Friday, November 14, 2014

வாலியின் பெருந்தன்மை வைரமுத்துவுக்கு ஏன் இல்லை - தேனி கண்ணன் ஆவேசம் - மிக்சர் போஸ்ட்

குருதி தோய்ந்த
கோரப்பற்களிடையே
அன்றில் பறவையின்
அப்பாவி குஞ்சை
கவர்ந்து சென்று
கழுகு பசியாற்றிக்கொண்டது
பிரபஞ்சத்தை நினைத்து
பெருங்கோபம் பீறிட்டது
அடுத்த கணம்
என்னை அன்றிலாக படைக்காத
கருணையை நினைத்து
கண் கலங்கினேன்
-மொராக்கோ கவிஞர் மெட்கின்ஸ் ரொமாரியோ டீமெல்

_________________________________________________________________
தில்லை கனகசபையில் 21,600 ஓடுகள் வேயப்பட்டுள்ளன . நாம் ஒரு நாளுக்கு வெளியிடும் மூச்சின் எண்ணிக்கை அது
___________________________________________________
இறையடியார் இல்ல கதவை எண்பது வயது முதியவர் தட்டி , பசி என்றார் . உள்ளை வர சொல்லி அமர வைத்து சாப்பாடு பரிமாறினார் இறைநேசர் . இறைவனுக்கு நன்றி சொல்லி சாப்பிடுங்கள் என்றார் . எனக்கு இறை நம்பிக்கை இல்லை என சொல்லவே கோபத்துடன் வெளியேற்றினார் . இறைவன் குரல் கேட்டது . இறை மறுப்பவனுக்கு எண்பது ஆண்டுகளாக உணவளிக்கிறேன் . உன்னால் ஒரு நாள் உணவளிக்க முடியலையா
________________________________________________________________
பயிற்சி எனும் சொல் , பயில்கிறேன் என்றுதானே மாறுகிறது? முயற்சி என்பதைமட்டும் சிலர் ஏன் முயற்சிக்கிறேன் என தவறாக எழுதிகிறார்கள் . முயல்கிறேன் என எழுத முயலுங்கள்
____________________________________________________________

பழைய இலங்கை தமிழை பார்த்தால் பொறாமையாக இருக்கும் . இப்போது அவர்களும் நம் போன்ற தமிழ் பேசுவதை பெருமையாக நினைப்பதால் ஆறுதல் . பழைய தமிழில் பயன்பாட்டில் இருந்து தற்போது அழிந்து போன சொற்களில் ஒன்று உவன் . அவன் , இவன் தெரியும் . இது இரண்டிலும் சேராத தர்ட் பர்சனை சுட்டும் சொல் உவன்
_________________________________________________________
i quit இந்த வசனத்தை illusions புத்தகம் படித்தவர்கள் மறந்திருக்க மாட்டார்கள் . இப்படி சொல்லும் மனநிலை நமக்கும் வந்தால் நன்றாக இருக்கும் . நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உலகம் இயங்கிக்கொண்டுதான் இருக்கப்போகிறது . நாம்தான் உலகை குடும்பத்தை தாங்குவதாக நினைத்து நம் வாழ்க்கையை சீரியசாக எடுத்துக்கொள்வது தேவையற்றது . மரணத்தின் போது வரும் இந்த பற்றற்றநிலையை இயற்கை சற்று முன்பே சிலருக்கு வழங்கும் , அதை கோருபவர்களுக்கு
___________________________________________________________
ஜாலியாக வாழ இரண்டே வழிகள் .
கடவுளே வந்தாலும் , உலகமே அழிந்தாலும் ஆச்சர்யமோ அதிர்ச்சியோ அடையாமல் வாழுங்கள.
Or
மலர் மலர்வது , சூர்யன் உதிப்பது போன்ற அன்றாட விஷயங்களைக்கூட ஆச்சர்யமாக அதிசயமாக கண்டு ரசியுங்கள் .

வாழ்க்கையை ரம்யமாக இருக்கும்
____________________________________________________
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையிலே .

1கல்லு பேசாதுப்பா .
2கடவுள் உள்ளே இருக்கான்
3கடவுளெல்லாம் இல்லை
4கடவுள் தன்மையை வெளிப்படுத்த தெரியாவிடில் கல் பேசாது
5 கல் சிலரிடம் பேசும்
ஒரே பாடல் . பல்வேறு பார்வைகள்
_____________________________________________________________
ஷார்ட் டைம் மெமரி , லாங்க் டைம் மெமரி குறித்து சுஜாதா கல்லூரியில் உரையாற்றினார் . இதை பிராக்டிக்கலாக விளக்க , ஒரு மாணவியிடம் கேள்வி கேட்டார் . இன்று காலை என்னம்மா சாப்பிட்ட ?
இட்லி , கார சட்னி . 
சரி . போன வருடம் ஜனவரி வெள்ளி காலை என்ன சாப்பிட்ட ? அடுத்து கேட்டார் . அவள் மறந்துவிட்டது என்பாள் . மொக்கையை போடலாம் என்பது அவர் ஐடியா .
அவள் கூலாக சொன்னாள் . இட்லி , கார சட்னிசார் . எங்க வீட்ல எப்பவும் அதுதான் சார் .
சுஜாதா திகைத்துப்போனார் .
பெண்கள் என்றும் எங்கும் பாறைராஜா
________________________________________________________
சார் . ஆங்கிலத்தில் sugar என்ற வார்த்தைக்கு மட்டும் தனி சிறப்பு உண்டு என்றான் ஓர் இளைஞன் பெர்னாட் ஷாவிடம் .
என்ன சிறப்பு என்றார்
su என்று எழுதினாலும் shu என உச்சரிக்கிறோமே . வேறு எதற்கும் இந்த பெருமை கிடையாது . எப்பூடி என்றான்
பெர்னாட்ஷா கேட்டார் r u sure 

_____________________________________________________________________

பாஷோவின் நச் ஹைக்கூ
கடைசி வரியை கவனியுங்கள்

வசந்தம் விடைபெறுகிறது
பறவைகள் அழுகின்றன
கண்ணீர் , மீன்களின் கண்களில்

___________________________________________________________________

இரண்டு வகையான படைப்பாளிகள் இருக்கிறார்கள்.. ஓவியம் , கவிதை , கதை என புற ரீதியாக படைப்பவர்கள் ஒரு வகை...சிலர் அக ரீதியாக தன்னையே படைக்கிறார்கள் .தன்னைத்தானே உருவாக்கிக்கொள்கிறார்கள்..இவர்கள்தான் உண்மையான படைப்பாளிகள்..ஒரு மாஸ்டர் பீசை தன்னில் இருந்து உருவாக்குகிறார்கள்..
உங்களுக்குள்ளும் மாஸ்டர் பீஸ் ஒளிந்து இருக்கிறது..அது நிகழாமல் தடுப்பது நீங்கள்தான்.. சற்று ஒதுங்கி நில்லுங்கள்.. ஒவ்வொருவரும் மாஸ்டர் பீஸ்தான். சாதாரண நபரை கடவுள் படைப்பதில்லை..
பெரிய ஆளாக மாறவேண்டும் என நினைக்காதீர்கள்..ஏற்கனவே நீங்கள் பெரியோர்தான்.. இது தெரியாமல் பல ஜன்மங்கள் வாழ்ந்து விட்டீர்கள்.. நீங்கள் ஒருபோதும் முன்னேற முடியாது..காரணம் முன்னேற வேண்டிய அவசியமே இல்லை.. ஏற்கனவே நீங்கள் சிறப்பானவர்தான்..

- ஓஷோ....அட, இதுதான் எனும் நூலில்

ஒஷோ அவ்வபோது பாறைகள்
*****************************************
நீ இந்த உலகில் இருப்பது வெறும் தற்செயல் அன்று.. பிரபஞ்சத்துக்கு நீ தேவை. நீ இல்லாவிட்டால் ஏற்படும் வெற்றிடத்தை வேறு எதுவும் பூர்த்தி செய்ய முடியாது..உன் இன்மையை பிரபஞ்சம் உணரும். நட்சத்திரங்கள் , சூரியன் , சந்திரன் , மரங்கள் , பறவைகள் என அனைத்தும் ஏதோ ஒன்று குறைகிறதே என எண்ணும் , நீ இல்லாவிட்டால். உன் இடத்தை யாரும் நிரப்ப முடியாது.. பிரபஞ்சம் உன் மீது அக்கறை காட்டுகிறது. கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருந்தால் , எல்லா திசைகளில் இருந்தும் பிரபஞ்சம் உன் மீது அன்பை பொழிவதை உணர முடியும்
- கடவுள் இறந்து விட்டார் , ஜென் மட்டுமே ஒரே உண்மை எனும் நூலில் இருந்து.

********************************************************************
சாப்பிடுவதில் கொஞ்சத்தை பகிர்ந்தளி...சாமிக்கு முடிஞ்சத பண்ணு... மற்ற உயிரிகளுக்கும் உணவளி... எல்லோரிடமும் இனிமையா பேசு..இதை விட வேற ஒண்ணும் தேவை இல்லை... ரொம்ப சிம்பிள்..யார் வேணும்னாலும் செய்யலாம் என்கிறார் திருமூலர்
*****************************************
யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே

_______________________________________________________________________

தேவதச்சன்பாறைகள்
**********************************************
சிறுமி கூவுகிறாள்.
நான் போகிற இடம் எல்லாம் நிலா
கூடவே வருகிறதே.
சிறுவன் கத்தினான்.
இல்லை. நிலா என்கூட வருகிறது
இருவரும் சண்டை போட்டுக்கொண்டு திருப்பத்தில்
பிரிந்தனர்.
வீட்டிக்குள் நுழைந்து, உடன்
வெளியே வந்து எட்டி பார்க்கிறாள்.
நிலா இருக்கிறதா?
இருக்கிறதே
அவள் சின்ன அலையை போல சுருண்டாள்
அந்தச் சின்ன அலையில் கரையத் தொடங்கியது நிலவொளி
எல்லோர் கூடவும் போன நிலா பிறகு
எங்கே போனதென்று
எல்லோருக்கும் தெரியவில்லை

______________________________________________________________

குடியின் ”தீமையை” உணர்ந்து ஹீரோ திருந்துவதாக காட்சி.. இன்றில் இருந்து குடிக்க மாட்டேன் என எழுத சொன்னார்கள் கண்ணதாசன்.. கண்ணதாசன் சொன்னார்... எந்த குடிகாரனும் இன்றில் இருந்து குடிக்க மாட்டேன் என சொல்லவே மாட்டான்.. எப்போதுமே வ்ராத ஒன்று நாளை.. நாளைதான் குடிக்க மாட்டேன் என சொல்வான் என சொல்லி இப்படி எழுதினார்.
நாளை முதல் குடிக்க மாட்டேன், சத்தியமடி தங்கம்,
ராத்திரி தூங்க வேண்டும் , ஊத்திக்கிறேன் கொஞ்சம்.

அண்ணா ஒரு கூட்டத்துக்கு போனார்..அவருக்கு தலைப்பு ஏதும் கொடுக்கப்படவில்லை...பொதுவாக பேசுங்கள் என்றார்கள்.. “ தலைப்பு இல்லை” என்ற தலைப்பில் இரண்டு மணி நேரம் பேசினார் ‪#‎வைகோபாறைகள்‬

கீழ்கண்ட பொன்மொழிகளை பாலா ரசிகர்கள் நன்றாக உள் வாங்கி ரசிக்க முடியும்.. மற்றவர்கள் ஓரளவு ரசிக்கலாம்
****************************************************
முட்டாள்கள் மீது நான் மிகவும் நம்பிக்கை வைத்து இருக்கிறேன்.. ஆனாலும் உனக்கு தன்னம்பிக்கை சற்று அதிகம்தான் என என் நண்பர்கள் சொல்வது வழக்கம்
***************************************
நான் பைத்தியக்காரன் ஆகி விட்டேன்.. அவ்வபோது சாதாரண மன நிலை எனும் பயங்கரத்தை எதிர்கொள்ள வேண்டி வரும்
****************************************
காதலுடன் நாங்கள் காதலித்தோம்.. அது காதலை விட உயர்ந்த ஒன்று
*****************************************
கனவிலேயே வாழ்பவனுக்கு , இரவில் மட்டும் கனவு காண்பவனை விட , அதிக விஷயங்களை கனவுகள் சொல்லித்தரும்..
- எட்கர்ஆலன்போபாறைகள்
__________________________________________________________________
பாலா குறித்து பாலு மகேந்திரா ( ஐ லவ் பாலா & பாலு மகேந்திரா )
அவனுக்கு என் மீது இருப்பது அன்புன்னு சொல்ல முடியல பவா, அது வெறி. தாங்கமுடியாத வெறி. அது எப்போ எப்படி வெளிப்படுன்று சொல்ல முடியாது. அநேகமாக பாலா அவன் அப்பாவுக்கு அப்புறம் என்னிடம்தான் நிறைய முரண்பட்டான். அது முற்ற முற்ற அதிலிருந்து கொட்டும் அன்பின் கனிகளை கையிலேந்திக் கொள்ளலாம் நாம் எல்லோருமே.

உங்கள் சிஷ்யன் பாலா வந்திருந்தாராமே?''
'நான் அட்மிட் ஆன முதல் நாளே வந்தாராம் பாலா. இன்டென்சிவ் கேர் ரூமில் இருந்ததால் பார்க்கமுடியவில்லை. மூன்றாவது நாள் மீண்டும் வந்தார். என் கால்களைத் தொட்டு வணங்கினார். என் நெற்றியில் முத்தம் தந்தார். என்னை அள்ளி அணைத்துக்கொண்டு என் காதருகில், Ôநீங்க சிங்கம் சார். சீக்கிரமா எழுந்து நடமாட ஆரம்பிச்சிருவீங்கÕ என்றார். நான் கண்ணீரில் கரைந்தேன். வார்த்தைகள் இன்றி நின்ற அந்தக் கணத்தை அப்படியே சொல்ல இயலாது. கடினம். என் அருகிலேயே வைத்து, நான் சினிமா சொல்லிக் கொடுத்து வளர்த்த பிள்ளையல்லவா பாலா!'
''உங்கள் இருவருக்குமான மனபேதங்கள் மறைந்தனவா?''
'Forgive and you shall be forgiven' என்ற இயேசுபிரானின் வார்த்தைகளில் அசையாத நம்பிக்கையுள்ளவன் நான். பாலா, தன் மனைவியுடன் வந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். நான்தான் Ôமுழுமையாகக் குணம் அடைந்த பிறகு பார்க்கலாம்Õ என்று சொல்லித் தள்ளிப் போட்டிருக்கிறேன். நிஜமாகச் சொன்னால் சரியான காரணம் அதுவல்ல.
ஆசி வாங்க வரும்போது பாலாவுக்குப் பரிசாகத் தர மிக உயர்ந்த துணிமணிகள் எடுக்கவேண்டும், அந்தப் பெண் ணுக்கும் நல்ல பட்டுச்சேலை தரவேண்டும் என்பது என் விருப்பம். அதற்குப் போதிய பணம் இப்போது என்னிடம் இல்லை. பணம் வந்ததும் பாலாவுக்குச் சொல்லி அனுப்ப வேண்டும்.
என்னைப் போல அல்லாது ஒரு நல்ல கணவனாகவும், நல்ல தகப்பனாகவும், நல்ல மனிதனாகவும் பாலா திகழ இறைவனைப் பிரார்த் திக்கிறேன்.
என் மகன் பாலா, தமிழுக்கு மூன்று நல்ல படங்களைத் தந்திருப்பதும் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக மதிக்கப்படுவதும் என் சினிமா வாழ்வில் நான் சந்தோஷப்படுகிற விஷயம்!
_________________________________________________________________
ஒரு கதையில் எழுத்து சித்தர், எறும்பை விட பலசாலியாக இரு என எழுதி இருப்பார்.. நம் மக்களுக்கு குழப்பம்... எறும்பை சுறுசுறுப்புக்கு உதாரணமாக சொல்லலாம்.. வலிமைக்கு எப்படி உதாரணம் காட்டுவது..
ஆனால் அவர் எழுதியது அர்த்தம் வாய்ந்தது...
எறும்பு தன் எடையை போல 100 மடங்கு எடையை இழுத்து செல்லும் ஆற்றல் வாய்ந்தது... நம் எடை அறுபது கிலோ என்றால் நம்மால் எத்தனை கிலோவை தூக்க முடியும் என யோசித்து பாருங்கள்...
______________________________________________________________
இரண்டு புள்ளிகளிக்கு இடையேயான ஷார்ட்டான பாதையை எறும்புகள் கண்டுபிடிப்பது சுவாரஸ்யமானது. உதாரணமாக ஓர் இடத்தில் இனிப்பு இருக்கிறது... போகும் வழியில் ஒரு பெரிய புத்தகம் கிடைக்கிறது..அதை சுற்றிக்கொண்டு போவதா , அல்லது ஏறிப்போவதா என்பதை எப்படி தீர்மானிக்கிறது?
தோராயமாக ஒரு பாதையை தேர்ந்தெடுத்து தான் போகின்றன... சில எறும்புகள் வரிசையாக ஒரு ஆ ஆ இ என்ற பாதையில் செல்லலாம்...இன்னும் சில அ ஆ1 இ என்ற பாதையில் போகலாம்...
அவை போகும் வழியில் ஒருவித சுரப்பை வழித்தடமாக விட்டு செல்கின்றன..சில முறைகள் இந்த இரண்டு பாதைகளிலும் போய் வந்தபின் பார்த்தால் , குறைந்த பட்ச தூர பாதையில் இந்த வழித்தடம் அடர்த்தியாக இருக்கும்... தூரமான பாதையில் வ்ழித்தடம் மென்மையாக இருக்கும்..
கொஞ்ச நேரத்தில் எல்லா எறும்புகளும் அடர்த்தி அதிகமான குறைந்தபட்சதூர பாதைக்கே வந்து விடும்..
_________________________________________________________
மீன் கடை..? Wat u mean?...
அயல் நாட்டில் இருந்து உறவுப்பெண் ஒருவர் வருவதாக இருந்தது,,, எனக்கே உரிய ஆர்வ கோளாறு காரணமாக , அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முடிவெடுத்தேன்... வளர்ப்பு மீன் ஏதாவது வாங்கி கிஃப்ட் கொடுக்கலாம் என நினைத்தேன்...( அவர் அயல் நாட்டுக்கு எடுத்து போக மாட்டார்,,,வீட்டில் கொடுத்து வளர்க்க செய்வார் என்பது ஐடியா ) எனக்கு மீன் சாப்பிட்ட அனுபவம் உண்டு .. வளர்த்த அனுபவம் இல்லை.. இருந்தாலும் நெட்டில் தேடி சில மீன்கள் பெயரை தெரிந்து வைத்து கொண்டு வளர்ப்பு மீன் விற்பனை கடைக்கு போனேன்..
ஃபிங்கர் ஃபிஷ் என்ன ரேட் என்றேன்.. அப்படி எல்லாம் மீன் இல்லை...ஹோட்டலுக்கு போங்க என்றார்கள்..ங்கொய்யால பேர் மறந்து போச்சு... ஆனாலும் நல்ல அழகான மீனாக பார்த்து வாங்கினேன்...
அதை அவரிடம் கொடுக்கும் வரை மீனை எப்படி பார்த்துக்கொள்வது என கேட்டு வைத்துக்கொண்டேன்.. ஆனால் ரொம்ப நாள் அப்படி பார்த்துக்கொள்ள முடியாது... சீக்கிரம் கொடுத்து விட வேண்டும்..
எதிர்பாராத விதமாக அவர் என்னை சந்திக்க முடியாமல் போனது... அவருக்கு வேறு வேலை வந்து விட்டது.... இப்ப மீனை நான் என்ன செய்வது...
எனக்கு வளர்க்க தெரியாது... அவரது பிசி வொர்க்க்கில் இதைப்பற்றி பேசுவது சின்ன பிள்ளைத்தனமாக இருக்கும்.... மீனை சாப்பிடுவது வேறு.. ஆனால் வளர்ப்பு மீனை கண் முன் சாக விடுவதும் கொடூரமானது... என்ன செய்வது..
ஓசி சாப்பாடு கொடுப்பார்களே..அந்த வீட்டு ஸ்கூல் பையன் வந்தான்.. டேய்..உங்க வீட்டுக்கு கெஸ்ட் வந்து இருக்காங்கள்ல..அவங்களுக்கு இதை கிஃப்ட்டா கொடு சந்தோஷப்படுவாங்க... இல்லை, நீயாவது வளர்த்துக்க,,,, இல்ல நண்பர்களுக்கு கொடு.... என அவனிடம் தள்ளி விட்டு நிம்மதி அடைந்தேன்...
ஆமா ,..கையில் என்னடா என்றேன்..
மீன் குழம்பு கொடுத்து விட்டாங்க.. ஆனா மீன் மேல இவ்வளவு அன்பு வச்சு வளர்க்குறீங்க....மீனெல்லாம் சாப்பிட மாட்டீங்கனு நெனைக்கிறேன்... தயக்கமா இருக்கு என்றான்.
டேய்.. நான் எப்படா அப்படி சொன்னேன்.. வச்சுட்டு போடா என்றேன் நாக்கை தொங்கப்ப்போட்டுக்கொண்டு...
______________________________________________________________________
துரோகம் செய்பவர்களை அருகில் வைத்துக் கொள்..வீடு வசதி , சாப்பாடு எல்லாம் செய்து கொடு. நீ கஷ்டப்பட்டு தியானம் , யோகம் செய்து உன் அகங்காரத்தை ஒழித்து மனதை தூய்மை செய்பவதை அவர்கள் இலவசமாகவே செய்து கொடுத்து விடுவார்கள் ‪#‎கபீர்பாறைகள்‬
____________________________________________________________________
கணேசன் அன்பு நம்மிடம் நார்மலாக பேசுவார்... ஆனால் போன் பேசினால் கமல் வாய்சில் , பேஸ் வாய்சில் பேசுவார்..  நிர்மல் அதை மிமிக்ரி செய்தவாறு இருப்பார்... ஒரு போனில் திடீரேன சிவாஜி வாய்சில் பேச ஆரம்பித்தார்... ஒன்றும் புரியாமல் திகைத்தேன்... நிர்மல் சொன்னார்..இப்ப மிசஸ் கிட்டு பேசறாரு..
அதேபோல பேசி முடித்ததும். ஹி ஹி ..வீட்ல இருந்து போன்.. அவங்க என்னை திட்ட , என்னை அவங்க திட்ட , அவங்க என்னை திட்ட , என்னை அவங்க திட்ட , அவங்க என்னை திட்ட , என்னை அவங்க திட்ட - பெரிய சண்டை என்றார்.. நடு ரோடு என்றும் பாராமல் நிர்மல் பாதம் தொட்டு வணங்கினேன்
____________________________________________________________________
வீரபாண்டியன் மனைவி நாவலின் க்ளைமேக்ஸ் பகுதி... ஏராளமானோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட இருக்கும்.. அதற்கான அதிகாரி கைதிகளை கிண்டல் செய்தவாறு இருப்பான்... எப்படியெல்லாம் சாக இருக்கிறார்கள் என கிண்டலாக சொல்வான்,,, வேண்டுமென்றால் ஓரு உதவி செய்கிறேன்..கடைசியாக எல்லோருக்கும் ஒரு டம்ப்ளர் பால் தர சொல்கிறேன்.. தெம்பாக சாகுங்கள் என்பான்... எதிர்பாரா விதமாக இன்னொருவன் சூழ்ச்சியால் , அந்த அதிகாரி மீது குற்றவாளி பழி விழுந்து அவனுக்கு தண்டனை கொடுக்க சொல்லி விடுவார்கள்... ஒரு நிமிடத்துக்கு முன் உத்தரவிடும் நிலையில் இருந்த அவன் , ஒரே நிமிடத்தில் மரண தண்டனை கைதியாகி விடுவான்..
நாவலின் உச்சம் இந்த காட்சி என்பேன்..
_________________________________________________________________________
don't sweat the small stuff என்ற புத்தகம் ஷார்ட் அண்ட் ஸ்வீட்..அதன் அத்தியாயங்கள் அனைத்தையும் ஸ்டேட்டசாகவே போட்டு விடும் அளவுக்கு சுருக். வாய்ப்பு கிடைத்தால் படித்து பாருங்கள்
*************************
சாம்பிள் அனைவரையும் ஆசிரியாக நினையுங்கள்..உங்களைத்தவிர அனைவரையும் அறிவாளிகளாக நினையுங்கள்...அனைத்து விஷ்யங்களையும் பாடமாக நினையுங்கள்...
பேருந்தில் செல்கிறீர்கள்.. பஸ் மிக மெதுவாக செல்கிறது..ஓட்டுனரை திட்டாதீர்கள்.. இந்த சம்பவம் மூலம் அவர் என்ன கற்று தர விரும்புகிறார் என யோசியுங்கள்... பீக் அவரில் பஸ் பயணம் கூடாது... என அவர் சொல்ல விரும்பி இருக்கலாம்...
ஃபேஸ்புக்கில் ஆபாச கமெண்ட் போடுகிறார் ஒருவர்... கோபப்படாதீர்கள்...அவர் என்ன சொல்லித்தர விரும்புகிறார்.... கண்மண் தெரியாமல் அனைவரையும் நட்பு பட்டியலில் சேர்க்க கூடாது என்றோ கமண்ட் ஆப்ச்ஷனை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதோ அவர் செய்தியாக இருக்கலாம்...
இப்படி யோசித்தால் , வாழ்வின் ஒவ்வொரு கணமும் பயன்மிக்கதாக இருக்கும்
_______________________________________________________________
இந்த எளிய டிப்ஸ் எனக்கு பேருதவியாக இருந்தது ( Dont sweat the small stuff எனும் புத்தகத்தில் இருந்து )
எது நடந்தாலும் , அதன் விளைவு நூறு ஆண்டுகள் கழித்து எப்படி இருக்கும் என ஒரு நிமிடம் யோசியுங்கள்..
அவசரமாக சினிமாவுக்கு கிளம்புகிறீர்கள்.. பார்த்தால் பைக் பஞ்சர்... கஷ்டம்தான்...ஆனால் நூறு ஆண்டுகள் கழித்து , இதெல்லாம் ஒரு விஷ்யமாக வரலாறு நினைவு வைத்து கொள்ளுமா.
வேலை போய் விட்டது... யாரிடமாவது செருப்படி வாங்குகிறீர்கள்... இனிமேல் என்னை பார்க்க வர வேண்டாம் என உங்கள் நண்பர் சொல்கிறார்... போன் செய்து தொல்லை செய்தால் , போன் நம்பரை மாற்றி விடுவேன் ஒரு நண்பர் கோபித்து கொள்கிறார்... உன்னை பெற்றதற்கு வருத்தப்படுகிறேன் என உங்கள் தந்தை சொல்கிறார்... நீங்கள் செய்த வேலைக்கான பாராட்டு இன்னொருவருக்கு போய் விடுகிறது..
இவை எல்லாமே வருத்தப்பட வேண்டியவைதான்.. ஆனால் நூறாண்டுகளுக்கு பிறகு இருந்து பார்த்தால் , சம்பந்தப்பட்ட யாரும் இருக்க மாட்டார்கள்... இப்படி ஒரு சம்பவம் நடந்ததே யாருக்கும் தெரியாது.. இதற்கு போய் ஓவராக கவலைப்பட வேண்டாம்..
டேக் இட் ஈசி...
__________________________________________________________________________
பாரிசில் ( பாரி முனை அல்ல,.... ஃபிரான்ஸ் தலை நகரில்) ஒரு திருடன் நகை கடையை கொள்ளை அடிக்க திட்டமிட்டான்.. கடை உரிமையாளர் ஒரு பெண் .. கடை மூடி வீட்டுக்கு சென்றதும் அவள் வீட்டுக்கு சென்றான்.. அவளை கட்டிபோட்டு மிரட்டி , கடையை திறக்கும் கடவுசொல்லை வாங்கினான்.. கடைக்கு போய் நிதானமாக கொள்ளை அடித்த பின், வீட்டுக்கு வந்து அவளை விடுவித்தான்... இங்கேதான் விதி விளையாடியது... போகும்போது சும்மா போகாமல், உங்களை போய் கட்டி போட்டு விட்டேனே என மனம் வருந்தி அவளுக்கு முத்தம் கொடுத்து விட்டு பிரியாவிடை பெற்றானாம்( இதழ்களில் அல்ல .. கன்னத்தில்...அவளுக்கு வயது 56..இவனுக்கு 20 என்பது குறிப்பிடத்தக்கது )...
இவன் போனதும் அந்த பெண் போலீசில் கம்ப்ளைண்ட் செய்தார்.. அவள் கன்னத்தில் இருந்த அவனது முத்த அடையாளத்தை மரபணு பரிசோதனை செய்து , அந்த அப்பாவியை பிடித்து உள்ளே தள்ளி விட்டனர்.. “ முத்தம் கொடுத்தது தப்பா போச்சே “ என அவன் புலம்பினானாம்...
 — feeling பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது.
______________________________________________________
போன எடுத்தா நச்சு நச்சுங்குறாங்க... என்னவோ இலக்கிய டவுட்டாம்.. எஸ் ராவாலேயே தீர்க்க முடியலாம்... என்னிடம் கேட்டாங்க..
நான் பேச ஆரம்பித்தேன்
காலாதீத பிரபஞ்சத்தின் தொன்மங்களின் உள்ளந்தரங்கத்தில் ஒட்டி இருக்கும் முதுமக்கள்தாழியில் இருந்து ஓடும் திசைமறந்த பறவையின் குறுக்கு வெட்டு பிரஞ்ஞையின்...
லைன் கட் ஆகி விட்டது
____________________________________________________________
ஓஷோவின் உரையில் இருந்து சில பகுதிகள்..
*****************************************************
சோகத்தில் வீழும் அந்த கணமே வாழ்க்கையின் அடிப்படை அம்சங்கள் இரண்டில் இருந்து துண்டிக்கப்பட்டு விடுகிறாய்...தொடர்பு கொள்ளல் , விரிவடைதல்... பணம் , பதவி , காதலி / காதலன் என ஏதோ ஒன்றை பிடித்து கொள்ள முனைந்தால் , முக்கியமான ஒன்றை இழந்து விடுகிறாய்- உன் வாழ்க்கை . ஏனெனில் இவை எதுவுமே உன் இலக்குகள் அல்ல. உனக்குள் இருக்கும் உண்மையான நீதான் உன் உலக்கு.. அழகான வீடோ , அழகான நகையோ , அழகான காதலியோ / காதலனோ அல்ல உன் இலக்கு.. அழகான நீயே உன் இலக்கு. பணமல்ல உன் தேவை... வளமான உன் தன்னுணர்வே உன் தேவை. குறிப்பிட்ட சிலவற்றுக்கு மட்டும் ஆசைப்படாமல் வாழ்க்கை தரும் நல்லது கெட்டது , வெற்றி தோல்வி என அனைத்துக்கும் உன் இதயத்தை திறந்து வை. அப்போது உனக்கு கணக்கின்றி கிடைக்கும் 
__________________________________________________________________________
யுவன் இசையில் வைரமுத்து- பத்திரிகையாளர் தேனி கண்ணன் எதிர்வினைகபிலன் வைரமுத்துவையும், மதன் கார்க்கியையும் இசைஞானி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறீர்கள். இசைஞானி யாரை வைத்து பாட்டு எழுதவேண்டும் என்பதைச் சொல்ல நீங்கள் யார்?. ஏன் கோடம்பாக்கத்தில் வேறு கவிஞர்களே இல்லையா. அண்ணன் அறிவுமதி, இப்போதும் இளமை மாறாமல் எழுதும் பழநிபாரதி, தாமரை, பரபரப்பாக இருக்கும் நா.முத்துக்குமார், ஹிட் அடிக்கும் யுகபாரதி,, கபிலன், விவேகா, சிநேகன், இவர்கள் எல்லாம் கவிஞர்கள் இல்லையா எல்லோரும் அரிசி மண்டியிலா வேலை பார்க்கிறார்கள்?. நான் குறிப்பிட்டவர்களில் யாரும் சொகுசு பங்களாவில் அமர்ந்த பின்னும் பாடல் எழுதுவதற்காக மல்லுகட்டிக்கொண்டிருக்கவில்லை.
கவிப்பேரரசரே… உங்களுக்கு ஒரு கேள்வி நீங்கள் பாடல் எழுத வந்து இத்தனை ஆண்டுகளில் பாடல் வெளியீட்டு விழாவிலோ, அல்லது உங்கள் பதிவுகளிலோ எங்காவது சக கவிஞர்களை பற்றி பாராட்டி பேசியதுண்டா, எழுதியதுண்டா?வாகை சூடவா என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நீங்கள் எழுதிய பாடலான ‘முடக்கத்தான் கீரையை கொடுத்து மடக்கத்தான் பார்க்குற’ என்பதை மட்டும்தானே சொன்னீர்கள். அதே படத்தில் அருமையான பாடலான ‘தஞ்சாவூரு மாடத்தி..’ என்ற பாடலை எழுதிய வெ.ராமசாமியைப் பற்றி பாராட்டி பேசீனீர்களா? இல்லையே.ஆனால் தன் காலம் முழுதும் யாராலும் தோற்கடிக்க முடியாத கவிஞர் வாலி, அவர்கள் ஒரு பதிப்பில், ”பழநிபாரதியும் நானும் அபூர்வம்” என்று பதிவு செய்திருக்கிறார்.
______________________________________________
வான்சகாக்கள் என பரபரப்பாக பேசப்படுகிறதே... அப்படி என்றால் என்ன என சிலர் கேட்கிறார்கள்...
உலகில் இருக்கும் தம் சக நண்பர்களுடன் பேச உருவாக்கப்பட்டதுதான் sky peers to peers... வான் வழியாக உரையாடல் என்ற கவித்துவமான சிந்தனை... நடைமுறையில் கேபிள் வழியாகவும் உரையாடல் நடப்பது வேறு விஷ்யம்..ஆனால் கவித்துவம் கருதி sky peers to peers என யோசித்தார்கள்...ஆனால் நீளமாக இருப்பதால் Skypeers என மாற்றினார்கள்...
அதன் பின் உச்சரிக்க எளிமையாக இருக்கவும் ஹைப் என்பதுடன் ரைமிங்காக இருக்கவும் Skype என சுருக்கினார்கள்... இதைத்தான் நம் அறிவார்ந்த தமிழ் அறிஞர்கள் வான் சகாக்கள் என அழைத்து வருகின்றனர்
__________________________________________________________
சில நேரங்களில் சில புத்தகங்கள்
சில புத்தகங்களை எந்த சூழ் நிலையில் படித்தோம் என்பதை மறக்க முடியாது..
1. அந்த காலத்தில் பஸ் பாஸ் வைத்து இருந்தபோது , முழுக்க முழுக்க பஸ்சில் சுற்றிக்கொண்டே விஷ்ணுபுரம் படித்தேன்
2 ராசலீலா , சீரோ டிகிரி - கடற்கரையில் படித்தேன்
3 உறுபசி - ஒரு அலுவலத்தில் ஒருவரை சந்திக்க போகும் வழியில் வாங்கினேன்... வெயிட் செய்யும் நேரத்தில் படித்தேன்.
4 . எல்லோராலும் அடித்து துரத்தப்பட்ட ஒரு காலகட்டத்தில் , ஒரு பிளாட்பாரத்தில் அமர்ந்த படி , கடலோர குருவிகள் படித்தேன்..
5 அலுவல் விஷ்யமாக டெல்லி போயிருந்த போது , ஓர் ஏசி ரூமில் அம்ர்ந்து நாளை மற்றும் ஒரு நாளே படித்தேன்..
இது லேசாக ஆன்மிக விஷ்யம்... நாத்திக அன்பர்கள் இந்த கோட்டை தாண்டி வராதீர்கள்...போரடிக்கும் !!
_____________________________________________________________
நானெல்லாம் அந்த காலத்தில் ராஜேஷ்குமார் ரசிகன்.. இன்றும் அவர் மேல் மதிப்பு வைத்து இருப்பவன்.. அவர் ஒரு கட்டுரையில் ஒரு விஷ்யம் சொல்லி இருந்தார்...பல ஆண்டுகள் முன் படித்த கட்டுரையின் ஒரு விஷயத்தை இங்கே அவர் பகிர்கிறேன்.
*****************************************
அந்த தேர்வு எனக்கு மிக முக்கியமானது ..மிகவும் கஷ்டப்பட்டு படித்தேன்... வீட்டிலும் எல்லோரும் அந்த தேர்வை எதிர்பார்த்தார்கள்...கடவுளை பிரார்த்தித்தபடி இருந்தார்கள்.. தேர்வு ஓரளவு நன்றாக எழுதினேன்.. ரிசல்ட்டுக்காக காத்து இருந்தோம்..
கொஞ்ச நாளில் ரிசல்ட் வந்தது... வெற்றி பெற்றவர்களுக்கு ரிசல்ட் போஸ்ட்டில் அனுப்பப்ப்ட்டது... என் நண்பர்களுக்கெல்லாம் வந்து விட்டது..எனக்கு வரவில்லை..
நான் தோல்வி அடைந்து விட்டேன் என நம்பவே முடியவில்லை. நன்றாகத்தானே படித்தேன்,...அழுதினேன்.. நான் வணங்கிய தெய்வம் என்னை ஏன் கை விட்டது...
இரவு முழுக்க தூக்கம் இல்லை... நண்பர்கள் முகத்தில் எப்படி விழிப்பேன்.. வீட்டில் எப்படி கஷ்டப்படுவார்கள்...என மன உளைச்சல்..
மறு நாள் எனக்கும் ரிசல்ட் பாசிடிவாக வந்தது...ஏதோ எதிர்பாராத போஸ்டல் டிலே... நிம்மதி பெருமூச்சு விட்டேன்.
எனக்கு நன்கு தெரிந்த குடும்ப ஜோதிடர் பிறகு விளக்கினார்... பெரிய தோல்வி ஒன்றை நீ சந்திக்க வேண்டும் , கஷ்டப்பட வேண்டும் என உன் ஜாதகத்தில் உள்ளது.. ஆனால் இறை நம்பிக்கை அந்த கஷ்டத்தை வென்று விட்டது... ஆனால் விதியை முழுமையாக வெல்ல முடியாது... ஆகவேதான் மன அளவில் மட்டுமாவது அந்த தோல்வியை நீ அனுபவிக்க வேண்டியதாகி விட்டது என்றார்
***************************************************
என் கருத்து - என்னதான் தகுதி இருந்தாலும் , உங்கள் பக்கம் உண்மை இருந்தாலும் கஷ்டங்கள் வரத்தான் செய்யும்... என்னை ஏன் கடவுள் தண்டிக்கிறார் என நினைக்காமல் , வேறொரு பெரிய பிரச்சனையில் இருந்து காப்பாற்ற இந்த சின்ன பிரச்சனையோடு முடிந்ததே என நினைப்பது பாசிடிவ் சிந்தனை ஆகும்

வெளியூர் பயணத்தின் போது ஒரு பழைய புக் கடையில் ஆங்கில புக் பார்த்தேன்...... ஆங்கிலம் சரியாக தெரியாது என்றாலும் சும்மா இப்படி வாங்கி வைத்து கொண்டு ப்யணத்தில் சீன் போடுவது என் இயல்பு...ஆனால் அது எனக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத துறையை சார்ந்தது... வாங்க விருப்பம் இல்லை..சும்மா புரட்டினேன்..அப்படி புரட்டும்போது உள்ளே சில கடிதங்கள் ..ஒரு இளம்பெண்ணின் படமும்கூட. ஒரு கடிதம் தனியாக இருந்தது..அந்த பெண் அந்த புத்தகத்தை தன் பாய் ஃபிரண்டுக்கு அனுப்பி இருக்கிறாள்... அது பெர்சனல் கடிதம் என தெரிந்து இருந்தால் , சத்தியமாக படித்து இருக்க மாட்டேன்.. ஆரம்பத்தில் நூல் திறனாய்வு கட்டுரை போல இருந்தது... அந்த புத்தகத்தை ஏன் படிக்க வேண்டும் என அழகாக விளக்கி இருந்தார்... அவளது காதல் , அவர்களது பழக்கம் போன்றவை பிறகுதான் வந்தது..
( அதற்கு மேல் சும்மா நின்று படித்தால் , கடைக்காரர் சந்தேகப்படுவார் என்பதால் , தேவையற்ற அந்த புத்தகத்தை -அந்த கடிதங்களோடு -வாங்கி தொலைத்தேன் )
அந்த கடித மேட்டர்களை எல்லாம் சொல்வது இங்கு நாகரிகம் அல்ல... நான் சொல்ல வருவது வேறு.. அவர்கள் காதல் என நினைத்தது வெறும் இனக்கவர்ச்சி , ஒரு பொழுதுபோக்கு , அல்லது பொருளாதார சுரண்டல் , பிறகு விலகல் என்பதெல்லாம் அவர்கள் பெர்சனல்... அதில் எனக்கு அக்கறை இல்லை
எந்த காரணத்துக்காக அவர்கள் பழகி இருந்தாலும் , அந்த உறவுக்கு மதிப்பு கொடுப்பது , அந்த அந்தரங்கத்தை காப்பது முக்கியம் அல்லவா.. இபப்டி பொறுப்பற்ற முறையில் , அவர்கள் பெர்சனல் விஷ்யங்களை இப்படி தூக்கி எறியலாமா... இன்று நமக்கு பிடிப்பவர்கள் நாளை பிடிக்காமல் போகலாம்...இது வெகு இயல்பு...அதற்காக நினைவுகளை இப்படி அலட்சியமாக எறியலாமா..
நான் தேவையற்ற அந்த புத்தகத்தை வாங்கியது சும்மா வம்பு செய்தி தெரிந்து கொள்ள அல்ல.. அவர்கள் எனக்கு தெரியாத நபர்கள் என்றாலும் , அவர்கள் நட்புக்கு அவர்களே மதிப்பு கொடுக்கவில்லை என்றாலும் , நான் நட்பை மதிப்பவன் என்ற முறையில் , வேறு யாரிடமும் இது கிடைக்க கூடாது என்பதற்காக வாங்கினேன்..
( பிகு.. அது என்ன புத்தகம்....என்ன துறையை சார்ந்தது என போட்டு வாங்க முயலாதீர்கள் )
__________________________________________________________________________
ஒருவன் தன்னை முழுமையா மாற்றிகொண்டு புது மனிதனாக மாறுவது அவன் மனம் சார்ந்த விஷ்யம் அல்ல.. உடலையும் , உணர்வுகளையும் சார்ந்தது.. ஆனால் மனம் மட்டுமே எதிர்காலத்தில் சஞ்சரிக்கும் திறன் பெற்றது... உடலோ , உணர்வுகளோ நிகழ்கால சுகத்திலேயே திருப்தி அடைந்து , நிகழ்காலத்தில் மட்டுமே வாழ விரும்பும்... நிகழ்கால வாழ்க்கையில் பிரச்சனை இல்லாத படசத்தில் அதை மாற்ற உடலோ , உணர்வுகளோ விரும்பாது... மனதுக்கு மட்டும்தான் மாற்றம் குறித்து யோசிக்கும் ஆற்றல் உண்டு.. ஆனால் இதை செயல்படுத்தும் ஆற்றல் உடலுக்கும் , உணர்வுகளுக்கும் மட்டுமே உண்டு - குர்ட்ஜீஃப்
**********************************************************
நான் யாருடைய கொ பெ செயும் அல்லன்.... நான் சும்மா நுனிப்புல் டுபாக்கூர்... நிக்ழ்காலத்தில் வாழுங்கள் , மனம் மாறினால் வாழ்க்கை மாறும் என்பது போன்ற கார்ப்பரேட் குருமார்களின் டெம்ப்ளேட் முழக்கங்களில் இருந்து ஒரு மாற்று சிந்தனை என்ப்தால் இவற்றை பகிர்கிறேன்...
______________________________________________________________
ஒரு கன்னத்தை அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என ஜீஸஸ் சொன்னதை அப்படியே அர்த்தம் கொள்ளற்க... தீமைகளை கண்டு மனம் நோக ஆரம்பித்தால் , அதற்குத்தான் நேரம் சரியாக இருக்கும்... தீமை வெல்வது போல தோன்றுவது கொஞ்ச காலத்துக்குதான் ..உண்மை கண்டிப்பாக வென்று விடும்... எனவே தோல்விகளை கண்டு அஞ்சாமல் , இன்னொரு தோல்வி வந்தால் கூட ஏற்கும் மனோ திடத்துடன் வாழ் என்றுதான் ஜீசஸ் சொல்கிறார்... நீ ஏன் ஜீசஸ் பற்றி பேசுகிறாய் என யாரும் கமெண்ட் போடாதீர்கள்... நானெல்லாம் எல் கே ஜி யில் இருந்து கிறிஸ்துவ பள்ளியில் படித்தவன்
____________________________________________________
விழிப்பு நிலையை அடைய மனிதனுக்கு இருக்கும் பெரிய தடை , ஒவ்வொருவனும் தான் ஏற்கனவே விழிப்புணர்வுடன் இருப்பதாக நினைத்து கொள்வதுதான் ‪#‎குர்ட்ஜீஃப்பாறைகள்‬
காலை 5 மணிக்கு அலார்ம் வைத்து தூங்க போகிறோம் . காலையில் இன்னும் கொஞ்சம் படுக்க தோன்றுகிறது . ஆறு மணிக்கு எழுகிறோம் . நைட் டீவி பார்த்திருக்க கூடாது என நினைக்கிறோம் . அந்த டிவி நிகழச்சி அந்த இரவில் முக்கியமானதாக இருந்தது . பிறகு காலை எழுதல் முக்கியமாக இருந்தது . பிறகு காலை தூக்கம் முக்கியமாக இருந்தது . இப்படிக்கு ஒன்றுக்கொன்று எதிரான ஏராளமானோர் உங்களுக்குள் இருக்கிறார்கள் . அதில் பலசாலி உங்களை ஆதிக்கம் செலுத்துகிறார் . நீங்கள் தனி ஆள் அல்ல என்கிறார் குர்ட்ஜீஃப்
_____________________________________________________________
கிராவிட்டி படம் பார்த்து இருப்பீர்கள்.. கண்ணாடி இல்லாமல் பார்த்தால் தெரியும் காட்சி வேறு.. கண்ணாடி போட்டு பார்த்தால் , மூன்றாவது பரிமாணத்தில் , அது வரை புலப்படாத வேறு சில காட்சிகள் தெரியும்.. அதே போல , இன்னும் சில பரிமாணங்கள் இருக்கின்றன... நம்மால்தான் பார்க்க முடியவில்லை என்கிறார்கள்..
நான்காவது பரிமாணம் , ஐந்தாவது பரிமாணம் என்றெல்லாம் இருக்கிறது... ஒன்றுக்கும் மேற்பட்ட உண்மைகள் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்... மாற்று வரலாறு என்பதற்கான சாத்தியம் ஆச்சர்யப்பட வைக்கிறது
பிரபலமான கோயில்களுக்கு போவது ஒரு த்ரில் என்றால் கை விடப்பட்ட , கூட்டம் இல்லாத கோயில்களுக்கு போய் நாம் மட்டும் தனியாக அமர்ந்து இருப்பது இன்னொரு வகை சந்தோஷம்
_____________________________________________________________
கொருக்குப்பேட்டை கோவிந்தசாமி கேட்டிருக்கிறார்
நான் தினமும் காலை முதல் இரவு வரை எல்லோருக்கும் லைக் போடுகிறேன் . நான் பொதுவாழ்க்கையில் இருப்பதாக கருதப்படுவேனா ? 
*
ங்கொய்யால . லைக் மட்டும் போதாது . அவ்வப்போது அநீதிகளை கண்டு பொங்கி எழுந்து கவிதை எழுத வேண்டும் . அந்த அநீதியே பரவாயில்லை என மக்கள் நினைக்க வேண்டும் . லைக் போடுவது புது வாழ்க்கை .அநீதிகளை கண்டு சினம் கொண்ட சிங்கமாக சீறி கவிதை எழுவதே பொது வாழ்க்கை
______________________________________________________________
 மனதில் வெறுமையை உணர்கிறேன்.. ஏதாவது ஒன்றில் ஈடுபட்டு இந்த தனிமையை மறக்க விரும்புகிறேன் “
ஜே கிருஷ்ணமூர்த்தி : பலருக்கும் இந்த தனிமை உணர்வு , பாதுகாப்பற்ற உணர்வு இருக்கிறது..மதம் , தியானம் , ஏதாவது குருவின் பாதுகாப்பு , வாசிப்பு என எதிலாவது புகுந்து கொண்டு இந்த தனிமையில் இருந்து தப்ப முயல்கிறார்கள். இந்த செயலே அவர் தப்பித்தல் என்பதால் , இது அவர்களுக்கு மிக முக்கியமாகி விடுகிறது...இதை இறுக்க பற்றிக்கொண்டு விட மறுக்கிறார்கள். சிலர் குடியில் ஈடுபடலாம் , சிலர் அரசியல் , சினிமா என போகலாம்.. காலப்போக்கில் அவர்களே ஒரு குருவாகவோ , தலைவராகவோ ஆகி விடலாம். ஆனால் இது எதுவுமே உண்மையை உங்களுக்கு உணர்த்தாது..உங்களுக்கான தப்பித்தலை நீங்கள் இன்னும் கண்டு பிடிக்கவில்லை என்பது மகிழ்ச்சிக்கு உரியது
________________________________________________________
நாம் எப்படிப்பட்ட்டவர்களோ அப்படிப்பட்டவர்களையே நாம் ஈர்க்கிறோம்..அதேபோல நாம் எப்படிப்பட்டவர்களுடன் பழகுகிறோமோ அதே போல நாமும் கொஞ்சம் மாறுகிறோம்... இது ஒன்றை ஒன்று சார்ந்தது..
நாம் எப்படிப்பட்டவர் என்பதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.. எப்படிப்பட்டவர்கள் நம் நண்பர்கள் என்பதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும்..
நேற்று நிர்மலை சந்திக்கும் முன் ஒரு பெரியவரை சந்திக்க போய் இருந்தேன்.. அவர் இணையத்தால் அறிமுகம் ஆனவர் அல்லர்.. நேரில் பழகிய பின் , இணையத்தில் என்னை படிக்க ஆரம்பித்தவர்... அவருக்கு சில புத்தகங்கள் பரிசளித்தேன்... உரையாடிய பின் கிளம்பும்போது ஒரு புத்தகம் அன்பளித்தார்... நான் அந்த காலத்தில் படிச்ச புக்,.,பழசு ..தப்பா எடுத்துகாதீங்க என்றார்... அட..பழசுதாங்க பொக்கிஷம் என வாங்கிக்கொண்டேன்..
அவர் பெயர் எழுதி 28.12.1962 என கையொப்பம் இட்டு இருந்தார்.. நான் உலகத்துக்கு வரும் முன்பே எனக்காக ஒரு புக் வாங்கப்பட்டு விட்டதே...
மனம் , காலம் , இடம் எல்லாம் கொஞ்ச நேரம் அழிந்தது போல இருந்தது..
___________________________________________________________


2 comments:

  1. பல விசயங்கள் ...சிறப்பாக பகிர்ந்து உள்ளீர்கள்
    பலருக்கும் பயன் படும்

    ReplyDelete
  2. ஏராளமான தகவல்கள் . சுவாரசியங்கள்.ஒரே பதிவில் எழுதிக் குவித்து விட்டீர்களே.! அனைத்தும் சுவாரசியமாக இருந்தாலும் இரண்டு பதிவுகளாக இட்டிருக்கலாம்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா