Friday, June 7, 2013

மனுஷ்யபுத்திரனின் பொன்மொழிகள் கவிதைகளாகுமா? - கவிஞர் றியாஸ் குரானாவுடன் உரையாடல்


     நண்பர் ராஜராஜனுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் பயங்கர படிப்பாளி.. நானோ துடைப்பாளி, அதிலும் கவிதை , இசை போன்றவை எனக்கு  பிடிபடுவதில்லை.

எனவே அவருக்கு பிடித்த கவிதை ஒன்றை சொல்ல சொன்னேன்.

அவர் சொன்னார். “ தோல்விகளை வேதனையாக நினைக்காதே,,  அவை சாதனைகள் செய்யும் முன் உனக்கு வைக்கப்படும் சோதனைகள் “ என்றார்.

அவர் சொன்ன பொன்மொழி எனக்கு பிடித்து இருந்தது,,

சூப்பர் பாஸ். சரி கவிதை சொல்லுங்க என்றேன்.

அட முட்டாளே என்பது போல என்னை பார்த்து, இது மனுஷ்யபுத்திரன் எழுதிய அருமையான கவிதை என்றார்

கவிதை மாதிரி தெரியலீங்க்ளே என பரிதாபமாக சொன்னேன்.,

இதை மேலிருந்து கீழாக படியுங்கள்...கவிதையாக தெரியும் என்றார்.

எண்ட்டர் கீ புண்ணியத்தில் மேலிரிந்து கீழாக மாற்றினேன்

தோல்விகளை 
வேதனையாக 
நினைக்காதே,,  
அவை 
சாதனைகள் 
செய்யும் 
முன் 
உனக்கு 
வைக்கப்படும்
 சோதனைகள்.

- மனுஷ்ய புத்திரன்


அப்படியும் எனக்கு அது கவிதையாக தெரியவில்லை.. பொன்மொழியாக தெரிகிறது என்றேன்,
கடுப்பான அவர் , சரி நல்ல கவிதை ஒன்றை நீங்கள்தான் எழுதிக்காட்டுங்களேன் ,,பார்ப்போம் என்றார்.

நான் கவிதையை கண்டேனா, கழுதையை கண்டேனா,,,  

இது சரிப்படாது என அவருக்கு பை சொல்லி விட்டு நண்பரும் , கவிஞருமான றியாஸ் குரானாவுடன் கவிதை குறித்து கொஞ்சம் பேசினன்.

*****************************************************

பிச்சைக்காரன்

கவிதை சார்ந்த உரையாடல் முக நூலில் அதிகம் இல்லை என நினைக்கிறீர்களா

றியாஸ் குரானா

இலக்கியம் சார்ந்த உரையாடலே இல்லை.
பொன்மொழிகள் மாதிரி, திடீரெனத் தோண்றி ஏதாவது சொல்லிவிட்டு மறைந்துவிடும் புத்திஜீவிகளே இங்கு அதிகமிருப்பதுபோல் தெரிகிறது.

நாவல் குறித்தாவது அவ்வபோது பேசுகிறார்கள்...கவிதை என்ற வடிவம் நம் மக்களுக்கு இன்னும் பரிச்சயம் ஆகவில்லை

ஆமாம், பேசுகிறார்கள். ஒத்துக்கொள்கிறேன். புதிதாக ஏதும் பேசுவதுபோல தெரியவில்லையே...
எழுத்துக்களில் குறித்தவகையினத்தை மாத்திரம் இலக்கியமாக கருதுவது தொடங்கி,,, இலக்கியம் குறித்து ஏதும் பேசுவதாக காணவில்லை. அல்லது, அவைகளை நான் சந்திக்கவில்லை...

அட்லீஸ்ட் நாவல் குறித்த அறிமுகங்கள் , சினிமா குறித்த அறிமுகங்கள் நடக்கின்றன.ஆனால் கவிதைகள் குறித்தோ, கவிஞர்கள் குறித்தோ அறிமுகங்கள் இல்லை
லத்தீன் அமெரிக்க நாவல்கள் குறித்து ஒரு சராசரி முக நூல் பயனாளனுக்கு தெரியும்.அகிரா குரசாவோ,கிம் கி டுக் என தெரியும்..ஆனால் ஒரு கவிஞர பெயர் கூட தெரியாது

அறிமுகங்கள் அவசியமானவைதான். அதைப் புரிந்துகொள்வதற்கான விமர்சன முறைமைகள் இங்கு அறிமுகப்படுத்தப்படவில்லை. அது சிறந்தது, அல்லது சிறப்பற்றது என தமது நீதியை அப்பிரதிகளின் மீது திணிக்கும் வாசிப்பு முறைகளினுாடாகவே, அறிமுகங்களையும் உள்வாங்க வேண்டியிருக்கிறது. இது, நமது பார்வையாளர்கள் எதிர்கொள்ளும் துரதிஷ்டமான ஒரு நிலைதானே....


அதேநேரம், இங்கு உருவாகியிருக்கும் நவீனத்திற்குப் பிறகான, கவிதைகள் குறித்த சரியான பேச்சுக்களும் இல்லை. கவனிப்புக்களுமில்லை. இதுவும் இன்றைய நிலையில் முக்கியமான குற்றச்ாட்டுத்தானே.....

ஆம்
உண்மையில் கவிதையில் என்ன நடக்கிறது என்பது ..சாதாரண வாசகனுக்கும்தெரிய வேண்டும்

விமர்சன முறைமைகளை அறிமுகப்படுத்தி, விவாதிக்காதவரை எந்த இலக்கியப் பிரதியை தமிழ் சந்தித்தாலும், அது எதற்கும் உதவப்போவதில்லை.
நாவல் எழுதிகள், கவிதை புனைவாளர்கள் உருவாகியிருக்குமளவிற்கு, பிரதி வாசிப்பாளர்கள் இங்கு இல்லை. அந்த இடைவெளி, தமிழின் இலக்கியப் பிரதிகளின் மீது (முக்கிய தற்கால) வசை பாடவும் புறமொதுக்கவுமே இடந்தரக்கூடியது.
அதே நேரம், மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள பிரதிகள் முக்கியமானவையாக கொண்டாடப்படும் மோசமான ஒரு நிலைக்கும் இட்டுச் செல்லும். ஏன் சென்றுவிட்டது என்றே கூறலாம்.


பின் நவீன கருத்து நிலை நாவல் என்று ஏதுமில்லை என்றே நினை்கிறேன். பின்நவீன வாசிப்பு இருக்கிறது. அதுவும் பல்வகையானது...கவிதை குறித்து ஓரளவு உரையாடியிருக்கிறேன். நான்லீனியர், மற்றும் பின்நவீன வாசிப்புக்கு அனுக்கமானவர்கள் கவிதைப் பிரதிகளை ஓரளவு நெருங்க முடியும் என்றே கருதுகிறேன்....
தனிப்பட்ட கடமை என ஏதுமில்லை. ஆயினும், நீங்கள் சொல்லுவதில் அர்த்தமுண்டு. ஆனால், புனைவெழுத்தாளனாக (கவி) இருந்து கொண்டு அதைச் செய்தால் எனது கவிதைகளை முதன்மைப்படுத்துவதற்காக செய்வதாகவே கடைசியில் குற்றம் சுமத்தப்படுவேன். அதை எதிர்கொள்ள முடியதவனாக இருக்கிறேன்...



பொதுவெளியின் அனைத்துப் பார்வையாளர்களையும் எதிரில் வைத்து இலக்கியப் பிரதிகளை கொண்டுவருவதில்லை. அதுபோல, பெரும்பான்மை பார்வையாளர்களை கருத்தில் கொள்வதுமில்லை. அப்படிச் செய்தால் அது தவறும் அல்ல. ஆனால், முற்றிலும் வேறுபட்ட பார்வையாளர்களுக்காகவே நான் எழுதுகிறேன். அல்லது, கவிதைக்கு ஏலவே உள்ள பார்வையாளர்களிலிருந்து முற்றிலும் புதிய பார்வையாளர்களை உருவாக்குவதே எனது கவிதையின் பணி. பழக்கப்பட்டுப் போன பார்வையாளர்களுக்காக ஒரு பொருளை உற்பத்தி செய்வது புனைவாக இருக்காது.

குட் குட்

புத்திரன் போல பலர் வடை சுட்டபடி இருக்கிறார்கள். எனது பொருளுக்கு பெயரிடுவது கடினம். அதன் சுவையை இப்போதுதான் அறிய வேண்டி வருகிறது. ஆயினும், இது ஒரு ஏற்க்கக்கூடிய முன்வைப்பு அல்ல. இன்றைய பிரதிகளை புரிந்துகொள்ளத்தக்க வாசிப்பு முறைகளை கண்டடைய வேண்டும். அது விவாதிப்பதினுாடாகவே சாத்தியப்படக்கூடியது. விவாதிப்பதற்கு இங்கு யார் முன்வருகிறார்கள்?

இப்போதிய நிலையில் விவாதிக்கும் நிலையில் தமிழ் சூழல் இல்லை.கற்கும் நிலையில் உள்ளது..ஆனால் அதுகூட தெரியாமல் வெறும் வசையை விவாதம் என நினைக்கிறார்கள்

கற்கும் நிலை என்பது, மிகக் கடும் கோபத்திலிருந்து எழும் ஒரு முன்வைப்பு. ஏலவே, நிறை அம்சங்கள் தமிழில் இருக்கிறது. பல கருத்துநிலைகளைத் தமிழ் சந்தித்துமிருக்கிறது. அதைத் தொகுத்து, அவைகளிலிருந்து புதிய ஒரு வாசிப்பு முறையை கண்டடையவில்லை என்பதே இன்றைய நிலைக்கு காரணம்.
பெரும்பான்மையான ஆதரவு என்பதே ஒரு இலக்கியப் பிரதியின் வெற்றியாகவும் பாவிக்கப்படுவதே இங்கு பெரும் அபத்தமானது.


பொன்மொழிகளை கவிதை என சொல்லி ஏமாற்றுகிறார்களே...உங்கள் கருத்து?

நமது தமிழ் எவ்வளவு விசயங்களைத் தாங்கிவிட்டது. இதைத்தாங்குவதொன்றும் பெரிய விசயமா என்ன?

ஹா ஹா

மபு, இதை கவிதையாக கருதவில்லை. அவரின் எந்த புத்தகத்திலும் இந்த பொன்மொழி இல்லை.

ஹஹஹா

அவரை குற்றம் சொன்னால் , தமிழனாக இருந்து கொண்டு தமிழனை குற்றம் சொல்கிறாயே என்கிறார்களே

விஷயம் தெரியாதவர்களோடு உரையாடும் கலையை கற்றுவிடாதது நமது தவறுதான். அவர்கள் சொல்வது சரி. நம்மை குற்றம் சொல்லாது போனால்தான் நாம் கவலைப்பட வேண்டும். அவர்கள்  விஷ்யம் தெரிந்தவர்கள் என்றாகிவிடும்.

ம்ம்ம்

பட்டியல் கவிதை , விடுகதை கவிதை , பொன்மொழி கவிதை என்றெல்லாம் பல வித கவிதைகள் பெருகுவது ஆரோக்கியமானதா தீங்கானதா

அவைகள் இருப்பது ஒரு வகை ஆரோக்கியமானதா என்றால் இல்லை என்பதுதான் எனது உடனடியான பதில். ஆனால், அவை இருப்பது ஜனநாயனமானது. அதற்குரிய தேவையும் இருக்கிறதே.



அப்படி இருந்தால் ஓக்க்கே..ஆனால் பொன்மொழி , விடுகதை , பட்டியல் போன்றவற்றை கவிதை என சொன்னால் எப்படி?

நாம் சொல்வதில்லை. அவர்கள்தான் அவைகளை கவிதை என அழைக்கிறார்கள்.

சராசரி வாசகனும் அதை கவிதை என நினைப்பதுதானே பிரச்சினை..காலப்போக்கில் அவன் கவிஞன் என நிலைப்பெற்று விடுகிறார்னே

அறிஞர் என்றால் அண்ணாதான் என நமது மக்கள் நினைக்கவில்லையா? அப்படித்தான். அது பொது வெளி. அதற்கு மாற்றமாக சிந்திப்பவர்கள் அவைகளை ஏற்பதில்லை. அதுபோலதான் கவிஞன் என்ற அடையாளமும்.

  இவர்களை விமர்சிப்பது ஓகே,,,  எழுத்துலக பிதாமகர் நகுலனை விமர்சித்தது குறித்து?

நான் நகுலனின் அனைத்து கவிதைகள் குறித்தும் சொல்லவில்லை. சில கவிதைகள் குறித்த பேசினேன். அவருடைய கவிதைச் செயல் ஒருவகை உத்தி கொண்டதுதான்.

உத்தி என்பது கவிதைக்கு எதிரானதா

ஒரு பிரதியை கவிதையாக ஒன்றிலிருந்து வேறுபடத்தக்க ஒன்றாக மாற்ற பயன்படுத்தும் வழிமுறை. உத்தி என்பது கவிதையை தடங்காட்டாது. ஆனால், மற்ற கவிதைகளிலிருந்து வேறுபடுத்தி புரிந்துகொள்ள உதவும்.

அவர் கவிதை ஒரு வகை உத்தி கொண்டது என்பது பாராட்டா... விமர்சனமா

ஒருவகை உத்தி கொண்டது என்பது பாராட்டு. ஒரு உத்தி கொண்டது என்பது விமர்சனம். இரண்டையும் ஒரு வசனத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.



ஒருவகை உத்தி என்பதினுாடாக, மற்றவர்களின் கவிதைகளிலிருந்து வேறுபட்ட தனியான கவிதையை முயற்சித்திருக்கிறார் என்பது பாராட்டாகவும். அந்த ஒரேயொரு உத்தியை மாத்திரமே நம்பி காலாகாலத்திற்கும் கவிதை எழுதினார். ஆக, ஒரு கவிதையையே இவ்வளவு காலமாக எழுதினார். தனது இரண்டாவது கவிதையை எழுதவில்லை என்பது விமர்சனம். ஒரே வரியில்.

\

***********************************

இலக்கணத்தை மீறி எழுதப்படும் புதுக்கவிதைக்ளுக்கு வரைமுறைகள் தேவையா, சுஜாதாவின் பிற்போக்கு அடையாளங்களை மறைத்து அவரைக்காக்க , அவாளை மிஞ்சும் வகைகள் சிலர் செயல்படுவது குறித்து...
‘அடுத்த பகுதியில்

Wednesday, June 5, 2013

குட்டிப்புலி - சினிமாவில் சாதீய அடையாளங்கள் தவறா?


குட்டிப்புலி படம் பார்த்தேன். என்னை அந்த படம் பெரிதாக இம்ப்ரஸ் செய்யவில்லை.
ஆனால் பலருக்கு ( வலைப்பூ எழுதாதவர்களுக்கு )  படம் பிடித்து இருப்பதை உணர முடிந்தது.

இந்த படத்தின் கதை அம்சம் குறித்த பொதுவான விமர்சனங்களில் , எனக்கு உடன்பாடு உண்டு.

ஆனால் சிலர் இந்த படத்தின் சாதி அடையாளங்களை விமர்சிப்பதுதான் கொஞ்சம் குழப்பமாக இருந்தது.

இதற்கு முன்பு தேவர் மகன், சின்ன கவுண்டர் என பல படங்கள் வெளிவந்துள்ளன. இப்போதும் வந்து கொண்டு இருக்கின்றன,

இதில் சசிகுமாரை மட்டும் சாதி வெறியர் , திரையுலக ராமதாஸ் என ஏன் பழிக்கிறார்கள் என தெரியவில்லை.

சமீபத்தில் ட்ஜான்கோ அன்செயிண்ட் என ஒரு படம் வெளிவந்தது. அதில் எல்லாம் இன அடையாளங்களை வெளிப்படையாக காட்டித்தான் எடுத்து இருக்கிறார்கள்.

இதற்காக அங்கு யாரும் சண்டைக்கு வரவில்லை.

ஒரு குறிப்பிட்ட சாதியை இழிவு செய்வது போல எடுப்பது தவறுதான், அவதூறு செய்யும் நோக்கத்துடன் பொய்யான தகவல் கொடுப்பதும் தவறுதான்.

ஆனால் சில பகுதிகளில் மக்கள் ஜாதீய அடையாளங்களுடன் வாழ்கிறார்கள் என்பதை பதிவு செய்வது எப்படி தவறாகும் என்பது தெரியவில்லை.

இந்த படத்தின் அதீதப் வன்முறை காட்சிகள், பழங்கால காதல் பாணி போன்றவை எரிச்சலூட்டுகின்றன என்பது வேறு விஷ்யம்.

யாருக்கும் எந்த அடையாளமும் இல்லாமல் , பணக்காரன் என்றால் வில்லன் ஏழைக் கதானாயகன் என்ற பழைய பாணி படங்கள் போலவோ , அல்லது வேறு கிரக மனிதர்களால் பாதிப்பு போன்ற அமெரிக்க படஙகள் போலவோ எடுப்பதுதான் எல்லோருக்கும் நல்லது என தோன்றுகிறது.

Tuesday, June 4, 2013

சுஜாதா மனைவி பேட்டியும், எல்லை கடந்த பிராமணீயமும்


  நான் சுஜாதா எழுத்துகளை இன்று நேற்றல்ல. வெகு நாட்களாகவே படித்து கொண்டு இருக்கிறேன். இன்று பலர் எழுத்துகளை படிக்கும்போது , என்னைப்ப்போலவே பலரும் அவரால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.

யார் என்ன சொன்னாலும் அவர் எழுத்துகள் மீதான மரியாதை குறையப்போவதில்லை. அவர் நூல்க்ளை அவ்வப்போது வாங்குவதும் குறையப்போவதில்லை.


எழுத்தாளர் என்பதற்கு அப்பாற்பட்டு , அவர் ஒரு மனிதராக எப்படி வாழ்ந்தார் என்பதை ஓரளவுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது அவர் மனைவியின் பேட்டி.

அந்த பேட்டியை விட அதற்கான நம் மக்களின் எதிர்வினைதான் சுவாரஸ்யமாக இருந்தது.

      அவர் மனைவியின் முக்கிய குற்றச்சாட்டு என்ன?


” நான் கொஞ்சம் முற்போக்கான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். பெண்கள் படிக்க வேண்டும் , உலக அறிவு பெற்றிருக்க வேண்டும்  என நினைக்கும் குடும்பம்.  என் அம்மாவுக்கு பிரத்தியேகமாக ஆங்கிலோ இந்திய டீச்சரை நியமித்து ஆங்கிலம் கற்பித்தார்கள்.

ஆனால் கல்யாணத்துக்கு பின் முற்றிலும் எதிர்மாறான சூழல். சுஜாதா ஜாதி உணர்வு மிக்க பிற்போக்காளாராக இருந்தார். நான் புத்தகம் படிப்பது அவருக்கு பிடிக்காது.  நான் அவருக்கு அடங்கியே இருக்க வேண்டும் என நினைத்தார்.

இப்படிப்பட்ட ஒருவருடன் வாழ பிடிக்காமல் கதறி இருக்கிறேன். பிறந்த வீட்டுக்கே வந்து விடுகிறேன் என அம்மாவிடம் அழுது இருக்கிறேன். ஆனால் அன்றைய சூழலின் என்னால் தைரியமாக வெளியே வர முடியவில்லை. அதுவே இன்றைய சூழலாக இருந்தால் , அம்மாவிடம் புலம்பாமல் , நானே முடிவெடுத்து அவரை விட்டு விலகி இருப்பேன்”

இப்படி சொல்லி இருக்கிறார் அவர்.

நினைவில் கொள்ளுங்கள் , அவர் சொன்னதன் வீரியத்தை , கடுமையை குறைத்துதான் பேட்டியை வெளியிட்டு இருக்கிறார்கள். அதுவே இப்படி இருக்கிறது.

இதை தமிழ் சமுதாயம் எப்படி பார்க்க போகிறது என ஒரு பார்வையாளனாக கவனித்தேன்.

எல்லோருமே சொல்லி வைத்தது போல ஒரே மாதிரிதான் எதிர்வினை ஆற்றி இருந்தார்கள்.

ஜாதி உணர்வு, பெண்ணை அடிமையாக நினைத்தல் போன்றவற்றை பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை.

வெளியே வர நினைத்து முடியாமல் போனதால் , காம்ப்ரமைஸ் ஆகி வாழ ஆரம்பித்தார் அல்லவா. அப்போது ஏற்பட்ட சில ஏமாற்றங்களை சொல்லி இருந்தார் அவர். குடும்பத்தை கவனிப்பதில்லை என்பது போன்ற சராசரி மனைவியனரின் ஏமாற்றங்கள்.

 நம் ஆட்கள் இதை மட்டும் பிடித்து கொண்டு விட்டார்கள்.

ஜாதி வெறி , பெண்ணடிமைத்தனம் போன்றவற்றை மறந்து விட்டார்கள்.

” அவங்க என்ன பெரிசா சொல்லிட்டாங்க... குடும்பத்தை கவனிக்கல... சேலை வாங்கி கொடுக்கல... இது எல்லோரும் சொல்லும் குற்றச்சாட்டுதானே “

“ ஆம்பிளைனா கொஞ்சம் பிசியாத்தான் இருப்பான்,., பொம்பளைதான் அட்ஜ்ஸ்ட் செஞ்சு போகணும்”

“ ஓர் எழுத்தாளனுக்காக கொஞ்சம் விட்டு கொடுப்பதில் தவறில்லை”

“ பாவம்,, அவர் மனைவி சோகம் , வெறுமை காரணமாக இப்படி பேசுகிறார்”

இப்படி எல்லாம் மெயின் மேட்டருக்கு சம்பந்தம் இல்லாமல் பேசி அவரை “ காப்பாற்றுகிறார்களாம்”

ஆனால் இதிலுமே வலுவான வாதம் இல்லை என்கிறார் ஞாநி

அவர் சொல்லி இருப்பதாவது



இப்படி இருப்பதுதானே சகஜமானது என்று சராசரி ஆண் மனம் நினைக்கிறது. இதை ஏற்றுக் கொண்டு வாழ்வதுதானே பெண்ணுக்கும் சகஜமானது என்று ஆண் மனம் நினைக்கிறது. ஏற்க மறுக்கும் பெண் மனம் அதை வெளிப்படுத்தும்போது ஆண்கள் அதிர்ச்சியடைகிறார்கள். தங்கள் நிலையை நியாயப்படுத்த பல உத்திகளை கையாளுகிறார்கள். எழுத்தாளனும் சராசரி ஆண்தான் என்று ஒப்புக் கொள்ள மறுத்து சராசரிப் பெண்ணாக இருக்க மறுக்கும் எழுத்தாளன் மனைவியை உளவியல் ஆய்வுக்கு உட்படுத்துவதுவது அதில் ஓர் உத்தி.




ஆனால் இவருமே கூட மெயின் மேட்டரை தொடவில்லை.

ஒரு பத்திரிக்கையில் சுஜாதாவிடம் வாசகர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். கேள்வியும் சுஜாதாவின் பதிலும்
” இருபது வயதில் கம்யூனிசம் பேசாதவனும் இல்லை.  நாற்பதில் ஆன்மீகம் பேசாதவனும் இல்லை என்கிறார்களே? “
“ இருக்கிறேனே “



கடவுளை நம்புவது நம்பாதது அவரவர் உரிமை.. ஆனால் தன்னை முற்போக்குவாதியாக காட்டிகொள்ளும் பொருட்டு , கடவுளை நம்பாதவர் போல அந்த காலத்தில் முன் நிறுத்தி வந்தார், ஒரு கட்டத்தில் பிராம்ண சங்க கூட்டம் , ஆன்மீகம் என்றெல்லாம் வெளிப்படையாக இறங்கினார்,

ஆனால் ஆரம்பம் முதலே பிற்போக்குவாதியாகவும் ஜாதி உணர்வு மிக்கவராகவும் இருந்தார் என்கிறார் திருமதி சுஜாதா;

ஒரு நல்ல எழுத்தாளன் , நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.ஒரு நல்ல மனிதன் , ஒரு நல்ல எழுத்தாளனாக இருக்க வேண்டும் என்பதும் இல்லை.

அது வேறு. இது வேறு.

யார் வந்து என்ன சொன்னாலும் சுஜாதாவின் எழுத்து சாதனைகளை யாரும் மறைக்க முடியாது.

உண்மைகளை மறைத்துதான் சுஜாதாவின் பெயரை காப்பாற்ற வேண்டும் என நினைப்பவர்கள் உண்மையில் சுஜாதாவிற்கு அவப்பெயரையை சேர்க்கிறார்கள்...

ஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும். இப்படி சுஜாதாவை “ காப்பாற்ற “ முயல்பவர்கள் , பிராமணர்கள் மட்டும் அல்ல.. பிராமணர்கள் அல்லாதவர்களும் கூட.

இன்னும் சொல்லப்போனால் பிராமணர்களில் பலர் முற்போக்கு சிந்தனைகளுடன் வாழ்கின்றனர்.

ஆக , பிராமணீயம் என்பது பிராமண சமுதாயத்தின் எல்லை கடந்து பரவுவதையே இந்த எதிர் வினைகள் காட்டுகின்றன.




Sunday, June 2, 2013

உழைப்பை, கருணையை போதித்த நபிகள் நாயகம்- அழகு தமிழில் அருமையான புத்தகம்


    இஸ்லாம் பற்றி அறிந்து கொள்ள பல நூல்கள் கிடைக்கின்றன. இணையத்திலும் தேவையான தகவல் தர பல நல்ல குழுமங்கள் செயல்பட்டு வருகின்றன.

குர் ஆன் வசனத்தை தினம் தோறும் ஒவ்வொன்றாக தரும் வலைத்தளங்கள் உள்ளன.

ஆனால் இவ்வளவு இருந்தும் என்னை போன்றவர்கள் நபிகள் நாயகத்தைப் பற்றி சரியாக தெரிந்து கொள்ளவில்லை என்பது வலம்புரி ஜானின் “ நாயகம் எங்கள் தாயகம் “ என்ற நூலைப்படிக்கையில் தெரிந்தது.

நபிகள் நாயகம் ஓர் இறைத்தூதர் என்பது போன்ற அடிப்படை விஷயங்கள் தெரியுமே தவிர அவர் இளமை பருவம் , இளமையில் சந்தித்த சோதனைகள். திருமணம் , அவரது தொழில் , போர்கள் , குர் ஆன் அருளப்பட்டது , அவர் குடும்பம், தியாகம் என எத்தனையோ பல விஷ்யங்களை இந்த நூலில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.

    அதீதமாக உணர்ச்சி வசப்படுவது நம் இந்திய பண்பு, ஒரு கிரிக்கெட் பிளேயர் சென்சுரி அடித்தால் அவரை கிரிக்கெட் கடவுளாக்குவோம். நடிகனுக்கு கோயில் கட்டுவோம்.

நபிகள் மட்டும் உறுதியான வழிகாட்டுதல் காட்டாமல் போய் இருந்தால் , கண்டிப்பாக அவரையும் நம் ஆட்கள் கடவுளாக்கி அவரது அடிப்படை கொள்கைகளுக்கே ஊறு விளைவித்து இருப்பார்கள். அப்படி நடக்காமல் பார்த்து கொண்டது அவரது சிறப்புகளில் ஒன்றாகும்.

காரணம் அவர் வாழ்க்கையை படிக்க படிக்க அவர் மீது ஓர் இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படுகிறது. இந்திய மனப்பான்மை கொண்ட ஒருவர் மனதில் இந்த ஈர்ப்பு அவர் மீது பக்தியாக மாறும் வாய்ப்பு 100% உண்டு,

இஸ்லாமை பொருத்தவரை அல்லாவை மட்டுமே வணங்க வேண்டும். நபி ஓர் இறைத்தூதர். அவரை உயிரினும் மேலாக மதிக்கலாம். ஆனால் கடவுளாக்கி விடக்கூடாது.

இந்த நிலை இன்று வரை உறுதியாக கடைபிடிக்கபடுகிறது என்றால் அதற்கு காரணம் நபிகள் போட்டு சென்ற பாதைதான்,

இவரது வாழ்க்கை வரலாறு வெறும் ஆன்மீகம் என்பதாக மட்டும் இருக்காது. குடும்பம் , வியாபாரம் , பிரச்சினைகளை தீர்க்கும் சாதுர்யம் , கருணை, மன்னித்தல், சமூக நீதி ,பெண்ணுரிமை , உழைப்புக்கு மரியாதை என பல அம்சங்களும் கலந்த ஒரு விறு விறுப்ப்பான நாவல் போல இருக்கும்.

அதிலும் இந்த நூல் அழகு தமிழில் , கவிதை நடையில் இருப்பதால்  , எடுத்தால் கீழே வைக்க முடியாதபடி பரபர என செல்கிறது.

சில சாம்பிள்களை பாருங்கள்..

*********************************************\

ஹலீமா வந்த போது

மக்கா நகரத்துக்குள்

விரல்கள் இருந்தன.

வீணைகள் இல்லை

----------------------

பாலைவனக் கப்பல்கள்

ஈச்ச மரங்களை பிடுங்கி

மணல் வெளி முழுதும்

இரங்கற் கவிதை இழைத்தன
மறைந்தாள் ஆமினா

------------------------------------

சில இளைஞர்கள்

பனைமரங்களை விட உயரமாக வளர்ந்தார்கள். ஆனால்

தென்னை மரங்களை விட கோணலாகி விட்டார்கள்.

இவர்கள் மத்தியில்

நபிகள் நாயகம்

ஆல மரமாய் அணி வகுத்தார்கள்

-----------------------

அம்சா என்ற வாணிபர்
நபிகளிடம்
குறித்த இடத்துக்கு வருவதாக சொன்னார்.

சொன்னதை மறந்து போனார்

மூன்று நாள் கழித்து நினைவு வந்து

பதறி அடித்து ஓடினார்.

விழிப் புருவங்கள் வியப்பால் வளைந்தன.

மூன்று நாட்களாக அதே இடத்தில்

முகமது என்ற தேயாத நிலவு

தேங்கி கிடந்தது

--------------------------------------


கதீஜா-

கைகால் முளைத்த கனவு

மண்ணில் தெரிந்த

மதுர நிலவு ..


-------------------------


நாணல்கள் நடுவில் நாதஸ்வரம் போல

நிமிர்ந்து நின்றார் நபிகள் நாயக்ம்

----------------------

வேரினை தொடர்ந்து செல்லும்

நீரினை போல அண்ணல்

வானவர் ஓத ஓத

வண்ணமாய் ஓதினார்கள்

-----------------------------
தீபத்தை அணைக்க வந்த சூறாவளி

இஸ்லாத்தை

தீப்பந்தமாக ஆக்கியது

----------------------

ஒட்டகத்தில் பால் கறப்பது முதல்

ஒட்டடை அடிப்பது வரை

நபிகளே செய்தார்

**************************************

வல்லினமும்

மெல்லினமும்கூட தள்ளிவைத்த

இந்த இடையினத்தை

மெய்யெழுத்தாய்

உத்தம நபி மாற்றினார்

--------------------------

தீர்க்க தரிசிக்ளுக்கு

பன்னீர் மரங்களின்

பச்சை நிழலா பந்தல் அமைத்தது

கற்பூர நெருப்பல்லவா

களம் அமைத்தது

-------------------------

மைல்கல்லும்
கடவுளாகும் நாட்டில்கூட
நபிகள் இறைவனாக நகரவில்லை
இது நாயனின் ஏற்பாடா
இல்லை
நாயன்வழி நபிகள்
நட்டுவைத்த நோன்பா

*******************************************************************


இப்படி நபிகள் நாயகம் அவர்களின் உன்னதமான வாழ்க்கையை அழகு தமிழில் படிப்பது சுகமாக இருக்கிறது.

கதீஜா, பாத்திமா,. அபூபக்கர் என பலரைப்பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது


மத நம்பிக்கையே இல்லாதவர்கள் கூட நபிகள் நாயகத்தின் வரலாறை தெரிந்து கொள்வது அவசியம். மன்னிப்பு , கருணை போன்றவைதான் அவர் செய்தியாக இருந்தது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டால் , பூமியே சொர்க்கம் ஆகிவிடும்...

--------------------------------------------------

நாயகம் எங்கள் தாயகம் - நழுவ விடக்கூடாத நூல்

******************************************

படைப்பு - வலம்புரி ஜான்

ஆசாத் பதிப்பகம்





Saturday, June 1, 2013

எழுத்தாளர் சுஜாதாவின் ஜாதி உணர்வும் , பெரியாரின் தீர்க்க தரிசனமும்


” எழுத்தாளர் சுஜாதாவுக்கு பெண்கள் புத்தகம் படித்தால் பிடிக்காது ”

“ கடைசி வரை ஓர் அக்ரஹாரத்து சிறுவன் மன நிலையிலேயே இருந்தார் “

” அவருடன் வாழப்பிடிக்காமல் என் அம்மாவிடம் கதறியிருக்கிறேன். ஆனால் அன்றைய நிலையில் வேறு வழியில்லாமல் அவருடன் வாழ்ந்தேன். இன்றைய கால கட்டமாக இருந்திருந்தால் அவரை தூக்கி எறிந்து இருப்பேன் “

இப்படி எல்லாம் சுஜாதாவின் மனைவி பேட்டி அளித்துள்ளார்.

ஓர் எழுத்தாளனை அவன் எழுத்தை வைத்து மட்டுமே விமர்சிக்க வேண்டும்.

அவன் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி நமக்கு கவலை இல்லை. அதனால் சுஜாதாவைப்பற்றிய , திறமையை பற்றிய நம் மதிப்பீடு இந்த ஒரு பேட்டியால் மாறிவிடப்போவதில்லை.

ஆனால் பெரியார் சொன்ன ஒரு விஷ்யம் சமுதாயம் சம்பதப்பட்டது . அதை மட்டும் பார்ப்பது அவசியம்.

“ பார்ப்பானுக்கு எந்த கொள்கையும் கிடையாது. எது லாபமோ அதை செய்வது மட்டுமே அவன் கொள்கை. நாளைக்கே அசைவம் சாப்பிடுவதுதான் லாபம் என்ற நிலை வந்தால் , அசைவம் சாப்பிட ஆரம்பிப்பான். அது மட்டுமல்ல. மீனின் நடுத்துண்டு தனக்குத்தான் தரப்பட வேண்டும் என்ற ஒரு புதிய ஆச்சாரத்தை உருவாக்கி கொள்வான் “ என்கிறார் பெரியார்.

மனதளவில் பிற்போக்கானவர்களாக இருந்தாலும் , பெண் விடுதலை , நாத்திகம் போன்றவை ஃபேஷனாக இருந்தால் , அதிலும் புகுந்து அவர்களே முன்னணியில் இருப்பதை கொஞ்சம் கவனித்தால் புரிந்து கொள்ள முடியும்.

அவாள் தலைமையில்தான் பெண் உரிமை , நாத்திகம் , சினிமா , இலக்கியம் என எல்லாவற்றையும் தம் கைக்குள் எப்படியோ கொண்டு வந்து விடுகிறார்கள்.

 வெகு குறைவாக எண்ணிகையில் இருக்கும் பிராமணர்களா உங்கள் எதிரிகள் . இதில் லாஜிக்கே இல்லையே என அண்ணாவிடம் கேட்டார்கள்.

எங்களுக்கு பிராமணர்கள் எதிரிகள் அல்ல.. பிராமணீயமே எதிரி என்றார் அவர்.

இந்த பிராமணீயம்தான் அவர்களுக்கு எல்லா துறையிலும் ஆதிக்கத்தை தருகிறது என்றார் அவர்.

ஒரு பிற்போக்கு மனிதராக வாழ்ந்த சுஜாதா , தமிழ் எழுத்தின் அடையாளமாக கொஞ்ச நாட்கள் இருந்தது இதையே நினைவு படுத்தியது.

 நானும் சுஜாதா ரசிகன் என்பதை கொஞ்சம் வெட்கத்துடன் ஒப்புக்கொள்கிறேன்.


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா