Sunday, November 16, 2014

நயன் தாரா குறித்து திருக்குறள் - வள்ளுவரின் தீர்க்க தரிசனம் - மிக்சர் போஸ்ட்

எந்த விஷ்யத்தையும் நகைச்சுவையாக சொல்லக்கூடிய எழுத்தாளர் தேவன்.. ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்தவர்.. 43 வயதிலேயே இறந்து விட்டார்.
இவர் எழுத்துகள் எல்லோமே எனக்கு பிடிக்கும் என்றாலும் , வைராக்கியத்துடன் கூடிய சபதம் / வாக்குறுதி என்பது குறித்த கட்டுரையில் அவர் சொன்ன ஒரு தகவல் என்னை கவர்ந்தது...
புத்தாண்டில் பெயரளவுக்கு எடுக்கும் சபதம் போலன்றி உண்மையில்யே சபதம் மேற்கொள்ள வேண்டும் என சொல்லும் அவர் கீழ்கண்ட மகாபாரத நிகழ்ச்சியை சொல்கிறார்.
மகாபாரத போரில் ஆயுதம் ஏந்த மாட்டேன் என சபதம் செய்து இருக்கிறார் கிருஷ்ணர்.. அவரை ஆயுதம் ஏந்த வைப்பேன் என் பீஷ்மர் சபதம் செய்து இருக்கிறார் ( பீஷ்மர் வேறு சில சபதங்கள் செய்து அதில் வெற்றி பெற்றது தனிக்கதை )
எவ்வளவு பிரச்சனை வந்தாலும் கிருஷ்ணர் ஆயுதம் ஏந்தவில்லை.. ஒரு கட்டத்தில் அர்ச்சுனர் மேல் கடுமையான ஆயுதங்களை ஏவ செய்கிறார் பீஷ்மர்.. வேறு வழியின்றி , அர்ச்சுனனை காக்க அந்த இடத்தில் மட்டும் ஆயுதம் ஏந்த முடிவு செய்கிறான் கிருஷ்ணன்..
ஒரு மனிதன் ஒரு விஷ்யத்தில் தீவிரமாக இருந்தால் , கடவுளும் சற்று பணிந்து போய் , அந்த மனிதனின் லட்சியம் நிறைவேற உதவுவார் என முடிக்கிறார் தேவன்
______________________________________________
பழைய தோழிக்கு ரொம்ப நாள் கழித்து ஒரு போன் போட்டேன்...சும்மா ஒரு பல்ஸ் பார்க்க ...
- ஹலோ.. என்ன திடீர்னு?
- இல்ல,, இன்னிக்கு கவிதை தினம்னு சொன்னாய்ங்க... உன் நினைவு வந்தது.. ஹி ஹி
-ம்ம்ம்... நீ மாறவே இல்லை . சரி,,,அப்புறம் பேசலாம்...
மாறவில்லை என்பது பாராட்டா , திட்டா ?
_________________________________________________
தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி
தாதி தூதோ தீது... தத்தை தூதோதாது..
தூதிதூ தொத்தித்த தூததே- தூதி தூது ஒத்தித்த தூததே- தோழியின் தீது , நாள் ஒத்திப்போட்டுகொண்டே செல்லும்..
தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது- தாதொத்த
துத்தி தத்தாதே துதித்துத்தே தொத்து தீது
மலர் தாது போன்ற தேமல் என் மேல் படராவண்ணம் , தெய்வத்தை திதித்தலும் தீதாகும்..
தித்தித்த தோதித் திதி- தித்தித்தது ஓதித்திதி.. எனவே யாரும் ஆணி பிடுங்க வேண்டாம்.. எனக்கு தித்திப்பான காதலன் பெயரை சொல்லிக்கொண்டு இருப்பதே எனக்கு போதுமானது
- காளமேக புலவர்
______________________________________________
நூலகப்பணியார்கள் வழக்கமாக இயந்திரத்தனமாக இருப்பார்கள் .அல்லது கோபமாக இருப்பார்கள் . எங்கள் அலுவலக பக்கத்தில் ஒரு சின்ன நூலகம் இருக்கிறது. தாமதமாக ரிட்டரன் செய்தால் ,என்ன லேட் ஆயிருச்சா என நூலக பெண் சிரித்தவாறே கேட்பார் .அவார்ட் கிடைச்சிருக்காமே என கேட்பது போன்ற தொனி . இதை ரசிப்பதற்காகவே நான் லேட்டாக ரிட்டர்ன் செய்து ஃபைன் கட்டுவேன் . அய்யோ , அய்யோ
________________________________________
இறந்ததற்கு ஏன் அழுகிறீர் ? உயிர் போனதற்கா , உடல் போனதற்கா . உயிரை நீங்கள் பார்த்ததே இல்லை . பார்க்காத ஒன்று இருந்தால் என்ன போனால் என்ன ? உடல் போகவில்லை . மாட்டிக்கொண்ட திருடன் போல கை கால் கட்டி , நீங்கள்தானே தீயிட்டு கொளுத்துகிறீர்கள் . பிறகு ஏன் அழுகிறீர்கள் -கபிலர்
____________________________________________________
மின்விசிறி ஓடுவதால் அறையின் வெப்பநிலை கூடுகிறதே தவிர குறைவதில்லை . ஆவியாதல் பண்பை ஊக்குவிப்பதால் சற்று வசதியா உணர்கிறோம் . ஆனால் இதற்காக உடல் ஆரோக்கிய ரீதியாக நாம் கொடுக்கும் விலை அதிகம் . குளிர்சாதன இயந்திரக்காக இயற்கைவள ரீதியாக அதிக விலை தருகிறோம் . இவை இல்லாமல் இன்று வாழ முடியாதுதான் . ஆனால் நம் தனிவாழ்வில் இவற்றின் பயன்பாட்டை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் .
____________________________________________________
பீதியை கிளப்பிய தமிழ் பாடல்..
கிரிவலத்தின் போது பார்த்த ஒரு பாடல் பீதியை கிளப்பியது..
அந்த காலத்தில் என் தமிழாசிரியர், நீ எல்லாம் ஏண்டா படிக்க வர்ற...இப்படி சேட்டை பண்ணா , உன் கொ**லேயே ஏறி மிதிச்சு கொன்னுடுவேன் என சற்று அன்பார்லிமெண்ட்ரியாக திட்டுவார்.. ஆனால் நல்ல மனிதர்...
கீழ்கண்ட பாடல் எனக்கு அதை நினவூட்டியது.. அந்த கால டீச்சர்கள் ரொம்ப கடுமையா தண்டிச்சு இருக்காங்க போலயே என நினைத்தேன்...
வியலூர் இருந்தருள் விமலா போற்றி
கொட்டையூ ரிற்கோ டீச்சரா போற்றி....
ஆனால் குழப்பம்.. டீச்சர் என்பது தமிழ் வார்த்தையா ஆங்கில வார்த்தையா.ம்ம்ம்.... அந்த காலத்தில் எப்படி ஆங்கில வார்த்தை...இரவு முழ்தும் குழப்பம்.
காலையில் வீட்டுக்கு வந்து முதல் வேலையாக பாடலை பார்த்தேன்
அந்த பாடல் இதோ
வியலூர் இருந்தருள் விமலா போற்றி
கொட்டையூரில் கோடீச்சரா போற்றி..
ங்கொய்யால... இதைப்போய் டீச்சரானு மாத்தி பீதியை கிளப்பிட்டீங்களேடா
__________________________________________________________
மதிய வெயிலில் இளநீர் சாப்பிடுவது காதலியின் மடியில் படுத்திருப்பது போல் என்றால் , இரவில் இளநீர் சாப்பிடுவது காதலியை நம் மடியில் வைத்து அழகு பார்ப்பது போன்றது . இறை தேடலுடன் இளநீர் சூப்பர்
______________________________________________________
  நிர்மல் பிறந்த நாளுக்கு ,  நான் எழுதிய கவிதை ( ? !! )

தூத்துக்குடி கொடுத்த சாத்துக்குடியே...
ஏரல் கொடுத்த மாரல் சப்போர்ட்டே....
பின் நவீனத்துவத்தின் பின் கோடே....
தென்னகத்தில் பிறந்து
விண்ணகம் தொடும் அளவுக்கு சாதனை புரிந்து
வியப்புக்கே வியப்பு அளிக்கும் வித்தகனே
நீ ஒரு சிவப்பு ஒபாமா
வேறு யாரும் உனக்கு ஒப்பாகுமா....
ஒன்று கேள் நண்பா...
உனக்கு தில் இருந்தால்
உன் மேல் பாடிடுவேன் ஒரு வெண்பா...
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
- கவி இளவரசு பிச்சை
___________________________________________________________________
சிலரை முதல் சந்திப்பிலேயே பிடித்துப்போய் விடும்.. வெகு நாள் பழகிவரைப்போல பேச ஆரம்பித்து விடுவோம்.. சிலருடன் ரொம்ப நாள் பழகினாலும் , ஒத்துப்போக முடியாது.
இதை படம் பிடித்து காட்டுகிறார் கம்பர்
தொல் அருங் காலம் எல்லாம் பழகினும், தூயர்
அல்லார்
புல்லலர்; உள்ளம் தூயார் பொருந்துவர், எதிர்ந்த
ஞான்றே;
ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற, இருவரும், ஒரு
நாள் உற்ற
எல்லியும் பகலும் போல, தழுவினர், எழுவின்
தோளார்.
வெகு காலம் பழகினும் மன தூய்மை இல்லாதோர் ஒன்று பட மாட்டார்கள்.. மேலோர்கள் உடனே ஒன்று பட்டு விடுவார்கள்.. ஒத்த உணர்வுடன் சந்தித்த சுக்ரீவனும் விபீடணனும் , ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டனர்
___________________________________________________________
என் பள்ளி காலங்களை நினைத்துப் பார்ர்க்கிறேன். எனக்கு அமைந்த ஆசிரியர்கள் லேசாக மனப்பிறழ்ச்சி கொண்டவர்கள் என்பதை விரைவிலேயே கண்டு பிடித்தேன்.. நல்ல ஆசிரியர்களும் உண்டு .. ஆனால் அபூர்வம்..சிறுவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் இது போன்ற முட்டாள்களிடம் இருந்தது என்பதை யோசித்து பார்த்தால் வருத்தமாக இருக்கிறது - அடால்ஃப் ஹிட்லர்
_____________________________________________________
அசோகமித்ரனின் ஒற்றன் நாவலில் ஓர் அருமையான இடம்..
அமெரிக்காவின் சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு போய் இருப்பார்,, பிரபலமான கடை... டைப் ரைட்டர்  வாங்குவார்.. வீட்டுக்கு வந்து செக் செய்து பார்த்தால் அது வேலை செய்யவில்லை... கடைக்கு அவசரமாக போவார்.. பணிப்பெண் இனிமையாக பேசி மாற்றி கொடுத்து விடுவாள்... என்னே வாடிக்கையாளர் சேவை.. அமெரிக்கா என்றால் அமெரிக்காதான் என நினைத்து கொள்வார்.. ஆனால் அவள் அடுத்து செய்த காரியம் அவரை ஏமாற்றம் அடைய செய்யும்,
அவரிடம் வாங்கிய அந்த உருப்படாத டைப்ரைட்டர், விற்பனை செய்யும் டிஸ்பிளேயில் வைத்து விட்டு, அதே இனிய புன்னகையுடன் போய் விடுவாள்... வேறு யாராவது அப்பாவி அதை வாங்க வேண்டியதுதான்
_______________________________________________
ஹன்சிகாவினால் கிடைக்கும் பயனை மதிக்காமல் அதை தூக்கி எறிந்தார் சிம்பு..அப்படிப்பட்ட சிம்புவையும் அவரது உதவியையும் , நயன்தாரா தூக்கி எறிந்தால் , அவருக்கு கிடைக்கும் நன்மை கடலைவிட பெரிது என்கிறார் வ்ள்ளுவர்.. என்னே அவரது தீர்க்கதரிசனம் !!!!
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
_____________________________________________________________
தொலைக்காட்சியில் சிவாஜி கணேசன் நடித்த வாழ்க்கை படம் பார்த்தேன்...
சிவாஜி ஏழை மெக்கானிக்காக இருக்கிறார்.. பிறகு பணக்காரன் ஆகிறார்.. இந்த இரண்டையும் அழகாக பாடி லேங்குவேஜில் வேறுபடுத்திக்காட்டுகிறார்... வசனமோ மேக் அப்போகூட தேவைப்படவில்லை. அற்புதமான நடிப்பு..
அவரை தமிழ் சினிமா வீணடித்து விட்டது என்றே தோன்றுகிறது... இன்றைய இயக்குனர்கள் காலத்தில் அவர் இல்லையே என வருத்தமாக இருந்தது.

___________________________________________________________
ஒரு தோழி... ஆரோக்கியமான நட்பு இருந்தாலும் வாசிப்பில் எங்களுக்குள் ஒரு வித போட்டி உண்டு.. சில அபூர்வமான புத்தகங்கள் பற்றி எழுதுகிறீர்களே... அவற்றை எங்கு வாங்குகிறீர்கள் என அவ்வப்போது கேட்பார்..
“ இங்கு அபூர்வமான புத்தகங்கள் கிடைக்கும் “ என யாரும் விற்பதில்லை.. நான் ப்ல ஊர்களுக்கு செல்வதால், ஊருக்குள் அலைந்து திரிவதால் ஆங்காங்கு அதிர்ஷ்டவசமாக கிடைப்பதை வாங்கிக்கொள்வேன் ... இதெல்லாம் ஆணுக்கு மட்டுமே இருக்கும் அனுகூலம் என சொல்லி அவரை வெறுப்பேற்றுவேன்... ஒரு நாள் வேறு ஒரு விஷயத்துக்காக கோபித்துக்கொண்டு விட்டார்..
அவர் வீட்டுக்கு வருமாறு அடிக்கடி கூப்பிட்டு வந்தார்.. நான் போனதில்லை... ... இப்போது சர்ப்ரைசாக வீட்டுக்கு போய் புத்தகம் பரிசளித்து கூல் செய்யலாம் என் திட்டமிட்டு சென்றேன்..
எதையும் டிரமாட்டிக்காக செய்வது என் இயல்பு... அவர் வீட்டின் அருகே இருந்தவாறே போன் செய்து , வேறு ஊரில் இருப்பது போல பேசினேன்... கொஞ்ச நேரத்தில் திடீரென காலிங் பெல் அடித்து அவர் ரெஸ்பான்சை ரசிப்பது என் திட்டம்...
இப்படி பேசிக்கொண்டு இருந்தபோது தான் ஒரு புத்தக கடை கண்ணில் பட்டது... போய் பார்த்து அசந்து போனேன்... ப்ரிண்டில் இல்லாத அபூர்வங்கள், கிடைப்பதற்கரிய முதல் எடிஷன்கள் என தங்க சுரங்கம்...
வீட்டு பக்கத்தில் இருக்கும் பொக்கிஷத்தை கவனிக்காமல் என்னிடம் ரெஃப்ரன்ஸ் கேட்டு , கோபித்துக்கொள்ளவேறு செய்தாரே என சிரித்துக்கொண்டேன்...
ஒரு சிறிய மூட்டை அளவுக்கு புத்தகம் தேறியது.. இந்த அழுக்கு மூட்டையுடன் , பழைய புத்தகங்களுடன் அவர் வீட்டுக்கு போவது ஒரு மாதிரி இருந்தது... போன் அடித்தது... அந்த தோழிதான்.. “ வெளியூரில்தான் இருக்கிறேன்.. வர லேட் ஆகும்.. வந்ததும் ஒரு நாள் சந்திக்கணும்... எப்ப நேரம் கூடி வருதோ “ என உணர்வு பூர்வமாக சொல்லி விட்டு , வீட்டுக்கு ( என் வீட்டுக்கு ) கிளம்பினேன்...
______________________________________________________
கீதைக்கு பலர் உரை எழுதியுள்ளனர் . காந்தியும் எழுதியிருப்பது சமீபத்தில்தான் தெரிந்தது . ஆச்சர்யத்துடன் படித்தேன் . இணைய தலைமுறைக்கு ஏற்றவாறு சுருக்கமாக எழுதியிருக்கிறார் . பதினைந்து நிமிடங்களில் படித்துவிடலாம் . ஹேட்ஸ் ஆஃப் காந்திஜி
_________________________________________________________
எதிரிகள் தரப்பில் இருந்து ராமனிடம் சேர வருகிறான் விபீடணன் . அவன் உளவாளி , சேர்க்கவேண்டாம் என்கிறார்கள் சிலர் . எதிரி ரகசியத்தை அறியலாம் . சேர்த்து கொள்ளலாம் என்கிறார் சிலர் . ராமன் என்ன முடிவெடுக்கிறான் என்ன சொல்கிறான் என்பது அட்டகாசம் . தம்பி , இந்த அரசியல் எல்லாம் ரெண்டாம்பட்சம் . என்னை நம்பி வந்துவிட்டான் . இவனுக்கு தஞ்சம் அளிக்கமுடியாவிட்டால் , தக்காளி நான் இருந்தால் என்ன செத்தால் என்ன
_____________________________________________________________
மாநகர பேருந்தில் அமர்ந்திருந்தேன் . ஓர் அழகான இளம்பெண் லேடீஸ் சீட்டை தேடினார் . ஃபுல் . வேறு வழியின்றி என் அருகில் அமர்ந்தார் . சற்று நேரத்தில் கூட்டம் குறைந்தது . ஆனாலும் அவர் லேடீஸ் சீட் மாறாமல் என் அருகிலேயே அமர்ந்திருந்தார் . ஏன் ? ? ஒருவேளை நான்தான் என் வால்யூ தெரியாமல் இத்தனைநாள் இருந்து விட்டேனா
____________________________________________________________
டால்ஸ்டாய் கதை ஒன்றின் சுருக்கப்பட்ட / இணையத்துக்கேற்ப சிதைக்கப்பட்ட வடிவம்..
அந்த அரசனுக்கு வாழ்க்கையில் இன்னும் சிறந்த வெற்றிகள் பெற ஆசை... என்ன செய்வது ? யோசித்தான்.. மூன்று கேள்விகளுக்கு விடை தெரிந்தால் எல்லா வெற்றிகளும் வந்து சேர்ந்து விடும் என தோன்றியது.. வாழ்க்கையில் நமக்கு முக்கியமான நபராக யாரை நினைக்க வேண்டும்? ஒரு செயலை செய்ய உகந்த நேரம் எது...? நாம் செய்ய வேண்டிய முக்கியமான பணி என்ன..
அமைச்சர்களிடம் பதில் கேட்டான்... தண்டோரா போட்டு மக்களிடம் கேட்டான்.. சிறந்த பதிலுக்கு பரிசு அறிவித்தான்... முக்கியமான நபர் மன்னர் , அமைச்சர் , மருத்துவர் , குரு ..உகந்த நேரம் அதிகாலை பொழுது , வெள்ளிக்கிழமை , புதன் , ஃபிப்ரவரி மாதம் ,,முக்கியமான பணி கோயில் கட்டுதல் , குளம் வெட்டுதல் , பள்ளிகள் அமைத்தல் என பல்வேறு பதில்கள் குவிந்தன.. அரசனுக்கு திருப்தி இல்லை.. அமைச்சர் அரசனை நெருங்கினார்
-காட்டில் சாமியார் ஒருவர் இருக்கிறார்.. அபார ஞானம்.. அவரை போய் பாருங்கள்..
அரசன் கிளம்பினான்.. சாமியாரின் குடிலுக்கு போனான் ..சாமியார் கண்டு கொள்ளவே இல்லை.. தன் கேள்விகளை கேட்டான்.. சாமியார் ஒன்றுமே சொல்லவில்லை..
அரசன் இரண்டு நாட்கள் காத்திருந்தான்,. பதில் இல்லை... கோபத்துடன் கிளம்பினான்.. -இரவுக்குள் போய் விட வேண்டும்..குதிரையை விரட்டினான்..
போகும் வழியில் ஒரு குதிரை வண்டி கவிழ்ந்து கிடந்தது.. ஒரு மனிதன் மயங்கி கிடந்தான்... நேரம் இல்லாவிட்டாலும் அரசன் குதிரையை நிறுத்தி அந்த மனிதனுக்கு முதல் உதவி செய்தான்.. அவன் கண் விழித்தான்...
- மன்னா.. உங்களை கொல்வதற்காகத்தான் நானும் என் ஆட்களும் காத்திருந்தோம்... மன்னியுங்கள்.. நானே உங்களை பாதுகாப்பாக ஊருக்குள் அழைத்து சென்று விடுகிறேன்..
இருவரும் ஊருக்கு போனார்கள்.. அங்கு சாமியார் இருந்தார்.
அவர் சொன்னார்
- அரசனே..இவனை காப்பாற்றாவிடில் , அவன் ஆட்கள் உன்னை கொன்று இருப்பார்கள்.. அவசர வேலை என்றாலும் அவனுக்காக நேரம் செலவிட்டாய்... உன் அருகில் யார் இருக்கிறார்களோ , நீ யாருடன் தொடர்பு கொண்டு இருக்கிறாயோ அவர்களை மிக முக்கியமானவராக கருதி உன் முழு கவனத்தையும் அவர்களுக்கு அளிக்க வேண்டும்.. நீ என்ன செயல் செய்கிறாயோ அதுதான் உலகிலேயே மிக முக்கியமான செயல் என கருதி முழுமையாக செய்ய வேண்டும்... அப்படி செய்த்தால்தான் நீ தப்பினாய். அதுவும் உரிய காலத்தில் உதவினாய்..உலகிலேயே சிறந்த நேரம் என்பது இந்த கணம்தான்... இவைதான் உனக்கான விடைகள் என சொல்லி கிளம்பினார்..
‪#‎கதை‬ டால்ஸ்டாய்.... சிதைத்து ஷேப் அவுட் ஆக்கியது பிச்சை..
__________________________________________________

உலகெங்கும் ஆன்மீகத்தை பரப்ப வேண்டும் என்பது அந்த சத்குருவின் ஆசை... எல்லா நாடுகளுக்கும் சென்று விட்டார்.. ஒரே ஒரு சின்ன தீவுக்கு மட்டும் போனதில்லை என்பது தெரிய வந்ததும் படகில் அங்கு போனார்.
அங்கு மூவர் மட்டுமே வசித்து வந்தனர்.. கோயில் எதுவும் இல்லை.. தியானம் , வழிபாடுகள் என எதுவும் தெரியவில்லை...
- ஸ்லோகம் கூட எதுவும் தெரியாதா என்றார் சத்குரு வியப்புடன்..
- ஒண்ணும் தெரியாது சாமி... ஒர் செயலை தொடங்கும் முன் ‘ நீங்களும் மூணு பேரு. நாங்களும் மூணு பேரு.. பார்த்து செய்யினு வேண்டிக்கிட்டு நாங்க பாட்டுக்கு செயலில் இறங்கிடுவோம் என்றார்கள் அவர்கள்..
- அட முட்டாள்களா..எப்படி அமர்வது, எப்படி சாமி கும்பிடுவது... என்ன மந்திரம் என்பதை எல்லாம் சத்குரு சொல்லி கொடுத்துவிட்டு படகில் கிளம்பினார்..
நடுக்கடலில் போய்க்கொண்டு இருக்கும்போது , சாமி சாமி என குரல் கேட்டது..திடுக்கிட்டு பார்த்தார்
மூவரும் கடல் மேல் ஓடி வந்து கொண்டு இருந்தனர்..
- சாமி... உங்க மந்திரத்தில் ஒரு டவுட்,,அதுதுதான் ஓடி வந்தோம் என்றார்கள்..
- அது இருக்கட்டும்,, கடல் மேல் எப்படி ஓடி வந்தீங்க...ஏதாச்சும் மந்திரமா..
- மந்திரம் எல்லாம் நாங்க என்ன கண்டோம்... வழக்கம்போல , நீயும் மூவர்.. நாமும் மூவர்..பார்த்து பண்ணு என சொல்லிட்டு கிளம்பி விட்டோம்.. சரி.. தியான மந்திரம் சொல்லுங்க.. வேலை கெடக்கு என்றார்கள்.
- நீங்க கற்க வேண்டியது எதுவும் இல்ல..கிளம்புங்க,, நான் தான் கற்றதை மறக்கணும்
அவர்கள் ஒன்றும் புரியாமல் கடல் மேல் நடந்து வீட்டுக்கு திரும்பலானார்கள்
‪#‎டால்ஸ்டாய்‬ கதை ...ஷேப் அவுட் ஆக்கியது பிச்சை

________________________________________________
நாம் காணும் பொருட்கள் எல்லாம் பல்வேறு தனிமங்களால் உருவானவை... இரும்பு , அலுமினியம் , தங்கம் , ஆக்சிஜன் , ஹைட்ர்ஜன் போன்ற தனிமங்கள் நமக்கு நன்கு தெரியும்..சில பின் நவீனத்துவ தனிமங்கள் இருக்கின்றன...
இவற்றுக்கு என சில பண்புகள் உள்ளன... இவற்றுக்கு என சில பயன்பாடுகள் உள்ளன... ஆனால் உலகில் இவை இருப்பதில்லை !! இவற்றின் இன்மை மட்டுமே இருக்கின்றன,


உதாரணமாக டெக்னீட்டியம் -99 எம் என்ற தனிமம் மருத்துவத்தில் மிகவும் உதவுகிறது... மனித உடலுக்குள் செலுத்தி , இதில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் உள்பகுதிகளை ஆராயலாம்..

ஆனால் கதிர்வீச்சு கொண்ட இது உடலுக்குள் இருப்பதால் பயம் தேவை இல்லை... இதன் (அரை )ஆயுள் காலம் 6 மணி நேரம் மட்டுமே.. அதன் பின் அமைதியாகி விடும்...

இவ்வளவு பயன் மிக்க இந்த தனிமம் உலகில் எங்குமே கிடைப்பதில்லை.. சில நட்சத்திரங்களில் கிடைக்கின்றன... ஆனால் நட்சத்திரம் போய் எடுத்து வர வேண்டியதில்லை... ஆய்வு சாலையில் இதை உருவாக்குகிறார்கள்...
டெக்னீட்டியம் - இதன் அணு எண் 43.. பின் நவீனத்துவ தனிமத்தில் முக்கியமானது இது.. வேறு சிலவும் உள்ளன
______________________________________
யிட்ரியம் எனும் உலோகம் வெகு குறைவாகவே கிடைக்கிறது . இதை சின்ன சின்ன துண்டுகளாக்கினால் எரிந்துவிடும் விநோத தன்மை கொண்டது . நிலவில் ஏராளம் கிடைக்கிறது . ஆனால் இதன் பயன் தற்போதுதான் தெரிய வந்துள்ளது . மின்இழப்பு கொஞ்சமும் இன்றி மின்கடத்த இதன் உலோககலவையால் முடியும் . இது புழக்கத்துக்கு வந்தால் மின்கட்டணம் குறையக்கூடும் 
__________________________
பின் நவீனத்துவ உலோகம் ஒன்றை பார்த்தோம் அல்லவா... அதே போல , மேஜிக்கல் ரியலிச உலோகம் ஒன்று உள்ளது.. இதை நம்மால் பார்க்கவே முடியாது... வெகு சில நிமிடங்கள்தான் இதன் ஆயுட்காலம்...உலகம் முழுதும் தேடிப்பார்த்தாலும் 50 கிராமுக்கு மேல் கிடைக்காது... வேண்டுமானால் செயற்கையாக ஆய்வு சாலையில் உருவாக்கலாம்...
இதன் பெயர் ஃபிரான்சியம் .. அணு எண் 87..
கதிர்வீச்சு தன்மை கொண்ட இதன் பயன்பாடு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை... சீக்கிரம் அழிந்து விடும் இந்த தன்மையை பாசிட்டிவாக பயன்படுத்தி , ஏதேனும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினால் உங்களுக்கு பெரும்புகழ் கிடைக்கும்...வாழ்த்துகள் !!!
___________________________________________________
நான் பார்த்த படங்களில் மறக்க முடியாத படங்களில் ஒன்று லிங்கன்.. பல சுவையான காட்சிகள்..
ஒரு மசோதாமீது வாக்கெடுப்பு... கடும்போட்டி என்பதால் , தானும் வாக்களிக்க முடிவு செய்வார் சபா நாயகர்.. சபா நாயகர் வாக்களிக்க கூடாது.. நம் வரலாற்றில் இப்படி யாரும் செய்ததில்லை என பலர் ஆட்சேபிப்பார்கள்... அவர் சொல்வார்.. வரலாற்றில் இது வரை செய்யாவிட்டால் என்ன.. இப்போது ஒரு வரலாறு உருவாகட்டும்..
****************************************
ஒரு எஞ்சினியருக்கு புரியும்படி , பிரச்சனையை விளக்குகிறார் லிங்கன்.. தம்பி . உனக்கு தெர்மொடைனமிக்ஸ் விதி தெரியும்...அ என்பதும் ஆ என்பதும் ஈ என்பதற்கு சம் நிலையில் இருக்கும் பட்சத்தில் , அ என்பதும் ஆ என்பதும் ஒன்றுக்கொன்று சம நிலையில் இருக்கும் என்பது வெப்ப சலனவியல் விதி... அது போல கருப்பர்களும் , வெள்ளையர்களும் அமெரிக்க சட்டதுக்கு சமமானவர்கள் என்றால் அவர்கள் ஒருவருக்கொருவர் சமம்தானே
_________________________________________________
இந்த சிரசாசனம் இருக்கிறதே . இதை எல்லோரும் செய்யலாமா என்றால் செய்யக்கூடாது . மூளையின் நுண்குழல்கள் பாதிக்கப்டலாம் .வழிகாட்டலுடன் செய்யலாம் . காலையில் நான் அந்த பொசிஷனில் இருந்தபோது ஓசி சாப்பாடு கொண்டு வரும் கொலுசொலியில் பதறி நார்மல் பொசிஷனுக்கு வந்தேன் . பதட்டத்தில் கால் கட்டை விரல் தரையில் மோதி செம அடி .நான் நொண்டுவதை பார்த்து , அடி பலம்போல ,காலிலேயே போட்டாய்ங்க போலயே என மற்றவர்கள் பார்த்ததில் துக்கம் தொண்டையை அடைத்தது

_______________________________________________________________
ஆணும் பெண்ணும் சமம் என்பதை ஏற்கவே மாட்டேன் . ஆணை ஜட்ஜ் செய்வது எளிது . லாஜிக்கலாக மெக்கானிக்கலாக இருப்பான் . பெண்ணை கணிக்கவே முடியாது . நம் தகுதிக்கு மீறிய அன்பை பொழிவாள் . அளவுக்கு அதிகமாக நம்புவாள் . தேவையே இல்லாமல் கோபிக்கவும் செய்வாள் . அவள் அன்பை அட்வாண்டேஜாக எடுத்துக்கொள்ளாமலும் , கோபத்தை இன்சல்ட்டாக எடுத்துக்கொள்ளாமலும் இருக்க பயில வேண்டும் .பெண்மை இல்லாவிடில் உலகம் வெறும் லாஜிக்கல் மெஷினாக இருக்கும் . என்றுமே பெண் ஆணுக்கு சமம் அல்லள் . ஒரு படி மேலானாவள் .
___________________________________________________________________
கடைசி பஸ்சில் சோர்வடைந்த மக்களிடையே பயணித்த எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி.. காலையில் பார்த்த பெண்ணை விட செம அழகு... சேலை கட்டி , எளிய மேக் அப்பில் செம ப்யூட்டியாக இருந்தார்.. மூக்கு என்றால் இப்படி இருக்க வேண்டும் , கண் என்றால் இப்படி இருக்க வேண்டும் என பொதுவாக இருக்கும் விதிகள் எல்லாவற்றையும் மீறி இருந்தார் என்பதே கூடுதல் கவர்ச்சி தந்தது... அழகான சின்னஞ்சிறிய மூக்குத்தி அழகுக்கு அழகு சேர்த்த்து..
கடைசி பஸ் போய் , வீட்டுக்கு நடந்து போனாலும் பரவாயில்லை.. இவர் இறங்கும் இடத்தில் இறங்கி ஒரு சாதாரண நட்பையாவது உருவாக்கிக்கொள்ள வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.. காலையில் நிர்மல் என்னை சீண்டி இருந்ததை மறக்க வில்லை..
அவர் எப்போது இறங்குவார் என கண்கானித்தபடி இருந்தேன்.. நான் அவரை கவனிப்பதை அவரும் கவனித்து விட்டார்.. ரெஸ்பான்ஸ் இல்லை.. அவர் இறங்கவே இல்லை... கடைசி ஸ்டாப் வரை வந்து நான் இறங்கும் ஸ்டாப்பிலேயே இறங்கினார்.. ஒரு வேளை வேறு பஸ் எதுவும் பிடிக்கப்போகிறாரோ.. அதே பஸ்சில் நாமும் ஏறி ஃபாலோ ஆன் செய்யும் அளவுக்கு நிதி நிலை இல்லையே..
ஆனால் அவர் பஸ் ஏறாமால் , நடக்க ஆரம்பித்தார்.. போதிய இடைவெளியில் தொடர்ந்தேன்.. என்ன அதிர்ச்சி,... நான் இருக்கும் தெரு பக்கமே செல்லலானார்.. என்ன எழவுடா என யோசித்த படி சென்றேன்..
என் வீடு லெஃப்ட்டில் கட் ஆகும்..அப்படி கட் ஆகாமல் நேரில் சென்று ஒரு வீட்டுக்குள் சென்று மறைந்தார்.. கெஸ்ட்டாக வந்து இருக்கிறாரோ... கிளம்பி விடுவாரா அல்லது காலை வரை இருப்பாரா...
கடையில் பால் வாங்கியபடி டைம் பாஸ் செய்து கொண்டு இருந்தேன்.. நைட்டியில் ஒரு பெண் அந்த வீட்டில் இருந்து வெளி வந்தார்.. அந்த வீட்டு பெண் தான்.. அவ்வளவு பழக்க்கம் இல்லை.. கவனித்ததும் இல்லை. அவ்வபோது கெட்ட வார்த்தைகளில் ட்சண்டை போடும் சத்தம் கேட்கும்.. ஒரு முறை மார்கழி கோலத்தில் பைக்கில் ஏறி அழித்ததற்காக என்னை கெட்ட வார்த்தையில் அசிங்கமாக திட்டினார்,.திரும்பி பார்க்காமல் ஓடி விட்டேன்..
அவரும் கடைக்கு வந்தார்... கூர்ந்து பார்த்தபோது அந்த மூக்கு அதிர்ச்சி அளித்தது...ஆம்,.. பஸ்சில் பார்த்த தேவதைதான் இவர் !!! ஆனால் இப்போது தேவதை மாதிரி தெரியவில்லை... அவருக்கோ என்னை மனிதனாகவே தெரியவில்லை போல... அலட்சியமாக என்னை கடந்து போய் கடையில் ஏதோ வாங்க ஆரம்பித்தார்
____________________________________________________________________
நண்பருடன் போனில் பேசியவாறே பஸ்சில் ஏறினேன் . பேசியவாறே கண்டக்டரிடம் அய்ம்பது ரூபாய் நீட்டி ஜாடையில் டெயலி பாஸ் கேட்டேன் . அவர் ஏதோ நினைவாக பாலன்ஸ் காசு கொடுக்க முனைந்தார் . தலை அசைத்து மறுத்து ஐம்பது ரூபாய் பாஸ் வாங்கினேன் . பேச்சு தொடர்ந்தது . பஸ்சில் ஏதோ பிரச்னை . டிக்கட் வாங்கி காசு தரவில்லை என்றும் டிக்கட் வரவில்லை என்றும் சண்டை . பயங்கர எரிச்சல் . ஏன் நம் மக்கள் இப்படி பொறுப்பின்றி இருக்கிறார்கள் . பஸ் விட்டு இறங்கி போனை பைக்குள் வைக்க போனவன் திடுக்கிட்டேன் . பஸ் அக்கப்போருக்கு காரணமான டிக்கெட் என்னிடம் இருந்தது .- அளவுக்கு அதிகமா பேசுவது தீங்கானது
____________________________________________________________
வன்முறை என்பது ஏரியில் விழும் கல் போன்றது.. விழுந்த இடத்தில் இருந்து அலைகள் பரவிக்கொண்டே இருக்கும் , “ என்னுடைய “ என்பதை மையமாகக் கொண்டு. 
எனது நாடு , என் மதம் , என் சொத்து , என் காதல் , என் குழந்தை , என் குடும்பம் என இந்த “ எனது” என்ற வடிவம் ஏதேனும் ஒரு வடிவில் இருக்கும்வரை வன்முறை இருந்து கொண்டுதான் இருக்கும்
‪#‎ஜேகிருஷ்ணமூர்த்திபாறைகள்‬
___________________________________________________________________
தோல்வி அடைவது தலைமைப் பண்புக்கு இழுக்கன்று . ஆனால் எதிர்பாராத தோல்வியை அடைவது இழுக்கு - நெப்போலியன் போனபர்ட்
_________________________________________________________________
மாநகர பேருந்தில் பயணிக்கையில் தண்ணீர் பாட்டில் எடுத்து சென்று விடுவேன் . சில நாட்களாக , சற்று தயக்கத்துடன் தண்ணீர் கேட்கிறார்கள் வயசாளிகள் . கோடை வருகிறதே . எனவே இப்போதெல்லாம் என் பையில் ரெண்டு பாட்டில்கள் எடுத்து செல்கிறேன் . எனக்கு பெரிய கஷ்டம் இல்லை . அவர்களுக்கு சிறிய எளிய இளைப்பாறுதல் .
_________________________________________________________________-
லாரி பொன் மொழி பாறைகள்
நண்பா . குத்துவதாக இருந்தால் உன்னை நேசித்த என் இதயத்தில் குத்து . எந்த பாவமும் செய்யாத முதுகில் குத்தாதே
___________________________________________________________
உங்களை எனக்கு பிடிக்கல,,,, உங்களை நண்பனா ஏத்துக்கவும் முடியல... ஆனா உங்க போஸ்ட் சிலவற்றை படிக்க விரும்புறேன்.. உங்களை நண்பன் என சொல்லிக்க விரும்பாத ஆனா உங்க போஸ்ட்டை படிக்க விரும்பும் பலர் இருக்கிறார்கள்..அதுனால ஃபாலோ ஆப்ஷனை உங்க செட்டிங்க்ல கொண்டு வாங்க.. உங்க நண்பர் ஆகாம ஃபாலோ மட்டும் பண்ண வசதியா இருக்கும்..
இப்படி ஒருவர் சொன்னார்..
அவர் சொல்லித்தான் ஃபாலோ ஆப்ஷனை சேர்த்தேன்..அதுவரை எனக்கு அது தெரியாது..
இன்னொருவர் வந்தார்... ஃபாலோயர்சும் கமெண்ட் போடும் ஆப்ஷனை கொண்டு வாங்க.. என்னால கம்ண்ட் போட முடியல என்றார்...
அந்த ஆப்ஷனை கொண்டு வந்தா , என்னால எல்லா கமெண்டையும் பார்த்து மாடரேட் பண்ண முடியாது .யாராச்சும் கேவலமா கமெண்ட் போட்டுட்டா எல்லோரும் என்னை தப்பா நெனப்பாங்களே என்றேன்..
உங்க போஸ்ட்டே கேவலமாத்தானே இருக்கு..அதை விட கேவலமா யாரும் கமெண்ட் போட முடியாது.. சும்மா அந்த ஆப்ஷனை கொண்டு வாங்க என்றார்.
கமெண்ட் போட இவ்வளவு ஆசைப்படுறீங்களே. பேசாம என் நண்பரா சேர்ந்துடுங்களேன் என்றேன்..
உங்களை நண்பனா என்னால இந்த ஜென்மத்துல ஏத்துக்க முடியாது என்றார்...
________________________________________________________
அந்த தம்மாத்தூண்டு பெயர் பலகை என் கவனத்தை கவர்ந்தது.. பேருந்து ஊரை விட்டு சற்று ஒதுக்குப்புறமாக சென்று கொண்டு இருந்தபோது , பஞ்சர் கடை ஒன்றை பார்த்தேன்..மரத்தடி..சிறிய தடுப்பு..அதன் முன் பெயர் பலகை... ரேடியோவில் பாட்டுக்கேட்டபடி மெக்கானிக் ஹாயாக அந்த கணத்தை வாழ்ந்து கொண்டு இருந்தார்...
முருகன் மெக்கானிக் கடை என் பெயர் பலகை அதற்கு கீழே சப் டைட்டில் போல இன்னொரு சதுர வடிவ பலகை...
அதில் சாக்பீசால் இப்படி எழுதி இருந்தது.
உழைப்பே உயர்வு தரும்
இங்கு பஞ்சர் போடப்படும்... டீவீலருக்கும் காருக்கும் வேலை செய்யப்படும்..
வெளி இடங்களுக்கு கூப்பிடாதீர்கள்..தயவு செய்து கடன் சொல்லாதீர்கள்... விவாதம் வினையில் முடியும்... சரியான கருத்து என்றால் நீங்கள் அதை நிரூபிக்க தேவை இல்லை..தவ்றான கருத்து என்றால் விவாதத்தில் நுழைய வேண்டியதே இல்லை.ஞாயிறும் பஞ்சர் போடப்படும்.... ஒன்றே குலம் ஒருவனே தேவன்... மரங்களை பாதுகாப்போம்...
இப்படி நுணுக்கி நுணுக்கி எழுதி இருந்தார்.. யாரும் படிக்க வாய்ப்பில்லை என்ற போதும் இப்படி எழுதி இருப்பது ஆச்சர்யம் அளித்தது...சுவராஸ்யமான ஆளாக இருப்பார் போலயே, ஒரு மொக்கையை போடலாமா என நினைத்தேன்.. பஸ் கிளம்பி விட்டது...
________________________________________
காலையில் ஆலயம் செல்கையில் அந்த பாட்டியை பார்ப்பேன் . எளிய சேலை என்றாலும் அழகாக அணிந்திருப்பார் . மலர் சூடி பொட்டு வைத்து வருவார் . திருவாசகம் வாய் விட்டு பாடிவிட்டு போவார் . தன்னை ஓர் ஒழுங்குடன் வைத்துக்கொள்வது பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பொருள்களின் இயல்பாகும் . எல்லாமே பாலியல் சம்பந்தப்பட்டது என சிக்மண்ட் பிராய்ட் சொல்வது நம் புரிதல்களையே கெடுத்துவிட்டது . அந்த பாட்டி யாரையும் கவர அழகாக ஆடை அணியவில்லை . அவரது திருப்தி . அவ்வளவுதான் . பெண் அழகாக ஆடை அணிவதே ஆண்களுக்காகத்தான் என்ற பார்வை தவறானது . பாலியல் சீண்டல்களுக்கு இதை காரணமாக சொல்வது கண்டிக்கத்தக்கது
________________________________________
காதல் என்பது ஆன்மாவை வளப்படுத்தகூடியது...உடலுக்கு உணவு எப்படியோ அப்படித்தான் ஆன்மாவுக்கு காதல் ... காதல் வயப்பட்ட ஒருவனுக்கு வேறு எதுவும் முக்கியமாக தோன்றாது...எனவே அவனை சமுதாயம் தவ்றான வழிகளில் பயன்படுத்த முடியாமல் போய் விடும்....இதனால்தான் எப்போதுமே சமுதாயம் காதலுக்கு எதிராகவே உள்ளது.... ஆனால் உண்மையான காதலை உணர்ந்தவன் எந்த நிலையிலும் காதலை விட்டுக்கொடுக்க மாட்டான்.. ஒரு வேளை பிரிவு ஏற்பட்டாலும் அது அவனுக்கு நல்லதே செய்யும்.. காதல் உணர்வைபோல , பிரிதலின் வேதனையும் மனமற்ற நிலைக்கு அவனை அழைத்து செல்லத்தக்கது - ஓஷோ

________________________________


No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா