Friday, March 11, 2011

பிளாஷ் ஓவியம்- சிறுகதை


நண்பர் நிர்மலின் சிறுகதை இது.
சற்று மாறுப்பட களத்தில், மாறுபட்ட கோணத்தில் அற்புதமான நடையில் எழுதி இருக்கிறார்.
கதைக்குள் ஒளிந்து இருக்கும் கதை அருமை…
படித்து பாருங்கள்
**********************************************************************************
பிளாஷ் ஓவியம்
-Mrinzo நிர்மல்
 
தராசுரம் வந்து சேர மாலை ஆகிவிட்டது. தஞ்சாவூரில் மதியம் சாப்பிட்டுவிட்டு காரில் வந்து சேர்ந்தோம். நான் மற்றும் எனது நண்பன்.
                   நாங்கள் கோவிலின் உள்ளே நுழையும் போது என் நண்பன் ஒரு காட்சியை கண்பித்தான். எனக்கும் அது வித்தியாசமாக பட்டது .
அந்த கோவிலின் வாசலின் ஓரத்தில் ஒரு பையன் அமர்ந்து , ஏதோ வரைந்து கொண்டிருந்தான். எட்டி பார்த்ததில் அவன் அந்த கோவிலின் வாசலில் உள்ள ஒரு சிற்பத்தை பார்த்து மிகவும் கவனத்தோடு வரைந்து  கொண்டிருந்தான்.

அந்த பையன் சுமார் 16  வயது இருப்பான் . நல்ல கலரா இருந்தான். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்த்த எனக்கு பனை மரத்தை தவிர எல்லாம் கலர்தான் . ஆனால் நான் சொல்லுவது அப்படி இல்லை, அந்த பையன் மா நிறத்தை காட்டிலும் நல்ல கலர். ஒல்லியான தேகம், அப்போதுதான் முளைக்க ஆரம்பித்த மீசை என்று இருந்தான்.
”பாருடா,  இந்த சின்ன வயசில இந்த பையன் எவ்வளவு  ஆர்வமா ஓவியம் வரைந்து கத்துக்கிறான்!! “  என்றேன்.  என் நண்பன், “ அங்கே பாரு . அவன்கிட்ட இன்னும் நெறைய ஓவியம் இருக்கு அவன் வரைந்ததாக இருக்கும், வா போய் பார்ப்போம்  ”என்றான்.
இருவரும் அவன் அருகே சென்று பார்த்தோம்.
12 ஆம் நூற்றாண்டு  அந்த சிற்பம் . அதை செதுக்கிய,  பெயர் தெரியாத , என்றோ ஒரு காலத்தில் வாழ்ந்த அந்த சிற்பியிடம் அந்த பையன் படம் வரைந்து கற்றுகொண்டிருந்தான், இல்லை உரையாடி கொண்டிருந்தான்.
அவனிடம் போய் அவனது ஓவியத்தை பற்றி கேட்பது ஒரு தவத்தை கலைப்பதுபோல என்று கருதி கோவிலின் உள்ளே சென்றோம். கோவில் உள்ளே போவதற்கு முன்பு கையில் வைத்திருந்த டிஜிட்டல் கேமரா முலம் அங்கு இருந்த நந்தி மற்றும் கோவிலின் நுழைவாயில் ஆகியவற்றை க்ளிக் செய்தேன்.
         சிறிய கோவில்தான்.  ஆனால் அதிகமான சிற்பங்கள், ஒரு இன்ச் அளவு கூட இடம் விடாமல் எங்கும் சிற்பம்.சிற்பம் சிற்பம்.
அதிகமாய் கூட்டம்   இல்லை, யாராவது guide இருக்காரா என்று விசாரித்தோம், கோவிலின் ஒருபுறத்தில் வேலை நடந்து கொண்டிருந்தது, அங்குதான் guide இருப்பார் என்றார்கள். அங்கு சென்று விசாரித்து கைடை பிடித்தோம். சிறிது நேர ஃபார்மல் உரையாடல்களுக்கு பின் எங்களுடன் இணைந்தார். அங்கேயே இருப்பவர் என்பதால் பல விஷ்யங்கள் தெரிந்து இருந்தன…
சிறு அறிமுகம் கொடுத்த பின் கோவில் சிறபங்களை பற்றி சொல்ல ஆரம்பித்தார், ஒரு சிற்பத்தை காட்டி ”இந்த சிற்பத்தை இதை பார்க்கும் போது உங்களுக்கு என்ன தெரிகிறது ” கேட்டார். 
“ஒரு பெண் இரு காலை தூக்கி  நடனம்  ஆடுகிறாள்”   என்றேன் நான் அவசரமாக. “இல்லை , சாகசம் செய்கிறாள் “ திருத்தம் சொன்னான் நண்பன் என்னை சற்று கர்வமாக பார்த்தபடி.
என் நண்பனை பார்த்து புன்னகைத்த அவர் ,” கரெக்ட் .  இப்போ அந்த காலை மறைத்துவிட்டு பாருங்கள் ” என்றார்,
அட இன்னும் இரு ஜோடி கால் அந்த பெண்ணின் இடப்புறத்திலும் வலப்புறத்திலும் இருப்பதாய் தெரிந்தது, அது illusion போல செதுக்கப்பட்ட சிற்பம் . மூன்று ஜோடி கால்கள் . ஆனால் ஒரு பெண்ணின் முகம். இந்த illusion பற்றி அவர் எங்களுக்கு சொல்லாமல் இருந்திருந்தால் எங்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்லவேண்டும், மீண்டும் ஒரு கிளிக்,  கேமராவில்.. சிறிய சிற்பம், கொஞ்சம் வெளிச்சம் கம்மி. பிளாஷ் இல்லாமல் எடுக்க முடியாது, கைடை கேட்டேன்,
“பரவால்ல சார் எடுத்துகிடுங்க”  என்றார். மீண்டும் மீண்டும் கிளிக் மீண்டும் மீண்டும் பிளாஷ். 
            கோவிலின் மண்டபத்தில் உள்ள மற்ற சிற்பங்களை பார்த்து கொண்டு  இருக்கும்  போதுதான் கவனித்தேன். வாசலில் வரைந்து  கொண்டிருந்த பையன் உள்ளே வந்துகொண்டிருந்தான், ஒல்லியான தேகம், பழுப்பு நிற வேஷ்டி அணிந்திருந்தான், கையில் அவனது ஓவியங்கள். அவனது கண்கள் கோவிலின் மதி சுவற்றின் மீது உள்ள சிற்பங்களை நோட்டமிட்டுகொண்டிருந்தன.
“சார் இங்க பாருங்க சார் எப்படி அடிச்சிருக்கான்!!, எப்படி மேல் சுவற்றில் அடிச்சிருகான் பாருங்க”  என்றார் எங்கள் கைடு. அவர் சொன்னது சிற்ப வேலைபாடுகளை பற்றித்தான். மீண்டும் கிளிக் மீண்டும் பிளாஷ். 
            கோவிலின் பின்புறம் தென்மேற்கில் உள்ள இன்னுமொரு சிற்பத்தை காட்டினர், ”இந்த சிற்பத்தை பார்க்கும் போது என்ன தெரிகிறது ”என்றார், இதற்கு முன்பு பார்த்த அந்த ஒரு பெண் முன்று ஜோடி கால்கள் போலத்தான் இருந்தது,
கைடு கனிவாக புன்னகைத்தார்.
”இந்த சிற்பத்தில் நான்கு ஜோடி கால்கள்” என்றார். தேடினோம் முடியவில்லை .”ரீ கவுண்ட் பயனில்லையே “ நண்பன் கிண்டலடித்தான் .
கடைசியில் அவர் உதவ முன் வந்தார். சிற்பத்தின்  கீழிருந்த இன்னுமொரு ஜோடி கால்களை காட்டினார். மீண்டும் கிளிக் மீண்டும் பிளாஷ். 
                 நான் மட்டும் அந்த சிற்பத்தை பார்த்துக் கொண்டிருந்தேன் அதற்கு முன்பு உட்கார்ந்துகொண்டு, என் நண்பனும் கைடும் ஏதோ பேசியவாறு சிறிது  துரத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.   மீண்டும் அந்த பையன் எனக்கு முன்பாக சென்றுகொண்டிருந்தான் . எனது பார்வையால் அவனை பின்தொடர்ந்தேன், கொஞ்சம் பயந்து பயந்து செல்வது போல இருந்தது.  திடீரென என் நண்பனிடம் பேசிகொண்டிருந்த எங்கள் கைடு அந்த சிறுவனை பார்த்து கத்தினார்
“ ஏய் தம்பி உன்னை எத்தனை தடவை சொல்லிருக்கேன். இங்க படம் வரைய வரகூடாது ”  . அந்த பையன் பரிதாபமாக பார்த்தான்  ”கொஞ்சம் பார்த்துவிட்டு போறேன் சார் “
”அதெல்லாம் முடியாது நீ கிளம்பு ” .
  எனது நண்பன் ஓர் இடது சாரி, அடக்குமுறை எந்த ரூபத்தில் வந்தாலும் எதிர்ப்பான், சும்மா இருப்பானா.
”சார் ..எதுக்கு சார் அந்த பையனை தடுக்கிறீங்க ” சற்று கடுமையாகவே கேட்டான்.
கைடு சற்று பணிவாக ஆனால் உறுதியாக சொன்னார் ” சார் உங்களுக்கு தெரியாது . இந்த பயலுக்கு இதுதான் வேலையா போச்சு, தம்பி நீ கிளம்பு ”என்றார்.
அந்த பையன் கிளம்பினான்.எனது நண்பன், அவனை பார்த்து, ”தம்பி இங்க வா” என்றான்.
  ”உன்னோட பெயர் என்ன தம்பி ”அன்பாக கேட்டான் , சொன்னான் பையன் .
  ”உனது ஓவியங்களை பார்க்கலாமா”
பையன் கொஞ்சம் வெட்கத்துடனும், கொஞ்சம் பரவசத்துடனும் , புதியவர்கள் கேக்ட்கிறார்களே என்று கொஞ்சம் பெருமையுடனும்   அவனிடமிருந்த ஓவியங்களை காட்டினான். ஓவியத்தை பார்க்கும் ஆசையில் நானும் அங்கு சென்றேன்.
சும்மா சொல்ல கூடாது.  அருமையாய் வரைந்திருந்தான், எல்லா ஓவியமும் தாராசுரத்தில் உள்ள சிற்பங்களை அப்படி பதிவு செய்தவை போல இருந்தன. தான் ஒரு பிறவி கலைஞன் என காட்டி இருந்தான்
”, தம்பி சூப்பர்” என்றேன். ”thank you ” என்றான்.
  ”இந்த ஊரா தம்பி? ”dali illusion
” இல்லை சார் இவன் ஊரு இங்கிருந்து ஏழு கிலோ மீட்டர் ” எங்கள் கைடு.பதில் அளித்தார்
”  தம்பி எப்படி வருவ “ இது என் நண்பன்.
”சைக்கிள்”  என்றான் தலையை குனிந்தவாறு.
என் நண்பனுக்கு பயங்கர கோவம்,
கைடை பார்த்து ”சார் ஒரு பையன் படம் பார்க்காம, கிரிக்கெட் பாக்காம, கூத்து கும்மாளம் என்று இல்லாமல் ஏழு கிலோ மீட்டர் சைக்கிளில் வந்து இந்த சிற்பங்களை பார்த்து வரைந்து பயிற்சி பெறுகிறான் அதற்கு உங்களை போல ஆட்கள் பெருமை படணும் சார், இப்படி விரட்டினா எப்படி? எப்படி வரைஞ்சிருக்கான் !!”   என்றான். 
அலட்சியமாக பையனை பார்த்த  கைடு ”இதெல்லாம் என்ன சார், இந்த ஊர் பேங்க் மேனேஜர் ராமசேஷன் மகள் இதைவிட சூப்பரா வரைவாள்” என்றார்.
”தம்பி உங்கள் அப்பா என்ன பண்றார் ?”  என் நண்பன்
” பாத்திரத்திற்கு பாலிஷ் போடும் வேலை பார்க்கிறார் “  பையன்
     ”20 தலைமுறையாக கல்வியும் கலையும் கற்று வேதங்கள் படித்து பொருளாதார சுகத்தில் வாழும் உங்க பேங்க் மேனேஜர் பொண்ணு வரைவது  பெருசு இல்ல, ஏழு கிலோமீட்டர் சைக்கிளில் வந்து படம் வரைகிறானே ,  பாத்திரத்திற்கு பாலிஷ் போடுபவனின் பையன் .. இதுதான் சார் சிறப்பு. எப்ப சார் நாம மாறுவோம்,? இப்படி காலம் காலமாய் வாய்ப்புகளை மறுத்துவிட்டு ஏறி வாருங்கள் என்றால் எப்படி ஏறுவான். யாருக்கு தெரியும்!! இந்த பையன் நாளைக்கு  ஒரு ரவி வர்மாவாகவோ அல்லது MF ஹுசைனைகாவோ  வரலாம்.  தம்பி நல்லா வரைஞ்சி பாரு, எப்போனாலும் வந்து வரைஞ்சி பாரு, இப்படிப்பட்ட ஆட்களுக்கெல்லாம் பயப்படாத ரொம்ப கொடச்சல் கொடுத்தா இந்த சிற்பத்தை எல்லாம் பேர்த்து கொண்டு போய் வீட்ல போய் வரைந்து பாரு. ” ஆவேசமாக உறுமினான் என்  நண்பன்.  
எனக்கு என்னவோ பம்பாய் படத்தில் அரவிந்தசாமி கடைசியில் வசனம் பேசின மாதிரி இருந்தது,
       எங்கள் கைடு, அமைதியாக , அலுவலக ரீதியான குரலில் பேசினார்  ”இல்லை சார், இந்த கோவில்ல வரையனும்னா ஒரு procedure இருக்கு. Archeology Survey Of India Office இல் போயி ஒரு லெட்டர் வாங்கிட்டு வரணும் .அப்புறம்தான் நாங்க ஓவியம் வரைய அனுமதிப்போம் ” என்றார்.old couple
     உடனே ”தம்பி நீ என் லெட்டர் வாங்கிட்டுவரகூடாது ”என்றேன்.
”இல்ல சார் நான் ஓவிய கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறேன், இங்க வரையறதுக்கு கடைசி வருசம்தான் அனுமதிப்பாங்க ” தோல்வியை ஒப்புக்கொள்ளும் குரலில் சொல்லி விட்டு கிளம்பினான்..
கோவிலை சுற்றி பார்த்தபின்பு என் நண்பன் மிகவும் upset. 
நான் சொன்னேன் ” நண்பா அந்த illusion சிற்பம் பார்த்தியா ?அதுபோலத்தான் உனது புரட்சி எல்லாம், முழுசா உண்மை தெரியாமல் உன்னை மாதிரி ஆட்கள் புரட்சி அது இது என்று   இறங்கிவிடுகிறார்கள்,  உண்மை எனபது என்ன?  அது நமது அறிவுதான், அறிவு எனபது அறிதல். ஒரு விஷயத்தை பற்றி முழுசா அறியாமல் புரட்சி செய்ய பார்த்தால் எப்படி? ASI rule இருக்கும்போது பாவம் அந்த கைடு என்ன பண்ணுவார்? எப்படி நீ இந்த சிற்பத்தை பெயர்த்துட்டு போய் வரை, என்றாய்? “  கிண்டலான குரலில் கேட்டேன்
       ” Bullshit, உன்ன மாதிரி போர்ஷுவாக்கள் இருக்கிற வரைக்கும் இந்த ஓவிய சிறுவன் மாதிரி எத்தனயோ கலைஞர்களை, தொழிலாளர்களை, திறமைசாலிகளை , பொருளாதரத்தில் பின்னுக்கு இருபவர்களை   அதிகாரத்தில் இருபவர்கள் அடக்கி கொண்டும், வாய்ப்பை மறுத்துகொண்டும் இருப்பார்கள்.
என்ன பெருசா ரூல் பேசுற?
பிளாஷ் அடிச்சி போட்டோ எடுக்க கூடாதுன்னு விதி முறை இருக்கு, அது உனக்கும்  தெரியும் அந்த கைடுககும் தெரியும் அப்புறம் என்ன மயிருக்கு நீ போட்டோ எடுத்தே, Why the Fuck he allowed you. Tell me. just because you are going to give 150 rupees?
நீ இந்த போட்டோவை facebook இல் போடுவே அப்புறம் உன்னை மாதிரி என்னும் சில மண்ட வீங்கிகள் லைக், லைக் என்று போடுவார்கள், நீ உன்னோட ஈகோவை சொரிந்துகொள்வாய். போங்கடா உங்க ரூல்சும் மண்ணாங்கட்டியும்”  உணர்ச்சி வசப்பட்டு இருக்கிறான்..இதய ஆழத்தில் இருந்து பேசுகிறான் என்பது அவன் பயன்படுத்திய வார்த்தைகளில் இருந்து தெரிந்தது. வழக்கமாக இந்த வார்த்தைகளை பயன்படுத்த மாட்டான்.  
  ”டிரைவர் அண்ணன் அந்த கடை பக்கம் வண்டியை நிறுத்துங்க, டிஜிட்டல் காமெராவில் பாட்டரி டவுன் ஆகிவிட்டது பாட்டரி வாங்கணும்”  என்றேன்.  கார் நின்றது,
“டிரைவர் அண்ணன் இது நோ பார்க்கிங் கொஞ்சம் தள்ளி நிப்பாட்டுங்க” என்றேன்.
”அதெல்லாம்  ப்ரோப்ளம் இல்ல சார் . போய் வாங்கிட்டு வாங்க ” என்றார் டிரைவர், நண்பனும் சிரிததபடி ஆமோதித்தான்.
தயங்கினேன்.. “மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும், தவிர, யாராவது போலிஸ் வந்தாலும் பிரச்சினை “
.  ” அதெல்லாம் வந்தா கரெக்ட் பண்ணிக்கலாம் “ பர்சை தடவியபடி, நோ பார்க்கிங் போர்ட் அருகில் வண்டியை நிறுத்தி நண்பன் புகை பிடிக்க ஆரம்பித்தான்.
  ஒன்னும் புரியாம நான் அந்த சாலையை கடந்து பாட்டரி வாங்க போனேன். 

- ***************************************************************************************************************

- இது ஒரு Mrinzo நிர்மல் படைப்பு

11 comments:

  1. தொடர்ச்சியாக பிம்பங்கள் கட்டமைக்கப்படுகின்றன. கொஞ்ச நேரத்தில் அவை கலைத்துப் போடப்படுகின்றன. புது பிம்பங்கள் உருவாகின்றன. பிம்பம் எது, உண்மை எது அல்லது எந்த பிம்பம் உண்மை என்ற சந்தேகம்தான் இறுதியில் மிஞ்சுகிறது.

    ReplyDelete
  2. தாராசுரம் கோவில் எங்கள் கும்பகோணம் வீட்டில் இருந்து அரைக் கிமீ தொலைவு. அது அவ்வளவு சிறய கோயில் என்று சொல்லமுடியாது.

    பாலிஷ் பட்டறை என் மனதிற்கு மிக நெருக்கமான விஷயம். ஏற்கனவே சொம்பு புராணம் என்று ஒரு பதிவு போட்டிருக்கிறேன் இதைப் பற்றி. ஏழு கிமீ தொலைவில் திருநாகேஸ்வரம், சுவாமிமலை, நாச்சியார்கோயில் (பத்து கிமீ) போன்ற ஊர்கள் உண்டு. அங்கெல்லாம் கூடப் பாலிஷ் பட்டறைகள் உண்டு.

    கும்பகோணம் பக்கத்தில் கொட்டையூரில் ஓவியக் கல்லூரி உண்டு.

    எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது இது உண்மை நிகழ்வு என்று என் மனதிற்குப் படுகிறது.

    ReplyDelete
  3. Still looking at those illusion paintings.

    ReplyDelete
  4. நிர்மலின் கதைகளில் மிகவும் பிடித்தது இது. கதை சொல்லும் யுக்தி அருமை . கோபியின் விளக்கத்துக்கு பின் இன்னும் அதிகமாக ஈர்க்கிறது

    ReplyDelete
  5. மாறுபட்ட களம், மாறுபட்ட கோணம், மாறுபடும் நியாயங்கள்... அருமையான கதை மற்றும் படங்கள்!

    ReplyDelete
  6. KADHAIKALUM UDAN ULLA PADANGALUM SUPER. NIRMAL ENGAYOOO POITADA........

    ReplyDelete
  7. நிர்மல் சார் சூப்பர் ஸ்டோரி ,படங்களும் அருமை

    ReplyDelete
  8. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இன்னொரு மனிதன் இருப்பது தெரியும், அதையே வேறு விதமாய் காட்டும் ஓவியங்கள், கதை அருமை, ஓவியமோ அருமையோ அருமை.
    you rock பார்வையாளன்

    ReplyDelete
  9. படங்களுக்குள் படங்கள். அருமையான படம். சிறப்பான கதை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_6115.html

    தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.பார்த்து, தங்கள் கருத்துரைகளைத் தெரியப்படுத்துங்கள். நன்றி.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா