Saturday, October 26, 2013

பார்க்க வேண்டிய மலையாளப்படமும் , ஒரு கேவலமான ஃபிளாஷ்பேக்கும்...

வைசாலி என்ற மலையாளப்படம் சமீபத்தில் பார்த்தேன். நேர்த்தியான ஒளிப்பதிவு, வரலாற்றை மிகை உணர்ச்சி இல்லாமல் அணுகும் பாங்கு , பரதனின் திறமையான இயக்கம், மிகை அற்ற நடிப்பு, கனவுலகம் ஒன்றுக்கு எடுத்து செல்லும் இசை, அந்த காலத்திலேயே அவாள் செய்த அக்குறும்புகளை காட்சிப்படுத்திய சமூக பார்வை , ஆன்மீகம் , காதல் என நிறைய சொல்ல வேண்டும். அதற்குமுன் இந்த படம் எனக்கு முதன்முதலாக எப்படி அறிமுகம் ஆயிற்று என்பதையும் சொல்லியாக வேண்டும்.

இப்போதெல்லாம் மொபைல் போனிலேயே சினிமா பார்க்க முடிகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்புகூட இந்த நிலை இல்லை. எனது கல்லூரி காலத்தில் “உலக” சினிமாக்களை பார்க்க வேண்டுமானால் டிவியை வாடகைக்கு எடுத்து பார்த்தால்தான் உண்டு. ஏனென்றால் நாங்கள் தங்கி இருந்த அறையில் டிவியோ , கணினியோ இல்லை.
இந்த டிவியை வாங்கி தருவதற்கென்றே சில ஸ்பான்சர்கள் அவ்வப்போது கிடைப்பதுண்டு. அண்ணன் கல்யாணம், சித்தப்பா பொண்ணு கல்யாணம் , காது குத்து , கெடா வெட்டு போன்றவற்றை சிலர் வீடியோ எடுத்து வந்து பெருமையாக நமக்கு திரையிட்டு காட்ட விரும்புவார்கள்..அதற்காக டீவியை வாடகைக்கு எடுத்து தருவார்கள்.
அவர்களது பெருமைமிகு திரையிடல் முடிந்ததும் , நாம் நம் டேஸ்ட்டுக்கேற்ற “உலக” சினிமாக்களை வாடகைக்கு எடுத்து பார்த்து கொள்ளலாம்.. இந்த வாடகை செலவு மட்டும் நம்மை சேர்ந்தது..டீவி செலவு அவர்களை சேர்ந்தது… வின்-வின் சிச்சுவேஷன். இந்த டீல் அனைவருக்கும் பிடித்த ஒன்று.

உலக சினிமா என்றால் சிலர் ஈரான் , கொரியா, மெசபடோமியா, நிகாரகுவா, ஆண்டிகுவா , ஏதென்ஸ் , ஆஸ்திரியா , பெலோ ரஷ்யா, பெர்ஷியா , லத்தீன் அமெரிக்கா என கருதுகிறார்கள். கேரளாவும் உலகத்தில்தானே இருக்கிறது..அப்படி பார்த்தால் , மலையாளப்படங்களும் உலக சினிமாதானே என்பது இவர்களுக்கு தெரிவதில்லை.
 நண்பர்கள் கொண்டு வரும் கல்யாண கேசட்டை பார்த்து முடித்த அடுத்த கணம் , பிட்டு படம் ஓட ஆரம்பிப்பதில் இருக்கும் ஒரு ”பொயட்டிக் ஜஸ்டிஸை” நான் ரசிக்க தவறுவதில்லை. கல்யாண காட்சி முடிந்ததும் , இந்த காட்சி ஓட ஆரம்பிக்கும் பரவசமான கணத்தை என்னவென்பது!!

மாமனாரின் காமவெறி , செக்ஸ் காலேஜ் , அவளோட ராவுகள் போன்ற உலகப்படங்களை பலமுறை பார்த்து அலுத்து விட்டதால், புதிதாக ஒன்றை தேடிக்கொண்டு இருந்தோம். அப்போது ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பரிந்துரைத்த படம்தான் விசாலி.

சாமியாருக்கு ஒரு பெண் செக்ஸ் பாடம் நடத்துறாளாம்.. படம் முழுக்க ஏகப்பட்ட சீன்களாம்.. காட்டுக்குள்ள ஒரே ஜல்சாவாம் என்றார் விஞ்ஞானி.

சாமியாருக்கே செக்ஸ் பாடம் என்ற மாற்று சிந்தனை எங்களை சுண்டி இழுத்தது. கஷ்டப்பட்டு அந்த கேசட் வாங்கினோம். வழக்கம்போல ஒரு ஸ்பான்சர் புண்ணியத்தில் டீவி வாடகைக்கு எடுத்து படம் பார்க்க ஆரம்பித்தோம்.

இதுபோன்ற படங்களை பார்க்க கலை வெறிபிடித்து அலைவார்கள் அல்லவா.. அவர்களில் பெரும்பாலானோர் அந்த படங்களை முழுக்க பார்ப்பதில்லை என்பது இதில் இருக்கும் வினோதங்களில் ஒன்று. பாதிப்படத்திலேயே ஃப்ளாட் ஆகி விடுவார்கள்.
என்னைபொருத்தவரை நான் இந்த படங்களை காம வெறிகொண்டு பார்ப்பதில்லை. இயற்கை காட்சிகள் , ” நடித்தவர்களின் “ திறமை , ஷாட்டுகள் ( camera shot ) , இசை , இயக்கம் ( Direction ) போன்றவற்றுக்காகத்தான் நான் இந்த கர்(கா)மங்களை பார்த்து தொலைப்பது.
இதில் கொடுமை என்னவென்றால் , காமவெறியர்கள் எல்லாம் பாதியிலேயே தூங்கி விடுவார்கள் .  நான் மட்டும் கர்ம சிரத்தையாக பார்த்துவிட்டு , அணைத்து விட்டு ( டிவியை ) , அதன் பின் தூங்க செல்வேன். சில சமயம் தூங்க முடியாமல் , விடிந்து விடுவதும் உண்டு.

அப்படி ஒரு நாள் பார்த்த படம்தான் விசாலி..ஆனால் படம் நம்மவர்கள் டேஸ்ட்டுக்கு மேட்ச் ஆகவில்லை. வறட்சி , அரசர் என “கலையம்சம் “ இல்லாமல் எதை நோக்கி போகிறது என தெரியாமல் போய்க்கொண்டு இருந்தது. டென்ஷனாகி பலர் தூங்கி விட்டார்கள். ஏதாச்சும் சீன் இருந்தா பார்த்து சொல்லு என எனக்கு அசைன்மெண்ட் கொடுத்து இருந்ததால் , நான் ஃபார்ர்வார்ட் எல்லாம் செய்து பார்த்தேன். ஒன்றும் புலப்படவில்லை. தோல்வியையே அறியாத நான் , தோல்வியை ஒப்புக்கொண்டு ஆஃப் செய்து விட்டேன்.

இப்படி ஒரு நல்ல படத்தை பிட்டு படம் என நினைத்தேன் என்றால் என் மலையாள சினிமா அறிவு எந்த அளவுக்கு இருக்கிறது என்பது உங்களுக்க்கு புரிந்து இருக்கும். ஆனால் என் சினிமா அறிவு இந்த லட்சணத்தில் இருப்பது எனக்கே தெரிந்தது ஒரு மினி பதிவர் சந்திப்பில்தான்.

இப்போதெல்லாம் ஆர்கனைஸ்டாக சந்திப்பை நடத்துகிறார்கள்..முன்பெல்லாம் இன்ஃபார்மலாக நடக்கும்.
அப்போதெல்லாம் அவ்வப்போது கலந்து கொண்ட என்னை இப்போது நடக்கும் சந்திப்புகளில் பார்க்க முடியாது. இனி சந்திப்புகளில் கலந்து கொள்ளக்கூடாது என முடிவெடுத்ததற்கு பின் ஒரு வரலாற்று சம்பவம் இருக்கிறது.

ஒரு சந்திப்பின் போது இரு சினிமா (பதிவர் ) தாதாக்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது..கூடவே இலக்கிய கில்லாடிகளும் இருந்தனர்.

தோழர். நீங்க மலையாளப்படமெல்லாம் பார்த்து இருக்கீங்களா… என்றார் ஒருவர்… ஓ பார்த்து இருக்கிறேனே என்றேன்.. நான் பார்க்காத மலையாளப்படமா.
ஓ. உங்களுக்கு மலையாளம் தெரியுமா என்றார் இன்னொருவர்…
இதுக்கு எதுக்கு மொழி தெரியணும் என்றேன்.. கூட இருந்தவருக்கு மகிழ்ச்சி…ஆமா..கலைக்கு மொழி தேவை இல்லை… காட்சிமொழிகளாலும் , பிம்பங்களாலும் , படிமங்களாலும்தான் திரை மொழி தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது என்றார்.

படிமம் என்ற சொல்லையே அப்போதுதான் முதன்முதலாக கேள்விப்படுகிறேன்.. அது என்ன பிம்பம், காட்சிமொழி…எனக்கு மைல்டாக டவுட் வர ஆரம்பித்தது.

தோழர் நீங்க பார்த்ததிலேயே உங்களுக்கு பிடித்த மலையாளப்படம் எது என்றார்.

நிறையப்படம் இருக்கே .எதை என சொல்வது என யோசிக்கலானேன். அப்போது இன்னொருவர் சிலர் ஆப்ஷன்கள் கொடுத்தார்/…அதைகேட்டதும்தான் , அவர்கள் வேறு ஏதோ ஒரு தளத்தில் பேசுவதை உணர்ந்தேன். கொஞ்சம் இருங்க…பிஸ் அடிச்சுட்டு வந்துறேன் என சொல்லி விட்டு கிளம்பியவன் தான் ..அதன் பின் எந்த சந்திப்புக்கும் போனதில்லை. நான் மட்டும் எனக்கு பிடித்த படம் என என் வாய் வரை வந்து விட்ட படத்தை சொல்லி இருந்தால்? நினைக்கவே பயமாக இருக்கிறது… அருகில் இருந்தவர்களில் பலர் இன்றும் என் நண்பர்கள் என்பதால் , என் பயம் உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.

அந்த வரலாற்று சிறப்பு மிக்க வைசாலி படத்தைத்தான் சமீபத்தில் ரசித்து பார்த்தேன்.

மகாபாரதத்தில் இருந்து ஒரு சிறிய சம்பவத்தை படமாக்கி இருக்கிறார்கள்.


மழை பொய்த்து போய் , வறட்சியில் வாடும் சாம்ராஜ்யம். அரசருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை..பூஜை , ஹோமம் என எதுவும் பலனளிக்கவில்லை. ( ஏன் மழை பொய்த்தது,..சாபம் …என்பதெல்லாம் வேறு கதை )

ராஜகுரு அரசருக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். அவரது மகன் , வைசாலி என்ற பெண்ணை விரும்புகிறான். அவள் அரசருக்கு பிறந்த பெண்..ஆனால் சட்டப்படியான வாரிசு அல்ல…எனவே ராஜகுரு அந்த காதலை விரும்பவில்லை.


இந்த சூழ் நிலையில் , மழை பொழியச்செய்ய ஒரே ஒரு வழிதான் இருக்கிறது … மனிதர்களையே பார்க்காமல் , காட்டிலேயே வைத்து வளர்க்கப்பட்டு , தவ ஆற்றல் முழுமையாக கைவரப்பெற்ற ரிஷி குமாரனை ( ரிஷ்ய சிருங்கர்) அழைத்து வந்து பூஜை செய்தால் , மழை வரும் என்கிறார் குரு… ( அவர் ஏன் தந்தையால் வளர்க்கப்படுகிறார்… தாய் என்ன ஆனாள்.. ஏன் தனிமையாக வைத்து வளர்க்கிறார் என்பதெல்லாம் பெரிய வரலாறு ) ஆனால் அவர் வர சம்மதிக்க மாட்டார்.. படை பலத்தாலோ , பண பலத்தாலோ கூட்டி வர இயலாது… ஒரு பெண்ணை அனுப்பி , அவரை மயக்கி கூட்டி வருவதுதான் ஒரே வழி என்கிறார் குரு. அந்த பெண் அழகிலும் , கலைகளிலும் சிறந்தவளாக இருக்க வேண்டும். அவளால்தான் இதை செய்ய முடியும். இந்த பண்புகள் கொண்ட ஒரே பெண் வைசாலிதான் என்கிறார்.

செண்டிமெண்ட் , கடமை, தேசத்தின் தேவை என்பதை எல்லாம் பேசி அவளை அனுப்ப , அவள் தாயின் சம்மதம் பெறுகிறார்கள்.. எதேனும் தவறு நிகழ்ந்தால், அந்த ரிஷி கடுமையாக தண்டித்து விடுவார்.. மற்றும் அந்த இடம் அபாயமிக்கது…அப்படி இருந்தாலும் , உயிர் பற்றி கவலை இன்றி காட்டுக்கு செல்கிறார்கள்..இப்படி ஒரு பணிக்கு தன் பெண்ணை அழைத்து செல்வது ஒரு தாய்க்கு கஷ்டம்தான்..ஆனாலும் ஒரு கடமைக்காக செல்கிறார்கள்.
ரிஷிகுமாரனை மெல்ல மெல்ல வைசாலி மயக்குகிறாள்..இதில் அவன்மீது உண்மையிலேயே காதல் கொள்கிறாள்.

பல்வேறு அபாயங்களுக்கு மத்தியில் ,, உயிர் தியாகம் செய்து அழைத்து வருகிறார்கள்/. மழை பெய்கிறது.. ஊரே மகிழ்கிறது.

அரசர் மனம் மகிழ்ந்து , ரிஷிகுமாரனுக்கும் தன் மகளுக்கும் திருமணம் என அறிவிக்கிறார். தனக்கு மகள் என்ற அந்தஸ்து கிடைத்து விட்டதே என வைசாலி மகிழ்கிறாள்..தாயும் மகிழ்கிறாள்..ஆனால் கடைசி நிமிடத்தில் நிகழும் திருப்பம், படத்துக்கு வேறொரு அர்த்தத்தை கொடுக்கிறது..

ஓர் ஆணை மயக்கும் பெண் என்ற கான்சப்ட் கிடைத்தால் , நம் ஆட்கள் பிரித்து மேய்ந்து விடுவார்கள்.. ஆனால் படத்தில் துளியும் ஆபாசம் இல்லை. சில முத்தக்காட்சிகளும்கூட இயல்பாக அமைந்துள்ளன.
ஒளிப்பதிவு மிக சிறப்பாக இருந்தது…ஒளியும் இருளும் கலந்த சந்திப்பொழுதுகளை இவ்வளவு அழகாக எந்த படத்திலும் பார்த்தது இல்லை.
ஒரு பெண்ணின் , ஆணின் ஆயுட்காலம் வெகு குறைவு.. ஆனால் பெண் தன்மையும் , ஆண் தன்மையும் என்றென்றும் இருப்பன. அந்த ஆண் தன்மையும் பெண் தன்மையும் இணையும்போதுதான் ஒரு செயல் உருவாகிறது… இதைத்தான் படம் சொல்கிறது.. காட்டில் பெண் வாசனையே இல்லாமல் இருந்தபோது சாதிக்க முடியாததை , பெண்மை தன்னை ஆகர்ஷிக்க அனுமதிக்கையில் சாதிக்க முடிகிறது .


ஓஷோ ஒரு கதை சொல்லி இருப்பார்.. ஒரு நாட்டில் பயங்கர வறட்சி. மழையே இல்லை.. ஒரு துறவியை வரவழைத்தார்கள்.. அவர் இயற்கையின் ஒழுங்கு , மனிதர்களின்  ஒழுங்கு எல்லாம் முற்றிலும் சீர்கெட்டு இருப்பதைக் கண்டார். ஒன்று ஒழுங்குடன் இருந்தால்தான் , இன்னொன்று ஒழுங்காகும் என அறிந்து , ஒரு குடில் அமைத்தார். அதில் அவரும் அவர் சீடர்களும் முழு ஒழுங்குடன் , உடலாலும் மனதாலும் இருந்து வந்தனர்… வேறு வழியின்றி இயற்கையும் தன் ஒழுங்குக்கு வந்து மழை பொழிந்தது..
ரிஷ்யசிருங்கர் வந்ததும் மழை பெய்வதில் மாய மந்திரம் இல்லை.. அது ஒரு தத்துவம்..
இப்படி தத்துவ ரீதியாக மட்டும் அன்றி சமூக ரீதியாகவும் படம் ஸ்கோர் செய்வது குறிப்படத்தக்கது.
தன் மகன் வைசாலியை காதலிப்பதை ஏற்காமல் ராஜ குரு செய்யும் சதி செயல்கள் அப்போதைய ஜாதி அமைப்பை கண் முன் நிறுத்துகின்றன.

யாரால் அந்த ஊருக்கு மழை கிடைத்ததோ , யாரால் சாபம் நீங்கியதோ அவர்களை மறந்து கொண்டாட்டத்தில் திளைக்கும் மக்களின் மறதித்தன்மை அபாரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு கதை நினைவுக்கு வந்தது.

ஓர் ஊரில் மழை ரொம்ப நாளாக இல்லை… மிதக்கும் மேகங்கள் மழை பொழியாமல் போய் விடும்.. மக்கள் துடித்தனர்.. ஒரு பெரிய மேகம் மிதப்பதை பார்த்து அதனிடம் கண்ணீர் மல்க பிரார்த்தித்தினர்… மனமிரங்கி மேகம் மழையாக பொய்தது..
அனைவரும் ஆட்டம் பாட்டம் என்ன கொண்டாடினர்… கடைசியில் ஒருவர் சொன்னார்… “ நாம் கொண்டாட்டத்துக்கு காரணமான மேகத்துக்கு நன்றி சொல்ல மறந்து விட்டோமே”

அடடா..அனைவருக்கும் அப்போதுதான் நினைவு வந்தது… நன்றி சொல்ல வானத்தை அண்ணாந்து பார்த்து மேகத்தை தேடினர்.. நன்றியை ஏற்க மேகம் இல்லை… அதுதான் தன்னை மழையாக கொடுத்து விட்டதே..

உலகம் எப்போதும் இப்படித்தான் இருந்து வருகிறது.. நன்றி கெட்டத்தனமாக நடந்து உலகம் , என்றாவது நன்றி சொல்ல நினைக்கும்போது , நன்றியை ஏற்க உரியவர்கள் இருப்பதில்லை..






-+

3 comments:

  1. மலையாளம் தமிழுடன் தொடர்புடைய மொழி என்பதால் ஆரம்பம் முதலே கேரளத்தில் தமிழ் மொழிப் படங்களே ஆதிக்கம் செலுத்தின. முதல் கேரளப் படம் எடுத்தவர் தமிழர் ஜேசி டானியல் நாடார். முதல் மலையாள சூப்பர் ஸ்டார் சத்யன் நாடார் என மலையாளத்தில் தமிழர் ஆதிக்கமே இருந்தது. 70-களில் கூட கமலஹாசன் நடித்த தமிழ் படங்களே அங்கு பிரபலம். ஆகையால் மலையாளப் படங்களைத் தயாரித்த பலரும் பாலியல் சார்ந்த படங்களைத் தயாரித்தனர். குறைந்த முதலீடு கைக்கும் நட்டமில்லை, தமிழ் படங்களோடு போட்டியும் இல்லை. என்பதால் பல ஜனரஞ்சக படங்கள் கூட பாலியல் காட்சிகளை வைத்தனர். அவளுடைய ராவுகள் கூட அவ்வகையே. ஆனால் 80-90 களில் மம்முட்டி, மோகன்லால் வருகையோடு மலையாள சினிமா தனித்துவ சந்தையை பிடித்ததோடு பொது கதையம்ச படங்கள் வெற்றிப் பெறத் தொடங்கின. இன்று மலையாளத்தில் உலகத் தரத்திலான படங்கள் நூற்றுக்கணக்கில் உண்டு நிழல்குத்து, அண்மையில் வெளியான உஸ்தாத் ஓட்டல், அன்னயும் ரசூலும், அரிகே போன்றவை குறிப்பிடலாம்.. ஆன போதும் தமிழ் படத்துக்கு ஒரு மார்க்கெட், பிட்டு படத்துக்கு ஒரு மார்க்கெட் இருக்கவே செய்கின்றது. இணைய வரவால் பிட்டு பட மார்க்கெட் சரிந்துவிட்டது எனலாம். உலகத் தரத்திலான நல்ல பல படங்கள் மலையாளத்தில் உண்டு. தமிழின் இணைமொழி என்பதால் அவற்றை பார்ப்பதில் புரிந்து கொள்வதில் சிக்கல் இல்லை.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா