Sunday, March 20, 2011

வைகோவின் கலக்கல் முடிவு- கலக்கத்தில் ஜெ, முக - சூடு பறக்கும் மதிமுக அறிக்கை


கடந்த சில நாட்களாக  நடந்து வந்த ஊசலாட்டம் முடிவுக்கு வந்தது… இந்த தேர்தலில் போட்டி இல்லை என மதிமுக அறிவித்துள்ளது..இதன் மூலம் அடுத்த தேர்தலில் ஒரு முக்கிய சக்தியாக இருக்கும் வாய்ப்பை மதிமுக மீண்டும் பெற்றுள்ளது..



கடந்த சில நாட்களாகவே , ஆளுங்கட்சியிடம் உடன்பாடு செய்து கொண்டு விட்டாரோ என சந்தேகப்படும் வகையில், ஜெயலலிதா  நடவடிக்கைகள் அமைந்து இருந்தன…
மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு உரிய இடம் ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார் ஜெ.
வழக்கமாக உணர்ச்சி வசப்பட்டு காரியத்தை கெடுக்கும் வைகோ, அமைதியாகவும் கண்ணியமாகவும் நடந்து கொண்டார்..
கடைசியில் அதிமுக அணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.. இதனால் அதிமுக கலக்கம் அடைந்தது…
இவர் தனித்து போட்டியிட்டு, ஓட்டை பிரிப்பார்.. வெற்றி உறுதி என ஆளுங்கட்சி  நினைத்ததும் நடக்கவில்லை…
ஓட்டு பிளப்பில் ஈடு பட போவதில்லை… தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்து திமுகவுக்கும் அதிர்ச்சி அளித்தார் அவர்..
இதனால் அடுத்த தேர்தலில் ஒரு முக்கிய சக்தியாக இருக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது..
இந்த தேர்தலில் தொங்கு சட்டசபை அமையும்,, அதன் ஆயுள் நீண்ட நாள் இருக்காது என்று கணிக்கப்படும்   நிலையில், அவர் நல்ல முடிவு எடுத்துள்ளார்..
1. குறைந்த இடங்களுக்காக அதிமுக கூட்டணியில் இருந்தால், அதில் இருக்கும் பல கட்சிகளில் ஒன்றாக இருந்திருப்பார்… என்றுமே தனி தலைவராக உருவாகி இருக்க முடியாது
2 மூன்றாவது அணி அமைத்து இருந்தால், திமுக அணியின அபார வெற்றிக்கு காரணமாக அமைந்து இருப்பார்.. அடுத்த ஐந்து ஆண்டுகள் திமுகவை அசைக்க முடிந்து இருக்காது…. மதிமுக கரைந்து இருக்கும்…
இந்த இரண்டில் இருந்தும் தப்பி, அவருக்கு ஒரு நல்ல சூழ்னிலை அமைந்து இருப்பதாக அரசியல்  நோக்கர்கள் கருதுகின்றனர்..
********************************************
மதிமுக  வெளியிட்ட அறிக்கை

2004 பொதுத் தேர்தலுக்குப் பின், தி.மு.க. தலைமையின் அணுகுமுறையால் நடைபெற்ற சில நிகழ்வுகளால் ஏற்பட்ட காரணங்களால், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களுள் 90 விழுக்காட்டினரும், தலைமை நிர்வாகிகள், முன்னணித் தலைவர்களுள் பெரும்பான்மையோரும், அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், ம.தி.மு.க. இடம் பெற வேண்டும் என்று விரும்பியதன் விளைவாக, அந்தக் கூட்டணியில் கழகம் இடம் பெற்றது. தமிழகத்தில் 35 இடங்களும், புதுவையில் 2 இடங்களும், ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டன.
நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்த வைகோ : மறுமலர்ச்சி தி.மு.க. ஒரு ஜனநாயக இயக்கம் என்பதால், கழகத்தில் பெரும்பாலோருடைய கருத்தினை ஏற்று, அண்ணா தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்ததால், கழகத்தின் பொதுச்செயலாளர் மீது துளியும் உண்மை இல்லாத பழியும், நிந்தனையும், தி.மு.க. தரப்பில் இருந்து சுமத்தப்பட்டன. அந்தத் தேர்தலில், மறுமலர்ச்சி தி.மு.கழகம் போட்டியிட்ட தொகுதிகளைக் குறிவைத்து வீழ்த்திட முனைந்த தி.மு.கழகம், தமிழ்நாட்டிலேயே மற்ற தொகுதிகளை விட, கழகம் போட்டியிட்ட தொகுதிகளில், பெரும் பணபலத்தைப் பிரயோகித்தது. அந்தத் தேர்தலில், கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, 213 தொகுதிகளில், தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அண்ணா தி.மு.க. வெற்றி பெற, ம.தி.மு.க. காரணம் : ஆறு சட்டமன்றத் தொகுதிகளில், ம.தி.மு.க. வெற்றி பெற்றது; பல தொகுதிகளில் குறைந்த வாக்குகளில் தோற்றது. 2001 ஆம் ஆண்டு தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ம.தி.மு.க.வின் வாக்குகளை மட்டுமே கணக்கிட்டால், 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், 31 தொகுதிகளில் அண்ணா தி.மு.க. வெற்றி பெற, ம.தி.மு.க. காரணம் ஆயிற்று.அதனைத் தவிர்த்து, ம.தி.மு.க.வின் நாடு தழுவிய புயல் வேகப் பிரச்சாரம், அண்ணா தி.மு.க. தொண்டர்களுக்கு ஊக்கம் அளித்ததோடு, நடுநிலை வாக்காளர்களின் ஆதரவையும் கவர்ந்தது என்பது உண்மை ஆகும். அந்தத் தேர்தலில், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் தவிர, வேறு கட்சிகள் அண்ணா தி.மு.க. கூட்டணியில் இடம் பெறவில்லை. அதற்குப் பின்னர் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல் மற்றும் கூட்டுறவுத் தேர்தல்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கொண்ட முக்கியமான அரசியல் நிலைப்பாடுகளை, மறுமலர்ச்சி தி.மு.கழகம், உறுதியாக ஆதரித்துச் செயல்பட்டது.தமிழக சட்டமன்றத்தில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்து முழுமனதோடு இணைந்து செயல்பட்டது.
திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், மறுமலர்ச்சி தி.மு.கழகம் வெற்றி பெற்று இருந்த தொகுதி என்றபோதும், அண்ணா தி.மு.கழகம் தானே போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தியபோது, அதனை ஏற்றுக் கொண்டது. கம்பம், தொண்டாமுத்துடர் ஆகிய தொகுதிகள் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில், தேர்தலைப் புறக்கணிப்பது என்ற அண்ணா தி.மு.க.வின் முடிவை, மறுமலர்ச்சி தி.மு.கழகமும் ஏற்றுக் கொண்டது.
ஈழத்தமிழர் பிரச்சினையில், சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் உள்ளிட்ட, முக்கியமான கொள்கைகளை,மறுமலர்ச்சி தி.மு.கழகம், கூட்டணிக்காக ஒருபோதும் சமரசம் செய்து கொண்டது இல்லை. இதனை, அண்ணா தி.மு.க. தலைமை நன்றாகவே அறியும். ஏனெனில், 2006 சட்டமன்றத் தேர்தலின்போது, ம.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், 2009 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலும், ஈழத்தமிழர் பிரச்சினையில், ம.தி.மு.க.வின் நிலைப்பாடு, திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது கூட்டணி பிரித்து கொள்வதில் நடந்தது என்ன ? :
நடைபெற இருக்கின்ற பொதுத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து, அண்ணா தி.மு.க. குழுவினருடன் ம.தி.மு.க. குழு, நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியது. கடந்த முறை போட்டியிட்ட 35 இடங்களை மீண்டும் ஒதுக்கிடுமாறு கேட்டுக் கொண்டது.இரண்டாவது சுற்றுப் பேச்சுகளின்போது, 30 தொகுதிகளாவது ஒதுக்கப்பட வேண்டுமெனக் கோரியது.மார்ச் 8 ஆம் நாள் நடைபெற்ற, நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போதுதான், ம.தி.மு.க.வுக்கு ஆறு இடங்கள் மட்டுமே ஒதுக்க முடியும் என அ.தி.மு.க. தலைமையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.குறைந்தபட்சம், 23 தொகுதிகளாவது ஒதுக்குமாறு கழகத்தின் தரப்பில் இருந்து கேட்டுக் கொண்டபோதும், மார்ச் 12 ஆம் தேதியன்று, மேலும் ஒரு தொகுதி என ஏழு தொகுதிகள் ஒதுக்குவதாகக் கூறப்பட்டது. மறுநாள், 13 ஆம் தேதி, அ.தி.மு.க. தரப்பில் இருந்து இன்னும் ஒரு தொகுதியைச் சேர்த்து, 8 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.மார்ச் 14 ஆம் தேதி காலை 11 மணி அளவில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை, அவரது இல்லத்தில் அண்ணா தி.மு.க. சார்பில் சந்தித்த, திரு ஓ. பன்னீர்செல்வம் அவர்களும், திரு செங்கோட்டையன் அவர்களும், மார்ச் 13 ஆம் தேதி அன்று, அ.தி.மு.க. தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட எட்டுத் தொகுதிகளைக் கொடுக்க இயலாது என்றும், ஒரு தொகுதியைக் குறைத்து, ஏழு தொகுதிகளே தர முடியும் என்றும், தங்கள் கட்சித் தலைமை தெரிவிக்கச் சொன்னதாகக் கூறி விட்டுச் சென்றார்கள்.
இதன்மூலம், ம.தி.மு.க.வைப் புண்படச் செய்து, தாங்களாகவே கூட்டணியை விட்டு வெளியேற வைக்க வேண்டும் என்று, அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டதை உணர முடிந்தது. அதன்பின்னர், அதே நாளில், மாலை நான்கு மணி அளவில், திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், திரு செங்கோட்டையன் அவர்களும், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, முதல் நாள் கூறியபடி, 8 தொகுதிகளை ஒதுக்கத் தயாராக இருப்பதாக, அ.தி.மு.க.தலைமையின் சார்பில் கூறினார்கள்.
15 ஆம் தேதி இரவு, அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரின் பிரதிநிதிகள், வைகோ அவர்களைச் சந்தித்து, அதிகபட்சமாக 9 இடங்கள்தான் தர முடியும் என்று தெரிவிக்கச் சொன்னதாகக் கூறினார்கள்.மறுநாள், 16 ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில், மீண்டும் அதே பிரநிதிகள், முதல் நாள் இரவில் கூறியதையே திரும்பவும் உறுதிப்படுத்தி, இதை ஏற்றுக்கொண்டு உடன்பாட்டில் கையெழுத்து இட வருமாறு, அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் அழைத்ததாகக் கூறினார்கள். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, 23 இடங்கள் என்பதில் இரண்டு இடங்களைக் குறைத்துக் கொள்கிறோம்; நாங்கள் கேட்கும் 21 இடங்களைத் தருவதாக இருந்தால், உடன்பாடு குறித்துப் பேசுவோம்; அதைத் தவிர்த்து இனி பேசிப் பயன் இல்லை’ என்று கூறி விட்டார்.
அன்று மாலையிலேயே, ஏற்கனவே மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 74 இடங்கள் போக, மீதம் உள்ள 160 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்ததன் மூலம், கூட்டணியில் ம.தி.மு.க. இடம் பெறவில்லை என்பதை, அ.தி.மு.க. தலைமை அறிவித்தே விட்டது. 2006 ஆம் ஆண்டில் இருந்து அ.தி.மு.க. கூட்டணியில் நம்பிக்கைக்கு உரிய தோழமையைக் கடைப்பிடித்து வந்த மறுமலர்ச்சி தி.மு.கழகத்தை முதலில் அழைத்துப் பேசி தொகுதி உடன்பாடு செய்திட வேண்டிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்காமல், திட்டமிட்டே உதாசீனப்படுத்தி விட்டது. மறுமலர்ச்சி தி.மு.க. நடத்தப்பட்ட விதம் குறித்து மக்கள் மன்றத்தில் எழுந்த விமர்சனத்தால், 19 ஆம் தேதியன்று காலை 10 மணி அளவில், திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், திரு செங்கோட்டையன் அவர்களும், ம.தி.மு.க. தலைமை நிர்வாகிகளை, தாயகத்தில் சந்தித்து, 12 தொகுதிகளைத் தருவதாக, அ.தி.மு.க. தலைமையின் சார்பில் தெரிவித்தார்கள். ஏற்கனவே கூறியபடி, ம.தி.மு.க. கேட்கும் 21 தொகுதிகளைத் தருவதாக இருந்தால், தொகுதி உடன்பாட்டுக்கு இசைவு அளிக்க முடியும் என்று ம.தி.மு.க. தரப்பில், அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.தொகுதிப் பங்கீட்டில், அனைத்திந்திய அண்ணா தி.மு.க. தலைமை, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தை நடத்திய விதமும், கடைப்பிடித்த போக்கும், கழகத்தின் உள்ளங்களை மிகக் கடுமையாகக் காயப்படுத்தி விட்டது.
ஜெ., போக்கில் மாற்றமில்லை :
அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் அவர்களுடைய நடவடிக்கைகளில், அணுகுமுறையில், காலம் தந்த படிப்பினைகளால் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும் என்று நம்பியது, முற்றிலும் பொய்த்துப் போய்விட்டது. அவருடைய போக்கிலும், அணுகுமுறையிலும், எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. அகந்தையும், ஆணவமும், தன்னிச்சையான அணுகுமுறையும் திட்டவட்டமாகப் புலப்பட்டதற்குப் பிறகு, அவரது தலைமையிலான கூட்டணியில் இனி தொடர்ந்து நீடிப்பதும், வாக்காளர்களைச் சந்திப்பதும், எவ்விதத்திலும் ஏற்பு உடையது அல்ல.
இந்நிலையில், புதிதாக ஒரு அணியை அமைக்க முயலுவதோ, தனித்துப் போட்டி இடுவதோ, ஏதோ ஒரு தரப்பினரை வெற்றி பெறச் செய்வதற்கு, ம.தி.மு.க. கருவியாயிற்று என்ற, துளியும் உண்மை அற்ற விமர்சனத்துக்கே வழி வகுக்கும்.கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெற வேண்டிய தேவை, ம.தி.மு.க.வுக்கு இல்லை.
தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் உருவாக்கி வளர்த்த தன்மானத்தையும், சுயமரியாதையையும், இரு கண்களாகப் போற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், 2011 இல் நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு, புதுவை சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மட்டும் போட்டியிடுவது இல்லை என்றும்; திராவிட இயக்கத்தின் இலட்சியங்களையும், தாய்த் தமிழகத்தின் உரிமைகளையும் வென்றெடுக்கவும், தமிழ் இனத்தின் நலனைக் காக்கவும், தொடர்ந்து உறுதியோடு பயணத்தை மேற்கொள்வது எனவும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.
தலைமைக் கழகம் , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்,

தாயகம்,

சென்னை - 8

20.03.2011.

4 comments:

  1. நாங்கள் ஆட்ச்சிக்கு வந்தால்,

    தண்ணி கலக்காத சரக்கு

    பத்து உள் பாவாடை

    இருபது தாவணிகள்

    தருவோம்

    ReplyDelete
  2. மறுமலர்ச்சி கிடைக்கட்டும்!!

    ReplyDelete
  3. MDMK ..bit too late to take this decision ,,u must come out from the alliance very before to save u r image...

    ReplyDelete
  4. ,u must come out from the alliance very before to save u r image...”

    i dont think so,

    by giving maximum chancce to AIADMk, they (MDMK ) kave shown that they are loyal and trust worthy to their partners . this image will help them in next few years

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா