Saturday, July 27, 2013

ஒரு மரணம் , ஒரு மனோதத்துவம்

இது சிறுகதை அல்ல ..சின்னஞ்சிறு கதை . சிறிய முடிச்சை வைத்து குறைந்த பட்ச வரிகளுடன் எழுதப்படுவது.படிமம் , குறியீடு , அக தரிசனம், அறச்சீற்றம் என எதுவும் இருக்காது. வெறும் பொழுதுபோக்குக்காக எழுதப்படுவது..

**************************

காலிங் பெல் அடித்து கொஞ்ச நேரம் கழித்துதான் கதவு திறந்தது, பொறுமையாக காத்து இருந்தேன். பொறுமை அனைவருக்கும் அவசியம் என்றாலும்  மருத்துவருக்கு , அதுவும் மன நல மருத்துவருக்கு மிக அவசியம்.
எனக்கு முப்பது வயது என்றாலும் ஐம்பது வயதுக்கான பொறுமை இருப்பதற்கு காரணம் என் குரு டாக்டர் ஜோசப். மருத்துவம் ஒரு தொழில் அல்ல..அது ஒரு சேவை..அது ஒரு தவம் என போதித்தவர் அவர்.

கதவை திறந்தவனுக்கு 25 வயது இருக்கலாம்.

“ வாங்க டாக்டர் “ என்றான்.

இவ்வளவு பணிவாக இங்கிதம் தெரிந்தவனாக இருக்கிறானே...இவனுக்கா பிரச்சினை..ம்ம்ம்.. மருத்துவ விந்தைகள் !
அவன் மனைவியும் புன்னகையுடன் கண்களால் வரவேற்றாள்.

அவளுக்கு 22 வயது இருக்க கூடும் என கணித்தேன்.

காஃபீ சாப்பிட்டவுடன் நேரடியாக விஷயத்துக்கு வந்தேன்,

” என்னிடம் தயக்கம் இல்லாம பேசலாம்..சொல்லுங்க //என்ன பிரச்சினை? “

அவன் முகம் சற்று மாறியது.

“பிரச்சனையா...எனக்கா...என்ன”  மனைவி இடைமறித்தாள்.

“ நான் பேசிக்கிறேன்..சும்மா இருங்க...”

அவன் அடங்கினான்

“ டாக்டர்///அவர்  நல்லாத்தான் இருந்தார்... ஆனால் கொஞ்ச நாளாத்தான் பிரச்சினை//  இல்லாத விஷ்யங்களை இருப்பதா கற்பனை செஞ்சுக்குறார்”

ம்ம்...இது நான் எதிர்பார்த்ததுதான். வொர்க் ஸ்ட்ரஸ் , சமூக அழுத்தம். உரிய அங்கீகாரம் கிடைக்காமை இதில்தான் முடியும்.

” மேடம் .கவலைப்படாதீங்க... இதுக்கு மருந்து தேவை இல்லை....அவர் நினைப்பு தவறு என்பதை செயலால் காட்டினால் போதும். இப்ப பாருங்க”

அவளிடம் சொல்லி விட்டு அவனிடம் திரும்பினேன்.

சார் இது என்ன ? “

அவனிடம் கண்ணாடி டம்ப்ளரை காட்டினேன்.

கொஞ்ச நேரம் திகைத்து போய் பார்த்தான். மனைவியை பார்த்தான்.

” சொல்லுங்க “ உற்சாகப்படுத்தினேன்.

“ டாக்டர்...கையில் ஏன் ரோஜா பூங்கொத்தை வச்சு இருக்கீங்க? எனக்கு வாழ்த்து சொல்ல வந்தீங்களா? “

நான் சிரித்தேன்.

“இது கண்ணாடி கிளாஸ் “

“ இல்லை டாக்டர்...மலர்களின் வாசம் என் நாசியை தொடுது... இப்படி பொய் சொல்றீங்களே”

மனைவியோ செய்வதறியாமல் நின்றாள்.

இது கண்ணாடிதான் என எவ்வளவுதான் சொன்னாலும் சரிப்படாது.இது கண்ணாடி இது கண்ணாடி என அவனை மீண்டும் மீண்டும் சொல்ல வைக்கும் ஆட்டோ சஜஷன் எல்லாம் வேலைக்கே ஆகாது.

” சார் கடசியா கேட்கிறேன். இது கண்ணாடியா ,மலர் கொத்தா ?”

அவன் பொறுமை இழந்து கத்தினான்

“ இது மலர் கொத்து ,,மலர் கொத்து ..மலர் கொத்து “

 நான் சட் என கோபமாக முகத்தை மாற்றிக்கொண்டேன்.

“ ஷட் அப்...இது கண்ணாடி “

கோயிலில் சிதறி தேங்காய் உடைப்பது போல , ஓங்கி தரையில் அடித்தேன். கண்ணாடி சிதறியது. மனைவி வீல் என அலறினாள். ஒரு துண்டு அவன் உதட்டில் மோதி ரத்தம் கசிந்தது.

“ சாரி மேடம்..இந்த மாதிரி ஷாக் ட்ரீட்மெண்ட்தான் அவர் ஆழ் மனதில் பதிந்து , அவர் கற்பனைகளை அழிக்கும்...மன்னிச்சுடுங்க... இன்னும் ஒரு ட்ரீட்மெண்ட்தான்..சரி ஆகிடும் “

அவன் முகத்தில் கலவரத்தோடு கைக்குட்டையால் உதட்டு ரத்தம் துடைத்தான்.

வெளியே அழைத்து வந்தேன்.

தோட்டத்தை காட்டினேன்..

“ இது என்ன ?”

அவன் முன்பு போல திகைத்தான்..

“ இது ஆழ்ந்த பள்ளத்தாக்கு.. நாம் மலை உச்சியில் நிற்கிறோம் “

சிரித்தேன்,

“இல்லை.. நாம் சமதளத்தில் நிற்கிறோம் “

“ இல்லை டாக்டர்... நாம் இருப்பது மலை உச்சி..விழுந்துடப்போறீங்க..இப்படி வாங்க”

“ ஹாஹா...இது சமதளம்...ம்ம்..சரி நான் முன்னாடி நடந்து காட்டுறேன்..என் பின்னாடி வாங்க”

“ நோ...பள்ளத்தாக்கு டாக்டர்... விழுந்து செத்துடாதீங்க... ’ பதறினான்.

புன்னகையுடன் நடக்க ஆரம்பித்தேன்.

**************************************************************

கீழ்தள கதவை காலிங் பெல் அடித்து திறக்கும் அவரை பொறுமை இல்லாமல் உள்ளே நுழைந்தார்கள்.

” நான் சொன்னபடி அவன் வந்தானா? தன்னை மன நல மருத்துவர் என சொல்லி இருப்பானே”

பெரியவர் சோம்பலாக பார்த்தார்.

“ ஆமாம் சார் ,..வந்தான் .. நீங்க சொன்னபடி.ஏதாச்சும் பேச்சு கொடுத்து உட்கார வைக்க பார்த்தேன்...அவனோ தன் பேஷண்டை பார்க்க போறேனு லிஃப்ட் ஏறி டாப் ஃப்லோர் போயிட்டான்..”

“சார்..என்ன சார்..இப்ப்படி செஞ்சுட்டீங்க... அவருக்கு மன நலம் சரியில்லை.. எப்படியோ தப்பிச்சி வந்துட்டார்.. பத்திரமா பார்த்துக்கோங்க போன் செஞ்சும் உச்சி மாடிக்கு போக விட்டுட்டீங்களே.. அந்த வீட்டு பொண்ணு ஒருத்தி மரணத்துக்கு இவர் தெரிஞ்சோ தெரியாமையோ காரணம் ஆகிட்டார்.. இங்கேதான் வருவார்னு தெரியும்.. பார்த்துக்குவீங்கனு போன் செஞ்சுட்டு நாங்க வரதுக்கு லேட் ஆகிப்ப்போச்சே .. “

பதட்டத்துடன் அவர்கள் எழுவதற்குள் பெரிய சத்தத்துடன் அவன் கீழே விழுந்து சிதறினான்.

********************************************

மேல் தளத்தில் அந்த மனைவியும் , ” மன நோய் “ கணவனும் புன்னகைத்து கொண்டனர். அவன் கைகள் மருத்துவ கவன குறைவால் இறந்து போன த்ன் த்ங்கை போட்டாவை வருடின

**********************************************




Wednesday, July 24, 2013

கவிதை எழுவதில் விஞ்சி நிற்கும் நாத்திகம். உதவுவதில் விஞ்சி நிற்கும் இஸ்லாம் - டைம்ஸ் வெளியிட்ட அதிரடி ஆய்வு

அதீத உணர்ச்சிவசப்படுதலை மட்டுமே தன் ஒரே பலமாக கருதும் ஓர் இனம் உலகில் உண்டு என்றால் அது நம் தமிழ் சமூகம்தான்.

நெட் மூலம் குற்றங்கள் என செய்தி வருகிறதா ? நெட்டை தடை செய் என ரெண்டு நாள் உணர்ச்சி வசப்பட்டு டீக்கடை விவாதங்கள் நடக்கும்.

எங்காவது ஜாதி சண்டை என செய்தியா , ஜாதி ஒழிந்தால்தான்யா நாடு உருப்படும் என தீர்வு சொல்லி விட்டு வழக்கமான வேலையை தொடர்வார்கள்.

இந்த உணர்ச்சிவசப்படுதலால் கிடைக்கும் மனரீதியான அனுகூலம் என்ன ?  நாம் எந்த விதத்திலும் மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது . என்றோ ஒரு புதிய உலகம் உருவாகபோகிறது..அப்போது எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கையில் வழக்கம்போல சிங்கம் பட பார்த்து சும்மா இருக்கலாம். இப்படி சும்மா இருக்கும் குற்ற உணர்ச்சியை மறைக்கத்தான் உணர்ச்சிவசப்படல்.

இதற்கெல்லாம் முக்கிய காரணம் பலருக்கு அன்றாட வாழ்வில் தொடர்பு இல்லை. பக்கத்து வீட்டுக்காரர் பெயர் கூட தெரியாத நகர வாழ்க்கை.

டிவி மூலமும் பேப்பர் மூலமும்தான் உலகம் அறிமுகம் ஆகிறது. இந்த அறிவைக்கொண்டு உலகை அணுகுவதால் , அந்த போலியான பொது அறிவு மேலும் மனதில் வலுப்பெறுகிறது.

 நல்ல வேளையாக எனக்கு இத்தகைய நகர வாழ்க்கையில் இள வயது அமையவில்லை. பக்கத்தில் இருந்த இஸ்லாமியர்கள் வீடுகளுக்கு சென்றுதான் விளையாடிக்கொண்டு இருப்பேன். அவர்கள் இஸ்லாமியர்கள் , நான் ஹிந்து என்பதெல்லாம் இப்போது யோசித்தால்தான் தெரிகிறது. அந்த வீட்டில் இருந்த இஸ்லாமிய தாய்மார்கள் , சகோதரிகள் எந்த வேறுபாடும் இல்லாமல் அன்பாக பழகுவார்கள். குறிப்பிட்ட நேரம் ஆனதும் சிலர் பாய் விரித்து தொழுகை நடத்துவது அந்த வயதில் ஆச்சர்யமாக இருக்கும். என்னவோ சாமி கும்பிடுகிறார்கள் என நினைத்து கொள்வேன்.

அவர்கள் என்ன செய்கிறார்கள் என விளக்கி அவர்கள் மத மாண்புகளை சொல்லித்தர முயன்றதே இல்லை.

அதே போல நான் படித்த கிறிஸ்தவ பள்ளியிலும் , அங்கிருந்த மதர், சிஸ்டர்கள் அவ்வளவு அன்பாக இருப்பார்கள். அவர்களும் தம் மதம் குறித்து என்னிடம் சொல்லியது இல்லை.

ஆக மதம் குறித்த பிரஞ்ஞையே எனக்கு சிறிய வயதில் இல்லை , மத ஈடுபாடுகொண்டோர் மத்தியில் வாழ்ந்த போதிலும்.

அதே போல நோன்பு கஞ்சி வாங்கி குடித்ததும் இனிய நினைவுகளாக உள்ளது. சிலர் வீட்டுக்கே வந்து தருவார்கள். ஆனால் எனக்கு அதில் கிக் இல்லை. வீட்டில் ஒரு பாத்திரம் எடுத்து கொண்டு , சின்ன பசங்களுடன் சேர்ந்து போய் வரிசையில் நின்று வாங்கி , வீட்டுக்கு கொண்டு வருவது பெருமையாக இருக்கும். செம சூடாக இருக்கும். நீராவி பட்டு பாத்திர மூடி வியர்ப்பது ஆச்சர்யமாக இருக்கும்.

அலுவலகங்களில் சிலர் கொண்டு வந்து தருவார்கள். ஆனால் அன்று பெற்ற உணர்வு  இனி ஒரு போதும் வராது.

இத்தகைய அனுபவங்கள் ஏதும் இல்லாமல் , ஃபேஸ்புக் மூலம் உலகை காணும் சிலர் மொக்கை கவிதைகள் சிலவற்றை வைத்து ம்தம் சார்ந்த தம் பார்வையை அமைத்து கொள்கின்றனர்.

ம்தம்தான் உலகின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என்பது போலவும் , மதம் இல்லாவிட்டால் எல்லா பிரச்சினையும் தீர்ந்து விடும் என்பது போலவும் ஓர் எண்ணத்தை இணையத்தை மட்டுமே  வாழும் அப்பாவிகள் மனதில் பதிக்கிறார்கள்.

கீழ்காணும் சில கவிதைகளை ( ?? !! ) பாருங்கள்.

 நான் ஓர் ஆத்திகன் தான்.
ஆனால்
ஏழையின் இறுதி யாத்திரைக்கு காசு இல்லாதபோது
மெக்கா யாத்திரை செல்லும் அளவுக்கு கொடூரமானவன் அல்ல

உணவு வேண்டும் என பிரார்த்தித்தான் ஒருவன்.
உன் தேவையை நீ சொல்லி அறிய வேண்டிய
கடவுள் தேவையேயில்லை என்றேன் நான்.

தேவாலய பராபமரிப்புக்கு காசு கொடுக்காமல்
ஏழைக்கிழவியின் வீட்டை கட்டி கொடுத்தேன்
அவள் சிரிப்பை விட கடவுள் ஒன்றும் உயர்ந்தவர் அல்லர்.

அழும் குழந்தையை தவிக்க விட்டு
பாலாபிஷேகத்தால் மகிழும் கடவுள்
கடவுள்தானா?




இந்த பாணி கவிதைகளை ( ?? !! ) படிக்கும் அப்பாவிகள் மனதில் இயல்பாகவே நினைப்பார்கள்.  ” மத நம்பிக்கை கொண்டவர்களைவிட நாத்திகவாதிகள்தான் உதவிகள் செய்வார்கள் , அள்ளி அள்ளி கொடுப்பார்கள் போல ”

ஆனால் உலகளவில் பிரபலமான ஊடகம் டைம்ஸ் மேற்கொண்ட ஆய்வு முற்றிலும் மாறுபட்ட சித்திரத்தை அளிக்கிறது.

பிரிட்டனில்  யார் அதிகம் அறக்கொடை அளிக்கிறார்கள் என்ற ஆய்வுக்கு கிடைத்த பதில் ஆச்சர்யம் அளித்தது.

நன்கொடை கொடுப்பவர்கள் பட்டியல் கீழ்கண்டவாறு அமைந்தது.. ஒவ்வொரு தனி மனிதனும் சராசரியாக அளித்த நன்கொடை 

இஸ்லாமியர் - 371 யூரோக்கள் 
யூதர்கள் - 270 யூரோக்கள் 
ப்ரோடஸ்டன்ஸ் கிருத்துவர்கள் - 202 யூரோக்கள் 
கத்தோலிக்க கிருத்துவர்கள் - 178 யூரோக்களுக்கு சற்று அதிகம்
மற்ற கிருத்துவர்கள் - 178 யூரோக்களுக்கு சற்று குறைவு 
நாத்திகர்கள் - 116 யூரோக்கள்

வாழ்க்க்கையில் நன்கொடையே கொடுக்காதவர்கள் பட்டியலும் எடுத்தார்கள். அதில் முதலிடம் பெறுவது நாத்திகர்களும் , யூதர்களும்தான். 

நாத்திகர்கள் கவிதை எழுதி ஊருக்கு உபதேசம் செய்வதுடன் நின்று விட, இஸ்லாம் ஏன் விஞ்சி நிற்கிறது என்றால் அதில் இருக்கும் கடுமையான சட்டங்கள் , வழிகாட்டுதல்கள்.

தன் வருமானத்தில் இத்தனை சதவிகிதம் தானம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையே உண்டு.

எல்லா மனிதர்களிடமும் இருக்கும் தனி நபர் ஒழுக்க கேடு இஸ்லாம் மதத்திலும் இருக்க கூடும். ஆனால் ஒட்டு மொத்தமாக பார்த்தால் , அந்த மத கோட்பாடுகளால் நன்மையே ஏற்படுகிறது என்கிறது ஆய்வு.


ஒரு சிலர் மதங்களை தவறாக பயன்படுத்தினாலும் ஒட்டு மொத்தமாக நன்மை செய்கிறது.

( பெரியார் போன்ற ) ஒரு சிலர் நாத்திகத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினாலும் , ஒட்டுமொத்தமாக அது திண்ணைபேச்சுக்கே பயன்படுகிறது என்கிறது ஆய்வு. 





Wednesday, July 17, 2013

சாரு பரிந்துரைத்த மூலிகை சாறு!!


 நான் என நம்மைப் பற்றி நினைத்து கொள்கிறோம் அல்லவா? இந்த நான் என்பது என்ன என்று பார்த்தால் , அது நம் உடல் மற்றும் மனம்தான். ( ஆன்மா என்ற சந்தேக கேசை இதில் சேர்க்க வேண்டாம் )

நாம் படிப்பது , கேட்பது , கற்பது , அனுபவங்கள் போன்றவை மனமாக மாறுகிறது. நாம் உண்பது உடலாக மாறுகிறது.

நல்லவற்றை படிப்பது , கேட்பது கொஞ்சம் சிந்தனை பயிற்சி  என இருந்தால் மனம் செம்மையாக இருக்கும். நல்லவற்றை உண்டு , கொஞ்சம் உடற்பயிற்சி என இருந்தால் உடல் நன்றாக இருக்கும். இந்த இரண்டும் நன்றாக இருந்தால் , வாழ்க்கை சுமுகமாக போகும்.

இவ்வளவு எளிதானது.. ஆனால் நாம் இதை செய்வதில்லை என்பதுதான் வேடிக்கை.

நான் சாருவை விரும்புவதற்கு காரணம் இதுதான்.

அவர் இலக்கியம் , சிந்தனை , புத்தகங்கள் , கவிதை என எந்த அளவுக்கு பேசுகிறாரோ அதே அளவுக்கு உணவு பழக்கங்கள் குறித்தும் பேசுவார் .ஏகப்பட்ட குறிப்புகள் கொடுப்பார்.

அவர் சொல்லும் புத்தகங்களை பெரும்பாலும் படித்து விடுவேன். அதேபோல அவர் சொல்லும் உணவுக் குறிப்புகளையும் முடிந்த அளவு பின்பற்றி வருகிறேன்.

அவர் சொல்லும் இயற்கை உணவு ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கும். ஆனால் ரெண்டு நாள் சாப்பிட்டால் போதும். பழகி விடுவது மட்டும் அல்ல. அதற்கு அடிக்ட்டாகவே ஆகி விடுவோம்.

தனிப்பட்ட முறையில் பேசுகையில் ஒரு மூலிகை சாறு பற்றி சொன்னார். அதன் மகத்துவமும் பலனும் கேட்பதற்கு பிரமிப்பாக இருந்தது. அதைப்பற்றி கட்டுரை எழுதுவதாக சொன்னார். இன்னும் ஏன் எழுதவில்லை என தெரியவில்லை.
அவர் சொன்னதை தொகுத்து எழுதி , அவருக்கு மெயில் அனுப்பினேன். ஆனால் இன்னும் அவர் எழுதவில்லை..அதை அவர் வெளியிட்டால் , பெரிய பரபரப்பு ஏற்படும்.  அதைப்பற்றி நான் சொல்வது எதிக்ஸ் அல்ல என்பதால்  நான் அதைப்பற்றி சொல்ல முடியவில்லை.


மூலிகை சாறு , காய்கறி சூப் என சாப்பிட பழகி விட்டால் , டீ சாப்பிடுவது எல்லாம் இயல்பாகவே குறைந்து விடும்.

எஸ் ரா பரிந்துரைந்த தேனீர் கலை என்ற புத்தகம் படித்து , தேனீர் மீது ஒரு மயக்கம் ஏற்பட்டது.  விளைவாக வித விதமான ஒருஜினல் தேயிலை தூள்களை வாங்கி வைக்கலானேன்.

டீ சாப்பிடுவது குறைந்ததால் , எப்போதாவது ஒரு நாள் மட்டும் , தேனீருக்கு என அந்த நாளை ஒதுக்கி ரசித்து சாப்பிடுவேன். மற்றபடி தேனீர் சாப்பிடுவது இயல்பாகவே குறைந்து விட்டது.

ஆனாலும் எனக்கு தேவைப்பட்ட சில இயற்கை உணவு பொருட்கள் எனக்கு கிடைக்கவில்லை, இந்த நிலையில்தான் விதை இயற்கை அங்காடியைப்பற்றி கேள்விப்பட்டு அங்கே சென்றேன்.

உண்மையிலேயே அசந்து விட்டேன். விதவிதமான இயற்கை சார்ந்த உணவு வகைகள், சிறு தானியங்கள் , சப்பாத்தி தோசை செய்வதற்கான மாவுகள் , தேன் , இயற்கை ஸ்னாக்ஸ் என க்ரியேட்டிவாக பல பொருட்கள் இருந்தன.

சிலவற்றை வாங்கி வந்தேன்.

அதில் நான் முதலில் டெஸ்ட் செய்தது சாமை என்ற தானியத்தை,.பலர் சாமையை ஆமையுடன் குழப்பி கொள்கிறார்கள்.. சாமை என்றால் அசைவமா என சந்தேகமாக கேடடார் ஒருவர்.

வரகு, தினை, சாமை போன்றவை எல்லாம் நம் பாரம்பரிய தானியங்கள். நம் ஊர் தட்ப வெப்ப நிலைக்கு இவைதான் சரியாக இருக்கும்.

இவற்றை மறந்து இயற்கைக்கு மாறான உணவுகளை உட்கொள்வதால்தான் , மருத்துவ மனைக்கு என தனியாக செலவு செய்ய வேண்டி வருகிறது.

மெரினா பீச்சில் காலையில் பலர் வாக்கிங் செல்வதை பார்க்கலாம். ஆரோகியத்துக்காகவோ, காலை அமைதியை ரசிப்பதற்காகவோ வாக்கிங் செல்பவர்கள் குறைவு.

கொழுப்பை கரைக்க, உடல் எடையை குறைக்க என எதிர்மறை செயலுக்காக வாக்கிங் வருபவர்களே அதிகம்.

 உணவு விஷ்யத்தில் நான் பல தவறுகள் செய்து இருக்கிறேன். சில கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறேன்.

ஆனால் இனி தவறு செய்வதாக இல்லை,

இயற்கை உணவு என்பதை ஏன் மறந்தோம் என்பது தெரியவில்லை. சாமையை சமைத்து சாப்பிட்டேன், அவ்வளவு அருமையாக இருந்தது.

நான் சமைத்ததே அவ்வளவு சூப்பராக இருந்தால் , உண்மையிலேயே நன்கு சமைக்க தெரிந்தவர்கள் செய்தால் , எப்படி இருக்கும்..ம்ம்.. வாவ்.

விதை அங்காடி அடையாறு காந்தி நகர் பேருந்து நிலையத்தை தாண்டி ஒரு சிக்னல் வருமே , அங்கே மேம்பாலத்தில் ஏறாமல் சென்றால் ஒரு பிள்ளையார் கோயில் வரும், அதன் அருகில் உள்ளது..பயன்படுத்தி கொள்ளுங்கள்


Monday, July 15, 2013

மாதவிடாய் - என்னை வெட்கப் பட வைத்த திரைப்படம்


ஒரு பெண் சானிட்டரி நாப்கின் வாங்கி வருவதை பார்த்த ஒரு வாலிபன் கிண்டலாக கேட்டான்.
“ மேடம் ..பிரட் வாங்கிட்டு போறீங்களா? எனக்கு இல்லையா? “

அந்த பெண் சொன்னாள் ‘

: பிரட் சும்மா சாப்பிட்டா நல்லா இருக்காது..கொஞ்ச நேரம் கழித்து ஜாம் தடவி தறேன்,, சாப்பிடு :

இது போன்ற பல ஜோக்குளை அந்த காலத்தில் சொல்லி நண்பர்களை சிரிக்க வைத்து இருக்கிறேன். அவர்கள் சொல்ல நான் சிரித்து இருக்கிறேன்.

இது சிரிக்க வேண்டிய விஷயமா... தாய்மை சம்பந்தப்பட்ட , பெண்களின் வலி மிகுந்த உடல்கூறைப் பொருத்த ஒரு விஷ்யம்.

எனக்கு இந்த புரிதல் ஏற்பட்டு பெண்மையை தற்போது மதிக்கிறேன் என்பது எந்த அளவுக்கு உண்மையோ , ஒரு காலத்தில் கேலி செய்து இருக்கிறேன் என்பதும் உண்மை.

மறந்து விட்ட அந்த சம்பவங்களை நினைவு படுத்து என்னை வெட்கி தலைகுனிய வைத்த்து சென்ற் சனியன்று பார்த்த ஆவணப்படம்..

தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டம் சார்பில் ஆவணப்பட திரையிடல் மற்றும் குறும்பட ரசனை வகுப்பு சென்ற சனிக்கிழமை சென்னையில் நடந்தது.



மாதவிடாய் (படைப்பு :கீதா இளங்கோவன்) மற்றும் விடியாத பொழுதுகள் (படைப்பு : வசந்த் கே. பாண்டியன்) ஆகிய ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன.

அதற்கு முன் அயல் நாட்டு குறும்படம் திரையிடப்பட்டது.தொடர்ந்து ரசனை வகுப்பு நடந்தது. சினிமா கோட்பாடு என்ற அருமையான மொழியாக்க புத்தகத்தை தந்த , திரைப்பட அறிஞர் சிவகுமார் வகுப்பு எடுத்தார்.

சினிமா என்ற பெயரில் வேறு எதையோ பார்த்து  நேரத்தை வீணடித்து விட்டோமே என்ற ஆதங்கம் அவர் பேச்சை கேட்டபோது ஏற்பட்டது. சினிமா தர வேண்டிய உன்னத உணர்வை பெறாமல் ஒரு பொழுதுபோக்கு பொம்மைபோல அதை பயன்படுத்துகிறோமே என உண்மையிலேயே வருத்தப்பட்டேன்.

பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தது மட்டும் அன்றி அவரும் சில கேள்விகள் கேட்டார். பதில்களில் இருக்கும் போதாமையை சுட்டி காட்டினார். கேள்விகளைப்பற்றியும் தன் கருத்துகளை சொன்னார்.என்னை எதுவும் கேட்டு விடக்கூடாதே என சற்று தலைமறைவாக அமர்ந்து இருந்தேன் :)

அதன் பின் மாதவிடாய் என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களின் படம் என சரியாக சொல்லி இருந்தார்கள்.

மாதவிடாய் என்றால் என்ன, அது சார்ந்த மூட நம்பிக்கைகள், கடைபிடிக்க வேண்டிய சுகாதார பழக்கங்கள் , பெண்களுக்கு செய்து தர வேண்டிய வசதிகள் என களப்பணி செய்து பிரசண்ட் செய்து இருந்தார்.

நாமெல்லாம் காட்டுமிராண்டி சமுதாயத்தில்தான் இன்னும் இருக்கிறோமோ என தோன்றியது.

இதை எல்லாம் மூடி மறைத்து , மத சடங்குபோல ஆக்கியதால்தான் போதிய விழிப்புணர்வு இல்லாமல் போய் , நான் ஆரம்பத்தில் சொன்னது போல முட்டாள்தனமாக சிலர் நடந்து கொள்வதில் முடிகிறது.

அரசு, தனியார் நிறுவனங்கள் , பள்ளிகள் போன்றவற்றில் இதற்காக எந்த சிறப்பு வசதிகளும் செய்யப்படுவதில்லை..அதற்கு நிதியும் ஒதுக்கப்படுவதில்லை.

ஒரு பெண் உறுப்பினர் சட்டசபையிலோ பாராளுமன்றத்திலோ எழுந்து நின்று இதற்காக நிதி ஒதுக்குங்கள் என கேட்க கூச்சப்படுவது யதார்த்தம். அவர்களே அப்படி என்றால் சாதாரண பெண்கள் என்ன செய்வார்கள்?

மாற்றுத்திறானிகளான பெண்கள் அனுபவிக்கும் கொடுமை சொல்லி மாளாது.

பேசத்தயங்கும் இந்த விஷ்யத்தை கையில் எடுத்து, தெளிவாக படம் எடுத்த கீதா பாராட்டுக்குரியவர்.
அரங்கில் அவரைத்தவிர அனைவரும் ஆண்களே.

அவர் உள்ளத்தில் ஒளியுடன் அத்தனை ஆண்கள் மத்தியில் இந்த பிரச்சினை குறித்து பேசியபோது அனைவருமே மிகவும் பிரமிப்போடும் மரியாதையுடனும் அவர் பேச்சை கேட்டார்கள்.
சிலர் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்கள், இது வரை புரியாமல் நடந்து கொண்டதற்கு சிலர் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார்கள்.


இரண்டாவதாக திரையிடப்பட்ட ஆவணப்படம் விடியாத பொழுதுகள். இலங்கை ராணுவத்தால் கஷ்டப்ப்படும் மீனவர்களைப் பற்றிய படம்.

உலகில் வேறு எங்கும் நடக்காத கொடுமை, ஒரு நாட்டு மீனவர்களை இன்னொரு நாட்டு ராணுவம் தாக்குவது.

வேறு எந்த நாடாக இருந்தாலும் , தன் நாட்டு குடிமகன் தாக்கப்படுவதை பார்த்து கொண்டு இருக்காது, ஆனால் இதை ஒரு பொருடடாகவே நினைக்காத இந்திய அரசு. இது தன் இறையாண்மைக்கு இழுக்கு என்பதையே புரிந்து கொள்ளவில்லை என்பதை ஆவணப்படுத்து இருந்தார் வசந்த் பாண்டியன்.

பாதிக்கப்பட்ட மீனவர்கள் பார்வையில் பிரச்சினையை சொல்லி இருந்தது சிறப்பு.

பேசக்கூச்சப்படும் விஷயம். பேச மறந்து போன விஷ்யம் என இரு முக்கிய பிரச்சினைகளைப்பற்றிய படங்களை திரையிட்டு இருந்தது நிறைவாக இருந்தது.

வாய்ப்பு கிடைக்கையில் இந்த படங்களை பார்க்குமாறு கேட்டு கொள்கிறேன்.




Tuesday, July 2, 2013

சர்வதேச விருதை குறி வைக்கும் சாருவின் நாவல்- வரலாற்று தருணத்தில் தமிழ் படைப்புலகம்


  உலக அளவிலான நாவல்களுடன் போட்டியிட்டு , கடைசி சுற்றுக்கு முன்னேறி, கிட்டத்தட்ட 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள சுவிஸ் இலக்கிய விருது கிட்டத்தட்ட கிடைத்துவிட்டது என்ற நிலையில் சாரு நிவேதிதா இருப்பது தமிழ் இலக்கிய உலகில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் , நடுனிலை  இலக்கியவாதிகள் , ஒரு தமிழ் எழுத்தாளனின் நாவல் உலக அரங்க்குக்கு செல்வதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



உலக அளவில் சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்து ஸ்விஸ் நாட்டின் Jan Michalski விருது ஒவ்வொரு ஆண்டும் வ்ழங்கப்படுகிறது.


தகுதி வாய்ந்த நடுவர்கள் சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுப்பார்கள்.


முதல் மூன்று இடம் பிடிக்கும் எழுத்தாளர்கள் , சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்ப்பட்டு ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள இலக்கிய வீடு Maison de l’Ecriture எனும் பிரமாண்ட நகரத்தில் மூன்று மாதங்கள் தங்க வைக்கப்படுவார்கள்.




இந்த நகரம் எழுத்தாளர்களுக்காக சகல வசதிகளுடன் உருவாக்கப்பட்டபகுதியாகும். வசதியான அறைகள் , உணவகம் , நூலகம் , கண்காட்சியகம் என எல்லாமே இதில் இருக்கும்.


நவம்பரில் முடிவு அறிவிக்கபடும், வெல்வோர் முப்பது லடசம் ரூபாய்களை பரிசாக பெறுவார்.


இந்த் ஆண்டுக்கான போட்டியியில் 11 புத்தகங்கள் இறுதி சுற்றில் உள்ளன.


இறுதி சுற்றுக்கு வந்த புத்தகங்களில் சாருவின் ஜீரோ டிகிரியும் ஒன்று.


இதில் மற்றவை அனைத்தும் ஒரே ஃபார்மேட்டில் இருக்கும் நிலையில் ஓர் உன்னதமான பின் நவீனத்துவமான படைப்பான சீரோ டிகிரி மிக மிக வேறுபட்டு இருப்பதால் அதற்கே பரிசு கிடைக்கும் என இப்போதே பேசப்பட்டு வருகிறது.

மற்ற புத்தகங்களை சாதாரணமாக மதிப்பிட்டு விட முடியாது. கறாராக பரீசிலித்துதான் ஷார்ட் லிஸ்ட் செய்து இருக்கிறார்கள். சீரோ டிகிரி களத்தில் இல்லாவிட்டால், ஒவ்வொரு புத்தகமுமே முதல் பரிசுக்கு தகுதியானவைதான். ஆனால் சீரோ டிகிரி களத்தில் இருப்பதால் , இப்போதே பரிசி உறுதி என்கிறார்கள் நடு நிலையாளர்கள்.

எனக்கும் சீரோ டிகிரிக்கும் இடையேயான தொடர்பு இன்று நேற்றல்ல. பல காலமாக நீடித்து வருகிறது. என் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் படித்து இருக்கிறேன் . வாழ்வின் கஷ்ட நஷ்டங்களை அறியாத பருவம்.,வேலையில்லாமல் கஷ்டப்பட்ட காலகட்டம்., மகிழ்ச்சியான கால கட்டம், இலக்கிய பரிச்சயம் ஏற்பட்ட கால கட்டம் என ஒவ்வொரு நிலையிலும் படிக்கும்போது ஒவ்வொரு உணர்வை தந்து கொண்டு இருக்கிறது சீரோ டிகிரி.

அதனால்தான் இன்னும் அதைப்படித்து கொண்டே இருக்கிறேன். என்னால் என்றுமே முடிக்க முடியாத நாவல் இதுதான்.

என்னிடம் சீரோ டிகிரி பிரதிகள் எத்தனை இருக்கின்றன என எனக்கே தெரியாது. வெவ்வேறு இடங்களில் , வெவ்வேறு சூழ்னிலைகளில் சீரோ டிகிரி காப்பிகளை வாங்கிப்படிப்பது என் வழக்கமாக இருந்து இருக்கிறது.

இத்தனைக்கும் சாரு எழுத்தில் எனக்கு பிடித்தது எக்சைல்தான். அதற்கு பிறகு ராசலீலா. ஆனால் அவை எல்லாம் ஒரு காப்பிதான் இருக்கின்றன. சீரோ டிகிரியில் மற்ற புத்தகங்களில் இல்லாத  வேறு ஏதோ ஒன்று , வரையரை செய்ய முடியாத ஒன்று இருக்கிறது.

என்சைக்களோபீடியாகவாக , கவிதை நூலாக, சிறுகதை தொகுப்பாக , நாவலாக என விதம் விதமாக ரசித்து படித்தாலும் இதை இன்னும் படிக்க முடிக்க முடியவில்லை.

எத்தனையோ வரிகளை மீண்டும் மீண்டும் படித்து கொண்டே இருக்கலாம்.

  • பூனைக்குட்டிகளை யாராவது வெறுக்க முடியுமா என்ன? கறுப்பு பூனைக்குட்டி , வெள்ளை பூனைக்குட்டி, பழுப்பு பூனைக்குட்டி. பூனைக்குட்டிக்ளை நான் ஆராதிக்கிறேன். முத்தமிடுகிறேன். பூனைக்குட்டிகள் மிகவும் ருசியானவை.
  • ஊசிமுனை வழியே யானையை இழுத்து செல்லும் செப்படி வித்தை - எழுத்து
  • எழுத்து வாழ்க்கையை பற்றியதல்ல, எழுத்து எழுத்தைப் பற்றியது
  • தேசிய கீதத்தை பத்தி என்ன நினைக்கிறீங்க?   “ நான் அதைப் பிரதியாக பார்க்கிறேன். இலக்கியப்பிரதியாக “   -இந்த பதிலுக்காகவே உங்களுக்கு நோபல் பரிசு கொடுக்கணும். என்ன பதிலு சார். எப்படித்தான் உங்க மூளைல இப்படியெல்லாம் உதிக்குதோ. ம்ம். நானும் அந்த காலத்துல இப்படி இருந்தவன் தான்.
  • தமிழ் மொழி என்பது எத்தனை இனக்குழுக்களின் மொழிகளை ஒழித்துக்கட்டி விட்டு உருவானதென்பது உத்தம தமிழ் எழுத்தாளனுக்கு தெரியுமா?
  • கைக்குள் சிக்கவில்லை
           இருந்தும்
          
            தன் முதல் கவிதையை எழுதிக்கொண்டிருக்கிறது

             மொழி

  • சூன்ய மொழி 
          சீழ் பிடிக்க
         ஒற்றைக் கண்ணில் இருந்து
         ஒழுகியது
         கவிதை

  • இப்படித்தான் இது தோன்றியது எனில் இத்தோற்றங்களின் தோற்றம் எப்படி இருந்தது?

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

 நான் ரசித்து படித்த நாவல் உலக அளவில் கவனம் பெற்று இருப்பது மட்டுமே என் மகிழ்ச்சிக்கு காரணம் அல்ல/

இதன் மூலம்  உலக அரங்கில் தமிழும் கவனம் பெறுவது ஒட்டு மொத்த தமிழ் இலக்கியத்துக்கே நல்லது என்ற வகையில் , இதை தமிழ் எழுத்துலக வரலாற்றின் திருப்பு முனையாகவே கருதுகிறேன்.

             ***************

 நான் கருதுவதெல்லாம் இருக்கட்டும். கவிஞர் றியாஸ் குரானா இது குறித்து என்ன சொல்கிறார்?


எனது நேர்காணலில் சாருவுக்கு புக்கர் பரிசு கிடைக்கும் என்று சொன்ன ஞாபகம் வருகிறது. சீரோ டிகிரிக்கு விருது கிடைக்க வாய்ப்புள்ளது. எனது இனிய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

1. காப்பி அடிப்பவர், எழுத்தை வைத்து மிக மோசமான அரசியலை செய்பவர் என பல விமர்சனங்கள் இருந்தாலும் தமிழிலிருக்கும் மிகக் கவர்ச்சிகரமான, உலகத்தரத்திலான கதைசொல்லி சாரு நிNவேதிதாதான். உலகத்தரத்தில் பலருடைய கதைகள் இருந்தாலும் சாரு நிவேதிதாவின் எழுத்துக்கள் கொண்டிருக்கின்ற கவர்ச்சி தமிழில் வேறு யாரிடமும் இல்லை. இது நிரந்தரமான ஒரு கருத்து அல்ல. வாசிப்பு விரிவுபடும்போது மதிப்பீடுகளும் மாற்றமடைகின்றன.

2.கவரச்சிகரமான எழுத்து - நீண்ட நேரம் ஒரே வகையான சூழலுக்கள் பார்வையாளரை வைத்திருப்பதில்லை. பலவகையான பொருட்கள் உள்ள ஒரு வியாபார நிலையத்தைப்போல, இங்குமங்குமாக பலவகையான பொருட்களை பரப்பி வைத்திருப்பவை. எல்லா வகையான பார்வையாளர் களுக்குமான சாமான்கள் அங்கு கிடைக்கும்.மிக மோசமானது எனக் கருதப்படுபவைகள் தொடங்கி உயர்தரமானவைகள் என கருதப்படுபவைவரை அங்குண்டு. ஒரே இடத்தில் எல்லாம் பார்வைக்குண்டு. பன்மையான பார்வையாளர்களை அங்கு சந்திக்க செய்யும். விதம் விதமான பார்வையாளர்களை ஒரே இடத்தில் கூட்டிவிடக்கூடிய பிரதி என்பதால் அப்படிச்சொன்னேன். சாருவின் பிரதியைக் கையிலெடுக்கும் ஒருவர் அதை தூக்கிவீசிவிட முடியாது.ஏனெனில், அவர் எதிர்பார்ப்பவைகளும் சிறிதளவிலேனும் அங்கு கிடைக்கும். இது தமிழில் வேறு எந்த எழுத்தாளர்களின் பிரதியிலும் இல்லை. அது ராய் இசைபோல ஒரு கலப்பினம்.

3.உலகத்தரம் - எந்த வகையான கோட்பாட்டு வாசிப்புக்களுக்கும் இடந்தருபவை.கோட்பாடுகளுக்கு அப்பாலும் லைற்றீடிங்குக்கும் இடந்தருபவை. சாருவின் பிரதிகளை வாசிக்கும்போது, எப்போதோ வாசித்த பல கோட்பாடுகள், ரசனை மதிப்பீடகள், சாதாரண செய்திபற்றிய கருத்து நிலைகள் என பலவற்றை மீண்டும் நமக்குள் கிளர்த்துகின்றன. இப்படியான காரணங்களால் அது உலகத்தரமானது என்றும் கூறினேன். உலகத்தரமென்று ஒன்று தனிப்படையான வரையறைகளுக்குள் இல்லை என்று புரிந்திருக்கின்ற நிலையிலே - உலகத்தரம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன் என்பதையும் தெரிவிக்கிறேன்.

4.சூப்பர் மாக்கெட்டில் சாமான்கள் பரப்புவதைப்போன்ற அம்சம் மற்றவர்களிடம் இல்லை என்றுதான் சொன்னேன்.மற்றவர்களின் கதைகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. மிக மலிவான பொருட்களைக் கொண்டும் பெறுமதிமிக்க ஒன்றை உருவாக்க முடியும் என்பதையே சாரு நிவேதிதாவின் எழுத்துக்களில் பார்க்கிறேன்.அதுவே கவர்ச்சிகரமானதாக எனக்கு தோன்றுகிறது.

5.பெறுமதி - பிரதியை உருவாக்கும் பணியில் வாசகனின் பங்களிப்பை ஏற்பவன் என்ற வகையில், பலவகைப்பட்ட வாசகர்களின் இருப்பையும் ஏற்பவன்.அது அவசியமென்றும் கருதுபவன்.ஆக, பிரதியை அர்த்தப்படுத்தும் வழிகளில் அனைத்து வகை பார்வையாளர்களும் பங்காற்றக்கூடிய இடத்தை தன்னகத்தில் கொண்டிருக்கும் கதைகளாகவே சாருவின் நாவல்களைப் பார்க்கிறேன்.அதுவே அதற்கான பெறுமதி என்றும் கருதுகிறேன்.மற்றப்படி, அகவிரிவாக்கதில் சுயவிமர்சனத்தை தவறவிடும் தருணங்கள் போன்ற உங்கள் ஏனைய விமர்சனங்கள் எனக்கு உடன்பாடனவைதான். அதை நான் எனது நேர்காணலில் சொல்லியிருக்கிறேன்.





Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா