Sunday, February 16, 2014

முன்னாள் கணவனை எப்படி மறப்பது - ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் உரையாடல்

ஜே கிருஷ்ணமூர்த்தி நூல் ஒன்றில் படித்ததை பகிர்கிறேன்..  அதிகாரபூர்வ மொழி பெயர்ப்பு அன்று... நினைவில் இருந்து பகிர்கிறேன்...வரிக்கு வரியெல்லாம் மொழி பெயர்க்கவில்லை...
முழுமையாக படிக்க , அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ள நூல்களை படியுங்கள்..இது சும்மா அறிமுகம் மட்டுமே
****************************************************************


அவள் தன் மூன்று நண்பர்களுடன் வந்து இருந்தாள். அனைவரும் சிரத்தையுடனும் அறிவுக்களையுடனும் இருந்தனர். ஒருவர் சொல்வதை சுலபமாக கிரகிக்கும் தன்மையுடன் இருந்தார். ஒருவர் வேகமாக தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆவலில் பொறுமை இன்றி காணப்பட்டார். ஒருவர் ஆர்வத்துடன் காணப்பட்டார். ஆனால் ஆர்வம் நீடிக்கவில்லை. நல்லதொரு குழுவாக இருந்தனர். தன் தோழிக்கு உதவ வேண்டும் என நினைத்தனர். அவளது பிரச்சனையை பகிர்ந்து கொண்டனர். மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக அல்லாமல் அவளுக்கு எது நல்லதோ அதை அவள் செய்ய வேண்டும் என விரும்பினர். என்ன சிக்கல் என்றால் எது நல்லது என அவளுக்கு தெரியவில்லை. குழப்பமுற்று இருந்தாள். ஒத்திப்போடாமல் உடனே முடிவெடுக்க வேண்டிய சூழல்.  ஒரு குறிப்பிட்ட உறவில் இருந்து விலக வேண்டும். இதுதான் அவள் பிரச்சனை.. வந்ததில் இருந்து பல முறை சொல்லி விட்டாள்.

  அறிவுரையையோ ஒரு முடிவையோ எதிர்பார்க்காமல் , பிரச்சனைக்குள் போக அவர்கள் விரும்பினார்கள். பிரச்சனை என்னவென்று புரிந்து விட்டால் , சரியான செயல் என்பது இயல்பாக முழுமையாக நடந்து விடும்.  பிரச்சனையின் உள்ளடக்கத்தை சரியாக புரிந்து கொள்வதே முக்கியம். தீர்வு முக்கியம் அன்று. பிரச்சனையை புரிந்து கொண்டால் போதும். என்ன செய்வது என்பது பிரச்சனைக்குள்ளேயே இருக்கும் விஷயமாகும்.

”  அவருடனான தொடர்பில்  இருந்து விடுபட விரும்புகிறேன் “ என்றாள் அவள்.

விடுபடல் என்பதை எந்த அர்த்தத்தில் சொல்கிறீர்கள்.. எந்த விதத்தில் உங்கள் விடுதலை கட்டுண்டு போய் இருப்பதாக நினைக்கிறீர்கள்? விடுபட விரும்புகிறேன் என சொல்வதில் இருந்து , இப்போது ஏதோ ஒன்றில் கட்டுண்டு போய் இருப்பதாக சொல்ல வருகிறீர்கள். எது உங்களை கட்டுப்படுத்தி வைத்துள்ளது?

” உடல் அளவில் நான் சுதந்திரமானவள்தான்.. நான் இப்போது அவர் மனைவி அல்லள்..எங்கு வேண்டுமானாலும் போகலாம் , வரலாம்.. ஆனால் முழுமையாக அவரை விட்டு விலக விரும்புகிறேன் “

உடல் அளவில் சுதந்திரமானவள் என்றால்  வேறு எந்த விதத்தில் இன்னும் அவருடன் பிணைக்கப்பட்டு இருக்கிறீர்கள்?

“ தெரியவில்லை.. அவரை நினைத்தாலே கடும் கோபம் ஏற்படுகிறது.முழுமையாக அவரை மறக்க வேண்டும்”

அவரை மறக்க வேண்டும் என்கிறீர்கள். ஆனால் அவரை நினைத்தால் கோபம் வருகிறது என்கிறீர்கள்.அப்படி என்றால் அவரிடம் இருந்து நீங்கள் விடுபடவில்லை என்று பொருள். ஏன் அவர் மேல் கோபம்

“ அவர் எவ்வளவு கேவலமான மனிதர் என்பது சமீபத்தில்தான் தெரிந்தது..அன்பற்ற தன்மை , சுய நலம் , கேவலமான மன நிலை.ச்சே..இதை கண்டுபிடித்தபோது எனக்கு ஏற்பட்ட வேதனை சொல்லி புரிய வைக்க முடியாது. அவரை எப்படி எல்லாம் நேசித்தேன். என்னையே அர்ப்பணித்தேன்.இப்படி ஒரு கேவலமான மனிதரையா லட்சிய கணவன் என நினைத்தோம் என யோசித்தால் மனம் கொதிக்கிறது . அவரை முழுக்க மறக்க விரும்புகிறேன் “

உடல் அளவில் நீங்கள் அவரை விட்டு விலகி இருக்கலாம். ஆனால் உங்கள் மனதில் இந்த கோபம் இருக்கும் வரை அவரைவிட்டு விலகியதாக கருத முடியாது. அவர் மேல் கோபம் என்பதும் ஒரு வகை பிணைப்புதான்.

உண்மையில் கோபம் அவர் மீதா , உங்கள் மீதா.. அவர் எப்படியோ , அப்படித்தான் இருக்கிறார். அவர் இயல்புப்படி அவர் இருக்கிறார். இதில் கோபப்பட என்ன இருக்கிறது?  அவரது மோசமான மனம் தெரிந்ததும் , இவரைபோய் நேசித்தோமே என உங்கள் மேல்தான் நீங்கள் கோபப்படுகிறீர்கள். உங்களை நினைத்து அவமானப்படுகிறீர்கள்..ஆனால் இதை ஒப்புக்கொள்ள மனம் இன்றி அவர் மேல் கோபப்படுவதாக காட்டிக்கொள்கிறீர்கள்.. அவர் தன் இயல்புப்படி இருந்து விட்டு போகிறார். அதற்காக அவர் மீது கோபப்பட முடியுமா?

“ ஆமா..உண்மைதான் “

இதை நீங்கள் முழுமையாக உணர்ந்தால் உங்கள் கோபம் மறையும்..அவரை வெறுக்க மாட்டீர்கள். வெறுப்பும் காதலைப்போன்ற ஒரு பிணைப்புதான்.

“ உண்மைதான்.. சரி...  இந்த வெறுப்பை நான் எப்படி நீக்குவது? “

ஏன் இந்த வெறுப்பை  நீக்க விரும்புகிறீர்கள் என்பதை கவனியுங்கள்..அதுதான் முக்கியம்..  எப்படி என்பது  இரண்டாம்படசம்தான்..

” அவரை நினைத்தாலே எரிச்சலாக இருக்கிறது.. இது போதுமான காரணமாகாதா ? “

” இல்லை..அவரை நினைத்தால் எரிச்சலாக இருக்கிறது என்பது மட்டும்போதுமான காரணம் அன்று.பழசை மறப்பது மட்டும் தீர்வாகாது “

” என்ன இப்படி சொல்கிறீர்கள்..பிரச்சனை ஏற்கனவே சிக்கலாக இருக்கிறது.. மேலும் சிக்கல் ஆக்காதீர்கள்”

பொறுமையாக கவனியுங்கள்.. பழசை மறந்தால் நிம்மதியாக இருக்க முடியும் என கருதுகிறீர்கள்.துன்பகரமான நினைவுகளாக இருக்கலாம்.. ஆனால் ஏன் மறக்க வேண்டும். ந்ம்மைப்பற்றி உய்ரவாக நினைத்து இருப்போம். அந்த எண்ணத்திற்கு அடி விழும்போது கலங்கி போகிறோம். இந்த அடியோ வீழ்ச்சியோ முக்கியம் இல்ல.. நம்மைப்பற்றி உயர்வாக நினைத்தோமே .இதைத்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் நம்மை உயரத்தில் வைத்துக்கொள்ளாத பட்சத்தில் வீழ்வது என்ற பேச்சே இல்லையே..சுய பெருமிதம் , லட்சியவாதம் என்பதெல்லாம் எதற்கு.. நாமும் சாதாரண ஆள்தான் என்பது புரிந்து விட்டால், வீழ்ச்சியை எல்லாம் பெரிதாக நினைக்க மாட்டோம். உங்களைப்பற்றிய எந்த எண்ணமும் இல்லாவிட்டால் , வாழ்க்கையை என்ன நடக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வீர்கள்.என்ன நடக்கிறதோ அதை தவிர்த்துவிட்டு , அப்படி செய்து இருக்கலாமே ,இப்படி செய்து இருக்கலாமே என கற்பனையில் வாழ ஆரம்பிப்பதுதான் கோபம் , வெறுப்பு போன்றவற்றுக்கு காரணமாகிறது.

நீங்கள் யாரோ அதை அப்படியே புரிந்து கொண்டு வாழுங்கள். இல்லாத ஒன்றை நினைக்காதீர்கள்..இருப்பதை நிராகரிக்கவும் செய்யாதீர்கள். பயம்  , கவலை இருந்தால் தனிமைப்பட்டு போய் விடுவீர்கள்..இவற்றை எல்லாம் தவிர்த்து விட்டு நிகழ் காலத்தில் வாழுங்கள்.. நிகழ்காலத்தை  நேசியுங்கள்.அப்போது காலம் அழிந்து விடும். இறந்த காலம் அப்போது உங்களை கஷ்டப்படுத்தாது..






Friday, February 14, 2014

தியானம் போன்ற மன விளையாட்டுகள் மூலம் உண்மையை உணர முடியாது- ஜே கிருஷ்ணமூர்த்தி

ஜே கிருஷ்ணமூர்த்தி உரை ஒன்றில் இருந்து...ஆழ் மனம் , பிரஞ்ஞை , கனவு , தியானம் போன்றவற்றைப்பற்றி எல்லாம் நமக்கு இருக்கும் கருத்துகளை அடித்து நொறுக்குகிறார்...

இதை உடனே ஏற்கவோ மறுக்கவோ செய்யாமல் , சும்மா கவனியுங்கள்

*************************************************************

இறந்த காலம் எந்த அளவுக்கு நம்மை ஆக்ரமித்து உள்ளது என்பதை கவனித்தால் ஆச்சர்யமாக இருக்கிறது... ஆனால் உண்மையில் இறந்த காலம் நம்மை ஆக்ரமித்து இருக்கவில்லை.. நாமே இறந்த காலமாக இருக்கிறோம். இறந்த காலம் என்பது மிகவும் சிக்கலானது.. நல்லது கெட்டது என பல்வேறு நினைவு அடுக்குகளால் ஆனது இது. இரவும் பகலுமாக இது நம்மை சூழ்ந்துள்ளன இந்த நினைவுகள்.. வெகு அபூர்வமாக கொஞ்ச நேரம் இதன் பிடியில் இருந்து தப்பித்து ஒளியை தரிசிக்கிறோம்.

இறந்த காலம் என்பது நிழல் போன்றது. எல்லாவற்றையும் களை இழந்தும் , வண்ணங்களை இழந்தும் நமக்கு காட்டுகிறது  இந்த நிழலின் பிடியில் சிக்கி நிகழ் காலம் தன் புத்துணர்வை , தெளிவை இழக்கிறது. இதன் விளைவாக எதிர்காலமும் இதன் தொடர்ச்சியாகவே அமைந்து விடுகிறது.

இறந்த காலம் , நிகழ் காலம் , எதிர் காலம் - இந்த மூன்றும் நினைவு எனும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கின்றன.. ஒரு கம்பத்தில் கட்டிப்போடப்பட்ட விலங்கு போல , எண்ணம் இறந்த காலம் ,  எதிர்காலம் என அலைந்து கொண்டே இருக்கிறது. இப்படி எண்ணம் என்னதான் அலைந்தாலும் , அது குறிப்பிட்ட எல்லையை விட்டு தாண்டி போக முடியாது.. இப்படி முன்னும் பின்னும் அலைவதே மனதின் வேலை.. இப்படி அலைவதுதான் மனம் என்றும் சொல்லலாம். இப்படி அலைதல் இல்லாத பட்சத்தில் மனமே இல்லை.. மனம் என்பது அதன் உள்ளடக்கம்தான்.  புகழ், தேசம் , கடவுள் , குரு , மது , ஆத்திகம் , நாத்திகம் என உள்ளடக்கம் எதுவாகிலும் இருக்கலாம்.. ஆனால் எல்லாம் ஒன்றே.. கடவுள் இருக்கிறார் என நினைப்பதற்கும் கடவுள் இல்லை என நினைப்பதற்கும் வித்தியாசம் இல்லை. இரண்டுமே வெறுமையானவைதான்.

ஏதாவது ஒன்றை நினைக்கும்போதுதான் மனம் தான் ஏதோ வேலை செய்வதாக நினைக்கிறது.. தன் இருப்பை உணர்கிறது. எதாவது ஒன்றை அடைய நினைக்கிறது,.அல்லது எதையாவது விட்டுக்கொடுத்து தியாகி என்ற பெருமையை அடைய முயல்கிறது.

ஏதாவது ஒன்றுடன் ஈடுபட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே மனதின் ஆவல்..எதில் ஈடுபடுகிறது என்பது முக்கியம் அல்ல... எதிலாவது ஈடுபட வேண்டும்..அதுவே முக்கியம்.எந்த அளவுக்கு சமூக முக்கியத்துவம் இருக்கிறதோ அந்த அளவுக்கு முனைப்புடன் மனம் அதில் ஈடுபடும்.  அறிவு , சமுதாய சீர்திருத்தம் , கடவுள் என எதிலாவது ஈடுபட்டுக்கொண்டே இருப்பது மனதின் இயல்பு.

இப்படி ஈடுபட எதுவும் இல்லையென்றால் மனமே இல்லை..எனவே மனம் இந்த நிலையை விரும்பாது.

கனவு என்பது மனதின் இன்னொரு விளையாட்டு ஆகும்.  நாம் அன்றாட வேலைகளை கவனிக்கும்போது , விழிப்பு நிலையில் இராத மனதின் இன்னொரு பகுதியின் வேலைதான் இது...இதுவும் மனதின் நீட்சிதான். மனதுக்கு அப்பாற்பட்ட ஒன்று அன்று. மேல் மனம் , ஆழ் மனம் எல்லாம் அடிபடையில் ஒன்றுதான்.

ஒரு முடிவை தேடி பயணித்தல் என்பது ஏற்கனவே இருப்பதன் தொடர்ச்சியே ஆகும். இப்படிப்பட்ட மனம் ஒரு போதும் இறக்காது. இறப்பு இல்லாவிடில் புதிதாக பிறப்பது என்பது இல்லை.

மனதின் வேலைகள் முடிவுக்கு வருவதுதான் , அமைதியின் ஆரம்பம், மனம் ஒருபோதும் அமைதியை உணர் முடியாது.. தியானம் போன்ற மன விளையாட்டுகள் மூலம் ஒரு போதும் அமைதியை அடைய முடியாது.  அமைதி என்றால் என்ன என மனம் ஏற்கனவே கற்பனை செய்து வைத்து இருப்பதை அடையலாம்..உண்மையான அமைதியை உணர முடியாது.

ஆழ்மனம் , கனவு மனம் போன்றவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டதுதான் இந்த பூரண அமைதி. ஆழ்மனம் என்பதற்கு புனிதம் ஏதும் இல்லை... இதுவும் கடந்த காலத்தின் எச்சம்தான். இந்த எச்சம் ஒரு போதும் உண்மையை உணர்த்தாது. ஆனால் உண்மையைப்பற்றி கனவு காணும் ஆற்றல் இதற்கு உண்டு.. இந்த கனவு ஒரு போதும் உண்மை ஆகாது.

பல நேரங்களில் கனவையே உண்மையாக கொள்கிறோம்..உண்மையில் கனவும் , அந்த கனவை காண்போனும் மனதின் உருவாக்கங்கள் மட்டுமே.


Monday, February 10, 2014

சாரு அதிரடி - மகாபாரதம் ராமாயணம் எழுத நான் எதற்கு, நான் எழுதப்போவது வேறு


  சாருவை அவ்வப்போது சந்திப்பது வழக்கம் என்றாலும் சில சந்திப்புகள் மறக்க முடியாத சந்திப்புகளாகி விடுவதுண்டு. அப்படி ஒரு முக்கியமான சந்திப்பு சென்ற சனிக்கிழமை நடந்தது..

ஒரு விஷயத்தை நாம் பார்ப்பதற்கும் ஓர் இலக்கியவாதி பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு.. நாளை மற்றும் நாளே , ஜேஜே சில குறிப்புகள் போன்றவற்றையெல்லாம் படித்து அசந்து போன நாட்கள் எல்லாம் உண்டு.. அவை ஏன் மோசமான படைப்புகள் என சாரு சொன்னபின் படித்து பார்த்தபோதுதான் உணர முடிந்தது..

ஓநாய் குலச்சின்னம் நன்றாக எழுதப்பட்ட நாவல்தான்.ஆனால் அதன் நோக்கம் ஆபத்தனாது என்பதை தன் பார்வையில் விளக்கினார்..வீரபாண்டியன் மனைவி ஏன் படிக்க வேண்டிய முக்கியமான நாவல் என்பது பற்றி பேசினார்.

மொழி பெயர்ப்பு , சில மொழி பெயர்ப்பாளர்களின் தவறுகள் , ஷோபா சக்தியின் தங்கரேகை சிறுகதை என இலக்கிய விவாதங்கள் ஓடின என்றால் மற்ற ஜாலியான பேச்சுகளும் ஓடிக்கொண்டு இருந்தன.. நான் ஸ்டாப் சிரிப்பு ,கும்மாளம் என ஒவ்வொரு கணமும் கொண்டாட்டமாக கழிந்தது.. சமீப நாட்களில் நான் இது போல சிரித்ததே இல்லை..

இப்படி இலக்கியத்தரமாக பேசும் அவர் திடீரென குழந்தையாக மாறி என்னுடன் ஹாண்ட் ரெஸ்ட்லிங் மோதிப்பார்க்க தயாரா என சவால் விட்டார்..

குழந்தை , அடல்ட் , பொறுப்புள்ள எழுத்தாளர் என அடுத்தடுத்து காட்சிகள் மாறிக்கொண்டே இருந்தன..

 நான் , கணேசன் அன்பு , நிர்மல் போன்றோர் ஐந்து மணிக்கெல்லாம் போய் விட்டோம். சாருவும் கரக்ட்டாக வந்து விட்டார்.

எதிர்பாராத இனிய வரவாக அமைந்தது லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் அவர்களின் வருகை..
இவரெல்லாம் இணைய உலகில் ஆதி காலத்தில் இருந்தே இருப்பவர். சினிமா , எழுத்து என பல்துறை விற்பன்னர். அந்த காலத்தில் இருந்தே அவரை ரசித்து வருபவன் நான். சாருவும் இவரும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்து இந்த சந்திப்பு நிகழ்ந்தது.. இவரது அனுபவங்கள் ,  பார்வைகள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன.

 நள்ளிரவுவாக்கில் செல்வகுமார் கணேசன் வந்தார். வந்ததும் உடனே சூழலில் தன்னை பொருத்திகொண்டு ஆரோக்கியமான வாதங்களை எடுத்து வைத்தார்.
ஷோபா சக்தியின் தங்க ரேகை குறித்தான இவர் பார்வை சிறப்பாக இருந்தது.

கணேசன் அன்பு ஓநாய் குலச்சின்னம் நாவலின் ஒவ்வொரு வரியையும் நினைவு வைத்து பேசினார்.. சாரு சொல்வதை எதிர்த்து தைரியமாக தன் கருத்துகளை எடுத்து வைத்தார். அவர் சொல்வதை சாருவே கவனித்து கேட்டார். யாரேனும் குறுக்கிட முயன்றால் கூட , அவர் பேசட்டும் என்றார் சாரு..


அவரது அடுத்த படைப்பு குறித்து கேட்டோம்.. எல்லோருக்கும் தெரிந்த மகாபாரத்தை சிலர் அப்படியே மீண்டும் எழுதி எரிச்சல் படுத்துகிறார்களே... நீங்கள் ராமாயணம் எழுதுவீர்களா என்றோம்.

எல்லோருக்கும் தெரிந்தவற்றை எழுத நான் எதற்கு.. யூதாசின் பார்வையில் யூதாஸ் பற்றி எழுதப்போகிறேன். தமிழுக்கு அது புதிதாக இருக்கும்.. யூதாசின் மன ஓட்டம் , வாதைகள் , கனவுகள் , துரோகம் , அன்பு , பக்தி என வேறொரு பார்வை உங்களுக்கு கிடைக்கும் என்றார் சாரு..

யூதாஸ் குறித்து சாரு

Wednesday, January 29, 2014

கவிதைகளுக்கு இன்று அவசியம் இல்லை- அசோகமித்ரன் . கவிஞர்கள் றியாஸ் , நேசமித்ரன் , நறுமுகை தேவி எதிர் வினை

அசோகமித்ரன் அழகாக கதைகள் எழுதுவார் ...அவ்வப்போது தகுதி அற்றவர்களை பாராட்டி பேட்டி கொடுத்து சர்ச்சையில் சிக்குவார்..

அந்த வகையில் அவரது சமீபத்திய பேட்டி சர்ச்சையை கிளப்பியது....அது குறித்து சில கவிஞர்களுடன் ஓர் உரையாடல்...

*******************************************************************

அந்த காலத்தில் எழுதி வைக்கும் வசதிகள் இல்ல... நினைவில் மட்டுமே அறிவை சேகரித்து வைக்க முடியும் என்பதால் கவிதை என்ற வடிவம் தேவைப்பட்டது..இன்று அதற்கான அவசியம் இல்லை என்கிறார் அசோகமித்ரன்.. உங்கள் கருத்து?

Riyas Qurana 

அறிவை சேகரிக்காமல் வேறு எதையாவது சேகரிக்க உதவலாம். மற்றது மிக முக்கியமானது ஒன்றை நீங்கள் கவனிக்கவில்லை. அந்தக்காலத்தில் கவிதையாக கருதிய வடிவம் தேவையில்லை என்பதையே அ.மி சொல்கிறார். நாங்களும் அது தேவையில்லை என்றுதான் இங்கே கத்திக்கொண்டிருக்கிறோம். இந்தக் காலத்தில் அந்தக் காலத்து சாமான்கள் தேவையில்லை என்பது அவரின் சிறந்த விமர்சனம்.

பிச்சை

வெண்பா..ஆசிரியப்பா போன்ற வடிவங்கள் , இலக்கணங்கள் எதுகைமோனை போன்றவை தேவை இல்லை என்கிறீர்களா

Riyas Qurana

 நினைவில் சேகரிக்க உதவுவதையே அன்று கவிதை வடிவமாக கருதினார்கள் அதுதான் தேவையில்லை. நினைவில் பதிந்துவைக்க உதவிய அனைத்தும். அதற்குள் நீங்கள் சொல்லுவதும் இருந்தால்.

Riyas Qurana 

இலக்கியம் என்ற சொல்லுக்கான நவீன அர்த்தம் இரண்டு நுாற்றாண்டுகளுக்கு உட்பட்டதுதான். அதற்கு முன்பு இலக்கியம் என்று பாவிக்கப்பட்து எது தெரியுமா? கவிதைதான். ஆகவே, இலக்கியமமே தேவையில்லை என்று ஒருவகை விரக்தியில் கூட அ.மி. சொல்லியிருக்கலாம். நேர்கண்டவரின் அற்றலைப் பொறுத்து அவரின் பதில் அமைந்திருக்கிறது. அல்லது, இன்று இப்படி சொல்ல நினைத்திருக்கலாம். அதுதவிர, அமி சொல்வது முக்கியமான ஒரு விமர்சனமல்ல.

Ragu Ram Annur 

வார்த்தைகள் பலவீனமானவை !!!!

Riyas Qurana 

பலமானவைக்கும் வார்த்தை என்று பெயரிடலாம். நீங்கள் எந்த வார்த்தைகளைச் சொல்கிறீர்கள். பலவீனம் எனச் சொன்ன வார்த்தைகளிலாவது பலம் இருக்கிறது என்று நம்புகிறீர்களா?

Ragu Ram Annur

 நான் உங்களை ஒரு கணம் அன்போடு அணைப்பதை, எத்தனை ஆயிரம் வார்த்தைகளில் நான் வெளிப்படுத்த முடியும் ? வார்த்தைகள், உள்ளத்து உணர்வை சென்று சேர்க்க முடியாமல் நலிந்தே சென்று சேர்க்கிறது...

நறுமுகை தேவி 

அவர் சொல்வது சரியாகக் கூட இருக்கலாம்..ஆனால்,இது கவிதைக்கு மட்டுமா?
தாலாட்டு என்பது தாயின் குரலைக் கேட்டுக் கொண்டிருக்கும் குழந்தை தன் தாய் தன் அருகில் இருக்கிறாள் என்ற பாதுகாப்புணர்வோடு உறங்குவதற்கு உணர்த்தப்படும் ஒருவகை ஒலி மட்டுமே என்று கொண்டால் இப்போது அதை மனப்பாடமாகப் பாடிக் கொண்டே தொட்டில் ஆட்டவேண்டியது இல்லை..ஒரு குறுந்தட்டில் பதிந்து சுழல விட்டு விடலாம் அல்லவா..?கவிதை என்பது ஒரு விசயத்தைச் சுவாரசியமாகச் சொல்லும் குறு(ம்)வடிவம்.. (குறுஞ்செய்தி போல்)
எல்லா இடத்திலும் போன் எடுத்துப் பேசுவதை விட குறுஞ்செய்தியை யாருக்கும் தொந்தரவில்லாமல் அல்லது ரகசியமாக அனுப்பி விடலாம்.

அதுபோல எல்லா இடங்களிலும் ’சிறுகதைகளை’ எழுதிக் கொண்டிருக்க முடியாது அல்லவா?

Ragu Ram Annur 

வார்த்தைகள் பலவீனமானவை - ஓஷோ

ஒரு மிகச்சிறந்த பேச்சு என்பது நேர்மையான பொய்யே - மைகேல் நைமி

மலர் ஒரு வேளை தான் அழகாக இருக்கிறேன் என்று வாய் திறந்து கூறினால் அசிங்கம் செய்துவிடுகிறது - லாவோ த்சு
Riyas Qurana

 உள்ளத்து உணர்வு என்பதெல்லாம் மொழியாலானதுதான். நிங்கள் சிந்திப்பதே மொழியால்தான்.

ஜ்யோவ்ராம் சுந்தர் 

அமி சொன்னதையே நவீன கவிதைக்கான அடிப்படைக் காரணம் / தேவை என்றும் சிலர் சொல்வார்கள். எப்படி கேமரா ஓவியங்களை மாற்றியதோ அப்படி அச்சு ஊடகம் கவிதைகளை மாற்றியது.

Ragu Ram Annur

 மொழி மூலம் தான் சிந்திக்கிறோம் என்பது தெரியாமலா இத பத்தி பேச வந்திருப்பேன் ?

பேச்சற்று நான் நிற்கும் உணர்வுகளை மொழிபடுத்த விளைவது, பலவீனமாக்குகிறது என் உணர்வுகளை...

Ragu Ram Annur 

உங்களுக்கு ஏற்படும் வலி மொழியால் ஆனதா ? உணர்வை வெளிப்படுத்த மொழி பலவீனமாக உதவுகிறது, வெளிப்படுத்த முடியாமல் முடங்கிவிடக்கூடாத உணர்வு எனில், மொழி பெரிதளவில் உணர்விற்கு உதவுகிறது (ஆனால் முழுமையாக இல்லை)

Riyas Qurana 

கவிதையோ, இலக்கியமோ எதுவென்றாலும் அது மொழியாலான நிகழ்வு. அது என்றும் அழிந்துவிடுவதில்லை. மனிதர்கள் இனி மொழியற்றவர்களாகிப்பொவதில்லை என நம்புகிறேன். ஆக, கவிதை ன பாவிக்கப்படும் மொழியாலான நிகழ்வு, புதுப்பிக்கப்படவும், மாற்றமடையவும் சாத்தியம் அதிகம். அது இல்லாது போய்விடாது.

பிச்சை

"கொஞ்சம் முயற்சி எடுத்தால் யார் வேண்டுமானாலும் அந்தப் புனித வாக்கை எழுதிவிட முடியும்." என்கிறார் அ.மி... கவிதை என்பது உணர்வு சார்ந்ததல்ல...ஒரு craftmanship மட்டுமே என்பது ஏற்கத்தக்கதா

Ragu Ram Annur 

கூறியவனின் உணர்வை முற்றிலும் உணர்ந்து கொள்வதில் தான் சவாலே, வெளிப்படுத்திவிடலாம் பிக்கு, சென்று சேர்ந்ததா ? படித்த/கேட்ட மனிதர் உள்ளுக்குள் என்ன ஆனார் என்பது தானே இறுதி ?

Riyas Qurana 

மனிதர்களும், சமூகங்களும், மொழிகளும் முற்றிலும் வேறான வடிவங்களில் இருப்பதை கவிதையாகப் பாவித்திருக்கிறார்கள். அமி சொல்லவருவது, கவிதையாக பாவித்த குறித்த வடிவத்தைப் பற்றியது. அது அவரின் பதிலிலே உள்ளடங்கியிருக்கிறது. அதற்கு வெளியெ நேர்வுகளை நாம் சிந்திக்கத் தேவையில்லை என்றே நான் கருதுகிறென்.

Nesamithran Mithra 

நினைவில் மட்டுமே அறிவை சேகரித்து வைக்க முடியும் என்பதால் கவிதை என்ற வடிவம் தேவைப்பட்டது// கவிதை என்பது மேட்னஸ் சம்பந்தப்பட்ட விஷயம் என்று நம்புகிறவன் நான் .கூடுதலாய் ‘அறிவை சேகரித்தல்’ இந்த கூற்றே அபத்தமானதாய் தோன்றுகிறது . அவர் எப்போதும் கவிதையை சந்தேகித்தே வந்திருக்கிறார் .அவரது ’அரசியல் நிலைப்பாடு ’கவிஞர்களால் எப்போதும் சந்தேகிக்கப்பட்டே இருந்து வந்திருக்கிறது. ஆதலால்.... நிற்க ! 82 வயதுப் பெரியவருக்கு ,ஒரு நல்ல கதை சொல்லிக்கு என் அன்பு !
பிச்சை

கொஞ்சம் முயற்சி எடுத்தால் யார் வேண்டுமானாலும் அந்தப் புனித வாக்கை எழுதிவிட முடியும்." Nesamithran Mithra இதை ஏற்கிறீர்களா... மேட்னசை எப்படி முயற்சி செய்து வர வைக்க முடியும்


Riyas Qurana 

உணர்வுகள் என்பது இயல்பானது அல்ல. அது முற்றிலும் கட்டமைக்கப்பட்டதுதான். துயரம் சந்தோசம் என்பதை வேறு ஏதோவொன்றால் (புறத்திலிருந்து) வழங்கப்படுகின்ற ஒன்றாகவும் இருக்கிறது. உணர்வு, சுயம், அகம் சார்ந்தது என்றெல்லாம் ஒன்றுமில்லை. ஏனென்றால், அவை ஏற்கனவே தாக்கமுற்ற நிலையிலே இருக்கிறது.


Riyas Qurana 

கவிதை புனிதமானது அல்ல. யாரும் எதையும் எழுதிவிட முடியும் கவிதையை மாத்திரமல்ல.அனைத்தையும், ஆனால் அதை எழுதிய கதைகளைக்கூற முடியும்போதுதான் எழுதியது என்ன என்றெ வெளித்தெரிகிறது.

Ragu Ram Annur 

உணர்வுகள் பெரும்பாலானது வேண்டுமானால் முழுதும் கட்டமைக்கப் பட்டிருக்கலாம்..

தாயன்பு (விலங்குகளிடம் கூட) போல சில உணர்வுகள், இயல்பிலே தான் வரும்


Riyas Qurana 

ஒரு முக்கியமான விசயம் தெரியுமா? கதைகளைக்கூட கவிதையாகத்தான் சொல்ல வேண்டியிருந்தது. கம்பராமாயணம், கீதை இப்படிப் பல.


Nesamithran Mithra 

க்ராஃப்ட்டிங் /எடிட்டிங் எல்லாம் எழுத எழுத வாசிக்க வாசிக்கத் தானாய் கைகூடும் . சித்திரமும் கைப்பழக்கம் செ. நா என்பது எத்தனை நூற்றாண்டு பழைய வாக்கியம்  புனித வாக்கும் இல்லை புண்ணிய வாக்கும் இல்லை . (புனிதம் புண்ணியம் போன்ற சொற்கள் அவரது அரசியலை காட்டிக் கொடுக்கும் சொற்கள்  ) பின் நவீனத்துவம் எல்லாவற்றை கட்டுடைத்து விட்டது .கவிதை மட்டுமல்ல கதைக்கும் இன்னபிற வடிவங்களுக்கும் பொருந்தும். (சாருவின் கதைகள் மீதான சமீப காலத்து ’அபிப்ராயத்தை’ நினைவு கொள்வீர்கள் என நம்புகிறேன் )பாதுகாப்புணர்வுக்கு ஏங்குபவர்கள் அந்த எல்லைகளுக்குள்ளாகவே மொழியிலும் வாழ விழைபவர்களின் மன அமைப்புக்கு நெருக்கமான கதைச்சொல்லிகள் அவர்கள், விடுதலை- மேட்னஸ் சார்ந்து பேச நமக்கு வேறு மொழிப்பரப்பு வேண்டி இருக்கிறது .

Riyas Qurana 

எந்த மொழிக்கும், மிக அதிகமான பங்களிப்பை செய்ததும், செய்துகொண்டிருப்பதும் கவிதை என காலத்துக்கு காலம் நம்பப்பட்ட வடிவங்கள்தான். நிற்க எனக்கு ஒரு சந்தேகம். ம.புத்திரனின் கவிதைகளை அமி படித்திருப்பாரோ..? படித்திருந்தால், இப்படிச் சொல்ல சாத்தியம் அதிகமிருக்கிறது. ஏற்றுக்கொள்ள நமக்கு காரணமும் இருக்கிறது.


பிச்சை

கவிதை என்பதை உணர்வு சார்ந்த விஷ்யமாகவே உலகம் எல்லாம் கருதுகிறார்கள்.. ஒருவித மேட்னஸ் தேவை என்கிறார்கள்.. ஆனால் கேசுவலாக கொஞ்சம் பயிற்சி எடுத்தால்போதும் ,..யாரும் எழுதலாம் என அவர் சொல்வது நெருடலாக உள்ளதே 

 நறுமுகை தேவி

மொழி என்பது ஒரு வடிவம் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.ஆனாலும் இந்த மொழியின் மீது ஒரு நூலிழை சந்தேகம் நமக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது.நாம் சொல்வது அவர்களுக்குப் புரியுமோ புரியாதோ என்கிற சலனம் இழையோடிக் கொண்டே இருப்பதால்(!) தான் ’வா’ ’போ’ என்று சொல்லும் போதே கைகளாலும் சைகைகள் கொடுக்கிறோம். ‘இல்லை’
’ஆம்’ என்று சொல்லும் போதே தலையையும் ஆட்டுகிறோம்..
அப்படித்தான் ‘பக்தி இலக்கியங்கள்’/ செய்யுள் வடிவம் மனப்பாடம் செய்யப்பட்ட அன்றைய நிலை இன்று தேவையில்லாமல் இருக்கலாம்.ஆனால்,அதற்காக ஒட்டுமொத்தக் கவிதை என்னும் வடிவமே வேண்டாம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.அதன் மாற்றம் தேவையாய் இருக்கிறது

உண்மையில் ஒரு பைத்தியக்கார மனநிலையில் எழுதப்படும் கவிதைகள் பல அழகான பரிமாணம் கொள்கின்றன..அது அறிவுசார் நிலை என்ற பொதுப்படையான கூற்று இங்கு ஏற்கத்தக்கதல்ல..


Riyas Qurana 

அப்படிச் சொல்கிறவர்கள் உலகெங்கும் நிறைய இருக்கலாம். அனைத்தும் உணர்வு சார்ந்ததுதான் என சொல்ல வாயப்பிருக்கிறது. அது ஒரு குறிப்பான முன்வைப்பு அல்ல. உணர்வு என்று எதைக் கருதுகிறார்கள் என ஒரு சிறு கேள்வியை அவர்களின் முன் வீசினால், அவர்கள் கலவரப்பட்டுப்போய்விடுவார்கள். ஏனெனில், உணர்வு என ஒரு பொதுச்சொல்லை ஒவ்வொரு வேறுபட்ட மனிதனும் வேறுபட்ட அம்சங்களை உணர்வென அழைக்கலாம். இதைத்தான் என்ற ” அதிகமும் பாதுகாக்கப்பட்ட ஒரு பொதுக் கொள்கை” என்ற வசதியில் பயன்படுத்தலாம். ஆக. இந்த உணர்வு என்றும், சொல்லிக் அர்த்தம் என்று ஏலவே புளக்கத்திலுள்ளவைகளுக்கான புதிய வெளிகளை இன்னும் அகழ்ந்து கொண்டு அதை விரிவுபடுத்த முயற்சிப்பதே இலக்கியம். அல்லது கவிதை.

நான் எப்போதம் பைத்தியகார மனநிலையில் கவிதை எழுதுவதே இல்லை. மிகத் தெளிவாக இருக்கும்போது மாத்திரமே எழுதியிருக்கிறேன். பைத்திய மனநிலையில் எழுதலாமென்று எனக்கு நம்பிக்கை இல்லை. அந்த மனநிலையில் வேறுவகை வேலைகள்தான் செய்திருக்கிறேன். செய்வதையும் பார்த்திருக்கிறேன். அந்த மனநிலையில் எழுதுபவர்கள் பாக்கியவான்கள். நான் அப்படி செய்யாததினால், அந்த மனநிலையில் எழுதலாம் என்பதில் எனக்கு பெரும் சந்தேகமிருக்கிறது.


Lakshmanan Cbe ·

அசோகமித்திரன் சொல்லும் கவிதையின் காலம் முடிந்துபோய்விட்டது.அப்போதும் அது வெறும் நினைவு சேமிப்புக்கிடங்காக மட்டும் இருக்கவுமில்லை 'போலச்செய்தல்' போல் மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படும் சொல்லாடல்களின் மூலம் ஒரு பொருளுக்கு சக்தியை ஏற்றிவிடும் 'போலச் சொல்லல்' இருந்திருக்கிறது. கவிதை அசோகமித்திரனை தாண்டிப்போய் வெகுகாலமாகிவிட்டது.

Friday, January 24, 2014

திமுகவை அழித்தது வீரமணிதான் - அழகிரி ஆவேசம்.. கலைஞர் கைதை வரவேற்ற வீரமணியின் உரை இணைப்பு


அழகிரி நீக்கத்தை வரவேற்பதாகவும் , திமுக இதன் மூலம் விஸ்வரூபம் எடுத்து இருப்பதாகவும் தி க தலைவர் கி வீரமணி சொல்லி இருக்கிறார்.

இதற்கு பதிலடி கொடுத்த அழகிரி , கலைஞர் கைதின் போது வீரமணி சொன்னதை திமுகவினர் மறக்கவில்லை ...திமுக அழிவுக்கே வீரமணிதான் காரணம்... வீரமணி அரசியல் வியாபாரி கூட அல்ல..அரசியல் ****** என சொன்னார் ( டீவியில் சென்சார் செய்தே ஒளிபரப்பானது ).

சரி,  கலைஞர் கைதின்போது வீரமணி என்னதான் பேசினார்?

இதோ ..உங்கள் பார்வைக்கு...

*******************************************************

கலைஞர் கைதின் போது , வீரமணி காணொளிகள் , டாக்குமெண்டுகள் ஆதாரங்களுடன் பெரியார் திடலில் பேசியதன் ஒரு பகுதி...

கடந்த 5 ஆண்டுகாலத்திலே மிக முக்கியமான பணியை தி.மு.க. தலைவர் எதை செய்தார்? அன்றைய முதலமைச்சர் திருவாளர் கருணாநிதி அவர்கள். ரொம்ப இலாவகமாகச் சொன்னார்.

பொது மக்களே நீங்கள் எங்களுக்கு உத்தரவு கொடுத்திருக்கின்றீர்கள். என்ன? ஜெயலலிதா அவர்கள் மீது வழக்கு போடுவது என்று - வேறு எதையும் பொதுமக்கள் தேர்தல் அறிக்கையில் கேட்கவில்லை. நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கின்றீர்கள். எனவேதான் ஜெயலலிதா மீது வழக்கு போடுகின்றோம் என்று சொல்லி 46, 47 வழக்குகளைப் போட்டிருக்கின்றார்கள். தொடர்ச்சியாக வழக்கு, வழக்கு என்று போட்டுக் கொண்டிருந்தார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை கைது செய்தார். சிறையில் வைத்தார். அப்பொழுதுகூட ஒரு அறிக்கை எழுதினோம். ஆத்திரப்படக்கூடிய தி.மு.க. தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறோம் - பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். ஒரு சார்பு நிலையை திராவிடர் கழகம் ஒரு போதும் எடுக்காது. நடுநிலையில் இருந்து சொல்லுகின்றோம். அந்த நடுநிலை பல பேராலே பாராட்டப்படுகின்றதா - இல்லையா? என்பதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்களுக்குச் சரி என்பதை எடுத்துச் சொல்லுகின்றவன் தான் பெரியார் தொண்டனே தவிர, யாருக்காகவும் என்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ளாதவன் தான் பெரியார் தொண்டன். ஆகவே அந்த அடிப்படையிலே அப்பொழுது நான் சொன்னேன். ஒரு தவறான முன்மாதிரியை நீங்கள் உருவாக்குகின்றீர்கள்.

ஒரு ஆட்சி நடக்கின்றபொழுது எந்த முதலமைச்சர் வந்தாலும் ஃபைலிலே கையெழுத்துப் போடக்கூடிய நிலை வரும். அமைச்சர்கள் போடுகிறார்கள். அலுவலர்கள் போடுகிறார்கள். ஆகவே முதலமைச்சர், அமைச்சர், அதிகாரிகள் எல்லோர் மீதும் வழக்கு போடுகிற ஒரு தவறான முன் மாதிரியை உருவாக்கி விட்டீர்கள். அவர்களை எல்லாம் கைது செய்து உள்ளே போடுகின்றீர்களே அது எங்கே போய் நிற்கும்? இது எங்கே போய் முடியும்? இது ஒரு தவறான முன் மாதிரி ஆகாதா என்றுஅப்பொழுதே கேட்டோம். நாங்கள் சொல்வதை அவர் கேட்கவில்லை. உடனே தி.மு.க தலைவர் 5 இலட்சம் பேசுகிறது என்று சொன்னார்.

என்னுடைய வாதத்தை சந்திக்க முடியாதவர்கள். என்னைத் தனிப்பட்ட முறையிலே கொச்சைப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றார்கள். நான் அதைப் பற்றிக் கவலைப்படாதவன். ஆனால், அவருக்கு என்ன பெயர்? எனக்கென்ன பெயர் என்று எல்லோருக்கும் தெளிவாக தெரியும். சர்க்காரியா என்னைப் பார்த்து விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்தவன் வீரமணி என்று சர்டிஃபிகேட் கொடுக்கவில்லை. ஆகவே நான் அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. நான் பெட்டி வாங்கிக் கொண்டு பேசுகின்றேன் என்று தி.மு.க. தலைவரே முரசொலியில் கார்ட்டூன் போடுகின்றார். மணி என்பது அவருடைய பெயரிலேயே இருக்கிறது என்று சொல்லுகின்றார்.

இவ்வளவையும் அவர்கள் சொன்ன நேரத்திலே நான் ஒரு கேள்வி கேட்டேன். இதுவரை அந்தக் கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை. சரி. உங்களை ஏறத்தாழ 23 ஆண்டுகாலம் ஆதரித்தோமே- நீங்கள் அதற்கு எத்துணை முறைபெட்டிக் கொடுத்தீர்கள்? எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என்ற கணக்கை தயவு செய்து வெளியிடுங்கள். இதை வெளியிடக் கூடிய தெம்போ, திராணியோ, தைரியமோ உங்களுக்கு உண்டா?

...... ஒரு பொதுத் தலைவரை கைது செய்யும்பொழுது கிளர்ச்சிகள், தேவையற்ற அடிதடிகள், அசம்பாவிதங்கள், துப்பாக்கிச் சூடுகள் இவைகள் எல்லாம் நடக்கும் என்று எண்ணித்தான் இரவிலே கைது செய்தார்கள். கைது செய்வார்கள். பெரிய தலைவர்களை கைது செய்யும்பொழுது நீண்டகாலமாக இருக்கின்ற நடைமுறை இதுதான். இதை நான் நியாயப்படுத்துவதற்காக சொல்லவில்லை.

எத்தனையோ தலைவர்களை இப்படி எத்தனையோ முறை கைது செய்திருக்கிறார்கள். போலீசார் அழைத்தவுடன் வந்திருந்தால் இந்த மாதிரியான பிரச்சினைகளுக்கெல்லாம் இடம் உண்டா? இவர் வீட்டிற்குள்ளேயே இருந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் செல்ஃபோனில் தகவல் கொடுக்கின்றார் சன் டி.வி.க்கு, மாறனுக்கு. இதற்குரிய ஆதாரங்கள், தொடர்ச்சியாக நடைபெற்ற சம்பவங்கள் - முரசொலியிலே வந்த செய்திகள் - இப்படி கத்தை, கத்தையாக என்னிடத்திலே ஆதாரங்களாக உள்ளன.

எந்த அரங்கத்திலே வேண்டுமானாலும் நான் வாதாடுவதற்குத் தயாராக இருக்கின்றேன். தி.மு.க. தலைவர் அவருடைய வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திடம் தொலைபேசியிலே பேசினேன் என்று சொல்லுகின்றார். தி.மு.க. தலைவர் எதிர்பார்த்த சன் டி.வி. வரவேண்டும். அவருடைய மருமகன் மத்திய அமைச்சர் மாறன் வரவேண்டும். அதற்காக அவரை அழைத்துக் கொஞ்சம் சரளமாகப் பேசுகின்றார்கள். அதை எல்லாம் போலீஸ் டி.வி.யிலே, ஜெயா டி.வி.யிலே காட்டியிருக்கின்றார்கள். தி.மு.க. தலைவரிடம் ரொம்ப மரியாதையாகத்தானே காவல்துறையினர் சொல்லுகின்றார்கள். எதற்காக வந்திருக்கின்றீர்கள் என்று இவர் கேட்கிறார்.அய்யா உங்கள் மீது வழக்குப் போடப்பட்டிருக்கிறது என்று சொல்லுகின்றார்கள். இதற்கு அரஸ்டு கார்டு என்பதைக் கொண்டு போனாலே போதும்.

மற்றவர்கள் பொத்தாம் பொதுவில் சொல்லுகின்றார்கள். போலீசார் வாரண்டே இல்லாமல் போயிருக்கிறார்கள் என்று; இங்கே பல வழக்கறிஞர்கள் அமர்ந்திருக்கின்றார்கள். இதோ குற்றவியல் நடைமுறைச் சட்டம் இருக்கிறது. இதிலே மிக முக்கியமான ஒரு பகுதி இருக்கிறது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால், இது 41-ஆவது விதி. வாரன்ட் இல்லாமல் ஒரு குற்றத்தில் கைது செய்யலாம் என்றிருக்கிறது. பதினான்கு வருடம் முதலமைச்சராக இருந்த தி.மு.க. தலைவருக்கு இது தெரியாதா? இது சட்டவிரோதமா? இல்லை. கலைஞர் கருணாநிதி என்பவர் ஒருவர் வருவார். அவருக்காகவே இப்படி ஒரு சட்டத்தை எழுதி வைத்திருக்கின்றார்களா?

போலீஸ் அதிகாரி சொல்லுகின்றார். அய்யா உங்கள் மீது மேம்பாலம் கட்டியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லுகின்றார். உடனே, முன்னாள் முதல்வர் தி.மு.க. தலைவர் கேள்வி கேட்கின்றார். பாலம் நானா கட்டினேன்? என்று. பொது மக்களே இனிமேல் உங்களுடைய பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். தாஜ்மகாலை யார் கட்டியது என்றால், ஆக்ராவிலே இருந்த கொத்தனார் என்று சொல்லிக் கொடுங்கள். (பலத்த கைதட்டல்) தயவு செய்து மும்தாஜ், ஷாஜகான் பெயரைச் சொல்லாதீர்கள்.

இந்த மாதிரி பிரச்சினைகள் வரும் என்பதால்தான் நான் 5 வருடத்திற்கு முன்னாலேயே அறிக்கை கொடுத்திருக்கிறேன். நான் பெரிய தீர்க்கதரிசி என்பதற்காக அல்ல. எப்படி எப்படி இவைகள் எல்லாம் மாறும் என்பதற்காக. முதலமைச்சர் என்ற முறையிலே நீங்கள் (கருணாநிதி) வழக்குப் போடுவதற்கு கையெழுத்து போட்டால் இது எல்லா முதலமைச்சர்களுக்கும் சங்கடத்தை உருவாக்கும் என்று சொன்னோம். அன்றைக்கு என்ன செய்தார்கள்? அரசாங்க உத்தரவைத் திருத்தினார்கள். அல்லது அதற்கு அனுமதி கொடுத்தார்கள். ஆகவே கையெழுத்துப் போட்ட அதிகாரிகள் மீது வழக்கு; கையெழுத்துப் போட்ட அமைச்சர்கள் மீதும் வழக்கு என்று போட்டீர்கள். இப்பொழுது அதே நிலைதான் திரும்பி வந்திருக்கிறது.

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா