Thursday, May 16, 2013

அறிவியல் ரீதியாக நூதன குற்றம் செய்யும் பதிவர்- சட்டம் என்ன செய்ய போகிறது ?



அன்புள்ள பதிவர் அறிவியல் வெறியனுக்கு..

உங்களுடைய சமீபத்திய இடுகையான “ டைம் டிராவல் “ சாத்தியமா என்ற கட்டுரை படித்தேன்.   அருமை..

ஸ்பேஸ் போன்றதே காலம் என்பதையும் , ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு எப்படி வேண்டுமானாலும் எந்த திசையிலும் செல்லலாம். அதே போல காலத்திலும் எந்த திசையிலும் செல்ல முடியும். அதாவது 2010 ல் இருந்து 2020 க்கு செல்வதை போல 2020ல் இருந்து , 2010க்கும் செல்ல முடியும். 1947க்கு வேண்டுமானாலும் கூட செல்ல முடியும் என்பதை அறிவியல் பூர்வமாக சொல்லி இருந்தீர்கள். சூப்பர் என வியந்தேன்.

ஆனால் இதே தலைப்பில் ஒரு கட்டுரையை , வரிக்கு வரி இதே போல , 2013ஆம் ஆண்டிலேயே , பிச்சைக்காரன் என்ற பதிவர் கட்டுரை எழுதியாக கேள்விப்பட்டு வருத்தப்பட்டேன்.

இந்த பிழைப்புக்கு... சே..

வெறுப்புடன்,
 நிர்மல்
15.05.2090

அன்புள்ள நிர்மல்.

உங்கள் பாராட்டில் மகிழ்ந்தேன், திடீரென கடைசியில் கவிழ்த்து விட்டீர்களே... ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். நான் வலைப்பதிவுகள் எதுவும் படித்ததில்லை. பிச்சைக்காரன் என்ற பெயரை கேள்விப்பட்டது கூட இல்லை.

உங்கள்க்கு யாரோ தவறான தகவல் கொடுத்து இருக்கிறார்கள்.

அன்புடன்,
அறிவியல் வெறியன்
17.05.2090

நண்பருக்கு,

எனக்கு தகவல் தந்தவர் அவர் குற்றச்சாட்டு உண்மைதான் என்கிறார். ஆனால் பிச்சைக்காரனின் பதிவுகள் ஏதும் இணையத்தில் கிடைக்கவில்லை. ஒரு அச்சில் இருக்கிறதா என தெரியவில்லை. எதற்கும் தேடிப்பாருங்கள். அவர் கட்டுரைக்கும் , உங்கள் கட்டுரைக்கும் இருக்கும் வேறுபாட்டை சுட்டிக்காட்டி , உங்கள் நேர்மையை உலகுக்கு உணர்த்துங்கள்.

அன்புடன்,

நிர்மல்
20.05.2090

நிர்மல்,

கதைகள் , கவிதைகள் என சொந்தமாக எழுதி வருகிறேன். ஒரு போதும் காப்பி அடித்ததில்லை. ஆனால் அறிவியல் கட்டுரைகள் எழுதும்போது மட்டும் , பிச்சைகாரன் கட்டுரை போல இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். யார் அந்த பிச்சைகாரன் என நானும் தேடிப்பார்த்து விட்டேன், அவர் கட்டுரைகள் ஏதும் கிடைக்கவில்லை.

ஒரு வேளை உங்களுக்கு கிடைத்தால் சொல்லுங்கள். எவ்வளவு காசு கொடுத்தாலும் வாங்கி கொள்கிறேன். ஒரு வேளை பிச்சைக்காரனின் ஆவி என் மேல் புகுந்து எழுதிகிறதோ என ஐயுறுகிறேன். பயமாக இருக்கிறது.

அன்புடன்,
அறிவியல் வெறியன்

23.05.2090

நண்பரே.

ஒரு நல்ல மன நல மருத்துவரை சென்று பாருங்கள்.

அன்புடன் ,

நிர்மல்.

25.05.2090


மரியாதைக்குரிய இந்திய அறிவியல் கழக தலைவருக்கு,

வணக்கம்,

ஸ்பேஸ் , டைம் குறித்த பார்வைகள் வெகுவாக மாறி இருப்பதை அறிவீர்கள். டைம் என்பதை ஸ்பேஸ் போலவே கருத முடியும் என்பதை பல ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன, இறந்த காலத்தில் இருந்து , நிகழ் காலத்துக்கோ. அல்லது எதிர்காலத்தில் இருந்து நிகழ் காலத்துக்க்கோ பயணம் செல்ல முடியும் என்பது ஆய்வு நிலையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இதை நேரடியாக உணர்கிறேன்.
2013ல் வாழ்ந்த பிச்சைக்காரன் என்பவர் , டைம் டிராவல் மூலம் என் வீட்டுக்கு வருகிறார் என நினைக்கிறேன். அப்படி வந்து , நான் என்ன எழுதுவது என்பதை அவரே முடிவு செய்கிறார். இதனால் என் பெயர் கெடுகிறது.

அனுமதி இல்லாமல் என் இடத்துக்கு வருவது எப்படி குற்றமோ அதே போல அனுமதி இல்லாமல் என் நேரத்துக்கு வருவதும் குற்றம்தானே..

இதற்கேற்ப சட்டம் கொண்டு வர அறிவியல் துறை ஆவன் செய்யுமா?

இத்துடன் , என் முழு கடித தொடர்புகளை இணைத்துள்ளேன்.

அறிவியல் ரீதியாக நூதன குற்றம் செய்யும் பதிவர்- சட்டம் என்ன செய்ய போகிறது என என் கடித தொடர்புகளுக்கு பெயர் சூட்டி இருக்கிறேன்

அன்புடன்.
அறிவியல் வெறியன்

27.05.2090


நண்பரே..

எங்கள் நேரத்தே வீணடிக்காதீர்கள்.

2013ல் பிச்சைக்காரன் எழுதிய ஒரு சிறுகதையை எங்களுக்கு அப்படியே அனுப்பி இருக்கிறீர்கள்..எங்களை முட்டாள் என நினைக்க வேண்டாம். இப்படி செய்தால் உங்கள் மேல்தான் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.

 நீங்கள் சொல்வது எதுவும் உண்மை சம்பவங்கள் அல்ல. 2013ல் பிச்சைக்காரன் எழுதிய ஒரு கதை.. அந்த கதை உங்கள் பார்வைக்கு...

பிச்சைக்காரன்: அறிவியல் ரீதியாக நூதன குற்றம் செய்யும் பதிவர்- சட்டம் என்ன செய்ய போகிறது ?

உங்கள் சேவையில்,

இந்திய அறிவியல் கழகம்

30.05.2090

4 comments:

  1. திருடும் ஆசாமிங்க ஒரிஜினல் ஆசிரியருக்கு ஒரு நன்றியாவது போடுங்க, லிங்கு குடுங்க.

    ReplyDelete
  2. :) அருமையாக இருக்கிறது.. நல்ல கற்பனை. இதுபோல நிறைய எழுதலாமே.. (இல்லை எழுதி இருகிறீர்கள், எனக்கு தெரியவில்லையா?)

    ReplyDelete
  3. இது பிச்சைக்காரனோட கதையா, இல்லை நிர்மலோட கதையா? ஒண்ணுமே புரியலை. ஆனா, அந்த சுழற்சி ரசிக்க வைக்குது.
    கலக்கறீங்க பிச்சை.
    பி.கு: அறிவியல் கழகம் இவ்வளவு விவரமா இருக்கா?

    ReplyDelete
  4. அருமையான கற்பனை...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா