Monday, December 2, 2013

காட்சிமொழியின் உச்சத்தில் கவிதையாக ஒரு மகேந்திரன் படம்

தமிழ் சினிமாவில் சாதனைகள் பல செய்த மகேந்திரன் சில வருடங்களாக சற்று ஒதுங்கி இருக்கிறார்.. ஆனாலும் அவருக்கு என இருக்கும் ரசிகர் கூட்டம் இன்னும் அப்படியே இருப்பதை கடந்த வாரத்தில் உணர்ந்தேன்.. உயர்ந்த ரசனைகள் கொண்டவர்கள் , படைப்பாளிகள் பலர் மகேந்திரனின் படைப்புகளை அனுபவித்து ரசித்து இருப்பதை உணர முடிந்தது... நான் எழுதும்போது விடுபட்ட தகவல்கள் , பிழைகள் , மாற்று கோணங்கள் என ஃபீட் பேக் கொடுத்து அசத்தி விட்டார்கள்... மகேந்திரன் ரசிகர் கிளப்பில் நான் தான் ஜூனியர் போல.. ஒவ்வொருவரும் அந்த அள்வுக்கு விஷ்யம் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

மெட்டி படம் பார்க்காமல் , உங்கள் அனுபவம் முழுமை அடையாது என நண்பர் காரிகன் உட்பட பலர் சொல்லி வந்தனர்.
கணவன் மனைவி உறவு , கை இல்லாத நிலையிலும் சுய கவுரவத்தை விட்டுக்கொடுக்காதவனின் தங்கை பாசம், ஒரு பெண்ணின் தூய காதலால் நெகிழும் கிரிமினல், நடுத்தர வர்க்கத்தின் பிரச்சனைகள், மனித மனதின் வக்கிரங்கள் , பெண் மனதின் புதிர்கள் என எல்லாவற்றையும் சொல்லி விட்டாரே..இதில் என்ன சொல்லப்போகிறார் என ஒரு வித ஆவலுடன் படம்பார்த்தேன்..

ஆரம்ப காட்சியிலேயே மெட்டி, மெட்டியை மனித மனிதனின் சிறந்த தன்மை , மகிழ்ச்சி போன்றவற்றுடன் இணைத்து நமக்கு அறிமுகம் செய்வது என ஆரம்ப காட்சிகள் கவிதைபோல இருக்கின்றன... இளையராஜாவின் பாடல் இதற்கு பக்கத்துணையாக இருக்கிறது..

தன் இரு மகள்களுடன் ( ராதிகா , வடிவுக்கரசி ) வசிக்கும் தாய் ,  அவர்கள் வீட்டு ஓனர் , எதிர்பாராத விதமாக அவர்களை சந்திக்க நேரும் நாயகன் ( சரத்பாபு )அவர்களுக்கிடையே என்ன உறவு ,  நாயகனின் தந்தை ( செந்தாமரை ) என முக்கிய கேரக்டர்கள் எல்லாம் பதினைந்தே நிமிடத்தில் அறிமுகம் ஆகி விடுவதை திரைக்கதையை கற்க விரும்புபவர்கள் குறித்து வைத்து கொள்ள வேண்டும்..

தன் தந்தையின் போக்கு நாயகனுக்கு பிடிக்கவில்லை..தந்தை ப்யங்கர குடிகாரர்...குறிப்பாக கைக்குழந்தையுடன் தன் சித்தியை ( தந்தையின் இரண்டாம் தாரத்தை ) வீட்டை விட்டு துரத்தியது மனதில் முள்ளாக இருக்கிறது... ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி இன்னோர் ஊருக்கு போய் விடுகிறான்.

அங்கே ஒரு பெண் தன் இரு மகள்களுடன் வசித்து வருகிறாள்.. வீட்டு ஓனர் ஒரு குஜராத்திக்காரர்... தாயும் மகள்களும் ஒருவருக்கு ஒருவர் அன்புடன் இருக்கின்ன்றனர்..அந்த வீட்டுக்கு நாயகன் வீடு தேடி வருகிறான்... கடைசியில் பார்த்தால் ,  அன்று தன் தந்தையால் துறத்தப்பட்ட சித்திதான் இந்த பெண்...அந்த இரு மகள்களும் தன் தங்கைகள் என உணர்கிறான்..

இந்த இடத்தில் இடவேளை என நினைப்பீர்கள்...அதுதான் இல்லை...இது எல்லாம் நடப்பது பத்தே நிமிடங்களில் !!
எல்லாம் காட்சிபூர்வமாக , வசனங்கள் குறைவாக வைத்து சொல்லப்படுவதால் , இவ்வளவு சுருக்கமாக ஆனால் தெளிவாக ஆழமாக சொல்ல முடிகிறது..

அந்த பெண் துரத்தப்படும்போதே , வயிற்றில் குழந்தையுடன் வந்தவள்..ஆனால் அவ்ள் கண்வன் உட்பட எல்லோருமே அந்த இரண்டாவது மகளை அந்த வீட்டு ஓனருக்கு பிறந்தவள் என தவறாக பேசுகிறார்கள்...

அந்த வீட்டு ஓனர் கொஞ்ச நேரம் வந்தாலும் அவரது மேன்மை நமக்கு புரிந்து விடுகிறது... கல்யாண புரோக்கராக வரும் வெண்ணிற ஆடை மூர்த்தி போன்ற சிறிய கேரக்டர்களும் உயிர்ப்புடன் இருப்பது குறிப்பிடத்தக்கது...அவருக்கு ஆறு மகள்கள்...அவர்களில் ஒருவரை நாயகன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்... ஆனால் , அந்த மகள்கள் பாடும் பாசப்பாடல்களோ. சரத்பாபுவுக்கும் அவர்க்ளுக்கும் டுயட்டோ கிடையாது,,இன்னும் சொல்லப்போனால் , அவர்கள் நேரடியாக காட்டபடுவதே இல்லை...அவர்கள் இருப்பு மட்டும் குறிப்பால் உணர்த்தப்படுகிறது... இப்படி தேவையற்ற காட்சிகள் எதுவுமே இல்லை..

அந்த தாய் இறந்து விடுகிறாள்..மீண்டும் அந்த வீட்டில் மெட்டி ஒலி சத்தம் கேட்க வேண்டும்...சந்தோஷம் திரும்பவேண்டும் , என கூடப்பிறக்காத தங்கைகளுக்காக அண்ணன் பாடுபடுவதே கதை...அன்பிற் சிறந்த தவம் இல்லை..அன்புக்கு அழிவும் இல்லை என்பதை சொல்லி இருக்கிறார்..

அன்பு என்றால் பாலுணர்வு என்ற புரிதலில் இருக்கும் தமிழ் சினிமாவில் அண்ணன் தங்கை அன்பு , அவர்களுக்கிடையே ஓர் இனிமையான பாடல் என ஒரு வித்தியாசமான அன்பை காட்டி இருக்கிறார் மகேந்திரன்...

மை சன்,என்னை அடிக்காதீங்க மை சன் என அலப்பரை செய்யும் லட்டான கேரக்டர் செந்தாமரைக்கு... தூள் கிளப்பி இருக்கிறார்...

படத்தில் ஒரு காட்சி.... தன் தங்கை யாரோ ஒருவனை காதலிப்பதாக சொல்கிறாள்..ஹீரோ கேட்கிறான் “ அவன் என்ன ஜாதி ? “ .... ஒரு ஹீரோ இப்படி ஒரு வசனம் பேசி எந்த படத்திலும் பார்த்ததில்லை... ஜாதி என ஒன்றே நம் சமூகத்தில் இல்லாதது போலவும் , வில்லன்கள் மட்டுமே ஜாதி பற்றி பேசுவது போலவும் நம் ஆட்கள் க்தை சொல்வார்கள்.. ஜாதி வித்தியாசம் பார்க்காமல் பலர் இருக்கிறார்கள் என்பது உண்மை..ஆனால் ஜாதி என ஒன்று இல்லாதது போல நடிப்பது யதார்த்தம் இல்லை... ஆனாலும் ஒரு விஜயோ , அஜித்தோ தன் படங்களில் யாரிடமாவது என்ன ஜாதி என கேட்பதை ஹீரோயிசத்துக்கு களங்கமாகவே நினைப்போம்... ஆனால் மகேந்திரன் துணிச்சலாக அந்த வசனத்தை தன் நாயகனுக்கு கொடுத்து இருக்கிறார்... அந்த நாயகன் ஜாதி வித்தியாசம் பார்க்காதவனாக இருக்கலாம். ஆனால் தன் தங்கையின் காதலன் குடும்பம் , ஜாதி , மதம் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவது இயல்புதானே..இந்த சாதாரண யாதார்த்தம் கூட நம் படங்களில் இருக்காது

இயல்பான ஹாஸ்யம்... முழுக்க முழுக்க ஹாஸ்யத்தின் அடிப்படையில் ஒரு பாடல்.. தன்னை காதலிப்பதாக சொல்லும் ராஜேஷிடம் தன் கணவன் எப்படி இருக்க வேண்டும்..தன் கல்யாணம் எப்படி நிகழ வேண்டும் என சொல்வதாக ஒரு பாடல்... அருமை...
 மேற்சொன்ன அந்த பாடல், மெட்டி ஒலி காற்றோடு பாடல் என்ற பாடல் , சந்த கவிதைகள் பாடிடும் என்ற இன்னொரு பாடல் என எல்லாமே சூப்பர் பாடல்கள்... இந்த பாடல்களை எழுதியவர் கங்கை அமரன்..

ஆனால் இளையராஜாவின் மேதமை. அவரது வித்தியாசமான முயற்சி , பாடல் வரிகள் என என் மனதை கவர்ந்த்து இந்த பாடல்தான்  rarest song- கேட்க தவறாதீர்கள்  ... மெட்டி மெட்டி என ஆங்காங்கு வார்த்தைகள் ஒலித்து மனதை என்னவோ செய்கிறது அல்லவா..

டீக்கடையில் சில பாடல்களை கேட்டால் , இது என்ன படம் என டீக்கடைக்காரரை கேட்போம்...அந்த அளவுக்கு அந்த பாடல் நம்மை ஈர்க்கிறது என்றால் அது அந்த பாடலின் வெற்றியாகும்.. அதுபோல மேற்கண்ட பாடல் என் உள்ளம் கவர்ந்தது... இதை எழுதியது யார் என தேடினேன்... அந்த பாடலைபடைத்தவர் மதுக்கூர் கண்ணன்...

இவர் யார் என விழி உயர்த்துகிறீர்க்ளா... யார் என்ற சூப்பர் ஹிட் படம் கொடுத்து ”யார் கண்ணன் ” என புகழ் பெற்றவர்தான் இவர்... நண்டு படத்தில் வரும் அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா...சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா என்ற அமர வரிகளை படைத்தவர் இவர்தான்..

எடிட்டர் , ஒளிபதிவாளர் என பல மேதைகள் ஒன்றிணைந்த அபூர்வ படம் இது..அந்த மேதைகளில் ஒருவராக இவரும் இந்த படத்தில் இருக்கிறார்..

மேலே போகும்  முன் இந்த புற நானூறு கவிதையை படித்து விடுங்கள்


பெருஞ்சோறு பயந்து பல் யாண்டு புரந்த
பெருங்களிறு இழந்த பைதற் பாகன்
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை
வெளிழ் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு
கலங்கினென் அல்லனோ, யானே – பொலந் தார்த்
தேர் வண் கிள்ளி போகிய
பேர் இசை மூதூர் மன்றம் கண்டே?

யானைக்கு அன்பாக சோறிட்டு வளர்த்த பாகன் , அவ்வளவு பெரிய யானை இல்லாதபோது , அது இருந்த இடத்தின் வெறுமையை பார்த்து கலங்குவான் அல்லவா...அதுபோல மன்றத்தை பார்த்து கலங்கினேன் என சோகத்தை சொல்கிறது பாடல்... இல்லாமையின் இருத்தலியல்..

இதை உணர்வுபூர்வமாக  காட்சிப்படுத்தி இருப்பார் மகேந்திரன்.

அந்த தாய் இறந்து விடுகிறாள்..அப்போதுகூட அந்த இழப்பு தெரியாது..ஆனால் அவள் உடல் எடுத்து செல்லப்பட்டவுடன்  தோன்றும் வெறுமை அவர்களை கதற வைத்து விடுகிறது.... அவள் உடம்பு வைக்கப்பட்ட இடம் வெற்றிடமாக உள்ளது..சுற்றிலும் மலர்கள், மாலைகள்...அந்த வெறுமையை அவர்களால தாங்க முடியவில்லை..கதறி விடுகிறார்கள்...

பிணத்தை பார்த்து அழும் காட்சிகளை பார்த்து இருக்கிறேன்.. வெற்றிடத்தை, வெறுமையை கண்டு அழும் காட்சியை பார்ப்பது இதுவே முதல் முறை..மகேந்திரன்... என்ன ஒரு கலைஞன் !!!!!

இந்த வெறுமையை நாம் வாழ்வில் உணரலாம்...முக்கிய பண்டிகைகளில் , நிகழ்ச்சிகளிதான் , மரணம் அடைந்த நம் தாத்தாவின் இல்லாமை , அவர்து கண்டிப்பு , அலட்டல் போன்றவை இல்லாமை நன்கு தெரியும்...இதை படம் பிடித்த கலைஞன் மகேந்திரன் மட்டுமே...

திருமணத்தை எதிர்த்து சரத்பாபுவும் , ராஜேசும் சண்டை இடுவது , பிறகு ராதிகாவிடம் காரியம் ஆக வேண்டும் என்பதற்காக இருவரும் ஒன்று சேர்ந்து அவர் காலில் விழுவது என்று அன்பை , அதன் வலிமையை , பெண்மையை. அதன் அழகை பீடத்தில் ஏற்றி இருக்கிறார் மகேந்திரன்..

ஒப்புக்கொள்கிறேன் நண்பர்களே..மெட்டி படம் பார்க்காமல் ஒருவன் வாழ்க்கை முழுமை அடையாது...




6 comments:

  1. /// பாடல் நம்மை ஈர்க்கிறது என்றால் அது அந்த பாடலின் வெற்றியாகும்... ///

    ரசித்தீர்களா...? பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. கலந்து கொள்ள விரும்புகிறேன்... http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

    ReplyDelete
  3. மெட்டி கதையை ‘தாய்’ வார இதழில் முன்னர் எழுதிய மகேந்திரன் பின்னால் 14 வருஷங்கள் கழித்து அதைத் திருத்தி எழுதி நக்கீரன் பதிப்பகத்தில் வெளியிட்டிருக்காங்க. காட்சிப்படுத்தலாக முழுப்படத்தையும் பார்த்து நெகிழ்ந்து ரசித்ததுண்டு நான். இப்போது படிக்கையிலும் மனதில் மறுபடி ஓடுகிறது! நீங்கள் ‘நண்டு’ படம் பார்த்திருக்கீங்களா ஸார்?

    ReplyDelete
  4. சரத் பாபுவை அண்ணன் என்று அழைப்பதை விரும்பாத ராதிகா இறுதியில் அவர் இறந்ததும் அண்ணா என்று குழந்தை போல அழைப்பது ஒரு துயரக் கவிதை. அந்தக் காட்சியில் கண்ணீரை நம்மால் தடுக்கவே முடியாது. Class!

    ReplyDelete
  5. வணக்கம், தங்களது தளம் "மின்னல்வரிகள்" பாலகணேஷ் அவர்களால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான சுட்டி:

    http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_5.html

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா