Friday, October 18, 2013

காலம் கடந்து நிற்கும் ஒரு கலைஞனின் உன்னத திரைப்படம்


 எத்தனையோ படங்கள் பார்க்கிறோம். அவற்றில் சில படங்களை நம்மால் என்றும் மறக்க முடியாது.. அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் ஏழை படும் பாடு.

ரசிக்க கற்க இந்த படத்தில் ஏராளமான விஷயங்கள் உண்டு.






இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தமிழ் ஸ்டுடியோ முக்கியமான நூறு படங்களை திரையிடும் செய்தி எனக்கு மகிழ்ச்சி அளித்தது.. ஆர்வமாக திரையிடப்படும் பட்டியலை பார்த்தேன்.

அந்த பட்டியலில் நான் பார்க்க வேண்டிய படங்கள் என சில படங்களை குறித்து வைத்தேன். தவிர்க்க வேண்டிய படங்கள் என சில படங்களை சிவப்பு நிறத்தில் அடிக்கோடு இட்டேன். அப்படி சிவப்பு நிறத்தில் அடிக்கோடு இடப்பட்ட படங்களில் ஒன்றுதான் ஏழை படும் பாடு.
இதை தவிர்க்க விரும்பியதற்கு இரண்டு காரணங்கள். படத்தலைப்பு சோகப்படம் என்று சொல்கிறது. பழைய கால சோகப்படம் என்றால் நம் மனதில் ஒரு பிம்பம் எழுமே.. சோகமயமான பாடல்கள் , அழுது வடியும் கதாபாத்திரங்கள் , நீள நீளமான வசனங்கள் என்ற டெம்ப்ளேட்டை எத்தனை படங்களில் பார்த்து விட்டோம்.
இன்னொரு காரணம் படத்தின் நாயகன் நாகையா. இவரைப்பற்றி அந்த காலத்தில் என் சித்தப்பா ஒருவர்தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தினார். இவர் பெயர்தாண்டா நாகையா.. எல்லா படத்திலும் வருவார். ரத்தம் கக்கி இருமி இருமி சாவார்.. என்றார். அவர் சொன்னது போலவே , நான் பார்த்த எல்லா படங்களிலும் கொஞ்ச நேரம் வந்து , இருமி விட்டு இறந்து விடுவதை வாடிக்கையாக கொண்டு இருந்தார். முழு படத்திலும் இருமிக்கொண்டு இருக்கப்போகிறாரா என்ற சந்தேகம் இந்த படத்துக்கு அல்ல...இந்த படம் திரையிடப்படும் கோடம்பாக்கம் இருக்கும் திசைக்கே போகக்கூடாது என்று எண்ண வைத்தது.
இந்த எண்ணத்தை மாற்றி அமைத்தது சில நாட்களுக்கு முன் பார்த்த மர்ம யோகி திரைப்படம். இயக்கம் கே ராம்னாத்... ஆங்கிலப்படம் போல எடுத்து இருப்பார். செருக்களத்தூர் சாமாவின் நடிப்பும் அந்த படத்தில் இயல்பாக இருந்தது. எனவே ரிஸ்க் எடுக்க துணிந்தேன்.



Tuesday, October 15, 2013

இயக்குனருக்கு சவால் விட்டு ஜெயகாந்தன் தானே இயக்கிய படம் - இமயங்களின் மோதல்

ஜெயகாந்தனின் எழுத்துகளைப்போல அவர் வாழ்க்கையும் சுவாரஸ்யமானது. எழுத்தாளாரான அவர் சினிமாவிலும் இறங்கியது அப்படி ஒரு சுவையான நிகழ்வுதான்.

அப்போது அவர் கம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். சோவியத் யூனியன் ஆதரவாளராகவும் இருந்தார். திமுகவினரை எதிர்த்து பேசுவது அவரது முக்கியப்பணியாக இருந்தது.. திமுகவினர் சினிமாவை முக்கிய பிரச்சார ஆயுதமாக பயன்படுத்துவதை பார்த்த கம்யூனிஸ்ட் தோழர்கள் , அதற்கு மாற்றாக நல்ல சினிமாவை வழங்கி சினிமா எனும் ஊடகத்தை கைப்பற்ற வேண்டும் என நினைத்தார்கள். அவர்கள் முயற்சியால்தான் ஜெயகாந்தன் சினிமாவுக்கு வந்தார்.

அவரது இயக்கத்தில் வந்த முதல் படமான உன்னைப்போல ஒருவன்  அவருக்கு நல்ல பெயரைப் பெற்று தந்தது. இந்த பின்னணியில் அவரது யாருக்காக அழுதான்  நாவலை படமாக்க பலரும் விரும்பினர். அதில் முக்கியமானவர் சந்திர பாபு. ஆனால் சந்திரபாபு தன்னை டாமினேட் செய்வதாக நினைத்த ஜெகே அவருக்கு படம் தயாரிக்கும் உரிமையை தரவில்லை.

பாலும் பழமும் போன்ற வெற்றிப்படங்களை எடுத்த வேலுமணிக்கு படம் தயாரிக்கும் உரிமையை கொடுத்தார். அந்த படத்துக்கு இயக்குனர் ஸ்ரீதர்.
அப்போதைய ஸ்டார்கள் சிவாஜி , சாவித்ரி , ரங்காராவ் என அட்டகாசமான டீம் அமைந்து இருந்தது.. படம் மளமளவென வளர்ந்து வந்தது..அப்போதுதான் விதி விளையாடியது.

வழியில் போகும் தச்சரைகூப்பிட்டு , தனக்கு ஓர் ஆப்பு அடித்து விட்டு போகசொல்வது போல , ஜெயகாந்தனை அழைத்து , தான் எடுத்துக்கொண்டிருக்கும் படத்தின் திரைக்கதையை சொன்னார் ஸ்ரீதர்.

சிவாஜி ஓர் அனாதை ,,, லாட்ஜில் வேலை செய்கிறார்.. தன் முதலாளி பாலையாவுக்கு விசுவாசமாக இருக்கிறார். .. பாலையாவும் அன்பாக இருக்கிறார்..அங்கு தங்கி இருக்கும் ரங்காராவ் சிவாஜி மீது அன்பாக இருக்கிறார்.. இனிமையான பாடல் எல்லாம் பாடுகிறார்கள்.. அங்கே சாவித்ரியும் ஓர் ஆணும் தங்க வருகிறார்கள்..டூயட் எல்லாம் பாடுகிறார்கள்.. அவன் சந்தர்ப்ப சூழ் நிலையால் சாவித்ரியை பிரிந்து செல்கிறான்.

சிவாஜிக்கு இதை எல்லாம் ஃப்லாஷ் பேக்காக சொல்கிறார். சிவாஜியும் தன் கதையை சொல்கிறார். ஊரில் அவரை வளர்த்த பாதிரியார். சிவாஜியின் காதல்... ஒரு டூயட்...காதல் தோல்வி.. ஒரு சோகப்பாடல் என சொல்லி முடிக்கிறார்...
சிவாஜியை மற்றவர்கள் புரிந்து கொள்ளாமல் அவமானப்படுத்த , சாவித்ரி மட்டும் அன்பாக இருக்கிறார்.

இந்த நிலையில் சிவாஜி மீது , அவர் செய்யாத தவறுக்கு பழி சுமத்தப்படுகிறது... அடி உதை என எல்லாவற்றையும் தாங்குகிறார்.. ஆனால் வருந்தவில்லை.. ஆனால் ஒரு கட்டத்தில் சாவித்ரியும் சேர்த்து பழி சுமத்தப்பட்டு அவமானத்துடன் ஊரை விட்டு செல்லவே, சிவாஜி ஒரு சோகப்பாட்டு பாடி , உயிர் துறக்கிறார்.

எப்பூடி என பெருமையாக ஜெகேயை பார்த்தார் ஸ்ரீதர்...
என் கதையையே மாற்றி விட்டீர்களே... டைட்டிலையும் மாற்றி விடுங்கள்.. யாருக்காக செத்தான் என மாற்றுங்கள் என கோபமாக சொல்ல ஸ்ரீதர் திகைத்தார்.. ஜெயகாந்தன் இப்படி வழக்கமான ஃபார்மேட்டில் தன் கதை படமாவதை விரும்பவில்லை.. ஆனால் அப்படி எடுத்தால்தான் ஓடும் என்பது ஸ்ரீதர் கருத்து.. இந்த கருத்து வேறுபாடு முற்றி கடைசியில் படம் கைவிடப்பட்டது... இருவரும் அவரவர் துறையில் இமயங்கள்.. ஆனால் ( அதனால் ) ஒத்துபோக முடியவில்லை.
அந்த படம் வெளியாகி இருந்தால் , பாசமலரை மிஞ்சும் வகையில் ஹிட் ஆகி இருக்கும்.. சிவாஜிக்கு முக்கியமான படமாக இருந்திருக்கும்.

எ ந்த இயக்குனரும் வேண்டாம்,



என் கதையை நானே எடுக்கிறேன் என சவால் விட்டு ஜெகேயே படத்தை பின்பு எடுத்தார்..
 நாகேஷ் , கே ஆர் விஜயா , பாலையா , சகஸ்ர நாமம் நடித்தனர். கண்ணதாசன் பாடல் எழுதினார்.. சவால் படம் என்பதால் அந்த காலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது..

அதே எதிர்பார்ப்புடன் நானும் இன்று அந்த படம் பார்த்தேன்...தமிழ் ஸ்டுடியோ திரையிடலில்.

படம் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா?

******************************************************

ஜெயகாந்தன் தன் படம் காட்சிபூர்வமாக இருக்க வேண்டும்  என நினைத்ததால்தான் ஸ்ரீதருடன் பிணக்கு ஏற்பட்டது என்பது கொஞ்ச நேரத்திலேயே தெரிந்தது.. பாடல்கள் , டூயட்டுகள் இல்லாத யதார்த்தவாத பாணி படமாக எடுப்பது அவர் கனவாக இருந்து இருக்கிறது. இந்த படத்தில் ஒரு பாடல் இருந்தாலும் அது பின்னணி பாடலாக வருகிறதே தவிர யாரும் பாடுவதாக வரவில்லை.

ஃப்ளாஷ் பேக் , பழைய காதல் சம்பவங்கள் என்றெல்லாம் செல்லாமல் சொல்ல வேண்டியதை சுருக்கமாக நேரடியாக ஆங்கிலப்படம் போல சொல்லி இருக்கிறார்.


கே ஆர் விஜயா , நாகேஷ் ஆகியோரின் ப்ழைய கதைகள் சில காட்சிகளில் வலுவாக சொல்லப்பட்டு விடுகின்றன.


அவர்கள் மட்டும் அல்ல... லாட்ஜ் ஓனர், சமையல்காரர் , சூதாடி . சேட்டு , ஜோசியக்காரர் என ஒவ்வொருவர் பற்றியும் நமக்கு நன்கு தெரிந்து விடுகிறது , வலுவான காட்சிகள் மூலம்.

ஒவ்வொரு கேரக்டரையும் பற்றி சொல்வதற்கே ஆரம்பத்தில் பெரும்பாலான நேரம் செலவிடப்படுகிறது.. வணிகப்படங்களில் ஆரம்பத்திலேயே கதையை ஆரம்பித்து ரசிகனை ஈர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.. இதில் பொறுமையாக கதை ஆரம்பிக்கிறது. ஆனால் க்தை ஆரம்பித்தவுடம் நம்மால் ஒன்ற முடிகிறது.

கெட்டது செய்யக்கூடாது என்றால் , கெட்டது என்றால் என்ன என்று கேட்பவன் ஜோசப் ... அந்த அளவுக்கு கெட்டது என்றால் என்ன என்றே தெரியாதவன்.


அனைவரிடம் அன்பாக இருப்பவன்.. திட்டினாலும் , அவமானப்படுத்தினாலும் அழ வேண்டும் என்பது கூட தெரியாதவன். லாட்ஜ் ஒன்றில் வேலை செய்து , கஷ்டப்பட்டு பணம் சேர்க்கிறான்.. அங்கு தங்கி இருக்கும் ஒரு பெண் அவன் மீது பரிவுடன் இருக்கிறாள்..



ஒரு நாள் அங்கு தங்க வரும் சேட் குடிபோதையில் பர்சை தவற விடுகிறான்..




அது ஓனர் கைக்கு வருகிறது... அதை அவர் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்து கொள்கிறார்.




மறு நாள் பர்சைத்தேடும் சேட்டு , ஜோசப் மீது பழி போடுகிறான்.. எல்லோரும் அவனை சந்தேகிக்கிறார்கள்... பர்ஸ் ஓனரிடம் இருப்பது தெரிந்தும் ஜோசப் அமைதி காக்கிறான்..அவனை அடித்து துன்புறுத்துகிறார்கள்.. அவன் சேர்த்து வைத்து இருக்கும் பணத்தை பிடுங்கி கொள்கிறார்கள்... உதவ வரும் அந்த பெண்ணையும் சந்தேகிக்கிறார்கள்...

ஊருக்கு சென்று இருந்த சமையல்கார் திரும்ப வருகிறார்.. அவர் முயற்சியால் பர்ஸ் சேட்டுக்கு கிடைக்கிறது.. அப்போதும் முதலாளி வாய் திறக்கவில்லை.. இத்தனைக்கும் அவர் பெரிய பக்திமான்...

பெரிய மனிதனிடம் இருக்கும் சின்னத்தனம்,. கூட இருப்பவர்களே குழி பறிக்கும் அவலம், உதவ நினைப்பவர்களுக்கு கிடைக்கும் அவமானம் , அப்பாவிகளின் கையாலாகத நிலை என்பதெல்லாம் ஜோசப்புக்கு அப்போதுதான் உறைக்கிறது...

அதுவரை அழுதறியாத அவன் வாய் விட்டு கதறுகிறான் என்பதுடன் படம் முடிகிறது.

எவ்வளவு பெரிய அயோக்கியர்கள் கூட்டத்திலும் ஒரு நல்லவன் இருப்பான் ( ஷிண்டலர் லிஸ்ட் நினைவு இருக்கிறதா ) என்பது போன்ற அழுத்தமான பாத்திரபடைப்பு ( சமையல்காரர் ) , பொம்மை காட்சி , தன்னை நல்லவன் என நினைத்து கொண்டு - ஆனால் கெட்டது செய்யும் லாட்ஜ் ஓனரின் குற்ற உணர்வு , ஆதரவற்ற நிலையில் தான் இருந்த போதும்  ஜோசப் மீது பரிவு காட்டும் பெண் , போட்டு வாங்கும் யுக்தி மூலம் இந்த பிரச்னையை தனக்கு சாதகமாக்க முயலும் ஜோதிடர் என பலவற்றை ரசிக்க முடிகிறது..

படத்தை டிரை ஆக செல்லாமல் பல சுவாரஸ்யமாக காட்சிகள் காப்பாற்றுகின்றன. உதாரணமாக , அந்த பெண் தன் நகைகளை விற்க தன்னுடன் துணைக்கு வருமாறு ஜோசப்பை கூப்பிட்டு இருப்பாள்.. இந்த காட்சி கேஷுவலாக வரும். முக்கியத்துவம் ஏதும் இல்லாத காட்சி போல தோன்றும்...

அதன் பின் ஜோசப்புக்கு திருட்டுப்பட்டம் கிடைத்தவுடன்.அந்த காட்சி அழுத்தம் பெற்று விடும்.. அந்த காட்சியின் தொடர்ச்சியாக , இப்போது நகையை விற்க முயன்றால் , அந்த பெண்ணும் சந்தேக வளையத்தில் சிக்கி விடுவாளோ என்ற பதைபதைப்பை ஏற்படுத்தவே அந்த காட்சி...

இப்படி வசனங்கள் , பாடல்கள் இல்லாமலேயே உணர்வு பூர்வமாக படம் எடுத்த ஜெயகாந்தனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஆனால் அன்றைய ரசிகர்களுக்கு அவ்வளவாக படம் பிடிக்கவில்லை.. வசூல் ரீதியாக தோல்விதான்.

ஆனால் விஷ்யம் தெரிந்தவர்கள் அன்றே பாராட்டி இருக்கிறார்கள்..இன்றும் படத்தை பார்க்கும்படி இருக்கிறது..
பாலையா, நாகேஷின் நடிப்பு , கே ஆர் விஜ்யாவின் அழகு , கண்ணதாசனின் பாடல் போன்றவற்றை என்றும் ரசிக்கலாம்.
ஒரு வேளை வேறு இயக்குனர் இயக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்க கூடும்..

ஆனால் ஸ்ரீதர் இயக்கி வணிகப்படமாகி அடையும் வெற்றியை விட , இப்படி ஒரு முயற்சியில் ஜெகே அடைந்த தோல்வி ஒருவகையில் வெற்றிதான்..

முயலை குறி வைத்து அடித்து வீழ்த்தும் அம்பை விட , யானை மீது எய்து , குறிதப்பிய அம்பை ஏந்துவது இனிமை அல்லவா..

யாருக்காக அழுதான்? - யார் வேண்டுமானாலும் ரசிக்கத்தக்க படம் 
*************************************************
பின் குறிப்பு

படம் முடிந்ததும் அனைவரும் கைதட்டி பாராட்டினார்கள்.. இத்தனை ஆண்டுகள் கழித்தும் கிடைக்கும் கைதட்டலை விட வேறு என்ன விருதை நாகேஷ் எனும் அந்த  மகா கலைஞனுக்கு வழங்கி விட முடியும்..








Sunday, October 13, 2013

நடிகர்கள் என்ன செய்கிறார்கள்? ஃபில்ம் ந்யூஸ் ஆனந்தன் கண்ணீர் !

















ஒரு விஷயத்தைப் பற்றி எவ்வளவு தூரம் தெரிந்து கொள்ள ஆரம்பிக்கிறோமோ அந்த அளவுக்க்கு , அந்த துறை பற்றிய அறியாமை நமக்கு தெரிய ஆரம்பிக்கும். 
நாமெல்லாம் சினிமா பார்த்து வளர்ந்தவர்கள்..கடந்த சில ஆண்டுகளாக சினிமாத்துறையை சேர்ந்தவர்கள்தான் முதல்வராக இருக்கிறார்கள்.. ஆனால் சினிமாவைப்பற்றிய சில அடிப்படை தகவல்கள்கூட தெரியாத நிலையில்தான் பெரும்பாலும் இருக்கிறோம்.
இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தமிழ் ஸ்டுடியோ அமைப்பு , சிறப்பு புகைப்பட கண்காட்சி நடத்தி வருகிறது. இதன் திடக்க விழா 12.10.2013 அன்று நடந்தது..

அதில் ட்ராட்ஸ்கி மருதி, ஒளிப்பதிவாளர் நல்லுசாமி , ஃபில்ம் ந்யூஸ் ஆனந்தன் ஆகியோர் மிகச்சிறப்பான உரை வழங்கினார்கள்.. ஃபார்மலான உரையாக இல்லாமல் , ப்ரொஃபசனல் உரையாக இருந்தது. அதில் , இந்தியாவில் இது வரை 70 எம் எம் படம் எடுக்கப்பட்டதே இல்லை என்ற செய்தி என்னை ஆச்சர்யப்படுத்தியது.. இது போல பல புதிய செய்திகள் கிடைத்தன. அபூர்வமான புகைப்படங்களை பார்க்க முடிந்தது..

வரவேற்று பேசிய அருண், இந்த கண்காட்சி தேடலுக்கான விடை அல்ல...தேடலுக்கான ஆரம்பம் என்றார். ஒவ்வொரு படத்துக்கு பின் இருக்கும் கதைகளை , வரலாற்றை தேடிப்பாருங்கள் என்றார்.

மருது பேசுகையில், தமிழகமும் தென்னிந்தியாவும் இந்திய சினிமாவில் முக்கியப்பங்காற்றி இருக்கின்றன.. ஆனால் அதை எல்லாம் மறந்து விட்டனர் என்றார்.

நல்லுசாமி பேசுகையில் தொழில் நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியைப்பற்றி விரிவாக சொன்னார்.

கறுப்பு வெள்ளை, டெக்னிக் கலர் , ஈஸ்ட்மென் கலர் என்று ஒவ்வொன்றையும் விரிவாக சொன்னார். 

35 எம் எம் படம் , சினிமாஸ்கோப் , 70 எம் எம் இவை எல்லாம் எப்படி எடுக்கபடுகின்றன என்று சொன்ன அவர் , தமிழில் இதுவரை 70 எம் எம் படங்கள் எடுக்கப்பட்டதே இல்லை என்று சொன்னபோது பார்வையாளர்கள் திகைத்தனர்... எத்தனையோ 70 எம் எம் படங்கள் வந்து இருக்கின்றனவே என நினைத்தபோது அவர் விளக்கினார்.

அஸ்பக்ட் ரேஷியோ குறித்து விளக்கிய அவர் , நம் ஊரில் சினிமாஸ்கோப் முறையில் எடுத்து அதை 70 எம் எம் ஆக மாற்றுகிறார்களே தவிர நேரடியாக 70 எம் எம் எடுத்ததில்லை என்றார்.

காந்தி படத்தை இந்திய படமாக கருதினால் , அது மட்டும்தான் 70 எம் எம்மில் எடுக்கப்பட்ட ஒரே இந்திய படம் என்றார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது..

தொழில் நுட்பம் வளர்ந்த அளவுக்கு கலை வளரவில்லை.. அழகியல் வளரவில்லை.. ஆவாரா, கான் வித் விண்ட் போன்ற படங்களுக்கு நிகரான ஒளிப்பதிவு இன்று இல்லை...100 கோடி 200 கோடி செலவழித்து என்ன பயன்?

மொழிக்கு ஓர் இலக்கணம் இருக்கிறது.. நேற்று வந்தான் என சொல்ல வேண்டும். நேற்று வருவேன் என சொல்ல கூடாது. அது போல சினிமாவுக்கும் இலக்கணம் இருக்கிறது.

180 டிகிரி கான்சப்ட் என்று இருக்கிறது..  சில காட்சிகளில் வேண்டுமென்றே அதை மீறலாம்.. ஆனால் அப்படி ஒன்று இருப்பதே தெரியாமல் , அதை மீறி படம் எடுக்கிறார்கள்.. இரண்டு கேரக்டர் பேசினால் ., யாரை ஃபோக்கஸ் செய்ய வேண்டும் என காட்சியின் அடிப்படையில் இயக்குனர் சொல்ல வேண்டும். அப்படி சொல்லாவிட்டால் , இருவரையும் ஃபோக்கஸ் செய்து எடுக்க வேண்டும். ஆனால் இயக்குனர்களுக்கு ஒளிப்பதிவு குறித்த அறிவு இல்லாததால் அவர்கள் சும்மா சீனை மட்டும் சொல்லி விடுகிறார்கள்..கேமரா மேன் தன் விருப்பத்துக்கு ஏற்ப எடுக்கிறார்.
இதனால் படத்தின் தரம் குறைகிறது , முதலில் இரு  படங்கள் நடிப்பு , பாடல்கள் என சில காரணங்களுக்காக ஓடலாம்..ஆனால் இந்த வெற்றி நீடிக்காது.

எனவே முதலில் தொழிலை கற்றுக்கொண்டு அதன் பின் இறங்குங்கள்..இது சினிமாவுக்கு மட்டும் அல்ல..அனைத்து துறைக்கும் பொருந்தும்.

பீம்சிங் படங்கள். ஸ்ரீதர்- வின்சண்ட் காம்பினேஷனில் வந்த படங்களை பாருங்கள்.. ஒளிப்பதிவின் நேர்த்தி புரியும்.

என்றோ வந்த அவள் அப்படித்தான் படத்தின் ஒளிப்பதிவை நினைவில் வைத்து இன்றும் என்னை அழைக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அதில் இருக்கும் உயிர்.

பீம்சிங் ஒரு தொழில் நுட்ப வல்லுனர்...எனவேதான் அவர் படங்கள் சிறப்பாக உள்ளன..இன்றோ தயாரிப்பளரிடம் நன்றாக  கதை சொல்பவர்தான் இயக்குனர் என்றாகி விட்டது..

யார் வேண்டுமானாலும் இயக்குனர் ஆகலாம்..ஆனால் முதலில் கற்றுக்கொண்டு பிறகு களம் இறங்குங்கள் என்றார்.

ஃபில்ம் ந்யூஸ் ஆனந்தன் மிக உருக்கமாக பேசினார்.
தமிழின் முதல் படம் எடுத்த நடராஜ முதலியாரை  நான் பார்த்து இருக்கிறேன். அந்த காலம் முதல் இன்று வரையிலான அரிய தகவல்கள் , நூல்கள், ப்டங்கள் சேர்த்து வைத்து இருக்கிறேன்.

இதை எல்லாம் வைத்து கண்காட்சி நடத்த பல வருடங்களாக முயன்றேன். யாரும் உதவவில்லை.. முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதி , அத்தனை தகவல்களையும் புத்தக வடிவில் வெளியிட உதவி கேட்டேன். இரண்டே நாட்களில் பதில் போட்டார். அவர் ஆதரவால் புத்தகம் வெளியானது.
 நிரந்தர கண்காட்சியில் வைப்பதாக சொல்லி என் சேகரிப்புகளை ஒரு பஸ்சில் வைத்து அதிகாரிகள் எடுத்து சென்றனர்..அப்படி எடுத்து சென்றபோது , என் குழந்தைகளை எடுத்து செல்வது போல வேதனைப்பட்டேன். ஒரு மாதம் அழுது கொண்டே இருந்தேன்.

ஆனால் சொன்னபடி கண்காட்சி நடத்தவில்லை//அந்த நூல்களை எங்கோ போட்டு வைத்து விட்டனர்... முதல்வருக்கு இதை கவனிக்க நேரம் இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் நடிகர் சங்கம் என்ன செய்கிறது... நடிகர்கள் என்ன செய்கிறார்கள்?

ஆந்திரா, கேரளா விழாக்களுக்கு என்னை அழைத்து மரியாதை செய்கிறார்கள்...தமிழ் சினிமாத்துறையினர் என்னை மதிப்பதில்லை... நூற்றாண்டு விழாவில் என்னை கண்டு கொள்ளவில்லை..

நான் எனக்காக எதுவும் கேட்கவில்லை... நான் எத்தனை நாட்கள் இருப்பேன் என தெரியவில்லை.. நான் இருக்கும்போதே நம் சினிமா வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே என் ஆசை என சொல்லி கண்கலங்கினார்..

விடைபெறும்போது, அருணின் கைகளைப்பிடித்து கண்ணீருடன் சொன்னார்...

“ என் குழந்தைகளை பத்திரமா பார்த்துக்கப்பா”

அத்தகைய அரிய புகைப்படங்களின் கண்காட்சி இன்றுவரை( திங்கட்கிழமை- 14.10.2013) நடக்கிறது... 

கண்டிப்பாக சென்று பாருங்கள்..அந்த பெரிய மனிதருக்கு நாம் செய்யகூடிய குறைந்த பட்ச மரியாதை அதுதான்...




Friday, October 11, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - அண்ணா காலத்து வெர்ஷன்


  நான் அண்ணா அவர்களின் எழுத்துகளுக்கு தீவிர ரசிகன்.. அவர் எழுதிய பெரும்பாலான நூல்களை படித்து இருக்கிறேன். அவற்றில் இருக்கும் தமிழ் ஆளுமை, விஷய ஞானம் , வாதத்திறமை நம்மை அசர வைக்கும். எதிர் கட்சியினரை அரசியல் காரணங்களுக்காக திட்டினாலும், தனிப்பட்ட


முறையில் அவரது பண்பாட்டை பல
ர் பதிவு செய்து இருக்கின்றனர்.

அந்த அளவுக்கு ரசிகனாக இருந்தாலும், அவர் படங்களை பார்க்க அவ்வளவு ஆர்வம் இருந்ததில்லை... அன்பே சிவம் படம் வரை பயன்படுத்தப்பட்டு வரும் டெம்ப்ளேட்- ஜமீந்தார் மகளை ஏழை காதலித்து , சமூக மாற்றத்துக்காக பாடுபடும் யுக்தி- எனக்கு அலுத்துப்போய் விட்டதே காரணம்.

இந்த நிலையில் ஓர் இரவு படம் தமிழ் ஸ்டுடியோ சார்பில் திரையிடப்பட்டபோது எனக்கு படம் பார்க்க ஆர்வம் இல்லை. ஆனால் அண்ணா வசனத்தை ரசித்து விட்டு வரலாம் என்பதற்காக படம் பார்க்க சென்றேன்.

சென்றவனுக்கு படம் இனிமையா அதிர்ச்சியை அளித்தது..திராவிட இயக்க கொள்கைகளை விட்டுக்கொடுக்காத படம் என்றாலும் , இது பிரச்சாரப்படம் அல்ல. ஒரு நல்ல எண்டர்டெய்னர்....சமூக கருத்துகளை விட்டு விடாத எண்டர்டெய்னர்..

ஒநாயும் ஆட்டுக்குட்டியும் பாணியில் ஒரே இரவில் நடப்பதாக அண்ணா படைத்த கதை இது.

 நள்ளிரவு நேரம். ஓநாய் ஒன்று ஒரு வீட்டுக்கு வேட்டையாட திருட்டுத்தனமாக வருகிறது. வந்த இடத்தில் அதற்கு சில விஷயங்கள் தெரிய வருகின்றன. அந்த வீட்டில் இருக்கும் ஆடுகளை ஒரு புலி வேட்டையாடத்துடிப்பது தெரிய வருகிறது.. அந்த புலிக்கும் அந்த ஆடுகளுக்கும் இருக்கும் சம்பந்தம்.. ஒனாய்க்கும் அந்த ஆடுகளுக்கும் இருக்கும் உறவு. ஓநாயாக மாறிய காரணம் என்பதெல்லாம் அழகு தமிழில் சொல்லப்படுகின்றன.

கதை நடப்பது ஒரே இரவில்...மற்ற சம்பவங்கள் எல்லாம் ஃப்ளாஷ்பேக்கில் வருவதாக அண்ணா திட்டம் இட்டு  இருந்தார்.
அதை அப்படியே எடுத்து இருந்தால் , உலகப்பட வரிசையில் இடம் பெற்று இருக்கும். ஆனால் அந்த கால ரசிகர்களுக்கு அது செட் ஆகாது என நினைத்து திரைக்கதையை மாற்றி விட்டார்கள். ஃப்ள்ஷ் பேக் குறைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக நடக்கும் நிகழ்ச்சிகள் லீனியராக சொல்லப்படுகின்றன... அந்த இரவுக்காட்சி கடைசியில் வருகிறது..

கருணாகரன் என்ற பணக்காரர் சொர்ணம் என்ற ஏழைப்பெண்ணை காதலிக்கிறார். ஆனால் ஜாதி பிரச்சனையால் அவளை திருமணம் செய்ய முடியவில்லை. கர்ப்பம் ஆக்கி விட்டு கைவிட்டு விட்டு , இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.

காலங்கள் ஓடுகின்றன.. அவர் மனைவி இறந்து விட்டு , தன் மகளை இவரே வளர்த்து ஆளாக்குகிறார். அவள் டாக்டர் ஒருவனை காதலிக்கிறாள்.

கருணாகரனை வில்லன் ( பாலையா ) என்னவோ சொல்லி ப்ளாக் மெயில் செய்து பணம் பறிக்கிறான். ஒரு கட்டத்தில் அவரது மகளையே கேட்கிறான்.

டாக்டரை அழைத்து பிளாஷ்பேக் சொல்லி அவனை விலகிக்கொள்ள சொல்கிறார். தன் மனைவி எப்படி இறந்தாள் , அவன் ஏன் மிரட்டுகிறான் என்பதை எல்லாம் சொல்கிறார்.

அப்போதுதான் இரவுக்காட்சி வருகிறது.. தன் அன்னையின் உயிரைக்காப்பாற்ற தேவையான பணம் சம்பாதிக்க திருடும் பொருட்டு , அந்த வீட்டுக்கு வருகிறான் ஒரு திருடன்.. அங்கே தற்கொலைக்கு தயாராகும் பெண்ணை பார்க்கிறான். அவளுக்கு உதவுகிறான். அப்போது அங்கு வரும் டாக்டர் காதலன் இதைப்பார்த்து சந்தேகம் அடைகிறான்.

கடைசியில் அந்த திருடன், சொர்ணா+ கருணாகரனின் மகன் என்பது தெரிய வருகிறது... அந்த திருடனும் , டாக்டரும் கை கோர்த்து வில்லனை வீழ்த்துகின்றனர்..

படத்தில் சுவாரஸ்யமான காட்சிகள் ஏராளம்.

வில்லனை ( பாலையா) மணக்க விரும்பாத கதா நாயகி (லலிதா ), திருடனிடம் ( கே ஆர் ராமசாமி_ உதவி கேட்கிறாள்..சற்று நேரத்தில் அந்த வில்லன் வருவான்..அப்போது அந்த திருடன் காதல் மொழி பேசி ரகசிய காதலன் போல நடிக்க வேண்டும். வருபவன் டென்ஷன் ஆனால் , அவனை அடித்து துரத்த வேண்டும் , அவளது போலியான எதிர்ப்பை மீறி என்பது அவள் திட்டம். திருடன் ஒப்புக்கொள்கிறான்.

யாரோ வரும் சத்தம் கேட்டு காதல் மொழி பேச ஆரம்பிக்கிறான்..ஒரு ட்விஸ்ட்,,, வந்தவன் வில்லன் அல்ல...டாக்டர் காதலன்.( நாகேஸ்வர ராவ்) . அதற்கு பின் நடக்கும் கலாட்டாக்களை நீங்களே யூகிக்க முடியும்..

ஆனால் இப்படி முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக ஆக்கி விடாமல், சமூக கருத்துகளை ஆங்காங்கு சொல்லி இருப்பது அண்ணாவின் மேதமை...

துன்பம் நேர்கையில் , அய்யா சாமி அய்யா வாய்யா, ராய்யா, யூ கம் ஐயாஎன்ற இரண்டு சூப்பர் ஹிட் பாடல்கள் இருக்கின்றன.. ஒன்றுக்கு இரண்டு காமெடியன்கள்... புண்படுத்தாத காமெடி..’

ஆரம்ப காட்சியில் வரும் சரோஜா செம அழகு...

குற்றவாளி யார்? சத்திய சோதனை என ஆங்காங்கு புத்தகங்கள் மூலம் காட்சியை விளக்குவது அழகு,


இயக்கம் ப நீலகண்டன்.

அண்ணா ஒரே இரவில் வசனங்கள் எழுதினாராம்...சோ ஸ்வீட்


மாளிகை வேண்டாம், மாட்டுக் கொட்டகை போதும்.
பட்டுப் பீதாம்பரம் வேண்டாம்; கட்டத் துணி இருந்தால் போதும்.
ஆபரணங்கள் வேண்டாம்; அன்பு காட்டினால் போதும்.

ஆம்..அவளுக்கு துரோகம் செய்தேன்..அப்போதும் என் பெயர் ”கருணா”கரன் தான்..

அவனைக்கொள்ள ஆயுதன் எதற்கு , ( கைகளை சுட்டிக்காட்டி ) இந்த இரட்டைக்குழல் துப்பாக்கிளே போதுமே

லா பாயிண்ட் பேசறத விட்டுட்டு , லவ் பாயிண்ட்  பேசிப்பாருங்க...


இப்படி படம் முழுக்க ரசிக்கலாம்... படம் முழுக்க பின்னணி இசை இருப்பதை நாம் சிலாகிக்கிறோம்.  இப்படி செய்து செய்து தமிழ் படங்களில் யாதர்த்தமான ஒலிகளே இல்லாமல் போய் விட்டது.

இந்த படத்தில் தேவையான இடத்தில் மட்டுமே பின்னணி இசை உள்ளது..

ஓர் இரவு - ஒரே ஒரு முறையேனும் பார்த்தே ஆக வேண்டிய படம்

Wednesday, October 9, 2013

தமிழின் முதல் அடல்ட்ஸ் ஒன்லி திரைப்படம்-பார்த்து சிலிர்த்து பரவசப்பட்ட அனுபவம்


ஒரு பெண் அரசரை மயக்கி அவர் மனதில் இடம் பிடித்து விடுகிறாள். சதி செய்து அவரையும் அவர் வாரிசுகளையும் கொன்று ஆட்சியை பிடிக்கிறாள்.
திடீர் திருப்பமாக அவள் கூட்டாளியையுமே தீர்த்து கட்டி விடுகிறாள்..

தட்டிக்கேட்க ஆள் இல்லாத அரசியாகி காட்டாட்சி நடத்துகிறாள்...

கரிகாலன் என்பவன் தலைமையில் மக்கள் அணி திரள்கிறார்கள்... புரட்சிக்கு திட்டம் இடுகிறார்கள்... கரிகாலன் வெல்ல முடியாதவனாக இருக்கிறான். அவனுக்கு அவ்வப்போது தெய்வம் ரகசிய கட்டளைகள் வழங்கி வழி காட்டுகிறது...

அரசிக்கு விசுவாசமான தளபதி அவளுக்கு உறுதுணையாக இருக்கிறான். கரிகாலனை வெல்ல முடியாத நிலையில் , அவனை மயக்கி வீழ்த்தும் பொருட்டு அரசியின் தரப்பில் இருந்து கலாவதி என்ற பெண் தந்திரம் செய்து கரிகாலன் இருப்பிடத்தை அடைகிறாள்.
ஒரு யோகி மர்மமான சில வேலைகள் செய்கிறார்... அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது புதிராக இருக்கிறது...

அரசி யாருக்கும் அடங்காமல் இருந்தாலும் , அவளை ஒரு பேய் அடிக்கடி வந்து மிரட்டி செல்கிறது... அதற்கு மட்டும் அஞ்சுகிறாள்..

இதற்கிடையில் காலாவது மனம் மாறி கரிகாலனை நேசிக்க தொடங்குகிறாள்.. அவனும் நேசிக்கிறான், ஆனால் இதை அவனது கூட்டம் விரும்பாததால் , அவன் தலைமை பதவியை துறந்து வெளியேறுகிறான்.

தலைமை இல்லாத அந்த கூட்டத்தினரை அரசி படையினர் வென்று ஜெயிலில் அடைக்கின்றனர். கலாவதியும் ஜெயிலில் அடைக்கப்படுகிறாள்...

அவர்களை காப்பாற்ற கரிகாலன் வந்து சண்டையிடுகிறான்...அவனுக்கு தெய்வ கட்டளை மூலம் வழிகாட்டுவது தன் தந்தையான் என்பதை தளபதி கண்டுபிடிக்கிறான்.

அவர் ஏன் அப்படி செய்தார். அவர் மர்மமான நடவடிக்கைகளின் காரணம் என்ன என்பது கடைசியில் தெரிகிறது...

அவர் யார் என என்பது தெரிய வரும்போது அனைவரும் அதிர்கின்றனர்..

பழைய படங்களை நாம் புதிய படங்களை பார்க்கும் மதிப்பீடுகளோடு பார்க்க முடியாது... அந்த கால தொழில் நுட்பம் , திரை மொழி போன்றவை ஆரம்ப கட்டத்தில் இருகின்றன என்பதால் ஒரு சலுகை கொடுத்து விட்டுத்தான் பழைய படங்கள் பார்ப்போம்..

ஆனால் மர்ம யோகி என்ற இந்த சினிமா , இப்போது பார்த்தாலும் சுவையாகவும் விறுவிறுப்பாகவும் , பழைய படம் எனும் சலுகையை கோராமலும் இருக்கிறது..

எம் ஜி ஆருக்கு மிகப்பெரிய வெற்று தந்து அவருக்கு திருப்பு முனை ஏற்படுத்திய படம் இது..

இந்த வெற்றியை எம் ஜி ஆர் எவ்வளவு அடக்கத்துடன் ஏற்று கொண்டார் என்பதில்தான் அவர் நிற்கிறார்.

எம் ஜி ஆர் கூறுகிறார்.

ஒரு முறை நாடக மற்றும் சினிமா நடிகரான கே பி கேயுடன் அவர் கதா நாயகனாக நடித்த படம் ஒன்றுக்கு போய் இருந்தோம். அதில் நானும் சிறிய வேடத்தில் நடித்து இருந்தேன்.. எல்லோரும் கே பி கே, கே பி கே என அவரை சூழ்ந்து கொண்டார்கள்.. அவரை காப்பாற்றி அழைத்தி செல்வது பெரும்பாடாக இருந்தது..என்னை யாருக்கும் தெரியவில்லை... அவர் புகழை நினைத்து வியந்தேன்.

சில ஆண்டுகள் கழித்து ,  நான் நடித்த மர்மயோகி மாபெரும் வெற்றி கண்டது..திரையரங்குக்கு நான் சென்ற போது கரிகாலன் கரிகாலன் என வாழ்த்தொலி  எழுப்பி மக்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். அவர்களில் ஒருவராக கே பி கே இருந்தார் , டைகர் ஆஃப் இந்தியன் ஸ்டேஜ் என கவர்னரால் புகழப்பட்ட அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை...

சில ஆண்டுகள் முன்பு என்னால் ஆச்சர்யத்துடன் பார்க்க வைத்த அவரை இன்று யாருக்கும் தெரியவில்லை என்றால் , புகழ் என்பதை நிலையான ஒன்று என நினைக்கும் ஆணவம் எனக்கு எப்படி வரும்...

இந்த வரலாற்று சிறப்பு மிக்க படம் ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு. திரைக்கதை _ வசனத்தை ஏ.எஸ்.ஏ.சாமி எழுதியிருந்தார். டைரக்ஷன்: கே.ராம் நாத். இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி மாதுரிதேவி. வில்லியாக ( அரசியாக ) அஞ்சலிதேவி நடித்தார்.

மர்ம யோகியாக நடித்தவர் செருகளத்தூர் சாமா,

சமூக ரீதியான புரட்சிகரமான கதையை திகில் , கடவுள் போன்ற சமாச்சாரங்கள் கலந்து கொடுத்த புத்தி சாலித்தனம்தான் படத்தை இன்றும் நினைக்க வைக்கிறது..

அரசி பேயைக்கண்டு நடுங்கும் காட்சியில் அவளது நிழல் அவளைவிட பெரிய உருவமாக காட்சி அளிப்பதை பதிவு செய்து இருக்கும் நேர்த்தி, கரிகாலன் குறி வைத்தால் தவற மாட்டான், தவறினால் குறி வைக்க மாட்டான் என்பது போன்ற பஞ்ச் டயலாக்குகள் ,

அழகான பெண்மானைப் பார்
அலைபாயும் கண்வீச்சு பார்

வாடாத ரோஜா
உன் மடிமீதில் ராஜா
மனமே தடை ஏனையா
தினம் தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்


பொன்னான காலம் வீணாகலாமோ
துணையோடு நீ உலகாள வா
தினம் தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்

என்பது போன்ற இனிய பாடல் வரிகள் , நேர்த்தியான நடிப்பு என படம் பார்ப்பது ஓர் இனிய அனுபவமாக இருக்கிறது..   நம்பியாரின் நடிப்பை மறக்க முடியாது...

இந்த படம்தான் தமிழின் முதல் அடல்ட்ஸ் ஒன்லி படம் என்பது குறிப்பிடத்தக்கது...   பேய் வரும் திகில் காட்சிகளுக்குக்காக இதற்கு ஏ சர்ட்டிஃபிகேட் வழங்கினார்கள்..

இன்று எத்தனையோ ஏ படங்கள் வந்து விட்டன,,, ஆனால் இந்த படம் போன்ற நேர்த்தியுடன் வந்ததில்லை...

இந்த படத்தை தமிழ் ஸ்டுடீயோ நடத்தும் இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான திரையிடலில் பார்த்தேன். அவர்களுக்கு நன்றி...

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா