Thursday, June 27, 2013

நான் தர்க்காவில் பிச்சை எடுக்கும் பிச்சைக்கார நாயா? - சாருவின் எதிர்ப்பாளர் ஒருவருடன் ஓர் உரையாடல் !!

 நெட்டில் இயங்கி வருபவர்களை இரு வகைகளாக பிரிக்கலாம். சாருவை ரசிப்பவர்கள் , சாருவை திட்டுபவர்கள். யாரை எடுத்துக்கொண்டாலும் இந்த இரு பிரிவில் ஒன்றிதான் இருந்தாக வேண்டும்.

    சாருவுக்கு ஒரு புறம் பாராட்டு என்றால் ஒரு புறம் அவரை கடுமையாக எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதால் இரண்டையும் பேலன்ஸ் செய்துதான் அவர் செல்கிறார்.

அவர் ரசிகன் என்ற முறையில் என்னையும் பொருட்டாக மதித்து சிலர் அவ்வபோது திட்டி மெயில் அனுப்புவது வழக்கம். ஃபேஸ்புக்கில் திட்டி எழுதிவிட்டு , என் மேலான கவனத்துக்கு எனக்கும் லிங்க் அனுப்புவார்கள்.

தர்க்காவில் பிச்சை எடுக்கும் நாய் , ஜால்ரா அடிப்பவன் , அறிவு கெட்ட ஜென்மம் என்றெல்லாம் மெயில் வரும்.

இதில் என்ன வேடிக்கை என்றால் இவர்களில் சிலர் என் நண்பர்கள் ( எல்லோரும் அல்ல...சிலர் ) .   என் கருத்து பிடிக்காவிட்டாலும் நண்பர்களாக இருக்கிறார்களே என்பதில் மகிழ்ச்சியே தவிர, அந்த நட்பை பயன்படுத்தி அவர்கள் கடுமையை குறைக்க வேண்டும் என நான் எண்ணியதில்லை. நட்பு வேறு, கொள்கைகள் விருப்பங்கள் வேறு என்பது என் கொள்கை. 

ஃபேக் ஐடியில் அவர்கள் என்னை திட்டினாலும் தனிப்பட்ட முறையில் மிக அன்பாக பழக கூடிய நண்பர்களை பெற்றதை ஆச்சர்யமாகவே நினைக்கிறேன்.  எதிர் அணியில் இருப்பவனாயிற்றே என்ற தயக்கம் இன்றி , என் மேல் நம்பிக்கை வைத்து , ஃபேக் ஐடியை தவிர்த்து  தம் உண்மையான விபரங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வதை நினைக்கும்போது , நானெல்லாம் அந்த அளவுக்கு வொர்த்தா என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்படும்.

சில விரும்பத்தகாத சக்திகள் இணையத்தில் உலாவுவதை மறுக்க முடியாது.  மிரட்டும் நோக்கத்துடன் , அவதூறு நோக்கத்துடன் செயல்படுபவர்கள் இருக்கிறார்கள்..

ஆனால் எல்லோரையும் இப்படி நினைக்க இயலாது.. 

சாருவை தீவிரமாக விமர்சித்து வரும் ஒரு ஃபேக் ஐ டி நண்பருடம் பேசியதின் சில பகுதிகள் உங்களுக்காக... இவர் என்னையும் கடுமையாக திட்டக்கூடிய்வர். அவர் என்ன நினைத்து திட்டுகிறார்.அவர் மன ஓட்டம் என்ன என தெரிந்து கொள்ள இந்த உரையாடல்....

**********************************************************************
சாருவை பாராட்ட சொன்னால் , நீங்கள் அவரை எதற்காக பாராட்டுவீர்கள்?


அவருடைய கட்டுரைகளுக்காக, மற்றும் அவருடைய தன்னம்பிக்கை

அவர் எழுத்தில் உங்களுக்கு பிடித்த நாவல் அல்லது சிறுகதை எது?
அல்லது கட்டுரை..



இதுவரை அவருடைய நாவல்கள் படித்ததில்லை.
சிறுகதைகள் அப்படி ஒன்றும் ஞாபகம் இல்லை


நாவல்களை படிக்காமல் அவரை திட்டிவதை எப்படி நியாய்படுத்துகிறீர்கள்?

நான் அவரை திட்டுவது அவரது இரட்டை நிலைக்கு
hypocrisy


hypocrisy
Example. Coco-cola issue

Nithyananda
அவருக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம்


பாமினி திட்டிய பொழுது அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. தமிழருவி மணியன் அவரை திட்டிய போது அது அவருக்கு தவறாக தெரிந்தது

நித்தியானந்தாவை இவரது வாசகர்கள் நம்பவேண்டும் என்பதற்காக இவரது வாழ்க்கையில் நடந்த அதிசயங்களை(?) சொன்னார்

சரி..அவர் தவ்றே செய்தாலும் , அவரை மட்டும் இந்த அளவுக்கு பலரும் டார்கெட் செய்வது ஓவராக தெரியவில்லையா...

அவரை மட்டும் டார்கட் செய்கிறோம் என்று சொல்வது சரியல்ல. ஒருவேளை நாங்கள் ஒவ்வொருவரும் வேறு இயக்கங்களிலும் இருக்கலாம். ஆனால் நீங்கள் எங்களை இங்கு மட்டுமே பார்ப்பதால் உங்களுக்கு அப்படி தெரிகிறது.

நாங்கள் அவருடையே வழியிலேயே அவரை விமர்சிக்கிறோம். இதை நாங்கள் பொழுதுபோக்காகவும் செய்கிறோம்.
  நீங்கள் பொழுதுபோக்காக செய்யலாம் . ஆனால் சிலர் வெற்று விளம்பரத்துக்காக அவரை விமர்சிப்பதை நீங்களும் சேர்ந்து எதிர்க்க வேண்டுமல்லவா?


விளம்பரத்திற்காக என் நண்பர்கள் யாரும் எதிர்க்கவில்லை . பெரும்பாலோனோர் சொந்தப் பெயரில் இல்லை


சிலர் அப்படி செய்வது உண்மைதான் .அவர்கள் செய்வது சரி என்று சொல்லவில்லை

இதை நீங்கள் வெளியிடுவீர்கள் என்று சொன்னதால் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன்.

சொல்லுங்கள்

அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகள் என்னைப் பொருத்தவரை குப்பை.
.ஏன் அப்படி சொல்கிறீர்கள்?

படிப்பவர்கள் புரிந்துகொள்ள சிரமப்படவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்படுபவை
அதாவது அதைப் புரியாமல் பலமுறை படிக்கவேண்டும். பிறகு நாமாகவே ஒரு முடிவுக்கு வரவேண்டும்

இரண்டு வரி ஜோக்கை ஒரு ட்விஸ்ட்டாக மாற்றி கதையாக எழுதுகிறார்


அப்படிப்பார்த்தால் , படிப்பவர்கள் எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதும் சாருவுக்கு நீங்கள் ரசிகராக இருந்திருக்க வேண்டுமே


சாருவின் கட்டுரைகள் எனக்குப் பிடிக்கும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை
ஆனால் அராத்துவின் கதையை ஆஹா ஓஹோ என்று ஒருவர் சொன்னால் அவர் எப்படி சிறந்த விமர்சகர் ஆகமுடியும்



 வினோதினி. ஈழம் , டில்லி பாலியல் குற்றம் போன்றவை எல்லாம் அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டியவை.. ஆனால் உங்களது சாரு எதிர்ப்பால் , நாம் இணைந்து செயல்பட முடியாத நிலை ஏற்படுவது வருந்தத்தக்க்துதானே ..
அதற்கு என்ன செய்ய முடியும்.

இதில் ஈழத்திற்காக நான் குரல் கொடுத்ததில்லை. மற்ற அனைத்திலும் நான் என்னால் முடிந்த அளவிற்கு பங்கேற்றுள்ளேன்
ஈழத்தின் மீது வெறுப்பு இல்லை. எனக்கு அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை

மற்ற விஷயங்களில் எனது நண்பர்களோடு சேர்ந்து நானும் பங்கேற்றுள்ளேன். உங்க்ளோடு இணைந்து செயல்பட முடியாதது வருந்தத்தக்கதுதான்.

****************************************************************************

Monday, June 24, 2013

புதிய ஊர்களில் மொழிப் பிரச்சினை- திராவிட இயக்கம் தவறு செய்து விட்டதா?


  நான் பெங்களூரு சென்ற முதல் சில நாட்களில் கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. கன்னட மொழியோ , ஹிந்தி மொழியோதான் அனைவரும் பேசுவது போல இருந்தது. சின்ன சின்ன பையன்கள் எல்லாம் பல மொழிகளிலும் பேசுவதை பார்த்து ஆச்சர்யமாக இருக்கும்.

நம் ஊரில் நமக்கு இப்படி பல மொழிகளை கற்றுத்தரவில்லையே... ஹிந்தி எதிர்ப்பு என்று சொல்லி நம்மை படிக்க விடாமல் செய்து விட்டார்களே என வருந்தினேன்.

அதன் பின் வேலையில் ஆங்கிலம்தான் தொடர்பு மொழி என்பதால் மொழிச்சிக்கல் இல்லை. நண்பர்களும் தமிழ் நண்பர்கள். தமிழ் படம் ஓடும் தியேட்டர்களாக தேடி சென்று பார்ப்போம். எனவே மொழி பிரச்சினை அறவே இல்லை.

அதன் பிறகு ஆங்கிலம் இல்லாத இன்னொரு வேலையில் சேர்ந்தேன். தமிழ் யாரும் இல்லை. முழுக்க முழுக்க மண்ணின் மைந்தர்களான கன்னட சகோதரர்கள்தான்.

அவர்கள் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் என்பதால் ஆங்கிலம் எல்லாம் வேலைக்காகாது.. கன்னடம் கலந்த தமிழில் பேசி எப்படியோ சொல்ல வேண்டியதை சொல்லி விடுவேன்,

ஏதோ ஒரு கணத்தில்கன்னட பேச , புரிந்து கொள்ள கை வந்து விட்டது. என் பேட்ச் நண்பன் அங்கிருந்து வட இந்தியா சென்று விட்டான்,

அவனை கொஞ்ச நாள் கழித்து பார்த்த போது, அவனது ஹிந்தியை பார்த்து அசந்து போனேன்,

ஃபேஸ் புக்கில் சிலர் , திராவிட இயக்கங்களால் ஹிந்தி கற்க முடியாமல் போய் விட்டதாகவும், அதனால் வேற்று மா நிலங்களில் வேலைக்கு செல்கையில் கஷ்டப்படுவதாகவும் எழுதுவதை பார்த்ததும் இந்த் நினைவுகள்  மனதில் தோன்றின,.

வேலை நிமித்தம் , ஜெர்மனி, ஃபிரான்ஸ் , ரஷ்யா என்றெல்லாம் செல்ல வேண்டி இருக்கலாம். எல்லா மொழிகளையும் பள்ளியிலேயே கற்பிப்பது சாத்தியமா?

சென்னையில் வட இந்திய தொழிலாளர்கள்  பலர் பணி புரிகிறார்கள். அவர்கள் எல்லாம் அவர்கள் ஊர் பள்ளிக்கூடத்தில் தமிழ் படித்து விட்டா வந்தார்கள்?

அதிக பட்சம் இரண்டு மாதங்களில் புதிய மொழிக்கு செட் ஆகி விட முடியும். பள்ளியிலேயே கற்று கொடுத்தால் நல்லதுதான். ஆனால் யார் எந்த ஊருக்கு வேலைக்கு செல்வார்கள் என எப்படி கணிப்பது , எந்த மொழியை கற்று கொடுப்பது?

ஆக இந்த விஷயத்தில் திராவிட இயக்கத்தை பழிப்பது விபரம் இல்லாத செயல் என்றே நினைக்கிறேன்.

அந்த கால நாவல்களை பார்த்தாலே தெரியும். சமஸ்கிருதம் கலந்து எழுதுவார்கள். தமிழ் பேசுவது பெருமை என்ற நிலையை உருவாக்கியது திராவிட இயக்கம்தான்.

திராவிட இயக்கம் தன் பணியில் இருந்து திசை மாறக்கூடாது என சொல்வதுதான் சரியாக இருக்க முடியுமே தவிர , திராவிட இயக்கம் தவறு செய்து விட்டது என சொல்வது , மொழிப் பிரச்சினையை பொருத்தவரை நன்றி இல்லாத செயல் என்றே நினைக்கிறேன்.


Saturday, June 22, 2013

பக்கத்து சீட்டு இளம்பெண்ணுடன் பரவச நிமிடங்கள்- பேருந்து மகிழுந்தான அனுபவம்



திருவண்ணாமலை கிரிவலம் சென்று வந்தேன்.  அதைப் பற்றி பிறகு எழுதுவேன்.
 யாரும்  ”ஹைக்கூ”  ( ?!!@!! )  எழுதினால் , சென்னைக்கு திரும்பி வர மாட்டேன் என போகும்போதே கண்ணீர் மல்க சொல்லி இருந்தேன்..

                         யாருக்கு யார் காவல் !!!!!!!
“ உலகை காக்கும் கடவுளுக்கு !!!!!!!!!!!!!!!!!!!!!!
பாதுகாப்பாக போலீசார் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
                          கேட்டது கிடைக்கவில்லை!!!!
“ கேளுங்கள் தரப்பட்டும் என்ற இயேசுவுக்கு
தேவாலாயம் கட்ட முடியவில்லை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கேட்ட நன்கொடை கிடைக்காததால் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

                         என்ன பார்வை , உந்தன் பார்வை !!! 
        மாலைக்கண் நோய்க்கு டாக்டரை பார்க்க போனேன்.
        அவர் அறிவிப்பு பலகை எரிச்சலூட்டுயதால்
        பார்க்கமலேயே திரும்பினேன்
        அறிவுப்பு பலகை : பார்வை நேரம் : காலை நேரம் 10 டூ மாலை 6

                          நம்பிக் கை வைக்காதே !!!!                 என் நண்பன் உயிரைக் காப்பாற்றுவார்
                 என்றெண்ணி டாக்டரிடம் ஓடினேன்.!!!!!!!!!!!!!!!!!!!!
                 பார்க்க முடியவில்லை.
                 மாரடைப்பால் இறந்து விட்டாராம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


இந்த டைப் ஹைக்கூ கவிதைகள் எதுவும் , என் வேண்டுகோளை மதித்தோ , தற்செயலாகவோ யாரும் எழுதாததால் சென்னை திரும்பினேன்.

ஓர் இடத்தில் டீ சாப்பிட இறங்கி விட்டு பேருந்தில் ஏறினால் , பக்கத்து சீட்டு இளம்பெண் என் சீட்டில் கால் நீட்டியவாறு செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.

அந்த அழகான பெண்ணின் மோன நிலையை கலைக்க விரும்பாதபோதும் , மனதை கல்லாக்கி கொண்டு காலை எடுக்க சொன்னேன்.

அவர் காலை எடுத்து என் சீட்டின் கீழ்ப்பகுதியில் இருக்கும் சப்போர்ட்டிவ் கம்பி மீது காலை வைத்து கொண்டார்..

      ஒரு கவியுலக சூறாவளி என்ற மரியாதை இல்லாமல் என்னை நோக்கி காலை நீட்டி இருந்தது மானப்பிரச்சினையாக இருந்தாலும், ஓர் அனுகூலமும் இருந்தது.

காலை எடுத்து விட்டு அவர் சீட்டில் அவர் சாய்ந்து உட்கார்ந்தால் , நான் என் தலையை திருப்பி பார்த்தால்தான் அவரை பார்க்க முடியும். ஆனால் இப்படி அவர் பக்கவாட்டில் திரும்பி காலை நீட்டி இருப்பதால் , அவர் முகம் என்னை நோக்கி இருந்தது. எனவே கலைக்கண்ணோட்டத்துடன் அவரை ரசிப்பது எளிதாக இருந்தது.

இருக்கைகளின் இரு பக்க வரிசைகளும் வெகு அருகில் இருந்ததால் , அவர் முகம் எனக்கு வெகு அருகில் இருந்தது. தள்ளி உட்காரவோ , காலை எடுக்கவோ முயலாமல் அவர் அப்படியே இருந்தது குழப்பமான இருந்தது. கள்ளம்கபடமில்லாமல் இப்படி செய்கிறாரா அல்லது சீண்டுகிறாரா என தெரியவில்லை.

ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு கணத்தில் புன்னகைத்து கொண்டோம்.  யார் முதலில் புன்னகைத்தது என்பது கூட தெரியவில்லை. அதன்பின் மெல்ல பேச ஆரம்பித்து கிரிவலம், ஆன்மீகம், நாத்திகம் , இயற்கையுடன் இயைந்த வாழ்வு என பேச்சு சென்றது.

 நான் கோயம்பேடு வரை செல்லாமல் முதலிலேயே இறங்க வேண்டி இருந்தது. ஆனால் வேலை இல்லாவிட்டாலும் , கோயம்பேடுவரை சென்று விடலாமா என யோசித்து கொண்டு இருந்தேன்.

என் மொபைல் நம்பர் கேட்டார்.

” இது ஆஃபீஸ் எண்.. என் நம்பர் தொலைந்து விட்டது. மெயில் ஐடி சொல்லுங்க்ள்.. நம்பர் வந்ததும் அனுப்புகிறேன் “ என சொன்னேன். அவர் சொன்ன மெயில் ஐடியை காதில் போட்டு கொள்ளாமல் பேருந்தை விட்டு இறங்கி சென்றேன்.

போன் பேச்சு , எஸ் எம் எஸ், மெயில் , சந்திப்பு , விவாதங்கள் , கருத்து மோதல் , கருத்து  வேறுபாடு என கசப்புடன் என்றாவது பிரிவதை விட , ஓர் இனிய பயணத்தில் சந்தித்த இனிய பெண்ணாகவே அவரை என்றென்றும் நினைவில் கொள்ள இப்படி ஒரு முடிவெடுக்கதாகி விட்டது.

அப்படி ஒரு அழகிய முகம்.

Tuesday, June 18, 2013

மரணத்தை முன் அறிவித்தல் - மறக்க முடியாத மகத்தான சினிமா


     
தமிழ் ஸ்டுடியோவும் , பெரியார் ஊடகத்துறையும்  இணைந்து பெரியார் திடலில் நல்ல படங்களை திரையிட்டு வந்தனர். இந்த தொடரின் நிறைவு திரைப்படமாக கனசெம்பா குதிரயேனேறி என்ற கன்னடப் படம் திரையிடப்பட்டது.

  காதல்தான் தமிழ் நாட்டில் இருக்கும் ஒரே பிரச்சினை என்பது போல எடுக்கப்படும் தமிழ் படங்களும் ( காதலும் பிரச்சினைதான் என்பது வேறு விஷ்யம் ) , உலகை காக்கும் அமெரிக்கர்கள் என்பது போல எடுக்கப்படும் ஹாலிவுட் படங்களும் போரடித்து விட்டதால் , வேற்று மொழி அயல்னாட்டு படங்களை மட்டுமே தற்போது பார்த்து வருகிறேன்.

கன்னட படங்கள் மீது ஆர்வம் உண்டு என்றாலும்  சென்னையில் பார்க்கும் வாய்ப்பு குறைவு. எனவே இந்த திரையிடல் அறிவிப்பு வந்ததும் ஆர்வமாக காத்திருக்கலானேன்.

மாலை 5.30க்கு படம் என்றால் 5 மணிக்கே சென்று விட்டேன். அப்போது யாரும் வந்திருக்கவில்லை. பெரியார் திடலை சுற்றி பார்த்து கொண்டு இருந்தேன்.

 கொஞ்சம் கொஞ்சமாக அனைவரும் வர ஆரம்பித்தனர். வந்தவர்கள் அனைவரும் சினிமா ரசனை மிகுந்தவர்கள் என்பதால் , படம் முடிந்ததும் நிறைவு நாள் நிகழ்ச்சி கலக்கலாக இருக்கும் என நினைத்து கொண்டேன்.

படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே ஆர்கனைசர்களுக்கு ஒரு நன்றி சொல்ல வேண்டும் போல இருந்தது.
திரைப்படங்களில் சப் டைட்டில் போடுவது சினிமா அனுபவத்தை பாதிக்கிறது என்ப்து என் எண்ணம். சினிமா என்பது வசனம் மட்டும் அன்று. நடிப்பு , கேமிரா, இசை என்றெல்லாம் இருக்கிறது.

ஒரு அட்டகாசமான காட்சியையோ , முக பாவத்தையோ கவனிக்காமல் , சப் டைட்டிலை எழுத்து கூட்டி படித்து கொண்டிருப்பது எனக்கு சரி என தோன்றுவதில்லை. சினிமா பார்க்கும் அனுபவத்தை இழந்து நாவல் பார்க்கும் அனுபவமே கிடைக்கும்.

வீட்டில் இப்படி பார்ப்பது வேறு விஷ்யம். சப்டைட்டிலுடன் ஒரு முறை , சப் டைட்டில் இல்லாமல் ஒரு முறை என பார்க்கலாம். அல்லது சில காட்சிகளை தேர்ந்தெடுத்து சப் டைட்டில் இல்லாமல் பார்க்கலாம். ஆனால் இது போன்ற திரையிடல்களில் சப் டைட்டில் இல்லாமல் போடுவதே உசிதம்.

எனவே படம் சப் டைட்டில் இல்லாமல் ஓட தொடங்கியதும் மகிழ்ச்சியாக இருந்தது.

கொஞ்ச நேரத்திலேயே கர்னாடக கிராமம் ஒன்றுக்கு அனைவரும் சென்று விட்டது போன்ற ஓர் உணர்வு.

இறப்பு ஏற்படுவதை தன் கனவு மூலம் முன் கூட்டியே அறியும் சக்தி கொண்ட ஓர் ஏழை வெட்டியான். மற்றும் அவன் மனைவி.

இவர்களைப்பற்றிய கதை..

இந்த எளிய மக்களைப்பற்றி வெகு சில கதாபாத்திரங்களை வைத்து , கிராமத்தில் நடக்கும் கதைதான். ஆனால் அது ஏற்படுத்தும் தாக்கம் மிக அதிகம்.

குறிப்பிட்ட கனவு வந்தால் இறப்பு நிகழும் என்பது ஐதீகம். அது போன்ற ஒரு கனவு அவனுக்கு வருகிறது.

அந்த ஊரில் பணக்கார முதியவர் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார். அவரைப்பார்க்க அவர் மகன் ,மரு மகள் ,பேத்தி வருகின்றனர்.  அவர் மருமகளுக்கோ , பேத்திக்கோ அவர் அருகே செல்வதே பிடிக்கவில்லை. உண்மையில் அவர்கள் அவரைப்பார்க்க வரவில்லை. சொத்து விஷ்யமாக வந்து இருக்கிறார்கள்.


இந்த நிலையில்தான் அவனுக்கு கனவு வருகிறது. அந்த கிழ்வன் இறந்ததுதான் கனவாக வந்ததாக நினைத்து அவன் வீடு தேடி வருகிறான், இறுதி சடங்குக்ளைப் பற்றி பேச வரும் அவனை அவர்கள் விரோதமாக பார்க்கிறார்கள்.. யாரும் சாகவில்லை. இறுதி நிகழ்ச்சியெல்லாம் வேண்டாம் என சொல்லி கொஞ்சம் காசு கொடுத்து அனுப்பி விடுகிறார்கள்.

என்ன சுவாரஸ்யம் என்றால் , உண்மையில் அந்த கிழவர் இறந்து விட்டார், காலம் காலமாக இருந்து வரும் கனவு ஐதீகம் இப்போதும் பலித்து விட்டது, ஆனால் சில காரணங்களுக்காக அந்த இறப்பை மறைக்கிறார்கள். என்ன பெரிய காரணம்.. சொத்து விவகாரம்தான்,  காசுக்காக பெற்ற அப்பன் உடல் அழுகி நாற்றம் எடுத்தாலும் பரவாயில்லை என நினைக்கும் மகன்.

அந்த அப்பாவி ஏழையின் எளிய நம்பிக்கை... நாகரீகம் பொருந்திய அறிவாளிகளின் தந்திரம் என்ற இரு துருவங்களுக்கு இடையேயான மாபெரும் இடைவெளி நம் கண் முன் விரிகிறது.


அவனது நம்பிக்கை மூட நம்பிக்கையாக இருக்கலாம், அந்த மூட நம்பிக்கை அவனை ஏழ்மையில் உழலச்செய்யலாம். இதெல்லாம் தவறுதான், ஆனால் இதற்கு தீர்வு , இந்த நம்பிக்கையை சிதைப்பதுதானா... ஒருவர் தவறை எதிர்க்கிறார் என்றால் அவர் நல்லவர் என்று சொல்ல முடியாது , அவர் அதை விட பெரிய தவறின் பிரதினிதியாக இருக்க கூடும்.

சரி..இவர்கள் அப்படி தந்திரமாக நடந்து கொள்கிறார்களே..அவர்களை பார்த்து வளரும் குழந்தை எப்படி வளரும்?

ஒரு ஹைக்கூ படித்து இருப்பீர்கள்//

ஓர் எறும்பை கொன்றேன்..
என் மூன்று குழந்தைகள்
பார்ப்பதை உணர்ந்தேன் 


அவன் ஏழை..கிழிந்த ஆடை. ஆடை முழுக்க ஓட்டைகள். எந்த ஓட்டையில் தலையை விடுவது , எதில் கால் விடுவது என்பது தெரியாத அளவுக்கு ஓட்டை. ஆனால் அவனை அந்த வறுமை கண்ணீர் விட வைக்கவில்லை. தன் கனவு பொய்யாக போய் விட்டதே என்பதுதான் அவனை வருந்த வைக்கிறது,

ஆனால் இன்னொரு குடும்பம் .இன்னொரு வாழ்க்கை..புத்திசாலிகள் .அசட்டு நம்பிக்கைகள் ஏதும் இல்லாதவர்கள்/ ஆனால் ஒருவர் மீது ஒருவர் அன்பு இல்லாதவர்கள். அந்த குழந்தையும் யார் மீதும் அக்கறையோ அன்போ இல்லாமல்தான் வளரப்போகிறது என்பது பூடகமாக சொல்லப்பட்டு விடுகிறது

இதை சொல்லிய விதம் அற்புதம். அலுப்பூட்டாத திரைக்கதை. ஒவ்வொருவர் கோணத்தில் கதை சொல்லும் பாங்கு அருமை...அசட்டு நகைச்சுவைகளும், எதிர்பார திருப்பங்களும்தான் படத்தை விறு விறுப்பாக்கும் என நினைக்கும் தமிழ் இயக்குனர்கள் கண்டிப்பாக படத்தை பார்க்க வேண்டும்.

அந்த பணக்கார வீடு, ஏழை குடிசை, ஒப்பனை இல்லா கிராமம் என கண் முன் நிறுத்தும் கேமரா , இசை என அனைத்திலும் சிறப்பாக அமைந்து இருக்கும் இந்த படத்தை அனைவரும் ஒரு முறையேனும் பார்க்க வேண்டும்.




   

Wednesday, June 12, 2013

கனவெனும் குதிரையில் ஏறி- அட்டகாசமான சினிமா முற்றிலும் இலவசமாக


   பெங்களூருவில் இருப்பவர்கள் தமிழ் , ஆங்கிலம் , ஹிந்தி , தெலுங்கு , கன்னடா என பல மொழிப்படங்களை பார்க்க முடியும், ஆனால் சென்னையில் இருப்பவர்களுக்கு இந்த  வாய்ப்பு இல்லை.

இங்கு தமிழ் படங்கள்தான் பெரும்பாலும் பார்க்க இயலும், பெரிய அளவில் ஹிட் ஆன ஒரு சில வேறு மொழி திரைப்படங்க்ளை மட்டுமே இங்கு பார்க்க முடிகிறது.

நான் பெங்களூருவில் இருந்த போதுதான் பல்வேறு மொழி மொழிப்படங்களை பார்க்கும் ஆர்வம் வந்தது. கன்னட படங்களை ரசிக்க ஆரம்பித்ததுதான் அப்போதுதான்.

பெங்களூரு செல்லும் நம் ஆட்கள் அங்கும் நம் ஊர் வாழ்க்கைதான் வாழ்வார்கள் . நானும் அங்கு சென்ற புதிதில் அப்படித்தான் இருந்தேன். ஆனால் நல்ல வேளையாக , கூட இருந்த தமிழ் நண்பர்களைவிட்டு பிரிந்த பின் , கன்னட கலாச்சாரம் , அவர்கள் வாழ்க்கை , கலை , உணவு முறை , சினிமா என பழகினேன்.

ஆனால் சென்னையில் கன்னட படங்கள் பார்க்கும் வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் ஒரு நல் வாய்ப்பாக , கனவெனும் குதிரையில் ஏறி  ( கனசெம்ப்போ குதிரெயனேறி )என்ற கவித்துவமான தலைப்பு கொண்ட அற்புதமான கன்னட படம் சென்னையில் திரையிடப்படுகிறது,,,அதுவும் இலவசமாக என்ற தகவல் கிடைத்தது.

இந்திய சினிமாவின் நூற்றாண்டை போற்றும் விதமாக தமிழ் ஸ்டுடியோவும் , பெரியார் சுயமரியாதை ஊடகத்துறையும் இணைந்து மாற்றம் தந்த இந்திய சினிமா என்ற தலைப்பில் திரையிடல் நிகழ்ச்சியை கடந்த ஒரு வருடமாக நடத்தின,

இந்த மாதத்துடன் இந்த நிகழ்வு நிறைவடைகிறது, இதில் முத்தாய்ப்பாக திரையிடப்படும் படம்தான் கனவெனும் குதிரையில் ஏறி.

மிக அற்புதமான பார்க்க வேண்டிய படம்.

பலர் சிடியில் பார்த்து இருக்க கூடும். ஆனால் கூட்டதினருடன் சேர்ந்து பார்க்கும்போது , அதுவும் தமிழ் மக்கள் கூட்டத்தில் அமர்ந்து பார்க்கும் அனுபவம் அருமையாக இருக்கும்

15.06.2013 மாலை 5.30க்கு பெரியார் திடலில் இந்த நிகழ்வு நடக்கிறது.

சென்னைவாசிகளுக்கு நன்கு தெரிந்த இடம்தான். வெளியூர் மக்களும் சுலபமாக வரலாம். ரயில் , பேருந்து என எதிலும் வரலாம்,

இந்த படம் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்,. நம்பிக்கை, மூட நம்பிக்கை , மெய், மாயை , பொய் தோற்றம் , உண்மையில் இருக்கும் பொய், பொய்யில் இருக்கும் உண்மை என சில நாட்களாவது உங்களை யோசிக்க வைக்கு வைத்து விடும் இந்த படம்.

இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா