Monday, August 11, 2014

புரோக்கராக மாறிய எழுத்தாளர்

பேசாமல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடலாம் என நினைத்தபோது பலரும் அந்த திருமண புரோக்கரையே சிபாரிசு செய்தனர். அவரை பார்ப்பதற்கு அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பதே கஷ்டமாம். எப்படியோ கஷ்டப்பட்டு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி விட்டு அவர் அலுவலகம் சென்றேன்.  வரவேற்பு அறை முதல் பார்க்கிங் வரை ஏசி செய்யப்பட்ட கல்லூரி போல அம்சமான இருந்தது. “ சார், உள்ளே வரலாங்களா “ என பவ்யமாக கேட்டு விட்டு உள்ளே நுழைந்தேன்.

அட. இவன் நம்ம சுப்புணியாச்சே... பார்த்ததும் திகைத்தேன். என கல்லூரி நண்பன்.  லேசாக தொப்பை விழுந்து இருந்தது. நெற்றியில் பொட்டு வைத்து இருந்தான். ஆனால் அடையாளம் கண்டுபிடித்து விட்டேன்.

“ எப்படிறா மாப்ளே இருக்கே.. எழுத்தாளன் ஆவப்போவதா சொன்னே.. மேரேஜ் புரோக்கரா எப்படி மாறின? “ கேட்டேன்..

அவன் கொசு வர்த்தி சுருளை எடுத்தான். தக்காளி . ஃபிளாஷ்பேக்கா?

ஆமாண்டா... எனக்கு நாவல் எழுத ரொம்ப ஆசை,, எழுதியும் முடிச்சுட்டேன். ரிலீஸும் பண்ணிட்டேன். அன்று ஞாயிற்று கிழமை . குவார்ட்டர் அடித்து விட்டு குப்புறக்க படுத்து இருந்தேன். அப்ப ஒரு போன் வந்தது . அதுதான் என் வாழ்க்கையை புரட்டி போட்ருச்சு.

போனை அட்டெண்ட் செய்தேன்.

“ ஹலோ , சார் நான் உங்க தீவிர ரசிகன் “

“ ம்ம்.. ரொம்ப சந்தோஷம் “

“ உங்க புக் படிக்க துடிக்கிறேன்.. எங்கே கிடைக்கும் ? “

“ கடைல கிடைக்கும் “

“ அது இல்லை சார்/// லிங்க் கிடைக்குமா? “

“ தெரியலையே.. ஆன்லைன்ல இருக்கானு தெரியல..கடைல கேட்டு பாருங்க “

” வாங்க ஆசைதான் சார்... ஆனா புக் விலை அய்ம்பது ரூபாய்.. அவ்வளவு காசு கொடுத்து வாங்க வசதி இல்லை”

“ சரி. லைப்ரரில போய் படிங்க”

” போனேனே...அங்கே இல்லை “

” எந்த லைப்ரரி? “

“ எங்க தெருவுல இருக்கிற நகராட்சி நூலகம் சார் “

“ சரி.. பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கிற நூலகம் போய் பாருங்க”

“ சார்,,, அவ்வளவு தூரம் செலவழிச்சி போக வசதி இல்லை “

“ அப்ப பரவாயில்லை... படிக்காதீங்க...அது அப்படி ஒண்ணும் பெரிய இலக்கியம் இல்லை ... நானே அதை படிக்கல”

“ சார் சார்.. நான் உங்க ரசிகன்.. படிக்கலைனா என் ஆத்மா சாந்தி அடையாது “

” அப்ப படிங்க “

“ சார் ,, அதுக்கு வசதி இல்லை.. “

“ ஏன்? “

“ சம்பளம் இல்லை “

“ ஏன் சம்பளம் இல்லை “

“ ஏனா எனக்கு வேலை இல்லை “

“ அடப்பாவி... சரி நானே வேலை வாங்கி தந்து தொலைக்கிறேன். கொக்ரே மாக்ரேனு ஒரு கம்பெனி உங்க ஏரியால இருக்குல...அங்கே ஆள் எடுக்கிறாங்க..போய் பாருங்க”

“ போனேன் சார்... ஆனா எனக்கு வேலை இல்லையாம் ?”

“ ஏண்டா ராசா ? “

“ ஏனா அங்கே கல்யாணம் ஆனவங்களுக்குத்தான் வேலையாம் “

“ சரிடா..கல்யாணம் பண்ணி தொலைக்க வேண்டியதுதானே”

“ முடியாது சார் “

“ ஏண்டா “

“ வேலை இருந்தால்தான் பொண்ணு தருவாங்களாம் “

“ தக்காளி , நீ ஆணியே பிடுங்க வேணாம்”

“ சார்..சார்..அப்படி சொல்லாதீங்க... நான் உங்க தீவிர ரசிகன் ..உங்க புக்கை படிச்சே ஆகணும் “

“ சரி சரி.. நானே உனக்கு பொண்ணு பார்த்து , கல்யாணம் பண்ணி வைக்கிறேன்”

இப்படித்தான் நான் புரோக்கர் ஆனேன்.. நல்ல காசு...இப்படியே செட்டில் ஆயிட்டேன் என்றான் நண்பன்..




Tuesday, July 22, 2014

வேலை இல்லா பட்டதாரி - சதுரங்க வேட்டை . ஓர் ஒப்பீடு


தமிழ் சினிமாவை அழித்து வருவது மசாலா படங்கள் அல்ல.. மாற்று சினிமா என்ற போர்வையில் வெளிவரும் ஏமாற்று சினிமாக்கள்தான் தமிழ் சினிமாவை உருப்பட விடாமல் செய்கின்றன.

சமீபத்தில் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டு இருக்கும் இரண்டு படங்களில் ஒன்று விமர்சகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது ..அது சதுரங்க வேட்டை..  இன்னொரு படம் வேலை இல்லா பட்டதாரி.. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது..

கிராமத்தில் இருந்து வந்த ஒருவன் முதன்முறையாக ஜூவில் யானையை பார்த்தான்.. இப்படி ஒரு விலங்கு இருக்க வாய்ப்பில்லையே என குழம்பினான். அதுபோல சினிமா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற டெம்ப்ளேட் சிந்தனையில் இருப்பவர்கள் , வேலை இல்லா பட்டதாரியின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் , புரிந்து கொள்ள முடியாமல் திகைக்கின்றனர்.. சுவாரஸ்யமான படம் என்றால் சில இலக்கணங்கள் வேண்டும் என எங்கேயாவது படித்து விட்டு , அதன்படி இந்த படம் இல்லையே..பிறகு எப்படி ஓடுகிறது என குழம்புகிறார்கள்..  அந்த இலக்கணங்கள்படி எடுக்கும் படங்கள் ஓடுவதில்லையே என்பதும் அவர்களுக்கு குழப்பமாக இருக்கிறது..

சராசரி ரசிகனின் பார்வையில் இரண்டு படங்களின் வெற்றியையும் அலசுவது முக்கியம்..

சதுரங்க வேட்டை படம் அதிரடியாக ஆரம்பிக்கிறது...ஆரம்பமே சுவாரஸ்யம்.. செட்டியாரை ஃபிராடு செய்து ஏமாற்றுவது அட என சொல்ல வைக்கிறது... ஆனால் அதை தொடர்ந்து சுவையான திருப்பங்கள் எதுவும் ஏற்படுவதில்லை..   அந்த எதிர்ப்பும் இல்லாமல் தொடர்ந்து அடுத்தடுத்து ஹீரோ செய்யும் ஃபிராடு வேலையின் தொகுப்பாக படம் செல்கிறது...

சோகமான அம்மா  ஃபிளாஷ்பேக் , ஹீரோயினின் அன்பால் ஹீரோ திருந்துவது என்பது போன்ற வழக்கமான காட்சிகளை வைத்து படத்தை ஒரு ஷேப்புக்கு கொண்டு வந்து விட்டார்கள்..  ஒரே பாடலில் பணக்காரன் ஆவது போல , ஒரே ஃபிளாஷ்புக்கில் சர்வ வல்லமை பொருந்திய அறிவாளியாகி விடுகிறார் ஹீரோ..

ஆனால் இந்த ஃபார்முலா படத்தை வித்தியாசமான படம் போன்ற தோற்றத்தை கொடுத்ததில் இயக்குனரின் புத்திசாலித்தனம் தெரிகிறது.. வசனங்கள் அபாரம்..

நான் யாரையும் ஏமாற்றவில்லை.. ஏமாற விரும்புபவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தேன்..

தமிழ் நாட்டை சிங்கப்பூர் ஆக்குவேன் என சொல்லி ஓட்டு வாங்குகிறார்கள்..ஆனால் செய்வதில்லை..அவர்கள் மேல் வழக்கு போட முடியுமா போன்ற வசனங்கள் கைதட்டல் வாங்குகின்றன..
ஆனால் இதெல்லாம் விஜயகாந்த் ஃபார்முலாதான்..

வேலை இல்லா பட்டதாரி எப்படி இருக்கிறது..

வேலை இல்லாத இளைஞர் , கண்டிப்பான அப்பா , பாசமான அம்மா, பக்கத்து வீட்டு இளம்பெண் என பல முறை பார்த்த கதை.. வித்தியாசமான படம் என பம்மாத்து செய்யாமல் எடுத்தது முதல் வெற்றி...  இன்னும் சொல்லப்போனால் அந்த ஃபார்முலாவை ஒவ்வொரு கட்டத்திலும் கிண்டல்தான் செய்திருக்கிறார்கள்...  சண்டை காட்சியில் சண்டையை கிண்டல் செய்வது , பாடலை கிண்டல் செய்வது செம ரகளையாக படம் இருக்கிறது.. அம்மா செண்டிமெண்டை வைத்து அழ வைக்க முயலவில்லை.. காதல் காட்சிகளும் வெகு இயல்பு,,,,  உன்னத காதல் என்ற பம்மாத்தெல்லாம் இல்லை... பாடல்கள் பட்டாசு,,,

இப்படிப்பட்ட படங்களும் தேவை... சதுரங்க வேட்டை போன்ற புத்திசாலித்தனமான படங்களும் தேவை...

புத்திசாலித்தனமும் இல்லாமல் , மக்களை கவரும் அம்சங்களும் இல்லாமல் வெளிவரும் ஃபேக் படங்கள்தான் ஒழிய வேண்டும்..




Tuesday, July 8, 2014

பெண்ணின் மூன்று நிலைகள் - ஒரு கட்டுடைப்பு


 நல்ல பேச்சாற்றல் கொண்ட யாரையாவது பாராட்டும்போது , உன் நாவில் சரஸ்வதி இருக்காடா என சிலர் பேச்சு வழக்கில் சொல்வார்கள்.. உண்மையில் சரஸ்வதி என ஓர்  ஆள்  நாக்கில் இருக்க முடியாது.. கல்வியை அல்லது ஞானத்தை உருவகித்து அப்படி சொல்கிறார்கள்..

 புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன்,,,அப்படியே நித்ராதேவி எனை தழுவ , தூக்கத்தில் ஆழ்ந்தேன் என பேச்சு வாக்கில் சொல்கிறீர்கள் என்றால் , கண்ட பெண்கள் உங்களை தழுவ அனுமதித்தீர்களா என உங்கள் மனைவி சண்டை போட்டு உங்களை டைவர்ஸ் செய்ய மாட்டார்.. நித்ராதேவி என தூக்கத்தை உருவகப்படுத்தி சொல்கிறார்கள்..

அதுபோல , மத நூல்களில் இருக்கும் கவித்துவமான கருத்துகளை ரசிக்க பழக வேண்டும். ஒளி உண்டாகக்கடவது என கடவுள் சொன்னதும் ஒளி உண்டாயிற்று என சொல்கிறார்கள் என்றால் அதை வரிக்கு வரி பொருள் கொள்ளாமல் , ஆழ்ந்து யோசித்து உள்ளே போக வேண்டும்..

உபனிஷத்துகள் , சூக்தங்கள் என பல இருக்கின்றன.. அதை எல்லாம் படிக்க நேரம் இருக்காது.. பரவாயில்லை.

ஆனால் திருமண மந்திரங்கள் அவ்வப்போது கேட்கிறோம். அவ்வபோது திருமணம் செய்து கொள்கிறோம் என சொல்லவில்லை.. திருமண நிகழ்வில் கலந்து கொள்ளும்போது கேட்கிறோம் அல்லவா. அவ்ற்றின் அர்த்தங்களை ரசனையோடு ரசித்து இருக்கிறோமோ..மெய்ப்பொருள் காண முயன்று இருக்கிறோமா என்றால் இல்லை ..

மாங்கல்யம் தந்துனானே என லேசாக தெரியும்.. அதன் பின் வரும் வரிகளை கவனியுங்கள்.. இதை கட்டுடைத்து பார்ப்போம்..

சோமஹ ப்ரதமோ விவிதே 
கந்தர்வோ விவித
 உத்ரஹ த்ரியோ அக்னிஸ்டே பதி
 துரியஸ்தே மனுஷ்ய ஜாஹ

மணப்பெண்ணே.. சந்திரனுக்கு உரியவளாக இருந்தாய்,,,, பிறகு கந்தர்வனுக்கு உரியவனாக இருந்தாய்,,, பிறகு அக்னி உன்னை அடைந்தது... கடைசியாக மனிதனை அடைகிறாய்,..

இதற்கு என்ன அர்த்தம்? இதை எப்படி ரசிப்பது.?

பெண்ணே... முதலில் சந்திரனுக்கு உரிய குளிர்ச்சியுடன் சிறுமி என்ற நிலையில் இருந்தாய்,..விளையாட்டுத்தனம் குறும்பு போன்ற இயல்புகளுடன் இருந்தாய்,, அதன் பின் அழகு தெய்வம் உன்னை ஆட்கொண்டது.. அழகுடன் பொலிவு பெற்றாய்... அதன் பின் பெண்மைக்கே உரிய உக்கிரமான  நெருப்பு உனக்குள் குடியேறியது...  பிடித்தவரை நேசித்தல் , பிடிக்காதவனை தூக்கி எறிதல் போன்றவற்றுக்கான தைரியம் குடியேறியது.. அப்படி முழுமையான பெண்ணாக மாறியுள்ள நீ இந்த மணமகனை கைப்பிடிக்கிறாய்..

இப்படி கவிப்பூர்வமாக சொல்கிறார்கள்... அக்னி அவளுக்குள் குடியேறி விட்டதா என பயப்படாதீர்கள்...அதெல்லாம் உருவகங்கள்தான்...    

சந்திரன் , கந்தர்வன் , அக்னிதேவன் என்பதெல்லாம் பாய் ஃபிரண்டுகள் பெயர் அன்று..  சந்திரனின் குளிர்ச்சி , தேவதைகளுக்குரிய அழகு , அக்னி பிழம்பை போன்ற துணிச்சல் என அவள் இருக்கிறாள் என்பதே அதன் அர்த்தம்... வாழ்க்கையை ரசித்து வாழுங்கள்..


இனி கண்ணீர் வேண்டாம் ஒரு கவிதை செய்க
எங்கள் கானங்கள் கேட்டுக் காதல் செய்க

நம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க
நலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க
நம் பூமி மேலே புது பார்வை கொள்க
நம் இயற்கை மேல் இன்னும் இச்சை கொள்க
கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க
பாறைக்குள் வேரைப் போலே வெற்றி கொள்க

Monday, June 30, 2014

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு.ஒன்று மனசாட்சி ( இடாலோ கால்வினோ கதையின் சுருக்கப்பட்ட வடிவம்)

அந்த நாட்டில் திடீரென யுத்த மேகம் சூழ்ந்தது,, அவன் முதல் ஆளாக ராணுவத்தில் சேர்ந்தான் .. எல்லோரும் பாராட்டினார்கள்..

என் எதிரி ஆல்பர்ட்டோவை கொன்றே ஆக வேண்டும்..அதற்காகத்தான் ராணுவத்தில் சேர்கிறேன் என்றான்.

எல்லோருக்கும் ஆச்சர்யம்.. யார் அவன் .. அவன் மேல் ஏன் அவ்வளவு கோபம் என கேட்டனர்..

அவன் மோசமான ஆள்.. எனக்கு ரொம்ப தீமைகள் செய்திருக்கிறான்,. அவனை கொன்றே ஆவேன் என்றான்..

தம்பி ,,,அப்படி எல்லாம் உன் இஷ்டத்துக்கு கொல்ல முடியாது..  நம் எதிரிகளை மட்டும்தான் கொல்ல முடியும் என்றனர்,

அட அது எனக்கு தெரியாதா... ஆல்பர்ட்டோ மிக மோசமான எதிரி..  நேர்மை அற்றவன்.. அவனே கொன்றே தீர்வேன்.. என் ஃபிளாஷ் பேக் கேட்டால் உங்களுக்கு என் கோபம் புரியும் என்றான்..

சரி சரி..கொன்று தொலை என்றனர்..

”அவன் எங்கு இருக்கிறான் ?”

“ அதெல்லாம் எங்களுக்கு தெரியாது “

“ அப்ப சரி.. நானே போய் அவனை தேடிக்கண்டு பிடித்து கொல்கிறேன் “

“ தம்பி..அப்படி எல்லாம் செய்யக்கூடாது... நாங்கள் அனுப்பும் இடத்துக்கு போக வேண்டும் ..அங்கு யாரை வேண்டுமானாலும் கொன்று கொள் “

“ அதெப்படி எனக்கு எந்த தீங்கும் செய்யாதவர்களை கொல்ல முடியும்.. ஆல்பர்ட்டோ எனக்கு தீங்கு செய்தவன்... அவனை மட்டும் கொல்கிறேன்”

இந்த விவாதத்தால் களைப்படைந்து போன ஒருவர் போர் என்பதை விளக்கி சொன்னார்..

“ அப்படி எல்லாம் அப்பாவிகளை கொல்ல முடியாது.. நான் வீட்டுக்கு போகிறேன் .. எனக்கு வேலை வேண்டாம் “ என்றான் அவன்..

“ அதெல்லாம் முடியாது..உன் பெயரை சேர்த்து விட்டோம் ..போரிட்டுதான் ஆக வேண்டும் “ என சொல்லி விட்டனர்..

அவர்களுடன் சேர்ந்து போய் எதிரிகளை கொல்ல ஆரம்பித்தான்..  ஓவ்வொரு கொலைக்கும் ஒவ்வொரு அவார்டு கிடைத்தது..அவார்டுகள் வாங்கி குவித்தான்.. கடைசியில் எதிரி நாடு சரணடை ந்து போர் முடிந்தது..

ச்சே..தேவையே இல்லாமல் அப்பாவிகளை கொன்று விட்டோமே என வருந்தியபடி அந்த ஊரை சுற்றி வந்தான்..எல்லா பதக்கங்களையும் கொல்லப்பட்டோர்கள் குடும்பத்தினருக்கு தேடிப்போய் கொடுத்தான்..

ஒரு நாள் தற்செயலாக அல்பர்ட்டோவை பார்த்து விட்டான்.. தக்காளி , ஒரு வழியா மாட்டினான் என நினைத்தபடி அவனை அங்கேயே கொன்று விட்டான்..

அவனை கைது செய்தார்கள்.. விசாரணையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது..

மனசாட்சியில்லாமல் செய்த கொலைக்கு விருதுகள்..மனசாட்சிப்படி செய்த கொலைக்கு தண்டனையா.. மனசாட்சிப்படி நடப்பது தவறா என மீண்டும் மீண்டும் கேட்டான்.. யாரும் அவன் குரலை பொருட்படுத்தவே இல்லை

Sunday, June 29, 2014

ராமன் தேடிய சீதை ( இட்டாலோ கால்வினோ சிறுகதையின் சுருக்கப்பட்ட வடிவம்)


 அந்த அடுக்கு மாடி கட்டடத்தின் கீழே நின்று கொண்டிருந்தேன்..கைகளை குவித்து “ தெரசா “ என சத்தமான குரலில் அழைத்தேன்..  எந்த சலனமும் இல்லை..   மீண்டும் கத்தினேன்..ம்ஹூம்..
வழிப்போக்கர் ஒருவர் என்னை பார்த்து சொன்னார் “ சார்..இவ்வளவு மெதுவா கத்தினா மேல் மாடில கேட்காது.. இருவரும் சேர்ந்து அழைப்போம் “ என்றார்.. இருவரும் சேர்ந்து ஒருமித்த குரலில் கத்தினோம்.. “ தெரசா ஆஆஅ “...ம்ஹூம் .. அவள் வரவில்லை..

இன்னும் சிலர் கூடினர்.. உதவிக்கு வந்தனர்.. எல்லோரும் சேர்ந்து கத்தினோம் “ தெரசாஆஆஆஆஆஅ “ பயனில்லை.. சிறிது நேரத்தில் மேலும் சிலர் கூடி விட்டனர்..

ஒன் டு த்ரீ சொல்லி ஒன்றாக கத்தினோம்...

மீண்டும் மீண்டும் முயன்று பார்த்தோம்..பயனில்லை

“ தெர்சா மேலே தான் இருக்கிறாளா.. எங்காவது போய் விட்டாளா “ கேட்டான் ஒருவன்..

“ தெரியலையே “ என்றேன் நான்,,

” சாவி இல்லாமத்தான் மேலே போக முடியுமா கத்துறீங்களா “ கேட்டான் ஒருவன்..

“ சாவி இருக்கு .இந்த வீட்டு சாவி இல்லை.. என் வீட்டு சாவிதான் இருக்கு... “ என்றேன் நான்..

அப்ப இங்கே யாரு இருக்கா சற்று எரிச்சலாக கேட்டான் ஒருவன்,,

தெரியலையே என்றேன் நான்,,

தக்காளி..அப்ப ஏண்டா தெரசா தெரசானு கூப்பிடுற என்றான் ஒருவன்...

அந்த பேர் பிடிக்கலைனா வேறு பேரு சொல்லுங்க ..கூப்பிட்டு பார்ப்போம் என்றேன் நான்,,

தக்காளி,.,விளையாடுறியா என்றார் கூட்டத்தில் ஒருவர்..

 ச்சே ச்சே நான் ஏன் விளையாடபோறேன் என அமைதியாக சொன்னேன்.

சரி சரி..கடைசியாக ஒரு முறை கூப்பிட்டு பார்ப்போம்...வரலைனா சங்கத்தை கலைப்போம் என ஒருவர் சொன்ன யோசனையை கேட்டு கடைசியா கத்தினோம் “ தெரசாஆஆஆ “

பயனில்லை.. கூட்ட்டம் கலைந்தது...

நானும் அங்கிருந்து கிளம்பினேன்,,

ஏதோ குரல் கேட்டது போல இருந்தது “ தெரசாஆஆஆ ”

எவனோ ஒருவன் மனம் தளராம டிரை பண்றான் போல...

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா