Tuesday, October 22, 2013

கைகளுக்கு வேலை கொடுத்த மலையாளப் படம்


  நான் முதன் முதலில் மலையாளப்படம் பார்த்தது கல்லூரி முதல் ஆண்டில்தான். அதற்கு முன் , டப்பிங் செய்யப்பட்டு கேவலமான தமிழாக்க தலைப்புகளில் வந்த மலையாளப்படங்களை மு... மன்னிக்கவும் - கலைக்கண்ணோட்டத்தோடு  பார்த்து ரசித்து இருந்தாலும் , நேரடியான மலையாளப்படத்தை பார்த்தது கல்லூரி முதல் ஆண்டில்தான். என்னதான் பிஞ்சில் பழுத்து வெம்பி போனாலும் , மலையாளப்படம் பார்க்கும் வாய்ப்பு பள்ளி வாழ்க்கையில் கிடைக்காதது வரலாற்று துரதிர்ஷ்டம்தான்.

அப்போது முதல் ஆண்டில் , இது போன்ற மேட்டர்களில் அப்பரசண்டிசுகளாக இருந்த இருவருடன் பெங்களூரின் முக்கியப்பகுதியில் இருக்கும் ஹிமாலயா தியேட்டருக்கு போனோம். போஸ்டர் பார்த்தாலே கிளுகிளுப்பாக இருந்தது. சும்மா இருந்தாலும் கிளுகிளுப்பாக இருந்து இருக்காது. ஆங்காங்கு பிட்டு பேப்பரால் லாவகமாக மறைத்து இருப்பார்கள்..அதைப் பார்த்தாலே கிளுகிளுப்பாக இருக்கும்.

ஆனால் படம் செம போர், இடவேளைக்கு பின் , ஒரு ரெண்டு நிமிஷம் குளியன் சீன். அப்புறம் லேசாக ஒரு பெட்ரூம் சீன். ரெண்டு செகண்ட் பார்ப்பதற்குள் லைட் ஆஃப் ஆகி விடும். எரிச்ச்லாக இருந்தது. ஆனால் ஏமாந்து விட்டதை காட்டிக்கொள்ளாமல் , செம டைரக்‌ஷண்டா மச்சி , ஹீரோயின் செம  நடிப்புடா ( !! ? ) , நல்ல கதைடா என வெட்டியாக் சீன் போட்டுக்கொண்டு ரூமுக்கு  நடக்கலானோம். நாங்கள் பேசுவது போலித்தனமாது  என எங்களுக்கே தெரிந்துதான் இருந்தது.

அப்போது முடிவு எடுத்தேன். இந்த அப்பரண்டிசுகளை நம்பக்கூடாது. வல்லுனர்களையே நாட வேண்டும். அப்போதுதான் , தர்ட் இயர் சீனியர் நட்பு கிடைத்தது. கன்னியாகுமரி காரர். பல “ நல்ல “ விஷ்யங்களை அவர்தான் கற்று கொடுத்தார்.

அவர் தண்ணி அடிக்க கற்றுத்தந்ததில்தான் அவர் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி என்பது எங்களுக்கு தெரிய வந்தது. ஃபுல்லாக தண்ணி அடித்து விட்டு , வருவோம் அல்லவா, அப்போது என்னதான் நெருக்கடி என்றாலும் , சிறு நீர் கழிக்க கூடாது என்பது அவர் கொள்கை. சிறுனீர் கழித்தால் போதை இறங்கி விடும் என்பது அவர் கண்டு பிடிப்பு.

இந்த அரிய கண்டுபிடிப்பை மதிக்கும் வகையில் நாங்கள் கஷ்டப்பட்டு அடக்கிகொண்டே வருவோம். சில சமயம் நெருக்கடி அதிகமாகும்போது , ஒரு ரெண்டு டிராப் விட்டு விட்டு வந்து விடுகிறோம் என்றாலும் கேட்க மாட்டார், சவட்டிபுடுவேண்டே.. பேசாம வாங்கடே ..என மிரட்டிவார்.

சில ஆண்டுகள் கழித்தி ஒரு பத்திரிகையில் கொஞ்ச நாள் பணியாற்றினேன். மினிஸ்டர் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. போய் இருந்தேன். வெளி நாட்டு மதுவகைகள் பரிமாறப்பட்டன. அனைத்து பத்திரிக்கையாளர்களும் அருந்தினார்கள்.. நான் மட்டும் மறுத்து விட்ட்டேன்.

அதில் அந்த பத்திரிக்கை ஆசிரியருக்கு பயங்கர பெருமை. என்ன ஒரு செல்ஃப் கண்ட்ரோல் , பத்திரிக்கை/ ஊடக  அறம் என பாராட்டினார். ஆனால் நான் மறுத்ததற்கு காரணம் அறமும் அல்ல , முறமும் அல்ல.. அதற்கு காரணம் அன்று அந்த வில்லேஜ் விஞ்ஞானி போட்ட போடுதான். இன்றும்கூட  பாட்டிலை பார்த்தால் அவர் நினைவு வந்து விடுவதை தவிர்க்க முடியவில்லை.

அப்பேற்பட்ட வல்லுனரான அவர் மீது அப்போது எங்களுக்கு ஒரு பிரமிப்பு இருந்தது. இமாலயா தியேட்டர் அனுபவத்தை கேட்ட அவர் , அந்த மாதிரி படமெல்லாம் சிட்டிக்குள் பார்க்க கூடாது என சொல்லி ஒதுக்குப்புறமான ஒரு தியேட்டருக்கு அழைத்து சென்றார்.

அந்த படமும் எரிச்சலூட்டும் வகையில் ஆரம்பித்தது. நொய் நொய் என புரியாத மொழியில் பேசிக்கொண்டு இருந்தனர், செம டார்ச்சர், வில்லேஜ் விஞ்ஞானி மீதான பிரமிப்பு சரியத்தொடங்கியது.\

சரி , வந்ததற்கு ஏதாச்சும் குளியல் சீனாவது இருக்குமா என நாக்கை தொங்கப்பட்டவாறு காத்து இருந்தோம். அப்போது இண்டர்வெல் பெல் அடித்தது. அடச்சே..ஒரு சீனும் வரல ..இண்டர்வெல் வந்துடுச்சே என எழ ஆயத்தமானோம். உட்காருங்கடே..என அமர வைத்தார். பெல் அடித்ததும் வெளியே இருந்து திமு திமு என கூட்டம் உள்ளே நுழைந்தது.

நம் ஊரில் எல்லாம் , இண்டர்வெல் பெல் அடித்தால், வெளியே போவோம் .இங்கேயே உள்ளே வறாங்க்களே என கல்ட்சுரல் ஷாக் ஏற்பட்டது. ஆனால் அந்த மணியின் மகத்துவம் சில நொடிகளில் தெரிந்தது.

சில நொடிகளில் , ஏற்கனவே ஓடிக்கொண்ட படத்திற்கு சம்பந்தம் இல்லாமல் இன்னொரு படம் ஓட ஆரம்பித்தது. அதில் வந்த காட்சி...ம்ம்ம்...என்னவென்று சொல்வது..

கொஞ்ச நேரத்தில் மீண்டும் மெயின் படம் ஓட ஆரம்பித்தது. எ\ங்களுக்கெல்லாம் குப் என வியர்த்து விட்டது. எப்பீடி என விஞ்ஞானி எங்களை பெருமையாக பார்த்தார். அவர் திறமையை குறைத்து எடைபோட்டதற்காக மானசீக மன்னிப்பு கேட்டு கொண்டோம்.

அந்த பின் சிக்பேட் விஜயலட்சுமி , கே ஆர் புரம் , சிவாஜி நகர் ,கெங்கேரி  என என் கலைத்தேடல் பரிணாம வளர்ச்சி அடைந்ததெல்லாம் வேறு விஷ்யம்.

என் மலையாள சினிமா அறிவுக்கு பின் இப்படி ஒரு காறித்துப்பும் ஃப்ளாஷ் பேக் இருந்தாலும்,  நான் உருப்படியான ஒரு மலையாளப்படத்தை இது வரை பார்த்ததே இல்லை.

சிலர் அவ்வபோது நெடுமுடி வேணு, அடூர் கோபால கிருஷ்ணன் , மம்முட்டி என சீன் போடும்போது  லேசாக தாழ்வு மனப்பான்மை ஏற்படும், இதற்காகவேனும் ஒரு நல்ல மலையாளப்படம் பார்க்க வேண்டும் என நினைத்துகொண்டு இருந்தேன்.

அப்போதுதான் தமிழ் ஸ்டுடியோ சார்பில் கொடியேட்டம் என்ற படம் திரையிடப்படுவது தெரிய வந்தது. சரி போகலாம் என முடிவு செய்தேன். அதில் சிலர் , அது கொடியேட்டம் அல்ல... கொடியேற்றம் என குழப்பினார்கள்.. பூவை பூ என்றும் சொல்லலாம்.. புய்ப்பம் என்றும் சொல்லலாம்.. வேறு மாதிரியும் சொல்லலாம் ..இதுக்குப்போய் ஏன் குழப்புகிறார்கள் என நினைத்தவாறு படத்துக்கு போனேன்.

படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே படம் என்னை ஈர்த்து விட்டது. சங்கரன்குட்டி என்பவனின் வளர்சிதை மாற்றம்தான் படம், அதை வெகு இயல்பாக , யதார்த்தமாக சொல்லி இருக்கும் பாங்கு அருமையாக இருந்தது. கொடியேற்றத்துடன் தொடங்கும் ஊர் திருவிழாவுடன் அவன் வாழ்க்கையை இணைத்து காட்டி இருப்பது ரசிக்கச்செய்தது.

படத்தில் பின்னணி இசை கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம்.

சங்கரன்குட்டி எதைப்பற்றியும் கவலைப்படாதவன் . சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டும் ,மதுவருந்திக்கொண்டும், நன்றாக தின்று உறங்கியும் வாழ்பவன்.

அவன் மேல் அன்பு செலுத்தும் ஜீவன் அவனது தங்கை. திருமணம் செய்து வந்தால் திருந்தி விடுவான் என நினைக்கும் பொறுப்பு மிக்கவள். ஆனால் அவளிடம் அவன் புரிந்து கொள்ள முடியாத அந்தரங்கள் இருப்பதை புரிந்து கொள்வது பெரிய திறப்பாக அமைகிறது. அவனுடன் நெருங்கி பழகும் ஒரு பெண்ணின் தற்கொலை , லாரி டிரைவரின் சில நடவடிக்கைகள் போன்றவை அவனுக்கு மனித இயல்பை புரிய வைக்கின்றன.

தனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டும் என்பது புரிய ஆரம்பிக்கிறது. உருமாற்றம் அடைகிறான்.

இந்த உரு மாற்றம் சில காட்சிகளால் காட்டப்படுகிறது. நம் ஊர் இசை அமைப்பாளர்கள் என்றால் , ஒரு விஷ்யத்தை முன்பு எப்படி கையாண்டான் , இப்போது எப்படி கையாள்கிறான் என்பதை ஒரே வித இசையை கொடுத்து , அந்த இரு காட்சிகளையும் அண்டர்லைன் செய்து காட்டுவார்கள்.. நாம் ஏதோ ஒரு நினைவில் படம் பார்த்து கொண்டு இருந்தாலும், இசை நமக்கு புரிய வைத்து விடும்.

ஆனால் இந்த படத்தில் இசையின் துணையின்றி காட்சிகள் மூலமே இதை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

உதாரணமாக , ஒரு குழந்தை நீரில் மூழ்கப்போவதை தடுத்து , தாயிடம் ஒப்படைப்பான். அந்த தாயோ அதை பெரிதாக எடுத்து கொள்ள மாட்டார். சும்மா சமர்த்தாக விளையாடும் குழந்தையை அவன் பயமுறுத்தி விட்டதாக அலுத்து கொள்வாள். இந்த காட்சியில் இசை ஏதும் இருக்காது.

இதற்கு இசை கொடுத்து பாக்யராஜ் டைப் காமெடி காட்சி மூடைக்கொண்டு வரலாம். அல்லது அவன் அவமானப்படுத்தப்பட்டு விட்டான் என்பது போன்ற சோக இசையை ஒலிக்கச்செய்யலாம். அல்லது , முன்பு பொறுப்பில்லாமல் இருந்தவன் இப்போது பொறுப்பாக இருக்கிறான் என்பது போன்ற உணர்வை இசையால் கொண்டு வரலாம்.

அதாவது இசை அமைப்பாளர் பார்வையாளனை விட , இயக்குனரை விட , சக்தி மிக்கவர் ஆகி விடுகிறார். இதை தவறு என சொல்லவில்லை. இது ஒரு பாணி என்பதையே சொல்கிறேன். உதாரணமாக ஆக்‌ஷன் படமாக மணிரத்னம் எடுத்த தளபதி படத்தை , செண்டிமெண்ட் படமாக இளையராஜா இசை மாற்றியதை பார்த்து இருப்பீர்கள். அதுவும் நன்றாகத்தான் இருந்தது.

ஆனால் எல்லா படங்களுமே இசை அமைப்பாளர் கையிலேயே இருப்பது சரிப்படாது.

இந்த படத்தில் இசை நம் முடிவுகளை , புரிதலை தடுப்பதில்லை. நாமாக சில புரிதல்களுக்கு வருகிறோம்.

இசை இல்லையே தவிர ஓசை இருக்கிறது.

இரவின் பிரத்யேக ஒலிகள் அட்டகாசமான பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இரவின் நிசப்தத்தின் ஓசையை இந்த அளவுக்கு சிறப்பாக பதிவு செய்த ஒரு தமிழ் படத்தை நான் பார்த்தது இல்லை.

ஒரே ஒரு செயற்கையான காட்சிகூட இல்லாத படம் , திருவிழா எப்படி தன்போக்கில் இயல்பாக ஆரம்பித்து , உச்சம் அடைந்து முடிகிறதோ , அதே போல ஒரு மனிதனும் வளர்கிறான், வெவ்வேறு மனிதர்களின் செயல்கள் , சம்பவங்கள்தான் திருவிழா நடப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது, அதேபோல வெவ்வேறு சம்பவங்கள் , வெவ்வேறு மனிதர்களால்தான் மனிதனின் வாழ்க்கை நடப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.
உண்மையில் எங்கும் எதுவும் நடப்பதில்லை எனும் நத்திங்னெஸ் என்ற பெரிய விஷயத்தை காட்சி பூர்வமாக , வெகு இயல்பாக பதிவு செய்து இருக்கிறார் இயக்குனர் அடூர் கோபலகிருஷ்ணன்.

படம் பார்த்தவுடன் கைகளுக்கு வேலை வந்து விட்டது. ஆம்..படம் முடிந்ததும் அரங்கம் கைதட்டலால் நிறைந்தது..









2 comments:

  1. இந்தப் படங்களையும் பாருங்கள்

    ITHRA MAATHRAM, LEFT RIGHT LEFT, PUDHIYA THEERANKAL, IVVIDE SWARGAMAANU

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா