Saturday, December 12, 2015

சென்னை இயற்கை பேரிடர் - சில ஹீரோக்கள் , சில ஜீரோக்கள்


ஒரு பிரச்சனையின்போதுதான் மனிதனின் இயல்புத்தன்மையை தெரிந்து கொள்ள முடியும். சென்னையில் பெய்த பெருமழை , வெள்ளத்தின் போது பலர்  ஹீரோக்களாக உருவெடுத்தனர். சிலர் ஜீரோவானார்கள்..
------------------------------------------------------------
ஹீரோக்கள்

1 பெரு மழையன்று மின்சாரம் இல்லை, செல்போன்கள் இயங்கவில்லை. ஆனாலும் நெட் வேலை செய்தது.  முக நூல் , ட்விட்டர் , வாட்சப் போன்றவற்றை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி சேதங்களை வெளி உலகுக்கு தெரியப்படுத்தி , உதவிகளை ஒருங்கிணைத்தவவர்களின் பணி என்றென்றும் நி னைவுகூரப்படும்

2 இலவச ஆட்டோக்கள் ஓட்டினர் சிலர். சிலர் அந்த வெள்ளத்திலும் ஷேர் ஆட்டோ சேவை வழங்கினர்.. ஹேட்ஸ் ஆஃப்

3 பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் இணைய வசதி இல்லாதோர். இவர்கள் வெளிஉலகை தொடர்பு கொண்டு உதவி பெற வானொலி நிலையங்கள் உதவின. சில வானொலிகள் நிவாரணப்பணிகளில் நேரடியாக பங்கேற்றன..

4  இணையம் ,  வானொலி என எதையும் பயன்படுத்தாமல் , வெளியே தெரியாமல் பெரும் உதவிகளை வழங்கினர் பலர்

5அவ்வளவு மழையிலும் மார்க்கெட் சென்று காய்கறி  வாங்கி வந்து , நியாயமான விலைக்கு விற்ற கடைக்காரர்கள் மக்கள் மனதில் இடம்பிடித்தனர்

6 அயராது பணியாற்றிய பேருந்து ஓட்டுனர்கள் ,  நடத்துனர்களை மறக்க முடியாது

7 பால் , காய்கறிகள் வாங்க செல்பவர்கள் தமக்கு மட்டும் வாங்காமல் அண்டை வீட்டினருக்கும் வாங்கி வந்தனர்

8 வந்து சேரும் நிவாரண பொருட்களை வினியோகிக்க உதவிய தன்னார்வலர்கள் சேவை குறிப்பிடத்தக்கது

9 சாலைகளில் பள்ளங்கள் இருப்பதை எச்சரித்து வாகனங்களை வழி நடத்துவதை அந்தந்த பகுதி இளைஞர்கள் முனைப்புடன் செய்தனர்

10  சாஅலைகளில் எச்சரிக்கை அறிவிப்புகளை அந்த பகுது மக்களே செய்தனர்....   அதிகாரபூர்வமற்ற இந்த எச்சரிக்கை பலகைகள் பேருதவியாக இருந்தன

-----------------------------------------

ஜீரோக்கள் 

1 . சின்னசின்ன உதவிகள் கூட பெரும் பலனை விளைவிக்கும் சூழலிலும் ஒரு சிலர் ஃபேஸ்புக்கில் எழுதுவதில் மட்டுமே ஆர்வமாக இருந்தனர்.. எரிச்சலூட்டிய போக்கு

2 ஏரி உடைவதை செல்ஃபீ எடுக்க திரண்ட கூட்டம் மிகப்பெரிய இடைஞ்சலாக இருந்தது

3 இந்த அவலத்தையும் அரசியலாக்க முயன்ற சில ஊடகங்கள்




Saturday, October 24, 2015

பிரயாணம்- அசோகமித்திரன்

மீண்டும் முனகல் ஒலி கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். என் குருதேவரின் 
கண்கள் பொறுக்க முடியாத வலியினால் இடுங்கியிருந்தன. அவரைப் படுக்க வைத்து நான் இழுத்து வந்த நீளப் பலகை நனைந்திருந்தது. ஒரே எட்டில் அவரிடம் சென்றேன். 
“இனிமேலும் முடியாது” என்றார். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். அந்த நேரத்தில் ஆகாயத்தில் ஒரு வெள்ளைக் கீறல் கூட இல்லை. ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை 
பரந்துகிடந்த மலைச்சாரலைச் சிறுசிறு மேகங்கள் அணைத்தபடி இருந்தன. நாங்கள் நடந்து வந்த மலை விளிம்பு அந்த இடத்தில் செங்குத்தாகப் பல நூறு அடிகள் இறங்கி, 
அடியில் ஒரு ஓடையைத் தொட்டது. தண்ணீர் தேங்கும் குட்டைபோல அந்த இடத்தில் ஓடை இருந்தாலும் சற்றே தள்ளி, அதுவே ஆவேசத்துடன் பாறைகள் மீது மோதிப் பள்ளத்தில் பாய்ந்து கொண்டிருந்தது. இந்தப் பக்கத்தில் மலை உயர்ந்து கொண்டிருந்தது. நாங்கள் வந்த விளிம்பு ஓரமாக இன்னும் பத்துப் பன்னிரண்டு மைல் போனால் ஒரு 
கணவாய் வரும். அதற்குப்பிறகு சிறு புதர்களால் நிறைந்த ஒரு சமவெளிப் பிரதேசம். 
அது ஒரு காட்டை எட்டிக் கரைந்து விடும். அந்தக் காட்டைத் தாண்டியவுடன் ஒரு 
சிற்றாறு. அதன் அக்கரையில்தான் முதன் முதலாக மனித வாடை வீசும் ஒரு கிராமம் - 
ஹரிராம்புகூர். ஆறு மாதங்களுக்கு முன்பு ஹரிராம்புகூரைத் தாண்டி நானும் 
குருதேவரும் நடைப் பயணமாக எங்கள் ஆசிரமத்திற்கு வந்து சேர இரண்டு பகல் 
பொழுதுகள் தான் தேவைப்பட்டன. இப்போது மலையிலிருந்து பாதி இறங்குவதற்குள் ஒரு 
பகல் போய்விட்டது. அரை மணி நேரத்தில் இருட்டிவிடும்.
    நான் என் சாக்கைப் பிரித்துப் பெரியதாக ஒரு துப்பட்டியையும், முரட்டுக் 
கம்பளியினால் தைக்கப்பட்ட நீளப் பையொன்றையும் எடுத்தேன். என் குருதேவரைப் 
போர்த்தியிருந்த கம்பளத்தையும், துணிகளையும் அகற்றிய பிறகு துப்பட்டியால் 
அவரைச் சுற்றிவிட்டு அவர் மெதுவாக அந்தக் கம்பளப் பையில் நுழைந்துகொள்வதற்கு 
உதவினேன். பை அவரது தலையையும் மூடிக்கொள்ள வசதியிருந்தாலும் முகத்தை மட்டும் 
திறந்து வைத்தேன். கம்பளி மஃப்ளர் ஒன்று இருந்தது; அதை அவர் காது முழுவதும் 
மூடியிருக்குமாறு தலையைச் சுற்றிக் கட்டிவைத்தேன். ‘சிறிது கஞ்சி தரட்டுமா?” 
என்று கேட்டேன். அவர் கண்களால் “கொடு”  என்றார். சாக்கிலிருந்து மூடியிடப்பட்ட 
சிறு தகரப் பெட்டி, இரண்டாம் உலக யுத்தத்தில் சிப்பாய்களுக்குக் கொடுத்த 
வட்டமான ஒரு தகரப் பாத்திரம், ஒரு ராணுவத் தண்ணீர் ‘பாட்டில்’ இவை மூன்றையும் 
எடுத்தேன். வட்டப் பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டுக்கொண்டு தகரப் 
பெட்டியின் மூடியைத் திறந்தேன். அதில் பாதியளவு உறையவைத்த மண்ணெண்ணெய் 
இருந்தது. நெருப்புக் குச்சியைப் பற்ற வைத்து அதன் அருகே கொண்டு போனேன். 
மண்ணெண்ணெய் குப்பென்று பிடித்துக்கொண்டு ஒரே சீராக எரிந்தது. பாத்திரத்தின் 
மடக்குப் பிடியை நீட்டிக்கொண்டு ஜூவாலையில் தண்ணீரைச் சுட வைத்தேன். ஒரு கொதி 
வந்ததும் என் முதுகுப் பையில் சிறு மூட்டையாகக் கட்டிப் போட்டிருந்த கிழங்கு 
மாவில் ஒரு பிடி எடுத்துப் போட்டேன். ஒரு குச்சி கொண்டு கிளறிக்கொண்டே 
மாவுத்தண்ணீரைக் காய்ச்சினேன். அது கூழாகிவிடக் கூடாதென்று இன்னும் சிறிது 
தண்ணீர் சேர்த்தேன். கஞ்சி தயாராயிற்று. எரிந்துகொண்டிருந்த தகரப் பெட்டியை 
அதன் மூடி கொண்டு மூடினேன். நெருப்பு அணைந்து சிறிது மட்டும் வந்தது. கஞ்சியைப் 
பாத்திரத்தில் கலக்கியே ஆற வைத்தேன். பொறுத்துக்கொள்ளக்கூடிய சூடு என்று 
தோன்றியபோது என் குருதேவரின் தலையை மெதுவாக என் மடிமேல் ஏற்றி வைத்துக்கொண்டு, 
கஞ்சியை அவருக்குப் புகட்டலானேன். இரண்டு வாய் குடித்ததும் அவர் ‘போதும்’ 
என்றார். அவருக்குச் சிறிது தெம்பு வந்திருந்த மாதிரி இருந்தது. மிச்சமிருந்த 
கஞ்சியை நான் குடித்தேன். பாத்திரத்தைக் கழுவாமல் ஒரு துணி கொண்டு துடைத்து 
வைத்தேன். தண்ணீர் ‘பாட்டி’லில் சிறிதுதான் தண்ணீர் இருந்தது. நான் கீழே இறங்கி 
ஓடையில் தண்ணீர் பிடித்துவர அடுத்த நாள் காலையில்தான் முடியும்.
    என் குருதேவர் வாயைத் திறந்தபடி படுத்திருந்தார். அவரிடம் ஒரு வருடம் யோகம் 
பயின்ற நான் வாயை எக்காரணம் கொண்டும் மூச்சு விடுவதற்குப் பயன்படுத்தாமல் 
இருக்கக் கற்றுக்கொண்டு விட்டேன். ஐம்பது, அறுபது வருட காலம் முதிர்ந்து 
யோகியாகவே வாழ்க்கை நடத்திய என் குருதேவர், அந்நேரத்தில் வாயைத் திறந்து 
வைத்துக் கொண்டும்கூட மூச்சு விடுவதற்குப் பெரும் உபாதைப்பட்டுக் 
கொண்டிருந்தார். பதினைந்து நாட்களுக்கு முன்பு திடீரென்று வயிற்றை அழுத்திப் 
பிடித்துக்கொண்டு ”அம்மா” என்று அவர் கீழே விழும்வரையில், அவர் சுவாசம் விடுவதே 
மிகவும் கூர்ந்து கவனித்தாலன்றித் தெரியாது. அப்படிப் புலனானால், ஒரு 
மூச்சுக்கு இன்னொன்று மிக நீண்ட சீரான இடைவெளிவிட்டு வருவதை உணர முடியும். 
இப்போது அவர் வாயால் மூச்சு விடுவதற்குத் திணறிக் கொண்டிருந்தார்.
    சூரியன் மலைகளின் பின்னால் விழுந்து, மலைகளே மலைகள் மீது பூதாகரமான 
நிழல்களைப் படர விட்டுக் கொண்டிருந்தன. இரவும் அந்த நிழல்களும் ஒன்றறக் கலக்கச் 
சில நிமிடங்களே இருந்தன. அதற்குள் அங்கே குச்சி குச்சியாக வளர்ந்த பரந்து 
கிடந்த செடிகளில் உலர்ந்துபோன சிலவற்றைச் சேகரிக்க நான் முனைந்தேன். எனக்குக் 
குளிரவில்லை. மேலங்கியே போட்டறியாத என் குருதேவர் இரு வாரங்களாகக் கம்பளத்தைச் 
சுற்றிக்கொண்டு கம்பளப் பையிலும் நுழைந்து கிடக்க வேண்டியிருந்தது. அவருக்குக் 
கணப்பு வேண்டும். அர்த்த ராத்திரி அளவில் பனி இறங்க ஆரம்பித்து விடும். ஆவி 
போலல்லாமல் பஞ்சுப் பொதிகளாகவும் இறங்கும். என் குருதேவருக்குக் கணப்பு 
வேண்டும். இன்னொரு காரணத்திற்காகவும் கணப்பு வேண்டும். பகலில் சில 
அடிச்சுவடுகள்தான் காணப்படும். இரவு வேளையில் அந்த அடிச்சுவடுக்குரியவை 
வந்துவிடும்.
    உலர்ந்த செடிகளை நான் வேரோடு பிடுங்கிக்கொண்டு வந்தேன். என் கைகளால் 
மார்போடு அணைத்துக்கொண்டு வரக்கூடிய அளவு இருமுறை கொண்டு வந்து சேர்ப்பதற்குள் 
எல்லாவற்றையும் கண்ணை இடுக்கிக்கொண்டு பார்க்க வேண்டியிருந்தது. என் 
குருதேவரைப் படுக்கவைத்து நான் இழுத்து வந்த பலகையுடன் ஒரு விறகுக் கட்டும் 
கட்டிவைத்திருந்தேன். அந்த விறகுத் துண்டுகள் இலகுவில் பற்றிக் கொண்டுவிடாது. 
பற்றி கொண்டாலும் ஓர் இரவு நேரத்திற்கு மேல் வராது. எங்கள் ஆசிரமத்திலிருந்து 
வருடத்திற்கு இரண்டு மூன்று முறை அத்யாவசியத் தேவைகளுக்காக ஹரிராம்புகூருக்கு 
நாங்கள் வந்து போகும் போதெல்லாம் பிரயாணத்திற்கு அந்த அளவு கட்டைக்குமேல் 
எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் இம்முறை அது போதவே போதாது என்று எனக்குத் 
தெரிந்துவிட்டது.
    நான் பிடுங்கி வந்த குச்சிகளில் ஒரு கைப்பிடியில் அடங்குபவையை எடுத்து ஒரு 
சிறு கூடாரம் மாதிரித் தரையில் பொருத்தி வைத்தேன். என் குருதேவரின் கால் 
பக்கமாகத்தான் வைத்தேன். அந்தப் பிரதேசத்தில் பறவைகளே கிடையாது. காற்று மிகவும் 
லேசாக வீசிக்கொண்டிருந்தாலும் மலைச்சாரலில் மோதிப் பிரதிபலிக்க 
வேண்டியிருந்ததால் ‘கும்’மென்ற ஒலி தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. பல நூறு 
அடிகள் கீழே, குறைந்தது அரை மைலுக்கப்பால் பிரவாகமாக மாறும் ஓடை, தொடர்ந்து 
இரைச்சல் எழுப்பிக்கொண்டிருந்தது. இந்தச் சப்தங்களும், என் குருதேவரின் 
மூச்சுத் திணறலும் தவிர வேறு எதுவும் என் காது கேட்க அங்கிருக்கவில்லை.
    பட்டாசுத் திரி போல் உலர்ந்த குச்சிகள் பற்றிக்கொண்டு எரிந்தன. அந்த 
ஜூவாலையில் நுனி மட்டும் படும்படியாக ஐந்தாறு விறகுத் துண்டுகளை ஒரு 
சக்கரத்தின் ஆரைக்கம்புகள் போல் வைத்தேன். நட்சத்திரங்கள் கூட்டம் கூட்டமாகத் 
தெரிய ஆரம்பித்துவிட்டன.
    ஒரு விறகு பற்றிக்கொண்டு எரிந்தது. நான் பாய்ந்து சென்று அதைக் கையில் 
எடுத்து மூன்று, நான்கு வீச்சுகளில் ஜூவாலை விட்டு எரிவதை அணைத்து அது வெறும் 
தணலாக எரியும்படி செய்தேன். ஒரு விறகு மட்டும் அதிகமாகப் புகைந்து 
கொண்டிருந்தது. அதைத் தரையில் ஒருமுறை தட்டிவிட்டுப் புரட்டி வைத்தேன். புகை 
சிறிது கரைந்தது. நான் என் குருதேவரின் பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டேன். 
பின்னர் எழுந்து எங்களிடமிருந்த நீண்ட மூங்கில் கழியை என் பக்கத்தில் எடுத்து 
வைத்துக்கொண்டு அமர்ந்தேன். எல்லாப் பக்கத்திலும் உறைந்துபோன பேரலைகள்போல் 
மலைச் சிகரங்கள் அந்த இருளிலும் கரும் நிழல்களாகக் கண்ணுக்குத் தெரிந்தன. 
பொழுது விடிய இருக்கும் இன்னும் பல மணி நேரத்துக்கு அவற்றைத்தான் நான் 
பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும். அமைதியாக உட்கார்ந்துகொண்டே இருந்ததில் நான் 
எனக்குள்ளே விரிந்துகொண்டிருக்கும் உணர்வு ஏற்பட ஆரம்பித்தது. ஆசிரமக் 
குடிசைக்குள் என் குருதேவர் எந்த வித உடல் இடர்ப்பாடும் இல்லாமல் படுத்திருக்கும் வேளைகளில் நான் ஒவ்வொரு நாளும் வெட்ட வெளியில் உட்கார்ந்து, இந்த விசால உணர்வைக் காத்திருந்து வரவழைத்துக்கொள்வேன். இப்போது என்னிச்சையின்றி அந்த விசால உணர்வு வர ஆரம்பித்ததும் அதை அகற்றிவிட வேண்டுமே என்ற கவலை வந்தது. அந்நேரம் தூரத்தில் இரு மலைச் சிகரங்கள் அசைந்து என் திசையில் குவிந்து வருவதுபோல் இருந்தது. என் அடிவயிற்றில் திடீரென்று பயம் எழுந்தது. உடனே மன லயம் கலைந்துபோயிற்று. மலைச் சிகரங்களைப் பார்ப்பதை விட்டு ஆகாயத்தைப் பார்த்தேன். தாறுமாறாகச் சிதறிக் கிடப்பதுப்போல் இருந்த 
நட்சத்திரங்கள் சீக்கிரத்தில் தனித்தனிக் கூட்டங்களாக் கண்ணுக்குத் தெரிய 
ஆரம்பித்தன. முதலில் அந்த உருவங்களுக்கு என் மனம் கற்பிக்கும்படியான தோற்றம் 
ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் அது மாறி ஒவ்வொரு நட்சத்திரக் குவியலும் வெவ்வேறு 
விதமான கை கால்களை நீட்டிக் கொண்டு வெறியுடன் பறந்து செல்லும் உருவங்களாகக் காண 
ஆரம்பித்தன. கண்களை மூடிக்கொண்டு மூச்சு விடுவதுகூட ஒரு தாள லயத்துடன்தான் 
வந்து கொண்டிருந்தது. அதன் மீது மனத்தைச் செலுத்தியபோதும் என் நினைவுப் பிரக்ஞை 
அமிழ்ந்து என்னை உறக்கத்துக்குக் கொண்டு செல்வதை உணர்ந்தேன். அதைத் தடுத்துக் 
கண்களைத் திறந்துகொண்டு நட்சத்திரங்களைப் பார்த்தேன். நட்சத்திரங்கள் வெவ்வேறு 
கூட்டமாகப் பிரிந்து உருவங்களாக மாறும் தருணத்தில் மலைச் சிகரங்களை நோக்கினேன். 
என்னை அறியாமல் என் கவனம் என் குருதேவரின் சுவாச ஒலியில் மீண்டும் லயிக்க 
ஆரம்பித்த போது எழுந்திருந்து உட்கார்ந்தேன். நான் எக்காரணம் கொண்டும் அன்றிரவு 
என் நினைவை இழக்கக் கூடாது. மலையைத் தாண்டி, சமவெளியைத் தாண்டி, வனத்தைத் 
தாண்டி, ஆற்றைத் தாண்டி, ஹரிராம்புகூரை அடைந்தே தீரவேண்டும். என் குருதேவருக்கு 
வைத்திய உதவி கிட்டும்படி செய்ய வேண்டும். பனி இறங்க ஆரம்பித்தது. நான் 
எங்களிடம் மிகுதியிருந்த ஒரே பழந்துண்டைத் தலையோடு போர்த்திக் கொண்டு ஒரு 
தொடையை இன்னொரு தொடை மீது இறக்கி வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன்.
    மலைச் சிகரங்களிடையே புகுந்து வீசிக்கொண்டு செல்லும் காற்றின் ஒலி 
எனக்குள்ளேயே கேட்டது. ஓடைச் சப்தமும் கேட்டது. நான் விரிந்து கொண்டிருந்தேன். 
எல்லாத் திசைகளிலுமாக விரிந்து கொண்டிருந்தேன். கணத்துக்குக் கணம் நான் 
இலேசாகிக்கொண்டே வந்து எனக்கு எடை, உருவமே இல்லை என்கிற அளவுக்கு விரிந்து, 
இன்னமும் விரிந்து கொண்டிருந்தேன். எல்லா ஒலிகளையும் கேட்க முடிந்த எனக்கு 
அவையெல்லாம் எங்கோ ஓர் அடித்தளத்தில் மட்டும் இயங்கிக்கொண்டிருந்ததாகத்தான் 
தோன்றியது. அப்போது தனியாக ஒரு ஒலி, அவையெல்லாவற்றிற்கும் மேலாக ஒன்று, 
கேட்டது. அந்த நிலையில், அந்தத் தருணத்தில் அது பொருந்திப் போகவில்லை. 
மறுபடியும் அந்த சீறல் வந்தது. நான் நொடிப் பொழுதில் என்னைக் 
குறுக்கிக்கொண்டேன். ஒரு வருடப் பயிற்சியில் மன லயத்தில் நான் அடைந்திருந்த 
தேர்ச்சி எனக்கு அப்போது வேண்டாததாக இருந்தது. அந்தச் சீறல் மீண்டும் கேட்டது. 
என் பக்கத்தில் இருந்த தடியைப் பற்றிய வண்ணம் சீறல் வந்த திசையில் பார்த்தேன். 
இரண்டு மின்மினிப் பூச்சிகள் பளிச்சிட்டன. என் கழியை வீசினேன். முதல் வீச்சில் 
அந்த இரட்டை ஒளிப்பொறிகள் சிறிது அசைந்து மட்டும் கொடுத்தன. நான் என் கையை 
எட்டி மீண்டும் கழியை வீசினேன். அது எதன் மீதோ தாக்கிற்று. மயிர் 
குத்திடக்கூடிய ஊளையொலி கேட்டது. மறுகணம் அந்த ஓநாய் பின் வாங்கி ஓடிச் 
சென்றுவிட்டது.
    என் குருதேவரின் பக்கம் பார்த்தேன். நான் வைத்திருந்த விறகுகள் அநேகமாக 
எல்லாம் எரிந்து அணையும் தறுவாயில் இருந்தன. நடு ராத்திரியைக் 
கடந்திருக்கக்கூடும். நான் தூங்கிப்போயிருந்திருக்கிறேன். தணலாக இருந்த 
விறகுகள் கூட முக்காலுக்கு மேல் சாம்பலாகிப்போயிருந்தன. அதன் பிறகுதான் ஒரு 
ஓநாய் வந்திருக்கிறது. ஒரு சாண் அளவுக்கு மிஞ்சியிருந்த ஒரு கட்டைத் துண்டை ஊதி 
ஊதி ஜூவாலை எழச் செய்தேன். அதைக் கொண்டு என் குருதேவரைத் தலையிலிருந்து கால்வரை 
பார்த்தேன். அவர் படுத்திருந்த பையில் கால் பக்கத்தில் சிறிது கிழிந்திருந்தது. 
நான் ஓரிரு நிமிஷங்கள் தாமதித்திருந்தால்கூட அந்த ஓநாய் கம்பளப் பையை இன்னமும் 
கிழித்து என் குருதேவரின் காலைக் கவ்வியிருக்கும்.
    அந்தக் கட்டை அணைந்து புகைய மட்டும் செய்தது. நான் உறைந்த மண்ணெண்ணெயை ஒரு 
விரலில் எடுத்துத் தணல் மீது வைத்தேன். கட்டை பற்றிக்கொண்டு எரிந்தது. அதை என் 
குருதேவர் முகத்தருகே கொண்டுசென்று, ”ஐயா” என்று கூப்பிட்டேன். அவர் காதில் அது 
விழவில்லை. முன்பு வாயைத் திறந்து படுத்துக்கொண்டிருந்தவர் இப்போது வாயை 
மூடிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார். நான் தூங்கிக்கொண்டிருந்த வேளையில் 
அவருக்குத் தாகம் எடுத்திருக்கக் கூடும்; பசித்திருக்கக்கூடும். நான் “ஐயா” 
என்று சொல்லி அவரைச் சிறிது அசைத்து எழுப்பினேன். அவர் அப்படியே இருந்தார். 
அவர் மூக்கருகே என் புறங்கையை வைத்துப் பார்த்தே. அடுத்தபடி என் காதை அப்படியே 
அவர் மார்பு மீது அழுத்திக்கொண்டு கேட்டேன். அங்கு காது கேட்பதற்கு 
ஒன்றுமில்லை.
    குருதேவரின் சாவு அதிர்ச்சியைத் தரவில்லை. அப்பழுக்கில்லாத தேக நிலை உடைய 
அவர் எப்போது நீர் விலகிக் கொண்டிருக்கும்போது கூடத் தன்னை நகர்த்திக்கொள்ள 
இயலாத அசக்தி அடைந்திருந்தாரோ அப்போதே நான் எதற்கும் என் மனத்தைத் தயார் 
செய்துகொண்டிருந்தேன். என் யோக சாதனை விடுபட்டுவிடும். அவரைத் தேடிக் 
கண்டுபிடித்து, அவர் என்னை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு மூன்றாண்டு காலத்திற்கும் 
மேலாயிற்று. இனி இன்னொரு தகுதி வாய்ந்த குருவை அடைய எவ்வளவு ஆண்டுகள் 
பிடிக்குமோ தெரியாது. வேறு குரு கிடைப்பாரா என்பதே சந்தேகம். எனக்கு நிர்ணயம் 
செய்யப்பட்டதற்கிணங்கத்தான் எனக்கு வாய்க்கும். ஹரிராம்புகூரை அடைவதற்குள் என் 
குருதேவருக்கு ஒன்றும் நேர்ந்துவிடக் கூடாது என்பதே அப்போது என் பிரார்த்தனை. 
கடைசிச் சுவாசம் என்று தோன்றும்போது சிறிது பசும்பாலை வாயில் ஊற்ற வேண்டும் - 
இதை வெகு நாட்கள் முன்பே என் குருதேவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், அன்று 
அந்தப் பேச்சே பொருத்தமில்லாததாக இருந்தது. ‘என் போன்றவர்களை ஆறடி குழி 
தோண்டிப் புதைக்க வேண்டும்’ என்று அவர் சொன்னதும் அபத்தமாகப்பட்டது. அன்று நான் 
பசும்பால் விடத் தவறிவிட்டேன். ஆறடி குழி தோண்டியாவது புதைக்க வேண்டும். அதற்கு 
எப்படியும் இந்த மலைப்பாறையிடத்திலிருந்து சமவெளியருகில் இறங்கியாக வேண்டும். 
ஆறடி தோண்டி, வெறும் மண்ணை மட்டும் போட்டு மூடினால் போதாது. பெரிய பெரிய 
கற்களையும் போட வேண்டும். ஒரு ஓநாய் அவரை முகர்ந்துவிட்டது. அடுத்து, ஒரு 
ஓநாய்ப்படை வருவதற்கு அதிக நேரம் பிடிக்காது.
    அப்போது அரைகுறைச் சந்திரன் வந்துவிட்டான். நான் என் குருதேவரைப் 
போர்த்திருயிருந்த துணிகள், கம்பளப்பை முதலியவற்றை மெதுவாக உருவி எடுத்தேன். 
என் குருதேவரின் முகம் அற்புதமான அமைதியுடன் காணப்பட்டது. சுவாசத்திற்கும், 
இதயத் துடிப்பிற்கும் நான் தேடியிராவிட்டால் அவர் தூங்கிக்கொண்டுதான் 
இருக்கிறார் என்று நினைக்கும்படியான தோற்றம். ஒரு பழந்துணியைக் கிழித்து 
அவருடைய கால் கட்டை விரல்களைச் சேர்த்துக் கட்டினேன். அதே போல் கைகள் 
இரண்டையும் பிணைத்தேன். ஒற்றை வேஷ்டி கொண்டே அவரைத் தலை முதல் கால்வரை சுற்றி, 
கம்பளப் பைக்குள் நுழைத்து, பையின் வாயை இழுத்துக் கட்டினேன். மெதுவாகத் தணல் 
எரியும்படி செய்துகொண்டு பொழுது விடிவதற்காகக் காத்திருந்தேன். 
முழங்கால்களுக்கிடையில் தலையைப் புதைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். கிழக்கு 
வானத்தில் வெளிர்ச்சாயம் தோன்றுவதற்குள் என்னைச் சுற்றி இரண்டங்குல 
உயரத்திற்குப் பனி உதிர்ந்திருந்தது. அந்த அரை வெளிச்சத்தில் நான் மீண்டும் என் 
குருதேவர் கிடந்த பலகையை இழுத்து நடக்க ஆரம்பித்தபோது பின்னால் ஒரு முறை 
பார்த்ததில் தூரத்தில் ஒரு உருவம் அசைவதை உணர முடிந்தது. நான் இரண்டாம் முறை 
திரும்பிப் பார்த்தபோதும் அது அதே தூரத்தில் வந்துகொண்டிருந்தது. இம்முறை அந்த 
ஓநாய் முனகிற்று.
    இறந்தவர்கள் எப்படி எடை கூடக்கூடும் என்று தெரியவில்லை. என் குருதேவரை, 
அவர் சுவாசம் இயங்கிக்கொண்டிருந்தபோதைவிட இப்போது இழுத்துப் போவது கடினமாகிக் 
கொண்டிருந்தது. காலையில் சற்று நேரத்திற்குத் தலையில் பனியிருந்தபோது பலகை என் 
பின்னால் வழுக்கிக்கொண்டு வந்தது. ஆனால், உச்சி வேலை நெருங்குவதற்குள் அங்கு 
பனியும் பெய்திருக்குமா என்று தோன்றுமளவுக்கு எல்லாம் உலர்ந்துவிட்டது. இப்போது 
நான் இறங்குமுகமாக இருந்தேன். பல சமயங்களில் பலகையை இழுத்து வருவதற்குப் பதில் 
பின்னாலிருந்து தள்ளி நகர்த்தி வந்தேன். கனம் அதிகரித்துக்கொண்டே வந்த அந்தச் 
சுமை பள்ளத்தில் சரிந்து விழுந்துவிடாமல் பாதுகாத்துக்கொண்டு போவது மிகவும் 
சிரமமாக இருந்தது. முன்னிரவு என் குருதேவர் குடித்து மிஞ்சியிருந்த கஞ்சியைச் 
சாப்பிட்ட பிறகு நான் எதுவும் உண்ணாமலிருந்தபோதும் எனக்கு பசி எழவில்லை. 
இடுப்பும், தோளும் மட்டுமே வலித்தன. நான் எங்கும் நிற்கவில்லை. மறுபடியும் இரவு 
வருவதற்குள் மலைப் பிரதேசத்தைக் கடந்து சமவெளியை அடைந்துவிட வேண்டும் என்ற ஒரே 
நோக்கமாக இருந்தேன். என் மனத்திடத்திற்கு உடல்திடம் முடிந்தவரையில் 
ஈடுகொடுத்தது. ஆனால் அது போதவில்லை. நான் அடிமேல் அடி எடுத்து வைத்துத்தான் 
செல்ல முடிந்தது. நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மலை நிழல் நீண்டுகொண்டு 
போவதை உணர முடிந்தது. இன்னும் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் வெளிச்சம் 
இருந்தால் எனக்குப் போதும் ஆனால், எனக்கு அது கிடைக்கத் தவறவிட்டு மீண்டும் 
கள்ளிகளுக்காக அலைந்து திரட்டி வைப்பதும் அறிவற்றது. சற்றும் எதிர்பார்க்க 
முடியா வண்ணம் பல இடங்களில் பாறை வெடித்துப் பல நூறு அடிகளுக்குச் செங்குத்தாக 
இறங்கியது. அந்தப் பிளவுகளின் அடியிலும் செடி கொடிகள் வளர்ந்து படர்ந்திருந்தன. 
அந்த ஒரு பகல் நேரப் பிரயாணத்திலேயே நான் அந்தப் பள்ளங்களில் தவறிப்போய் 
விழுந்த பல மிருகங்களின் சின்னங்கள் - அழுகி, உலர்ந்து, பூச்சி அரித்து, 
காற்றில் சிதறிப்போன சடலங்கள் - கிடப்பதைக் கண்டேன்.
    அதிகரித்துவரும் உடல் சோர்வைக் குறைந்துவரும் வெளிச்சம் சரிக்கட்டி வந்தது. 
வெளிச்சம் இம்மியளவு குறைவதையும் என் உடல் முழுதாலும் என்னால் உணர முடிந்தது. 
என் உடல் யத்தனம் அதிகரித்தபோதிலும் என் பிரயாணத்தின் வேகம் வெகுவாக 
அதிகரிக்கவில்லை. நடப்பதென்றில்லாமல் நகர்வதற்கே மிகுந்த பிரயாசை 
எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. என் கண் முன்னால் ஆயிரக்கணக்கான பூச்சிகள் 
பறப்பதுபோலத் தெரிய ஆரம்பித்துவிட்டது. இன்னமும் இரண்டு மணி நேரப் பிரயாணம் 
இருந்தது. நிமிஷங்கள் செல்லச் செல்ல வெளிச்சம் மறைவதற்குள் நான் மலைப் 
பிரதேசத்தைக் கடந்துவிடுவேன் என்ற நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது. இன்னொரு 
இரவு பனி விழும் மலைகளுக்கிடையில் நான் தங்க வேண்டும். பகலில் என் கண்களுக்கு 
ஒன்றும் படவில்லை. ஆனால் அந்த உணர்வு என்னுடன் இருந்துகொண்டேயிருந்தது. அந்த 
ஓநாய் என்னுடைய ஒவ்வொரு அசைவையும் அறியும். அது வரும்போது தனியாக வராது.
    கண்ணுக்கெட்டும் தூரத்தில் சமவெளி தெரிந்தது. ஆனால் அதை நம்பி நான் 
பிரயாணத்தைத் தொடர முடியாது. என் குருதேவரின் சடலம் கிடந்த பலகையை அப்படியே 
தழைத்துக் கீழே வைத்துவிட்டு மீண்டும் கள்ளிகலுக்காக அலைந்தேன். நேற்று கிடைத்த 
அளவு கிடைகக்வில்லை. நேற்றைவிட இன்று நான் ஒரு நாள் வயது கூடுதலானவன்; உடல் 
களைப்பும் பலஹீனமும் அதிகரித்தவன். கிடைத்ததை வைத்து நெருப்புப் பற்றவைத்தேன். 
நான்கே விறகுக் கட்டைகள் பாக்கியிருந்தன. ஒவ்வொன்றாகப் பற்ற வைத்துக்கொண்டு, 
தணலாக எரியும் விறகுடன் என் குருதேவரின் சடலத்தைச் சுற்றிச் சுற்றி 
வந்துகொண்டிருந்தேன். இன்றும் நான் தங்கிய இடத்திற்குப் பக்கத்திலேயே 
செங்குத்தாகப் பள்ளம் இறங்கியது. அங்கு ஓடையில்லை - அது எங்கோ வேறு திசையில் 
சென்றுவிட்டது. இந்தப் பள்ளத்தின் அடியில் புதர்தான் மண்டியிருந்தது. நேற்றுப் 
பிரயாணத்தை நிறுத்தியபோது எனக்குப் பீதி எழவில்லை. என் குருதேவர் நேற்றும் 
உடலால் எனக்கு எவ்வித உதவியும் செய்ய இயலாதவர். அந்த விதத்தில் நேற்றும் நான் 
தனியன்தான். ஆனால் நேற்று இல்லாத பீதி இன்று என் அறிவைச் 
சுருக்கிக்கொண்டிருந்தது. என் வாழ்க்கையின் சாதனைகள், லட்சியங்கள், சிந்தனை 
அடிப்படைகள், ஆசைகள், உணர்ச்சிகள் எல்லாம் ஆவியாகப் பறந்துபோய், என் 
குருதேவரின் சடலத்தை முழுமையாகச் சமவெளியில் அடக்கம் செய்துவிட வேண்டும் 
என்பதைத் தவிர வேறு இலக்கு ஒன்றும் இல்லாமல் இருந்தேன். இன்னொரு இரவுப் பனி 
உயிரற்ற சடலத்தை ஒன்றும் செய்துவிட முடியாது. ஆனால் என் பற்களிலும், 
எலும்புகளிலும்கூட இழையோடும் பீதியுடன் இருந்தேன். என் உடலெல்லாம் காதாகக் 
கேட்டுக்கொண்டிருந்தேன். நன்றாக இருட்டிய பின் காற்றோசையோடு வேறொன்றும் கேட்க 
நான் அதிக நேரம் காத்திருக்க நேரவில்லை. மெல்லிய சீறலுடன் பல ஜதை மின்மினிப் 
பூச்சிகள் என்னை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தன.
    நான் ஒரு கையில் கொள்ளிக்கட்டையையும், இன்னொன்றில் மூங்கில் கழியும் 
எடுத்துக் காத்திருந்தேன். அந்த இருட்டிலும் என் கண்கள் ஓரளவு பார்க்கத் 
தொடங்கிவிட்டன. ஓநாய்கள் கூட்டமாக வந்தாலும் பதினைந்து இருபது அடி 
தூரமிருக்கையில் பிரிந்து எங்களைச் சுற்றிவர ஆரம்பித்தன. ஒவ்வொன்றும் உறும 
ஆரம்பித்து, சிறிது நடந்து, பின்வாங்கி, ஒருமுறை சீறி, முன்னேறி, பின்வாங்கி, 
எங்களைச் சுற்றியவண்ணம் இருந்தது. நிமிஷங்கள் யுகமாக நகர்ந்தன. ஓநாய்கள் 
எங்களைச் சுற்றும் வட்டத்தின் விட்டம் அங்குல அங்குலமாகக் குறைய ஆரம்பித்தது. 
ஐந்தாறு ஓநாய்கள் முழு வளர்ச்சி பெற்றவை. அவையெல்லாம் வாலைப் 
பின்னங்கால்களுக்கிடையில் பொருத்தி வைத்துக்கொண்டு எங்களைச் சுற்றின. நான் என் 
குருதேவரின் தலைப் பக்கமாக நின்று கொண்டு, நாற்புறமும் மாறி மாறி என் 
கொள்ளிக்கட்டையை ஆட்டியவண்ணம் இருந்தேன். பகலெல்லாம் ஓநாய்களைக் கண்ணெதிரே 
பாராமல், ஆனால் அவை எங்களைத் தாக்க எங்கோ தூரத்தில் பின்தொடர்ந்து வருகின்றன 
என்ற உணர்வே என்னைப் பெரும் பீதியில் விறைப்பாக இருக்கச் செய்தது. இப்போது 
அவற்றை நேரே கண்டவுடன் என் ஆழ்ந்த அமைதி ஏற்பட்டது. அந்நேரத்தில் எனக்குச் 
சிந்தனைகளே அவ்வப்போது எழாமல் போவதையும் உணர்ந்தேன்.
    நான் மிகவும் நிதானமாக என் கைகளை அசைத்துக்கொண்டிருந்தேன். ஓநாய்கள் எங்களை 
இன்னமும் சுற்றிச் சுற்றி வந்தவண்ணமிருந்தன. நான் முதலில் தாக்க வேண்டும் என்று 
அவை காத்திருந்ததுபோலத் தோன்றிற்று. எனக்கும் அந்த ஓநாய்க் கூட்டத்துக்குமிடையே 
எழுந்திருக்க ஒரு இக்கட்டு நிலையை இருவரும் தீவிரப்படுத்தாமல் இருந்தால் இரவின் 
எஞ்சிய நேரம் அப்படியே கழிந்துவிடும் என்றுகூடத் தோன்றிற்று. பகல் என்று 
ஏற்பட்டவுடன் ஓநாய்கள் பின்வாங்கிவிடக்கூடும்.
    நான் நிச்சயமாக இருந்தேன். அந்த ஓநாய்களின் அடக்கமான உறுமல்கூட அப்போது 
அப்பிரதேசத்தின் அமைதியோடு பொருந்திவிடக் கூடியதாகவே தோன்றியது. தாமாகவே 
தங்களுக்குள்ளாக ஏற்படுத்திக்கொண்ட ஒரு நியதிக்கு அவை தம்மைக் 
கட்டுப்படுத்திக்கொண்டு அதிலிருந்து இம்மியளவு  பிறழத் தயாராக 
இல்லாதிருப்பதுபோல எங்களை வலம் வந்துகொண்டிருந்தன. எனக்கு அந்த ஓநாய்கள் மீது 
பெரும் பரிவு ஏற்பட்டது. அவற்றைக் காலம் காலமாக நான் அறிந்து பழகியதுபோல ஒரு 
உணர்வு ஏற்பட்டது. ஒரு நிலையில் நானே அவற்றுடன் சேர்ந்து என்னையே சுற்றி 
வருவதுபோலத் தோன்றிற்று. அப்போது என் கையிலிருந்த கொள்ளிக் கட்டை சட்டென்று 
அணைந்துவிட்டது. ஜூவாலை எழுப்ப அதை நான் வேகமாக வீசினேன். அப்போது, அந்த மலைப் 
பிரதேசமே மூச்சு விடுவதை அப்படியே நிறுத்திக்கொண்டு ஸ்தம்பித்துக் 
கிடப்பதுபோலத் தோன்றிற்று. என் கைக்கட்டை முழுவதும் அணைந்துவிட்டது. அதைப் 
போட்டு விட்டுக் கீழே தணல் நுனிகளுடன் கிடந்த கட்டைகளில் ஒன்றைப் பொறுக்கி 
எடுக்க நான் தீயின் பக்கம் குனிந்தேன். ஒரு அரைக் கணம் ஓநாய்கள் உறுமுவதுகூட 
நின்றுவிட்டது. அடுத்துப் பேரிரைச்சலுடன் பெரிய ஓநாயாக ஒன்று என் மேல் 
பாய்ந்தது. என் முகத்திற்கு நேரே பயங்கரமாக விரிந்துவந்த ஓநாயின் வாயில் என் கை 
விறகுக் கட்டையைத் திணித்தேன். அது ஊளையிட்டுக் கொண்டு பின் வாங்கிற்று. அந்த 
நேரம் வேறு சில ஓநாய்கள் என் குருதேவரின் உடலைப் போர்த்தியிருந்த கம்பளப் 
பையைக் கடித்துக் கிழிக்க ஆரம்பித்தன.
    அதுவரை நிலவிய அமைதி, நியதிக்குட்பட்ட கட்டுப்பாடு எல்லாம் நொடிப் பொழுதில் 
சிதறுண்டுபோயின. என்னை ஒவ்வொரு ஓநாயாகத்தான் தாக்கின. ஆனால் உயிரற்றுக் கிடந்த 
என் குருதேவரின் சடலத்தின் மீதே கூட்டமாகப் பாய்ந்தன. நான் என் மூங்கில் 
கழியைச் சக்கரமாகச் சுற்றினேன். ஒவ்வொரு முறை என் கழி எதையாவது தாக்கும்போது 
என் தோள் பட்டை விண்டுவிடுவது போல நான் எதிரடி உணர முடிந்தது.
    இப்போது ஓநாய்கள் என் மீதும் இரண்டு மூன்றாகத் தாக்கின. அந்த நேரத்தில் 
எங்களுக்குள் இருளே நிலவாதது போல் இருந்தது. என் ரத்தமும் ஓநாய்களின் ரத்தமும் 
தீப்பற்றி வெடித்த வாணம் போல் எங்கள் மேலேயே சிதறி, சுற்றுப்புறமெல்லாம் சிதறி 
விழுந்தன.
    ஓநாய்கள் உறுமிக்கொண்டு பாய்ந்து வந்து, பிடுங்கி, அடிபட்டு, பின்வாங்கி, 
மீண்டும் பாய்ந்த வண்ணமிருந்தன. அப்போது இன்னொன்றையும் உணர்ந்தேன். என் 
சுயநினைவில் கற்பனை செய்தும் பார்க்க முடியாத ஒலிகளை, உரத்த ஒலிகளை, நான் 
எழுப்பிக்கொண்டிருந்தேன். அந்தப் போரில் நானும் ஒரு பயங்கர விலங்காக 
மாறிப்போயிருந்தேன். ஒரு நிலையில் நாங்கள் இரு தரப்பினரும் சம வலிமை 
பெற்றவர்களாகத் தோன்றினோம். ஓநாய்களுக்குள் ஓநாயாக நான் இருந்தேன்.
    ஆனால் அது நீடிக்க முடியவில்லை. ஓநாய்ப் படையின் பெரும்பகுதி அடிபட்டு, 
ஊனமுற்று ஓடிப்போய்விட்டது. மூன்றுதான் எஞ்சியிருந்தன. என் மேலங்கி பல 
இடங்களில் கிழிந்து ரத்தக் கறையோடு தொங்கிக் கொண்டிருந்தது. என் குருதேவரின் 
சடலம் வைக்கப்பட்ட கம்பளப் பை எப்போதோ துண்டு துண்டுகளாக்கப்பட்டு விலகிக் 
கிடந்தது.
    ஒரு ஓநாய் என் கழியின் வீச்சில் படாமல் என்னைப் பல திசைகளிலிருந்து 
தாக்கிக்கொண்டிருந்தது. நான் தழைய வீசினால் அது எகிறிக் குதித்தது. நான் மேலாக 
வீசினால் அது தலையைத் தரைமட்டத்துக்குத் தாழ்த்திக் கொண்டது. அதை ஒழித்துவிட 
என் வெறியெல்லாம் சேமித்து நான் போரிட்டுக்கொண்டிருந்தேன். அது என்னுடைய 
ஒவ்வொரு அசைவையும் உணர்ந்ததாக இருந்தது. ஒரு இரட்டைச் சகோதரனிடம் ஏற்படும் 
அன்புடனும், குரோதத்துடனும் நான் அதைத் தாக்கினேன். நான் இருந்த இடம், என் 
குருதேவரின் சடலம், மற்ற ஓநாய்கள் ஆகிய எல்லாவற்றையும் மறந்து அந்த ஒரு ஓநாயைத் 
துரத்தி ஓடினேன். அது பெரியதாக ஊளையிட்டுக்கொண்டே இருட்டில் ஓடி மறைந்தது. அது 
ஊளையிடுவதாகக் கேட்கவில்லை. ஏதோ வெற்றி முரசு முழக்குவதுபோலச் சீறிவிட்டுத்தான் 
சென்றிருந்தது. மற்ற இரு ஓநாய்கள் என் குருதேவரின் சடலத்தைக் கவ்வி 
இழுத்துக்கொண்டிருந்தன. “ஐயோ” என்று நான் அலறிக்கொண்டு அவைமீது பாய்ந்தேன். 
அதற்குள் என் குருதேவரின் சடலத்துடன் அவை பள்ளத்தில் விழுந்துவிட்டன. அதுவரை 
என் கண்ணுக்கு எல்லாமே வெட்ட வெளியாகத் தெரிந்தது தடைப்பட்டுவிட்டது. “ஐயோ, 
ஐயையோ!” என்று அலறிக்கொண்டு நான் பாய்ந்தேன். காலில் ஏதோ தடுக்கிற்று - என் 
குருதேவரை நான் கிடத்தி இழுத்து வந்த பலகையாகத் தான் இருக்க வேண்டும். நான் 
விழுந்தேன். நான் தரையை அணுகுவதற்குள் என் நினைவு நீங்கிவிட்டது.
    நான் மீண்டும் விழித்துக்கொண்டபோது என் மீது லேசான பனிப்போர்வை இருந்தது. 
காலைச் சூரியனின் ஒளிக்கதிர்கள் நேரடியாக என் கண்களைத் தாக்கின. அப்படியே 
படுத்திருந்தவன் ஒரு குலுக்கலுடன் எழுந்தேன். பஞ்சுபோலப் பனி சிதறிற்று. நான் 
கிடந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளியிருந்த பள்ளத்தில் எட்டிப் பார்த்தேன். 
விளிம்பு ஓரமாக இறங்கி, ஓட்டமும் நடையுமாகப் பள்ளத்தின் அடியை அடைந்தேன். 
ஓநாய்கள் என் குருதேவரின் வயிற்றுப் பாகத்தைக் குதறித் தள்ளியிருந்தன. தலையையே 
காணோம். உடலெல்லாம் இரத்தம் வெளிப்பட்டு உறைந்திருந்ததுபோல இருந்தது. கைக் 
கட்டை விரல்களைக் கட்டியிருந்த துணி அறுபட்டுக் கிடந்தது. ஒரு ஓநாயின் கால் 
அதன் தோள்பட்டையோடு பிய்த்து எடுக்கப்பட்டு, என் குருதேவரின் வலது கைப்பிடியில் இருந்தது.

Tuesday, October 6, 2015

எழுத்தாளர் இமையம் - நேர்காணல்

சூரிய கதிரில் ( செப்டம்பர் 2015 )வெளியான அண்ணன் இமையம் அவர்களின் பேட்டி.....

பேட்டி எடுத்தவர் - உங்கள் பிச்சை

 
எழுத்தாளன் உருவாகிறானா... உருவாக்கப்படுகிறானா... உங்களை எழுத தூண்டியது எது...      



 இரண்டும்தான் நிகழ்கிறது. இரண்டில் ஒன்று மட்டுமே நிகழ்ந்தால் ஒருவர் முழுமையான எழுத்தாளராக மிளிர முடியாது. என்னை எழுதத் தூண்டியது, எழுதுவதற்கு சிந்திக்கத் தூண்டியது நிகழ்கால சமூகமும், அதனுடைய வாழ்க்கை முறையும்தான். சமூகத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள், பொருளாதார சுரண்டல்கள், உழைப்புச் சுரண்டல்கள், சாதிய மேலாதிக்கம், உலகமயம், கிராமவாழ்வு அதனுடைய தற்சார்பு தன்மையிலிருந்து விடுபடுவது போன்ற பல சமூகக் காரணிகள்தான் எழுதத் தூண்டுகின்றன. கடவுளின் அருளால் நான் எழுதவில்லை. நான் வாழ்கிற நிகழ்கால சமூகமும், அதனுடைய இயங்கியல் போக்கும், சிக்கல்களும்தான் என் எழுத்திற்கான அடிப்படை, ஊற்றுக்கண்.


 இலக்கியம் என்பதில் கற்பனை வேண்டும் என்பது ஒரு பார்வை... தாம் பார்த்த உண்மைகளை அப்படியே பதிவு செய்ய வேண்டும் என்பது சிலர் கருத்து... உங்க்ள் பார்வை ?


           நிஜமும் புனைவும் கலந்ததுதான் இலக்கியப் படைப்பு. சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே எழுதினால் அது அறிக்கை. புள்ளி விபரத் தொகுப்பு. அறிக்கையை, புள்ளிவிபரங்களை, தகவல்களைத் தொகுத்துத் தருபவன் வரலாற்று ஆய்வாளன். இலக்கியவாதி அல்ல. படைப்பாளி அல்ல. குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட சமூகம், என்னென்ன விதமாக வாழ்ந்தது, வாழ்வதற்கு அச்சமூகம் மேற்கொண்ட சமூக ஒழுக்கவியல், அறவியல், வாழ்வியல் பண்புகள், மதிப்பீடுகள், நடைமுறைகள் என்ன என்பதை சொற்களின் வழியே உருவாக்கிக்காட்டுகிறவன், சொற்களில் சேமித்து வைக்கிறவன் எழுத்தாளன். வெறும் உண்மையை மட்டுமே எழுதுவது இலக்கியப் படைப்பல்ல. வெறும் புனைவை மட்டுமே எழுதுவதும் இலக்கியப் படைப்பு அல்ல. உண்மையும் புனைவும் கலந்திருப்பதுதான் இலக்கியம். வெறும் உண்மை என்பது வேறு. கலை என்பது வேறு.



 மேஜிக்கல் ரியலிசம் , சர்ரியலியசம் , ரியலிசம் போன்றவை குறித்து ?

             இலக்கியப் படைப்புகளில் கொள்கைகள், கோட்பாடுகள், நம்பிக்கைகள், இசங்கள் இரண்டாம்பட்சமானவை. ஒருவகையில் அவசியமற்றவை. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கொள்கைகள், கோட்பாடுகள், தத்துவங்கள், இசங்கள் வருகின்றன. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவை போய்விடுகின்றன. அந்தந்த காலத்தில் உருவாகும் கொள்கைகள், கோட்பாடுகள், தத்துவங்கள், இசங்களுக்கேற்ப இலக்கியப் படைப்புகளும் சிலரால் உருவாக்கப்படுகின்றன. தத்துவங்கள் இசங்கள் மாறும்போது, அதை முன்னிருத்தி எழுதப்பட்ட இலக்கியப் படைப்புகளும் அந்த காலத்தோடு செத்துவிடுகின்றன. எக்காலத்திற்குமான கொள்கைகள், தத்துவம் என்று எதுவுமில்லை. காலத்திற்கு காலம் மாறும். ஆனால் இலக்கியப் படைப்பு அப்படி அல்ல. காலத்திற்கு காலம் மாறாது. கொள்கைக்கு கொள்கை மாறாது. கொள்கைகளை, கோட்பாடுகளை முன்னிருத்தியோ, அவற்றைப் பிரச்சாரம் செய்யும் விதமாகவோ எழுதப்படுபவை இலக்கியமல்ல. பிரச்சாரம் செய்வது இலக்கியத்தின் அடிப்படை நோக்கமல்ல.

கோவேறு கழுதைகள் வெளி வந்த போது மிகப்பெரிய சர்ச்சைகள் ஏற்பட்டன... இன்று திரும்பி பார்க்கையில் என்ன தோனறுகிறது 


            இலக்கியப் படைப்பு பரபரப்புக்காக எழுதப்படுவதல்ல. பரபரப்பை உருவாக்குபவன் படைப்பாளியுமல்ல. பரபரப்புக்காக எழுதப்படும் படைப்பு பரபரப்பு முடிந்ததும் செத்துவிடும். நான் பரபரப்புக்காக எழுதுகிறவனல்ல. கோவேறு கழுதைகள் நாவல் வெளிவந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் நாவல் இன்னும் வாங்கப்படுகிறது. வாசிக்கப்படுகிறது. விமர்சிக்கப்படுகிறது. ஆனால் அந்த நாவல் குறித்து திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சர்ச்சைகள், வீண்வாதங்கள், பழிகள், பரபரப்புகள் எல்லாம் உருவான வேகத்திலேயே செத்துவிட்டன. படைப்புதான் நிற்கும். பரபரப்பு அல்ல. சர்ச்சைகள் அல்ல. அப்போதும் சரி, இப்போதும் சரி நான் எந்தவிதமான வீண்சர்ச்சைகளிலும் ஈடுபட்டதில்லை. சர்ச்சைகளில் ஈடுபடுவது, சர்ச்சைகளை உருவாக்குவது எழுத்தாளனின் வேலை அல்ல என்பதால் நான் அப்போது எந்த சலனமும் அடையவில்லை. சர்ச்சைகளின் வழியே ஒரு படைப்புக்கு எந்த மதிப்பையும் ஏற்படுத்திவிட முடியாது. படைப்பின் தரம்தான் அதற்கான மதிப்பையும் வாழ்வையும் தீர்மானிக்கிறது.

குறிப்பிட்ட இன , மத அடையாளங்களுக்குள் சிக்க விரும்பாதவர் நீங்கள்... இதனால் உங்களை எந்த தரப்பும் நம் ஆள் என ஏற்க முடியாத நிலை வரலாம் அல்லவா...


             ஆதரவாக எழுதுவது, எதிராக எழுதுவது என்பது என் எழுத்தின் நிலைப்பாடு அல்ல. உண்மையை எழுதுவது, அதை சமரசமின்றி, சார்பின்றி எழுதுவதுதான் என் நிலைப்பாடு. இதுவரை அப்படித்தான் எழுதிவந்திருக்கிறேன். இனியும் அப்படித்தான் எழுதுவேன். நான் ஒரு சாதியில் பிறந்துவிட்ட காரணத்தால் என் எழுத்து, குறிப்பிட்ட சாதி சார்ந்துதான் இருக்கும், சுயசாதி சார்ந்த பெருமைகளை, இழிவுகளையே பேசும் என்று நம்புவதும், முத்திரை குத்துவதும், அடையாளப்படுத்துவதும் இழிவான செயல். அடிப்படையில் நிஜமான எழுத்தாளன் சாதிக்கு, சாதிய மனோபாவத்திற்கு, சாதிய மேலாதிக்கத்திற்கு, சாதியமைப்புகளை கட்டிக்காக்கும், பாதுகாக்கும், வளர்க்கும் எல்லாவிதமான கலாச்சார பண்பாட்டுக்கூறுகளுக்கும் எதிரானவன். சாதி கூடாது, சாதி சார்ந்த இழிவு கூடாது என்று எழுதுகிறவர்களே சாதி சார்ந்த அடையாளத்தை விரும்புவது. அதை பெருமையாக பேணுவது ஏற்புடையதல்ல. சாதிசார்ந்த அடையாளங்களுடன் எழுதப்படுவதும், படிக்கப்படுவதும், கொண்டாடப்படுவதும், சாதி சார்ந்த பண்புகளை மேலும் இறுக்கமாக்கிவிடும். அக்காரியத்தை இலக்கியப் படைப்பு செய்யக்கூடாது. படைப்பாளி செய்யக்கூடாது. சாதியை வளர்ப்பதற்காக இலக்கியப் படைப்புகள் எழுதப்படுவதில்லை. பிற்போக்குத்தனங்களுக்கு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராகத்தான் இலக்கியம் எழுதப்படுகிறது.

செடல் நாவல் உருவான பின்னணி குறித்து ?

,             நான் எழுதிய நாவல்களிலேயே மிகவும் முக்கியமானது 'செடல்'. தமிழகத்தில் இசைவேளாளர் இனத்தை சேர்ந்தவர்களைத்தான் கோவில்களுக்குப் பொட்டுக்கட்டி விடுவார்கள் என்ற சமூக நம்பிக்கையை, செடல் பொய்யென நிரூபித்தது. தாழ்த்தப்பட்டவர்களிலேயே கடைநிலையில் இருக்கக்கூடிய - தெருக்கூத்து ஆடுவதைத் தொழிலாகக்கொண்ட இனத்துப்பெண்ணையும் பொட்டுக்கட்டுவார்கள் என்ற நிஜமான வரலாற்றை சொன்ன நாவல். ராஜாக்கள் கட்டிய பெரியபெரிய கோவில்களில் மட்டும்தான் பொட்டுக்கட்டுவார்கள் என்பது மட்டுமல்ல சாதாரண கிராமத்துக் கோவில்களுக்கும் பொட்டுக்கட்டிவிடுவார்கள் என்ற உண்மையை சொல்கிறது. சட்டரீதியாக தமிழகத்தில் பொட்டுக்கட்டும் மரபு ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை பொய்யென நிரூபித்தது மட்டுமல்ல, அது இன்னும் தமிழக கிராமங்களில் நடைமுறையில் இருக்கிறது என்பதை சொன்னது செடல். அதோடு சாதாரண மக்களுடைய கலையாக இருந்த தெருக்கூத்துப் பற்றியும், அதனுடைய அழகியல் கூறுகளையும், மேன்மைகளையும் கலைத்தன்மையோடு விவரிக்கிறது நாவல். சிலப்பதிகாரத்திற்குப் பிறகு தமிழில் கூத்துக் கலையின் அடவுமுறைகளைப்பற்றி விரிவாக பேசிய இலக்கியப் படைப்பு செடல் நாவல்தான். செடல் என்னுடைய ஊர்க்காரர். என்னுடைய இளமைக்காலத்திலிருந்து அவருடைய நாடகங்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு கரிநாள் அன்று "பொங்க காசு கொடுங்க" என்று கேட்டு வந்தபோதுதான் செடலைப்பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்தது.

எங்கதே நாவல் உங்க்ள் நாவல்களில் சற்று வித்தியாசமானது.. ஆனால் முழுக்க முழுக்க ஆண் பார்வையிலான நாவல் என்ற விம்ர்சனம் குறித்து ?

            சங்க காலத்திலிருந்து இன்றைய காலம்வரை காதலால், காதலின் ஏமாற்றத்தால், காதல் கைக்கூடாததால், பெண்கள்தான் ஏங்குவார்கள், அழுவார்கள், காத்திருப்பார்கள் என்று இலக்கியங்களின் வழியே கற்பிக்கப்பட்டிருக்கிறது. அதை சமூகமும் முழுமையாக நம்பி வந்திருக்கிறது. இலக்கியங்கள் உருவாக்கிக்காட்டுகிற துயரமும், சமூக நம்பிக்கையும் முழுஉண்மை அல்ல என்பதை சொல்கிறது          "எங் கதெ" நாவல். காலம்காலமாக இலக்கியப் படைப்புகள் கட்டமைத்த மதிப்பீட்டிற்கு, சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் நம்பிக்கைக்கு எதிராக எழுதப்பட்டிருப்பது "எங் கதெ". மரபை உடைத்திருக்கிறது இந்த நாவல். காதலில் ஆணும் ஏமாற்றப்படலாம், துயரப்படலாம், கண்ணீர் சிந்தலாம், ஏங்கலாம், காத்திருக்கலாம், அவஸ்தைப்படலாம் இதுவும் சாத்தியம்தான், உண்மைதான் என்பதை சொல்கிறது எங் கதெ நாவல். ஆணின் வலியை அழுகையை, ஆணினுடைய பார்வையில் சொல்வதுதானே பொருத்தம்?


 சுய சரிதையை சிலர் நாவல் என்கிறார்கள் என குற்றம் சாட்டி இருந்தீர்கள். ஆட்டோஃபிக்‌ஷன் என்பதும் இலக்கிய வகைகளில் ஒன்றுதானே..


            ஆட்டோ ஃபிக்ஷன் இலக்கிய வகைகளில் ஒன்றுதான். நாவலுக்கும், தன்வரலாற்றுக்கும், தன்வரலாற்றுக்கதை நாவலுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த வேறுபாடு எழுத்தாளர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் தெரியாமல் இருப்பதுதான் விநோதம். தெரியாது என்பதைவிட தெரிந்தே செய்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியம். நாவலை - நாவல் என்றும், தன்வரலாற்றை தன்வரலாறு என்றும், தன் வரலாற்றுக்கதை நாவல் என்பதை, தன் வரலாற்றுக்கதை நாவல் என்றும் எழுதுங்கள், வெளியிடுங்கள் என்பதுதான் என் வேண்டுகோள். தன்வரலாற்றை நாவல் என்று போடாதீர்கள். அப்படிப்போட்டால் அது இலக்கிய மோசடி. இந்த மோசடியை எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் சேர்ந்தே செய்கிறார்கள். இப்படி ஏன் செய்கிறீர்கள் என்று வாசகனும் கேள்வி கேட்பதில்லை என்பது இன்னும் மோசம். நம் எழுத்தாளர்களுக்கு எழுதத் தெரியவில்லை, நம் வாசகர்களுக்கு படிக்கத் தெரியவில்லை என்று அர்த்தமாகிறது. இது மொழிக்கு இழிவு அல்லவா?

எழுத்துப்பிழைகளை கண்டு கொள்ளாதீர்கள்.... கருத்தை மட்டும் பாருங்கள் என சில நாவலாசிரியர்கள் சொல்கிறார்களே..

.           அப்படி சொல்வது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. எழுத்துப்பிழை முக்கியமில்லையா? அப்படியென்றால் எது முக்கியம்? கருத்துப்பிழை, வாக்கியப்பிழை, காலக்குழப்பம் முக்கியமில்லையா? படைப்பு சொல்ல வந்த கருத்து மட்டும்தான் முக்கியமா? இலக்கியம் மொழியால்தானே உருவாக்கப்படுகிறது. இலக்கியப்படைப்பிற்கு அடிப்படையே மொழிதானே. அதுவே சரியில்லையென்றால் எப்படி? இது ஒரு மனிதனுக்கு உயிர் மட்டும்தான் முக்கியம் என்று சொல்வதுபோலிருக்கிறது. ஒரு மனிதனுக்கு உயிர்மட்டும் இருக்கிறது, காது கேட்கவில்லை, கண்தெரியவில்லை, கைகால்கள் ஊனமாக இருக்கின்றன என்றால் அந்த மனிதனை எப்படி சொல்வீர்கள்? ஊனமானவர், குறை உடையவர் என்றுதானே. அப்படித்தான் இலக்கியப்படைப்பும். எழுத்துப்பிழை, வாக்கியப்பிழை, கருத்துப்பிழை, காலக்குழப்பம் இருந்தால் அது ஊனமான படைப்புத்தான். குறை உடைய படைப்புத்தான். ஒரு இலக்கியப்படைப்பின் வழியே எழுத்தாளன் கதையை மட்டும் சொல்வதில்லை. மொழியை உருவாக்குகிறான். மொழியைப் புதுப்பிக்கிறான். மொழிதான் எழுத்தாளனுக்கான ஆயுதம். அதன் மூலம்தான் அவன் ஒரு வாழ்வை உருவாக்கிக் காட்டுகிறான். கதவை திறந்துகொண்டுதான் வீட்டிற்குள் செல்ல முடியும். ஒரு படைப்பிற்குள் செல்வதற்கு கதவைப்போன்றது மொழி.மொழியே சரியில்லை என்றால் எப்படி? எழுத்துப் பிழை, கருத்துப் பிழை, வாக்கியப் பிழை, காலக்குழப்பத்துடன் எழுதப்படுவதுதான் தூய, அதி உன்னத இலக்கியமா?

தலித்திய பெண்ணிய எழுத்துகளுக்கான தேவை குறித்து ?


          தலித்திய, பெண்ணிய, மார்க்சிய, முற்போக்கு, விளிம்புநிலை, மேஜிக் ரியலிசம், சர்ரியலிசம், இருத்தலியல் போன்ற அடையாளங்களுடன் இலக்கியப்படைப்புகள் உருவாக்கப்படுவது ஏற்புடையது அல்ல. அடையாளங்கள் சிறந்த படைப்பிற்கு தடையாக இருக்கும். எழுதுவதற்கும், படிப்பதற்கும். சார்பு தன்மை இருந்தால் அது படைப்பை ஊனப்படுத்தும். கொள்கைகளையும், கோட்பாடுகளையும் முன்னிருத்தாமல் வாழ்வையும், அதனுடைய போக்கையும், மாற்றத்தையும் அதனுடைய இயங்கியல் போக்கிலேயே அணுகி எழுதவேண்டும். தலித்திய, பெண்ணிய, மார்க்சியம் போன்ற அடையாளங்கள் எழுத்தாளருக்கும் நல்லதல்ல, படைப்பிற்கும் நல்லதல்ல. அடிப்படையில் இலக்கியப்படைப்பு அடையாளங்களுக்கு, வரையறைகளுக்கு, முத்திரை குத்தப்படுவதற்கு எதிரானது. அடையாளங்களை எழுத்துக்கான பெருமையாக, எழுத்தாளனுக்கான பெருமையாகக் கொள்ளக்கூடாது. அப்படிக்கொண்டால் அது குறிப்பிட்ட படைப்பிற்கான, படைப்பாளிக்கான வீழ்ச்சியல்ல. மொழிக்கான பெரும் வீழ்ச்சி. 

Saturday, August 15, 2015

தங்க மீன்கள் போன்ற குப்பைகளை திட்டுவது தவறா- சாரு உருக்கம்


சுவாரசியமான ஆரம்பம் ,  நகைச்சுவை என பேச்சை ஆரம்பித்து கைதட்டல் வாங்குவது சிலர் பாணி.
ஆனால் சாரு அப்படி அல்லர்.. அவர் தொழில்முறை பேச்சாளர் போல பேச மாட்டார்... சுவையான ஆரம்பம் . ஆங்காங்கு நகைச்சுவை , கொஞ்சம் கொஞ்சமாக முடிவை நோக்கிச்செல்லுதல் எனும் ஃபார்முலா அவரிடம் இல்லை...

15.08.2015 அன்று விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 15 சென்னையில் நடந்தது...

இலக்கியமும் இன்றைய வாழ்க்கையும் என்ற தலைப்பில் சாரு பேசினார்...

 நல்ல கூட்டம்...  வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் இலக்கிய ரசனை கொண்டவர்கள் . ஆனால் முழு நேர இலக்கியவாதிகள் அல்லர்.. இளைஞர்கள் , பெரிய வேலைகளில் இருப்பவர்கள் , பெண்கள் என வித்தியாசமான சூழல்.. ஜிப்பா ஜோல்னா பை எனும் அந்த கால இலக்கிய கூட்ட அம்சங்கள் எதுவும் இல்லை...
சாரு தன் பேச்சில் இதை குறிப்பிட்டார்...

அந்த காலங்களில் இலக்கியம் பேச சரியான இடம் கிடைக்காது... அழுக்கு நிறைந்த ஏதோ ஒரு கட்டிடம் கிடைக்கும்..போய் விட்டு வந்தால் ரெண்டு நாள் தூசி போகாது.. வாசகர்கள் என யாரும் இருக்க மாட்டார்கள்.. எழுதுபவர்கள்தான் படித்தும் ஆக வேண்டும். எனவே ஒரு சின்ன கூட்டமாகவே அன்றெல்லாம் கூட்டம் நடக்கும். இப்போது நிலை பரவாயில்லை.. இத்தனை வாசகர்களை பார்ப்பதில் சந்தோஷம்.  முன்பைவிட நிலை தேவலாம் என்றாலும் இதுவும் போதாது.. இன்னும் அதிகமாக வேண்டும்.

எனக்கு பேச தெரியாது. நான் ஓர் எழுத்தாளன். என் மகனிடம்கூட அதிகம் பேசுவதில்லை. மெயில்தான் அனுப்புகிறேன்.ஆனாலும் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இலக்கியவாதிகளுக்கு மதிப்பில்லாத நிலையே சமூகத்தில் நிலவுகிறது. ஒரு நடிகருக்கு மேடையில் கை கொடுக்க போனேன். அவரோ என் கையை தட்டி விட்டு போய் விட்டார். இப்படி அவமரியாதை செய்வது மனித தன்மையா.. சாரு என்றாலே பலர் தீண்டத்தகாதவன் என ஒதுக்கி வைக்கும் நிலையில் என்னை துணிச்சலாக கூட்டத்துக்கு அழைத்த அழகிய சிங்கருக்கு என் நன்றி. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

உண்மை சொல்வதற்காக நான் வெறுக்கப்படுகிறேன். ஊரே பாராட்டுகிறது என்பதற்காக என்னால் பரதேசி படத்தை பாராட்ட முடியாது. அது ஒரு தப்பான படம் என்பதை நான் மட்டும் தனி ஆளாக சொல்லி பலர் வெறுப்புக்கு ஆளானேன்.. இத்தனைக்கும் டைரக்டர் பாலா மேல் எனக்கு அன்பு உண்டு.

எனக்கு இதய பிரச்சனை காரணமாக  நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது , தன் வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு என்னை வந்து பார்த்தவர் வசந்த பாலன்.  அவர் என்  மேல் அன்பு காட்டுபவர்  என்பதற்காக அவ்ரது எல்லா படங்களையும் என்னால் பாராட்ட முடியாது. பிடிக்கவில்லை என்றால் யாராக இருந்தாலும் விமர்சிப்பேன்..

தங்க மீன்கள் என ஒரு மோசமான படம். தற்கொலை செய்து கொள்வது எப்படி என குழந்தைகளுக்கு சொல்லித்தரும் படம். கடுமையாக திட்டி எழுதினேன். இப்படி சராசரி மன நிலைக்கு எதிராக நான் இயங்குவதால் பலராலும் வெறுக்கப்படுகிறேன்.

அந்த காலத்தில் பல நல்ல சிற்றிதழ்கள் வந்தன. பலர் தம் சொத்துகளை விற்று நகைகளை விற்று இலக்கியத்தை வளர்த்தனர். சி சு செல்லப்பா ஊர் ஊராக சென்று புத்தகம் விற்றார். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும் தம் பணியை செய்து கொண்டே இருந்தனர். அவர்களது நீட்சியாக  , விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் நான் எழுதி வருகிறேன்.

யாரையும் துன்புறுத்துவது என் நோக்கம் அல்ல.. என் வீட்டுக்குள்  நுழைந்து விடும் பூரான்களைக்கூட நான் கொல்வதில்லை.. எந்த காயமும் ஏற்படாமல் ஒரு பேப்பரில் எடுத்து வெளியே தூக்கி போடுவேன்

சிலர் என்னை தவறாக புரிந்து கொள்வதே பிரச்சனைக்கு காரணம். அதிகமாக செக்ஸ் எழுதுவதாக ஒரு குற்றச்சாட்டு. பாலியல் வறட்சியில் வாடும் நாடு என்பதால் , நான் பத்து பக்கத்துக்கு பாலியல் எழுதினால் , நூறு பக்கங்களுக்கு கற்பனை செய்து கொள்கிறார்கள்.

தாய்லாந்து போன்ற நாடுகளில் சில கடைகளில் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை என எழுதி வைத்துள்ளனர். காரணம் நம் ஆட்கள் கடைகளுக்கு போனால் , அங்கிருக்கும் பெண்களுடன் போட்டோ எடுக்க க்யூவில் நிற்கின்றனர். பஸ்ஸில் செல்லும் சுற்றுலா பயணிகள் இப்படி க்யூவில் நின்று போட்டோ எடுத்து முத்தம் கொடுத்து அதை பெருமையாக இங்கே சொல்லலாம்.. ஆனால் நம் பெயர் கெட்டு விடுகிறது. இந்தியர்கள் வர வேண்டாம் என்கிறார்கள்>.

இதற்கு காரணம் பாலியல் வறட்சி மட்டும் அல்ல...சென்சிப்லிட்டி இன்மையும் இதற்கு காரணமாகும்.  இலக்கிய பரிட்சயம் இல்லை என்றால் இப்படித்தான் இருப்பார்கள்.

மேம்போக்காக கருத்துகளை சொல்லும் சராசரி மனிதனைப்போலவே மெத்தப்படித்த பேராசியர்களும் இருக்கிறார்கள். ராணுவ ஆட்சி வந்தால் எல்லாம் சரியாகி விடும் எனும் மேம்போக்கான கருத்தையே ஒரு பேராசிரியரும் சொல்கிறார்.

ஒரு பேட்டிக்காக ஒரு பேராசியர் என்னிடம் கேள்வி கேட்டார்.. நீங்கள் யார் , என்ன தொழில் செய்கிறீர்கள் என்கிறார். இப்படித்தான் பொது அறிவு இருக்கிறது..

ஒரு பேராசியருக்கு மெயில் அனுப்பினேன்... டியர் மேடம் என பதில் எழுதுகிறார் அவர்..

அப்துல் கலாமிடம் உங்களுக்கு பிடித்த சிந்தனையாளர் யார் என கேட்டால் , விவேக் என்கிறார்.. நிலை இப்படி இருக்கிறது..

பலரது மானசீக குருவாக இருப்பவர் மௌனி. அவரை எனக்கு பிடிக்கும் என சொல்ல முடியாது. ஒரே கதையை மீண்டும் மீண்டும் எழுதுகிறார் என தோன்றும் . ஆனாலும் அவரது எழுத்தாளுமையின் ரசிகன் நான். அதற்காகவே அவர் எழுத்தை படிப்பேன்.. அந்த வகையில் அவர் என் குரு. ஜெயகாந்தனும் அவரை குருவாக நினைத்தவர் .

அப்படிப்பட்ட மௌனியின் கொள்ளு  பேத்தியை சமீபத்தில் சந்தித்தேன். இலக்கியம் அளவுக்கு எனக்கு நாய்களை பிடிக்கும். வளர்ப்பு பிராணிகள் ஆர்வலர்கள் கூட்டங்களுக்கு செல்கையில் மௌனியின் பேரனோடு  பழக்கம் ஏற்பட்டது.  அவரோடு மௌனியைப்பற்றி பேசுவதை பார்த்து குழம்பிய அவள் என்ன டாப்பிக் பேசுகிறீர்கள் என கேட்டாள்/. உன் கொள்ளு தாத்தா மிகப்பெரிய ரைட்டர் என்றேன். அப்படியா எனக்கு தெரியாதே என்றாள்t; திடுக்கிட்ட நான் , ஏன் இதை மகளிடம் சொல்லவில்லை என அவரிடம் கேட்டேன்.. ஏன் சொல்ல வேண்டும் என கேட்டார் அவர்.

கலாம் அளவுக்கு மௌனி கொண்டாடப்பட்டு இருந்தால் அவர் இப்படி கேட்டிருக்க முடியுமா....  மௌனி பல்கலைக்கழகம் , மௌனி நெடுஞ்சாலை , என இருந்தால் அந்த பேத்திக்கு அவரை தெரியாமல் இருந்திருக்குமா

சம்பத் குறித்து எழுத அவரது நூல்கள் தேவைப்பட்டன. கிடைக்கவில்லை. ஏன் தெரியுமா... அந்த நூல்கள் வெளியிடப்படக்கூடாது என அவர் மனைவி தடை வாங்கி இருக்கிறார். அந்த அளவுக்கு குடும்பத்தார் எழுத்தாளர்களை வெறுக்கின்றனர்...

சர்வதேச அளவில் சிலாகிக்கப்படும் நூல்களை விட சிறந்த ஆக்கங்க்ளை படைத்தவர் தஞ்சை பிரகாஷ். அவரது காரமுண்டார் வூடு நாவல் கிடைப்பது இல்லை. நல்ல நூல்களை நாம் கொண்டாடுவது இல்லை. இவரது நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டு இருந்தால் சர்வதேச புகழ் பெற்றிருக்கும். ஆனால் நம் ஊரிலேயே இவர் நூல்கள் கிடைப்பதில்லை

சி சு செல்லப்பாவுடன் அவர் தாயார் பல ஆண்டுகள் பேசவில்லை...எழுத்துக்காக இப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டி இருக்கிறது..

ஆனால் இப்படி கஷ்டப்படுவதற்கான பலன் குறைவுதான்.

எழுத்துக்காக பல தியாகங்களை செய்த தஞ்சை பிரகாஷ் . குறித்து சராசரி வாசகன் தெரிந்து கொள்ளாவிட்டால் பரவாயில்லை.. அவர் உயிர் நண்பரான வெ சா என்ன எழுதுகிறார் பாருங்கள்

முப்பது வருடமாக ப்ரகாஷ் என் உயிர் நண்பர்; ஒரே தட்டில்தான் சாப்பிட்டோம். ஆனால் அவர் சாவுறதுக்குக் கொஞ்ச நாள் முந்திதான் அவர் எழுதுவார் என்றே தெரிந்தது

வெ சா எ ( வெங்கட சாமி நாதன் எழுதுகிறார் )  என ஒரு பத்திரிக்கை நடத்தியவர் தஞ்சை பிரகாஷ். அவரைப்பற்றி இப்படி எழுதுகிறார் வெங்கட சாமி நாதன்

இப்படித்தான் நம் சூழல் இருக்கிறது...


இதற்கு முக்கிய காரணம் என நான் நினைப்பது மொழி என்பது நம்மிடம் ஒரு தகவல் தொடர்பு சாதனமாகவே மட்டும் இருக்கிறது. இது தவறு . மொழி என்பது கலாச்சார சின்னமாக பண்பாட்டு அடையாளமாக இருக்க வேண்டும்.

 நல்லா இருக்கியா ..சாப்பிட்டியா என தகவல்களை சொல்ல மட்டும் பயன்படுவது மொழி அல்ல.. நம் மரபு , பண்பாட்டின் சின்னமாகவும் மொழி இருக்க வேண்டும்.

விமானத்தில் ஒருவர் பயணித்தார். காசு எடுத்து வரவில்லை.. பசி.. ஏதாச்சும் சாப்பிட கொடுங்கள் . விமான நிலையத்தில் இறங்கிய அடுத்த நொடி காசு தந்துவிடுகிறேன் என்றார்.. படித்த ஸ்டைலிஷான் ஏர்ஹோஸ்டஸ் அதை ஏற்கவில்லை..

இதுவே கிராமமாக இருந்தால் அவருக்கு உணவு கிடைத்து இருக்கும்.

 உ வெ சா வாழ்வில்  உதாரணம் ...   அவர் வீடு அருகே ரயில் நிலையம் ... இரவில் ரயில் அங்கே வரும்.. ரயிலில் இருந்து இறங்குபவர்கள்  யாருக்காவது தேவைப்படுமே என அவரது தாயார் சோறு வைத்து இருப்பார். சில நேரங்களில் ரயில் தாமதமாக வரும்... அந்த நேரங்களில் ரயில் வரும்வரை சோற்றில் தண்ணீர்  ஊற்றாமல்
 காத்திருப்பார்



இலக்கியம் என்பது நுண்ணுணர்வை வளர்க்கும் என சொன்னேன்.. கிராமங்களில் எல்லோரும் இலக்கியம் படிப்பதில்லை. ஆனாலும் எப்படி நுண்ணுணர்வு எப்படி இருக்கிறது...காரணம் அவர்கள் அன்றாட மொழியே இலக்கியமாக இருக்கிறது.. கூத்து , நடனம் என இலக்கியம் அவர்களை அடைகிறது..

ராமாயணம் , பாரதம் என பாட்டிகள் சொல்லும் கதைகள்  அவற்றில் பல புனை கதைகள் , கட்டுக்கதைகள் . அவைகள் ஒரு மன நிலையை உருவாக்குகின்றன.. சுருட்டு புகையுடன் என் பாட்டி சொன்ன கதைகள் என்னை உருவாக்கின... 

நம் மொழியை நாம் காக்க வேண்டும்...

தன் மண்ணின் மொழியை படிக்காமல் அங்கு வாழ முடியும் என்பது இங்கு மட்டுமே இருக்கும் அபத்தம்.உலகில் எங்குமே இப்படி இல்லை..

என் மகனும் தமிழ் படிக்கவில்லை... ஏன்/?? தமிழில் மார்க் கிடைக்காது என்றான்... வேறு ஆப்ஷன் இருக்கிறது என்கிறான்..தமிழைத்தவிர வேறு ஆப்ஷன் ஏன் கொடுக்கிறீர்கள்>.. தமிழ் படித்தே ஆக வேண்டும் என்ற நிலை வேண்டாமா

 நான்கு பேர் கொண்ட குடும்பம் ஸ்கூட்டரில் போவதை பார்க்கையில் முன்பெல்லாம் கோபம் வரும். இப்போது அவர்களுக்கு வேறு வழி இல்லை என புரிந்து கொள்கிறேன். மெட்ரோ , பேருந்து என ஐரோப்பாவில் இருக்கும் ஆப்ஷன்கள் இங்கு இல்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது..

மண்ணில் தெரியுது வானம் எனும் நாவல் என்னை மாற்றிய நாவல்களில் ஒன்று. என்னிடம் இருக்கும் வன்முறையை அது ஒழித்து விட்டது.. முப்பது ஆண்டுகளுக்கு முன் இதை படித்திருந்தால் , என் வாழ்க்கை  வேறு மாதிரி இருந்திருக்கும்.. ஆனால் என் நாவல்கள் இதேபோலத்தான் இருந்திருக்கும் .பக்திமானாக இருந்து கொண்டே , பாலியலை எழுதினாரே வெங்கட்ராம். அவரைப்போல என் வாழ்க்கை இருந்திருக்கும்..

என்னை மாற்றிய இன்னொரு நாவல் , மொராக்கோ எழுத்தாளர்  தகர் பென் ஜெலுன் எழுதிய ஃபிரஞ்ச் நாவலான This Blinding Absence of Light ..இதுதான் என் ஆன்மீக பார்வையை உருவாக்கிய நாவல் எனலாம்..



தமிழ் நாட்டைப்போல இலக்கிய அறிவு இல்லாத இடம் உலகிலேயே இருக்காது என நினைத்தேன்...அதை மாற்றிய நாடுகள் துருக்கியும் தாய்லாந்தும்... நம் வாசிப்புகூட அங்கு இல்லை... அந்த எழுத்தாளர்களை ஒப்பிட்டால் நம் ஊரில் இருக்கும் சில எழுத்தாளர்களை கோயில் கட்டி கும்பிடலாம்..

சௌதி அரேபியாவில் அப்துல் ரஹ்மான் முன்ஃப் என ஒரு எழுத்தாளர் இருந்தார்.. அவர் கருத்துகள் பிடிக்காத அரசு அவரை நாடு கடத்தியது.. அங்கே அந்த அளவுக்கு எழுத்தாளர்களை குறித்த சென்சிப்லிட்டி இருக்கிறது... நம் ஊரில் எழுத்தாளனை யாரும் கவனிப்பதில்லை....பிற்காலத்தில் அவரை மீண்டும் அழைத்தார்கள்>. அவர் போகவில்லை..



இங்கே பல பிரச்சனைகளுக்கு மத்தியில்தான் எழுத வேண்டி இருக்கிறது..

ஷேக்ஸ்பியர் நாடகத்தில் கண் இழந்த நிலையிலும் எழுகின்ற இன்னிசை குறித்த காட்சி வருமே... அதுதான் ஊக்கசக்தியாக இருக்கிறது...

எழுத்துக்கு ஒருவித தீவிர, தேவை.  நான் அந்த காலத்தில் அடிக்கடி தருமு சிவராமுவை சந்திப்பது வழக்கம். ஒன்றாக தேனீர் அருந்துவோம். ஒரு முறை நான் அவர் கவிதையை குறை கூறியிருப்பது வருத்தம் அளிப்பதாக சொல்லி டீ அருந்த மறுத்தார்... உங்கள் கவிதை எனக்கு மிகவும் பிடிக்குமே.. நான் குறை சொல்லவில்லையே என்றேன்.. அதன் பின் வீட்டுக்கு அழைத்து சென்றார். என் கட்டுரை வந்த பத்திரிக்கையை எடுத்து பார்த்த பின்பே சமாதானம் ஆனார். அந்த அளவுக்கு தீவிரமாக இருந்தவர் அவர்...

கொரில்லா படைபோல எழுத்தாளர்களும் வாசகர்களும் செயல்பட வேண்டிய சூழல்தான் இங்கு இருக்கிறது..

டீவி பார்ப்பதை குறைத்தால் படிக்க நேரம் கிடைக்கும். படியுங்கள்...

இவ்வாறு சாரு பேசினார்...

சாருவின் துணிச்சலுக்கு தான் எப்பவும் ரசிகர் என்றார் அழகிய சிங்கர்

அடிக்கடி சாருவை வைத்து கூட்டம் நடத்தும் அளவுக்கு கூட்டம் வெகு சிறப்பாக நடந்ததாக அமைப்பாளர்கள் கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்...








Saturday, August 1, 2015

ரஜினி நிஜமான சூப்பர் ஸ்டார் - இளையராஜா நெகிழ்ச்சி


தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இளையராஜாவின் என்னுள்ளில் எம்எஸ்வி என்ற இசைக் கச்சேரி நடந்தது.
நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே வந்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த் இறுதி வரை பங்கேற்று இசையை ரசித்தார்.
பின்னர் ரஜினியை நோக்கிய இளையராஜா, 'சாமி, மேடைக்கு வந்து சில வார்த்தைகள் பேசுங்க," என்று அழைத்தார்.
ரஜினி பேசுகையில், "எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்கு சாமி. பெரிய மகான், அவர் நினைவை கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இளையராஜா இசைஞானி. எம்.எஸ்.விஸ்வநாதன் இசை சாமி. அந்த கடவுளை பற்றி இந்த ஞானிக்கு தான் தெரியும்.
அவரைப் பற்றி நம்மைப் போன்ற பாமர மக்களுக்கு இசைஞானிதான் உணர்த்த வேண்டும். இந்த இசை நிகழ்ச்சியில் என்னைப் போன்றவர்கள் கலந்து கொண்டோம் என்பதே பெரிய ஆசீர்வாதம்," என்றார்.

அதை தொடர்ந்து எம்எஸ்வி குறித்து ரஜினியின் கருத்தைக் கேட்டார் இளையராஜா.

அதற்கு ரஜினி கூறிய பதில்:

திறமை என்பது கடவுள் கொடுப்பது. பெற்ற தாய், தந்தையிடம் இருந்து அது வருவதில்லை. ஜென்மம் ஜென்மமாக வரக்கூடியது. அது ஒரு பிராப்தாம். சரஸ்வதி கடாட்சம். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அது கிடைத்திருக்கிறது.
பணம், பெயர், புகழ் போன்றவை வரும்போது தலைகால் நிற்காது. ஆனால் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சிறு கடுகளவுகூட தலைக்கனம் இல்லை. அவர் ஒரு இசை கடவுள்," என்றார்.


அடுத்து, 'இந்த திரையுலகம் மிகப் பெரியது. எவ்வளவோ பேர் இருக்காங்க. நான் யாரையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை. உங்களைக் கூட அழைக்கவில்லை. ஆனால் நீங்களாக வந்து அமர்ந்து ரசிக்கிறீர்கள். இங்கு வரவேண்டும் என உங்களை தூண்டியது எது?" என கேட்டார் ராஜா..


அதற்கு பதிலளித்த ரஜினி, "1960 மற்றும் 70 கால கட்டத்தில் ஜாம்பவான்களாக நடிகர்கள், டைரக்டர்கள், பாடகர்கள் பலர் இருந்தனர். எம்.ஜி.ஆர் சார், சிவாஜி சார், பாலசந்தர், ஸ்ரீதர், டி.எம்.சவுந்தரராஜன், சீனிவாஸ், பி.சுசீலா என எல்லோரையும் புகழ் உச்சிக்கு கொண்டு சென்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
ராமருக்கு உதவிய அனுமன் போல் செயல்பட்டாலும், ஒரு அணில் மாதிரியே வாழ்ந்தார். அப்படிப்பட்ட ஒரு மகானை நான் பார்த்தது இல்லை. இனியும் பார்க்கப்போவது இல்லை. அப்பேர்ப்பட்ட மகானின் இசை பற்றி நீங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும், உங்களைக் கவர்ந்த அவரது பாடல்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்," என்றார்.

ரஜினியின் இந்த பதிலைக் கேட்ட இளையராஜா ஒரு கணம் அமைதியாகிவிட்டார். அடுத்து, "சாமி, நீங்க உண்மையிலேயே சூப்பர் ஸ்டார்... சூப்பர்" என்றார்.

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா