 நடிப்பு - ஜெயன், சாருலதா , பிரபாகர் , சுந்தர் , குமரிமுத்து , சாமிக்கண்ணு மற்றும் பலர்
ஒளிப்பதிவு அசோக்குமார்
பாடல்கள்  பஞ்சு அருணாச்சலம்..









10 comments:

  1. விமர்சனம் அருமை. இதேபோல் நல்ல திரைப்படங்களை அறிமுகப்படுத்தவும் நன்றி

    ReplyDelete
  2. Excellent! Mahendran's genius is unparalleled. My favorite film is Jaani and Mullum Malarum. Trying to see all his works. Check out the link below. What a shot! Brilliant film making, just these montages make a lot of sense, like a short story. https://www.facebook.com/srinivasan.rengarajan.9/posts/704493146228087

    ReplyDelete
  3. உங்களால தான் இந்த படத்தையே பார்த்துட்டு இருக்கேன்
    twinkle twinkle little star சிரிக்கவா இல்ல கைதட்டவா
    மிச்சத்தையும் பார்த்துட்டு சொல்றேன்

    ReplyDelete
    Replies
    1. அடடா.... அந்த காட்சியை குறிப்பிட மறந்துட்டேனே !! :)

      Delete
  4. நீங்க குறிப்பிடாத காட்சிகள் நிறைய இருக்கு உண்மையிலேயே அது நல்லதுக்குதான் எதுக்குன்னா அப்போதான் இந்த படத்தை என்னோட பார்வைல பார்க்க முடியும்...நீங்க குறிப்பிட்டு சொன்ன காட்சிகளை அதற்கு மேல என்னால புரிந்துகொள்ள யோசிக்க முடியவில்லை....அல்லது நீங்க சொன்னது அதோட உச்சமா இருக்கலாம்...

    வண்ண வண்ண பூஞ்சலையில் பாடம் ஆரம்பிபதற்கு முன்பு
    உப்பிலி கைல செத்து போன நண்டு - குறியீடு

    கன்னியம்மா எப்போ பார்த்தாலும் அளிபாச்சி தடுப்பு பக்கமே திரும்பி வெளியில் பார்த்துட்டு நிக்கறது - விடிவுக்காக.. அந்த இன்னொருவனை பார்த்த பின் அளிபாச்சி shot வரவே வராது...

    தொடர்பு ஏற்பட்ட பின்பு வேலம்மா கேட்கும் கேள்வி இதனால் யாருக்கு என்ன லாபம் - கன்னியம்மா குழந்தையோடு கொஞ்சும் காட்சி

    பரிமாறும் போது கைய பிடிக்கையில் கரண்ட் கட் ஆகும் - கற்பு விளக்கு, குடும்ப விளக்கு, ஒளியிழத்தல், என்னவேணும்னா யோசனை செய்துகொள் ன்னு நம் பார்வைக்கே விட்டிருப்பார்

    பூனையின் அழுகை - பிரயோஜனம் இல்லாத கணவனின் காமம்

    இடைவேளை - master piece

    கன்னியம்மா முதல் முறையாக அவனை பார்ப்பதற்கு வாசல் படியை தாண்டும் போது..பூனைக்கு ஒரு ஷாட்.குழந்தைக்கு ஒரு ஷாட்...படியை தாண்டிய உடன் அந்த இடத்தில பூனை இருக்காது
    மகேந்திரன்டா...

    சிறகு உதிர்த்த இறகுகள் கன்னியம்மாவ பொறுத்த வரைக்கும் குழந்தைகள்....உப்பிலி பார்வைக்கு பறக்க விடாமல் தடுபதற்கு பிடுங்க கூடிய ஒன்று...
    வசனம் இல்லாமல் வாய் மட்டும் அசையும் காட்சி
    முடியாதவனுக்கு பொண்டாட்டிய இருக்கறத விட ஒரு ஆம்பளைக்கு வப்பாட்டிய இருக்கலாம்...இதுக்கு அடுத்த காட்சி
    உப்பிலி வசனம் - எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு...wow

    கன்னியம்மா மறுபடி வீட்டுக்கு வரும்போது அவள் மேல உள்ள தூசியை(களங்கத்தை) எடுத்து போட்டுட்டு தான் கூட்டி வருவான்

    கிளைமாக்ஸ் விளக்கோடு முடியும்

    இது என்னோட பார்வை மட்டும்தான் இதே காட்சிகளுக்கு வேறொருவர் வேறு அர்த்தம் சொல்லலாம்...
    நாம் எந்த நிலையில் இருக்கின்றாயோ அந்த நிலையிலேயே இந்த படம் நமக்கு புரியும் - that is mahendran

    அடுத்து நண்டு படம் தான் உங்க விமர்சனம் முதல் பாரவ படிச்சதுமே அப்பீட்டு ஆகிட்டேன்...படத்த பார்த்துட்டு அப்பறமா படிச்சுக்கறேன்

    ReplyDelete
    Replies
    1. அருமை நண்பரே.... அந்த தூசியை ( களங்கத்தை ) அது எல்லாம் ஒரு மேட்டரே இல்லை என்பது போல வெகு அலட்சியமாக தட்டி விடுவான் என்பதும் குறிப்பிடத்தக்கது.... நண்டு படமும் அருமையான படம்...

      Delete
  5. ". ( ஓர் இடைச்செருகல்...இந்த படம் தாமதமானதால் , இதே கதையை சற்று செக்சியாக எடுத்து , இதற்கு முன் ரிலீஸ் செய்து காசு பார்த்தது இன்னொரு படம் )."

    அது என்ன படம் ?

    ReplyDelete
  6. அந்த படம் ரோசாப்பூ ரவிக்கைகாரியா ?

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா