Thursday, November 29, 2012

நாகூர் சந்தன கூடு விழாவுக்கு அரசு உதவி - இரு வேறு கருத்துகள்


   நண்பர் ஒருவர் எஸ் எம் எஸ் அனுப்பி இருந்தார் . இஸ்லாம் மத கோட்பாடுக்களுக்கு எதிரான ஒரு விஷ்யத்துக்கு தமிழக அரசு ஸ்பான்சர் செய்வதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நானும் எழுத வேண்டும் என்றும் சொல்லி இருந்தார்.

அப்படி என்ன நடந்தது என விசாரித்த போது தெரிய வந்தது இது.  அரசு வெளியிட்ட செய்தி குறிப்பை பாருங்கள்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நாகூர் தர்காவின் முன்னாள் தலைவரும், 10-வது தலைமுறை பரம்பரை ஆதீனமுமாகிய ஹஸ்ரத் அல்ஹஜ் எஸ்.எஸ். காமில் சாஹிப் காதிரி சந்தித்தார்.
இச்சந்திப்பின்போது, இந்தியாவில் உள்ள புனித தலங்களில் சிறப்பு வாய்ந்ததும், இஸ்லாமிய புனித தலங்களில் முக்கியமானதும், சமூக நல்லிணக்கத்திற்கும், சமுதாய ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக ஹஸ்ரத் செய்யதினா செய்யது அப்துல் காதர் ஷாஹுல் ஹமீது நாகூர் தர்கா விளங்கி வருகிறது என்றும், நாகூர் ஆண்டகை அவர்களின் சந்தனக்கூடு கந்தூரி (உரூஸ்) ஆண்டுதோறும் இஸ்லாமிய ஹிஜிரி ஆண்டின் ஜமாத்துல் ஆகிர் மாதத்தில் நடைபெறுகிறது என்றும், புனித சமாதியில் சந்தனக்கூடு நாளன்று சந்தனக் கட்டைகள் அரைத்து சந்தனம் எடுக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, சமாதியில் பூசப்படுகிறது என்றும், இந்த சந்தனம் பூசும் விழா மிக மிக புனிதமானது என்றும் தெரிவித்து, இவ்விழாவிற்கு புனித சமாதியில் பூசுவதற்காக சுமார் 40 கிலோ சந்தனக் கட்டைகள், 3 லட்சம் ரூபாய் செலவில் விலை கொடுத்து வாங்கப்படுவதாகவும், புனிதமிக்க ஹஸ்ரத் ஆண்டகை அவர்களின் சந்தனக்கூடு கந்தூரி (உரூஸ்) விழாவின்போது புனித சமாதியில் சந்தனம் பூசுவதற்காக வாங்கப்படும் சந்தனக்கட்டைகளை மானியமாக அரசு வழங்கவேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார்.
நாகூர் தர்காவின் முன்னாள் தலைவரும், பரம்பரை ஆதினமுமாகிய ஹஸ்ரத் அல்ஹஜ்
எஸ். எஸ். சையத் காமில் சாஹிப் காதிரியின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த முதல்வர், நாகூர் ஆண்டகை அவர்களின் பெரிய கந்தூரி விழாவின் சந்தனக்கூடு நாளன்று புனித சமாதியில் பூசும் உபயோகத்திற்காக தேவைப்படும் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 40 கிலோ சந்தனக் கட்டைகளை விலையேதும் இல்லாமல் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


தர்க்கா வழிபாடு இஸ்லாம் கோட்பாடுகளுக்கு எதிரானது என சில இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.  எகிப்து போன்ற நாடுகளில் தர்காக்கள் இடிக்கப்படுகின்றன.

ஆனால் , தர்க்கா செல்வது ஏக இறைவனுக்கு இணை வைப்பது ஆகாது என்கின்றனர் இன்னொரு தரப்பினர்.  உடல் நலம் சரியில்லை என மருத்துவரிடம் செல்கிறோம். அதற்காக மருத்துவரை இறைவனுக்கு இணை வைக்கிறோம் என்று அர்த்தமா என லாஜிக்கலாக கேட்கிறார்கள் அவர்கள்.

 இறை நேசர்களுக்கு உரிய மதிப்பு கொடுப்பது இஸ்லாத்தில் ஏற்கப்பட்ட ஒன்று , அதை மீறி , இறைவனுக்கு இணை வைப்பு என்ற நிலைக்கு ஒரு போதும் சென்றதில்லை என்கிறார்கள் அவர்கள்.

       கவிஞர் அப்துல் ரகுமான் , இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் போன்றெரெல்லாம் தர்க்கா வழிபாடுகளை ஏற்க கூடியவர்கள்.  மார்க்கத்துக்கு எதிரான செயலாக இருந்தால் , அவர்கள் எப்படி இந்த வழிபாட்டை ஏற்பார்கள் என்ற கேள்வியும் யோசிக்க வைக்கிறது.

      ஆனாலும் இதில் கருத்து கூறும் அளவுக்கு எனக்கு இஸ்லாமிய அறிவு கிடையாது . எனவே இதை செய்தி என்ற அளவில் பதிவு செய்கிறேன்.

              என்னை பொருத்தவரை குணங்குடியார் தர்க்கா போன்ற இடங்களுக்கு அவ்வபோது செல்லக்கூடியவன். சுஃபியிசம் என்னை கவர்ந்த ஒன்று. குணங்குடியார் பாடல்களின் அடிமை.. ஆனால் இந்த செய்தி  குறித்து நான் கருத்து சொல்வதை விட , இஸ்லாமிய அறிஞர்கள்தான் கருத்து சொல்ல முடியும்.

இன்ஷா அல்லா  . இஸ்லாமிய அறிஞர்கள் பேட்டி எடுத்து வெளியிட முயற்சிகள் செய்ய இருக்கிறேன்.
     



12 comments:

  1. குணங்குடியார் தர்க்கா போன்ற

    //

    இது எந்த இடத்தில் இருக்கின்றது? ராயபுரம் என்று சொன்னார்கள்! மிகச் சரியான முகவரி கூற முடியுமா?

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆனந்த்,

    தர்க்காக்கள் (அல்லது சமாதிகள்) குறித்த இஸ்லாமின் பார்வை:

    1. அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும்போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். அவர்களின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்கள்’ (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி, முஸ்லிம்)

    2. ''எனது கப்ரை விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்துச் சொல்லுங்கள். அது என்னை வந்தடையும்'' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத்.)

    தன்னுடைய கப்ரை கூட விழா நடக்கும் இடமாக ஆக்க வேண்டாமென்று உத்தரவிட்டிருக்கின்றார்கள் நாயகம் (ஸல்). அப்படியிருக்க எப்படி சிலர் (சமாதி மீது சந்தானம் எல்லாம் பூசி) கந்தூரி விழா கொண்டாடுகின்றனர்?

    3. கப்ருகள் மீது நீங்கள் உட்காராதீர்கள். அதனை நோக்கித் தொழாதீர்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, "அபீமிர்சத்" என்ற நபித்தோழர் அறிவிக்கின்றார். (ஆதாரம் : முஸ்லிம் - முதல்பாகம்)

    4. 'நீ எனது கப்ருக்கு அருகில் நடந்து சென்றால் அதற்கு சஜ்தா செய்வாயா? என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் கேட்டார்கள். "அவ்வாறு நான் செய்ய மாட்டேன்" என நான் பதில் கூறினேன். அதற்கு அவர்கள் ஆம்! கப்ருக்கு சஜ்தா செய்யாதீர்கள் என்றார்கள். (ஆதாரம்: அபூதாவூத், அறிவிப்பவர் : கைஸிம்னு சயீத் ரளியல்லாஹு அன்ஹு, பக்கம் : 298 பாகம் 1)

    5. நாங்கள் புலாலா என்ற நபித்தோழரோடு இத்தாலியில் இருந்தோம். அங்கே எங்கள் தோழர் ஒருவர் இறந்துவிட்டார். (அவரை நாங்கள் அடக்கம் செய்தபின்) கப்ரை தரை மட்டத்திற்கு சமப்படுத்தும்படி புலாலா அவர்களுக்கு உத்தர விட்டார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பின்னர்,"கப்ரை தரைக்கு சமமாக ஆக்கும்படி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவிட்டதை நான் செவியுற்றிருக்கிறேன்" என்று கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம், முதல் பாகம் 312)

    6. "நபி (ஸல்) அவர்கள் கப்ருகளைப் பூசுவதையும், அதன் மீது உட்காருவதையும், அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்" (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 1610)

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  4. அப்புறம் சகோ ஆனந்த், இதுக்குறித்து நான் ஏற்கனவே ஒருமுறை உரையாடியதாக நியாபகம். மேலும் இங்கு நான் விவாதிக்கவும் விரும்பவில்லை. தெளிவான ஆதாரங்கள் கண்முன்னே இருக்கின்றன. விரும்புபவர்கள் எடுத்துக் கொள்ளட்டும், விரும்புபவர்கள் நிராகரிக்கட்டும்.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், இன்று தன் தளத்தில் சந்தன கட்டை வழங்கும் தமிழக அரசை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது போஸ்டர்களாகவும் ஒட்டப்படும் என்று தெரிகின்றது. அதன் விபரம் வருமாறு,

    ======
    நாகூர் தர்காவில் சந்தனக்கூடு நடத்தும் நாளில் சமாதியில் சந்தன கட்டைகள் அரைத்து சந்தனம் பூசுவதற்கு நாகூர் தர்காவின் முன்னாள் தலைவர் எஸ்.எஸ். காமில் காதிரி முதல்வரை சந்தித்து சந்தன கட்டைகளை மானியமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதை ஏற்று சந்தன கூடு நடக்கும் நாளில் மூன்று லட்சம் மதிப்புள்ள 40 கிலோ சந்தன கட்டையை இலவசமாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

    இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இல்லை. தர்காக்களை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்பதே நபிகளார் காட்டித் தந்த வழிமுறையாகும். இதற்கு மாற்றமாக இஸ்லாத்தின் பெயரால் சந்தனக்கூடு விழாவுக்கு சந்தனகட்டைகளை வழங்கிய தமிழக அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டிக்கிறது.

    கண்டனப் போஸ்டர் வாசகம்:

    சமாதிக்கு சந்தனக்கட்டை வழங்கி இஸ்லாத்தின் பெயரைக் கெடுக்கும் தமிழக அரசைக் கண்டிக்கிறோம்.

    இப்படிக்கு
    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
    ======

    செய்தியை படிக்க http://www.tntj.net/117446.html

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  5. @புதுகை அப்துல்லா... rsrm மருத்துவமனைக்கு வெகு அருகில் அந்த தர்க்கா உள்ளது... மஸ்தான் கோயில் என கேட்டால் சொல்வார்கள்..

    ReplyDelete
  6. @!ஆஷிக்... உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்கிறேன்... ஆனால் தர்க்கா வழிபாடு த்வறு என்றால் , மாபெரும் கல்வியாளர்களான அப்துல் ரகுமான் போன்றோர் , அதை ஆதரிக்க மாட்டார்களே ...

    ReplyDelete
  7. சகோ ஆனந்த்,

    //@!ஆஷிக்... உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்கிறேன்... ஆனால் தர்க்கா வழிபாடு த்வறு என்றால் , மாபெரும் கல்வியாளர்களான அப்துல் ரகுமான் போன்றோர் , அதை ஆதரிக்க மாட்டார்களே ...//

    இப்படியான லாஜிக்கில் அடிப்படையிலேயே பிரச்சனை உண்டு. காரணம், நானும் இப்படியான கேள்விகளை திரும்ப கேட்க முடியும். அதாவது, இறுதித்தூதர் தோன்றிய இடமான, மார்க்க ஆய்வாளர்கள் மிகுந்த இடமான சவூதி தர்க்கா வணக்கத்தை தடை செய்கின்றது. 1930-க்களில் அனைத்து தர்காக்களையும் இடித்தது. ஆக, சவுதியே தர்காவுக்கு எதிராக உள்ளதே? அப்படியானால் அது சரிதானே? - இப்படியாக நான் திரும்ப கேட்க முடியும். ஆனால் இப்படியான லாஜிக்கில் அர்த்தமில்லை. ஒருவர் (அவர் எவ்வளவு பெரிய கல்வியாளராக இருந்தாலும்) பின்பற்றுகின்றார் அல்லது பின்பற்றவில்லை என்பதை கொண்டு இதுதான் சரி அல்லது தவறு என்று நாம் விவாதிக்க முடியாது.

    உண்மையை அறிய விரும்பினால் நேரடியாக இஸ்லாமிய மூலங்களுக்கு சென்று அறிந்துக்கொள்வதே தெளிவான பார்வையாக இருக்க முடியும். அந்த வகையில் சமாதிகள் குறித்த இஸ்லாமிய பார்வையை நான் மேலே சொல்லிவிட்டேன்.

    விழா நடக்கும் இடங்களாக சமாதிகள் இருக்கக் கூடாது என்பது நபிவழி. ஆனால் இன்றோ அந்த சமாதி மேலேயே சந்தானம் பூசி விழா கொண்டாடுகின்றனர். இஸ்லாமிற்கு எதிரான இப்படியான விசயங்களுக்கு ஒரு அரசாங்கம் சந்தன கட்டைகள் வழங்கி ஊக்குவிப்பது தவறு.

    நான் ஏற்கனவே கூறியப்படி இங்கே நான் விவாதிக்க விரும்பவில்லை. என் பார்வையை இஸ்லாமிய அடிப்படையில் கூறிவிட்டேன். விரும்புபவர்கள் ஏற்கட்டும். விரும்புபவர்கள் நிராகரிக்கட்டும்.

    நன்றி,

    ReplyDelete
  8. இஸ்லாத்தை சரியாக விளங்காததனால் இது போன்ற குளறுபடிகள். சவுதியில் மற்றும் அனைத்து அரபு நாடுகளிலும் எந்த தர்ஹாவையும் பார்க்க முடியாது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற இந்து மக்களோடு இணைந்து வாழும் நாடுகளில் மாத்திரமே தர்ஹாவை பார்க்க முடியும். எனவே இஸ்லாத்தை சரியாக விளங்காமல் தவறான வழியில் இருக்கும் இந்த அன்பர்களை அன்பாக சொலில புரிய வைக்க வேண்டும்.

    ReplyDelete
  9. @சுவனப்பிரியன் இந்து மக்கள் இருக்கும் இடங்களில்தான் தர்க்கா இருப்பதாக எப்படி சொல்வது ... எகிப்து நாட்டில் தர்க்கா இருக்கின்றனவே... இப்போதுதானே சிலவற்றை இடித்தார்கள் ? 1930 வரை சவுதியில் தர்க்கா இருந்ததாக , அன்பு சகோதரர் ஆஷிக் அகமதுவே சொல்லி இருக்கிறாரே... ஆக, அந்த காலத்தில் தர்க்கா அனுமதிக்கப்ப்டுத்தானே இருந்து இருக்கிறது ? விளக்கம் தேவை

    ReplyDelete
  10. நம்பிக்கை என்றால் எல்லாம் நம்பிக்கையே ..

    இன்று சூபியிசத்தை வெறுக்கும் வகாபிசம் மிகவும் ஆபத்தான ஒன்று.

    முதலில் இஸ்லாம் எதன் சாயல் யூதம் + கிறித்தவத்தின் சாயல். கிறித்தவமோ யூதத்தின் சாயல்.

    அந்த யூதமோ அதற்கு முன் இருந்த வழிப்பாடுகளின் சாயல்.

    தெளிவாக சொல்லப் போனால் ... !

    யூதம் + இயேசு = கிறித்தவம்

    யூதம் + இயேசு + முகம்மது = இஸ்லாம்

    யூதர்கள் ஜோவான் ஸ்னானகனையும், இயேசுவையும், முகம்மதுவையும் ஏற்பதில்லை.

    கிறித்தவர்கள் முகம்மதுவை ஏற்பதில்லை.

    இஸ்லாமியர் இயேசுவை ( கடவுளாக ) ஏற்பதில்லை.

    இப்போது சூபிக்களை வகாபிகள் ஏற்பதில்லை. வகாபிகளை சியாக்கள் ஏற்பதில்லை ..

    உருவாக்கப்பட்ட குரானிய வேதத்தின் மூலப் பொருளை தெளிவதில் சிக்கல்கள் பல உண்டு, ஒருவரின் Intrepretation மற்றவரால் மறுக்கப்படுகின்றது ... !

    இதே மதங்குளுக்குள்ளேய நிகவும் அதிகார யுத்தமே, இன்று தர்க்காக்களை மாலி, அல்ஜீரியா உட்பட பல நாடுகளில் இடித்து வருவதற்கான காரணம்.

    சுவனப்பிரியன் சொன்னது போல தெற்காசியாவில் தான் தர்க்காக்கள் இருந்தன, இந்து மத தாக்கம் என்பது பொய்.. ஏனெனில் தர்க்கக்கள் அரபிய, வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தன / இன்றும் இருக்கின்றன.

    சொல்லப் போனால் அரசு மத தளங்கள், மத ஸ்தாபனங்களுக்கு நிதி ஒதுக்கவதை நிறுத்தினாலே பிரச்சனை முடிந்துவிடும்.

    பிரச்சனை முடியுமா என்றால் முடியாது. மத ஸ்தாபனங்களுக்கு வெளியூரில் இருந்து வரும் நன்கொடைகளின் ஆதாரங்களையும் கண்காணிக்க வேண்டும்.

    ஷப்பா இந்த மதங்களால் எவ்வளவு பிரச்சனை...

    ReplyDelete
  11. இறை நேசர்களின் கப்ருகளை ஜியாரத் செய்வதோ அல்லது முத்தமிடுவதோ வணக்கமாகி விடாது, ஏனெனில் அனைத்துமே எண்ணங்களை பொறுத்தது, நமக்கு கஃபா என்பது கிப்லா, சிலருக்கு கஃபா என்பது ஒரு கல்,
    எனக்கு ஹஜ்ருல் அஸ்வத் கல் என்பது புனிதம் அதனை நான் நேசத்துடன் முத்தமிடுவேன், சிலருக்கு அதுவும் வெறும் கல் தான்,
    சஃபா மர்வா எனும் மலை என்னை பொறுத்தவரை இறைவனின் அத்தாட்சி, சிலருக்கு அதுவே இரண்டு மலை அல்லது பாறை அவ்வளவு தான்
    மகாமே இப்ராஹீம் (இப்ராஹீம் நபியவர்களின் பாதச்சுவடு அமைந்த ஸ்லேப் ஆஃப் ஸ்டோன்) என்பது எனக்கு தொழும் இடம், சிலருக்கு அது வெறும் கல் அவ்வளவே
    நபிமார்களின் கப்ரு அல்லது நபி தோழர்கள் அல்லது இறைநேசர்களின் கப்ரு என்பது என்னை பொறுத்தவரை இறைவனின் அத்தாட்சி, புனிதம் ஆனால் சிலருக்கு அது படுக்க வைக்கப்பட்ட சிலை, வெறும் கல் இன்னும் என்னென்னலாமோ..?
    ஆனால் மேலே குறிப்பிட்டிருக்கும் எதுவுமே கஃபா உள்பட எதுவுமே வணக்கத்திற்குறியதல்ல நேசத்திற்குறியது தான் சுன்னத் வல் ஜமாத்தார்களை பொறுத்தவரை. All the above are not worthy of worship by human, but all are worthy for the love. ஒரு செயல் அதோடு நம்பிக்கை, மைண்ட் செட் கலக்காத வரை அந்த செயலின் அர்த்தம் முழுமை பெறாது.
    உடலும் உள்ளமும் கலக்காத எந்த செயலையும் தன் அடியாரிடமிருந்து இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை, ஆதமுடைய மகன்களின் காணிக்கையில் ஒருவரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டது, இன்னொருவரிடம் மறுக்கப்பட்டது, ஏன் தெரியுமா? இரண்டு பேர்களுடைய செயலும் ஒன்றாக தான் இருந்தது, ஆனால் எண்ணங்கள் வேறு வேறாக இருந்தது.
    கஃபாவை அல்லாஹ்ன்னு நினைச்சுகிட்டு தொழுதீங்கன்னா தொழுகை ஷிர்க்காக ஆயிடும். ரிசர்ச் பண்ணி ஆராய்ந்து அமைதியாக சிந்திக்க வேண்டிய ஒன்று.
    சுவனப்பிரியன் அவர்கள் எழுதியிருப்பதின் ஒன்று பிடித்திருக்கிறது, அமைதியான முறையில்... என்று எழுதியிருந்தது.
    அல்லாஹ் போதுமானவன்
    வஸ்ஸலாம்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா